Friday, January 18, 2013

நாடோடி, மன்னனான கதை!

Posted by பால கணேஷ் Friday, January 18, 2013
 
னவரி 17 - மக்கள் திலகத்தின் பிறந்த தினமான நேற்று வெளியிட்டிருக்க வேண்டிய இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எம்.ஜி.ஆர். இந்தப் புத்தகத்தில் நாடோடி மன்னன் படத்தில் திரைக்குப் பின்னும், திரைக்கு முன்னும் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களைப் பற்றியும் படம் உருவானதைப் பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறார். 88 பக்கங்கள் கொண்ட, 50 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகம் நாதன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு நான் டிஸ்கவரி புக் ஸ்டாலில் (43, 44) வாங்கினேன். ஒரே மூ்ச்சில் படிக்க வைத்த இந்த சுவாரஸ்ய புத்தகத்தில் எனக்குப் பிடி்த்த சந்திரபாபுவைப் பற்றி வாத்யார் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி இங்கே:

                       சகாயமாக சாதித்த சந்திரபாபு

காயம்! இந்தப் பெயரின் கருத்தே உதவி என்பதுதான். உதவியில் பல வகையுண்டு. ஆனால் இந்தப் பெயரினால் கிடைத்திருக்கும் உதவி சாமான்யமானதல்ல. கதையின் குறிப்பிடத்தக்க பாத்திரமாக இருக்கும் நாடோடிக்கு உதவி செய்வதில் சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்திக் கொடுப்பவர் சகாயம். ஆனால் அதனால் ஏற்படும் விளைவு நன்மையாகவே இருக்கும். தனது தேவை முதலில், அதே நேரதத்தில் பிறரைக் கண்டு அனுதாபம். எதைக் கண்டாலும் திகைப்பு; ஆனால் எதனைப் பற்றியும் அலட்சியம், எதிலும் பயம்; ஆனால் எதிலும் விருப்பம், காதலும் வேண்டும், அது கஷ்டமின்றியும் கிடைக்க வேண்டும். இப்படி குழப்பமான குணம் படைத்த பாத்திரம்தான் சகாயம். இதை ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சந்திரபாபு அவர்களின் திறமைக்கு இதுபோன்ற எந்தப் பாத்திரமும் மிகச் சாதாரணம் என்ற வகையில் நிறைவேற்றியிருக்கிறார்.

நடிகர்கள் பாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் செய்கைகளை புதிய விதமாகச் செய்ய வேண்டும், நடிக்க வேண்டும் என்றுதான் டைரக்டரோ, கதையாசிரியரோ விரும்புவார்கள். ஆனால் சந்திரபாபு அவர்கள் நடிக்கும் போது மட்டும் புது மாதிரியாகச் செய்கிறேனென்று சந்திரபாப அவர்கள் சொல்லாமலிருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். அவ்வளவு ஆர்வத்தோடு நடிப்பவர் சந்திரபாபு அவர்கள். நடிப்பதில் (எத்தகையதாயிருந்தாலும்) தனக்கெனத் தனிச் சிறப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தயங்காதவர். அதற்காகத் தனக்கு எந்த ஆபத்து வரினும் பொருட்படுத்தாதவர். இதனால்தான் இவரைப் பற்றி நாங்களெல்லோரும் பயந்து கொண்டேயிருப்போம்.

ஆனால் என்னோடு பழகிய வரையில் அவருக்குத்‌ தன் விருப்பத்தைத் தடுப்பது பிரியமில்லாததாயிருப்பினும் மறுத்துக் கூறாமல் நடித்துக் கொடுத்தார் அவர். மேலேயிருந்து குதிப்பேன் என்பார். எனக்கு நன்கு தெரியும்- அவரால் சரிவரக் குதிக்க முடியும் என்று. ஆனால் சிலசமயம் புதுவிதமாக குதிப்பதாகச் சொலலி திடீரென்று ஆபத்து நேரும் விதத்தில் குதித்து விடுவார். மரக்கிளை ஒடிந்து விழும் காட்சியில் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில் அந்தக் காட்‌சியே வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற நிலைக்கு வந்த பிறகு மெள்ள விழுவதாக ஒப்புக் கொண்டார். ஆயினும் எனக்குப் பயம்தான்.

இப்படி அவரைப் பொறுத்தவரையில் பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுவாரோ என்ற அச்சத்திற்கு மாறாக, பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியினால் அவருக்கு ஆபதப்து ஏற்பட்டு விடக் கூடாதே என்று கலங்கியபடியே இருக்க வேண்டும்.

ருநாள் வெளிக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சந்திரபாபு அவர்களும் நடிக்க வேண்டிய கட்டம். குதிரைகள் போகும் காட்சியைப் படமாக்கும் போது ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிது நேரம் அதை ஓட்டி, ஒழுங்குக்குக் கொண்டு வந்து குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து ஓட்டச் செய்து படப்பிடிப்பை முடித்தேன். அதற்குள் சந்திரபாபு அவர்கள் தயாராகி விட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஷாட்டுக்கு ஏற்பாடு‌ செய்து கொண்டிருந்தேன்.  பாபுவும் வந்தார்; ஏற்பாட்டைக் கண்டார். பத்து நிமிடங்களாவது ஆகும் என்றறிந்தார். முரட்டுத்தனம் செய்து அடக்கியிருந்த குதிரையின் மீது ஏறப் போனார். நான் தடுத்தேன்- அந்தக் குதிரை சரியில்ல என்று. ‘சிறிது நேரம் இங்கேயே சுற்றுகிறேன்’ என்றார். நான் குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே லகானைப் பிடித்தபடி போகச் சொல்லிவிட்டு வந்தேன். ஐந்து நிமிடங்கள்கூட ஆகியிராது. சிலர் ஓடிவந்து சந்திரபாபு அடிபட்டுக் கீழே விழுந்து விட்டார். எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி மயக்கமடைந்து விட்டார் என்றனர். என்னால் எதுவும் கற்பனை செய்யவே முடியவில்லை. எப்படியோ... பழைய சந்திரபாபு அவர்களாகவே இருக்கிறார் நலனோடு.

அவரிடம் ஒருநாள் என் மனம்விட்டுச் சொன்னேன். இந்த வார்த்தை அவருக்கு மட்டுமல்ல, தென்னகக் கலைஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழகக் கலைஞர்களுக்கு மிகமிகத் தேவையான விளக்கம் என்று கருதுவதால் அதை இங்கே குறிப்பிடுவது சரியென்று கருதுகிறேன்.

‘‘சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள் என்றால் அந்தச் சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத்திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையில், எத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையில் தெரிந்து கொண்டிருப்பார். அதற்காகப் பாடுபட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் எத்தனை? எத்தனையோ... அவைகளை எல்லாம் ஒரே நாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த மகத்தான கலைத் திறமையையெல்லாம் ஒரே வினாடியில் இழந்து விடும் நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்’’
என்றேன். மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும்தான் கொடுக்கிறோம்; அறிவைக் கூட அல்ல என்று வாதிப்பவர்கள் கூட இந்த இழப்பை விரும்ப மாட்டார்கள்.

‘‘கலைஞர்கள் இல்லையே என்று ஏங்கும் மக்களுக்கு இருக்கும் கலைஞர்களையும் இல்லாமற் செய்வது சரியல்ல’’ என்றேன். இதை அவர் நன்குணர்ந்தார் என்பதற்கு அவர் விட்ட கண்ணீரே சாட்சியாக இருந்தது. ‘‘எனக்கு நீ என்ன உபதேசம் செய்வது?’’ என்று அவரால் கேட்க முடியும். கேட்கக் கூடியவரும் கூட. ஆனால் என்னிடம் கேட்கவில்லை. இதில் மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்; தொழிலிலும் கூட.

-இதன்பின் வாத்யார் வேண்டாமென வற்புறுத்தியும் கேளாமல் வாயிலிருந்து கோழிக்குஞ்சை வரவழைப்பதபற்காக சந்திரபாபு பட்ட கஷ்டங்களையும் அவரின் தீவிர ஈடுபாடு மிக்க கலைத்திறன் பற்றியும் மக்கள் திலகம் புகழ்‌ந்து எழுதியிருப்பதையும் மற்ற சுவாரஸ்ய விவரங்களையும் விவரித்தால் பதிவு நீண்டுவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

42 comments:

 1. என்ன ஒரு மனிதர் எம் ஜி ஆர்? சந்த்ரபாபுவும் கூட.

  ReplyDelete
  Replies
  1. ஆம். மகத்தான மனிதர்கள்! இப்‌போது நினைவுகூர்ந்தாலும் வியப்பும், பிரமிப்பும்தான். வருகைக்கும் நல்ல கருத்துக்கும் என் மனம் நிறை நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நல்ல புத்தம்கம்தான். படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. பு.க.வுக்கு இன்னொரு விசிட் வாங்க முரளி. நிறைய வாங்கிப் படிக்கலாம் நாம். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 3. இத்தகைய தனித்திறமை கொண்ட திரு.சந்திரபாபு அவர்கள்
  எங்க முத்துநகரின் முத்து என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையே நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க மகேன்... சாதாரண மீனவக் குடும்பத்துலருந்து வந்த அவர் ஒரு அசாதாரண மனிதர். நீங்க தாராளமா பெரு்மைப்படலாம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 4. திரு எம்.ஜி.ஆர் அவர்கள், நகைச்சுவை மன்னன் சந்திரபாபு அவர்களின் மேல் எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார் என்பதை அறியும்போது, அவர் மேல் உள்ள மரியாதை இன்னும் கூடுகிறது.பதிவுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இந்த இரு திறமையாளர்களின் மீதும் இதே உணர்வுகள்தான் எழுந்தன ஸார். உங்களின் வருகைக்கும் நற்கருத்துக்கும் என் மனம் நிறை நன்றி.

   Delete
 5. மகத்தான மனிதர்கள்.... நேற்று முன் தினம் முரசு தொலைக்காட்சியில் ஏதோ பழைய பாடல் ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அதில் சந்திரபாபுவும், நாகேஷும் - லைலா மஜ்னுவாக வேடமிட்டு ஆடிப் பாடுவார்கள். இரண்டு பேரும் போட்டிபோட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.....

  நல்ல ஒரு புத்தகத்தினைப் பற்றி தெரிவித்ததற்கு நன்றி கணேஷ்.....

  ReplyDelete
  Replies
  1. சந்திரபாபுவிடம் சாப்ளினின் பாதிப்பும், நாகேஷிடம் ஜெர்ரி லுயிசின் பாதிப்பும் இருக்கும். தனித்துவம் மிக்க அவர்களின் நடிப்பு அந்தப் பாடலில் வெளிப்படும். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை ந்ன்றி நண்பா.

   Delete
 6. Wow.. whatta personality...

  You created a thirst in us to read that book..How long the book fair will b der??

  ReplyDelete
  Replies
  1. புத்தகக் கண்காட்சி 23ம் தேதி வரை நடக்க இருக்கிறது ஆனந்த். அவசியம் புததகத்தைப் படித்து ரசியுங்கள். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 7. சந்திரபாபு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 8. தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? -

  http://mytamilpeople.blogspot.in/2013/01/get-file-size.html

  ReplyDelete
  Replies
  1. அவசியம் கோப்பின் அளவை அறிந்து கொள்கிறேன் தமிழ்மகன். வருகை தந்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 9. நிச்சயம் வாங்க வேண்டிய புத்தகம் சார்.. படித்து பதிவிட்டு; புத்தகம் பற்றிய குறிப்புக்கு மிக்க நன்றி!!
  இந்த புத்தகம் மூலம் ஒன்று தெரிகிறது: அந்த காலத்தில் நகைசுவை நடிகராக இருப்பினும், துணை நடிகராக இருப்பினும் சக நடிகரை மதிக்கும் அவர்களின் திறமையை புகழும் மன பக்குவம் பரந்த மனபான்மை இருந்துள்ளது. இன்று காமெடி, துணை நடிகர் என்றாலே ஹீரோ-க்கு அடிபோடிகலாக, இரண்டாம் நிலை உழியர் கணக்கில் தான் மதிக்கபடுகிரார்கள்!!!
  (மக்கள் திலகம் இதிலும் திலகம் தான்: மற்றவரை மதிப்பதில்!)

  "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்": எவ்வளவு உண்மையான வரிகள்....

  ReplyDelete
  Replies
  1. சரியான கருத்து தாம்மா. ‘சபாஷ்மீனா’ படத்தின் கதையைக் கேட்டுவிட்‌டு சந்திரபாபு, ‘‘சிவாஜிக்கு தருவதை விட எனக்கு ஒரு ரூபாய் கூடுதலாக தந்தால்தான் நடிப்பேன்’’ என்றாராம். சிவாஜியிடம் விஷயம் போனபோது, ‘‘அவன் சமயத்துல அப்படித்தான் லூசு மாதிரி பேசுவான். ஆனா இந்த சப்ஜெக்டல என்னைவிட அவன் நடிப்புதான் நிக்கும். பேசாம அவன் கேட்டதைக் குடுத்துடுங்க’’ என்றாராம். நகைச்சுவை நடிகன் என்பவனையும் மிக மதித்தனர் திலகங்கள். மகத்தான மனிதர்கள் அவர்கள். நன்றி சமீரா.

   Delete
 10. சார், வேறு என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. என் புத்தக ரசனை கலந்துகட்டி இருக்கும் அழகு. இவ்வாண்டில் வாங்கியவை: 1) மோட்டார் சைக்கிள் டைரி (‘சே’வின் வரலாறு) - மருதன் - கிழக்கு, 2) அக்பர் - என்.சொக்கன் - கிழக்கு, 3) என் சரித்திரம் - உ.வே.சா. - விகடன், 4) அந்த முகம் வேறு - ஸிட்னி‌ ஷெல்டன் (தமிழில் ரா.வேங்கடசாமி) - முற்றம் (நிவேதா ஸ்டாலில்), 5) குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நாவல்கள் - பழைய விலையில் -(மீனாட்சி புத்தக நிலைய ஸ்டாலில்), 6) அதியமான் கோட்டை - கெளதம நீலாம்பரன், 7) சந்திரமதி - பரதவன் (இரண்டும் நிவேதா ஸ்டாலில்) இரண்டாவது ரவுண்ட் போகும் போது வாங்குபவறறை பின்னர் சொல்கிறேன். மிக்க நன்றி.

   Delete
 11. புத்தக அறிமுகம் அருமை. உயர்ந்த மனிதர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 12. I have heard one thing about this which was told by MGR himself - If this film runs, I will be king (Mannan) and if not, I will become a gypsy (Nadodi). Through this post, you have explained so many things in a small paragraph which is befitting to be an USP of this book.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். 2 அல்லது 3 லட்சம் செலவழித்து படம் எடுத்துக் கொண்டிருந்த அந்த நாளிலேயே 20 லட்சத்திற்கு செலவழித்து இப்படம் எடுத்திருக்கிறார் வாத்யார். (புத்தகத்தில் உள்ள தகவல்) அவர் நாடோடியாகக் கூடாது, மன்னாகவே இருக்க வேண்டும் என விதியும் தமிழக மக்களும் விரும்பியதால் படம் மாஆஆஆபெரும் வெற்றி பெற்றது. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 13. அசாதாரண மனிதர்கள் இருவரும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க சாரல் மேடம். அசாத்திய திறமைசாலிகள்தான் இருவரும். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 14. அருமையான புத்தகம். நிச்சயம் வாங்க வேண்டும். நாடோடி மன்னனைப் பற்றிய செய்திகளை எம்.ஜி.ஆரே எழுதியிருக்கிறார் என்ற தகவலே எனக்குப் புதிது.உங்களின் எழுத்துக்கள் அதை வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் பற்றி மட்டுமல்ல ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்ற புத்தகமும் (விஜயா பதிப்பகம், சென்னை), ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று பயோகிராபியும் எழுதியிருக்கிறார் ராஜா. எல்லாமே சுவாரஸ்யமானவைதாம். வாங்கிப் படித்து ரசியுங்கள். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 15. மக்கள் திலகம், சந்திரபாபு இருவருக்குமிடையில் இருந்த புரிதலை வெகு சிறப்பாக இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

  இருவருமே மிக உயர்ந்த மனிதர்கள் தாம்!

  ReplyDelete
  Replies
  1. நிறையப் படங்கள் சேர்ந்து நடித்து வெற்றியை அடைந்திருக்கிறார்கள் இந்த அசாதாரண மனிதர்கள். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 16. இதே மக்கள் திலகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றியும் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாத்யாரை வைத்து ‘மாடிவீட்டு ஏழை’ படத்தை சந்திரபாபு எடுக்கத் துவங்கியதும், கசப்பான விஷயங்கள் நடந்ததில் படம் வெளிவராமலேயே போய் சந்திரபாபு ஏழையானதும் ஆன பின்னணி நன்றாகவே அறிவேன் தேவன். வாத்யார் குறிப்பிட்ட படம் வரும் சமயத்தில் இருவரின் பழக்கத்தைத்தான் புத்தகம் பேசுகிறது. தவிர, கசப்பை நினைத்தென்ன லாபம்? இனிப்பை மட்டுமே நாம் சுவைப்போம். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 17. ஒருமுறை நடிகர்திலகம் அவர்களிடம், “உங்களைவிட எம்.ஜி யாரை மக்கள் அதிகம் மதிக்கிறார்களே... எதனால்?“ என்று கேட்டார்களாம்.
  அதற்கு நடிகர் திலகம்.... “நான் யாராவது ரசிகர்கள் என்னைக் காண வந்தால் வாங்க என்று சொல்லி உட்கார்ந்தபடியே பேசுவேன். ஆனால் அவர் எவ்வளவு ஏழ்மையான பாமரனான இரசிகர் வந்தாலும் உடனே எழுந்து நின்று தான் அவரிடம் பேசுவார். அவரின் தன்னடக்கம் எனக்கு இன்று வரையில் வரவில்லை“ என்றாராம்.

  ஒருவரின் நல்ல பண்புகளே அவரை உயர்த்தும்
  என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

  (நான் நாடோடி மன்னன் படம் பார்த்ததில்லை. உங்கள் விமர்சனத்தாலும் புத்தகத்தில் உள்ள சிறப்பு கருத்துக்களாலும்
  படம் பார்க்கும் ஆசை வந்துள்ளது....
  தேடி பார்த்து விடுகிறேன்.)

  உங்களின் புத்தக விமர்சனம் அருமை பாலகணேஷ் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. ஆம். சிவாஜி சொன்ன இந்த விஷயத்தை வைரமுத்துவும் உறுதிப்படுத்தியிருக்கிறார். உயர்ந்த பண்புகள் கொண்டிருந்த மனிதர் அவர். இந்தப் பதிவை ரசித்துப் படித்த அருணாவுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 18. மாமனிதர் இவர்.என்றும் எம்மோடு வாழ்பவர் !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஃப்ரெண்ட். நினைவில் இருந்து நீங்கா மாமனிதர். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 19. இருவருமே பிரபலமானவர்கள்.
  சந்திர பாபுவின் நகைச்சுவை ரசித்திருக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete

 20. வணக்கம்!

  மக்கள் தலைவா்!இங்கு ஏழைஎளி யோர்உற்ற
  சிக்கல் ஒழித்தார் சிறந்து!

  ReplyDelete
 21. திரு. சந்திரபாபு பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி அண்ணா.

  ReplyDelete
 22. சந்திரபாபு பற்றி ஒரு புத்தகம் வந்திருப்பதாகவும் அதில் எம்.ஜி.ஆர்.பற்றித் தகவல்கள் இருப்பதாகவும் ஒரு நண்பர் சொன்னார்!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube