Wednesday, September 26, 2012

சரிதாவும், செம்மொழியும்

Posted by பால கணேஷ் Wednesday, September 26, 2012

தொலைக்காட்சிகளை ‘தொல்லைக்காட்சிகள்’ என்று அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபணையிராது. ஆனால் என் விஷயத்தில் ‘கொலைக்காட்சி’ என்றே சொல்லலாம் போல எனக்குள் ‘கொலவெறி’யைக் கிளப்பி விட்டது சமீபத்தில். எங்கள் தெருவிலிருக்கும் ஒரு குடும்பத் தலைவி ஜுபிடர் டிவி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கி வந்து விட்டாள். அவ்வளவுதான்... தானும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பரிசு வாங்கி விட வேண்டுமென்று தீர்மானமே (லேடீஸ் சைகாலஜி!) செய்து விட்டாள் சரிதா. விளைவாக...

லுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த என்னிடம் வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... அலுவலகத்திலிருந்து திரும்புகையில் எனக்கு ஒரு முகப்பூச்சுப் பொடி டப்பா வாங்கி வாருங்கள்...’’ என்றாள்.

‘‘சாம்பார் பொடி, மிளகாப் பொடின்னுதானே கேப்ப... அதென்னது புதுசா முகப்பூச்சு்ப் பொடி?’’ என்றேன். ‘‘இதோ பாருங்கள். இதுதான்...’’ என்று அவள் எடுத்துக் காட்டியது அவள் பவுடர் டப்பாவை.

‘‘அடக்கடவுளே... ஃபேஸ் பவுடர் தீர்ந்துடுச்சு, வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே? இதுக்கு ஏன் தமிழ்ப்படுத்திக் கொல்ற?’’ என்றேன் புரியாமல்.

‘‘அதுவா... ஜுபிடர் தொலைக்காட்சியில் ‘கொல்லுங்கம்மா, கொல்லுங்க’ என்று ஒரு நிகழ்‌ச்சி நடத்துகிறார்கள். அதை நடத்துபவரிடம் ஆங்கில வார்த்தை எதுவும் கலக்காமல் தொடர்ந்து மூன்று நிமிடம் தமிழில் உரையாட வேண்டுமாம். அப்படி உரையாடி விட்டால் அளவற்ற பரிசுகள் தருகிறார்கள். நான் அவற்றை அடைவதென முடிவு கட்டி விட்டேன். நிகழச்சிக்கும் விண்ணப்பித்து விட்டேன். ஆதலால் இப்போதிருந்தே தனித் தமிழில் பேசத் துவங்கி விட்டேன்’’ என்றாள்.

‘‘அடியேய்... முதல்ல ஜுபிடர்ங்கற அவங்க டிவி பேரை தமிழ்ல வெக்கச் சொல்லு. அப்புறம் நிகழ்ச்சி நடத்தி தமிழை வளக்கலாம்...’’ என்றேன். ‘ஙே’ என்று விழித்தாள். ‘‘அட, ஆமால்ல...’’ என்றாள்.

ப்ப ஆரம்பிச்சதுங்க. தொடர்ந்து ஒரு வாரமா இங்கிலீஷ் கலக்காம பேசறேன்னு கொலையாக் ‌கொன்னுட்டிருக்கா. நேத்திக்கு காலையில ‘‘நாதா..’’ என்றபடி அருகில் வந்தாள்.

‘‘என்னது... நாதனா? யார் அவன்? அவன் பேரச் சொல்லி என்னைக் கூப்பிடற?’’ என்றேன்.

‘‘ஐயகோ! கணவனை அப்படி அழைப்பார்கள். நீங்கள் பழைய திரைப்படங்களில் பார்த்ததில்லையா? ’’

‘‘டிவில ஓசில போடறானேன்னு எம்.கே.டி. படம்லாம் பாக்காதன்னா கேக்கறியா? இப்டில்லாம் விபரீதமா கூப்பிட்டுக்கிட்டு... சரி, என்ன விஷயம்னு சொல்லு...’’

‘‘மா‌லை அலுவலகத்திலிருந்து விரைவாய் திரும்பி விடுங்கள். நாம் கடற்கரைக்குச் சென்று, பின் பெரிய அங்காடிக்குச் செல்லலாம். அங்கே நம் இல்லத்திற்காய் சில பொருட்களும், எனக்கு சில அழகுசாதனப் பொருட்களும் வாங்கி வர வேண்டும்.’’ என்றாள்.

‘‘பெரிய அங்காடியா? அப்படின்னா?’’ என்று நான் விழிக்க, ‘‘இதைத்தான் இயம்பினேன் நான்’’ என்று அவள் எடுத்துக் காட்டிய கவரில் Big Bazaar என்றிருந்தது. ‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன். அந்தக் கணம் ‘பளிச்’சென்று ஒரு ஐடியா வந்தது. ‘‘சரி, உனக்கெதுக்கு அழகுசாதனப் பொருட்கள்லாம்? அதெல்லாம் சாதாரணப் பெண்களுக்குத்தான்... நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில்.

‘‘என்ன... நான் அவ்வளவு இளமை(?)யாகவா தெரிகிறேன்!! மிக்க மகிழ்ச்சிங்க...’’ என்றாள் வெட்கமாக. சரியான அர்த்தம் தெரிந்திருந்தால், நான் இந்தப் பதிவு எழுத முழுதாகத் தேறியிருக்க மாட்டேன். (ஹேமா, சசிகலா மாதிரி கவிஞர்கள் யாரும் போட்டுக் குடுத்துராதீங்கப்பா)

ஐஸ் வைத்த கையோடு அடுத்த கோரிக்கையை வைத்தேன். ‘‘சரி, திருவல்லிக்கேணில இந்தப் பதிப்பகத்துக்குப் போயி, ‘கல்கி களஞ்சியம்’னு இவங்க ஒரு புக் போட்டிருக்காங்க. வாங்கிட்டு வந்துடேன் ப்ளீஸ், ஈவ்னிங் நாம நீ சொன்ன மாதிரி பீச்சுக்குப் போகலாம்’’ என்றேன். ‘‘சரிங்க.....’’ என்றாள் பல்லெல்லாம் வாயாக.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ‘‘என்னங்க இன்னிக்கு இவ்வளவு லேட்?’’ என்றபடி வரவேற்றாள் என் இல்லாள்.

வியப்பாகப் பார்த்தேன். ‘’சரி... குணமாயிட்டியா? ஐமீன்... இங்கிலீஷ் கலந்து சாதாரணமாப் பேச ஆரம்பிச்சுட்டியே...’’ என்றேன்.

‘‘ஆமாங்க. அந்த ப்ரொக்ராம்ல கலந்துக்கற எண்ணத்தையே இன்னிக்கு காலைலயே கை விட்டுட்டேன்...’’ என்றாள். ‘‘நன்று இந்த திடீர் (நல்ல) முடிவுக்கு காரணம் யாதோ?’’ என்றேன்.

‘‘அதுவா... காலைல நீங்க ஆபீஸ் போகும் போது திருவல்லிக்கேணில ஒரு பப்ளிகேஷன் ஆபீஸ் போய் புக் ஒண்ணு வாங்கி வெக்கச் ‌சொன்னீங்கல்லியா... அதுக்காக பஸ் பிடிச்சேன். கண்டக்டர் வந்ததும், டிக்கெட் கேட்டேங்க. அதுக்கு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டான்...’’

‘‘டிக்கெட்டை கண்டக்டர்ட்டதானே கேட்டாகணும்? அதுக்கு ஏன் திட்டினான்?’’

‘‘ஐயா, பனிக்கூழ் இல்லத்துக்கு ஒரு சீட்டு தாருங்கள்- அப்படின்னு கேட்டேன். ‘ஙே’ன்னு முழி்ச்சான். ‘அங்கல்லாம் இந்த பஸ் போகாதும்மா’ அப்படின்னான். ‘இல்லை ஐயா, திருவல்லிக்கேணிக்கு முந்தைய நிறுத்தமே அதுதான்’ன்னேன் நான். ‘ஐய, அது ஐஸ் ஹவுஸ்ம்மா’ன்னான் கண்டக்டர். ‘நான் அதைத்தான் ஐயா தமிழில் இயம்பினேன்’ன்னேன் நான். அவ்வளவுதாங்க... நான்ஸ்டாப்பா கத்த ஆரம்பிச்சுட்டான். ‘புரியற மாதிரி தமிழ்ல(!) கேட்டா இன்னா... நமக்குன்னே வர்றாங்க பாரு’ன்னு ஆரம்பிச்சு அவன் கத்தறான். பஸ்ல எல்லாரும் சிரிக்கறாங்க. எனக்கு ரொம்ப இன்சல்ட்டாப் போச்சு. இந்த வம்பே வேண்டாம்னு நார்மலுக்கு மாறிட்டேன்’’ என்றாள்.

வீட்டுக்குள் என்னிடம் தனித் தமிழ் பேசிக் கொல்லும் இவளை வெளி நபர்களிடம் அனுப்பி வைத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டு சரியாகி விடுவாள் என்று கணித்த என் திட்டத்துக்கு வெற்றி! நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.

‘‘ஆஹா... இல்லாளை வசைபாடுதல் எம்மால் இயலாததன்றோ? அதைச் சாதித்த அந்த நடத்துனர் வாழ்க!’’ என்றேன். அருகில் வந்து வினோதமாகப் பார்த்தாள். ‘‘என்னாச்சுங்க... ஏன் இப்போ இப்படி நீங்க தனித்தமிழ்ல பேசறீங்க?  வேணாங்க...’’ என்றாள்.

‘‘அங்ஙனம் நீ இயம்பினால் யாம் விட்டுவிடுவோமா? எம்மை கடந்த வாரம் முழுதும் தனித்தமிழில் பேசி மகிழ்வித்த(!) உம்முடன் இனிவரும் இரண்டு திங்கள் யாமும் தனித்தமிழில் உரையாடுவதென்பது எமது துணிபு’’ என்றேன்.

சரிதாவின் கண்கள் பிதுங்கின; உதட்டைச் சுழித்தாள் (அழுகையின் ஆரம்பம்!) ‘‘ப்ளீஸ் வேண்டாங்க... நான் டிவில சீரியல் பாத்து அழறது போதாதுன்னு நீங்க வேற அழ வெக்காதீங்க. இனி சீரியலும், சினிமாவும் தவிர வேற எதுவும் பாக்க மாட்டேங்க’’ என்றாள்.

அப்பாடா ஒரு வழியாக டிவி தொல்லையிலிருந்து விடுதலை! ஹி... ஹி... இன்னும் நான் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறேனாக்கும்..!!

Monday, September 24, 2012

மொறு மொறு மிக்ஸர் - 12

Posted by பால கணேஷ் Monday, September 24, 2012

திவர் திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு அலுவலகத்திலும் நிறைய வேலைகள் இருந்ததால் Mental Stress அதிகமாக இருந்தது. விளைவாக... ஸ்டேட் பாங்க் ஏடிஎம்ல போய் கார்டை சொருகிட்டு பின் நம்பர் கேட்கும்போது பார்த்தா... நம்பர் மறந்து போயிட்டுது. இதுவா, அதுவான்னு அடிச்சுப் பாக்கறேன். மூணு தடவைக்கு மேல ட்ரை பண்ண முடியாதுன்னு கார்டை ரிஜக்ட் பண்ணிடுச்சு. சரி, நிதானமா யோசிச்சு ட்ரை பண்ணலாம்னு வீட்ல உக்காந்து நம்பரை நினைவுக்கு கொண்டு வர ட்ரை பண்றேன். ம்ஹும்...! தோணவே இல்லை. அடுத்த நாளும் குருட்டாம்போக்ல ட்ரை பண்ணிப் பாத்து தோத்துட்டேன். சரி, அடுத்த வாரம் டைம் கிடைக்கறப்ப, பேங்க்ல எழுதிக் குடுத்து வேற பின் நம்பர்தான் வாங்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

ஆனா அடுத்து வந்த ரெண்டு வாரங்கள்ல அதை செயல்படுத்த முடியலை. மூணாவது வாரத்துல திரும்பவும் அலுவலக, சொந்த வேலைகளின் நெருக்கடி மிக அதிகமாக ஏற்பட்டு டென்ஷன் பண்ணியது. அம்மா பணம் தேவைன்னு சொன்னதால மறுபடி ஏடி‌எம் ஞாபகம் வந்து ட்ரை பண்ணலாமேன்னு போனேன். எனக்கு இருந்த மனக்குழப்பத்துல நம்பரை யோசிக்காம, டைப்பிட்டு தொகையச் சொன்னேன். பணம் குடுத்துடுச்சு அந்த மிஷின். ‘ஆஹா, இப்ப என்ன நம்பரை அடிச்சோம்?’ யோசிச்சப்ப, சோடால கோலிய உடைச்சதும் காஸ் பொங்கற மாதிரி நம்பர் அடி மனசுலருந்து மேல வந்துடுச்சு. டக்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன்.

தமிழ் சினிமாவுல தலையில அடிபட்டு பைத்தியமாயிட்ட ஹீரோ/ஹீரோயினுக்கு மறுபடி ஒரு சீன்ல அதே மாதிரி அடிபட்டதும் நினைவு திரும்பிடுச்சுன்னு வர்ற காட்சிகளை ஏகத்துக்கு கமெண்ட் அடிச்சிருக்கேன்... இப்போ டென்ஷன்ல மறந்துபோன நம்பர் டென்ஷன்ல நினைவுக்கு வந்ததைப் பார்த்தா... அந்தக் காட்சிகள்லகூட ஒரு லாஜிக் இருக்கோன்னுதான் தோணுது. உங்களுக்கு இந்த மாதிரி விசித்திர அனுபவம் ஏற்பட்டதுண்டா?

=========================================

சீதைக்கு ராமனை மணக்கோலத்தில் கண்டுவிடக் கொள்ளை ஆசை! யாருமறியா வண்ணம் கார்மேக வண்ணனைக் கடைக்கண்ணால் கண்டாள். அப்போது தோழியர் சீதையின் கைகளைக் கிள்ளினராம்! உடனே சீதை தலைகுனிந்தபோது அந்தச் சேடியர் கூட்டம் அவளைப் பார்த்துச் சிரித்ததாம்!

உண்மையில் நடந்தது என்ன? கடைக் கண்களால் ராமனை நோக்‌கியபோது உள்ளத்தால் மட்டுமின்றி உடலாலும் சீதை பூரித்துப் போனாளாம். அவளது கைகள் பூரித்தபோது வளையல்கள்தான் அவ்வாறு கிள்ளினவாம். அப்போது தோழியர் கிள்ளுவதாக எண்ணி சீதை ‌தலைகுனிந்தபோது- ராமனைக் காணாத அந்தச் சிறுபொழுதில் அவள் ரொம்பத் தளர்ந்து போனாளாம். அதனால் பூரிப்பெல்லாம் போய் அவளது வளையல்கள் தங்கள் பழைய நிலையை அடையும்போது ஏற்படுத்திய சத்தம்தான் தோழியர் சிரிப்பாகத் தோன்றியதாம். கம்பரின் வர்ணனைக்கு ஈடு, இணை எதுவும் உண்டா? (என் மாணவப் பருவத்தில் சீதா கல்யாணம்’ கதாகாலட்சேபத்தில் கேட்டது)


=========================================


 =========================================

கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தன் வர்ணனையாளர் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் என்று சொல்லியிருந்தேனில்‌லையா... அவற்றில் சில இங்கே:

= தமிழில் வர்ணனை செய்யும் போது மொழியைச் சரியாகக் கையாள்வது மிக அவசியம். கிரிக்கெட் பற்றி நான் அதிகம் தெரிந்திராதவனாக இருந்த சமயத்தில் ஒருமுறை கமெண்டேட்டர் பாக்ஸில் இருந்தேன். வர்ணனை செய்பவர், ‘‘நமது பிள்ளைகள் நன்றாக விளையாடுகின்றனர்’’ என்றார். ‘‘என்னங்க இது?’’ என்று கேட்டேன். ‘‘Our boys are playing well-ங்கறதை தமிழ்ல சொன்னேன் ஸார்..’’ என்றார். எனக்குச் சிரிப்பாகப் போய் விட்டது. ‘‘நமது இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்-ன்னு சொல்லுங்க ஸார். இப்படி நேரடியாவா மொழிபெயர்ப்பீங்க. ஸில்லி பாயிண்ட்ல கேட்ச் பிடிச்சான்ங்கறதை ‘முட்டாள் முனையில் நின்று பந்தைப் பிடித்தான்’ அப்படின்னு சொல்வீங்க போலருக்கே...’’ என்று நான் சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர். அவர் ‌சொன்னார்: ‘‘நீங்க எனக்கு நல்லா தமிழ் பேசக் கத்துக் குடுங்க. நான் உங்களுக்கு கிரிக்கெட் கத்துத் தந்துடறேன்..’’ என்று.

= ஒரு முக்கிய பிரமுகர் வந்திருந்த சமயம், கிரிக்கெட் மேட்சைப் பார்த்துவிட்டு கமெண்டேட்டர் பாக்ஸ்க்கும் விசிட் செய்துவிட்டு கீழே வந்தார். அங்கே எதிர்ப்பட்ட என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ‘‘Oh! I met a Abdul Jabbar in upstairs’’ என்றார் அந்தப் பிரமுகர். நான் சொன்னேன். ‘‘அந்த அப்துல் ஜப்பாருக்குத் தமிழ் தெரியாது. இந்த அப்துல் ஜப்பாருக்கு கிரிக்கெட் தெரியாது’’ என்று. அவர் சிரித்து விட்டார்.

= ஒரு சமயம் தமிழக கிரிக்கெட் அணியில் ‌ராமகிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன், கமெண்டேட்டர் ராமமூர்த்தி என்று அரங்கம் முழுவதுமே ‘ராம’ மயமாக இருந்தது. அப்போது ஒருவர் இப்படி கமெண்ட் அடித்தார்- ‘‘இத்தனை ராமன்களுக்கு நடுவுல ஒரு பாபர் இருப்பாரே...’’ என்று. உடனே அதற்கு பதில் தந்தார் ராமகிருஷ்ணன்: ‘‘அவர் பாபர் இல்லை, பாபர்ராம்!’’ என்று. அனைவரும் கைதட்டி ரசித்தனர்.

= கிரிக்கெட் வர்ணனையாளர்களில் என் சீனியரான ராமமூர்த்தி செய்யும் வர்ணனை எனக்கு ‌ரொம்பப் பிடிக்கும். ஒரு சமயம் டெஸ்ட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது சுனில் கவாஸ்கர் அவுட்டாகி விட்டார். நைட் வாட்ச்மேனாக பிரசன்னா உள்ளே வருகிறார். அப்போது இவர் சொன்னது: ‘‘பொக்கிஷமே பறி போய்விட்ட பிறகு இந்த நைட் வாட்ச்மேன் வந்து எதைப் பாதுகாக்கப் போகிறார்?’’ என்று.

=========================================

சுவின் பால் பசுவின் உடம்பிலிருந்து உற்பத்தியாகிறது. அது எப்படி சைவ உணவாக முடியும்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வாரியார் தந்த பதில்: ‘‘உயிர்களைக் கொல்வது பெரும் பாவம். கொன்று அதனால் வருவது இறைச்சி. அதையுண்பது மகாபாவம். கொல்லாமை, புலாலுண்ணாம‌ை என்று இரு அதிகாரங்களில் திருவள்ளுவர் இதன் கொடுமையைக் கூறுகின்றார். கறக்கின்ற பாலைப் பருகுவது குற்றமன்று. அது அசைவ உணவு ஆகாது. பால் கறக்கவில்லையானால் பசுவுக்குத் துன்பம். கன்றுக்கு இரு மடிகளை விட்டு மற்ற இரு மடிகளில் இருந்து பால் கறக்க வேண்டும். பசுவின் பால் புனிதமானது; சத்துவ குணத்தைத் தர வல்லது. ‘பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்’ என்று ஒளவைப் பிராட்டியார் பாடிய பா‌டலை அறிக. (‘வாரியார் விருந்து’ நூலிலிருந்து)

Friday, September 21, 2012


சில பேர் கிட்ட வருஷக்கணக்கா பழகினாலும் நெருக்கமா உணர முடியாது. சில பேர் கிட்ட ஒரு மணி நேரம் பழகினாலும் பல வருஷம் பழகினவங்க போல உணர்வோம். அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவங்கதான் துளசி டீச்சரும் கோபால் சாரும். நியுசியிலருந்து அவங்க வந்திருக்கறது தெரிஞ்சதும் தி.நகர்ல அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் சந்திச்சப்ப என்கிட்ட புதிய அறிமுகங்கள்ங்கற எண்ணமே வரல்லை. நேத்திக்கு நடந்த அவங்களோட சஷ்டியப்த பூர்‌த்தியிலயும், மாலையில் நடந்த பிறந்ததின விழா சந்திப்பிலும் முழுமையா கலந்துக்கறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு.

காலையில மைலாப்பூர்ல இருக்கற ராகசுதா ஹால்ல ஹோமம் வளர்த்து சம்பிரதாயப்படி 60ம் கல்யாண வைபவம் நடந்துச்சுங்க. வல்லிம்மா புன்னகை முகமா என்னை வரவேற்றாங்க. நண்பர் உண்மைத் தமிழன் வந்திருந்தார். அவரோட பேசிக்கிட்டே மேடையில நடக்கற விசேஷங்களை கவனிச்சுட்டிருந்தேன். கொஞ்சநேரத்துல பாரதி மணி ஐயா வரவும், உண்மைத் தமிழன் அவரோட பேசப் போயிட்டார். நான் சும்மா ஹாலைச் சுத்தி வந்தப்ப, ஒரு பெரியவர் என்னை நிறுத்தி, நான் நான்தானா என்று விசாரித்தார். (நீங்கதானே பாலகணேஷ் என்று). ‘‘என் பேரு சுப்புரத்தினம்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘சுப்புத்தாத்தா’ என்று அன்பாக நாங்கள் அழைக்கும் அவரை பதிவர் திருவிழாவி்ன்போது சந்தித்திருந்தேன். ஆனாலும் அதிகம் பேச முடிந்ததில்லை. அந்தக் குறை நேற்று நீங்கியது. சுப்புத்தாத்தா எனக்கு ஆசி வழங்கி, நான் எழுதறதை ரசிச்சதா சொன்னது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியங்கள்ல ஒண்ணுன்னுதான் நினைக்கறேன்.

கொஞ்ச நேரத்துல ஷைலஜாக்கா வந்தாங்க. பெங்களூர்ல இருந்து இந்த விழாவுக்காக சென்னை வந்து ரெண்டு நாளாச்சுன்னு சொன்னாங்க. அக்காட்ட பேசிட்டிருந்தா, நேரம் போறதே தெரியாது இந்தத் தம்பிக்கு. ஷைலஜாக்கா, கவிதாயினி மதுமிதாவை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அவங்களைப் பத்தி நிறைய சந்தர்ப்பங்கள்ல கேள்விப்பட்டிருந்த எனக்கு சந்திச்சுப் பேசினதுல ரொம்ப சந்தோஷம். அதுலயும் அவங்க ரொம்பவே சிம்பிளா, அன்பா, கனிவா உரையாடினது மேலும் குஷிதான் போங்க.

மணமக்கள் மாங்கல்ய தாரணம் முடிஞ்சு மூத்தவங்க கிட்ட ஆசி வாங்கியும், இளைஞர்களை ஆசிர்வதிச்சுக்கிட்டிருந்தபோது ஷைலஜாக்கா, வல்லிம்மா, மதுமிதா எல்லாருமாச் சேர்ந்து ‘நாளாம் நாளாம் திருநாளாம், துளசிக்கும் கோபாலுக்கும் மணநாளாம்’ன்னு காதலிக்க நேரமில்லை படப் பாட்டின் மெட்டிலேயே வரிகளை எழுதிப் பாடினாங்க. ஒருமித்த குரல்ல பாடின அந்தப் பாட்டுல அவ்வளவு இனிமை! எல்லாரும் கை தட்டி ரசிச்சோம். அருமையான மதிய விருந்தை ஒரு கை பார்த்துட்டு ‘மாலையில் சந்திக்கலாம்’னுட்டுப் பிரிஞ்சோம்.

வ்னிங் 7 மணிக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல ‘கெட்-டு-கெதர்’க்காக நான் 6.50க்குப் போயிட்டேன். பர்த்டே பேபியான கோபால் சார் ட்ரிம்மா ட்ரஸ் பண்ணிக்கிட்டு எல்லாரையும் வெல்கம் பண்ணிட்டிருந்தாங்க. காலையில மணமகளா மேடையில இருந்ததால துளசி டீச்சர் கைல எடுக்க இயலாம இருந்த ஆயுதத்தை (கேமிரா) இப்ப கைல எடுத்திருந்தாங்க. என்னையும் சுட்டுத் தள்ளினாங்க. கிரிக்கெட் வர்ணனைகள்ல புகழ்பெற்ற அப்துல் ஜப்பார் அவர்கள் வந்திருந்தாங்க. ரெண்டு வார்த்தை பேசிட்டிருந்தப்ப வலைச்சரம் சீனா அவர்கள் வந்திருக்கறதைப் பார்த்துட்டு அவரோட உரையாடிட்டிருந்தேன். அப்ப, தலைநகரிலிருந்து வந்திருக்கற என் நண்பர் வெங்கட் நாகராஜ் என்ட்ரி கொடுத்தார். அவரோட கொஞ்ச நேரம் பேசிட்டு சந்தோஷமா பொழுது போயிட்டிருந்த நேரத்துல வரிசையா நண்பர்கள் எல்லாரும் வர ஆரம்பிச்சாங்க.

மோகன்குமார், தங்கை ஸாதிகா, உண்மைத்தமிழன், லதானந்த், கேபிள் சங்கர், பலாபட்டறை சங்கர், புதுகை அப்துல்லா, ஜோதிஜி, கேஆர்பி செந்தில், வலைச்சரம் சீனா ஐயா, வெங்கட் நாகராஜ், யுவகிருஷ்ணா, அதிஷா, ஷைலஜாக்கா, மதுமிதா, இன்னும முன்பு நிறையப் பதிவுகள் எழுதிட்டு இப்ப அதிகம் எழுதாத சில பதிவர்கள்ன்னு கிட்டத்தட்ட மினி பதிவர் திருவிழா மாதிரி ஒரு ஃபீலிங் வந்துட்டுது. எல்லாரோடயும் ஜாலியா பேசிட்டு இருந்ததுல (எனக்கு ஜாலி; அவங்களுக்கு?) நேரம் போனதே தெரியலை. அப்புறம்... கோபால் ஸார் வெட்டினாரு - கேக்கை; ஊட்டினாரு- துளசி டீச்சருக்கு. எல்லாரும் பாட்டுப் பாடி (பயமுறுத்தி?) வாழ்த்துச் சொன்னோம். ஷைலஜாக்கா அருமையான கவிதை ஒண்ணை எழுதிட்டு வந்திருந்தாங்க. அதை மேடையில படிச்சு, அத்தனை பேரின் கைதட்டலையும் அள்ளிக்கிட்டாங்க.

யுவகிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார் மோகன்குமார். முன்னால மார்னிங் ஃபங்ஷன் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தப்ப மோகன் போன் பண்ணி, ‘‘ஃபங்ஷனுக்கு யுவகிருஷ்ணா வந்திருந்ததா +ல எழுதியிருக்காரே. பாத்துப் பேசினீங்களா?’’ன்னு கேட்டார். ‘‘அடடா... நான் கவனிக்கலையே மோகன்...’’ன்னு வருத்தமா சொன்னேன். மாலையில பார்ட்டில மோகன் அறிமுகப்படுத்தினதும்தான் தெரிஞ்சது- காலையிலயே அவரை கவனிச்சிருந்தும் யார்னு தெரியாததால ஹலோ சொல்லாம இருந்திட்டேன்னு. அவர்கிட்ட ஒரு ஸாரி சொல்லிட்டு, அப்புறம் நல்லாவே பேசினது ரொம்பத் திருப்தி எனக்கு.

அப்புறம் என்ன... பஃபே விருந்துதான். கைல ப்ளேட்டைத் தூக்கிட்டு உணவு வகைகளைக் கொறிக்கும் இந்தரக பஃபே பார்ட்டிகள் எனக்கு அலர்ஜியா இருந்தாலும், சமீபகாலங்கள்ல அதிகமா அட்டெண்ட் பண்றதால சமாளிக்கப் பழகிடுச்சு. கைல தட்டு ஏந்திக்கிட்டு டிபன் வகைகளை கொறிச்சுட்டிருந்தப்ப, எழுத்தாளர் ஷங்கரநாராயணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஃபங்ஷன் ஹாலில் பார்த்தும் யாரென்று அறியாதிருந்த எனக்கு ஆச்சரியம். அவருக்கு சங்கர் நாராயணனை (கேபிள் சங்கர்) அறிமுகம் செய்து வைத்தேன். கேபிளுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருந்தது. முன் சந்தித்த சந்தர்ப்பங்களை சொல்லி ஞாபகப்படுத்தினார். உணவு முடித்து வந்ததும் அப்துல் ஜப்பார் அவர்கள் தன் கிரிக்கெட் வர்ணனையாளர் வாழ்விலிருந்து சில சுவாரஸ்ய சம்பவங்களைப் பகிர்ந்து கலகலப்பாக்கினார். (அஸ்குபுஸ்கு! இங்க சொல்லிடுவனா... தனிப் பதிவால்ல எழுதியாகணும் அதையெல்லாம்!)

காலையிலயும், மாலையிலயும் முழுமையா இருந்து விழா நிகழ்வுகளை ரசிச்சு, கோபால்-துளசி தம்பதிகள்ட்ட ஆசி வாங்கி, நிறைய நண்பர்களோட உரையாடி... இப்படி நிறைய நிறைய மகிழ்ச்சியைத் தந்த தினம் நேத்திக்கு. ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா... காலையில உண்மைத் தமிழன் தன்னோட ஸேம்ஸங் நோட்ல படம் எடுத்தார், வல்லிம்மா அவங்க கேமரால படம் புடிச்சாங்க, நானும் என் ‌மொபைல்ல பங்ஷன் போட்டோ எடுத்தேன். 

வீட்ல வந்து ஓபன் பண்ணிப் பாத்தா... டீச்சர் முகமும், கோபால் ஸார் முகமும் தண்ணிக்கடியில இருக்கற மாதிரி கலங்கலா வந்திருக்கு. நம்ம மொபைலோட க்வாலிட்டி அந்த லட்சணம்! ஈவ்னிங் பங்ஷன்ல நண்பர் கேபிள் ஒரு சூப்பரான கேமரா வெச்சு படங்களை சுட்டாரு பாருங்க... அதுக்குப் பேரு 7D கேமராவாம். அப்படி ஒரு க்ளாரிட்டி! ‌எனக்கு காதுகள்ல புகை வராத குறைதான்! மக்கா, சீக்கிரம் நாமளும் எப்படியாவது ஒரு கேமரா வாங்கி அழகழகா(!) படங்களை சுட்டுத் தள்ளிரணும்டான்னு முடிவே பண்ணிட்டேன். அதனாலதான் படங்கள் இணைக்காம இந்தப் பதிவு... ஹி... ஹி... ஹி...

Tuesday, September 18, 2012

சிரித்திரபுரம் - 1

Posted by பால கணேஷ் Tuesday, September 18, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

Monday, September 17, 2012

சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Posted by பால கணேஷ் Monday, September 17, 2012

ந்தியாவில் திரைப்படங்களில் ஆபாசமான வசனங்களோ, பாடல்களோ, இறையாண்மை(அப்படின்னா?)க்கெதிரான கருத்துக்களோ இடம்பெறாமல் தணிக்கை செய்வதற்காக ‘சென்சார் போர்டு’ என்கிற ஒரு அமைப்பு இருக்கிறது. அதனிடம் சான்றிதழ் பெற்ற பின்னர்தான் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்த ‘சென்சார்’ என்கிற விஷயத்தை நான் கவனித்த பழைய படங்களிலிருந்து துவங்கி தற்காலத்திற்கு வருகிறேன்.

பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே...’’ என்று எழுதியிருந்தார் கண்ணதாசன். சென்சார் ஆட்சேபித்ததால் இந்த வரிகள் மாற்றப்பட்டு, ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...’’ என்று இப்போது கேட்டால் ஒலிக்கும். உதட்டைசைவிற்கு ஏற்றதாக இருப்பதால் ‌அது பெரிதாகத் தெரியாது.

சென்சாரி் இந்த பருப்பு வேகாமல் போனது அபிநய மன்னரான எம்.ஜி.ஆரிடம்தான். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் ‘சக்கரைக் கட்டி ராசாத்தி’ பாடலில் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உதட்டில் உள்ளதைத் தரவோ’’ என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். ‘உதட்டில் உள்ளதை’ என்ற வரிகளை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உயிரை உன்னிடம் தரவோ’’ என்று மாற்றிப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் காட்சியில் ஸ்பஷ்டமாக தன் உதட்டையும், சரோஜாதேவியின் உதடையும் சுட்டிக் காட்டி அபிநயித்திருப்பார் எம்.ஜி.ஆர். நல்ல டமாஸு!

அப்படித்தான் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்ற பாடலில் ‘‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’’ என்று வரும் ஒரு வரிசை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘மேடையில் முழங்கு திரு.வி.க. போல்’’ என்று மாற்றியிருப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் உதட்டசைவோ மிகத் தெளிவாக ‘அறிஞர் அண்ணா’ என்றே இருக்கும்.

கன்னாபின்ன‌ொவன்று சென்சார்‌ போர்டு இப்படி மாற்றுவதை தன் படத்திலேயே துணிச்சலாக விமர்சித்தவர் சோ! ஏதோ பெயர் நினைவில்லாத ஒரு படத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த சென் தம்பதியினரின் வீட்டில் அவரும் அவர் நண்பனும் குடியிருப்பார்கள். தங்கள் போர்ஷனிலிருந்து வெளிவரும் போது, ‘‘அர்ஜண்டா ஒரு போன் பண்ணனும்டா’’ என்பார் சோ. ‘‘சென் சார் கிட்ட பர்மிஷன் வாங்கிப் பண்ணேண்டா’’ என்பார் அவர் நண்பர். ‘‘சென் மேடம் நல்லவங்கடா. போன் பண்ண விடுவாங்க, சென்சார் ஒரு மடையன், முட்டாள்!’’ என்பார் சோ. அரங்கையே அதிர வைத்த வசனம் அது அந்நாளில்.

இப்படியெல்லாம் நல்ல தமிழ் வரிகளையே ஆட்சேபித்த சென்சார் என்கிற அமைப்பு பின்னாளில் அருமையாக எழுதி வரும் நம் சமகாலக் கவிஞரான வைரமுத்துவையும் விட்டு வைக்கவில்லை. உயர்ந்த உள்ளம் படத்தில் ‘‘கலசம் இங்கு கவசமாகும், காமன் அம்பு முறிந்து போகும்.’’ என்று அவர் எழுதியிருந்த வரிகளை மாற்றச் சொன்னதால், ‘‘விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம், தொடங்கு கண்ணே புதிய பாடம்’’ என்று மாற்றிப் பதிவு செய்திருந்தார்கள். வைரமுத்துவையும் விட்டு வைக்காதது இந்த சென்சார்!

இவ்வளவு விழிப்பாகச் செயல்பட்ட சென்சார் போர்டு பின்னாளில் தாராள மனம் கொண்டு ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா, இல்ல ஓடிப் போயி கல்யாணம் கட்டிக்கலாமா?’ என்பது போன்ற இலக்கியத் தரமான(?) பாடல் தொடங்கி எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள். (இன்றைய ஆபாச வரிகள் அடங்கிய பாடல்களின் உதாரணங்களை விலாவரியாக அடுக்கி இதை ஆபாசப் பதிவாக மாற்ற நான் விரும்பாததால் ஒன்றை மட்டும் சொல்லியிருக்கிறேன்.) சமூகத்தில் விரசம் என்பதன் அளவுகோல் என்பது மாறிவிட்டதா... இல்லை, தொலைக்காட்சி செய்யாத கெடுதலையா சினிமா செய்துவிடப் போகிறது என்கிற அலட்சியமா... புரியவி்ல்லை.

பாடல்களில் இப்படி என்றால் வசனங்களில்... யப்பா! வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் வசனம் ஒன்று சைலண்ட் செய்யப்பட்டிருக்கும். அடுத்த செகண்ட் கமல் இப்படிச் சொல்வார்: ‘‘இன்னா சார், பெத்த பொண்ணையே லோலாயி, பூட்ட கேஸ்ன்னு சொல்றீங்க?’’ என்று. அட ஞானசூன்யங்களா...! இப்படித் தெளிவாக வசனத்தைச் சொல்வதற்கு என்ன எழவுக்ககாகய்யா பி,ராஜ் பேசும் வசனத்தை வெட்டினீர்கள்? ஒருவேளை வில்லன் சொன்னால் ஆபாசம். கதாநாயகன் சொன்னால் ஆபாசமில்லை என்பது அளவுகோலா?

யதார்த்தமான மனிதர்களைக் காட்டுகிறேன் பேர்வழி என்று பாரதிராஜா தன் படம் நெடுக தக்காளிக்கான எதுகைச் சொல்லை இறைத்திருந்தார். அதுவும் ஆட்சேபிக்கப்படாமல் வெளியானது. இவையெல்லாவற்றையும் மிஞ்சி விவேக் என்கிற காமெடியர் தன் அங்க அசைவுகளாலும், வார்த்தைகளாலும் இரட்டை அர்த்தம் எதுவுமின்றி வெளிப்படையாக ஒற்றை அர்த்தத்திலேயே காமெடி(?) என்கிற பெயரில் கூத்தடித்து வருகிறார். (இவருக்கு ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் வேறு. கலைவாணர் இருந்திருந்தால் இதைக் கேட்டுக் கதறி அழுதிருப்பார்.)

இதையெல்லாம் கவனித்து வருகிற எனக்கு பல நாட்களாகவே மனதில் எழும் கேள்வி: ‘‘சென்சார் போர்டு என்கிற ஒன்று திரைப்படங்களுக்குத் தேவையா?’’ என்பதுதான். படத்தைத் தயாரிப்பவர் அதை நேரடியாக தியேட்டர்களிலோ, டிவிடிகளிலோ வெளியிட்டு விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? தமிழக அரசு சந்துக்குச் சந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழக மக்களைக் கெடுப்பதை விடவா அதிகமாக சினிமாக்கள் கெடுத்துவிடப் போகின்றன? பேருக்கு செயல்படுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பும், அதற்கு தெண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஏழெட்டு அதிகாரிகளும் இருந்து கண் துடைப்பாக செயல்படுவதை விட இழுத்து மூடிவிடுவது உத்தமம் என்பது என் கருத்து.

தணிக்கைத் துறையைப் பொறுத்த வரையில் என் நிலைப்பாடு இப்படி! உங்கள் கருத்து எப்படி?

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube