Saturday, October 29, 2011

முன்குறிப்பு : இந்த விஷயத்தை நகைச்சுவை(என்று நினைத்துக்கொண்டு)யாக எழுதியிருக்கிறேன். ஆகவே, வந்தாலும் வராவிட்டாலும் வரிகளுக்கு இடையில் அவ்வப்போது சிரித்துக் கொள்க!

ந்த வேளையில் என் மனைவி சரிதாவுக்கு அந்த யோசனை தோன்றியதோ தெரியவில்லை. (வேறென்ன... என் போதாத வேளையாகத்தான் இருக்க வேண்டும்.) அன்று மாலை நான் வீடு திரும்பியபோதே கையில் சூடான காபியுடனும், முகத்தில் புன்னகையுடனும் வரவேற்றாள்.

இப்படி புன்னகை + சூடான காபியுடன் அவள் வரவேற்றாள் என்றால் பின்னால் ஏதோ பெரிய சமாச்சாரம் இருக்கிறது என்பதை அனுபவம் உணர்த்தியதால் ‘அம்மா’வைப் பார்க்கும் அ.தி.மு.க. அமைச்சரைப் போல பயத்துடன் அவளை ஏறிட்டேன்.

‘‘என்னங்க... ஆயுதபூஜையை ஒட்டி சேர்ந்தாப்போல அஞ்சு நாளைக்கு உங்களுக்கு ஆபீசுக்கு லீவு வருது... அதை வீணாக்காம...’’

‘‘வீணாக்காம... எந்த ஊருக்குப் போகணும்கறே... சொல்லு, போயிடலாம்...’’

‘‘நான் காரை ஓட்டக் கத்துக்கணும்!’’

அவளுடன் கல்யாணமானதிலிருந்து அவள் தந்த ஏராளமான அதிர்ச்சிகளைச் சந்தித்து ஓரளவு ஷாக் ஃப்ரூப் ஆகியிருந்தேன் என்றாலும் எனக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

‘‘கீரையா... வாங்க மறந்துட்டேன். நாளைக்கு வாங்கிட்டு வந்துடறேன் சரிதா...’’

ஏதாவது அதிர்ச்சியான (எனக்கு) விஷயமாக இருந்தால் இப்படிப் பேசிவிட்டு அவள் கத்த ஆரம்பித்ததும் நகர்ந்து விடுவது என் வழக்கம். இப்போது அந்தப் பாச்சா பலிக்கவில்லை. குறுக்கே வந்து நின்றாள்.

‘‘ம்... நான் ஏதாவது கேட்டா உங்களுக்கு இப்படித்தான் காதே கேக்காது. இதுவே உங்க தங்கச்சி போன வருஷம் வந்தப்போ...’’

‘‘இப்ப எதுக்கு அவளை இழுக்கறே... போன வருஷம் இப்படித்தான் ‘ஒல்லியாகணும்னா டாக்டர் வாக்கிங் போகச் சொன்னார், ஸ்கூட்டர் ஓட்டக் கத்துண்டா பார்க்வரை ஓட்டிட்டுப் போய் நடப்பேன்’னு சொல்லி ஸ்கூட்டர் ஓட்டப் பழகிக்கிட்டே.  உன்னால பல பேர் ஆஸ்பத் திரிக்கு நடந்தாங்க, ரொம்ப ஒல்லியாச்சு என் பர்ஸ்! அவ்வளவுதான் பலன்... இப்ப நீ கார் ஓட்டக் கத்துக்கறது தேவையா..?’’

‘‘இதெல்லாம் மட்டும் மறக்காம ஞாபகம் வெச்சிருங்க. நான் ஏதாவது கேட்டா மட்டும்தான் இப்படிச் சாக்கு சொல்வீங்க. இதுவே உங்க அம்மா...’’

‘‘சரி, சரி... நாளைக்கே உனக்கு கார் ஓட்டக் கத்துத் தர்றேன்’’ என்றேன் அவசரமாக. இல்லாவிட்டால் என் பரம்பரையையே வம்புக்கு இழுப்பாள் என்பது அனுபவப் பாடம். ஹூம்... இப்படிக் கேட்பாள் என்று முன்பே தெரிந்திருந்தால் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று செகண்ட் ஹாண்டில் கார் வாங்கியே இருக்க மாட்டேன்.

றுநாள் காரில் அவளை ஒரு பெரிய மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன். ‘‘எங்க போகணும்னாலும் உங்களையே தொந்தரவு பண்ண வேண்டியிருக்கு. நானே கத்துண்டா உங்களுக்கு கஷ்டம் இல்லாம இருக்குமே...’’ என்றாள் அக்கறையாக. ‘‘நீ கார் ஓட்டக் கத்துக்கறதே எனக்குக் கஷ்டம்தானே...’’ என்று மனதிற்குள் நினைத்தபடியே தலையாட்டி வைத்தேன்.

‘‘இது க்ளட்ச், இது கியர், இது பிரேக், இது ஆக்ஸிலரேட்டர்’’ என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் பற்றி நிதானமாக ஒரு லெக்சர் கொடுத்து முடித்தேன். ‘‘உங்களுக்கு மனசில இருக்கு. சொல்லிட்டிங்க. எனக்கு ஒரு மண்ணும் புரியலை. காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டியரிங்கை என்கிட்ட கொடுங்க. அப்புறம் ஒவ்வொண்ணா தெரிஞ்சுக்கறேன்...’’ என்று எனக்கு போதிக்கத் துவங்கினாள்.

மெதுவாகச் செல்ல ஆரம்பித்த கார், வேட்பாளரை மிதித்த விஜயகாந்த் போல அவள் ஆக்ஸிலேட்டரை நன்கு மிதித்து விட்டிருக்க, திடீரென்று டேக் ஆஃப் ஆகிப் பறக்க ஆரம்பித்தது. என்ன அநியாயம்... சரிதா கார் ஓட்டுவதை அறியாமல் எதிரே ஒரு மரம் வந்து கொண்டிருந்தது. ‘‘ஐயோ சரிதா.. எதிர்ல மரம் வருது. ஸ்‌டியரிங்கை மிதி, பிரேக்கைத் திருப்பு’’ என்று உளறினேன். அலறினேன் என்றும் சொல்லலாம்.

நான் சொன்னது அவளுக்கு உரைத்தால்தானே? ‘‘ஆமாம். எங்க போனாலும் என்னைத் தான் ஒதுங்கச் சொல்வீங்க. அவங்களை மொதல்ல ஒதுங்கச் சொல்லுங்க...’’ என்று கோபமாக அவள் எகிற, வேறு வழியின்றி பிரின்சிபாலைக் கண்ட லெக்சரர் போல பிரேக்கின் மேல் ஏறி நின்றேன். மரத்திற்கு அரையே அரை இஞ்ச் அருகில் சென்று கார் நின்றது. ஆனால் சரிதா ‘காள் காள்’ என்று கத்தினாள். பிரேக்கின் மேல் இருந்த அவள் கால் மேல் என் காலை வைத்து மிதித்ததால் ‘கால் கால்’ என்றும் கத்தினாளோ என்னவோ...

டுத்த நாள் கியர் போடக் கற்றுக் கொடுத்தேன். முதல் கியரிலிருந்து இரண்டாம் கியருக்கு மாற்றும் போது கியர் நியூட்ரலில் விழுந்ததை அறியாமல் அவள் ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதிக்க, கார் ஒரு அடியும் நகராமல் அவள் அம்மா (என் மாமியார்தான்) கத்துவதை விடவும் உரத்த டெஸிபலில் அலறியது. நான் பதறிப் போய் கியரைத் தள்ளிவிட, டேக் ஆஃப் ஆன விமானம் போல எகிறிப் பறந்தது கார். பீதியுடன் பிரேக்கை மிதித்து, காரை நிறுத்தி விட்டு இறங்கினாள்.

கல்யாணம் ஆன நாளிலிருந்து முதல் முறையாக அவள் முகத்தில் பயத்தைப் பார்த்ததால் எனக்கு அக்கணமே முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது. அவளை அல்ல... காரை!

ப்படி மெல்ல மெல்ல உபத்திரவப்படுத்தி (காரை அல்ல, என்னை...) ஒரு வழியாக கார் ஓட்டக் கற்றுக் கொண்டு விட்டாள். சில பல விபத்துக்களை ஏற்படுத்தி, காருக்கும் என் பேங்க் பேலன்சுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தியபின் இப்போது சற்று சுமாராகக் கார் ஓட்டுகிறாள்.

முதலில் மெதுவாக ஓட்டி, எல்லாருக்கும் வழி விட்டவள், இப்போது தன் சுபாவப்படி ‘‘நான் வேகமாகத்தான் போவேன். வேண்டுமென்றால் அவர்கள் வழிவிடட்டும்’’ என்று விரட்ட ஆரம்பித்து விட்டாள். ஆக, கார் ஓட்டுவதற்கு அவள் பழகியனாள் என்பதை விட, எங்கள் ஏரியாவாசிகள் அவள் காருக்குத் தகுந்த மாதிரி செல்லப் பழகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்!

இத்துடன் விஷயம் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அன்று ஆபீசிலிருந்து திரும்பி காரை ஷெட்டில் விட்ட எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷெட்டில் இருந்த என் ‘ஆக்டிவா’வைக் காணவில்லை. கோபமாக வீட்டிற்குள் நுழைந்த நான், பெல்ட்டைக் கழற்றி...

ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, சரிதாவிடம் கேட்டேன்: ‘‘என் ஸ்கூட்டர் எங்கே?’’

‘‘நீங்களும் நல்லா கார் ஓட்டறீங்க. நானும் கத்துக்கிட்டேன் இப்ப. இனிமே அது எதுக்குன்னுதான் வித்துட்டேன்...’’

‘‘என்னது..? வித்துட்டியா? எனக்கு ராசியான வண்டிடி. எல்லா நேரத்துலயும் கார்ல போக முடியாதுன்னுதானே அதை வெச்சிருந்தேன். யார்கிட்ட, எவ்வளவுக்கு வித்த?’’

‘‘எங்கண்ணன் வந்திருந்தான். அவன்கிட்டத்தான் குடுத்தேன். மாசாமாசம் இ.எம்.ஐ. மாதிரி பணம் குடுத்துடறேன்னான்....’’

‘‘சரி, விடு... (வேறென்ன சொல்லிவிட முடியும்?) எவ்வளவு பணம் தர்றேன்னார் மாசத்துக்கு?’’

‘‘நூறு ரூபாய்’’ என்றாள். நான் பொறுமை இழந்து, கடுங்கோபம் கொண்டதன் விளைவு... முன் மண்டை வீங்கி விட்டது! அவளுக்கல்ல... எனக்கு! சுவரில் மடேல் மடேலென்று முட்டிக் கொண்டால் பின் என்னவாகும்?

19 comments:

 1. ////‘‘நூறு ரூபாய்’’ என்றாள். நான் பொறுமை இழந்து, கடுங்கோபம் கொண்டதன் விளைவு... முன் மண்டை வீங்கி விட்டது! அவளுக்கல்ல... எனக்கு! சுவரில் மடேல் மடேலென்று முட்டிக் கொண்டால் பின் என்னவாகும்?/////

  ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா........

  நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் பாஸ் உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகின்றது தொடர்ந்து அசத்துங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. முன் மண்டை வீங்கி விட்டது என்றதும் பயந்து விட்டேன்!கடைசியில் சொல்லி விட்டீரகள் முட்டிக் கொண்டதால் என்று!
  அருமையான நகைச்சுவை!

  ReplyDelete
 3. ஸ்கூட்டர் ஓட்டப் பழகிக்கிட்டே. உன்னால பல பேர் ஆஸ்பத் திரிக்கு நடந்தாங்க, ரொம்ப ஒல்லியாச்சு என் பர்ஸ்! அவ்வளவுதான் பலன்

  சிரிப்புதான்!

  ReplyDelete
 4. . நான் பொறுமை இழந்து, கடுங்கோபம் கொண்டதன் விளைவு... முன் மண்டை வீங்கி விட்டது! அவளுக்கல்ல... எனக்கு! சுவரில் மடேல் மடேலென்று முட்டிக் கொண்டால் பின் என்னவாகும்?/////!!!!!?????

  ReplyDelete
 5. அடப்பாவமே! வண்டியோட்டக் கத்துக்கிட்டாங்களோ இல்லையோ, வூட்டுக்காரரை நல்லாவே ஓட்டியிருக்காங்க! :-)

  ReplyDelete
 6. நல்ல சிரிப்பு வந்துசு ... நன்றி

  ReplyDelete
 7. கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் ஆவலுடன் இருக்கும் எனக்கு இந்த இடுகை படிக்கையில் பயம் வருகிறதே?கனேஷ்ண்ணா,இது நகைசுவைக்காக எழுதப்பட்டதா?இல்லை அனுபவமா?
  என்னவா இருந்தாலும் ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.இப்படிபட்ட இடுகைகளை உங்களிடம் இருந்து அதிகம் அதிகம் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. K.s.s.Rajh said...
  ////‘‘நூறு ரூபாய்’’ என்றாள். நான் பொறுமை இழந்து, கடுங்கோபம் கொண்டதன் விளைவு... முன் மண்டை வீங்கி விட்டது! அவளுக்கல்ல... எனக்கு! சுவரில் மடேல் மடேலென்று முட்டிக் கொண்டால் பின் என்னவாகும்?/////
  ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா........ நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் பாஸ் உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகின்றது தொடர்ந்து அசத்துங்கள் வாழ்த்துக்கள்

  -மிக்க நன்றி ராஜா. நமக்கு நகைச்சுவை வருமோ என்று சந்தேகத்துடனேயே எழுதினேன். தெம்பூட்டியமைக்கு நன்றி.


  சென்னை பித்தன் said...
  முன் மண்டை வீங்கி விட்டது என்றதும் பயந்து விட்டேன்! கடைசியில் சொல்லி விட்டீரகள் முட்டிக் கொண்டதால் என்று!
  அருமையான நகைச்சுவை!

  -சென்னைப் பித்தன் சார் சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி சார்!

  இராஜராஜேஸ்வரி said...

  ஸ்கூட்டர் ஓட்டப் பழகிக்கிட்டே. உன்னால பல பேர் ஆஸ்பத் திரிக்கு நடந்தாங்க, ரொம்ப ஒல்லியாச்சு என் பர்ஸ்! அவ்வளவுதான் பலன்...
  சிரிப்புதான்!

  -தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி!

  ReplyDelete
 9. சேட்டைக்காரன் said...
  அடப்பாவமே! வண்டியோட்டக் கத்துக்கிட்டாங்களோ இல்லையோ, வூட்டுக்காரரை நல்லாவே ஓட்டியிருக்காங்க! :-)

  -ஆமாங்ண்ணா... அவங்க என்னை ‘ஓட்டின’ அனுபவங்களை தனி புத்தகமே போடலாம். பின்னர் எழுதுகிறேன். நன்றிங்ணா...

  "என் ராஜபாட்டை"- ராஜா said...
  நல்ல சிரிப்பு வந்துசு ... நன்றி

  -ராஜா கமெண்ட் சொன்னா ராங்காப் போகாது... உற்சாகமூட்டும் பாராட்டுக்கு நன்றி ராஜா!

  ReplyDelete
 10. ஸாதிகா said...
  கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் ஆவலுடன் இருக்கும் எனக்கு இந்த இடுகை படிக்கையில் பயம் வருகிறதே?கனேஷ்ண்ணா,இது நகைசுவைக்காக எழுதப் பட்டதா?இல்லை அனுபவமா?
  என்னவா இருந்தாலும் ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.இப்படிபட்ட இடுகைகளை உங்களிடம் இருந்து அதிகம் அதிகம் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்!

  -ஸாதிகா தங்கச்சி! முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டதுதான். நீங்க பயப்படாம கார் ஓட்டக் கத்துக்கலாம். உங்கள் பாராட்டு எனக்கு தெம்பூட்டுகிறது. நன்றி!

  ReplyDelete
 11. நல்ல முயற்சி

  ReplyDelete
 12. எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்தது.,
  ஹா..; ஹா..

  ReplyDelete
 13. கலகலப்பான பதிவு.. அதுவும் கடைசியில் நீங்கள் மண்டையை ஏன் 'மடேல் மடேல்' கொட்டிக்கொண்டீர்கள்..? அப்புறம் வீங்காமல் என்ன செய்யுமாம்?

  அருமையான நகைச்சுவைப் பதிவு.. வாழ்த்துகள் ஐயா!!

  ReplyDelete
 14. suryajeeva said...
  நல்ல முயற்சி

  -உங்கள் பாராட்டுக்கு நன்றி சூர்யஜீவா சார்!

  வேடந்தாங்கல் - கருன் *! said...
  எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்தது.,
  ஹா..; ஹா..

  -இப்படி நீங்கள் சொல்வதை எனக்குக் கிடைத்த விருதாக எடுத்துக் கொள்கிறேன். நன்றி கருன்!

  தங்கம்பழனி said...
  கலகலப்பான பதிவு.. அதுவும் கடைசியில் நீங்கள் மண்டையை ஏன் 'மடேல் மடேல்' கொட்டிக் கொண்டீர்கள்..? அப்புறம் வீங்காமல் என்ன செய்யுமாம்?
  அருமையான நகைச்சுவைப் பதிவு.. வாழ்த்துகள் ஐயா!!

  -தங்கம் பழனி சார்! ஆக்டிவா ஸ்கூட்டர் விற்கும் விலையில் நூறு நூறாக எப்போது நான் பெற்றுக் கொண்டு முடிப்பது? முட்டிக் கொள்ளாமல் இருக்க முடியுமா? நீங்கள் ரசித்ததற்கு நன்றிகள் பல!

  ReplyDelete
 15. வந்து வாழ்த்தியதிற்கு நன்றி உங்களது வரிகளும் இனிமை
  தொடருங்கள்

  ReplyDelete
 16. நல்ல நகைச்சுவை கதை (அனுபவம் இல்லை.. கதை தான் என்று நினைக்கிறேன்!)

  ReplyDelete
 17. Speed Master said...
  வந்து வாழ்த்தியதிற்கு நன்றி உங்களது வரிகளும் இனிமை தொடருங்கள்

  -மிக்க நன்றி ஸ்பீடு மாஸ்டர் சார்!


  bandhu said...

  நல்ல நகைச்சுவை கதை (அனுபவம் இல்லை.. கதை தான் என்று நினைக்கிறேன்!)

  -பாராட்டிற்கு நன்றி. மிகைப்படுத்தப்பட்ட அனுபவம்தான் எப்போதும் நகைச்சுவை ஆகிறது. இது அந்த ரகம்தான்.

  ReplyDelete
 18. கார் ஓட்டக் கத்துகறேன்னு துணிச்சலா வந்து கத்துகிட்டாங்களே, அதுவே பாராட்டப் பட வேண்டிய ஒன்று. ஏன் வீட்டில் ஒரு மக்கு பிளாஸ்திரி ஒன்னு இருக்கு. ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்ல. என்கிட்ட கார் வாங்கச் சொன்னாள், ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன், கார் வாங்கித் தரேன் நீ ஓட்டக் கத்துக்கோ, நீயே வச்சிக்கொன்னு, என்னை ஓட்டச் சொல்லாதேன்னே. அம்புட்டுதேன். அதைப் பத்தி அவ மூச்சே விடுறதில்ல. :)

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube