Friday, December 23, 2011

எல்லோருக்கும் பிடித்த MGR

Posted by பால கணேஷ் Friday, December 23, 2011
 ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும் ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக வாழ்ந்து மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அவரது நினைவு நாளான இன்று - டிசம்பர் 24 - அவரை நினைவு கூர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

* கர்ணன் படத்தில் சிவாஜிக்கு முன்னால் எம்.ஜி.ஆரிடம்தான் நடிக்கக் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைக்கூடத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். ‘நினைத்ததை முடிப் பவன்’ படத்தி்ல சிகரெட்டை வாயில் வைப்பார், இழுக்க மாட்டார்.     
 * முதலமைச்சர் பதவியை ஏற்றுக் ‌கொண்டபின் ஷுட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு (அவர் நடித்த கடைசிப் படமான) ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

• நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள்.

* எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
• எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து வெற்றி பெற்ற ‘மலைக் கள்ளன்’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் அது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர். 


• எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தால். அதில் முக்கியமான இருவர் அரசியலைக் கலக்கிய துரைமுருகன், சினிமாவைக் கலக்கிய கோவை சரளா.

* கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழி லும் ஆங்கி லத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங் கிலத்தில் அண்ணாவை வசனம் எழுதும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஆசை நிறை வேறவில்லை.
• அறிமுகம்    இல்லாத புதிய நபர்களைச் சந்தித்தால் “நான் எம்.ஜி.ராமச்சந்திரன், சினிமா நடிகன்” என்று அறிமுகம் செய்து கொள்ளுமளவுக்கு எளிமையானவர் எம்.ஜி.ஆர்.

* தன் ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு சிங்கத்தையும், கரடியையும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டரையும் நியமித்திருந்தார்.
• மிகவும் நெருக்கமானவர் களை ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
 * ‘அடிமைப் பெண்’ ஷுட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி அணிந்தார். அது பிடித்துப் போனதுடன், நன்றாக இருக்கிறதென்று அனைவரும் பாராட்டவே அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

• எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கிய பெருமை உடையவர்கள் இருவர். ஒருவர் கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கி அணிந்து தொப்பி, கண்ணாடி இல்லாமல் தானே காரை டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாத்தான் கண்டுபிடிப்பாங்க போல’’ என்பாராம்!

• தன் அன்னையான சத்யா அவர்களை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  
* ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை (முதல்வராவதற்கு முந்தைய காலகட்டத்தில்) எழுதியிருக் கிறார் எம்.ஜி.ஆர்.
• எம்.ஜி.ஆர். நடத்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடல் எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்த பெருமையுடையது.
   

* எம்.ஜி.ஆர்.1936ல் சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராகி 1977ல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை மொத்தம் 136 படங்களில் நடித்தார்.

• தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ல் எம்.ஜி.ஆரின் கமெண்ட் : “அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்ல. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.”
 

நன்றி : ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்.

Tuesday, December 20, 2011

கேப்ஸ்யூல் நாவல்-3 : யவன ராணி

Posted by பால கணேஷ் Tuesday, December 20, 2011
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் யவனராணி தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே!

சோழர்களின் பிரதான கடற்கரை நகரமான பூம்புகாரில் சோழர் படை உபதலைவன் இளஞ்செழியன், தன் மேல் கோபத்துடன் இருக்கும் மாமன் மகள் பூவழகியின் நினைவுடன் கடற்கரையில் நடந்து சென்று கொணடிருக்கும் போது அவன் காலில் இடறுகிறாள் ஒரு யவனப் (கிரேக்க) பெண். அவளைத் தன் இல்லத்துக்கு எடுத்து வந்து முதலுதவி செய்ய முற்படுகிறான் இளஞ்செழியன்.  அவன் மெய்க்காப்பாளன் ஹிப்பலாஸ், அவள் அணிந்திருக்கும் அன்னப் பறவை ஆபரணத்தை வைத்து அவள் யவன அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அவள் வந்திருப்பது தெரிந்தால் புகாரின் யவனர்கள் ஒன்று திரண்டு புரட்சி செய்து புகாரைக் கைப்பற்றி அவளை அரசியாக்கி விடுவார்கள் என்றும் சொல்லி அஞ்சுகிறான். அதை மெய்ப்பிப்பது போல் கோட்டைக் காவல் தலைவன் (யவனன்) விசாரணைக்கு வர, யவன ராணியை மறைத்து கோட்டைத் தலைவனை மிரட்டி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

வீரர்களுடன் வருவதாகக் கூறிய கோட்டைத் தலைவன், சோழ மன்னன் இளஞ்சேட்சென்னி அவர் மாளிகையிலேயே இருங்கோவேள் என்பவனால் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், இளவரசன் திருமாவளவனைக் காணவில்லை என்றும் அதிர்ச்சிக் குண்டுகளை இளஞ்செழியன் மீது வீசிச் செல்கிறான். மயக்கத்திலிருந்து விழித்த அந்த யவனப் பெண்ணோ, தான் டைபீரியஸ் என்ற புகழ்பெற்ற கடற்படைத் தலைவனுடன் வந்ததாகவும் கடற் கொள்ளையருடன் ஏற்பட்ட போரினால் கப்பல் மூழ்கி தான் மரக்கட்டையைப் பிடித்து தப்பியதையும் கூறுகிறாள்.

இதற்கிடையில் கோட்டைத் தலைவன் பல வீரர்களுடன் இளஞ்செழியன் மாளிகையைச் சூழ்ந்து கொள்ள, போரிட்டுத் தப்பும் இளஞ்செழியன், யவன ராணியை பிரும்மானந்தர் என்னும் துறவியின் மடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே இருக்கும் பூவழகி அவன் ஒரு யவனப் பெண்ணுடன் வருவதைக் கண்டதும் மேலும் சினமடைகிறாள். அப்போது டைபீரியஸ் அங்கு வர, தன் ஆசிரமம் வீரர்களால் சூழப்பட்டிருப்பதை அறிந்த அடிகள், இளஞ்செழியன் விருப்பத்துக்கு மாறாக யவனராணியை அவனுடன் அனுப்புகிறார். சுரங்கப்பாதை வழியாக அனைவரும் தப்பிச் சென்று கடற்கரையை அடைகையில் டைபீரியஸால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது அவர்களுடன் வந்த இளஞ்செழியன் தப்பிச் சென்றுவிட்டதை அறிகிறான் டைபீரியஸ்.

தப்பிய இளஞ்செழியன் இரவில் கோட்டைச் சுவரேறி யவன ராணியைத் தன் வாணகரை என்னும் கடற்கரை தீவுக் கோட்டைக்கு கடத்திச் செல்கிறான். அவளை மீட்க வரும் டைபீரியஸிடம் பிரும்மானந்தர் உள்ளிட்டவர்களை விடுவிக்கும்படி யவனராணி சொல்ல, டைபீரியஸ் அவள் ஆணைப்படி அவர்களை விடுதலை செய்து அனுப்பி வைக்கிறான். பிரும்மானந்தர், திருமாவளவனின் மாமாவான இரும்பிடர்த் தலையர் என்பவருக்கு ஒரு ஓலை எழுதி இளஞ்செழியனை யவனராணியுடன் சேர நாட்டில் தன் சிஷ்யனின் மடத்துக்கு செல்லச் சொல்கிறார். அங்கு செல்லும் இளஞ்செழியன் அந்த ஓலையை இருங்கோவேளிடமே ஒப்படைக்கும்படி நேர்கிறது.  இருங்கோவேளை தந்திரமாகப் பேசி சமாளிக்கிறான் இளஞ்செழியன்.

ன்றிரவு. வீரர்களால் சூழப்பட்ட மடத்தில் சமணத் துறவியுடன் தங்கும் இளஞ்செழியன், மர்ம மாளிகை என்று அவர் காட்டும் ஒரு மாளிகை அப்போது எரிவதைக் காண்கிறான். இருவரும் அங்கு சென்று எரிந்த மாளிகையிலிருந்து தப்பும் திருமாவளவனைக் காப்பாற்றுகின்றனர். ஒரு பாழடைந்த மாளிகையில் பதுங்குவதற்கு அவர்கள் வர, அங்கு பூவழகியம் அவள் தோழிகளும் இருக்கின்றனர். இருங்கோவேளி்ன் வீரர்களை சமாளித்து அனுப்பிவிட்டு திருமாவளவனின் காயங்களுக்கு சிகிச்சை செய்கிறாள் பூவழகி. தீயில் எரிந்ததால் அவன் கால் இனி கருநிறமாகவே இருக்கும் என அவள் சொல்ல, தன் பெயர் இனி கரிகாலன் எனவும், அவள் தன் சகோதரி எனவும் கூறி அங்கிருந்து செல்கிறான் திருமாவளவன்.

இளஞ்செழியன் மீண்டும் சமண மடத்திற்கு வர, அங்கு இருங்கோவேள் ராணியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயல்வதைக் கண்டு சினமடைய, அங்கு வரும் பிரும்மானந்தர் நைச்சியமாகப் பேசி இருங்கோவேளை சமாளித்து அனுப்புகிறார். இரவில் இருங்கோவேளின் வீரர்கள் யவனராணியைக் கடத்த முற்பட, இருளில் வாட்போர் செய்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான் இளஞ்செழியன். முன்னர் தன்னால் காப்பாற்றப்பட்ட அல்லி என்பவளின் வீட்டில் அவளைத் தங்க வைக்கலாம் என்று வர,அங்கே டைபீரியஸைக் காண்கிறான். டைபீரியஸும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, புகார் செல்லும் வழியில் ஏற்படும் ஆபத்திலிருந்து தன் புத்தி சாதுயர்யத்தால் அவர்களைக் காப்பாற்றுகிறான் இளஞ்செழியன்.

புகாருக்கு படகில் செல்கையில் யவன ராணியிடம் காதல் மயக்கத்தில் இருக்கும் இளஞ்செழியனை வஞ்சகமாக மயக்கத் துளிகளால் மயங்கச் செய்து யவனர் கப்பலில் ஏற்றி அனுப்பி விடுகிறான் டைபீரியஸ். அவன் செயலைக் கடுமையாக எதிர்க்கும் ராணியைச் சிறை வைத்து புகாரைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதேநேரம் இருங்கோவேள் பூவழகியின் தந்தையை சிறை வைத்து விட்டு மற்ற வேளிர்கள் உதவியுடன் சோழநாட்டின் மறைமுக மன்னனாக இருப்பதுடன், பூவழகியை மணக்க விரும்பி அவளை மாளிகைச் சிறையில் வைக்கிறான்.

வனர் கப்பலில் செல்லும் இளஞ்செழியன், ஹிப்பலாஸின் உதவியால் கப்பலிலிருந்து தப்பி அடிமை வர்த்தகர்களிடம் சிக்கிக் கொள்கிறான். அடிமை வர்த்தகர்கள் அவர்களை விற்க கப்பலில் அழைத்துச் செல்ல, கொள்ளையர் கப்பல் சூழ்ந்து கொள்கிறது. வீரமாகப் போரிடும் இளஞ்செழியனையும் மற்றவர்களையும் கொள்ளையர் கைது செய்கின்றனர். கொள்ளையர் தலைவனுக்கு ஆசை ஊட்டி இலி ஆஸு என்ற கொடுங்கோல் மன்னனிடம் அவர்களை மாட்டி விடுகிறான் இளஞ்செழியன்.

இளஞ்செழியனைத் தன் படைத்தலைவனாகும்படி வற்புறுத்தும் அந்த மன்னனை தன் புத்தி சாதுர்யத்தால் ஏமாற்றி தப்புகிறான் இளஞ்செழியன். அந்நாட்டில் அவன் மேல் மோகம் கொண்ட அலீமா ன்றெ பெண் அவனுக்கு உதவ, கிரேக்க நாட்டு ரதப் போட்டியில் வென்று பல கப்பல்களுடன் தமிழகம் திரும்பும் இளஞ்‌செழியன் தன்னிடம் இருக்கும் யவனர் உதவியுடன் முகக்கவசம் அணிந்து யவனத் தூதனாக டைபீரியஸை சந்திக்கிறான். அவனுடன் உறவாடியபடியே புகாரில் அவனை முறியடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறான். அடிக்கடி வரும் யவனக் கப்பல்கலைக் கண்ட பிரும்மானந்தர் அல்லியைக் கொண்டு உளவறிய முற்பட, அவள் மூலம் கரிகாலனுக்குச் செய்தி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

யவன ராணியை ரகசியமாகச் சந்தித்து தமிழர்களின் இந்திர விழாவை யவனர்களின் வீனஸ் விழாவாக நடத்தும்படி இளஞ்செழியன் வேண்ட, அவள் தன்னை அவன் மணமுடிக்க வேண்டுமென்று பதிலுககு சத்தியம் கேட்கிறாள். அவ்வாறே சத்தியம் செய்கிறான் இளஞ்செழியன்.

தேசமயம் திருமாவளவனும் இரும்பிடர்த் தலையரும் சிறு படை திரட்டி பதினெட்டு வேளிர் மற்றும் சேர, பாண்டிய மன்னர் துணையால் பெரும்படையுடன் இருக்கும் இருங்கோவேளுடன் போர் புரியத் தயாராகின்றனர்.  இளஞ்செழியன் அவர்களைச் சந்தித்து கோவில் வெண்ணி என்ற இடத்தில் போர் புரியச் சொல்லி வெற்றி தரும் போர்த்திட்டம் ஒன்றையும் வகுத்துத் தருகிறான். அவன் திட்டப்படி போர் நடக்க, கரிகாலன் போரில் வென்று, இருங்கோவேளை கொன்று பழி தீர்த்து வெற்றிவாகை சூடுகிறான். சோழர் படை, பின்வாங்கி ஓடிய சேர, பாண்டியப் படைகளை வாகை என்ற ஊருக்கு துரத்திச் செல்கிறது.

புகாரில் வீனஸ் விழாவில் பொதுமக்களுடன் கலந்து ‌வரும் கரிகாலன் தன் வீரர்களுடன் சூழ்ந்து கொள்ள, அவனுடன் போரிட்டுத் தப்பும் டைபீரியஸ், யவன நாட்டுக்கே செல்லும் உத்தேசத்துடன் கடற்கரைக்கு ராணியை இழுத்துச் செல்கிறான். அங்கே இளஞ்செழியனால் மடக்கப்பட, இனி தப்ப இயலாது என்றறியும் டைபீரியஸ் யவனராணியின் மீது குறுவாளை வீசிவிட்டு, இளஞ்செழியனின் உபதலைவன் வீசிய வேலுக்கு இரையாகி மடிகிறான்.

இளஞ்செழியனின் மாளிகையில் சிகிச்சை பலனின்றி அவன் மடியில் யவனராணி இறக்கிறாள். கரிகாலன் சோழ சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு அல்லியை மணந்து கொள்ள, பூவழகியை மணந்து கொண்டு சோழர்களின் பிரதான படைத்தலைவனாகும் இளஞ்செழியனின் நினைவில் (வாசகர்களின் மனதிலும்) யவனராணி வாழ்கிறாள்.

Saturday, December 17, 2011

ஒரு காதல் கதை!

Posted by பால கணேஷ் Saturday, December 17, 2011
டிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து வேலை வேட்டையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது என் உயிர் நண்பனின் மச்சான் செளகார் பேட்டையில் ஒரு ஏஜென்ஸி வைத்திருந்தார். பூமர், சாக்லெட்கள் போன்றவற்றை மொத்தமாக வாங்கி சில்லறைக் கடைகளுக்கு விற்கும் ஏஜென்ஸி அது. அங்கே அடிக்கடி அவனைப் பார்க்கப் போய் விடுவேன். (வேற வேலை எதுவும் இல்லையே...) நண்பனும், மச்சானும் மிகப் பிரியமாக இருப்பார்கள். அவர்கள் எங்கேயாவது வெளியில் போவதாயிருந்தால் என் பொறுப்பில் கடையை விட்டுவிட்டுப் போவார்கள். நான் முன்னால் கேஷ்பாக்ஸ்க்கு அருகில் ஓனரின் சேரில் உட்கார்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

அது செளகார்பேட்டை என்பதால் சேட்டுக் குடும்பங்கள் அதிகம் குடியிருந்தார்கள். ஏஜென்ஸிக்கு மேலே இரண்டு மாடிகள் உண்டு. இரண்டிலும் சேட் ஃபேமிலிதான் குடியிருந்தது. அதில் ஒரு சின்னப் பெண் மிக அழகாக இருப்பாள். அவள் போகும் போதும் வரும்போதும் பயங்கரமாக ‘ஸைட்’ அடிப்பேன். அவளும் ஒன்றிரண்டு முறை என்னைப் பார்த்து புன்னகை செய்ததுண்டு. அடடா... ஒரு பெண் நம்மைக் கவனிக்கிறாள் என்று தெரிந்தால் வயசுப் பசங்களுக்கு ஒரு வேகம் வரும் பாருங்கள்... எனக்கும் வந்தது. அவள் கவனத்தைக் கவர்வதற்கென்றே ஏதாவது செய்து என்னைப் பார்க்க வைப்பேன்.

இப்படியாக, கிட்டத்தட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லும் பார்டர் லெவலுக்கு வந்து விட்டிருந்த சமயம். ஒருநாள் என் நண்பனும், மச்சானும் வெளியே போய்விட்டபடியால் வழக்கம்போல நான் கடையில் இருந்தேன். மாடியிலிருந்து நம்ம சிட்டு இறங்கியது. இறங்கியவள் ஒரு ஆச்சரியமான காரியம் செய்தாள். கடை வாசலுக்கு நடுவில் வந்து நின்று கொண்டு, இரு கைகளையும் என்னைப் பார்த்து நீட்டி, புன்னகைத்தாள். பட்டப் பகலில், நிறையப் பேர் நடமாடும் சமயத்தில் கட்டிப் பிடிக்கச் சொல்கிறாளே என்று என்னுள் தயக்கம். பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. என்னைப் பார்த்துத்தான் கை நீட்டுகிறாள் என்பது தெரிந்தது.

இப்போது கை நீட்டியதோடு, ‘வா’ என்பது போல கையை அசைத்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு தான்... என் ஆண்மைச் சுரப்பிகள் விழித்துக் கொண்டன. ஒரு பெண் பிள்ளையே இப்படி பயப்படாமல் கூப்பிடும் போது ஆண் சிங்கம் நமக்கென்ன என்று எண்ணியவனாய் அவளைக் கட்டியணைக்க, ஆவலுடன் சேரை விட்டு எழுந்தேன். அப்போது...
-காதல் கதை தொடரும்!

======================================================

மீபத்தில் டிவிடியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை போட்டுப் பார்த்தேன். ஒரு காட்சியில் துடிப்பான எம்.ஜி.ஆர். கையில் பணம் இல்லாமல் ஹோட்டலுக்கு சாப்பிட வந்து விடுவார். ‘‘என்ன ஸார் வேணும்?’’’ என்று கேட்கும் சர்வரிடம், ‘‘என்ன இருக்கு?’’ என்று வாத்தியார் கேட்க, ‘‘இட்லி, பொங்கல், பூரி, மசால் தோசை’’ என்று ஒரு நீளமான லிஸ்டைச் சொல்வார் சர்வர். ‘‘நாலு இட்லி, நாலு பூரி, நாலு பொங்கல், நாலு ஊத்தப்பம், நாலு மசால்தோசை’’ என்று எல்லா அயிட்டத்திலும் நான்கை வாங்கி வெளுத்துக் கட்டுவார் பொன்மனச் செம்மல்.

சாப்பிட்டு முடித்த அவர், நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். இப்போது உள்ளே நுழைந்து அதே டேபிளில் அமர்வார். (அதெப்படி அவ ருக்கும் அதே டேபிள்ல உக்காரத்‌ தோணும்னு லாஜிக் கேள்வில்லாம் கேக்கப்படாது, சொல்லிப் புட்டேன்...) சர்வர் வந்து ‘‘வேற என்ன வேணும்?’’ என்க, ‘‘ரெண்டு இட்லி, அப்புறம் காபி’’ என்பார். சர்வர், ‘‘மறுபடியும் முதல்லருந்தா?’’ என்று சலித்துக் கொண்டே வந்து கொடுக்க, சாப்பிட்டு விட்டு ‘எவ்வளவு தரணும்?’ என்பார். சர்வர் கணக்குப் போட்டு பில் கொண்டு வந்து, ‘‘ஆறு ரூபாய், இருபத்தஞ்சு காசு’’ என்பார். அதற்கே புரட்சித்தலைவர் அதிர்ச்சியாகி, ‘‘அவ்வளவா?’’ என்பார்.

இநதக் காட்சியைத் திரையில் பார்த்ததும், அன்றைக்கிருந்த விலைவாசியையும், இன்றைக்கிருக்கும் விலைவாசியையும் நினைத்து என் காதுகளிலிருந்து புகை வந்தது.

======================================================

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தைப் பற்றி பலரும் எழுதி (குமுறி) விட்டார்கள். எனக்கு இதில் ஒரு விஷயம்தான் புரியவேயில்லை. தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள் என்றால் ஏழு கட்சிகள் ‌தேறும். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி ‘அனைத்து கட்சி தலைவர்களும் இருப்போம் தொண்டர்கள் அணி திரண்டு வாருங்கள்’ என்று போராட்ட அறிவிப்பு விடுத்தால் தமிழகமே திரண்டு விடாதா? கட்சியின் மாநில மாநாடுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்க வேண்டுமா? இவர்களுக்குள் இந்த மாதிரி ஒரு விஷயத்தில் கூட ஒன்றுபட இயலாதா?

இப்போது ஒவ்வொரு கட்சிக்காரரும் நாளைக்கு முல்லைப் பெரியாறு விஷயத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என மக்கள் கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்பது போல மிருகசங்கிலி போராட்டம், உண்ணும் விரதம் என்று தங்கள் கட்சி சார்பில் மட்டுமே அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமும் வேறு வழியின்றி இவர்களில் ஒருவருக்குத்தான் ஓட்டைப் போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு என்னதான் மாற்று?

======================================================

சில ‘கொலவெறி’க் கேள்விகள் :

‘‘ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்’’ என்று ஒரு பாடலில் (அபூர்வராகங்கள் படத்தில் ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’) கண்ணதாசன் எழுதியிருப்பார். அதுபோல ‘ஏன்’ என்கிற சில கேள்விகள் விடை கிடைக்காமல் என்னைச் சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது சொல்கிறேன். உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

* நான் சிறுவனாக இருந்த நாளில் பெண்கள் எல்லோரும் இந்தப் படத்தில் இருப்பதைப் போல நெற்றியின் மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வார்கள். அதற்கு ‘நெற்றிப் பொட்டு’ என்றுதான் பெயர். நெற்றியின் மையம் மூடப்படுவதால் மந்திரவாதிகளாலோ மற்ற எவராலுமோ  ஹிப்னடைஸ் செய்ய முடியாது என்பதால் முன்னோர்கள் இப்படி வைககச் சொன்னார்கள் என்று என் அம்மா சொல்வார். ஆனால் இன்றைய பெண்கள் நெற்றிப் பொட்டை ‘மூக்குப் பொட்டு’ என்று அழைக்கத்தக்க விதமாக மூக்கின் துவக்கத்தில் வைத்துக் கொளகிறார்களே... அது ஏன்?

* ட்ராபிக் சிக்னலில் பச்சை தென்பட்டால் நிற்காமல் போகலாம், ஆரஞ்சு தென்பட்டால் வேகத்தைக் குறைக்க வேண்டும், சிவப்பு எரிந்தால் நின்றுவிட வேண்டும் -இதுதான் டிராபிக் சிக்னல்கள் பற்றி நான் படித்த பாடம். ஆனால் சென்னையில் ஆரஞ்சு விளக்கு எரிவதைக் கண்டால் வாகனத்தை மெதுவாக்கி ஓட்டுவதற்குப் பதில், வெறி பிடித்த மாதிரி இருமடங்கு வேகத்தில் அப்போதுதான் தலைதெறிக்க ஓட்டுகிறார்களே... அது ஏன்?

* பாங்க்கில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப் போனால் ஐ.டி. ப்ரூப், ரெஸிடென்ஸ் ப்ரூப் அது இதுவென்று ஆயிரம் விஷயங்களைக் கேட்கிறார்கள். அவர்களிடம் பணத்தை கடன் வாங்குவதாக இருந்தால் இதையெல்லாம் கேட்பதில் அர்த்தம் உண்டு. நியாயமாக நாம் நம் பணத்தை அவர்களை நம்பிக் கொடுப்பதற்கு நாமல்லவா அவர்களிடம் கம்பெனி ஸ்டேட்மெண்ட், ஃபைனான்ஷியல் ஸ்டேட்மெண்ட் என்றெல்லாம் கேட்க வேண்டும். மாறாக அவர்கள் இதையெல்லாம் கேட்பது ஏன்?

* ரேவதி நட்சத்திரத்திலும், ரோகிணி நட்சத்திரத்திலும் பெண் குழந்தை பிறந்தால் ரேவதி, ரோகிணி என்று பெயர் வைக்கிறார்களே... ஏன் மிருகசீரிஷம் என்றோ, விருச்சிகம் என்றோ வைப்பதில்லை?

======================================================

-காதல் கதையின் தொடர்ச்சி...

ன் சிட்டுக்குருவி கையை நீட்டி, ஆட்டிக் காட்டியதும், நான் சேரை விட்டு ஆவலுடன் எழுந்து அவளை நோக்கி நடக்க ஆரம்பித்த நேரம்... ஒரு கூடை கயிறால் கட்டப்பட்டு எனக்கு முன்பாக மேலிருந்து கீழே இறங்கியது. அவள் அதை நெருங்கி, அதிலிருந்த பால் கார்டையும், பணத்தையும் எடுத்துக் கொண்டு, மேலே பார்த்து கை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து ஸ்மைலி விட்டுச் சென்றாள்.

வாசலில் வந்து பார்த்தேன். மாடி வீட்டில் சேட்டு கயிற்றில் கட்டப்பட்ட கூடையை இழுத்துக் கொண்டிருந்தார். அடதேவுடா! இதை கீழே இறக்கச் சொல்லிதான் அப்படி கை நீட்டி சிக்னல் காட்டினாளா? நல்லவேளை... இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக நான் எழுந்து வந்து கட்டிப் பிடித்திருந்தால் டின் கட்டியிருப்பார்கள். தப்பித்தோம்டா சாமி என்று ஆறுதலுடன் மீண்டும் சேரில் உட்கார்ந்தேன். பல்புகள் ஓய்வதில்லை!

Thursday, December 15, 2011

டூரிங் டாக்கிஸ்

Posted by பால கணேஷ் Thursday, December 15, 2011
நான் இந்த பூமிக்கு விஜயம் செய்து (ஆமா, பெரிய வி.ஐ.பி. விஜயம் செய்யறாராம்.... -மைண்ட் வாய்ஸ்) எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்பதை எண்ணிப் பார்த்தால் என்னை முதி‌யவனென்று சொல்ல முடியாது (உங்களைக் கொன்டேபுடுவேன்). அதேநேரத்தில் என்னை இளைஞன் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது (நீங்க என்னைக் கொன்டேபுடுவீங்க). இப்படி நடுத்தர வயதினனாக இருப்பதினால் நிறைய அனுகூலங்கள் எனக்குக் கிடைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

எனக்கு முந்தைய தலைமுறையான என் அப்பாவிற்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். மாட்ச் நடைபெறும் நாட்களில் பாக்கெட் டிரான்சிஸ்டரை காதருகில் வைத்துக் கொண்டு கமெண்டரி கேட்டுக் கொண்டிருப்பார். ‘ஆஸ்திரேலியாவில் அவர்கள் விளையாடுவதை நாம் நம் வீட்டு ஹாலிலிருந்து பார்‌க்கலாம் அப்பா’ என்று அன்று நான் சொல்லியிருந்தால் எள்ளி நகையாடியிருப்பார்.

இன்று அது சாத்தியமாகியிருக்கிறது. அதேபோலத்தான் இன்று நாம் பேசும் செல்போனும். இன்றைய தலைமுறையினருடன் சேர்ந்து கம்ப்யூட்டர், செல்போன், டிவிடி ப்ளேயர் இன்னபிற நவீன வசதிகளை அனுபவிக்கிறேன். அதேசமயம் இன்றைய இளைய தலைமுறைக்குக் கிட்டாத சில அனுபவங்கள் சென்ற தலைமுறையுடன் சின்னப் பையனாக இருந்ததால் கிட்டியிருக்கிறது. வாங்க, ப்ளாஷ்பேக்கலாம்...

======================================================

முதலில் நினைவுக்கு வருவது சிறு வயதில் சினிமா பார்த்த அனுபவங்கள். இன்றைக்கு மல்ட்டி ப்ளெக்ஸ்களிலும், நவீன தியேட்டர்களிலும் ஏ.சி.யில் படம் பார்‌க்க முடிகிறது. காலண்டரில் பார்க்கும் மகாவிஷ்ணு போல, மகாபலிபுரம் ஸ்தலசயனப் பெருமாள் போல படுத்த வாக்கில் படம் பார்த்திருக்கிறீர்களா? ; நான் பார்த்திருக்கிறேன்.

அந்நாளில் டூரிங் டாக்கீஸ் என்கிற ஒன்று இருந்தது. வெட்டவெளியில் கூரை போட்டு, கம்புகள் நட்டு எல்லை அமைத்திருப்பார்கள். சைடில் தடுப்பு எதுவும் கிடையாது. எனவே மாலை ஷோவும், இரவு ஷோவும் மட்டுமே நடைபெறும்.

இரண்டே வகுப்புகள்தான். முதல் வகுப்புக்கு மடக்கு சேர் போடுவார்கள். மற்றவர்கள் மண் தரையில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும். சிலர் மண்ணைக் குவித்து மேடாக்கி, ராவண சபையில் வாலில் அமர்ந்த அனுமன் போல உயரமாக அமர்வார்கள். சிலர் கிராமத்துப் பாட்டிகள் மாதிரி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் வயதில் நான் முன்பே சொன்னதுபோல மகாவிஷ்ணு போஸில் படுத்தபடி மக்கள் திலகத்தின் ‘நாடோடி மன்னனை’ பார்த்தேன். ஒரே ஒரு புரொஜக்டரில்தான் படம் ஓட்ட வேண்டும் என்கிற காரணத்தால் இரண்டு முறை ரீல் மாற்றுவார்கள். ஆகவே இடைவேளைக்கு முன் பத்து நிமிடங்கள், இடைவேளைக்குப் பின் பத்து நிமிடங்கள் ஆக, மூன்று இடைவேளைகள் எல்லாப் படத்துக்கும் உண்டு. இஷ்டம்போல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி இயற்கைக் காற்றில் படம் பார்‌த்த அந்த சுகம், இப்போது ஏ.சி. ‌தியேட்டர்களில் எனக்குக் கிடைப்பதில்லை.

======================================================

றாம் வகுப்பு படிக்கும் போது விழுப்புரத்திற்கு அருகில் உள்ள விக்கிரவாண்டி என்ற ஊரில் எங்கள் குடும்பம் இருந்தது. அங்கே காசியானந்தா என்ற தியேட்டர் (இப்போது இருக்கிறதோ என்னவோ) உண்டு. அங்கே ஞாயிற்றுக்கிழமை மாட்னி ஷோவுக்குத் தவறாமல் சென்று விடுவேன். ஏனென்றால் ‌ஒரே டிக்கெட்டில் (டிக்கெட் விலை அதே ஆறு ரூபாய்தான்) இரண்டு படம் காட்டுவார்கள். ஒன்றரை மணிக்கு ஆரம்பித்து இடைவேளையேயின்றி ஒரு படம். முடிந்ததும் பத்து நிமிடம் இடைவேளை விட்டு அடுத்த படம்.

அதிலும் வெரைட்டி இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வார்கள். சிவாஜி படத்துடன் ஜெய்சங்கர் படம், எம்.ஜி.ஆர். படத்துடன் கமல் படம் என்கிற மாதிரி ‌இருவித ரசனைகளில் படங்கள் அமைந்திருக்கும். இப்படி இரண்டு படம் பார்த்துவிட்டு மாலை ஆறரை மணிக்கு வெளியே வரும்போது மிகத் திருப்தியாக இருக்கும். இப்படி இரண்டிரண்டாக நான் பார்த்த திரைப்படங்களுக்குக் கணக்கே இல்லை.


======================================================

ள்ளியில் நண்பர்கள் எல்லோருமாக தமிழ் சினிமாப் பாட்டுக்களில் எங்களுக்குப் பிடித்த பாட்டுக்களை..ஆங்கிலத்தில்(!) மொழிபெயர்த்துப் பாடுவோம். இப்படிப் பாடி மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று ஒருவன் போதித்ததன் விளைவாகச் செய்தது. அது. அப்போது நாங்கள் பாடிய ஒரு ஆங்கிலப் பாடலை, அப்போதைய வார்த்தைகளிலேயே என் நினைவிலிருந்து கொடுத்திருக்கிறேன். என்ன பாடல் என்பது தெரிகிறதா பாருங்கள்...

If i order, that will happen,
here poor will never feel sorrow then.
Upto their lifetime, there is no trouble
they will never fall in tear's sea.

======================================================

சினிமா அனுபவங்களைச் சொல்லும்போது தியேட்டரில் நான் பல்பு வாங்கிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. (மத்தவங்க பல்பு வாங்கினதைப் படிக்கிறதுன்னாலே தனி குஷிதானே... படியுங்க).

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நாங்கள் காரைக்குடியில் இருந்தோம். சிறு வயதிலேயே அப்பாவை இழந்து அண்ணனின் ஆதரவில் படித்தவன் நான். அவருக்கு அடிக்கடி பணி மாறுதல் ஆகிற வேலை என்பதால் ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊருக்கு குடும்பத்துடன் இடம் பெயர வேண்டிய சூழல் இருந்தது. அதனால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். சில நண்பர்கள் காலப்போக்கில் தொடர்பு விட்டும் போனார்கள்.


என்ன சொல்ல வந்தேன்? சினிமாவுக்குப் போனது! என் அண்ணன், நான், அம்மா, சித்தி நால்வருமாக காரைக்குடி அருணாசலா தியேட்டரில் (இப்போது வேறு ஏதோ பெயர் என்று சொன்னார்கள்) வசந்தமாளிகை படம் பார்க்கப் போயிருருந்தோம். சிவாஜி சாரின் நடிப்பை நான் மிகவும் ரசித்த படங்களுள் அதுவும் ஒன்று. இடைவேளை விட்டார்கள்.

அண்ணன் என்னிடம், ‘‘டேய், கான்டீன்ல போய் நாலு கோல்ட் ஸ்பாட் வாங்கிட்டு வர்றியா?’’ என்று கேட்டார். குஷி்யாக தலையசைத்தேன். ‘‘உடைக்காம வாங்கிட்டு வருவியா, இல்ல, நானும் வரணுமாடா?’’ என்று கேட்டார். சற்றுத் தயங்கிவிட்டு, ‘‘நீயும் வாண்ணா... கேன்டீன்ல உடைக்காம தரமாட்டான்...’’ என்றேன்.

அம்மாவும், சித்தியும் ஏன் அப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அண்ணா தலையில் அடித்துக் கொள்ள, சிரிப்பை சற்று அடக்கிக் கொண்டு சித்தி சொன்னது: ‘‘டேய், அவன் (கீழ போட்டு) உடைக்‌காம கொண்டு வருவியான்னு கேக்கறான். நீ (ஓப்பனர் வைத்து) உடைக்காம தரமாட்டாங்கங்கன்னு சொல்ற... லூசு’’ என்று என் தலையில் தட்டினார். அடக்கடவுளே... ஒரு அப்பாவிப் பையனக் கூட்டிட்டுப் போயி என்னமா கலாய்க்கிறாங்கப்பா...

Monday, December 12, 2011

சரிதா பேயான போது...

Posted by பால கணேஷ் Monday, December 12, 2011
‘‘என்னாச்சு உங்களுக்கு... நானும் சாயந்தரத்துலருந்து பாக்கறேன். நினைச்சு நினைச்சு சிரிச்சுட்டிருக்கீங்க?’’ என்று கேட்டாள் சரிதா.

‘‘அதுவா? இன்னிக்கு மத்தியானம் ஆஃபீஸ்ல நான் பிஸியா வேலை செஞ்சிட்டிருந்தப்போ...’’

‘‘பொய்!  ஆஃபீஸ்ல நீஙக வேலையே செய்றதில்லன்னு உங்க ஜி.எம். ‌சொல்லுவாரு. இதுல பிஸியா...?’’

‘‘என்னை வாரிட்டதா நினைப்பாக்கும்? கேளு... ரிசப்ஷனிஸ்ட் சரண்யாவுக்கு எம்.டி. ஃபோன் பண்ணி, ‘‘நைட் பாண்டியன்ல மதுரை போறேன். பெட்ரோல் ஏற்பாடு பண்ணும்மா...’’ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிருக்கார். இவ எதுக்குக் கேக்கறார்னு புரியாம திருதிருன்னு முழிச்சுட்டு, எம்.டி. கோபக்காரராச்சேன்னு ஆபீஸ் பையனை அனுப்பி 10 லிட்டர் கேன் நிறைய பெட்ரோல் வாங்கிட்டு வந்து ஸீட் கிட்ட வச்சிருந்திருக்கா. கொஞ்ச நேரத்துல எம்.டி.யோட பையன், அதான் எங்க ஜி.எம்., லன்ச் முடிச்சுட்டு ஆபீஸ்க்கு வந்தவர், ‘என்னம்மா இது கேன்ல பெட்ரோல்? உன் ஹஸ்பெண்டுக்காக வாங்கி வெச்சியா?’ன்னு கேட்க, அவ விஷயத்தைச் சொல்லியிருக்கா. அவ்வளவுதான்... ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்துல வடிவேலு விழுந்ததைப் பாத்துட்டு விஜய் சிரிப்பாரே... அந்த மாதிரி கடகடன்னு சிரிச்சுக்கிட்டே அவரோட ரூமுக்குள்ள போயிட்டார்...’’

‘‘இதுல சிரிக்கறதுக்கு என்னங்க இருக்கு?’’

‘‘அதான் எங்களுக்கும் புரியல. அவர் ரூமுக்குள்ளருந்து விடாம சிரிப்பு சத்தம் கேக்கவும், சரண்யா என்னைத் துணைக்கு கூப்பிட்டா. ஜி.எம். ரூமுக்குள்ள போயி, ‘‘ஏன் சார் இப்படிச் சிரிக்கறீங்க? என்ன விஷயம்’’ன்னு கேட்டேன். அவரால சிரிப்பை நிறுத்த முடியாம மதன்பாப் மாதிரி சிரிச்சுக்கிட்டே இப்படிச் சொன்னாரு: ‘எங்கப்பனுக்கு இங்கிலீஷ் சரியாவே பேச வராது. ட்ரெயினுக்குப் போகணும், Bed Roll ஏற்பாடு பண்ணுன்னு இவகிட்ட சொல்லிருக்கார். இந்த பிரகஸ்பதி Petrolன்னு புரிஞ்சுக்கிட்டு வாங்கி வெச்சிருக்கு. பெட்ரோல வாங்கிட்டுப் போயி எங்கப்பன் என்ன ரயிலையா கொளுத்தப் போறாரு?’னுட்டு அவர் சிரிக்கவும், அடக்க முடியாம நானும் சிரிச்சுட்டேன். அதான்...’’

சரிதாவும் வாய்விட்டுச் சிரித்தாள். பின் சொன்னாள். ‘‘உங்க ஆஃபீஸ்ல நீங்க மட்டும்தான் கேனைன்னு நினைச்சுட்டிருந்தேன். சரண்யாவும் அப்படித் தானா?’’

‘‘அடியேய்...’’ என்று டி.ஆர். பாணியில் குரல் கொடுத்துக் கொண்டு நான் சேரை விட்டு எழ, அவள் ‘ஸ்டாப் ப்ளாக்’கில் காணாமல் போனாள்.

றுநாள் காலை. ‘இரட்டைப் புலவர்கள்’ எழுதிய பாட்டு்க்கள் மொத்தம் எத்தனை என்று கூகுளாண்டவரிடம கேட்டுக் கொண்டிருந்த நேரம்... சரிதா பின்னாலிருந்து குரல் கொடுத்தாள்.

‘‘என்னங்க... உள்ரூமுக்குப் போங்களேன்...’’

‘‘கொஞ்சம் இரும்மா... ஸர்ச் முடியட்டும்... இப்ப எதுக்கு அங்க போகணும்?’’

‘‘நான் பெருக்கணுங்க...’’

‘‘வேணாம் சரி! ஏற்கனவே பெருத்தது போதும்! இதுக்கு மேல பெருத்தா வெடிச்சுடுவே!’’

‘‘ஐயாங்...’’ என்ற அவள் காலால் தரையை உதைத்திருக்க வேண்டும். மானிட்டர் நடுங்கியது. திரும்பினேன். கையில் விளக்குமாறுடன் நின்று கொண்டிருந்தாள்.

‘‘ரூமைப் பெருக்கணும்னு தெளிவா சொல்ல வேண்டாமா நீ?’’ என்றபடி அறை வாசலில் நின்று கொண்டேன். ‘‘என்னங்க... நேத்து நான் சொன்னுது ஞாபகம் இருககா? இன்னிக்கு என் ஃப்ரண்டு ரம்யாவோட வளைகாப்புக்குப் போயிட்டு, அப்படியே எங்கம்மா வீட்டுக்குப் போகப்போறேன். ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவேன். நான் இல்லன்னு எதுவும் சேட்டை பண்ணாம பாத்து இருந்துக்குங்க...’’

‘சேச்சே... நான் இன்னிக்கு ஈவ்னிங் புதுசா ஒரு விஷயம் பண்ணப் போறேன்...’’

‘‘என்ன... சிக்கன் வாங்கிட்டு வந்து சாப்பிடப் போறீங்களா? இல்ல பீரா?’’

‘‘அதில்லம்மா... சமூகம், க்ரைம், கொஞ்சம் சரித்திரம்னு பல சப்ஜெக்ட்ல சிறுகதை எழுதிட்டேன். படிக்கிறவங்க அலர்ற மாதிரி ஒரு பேய்க்கதை எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை...’’

‘‘சுயசரிதம் எழுதறதுக்கு உங்களுக்கு அவ்வளவு ஆசையா?’’

‘‘ஆமா...’’ என்று வேகமாக உளறிவிட்டு ‘திக்’கென்று விழித்தேன். ‘‘டியர்... லைஃப்ல முதல் தடவையா ஒரு பஞ்ச் அடிச்சிட்ட...’’ என்று நான் சிரித்தேன். வாயை அஷ்டகோணலாகச் செய்து எனக்கு அழகு காட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் சரிதா.

மாலையில் அலுவலகம் முடிந்து வந்ததும் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ‘நடுநிசி பேய்கள்’ என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கினேன். அரை மணியில் பாதிக் கதை எழுதிவிட்டேன். சற்றே நீளமாக இருந்ததால் இரண்டு அத்தியாயமாக எழுதலாம் என்று நினைத்தேன். அத்தியாயத்தை முடிககும்போது ஏதாவது திகீர் பஞ்ச் வைத்தல்லவா தொடரும் போட வேண்டும்? என்ன செய்யலாம் என்று யோசித்து, டைப்பினேன். ‘‘அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் கல்லறை அதிர்ந்தது. எள்ளலான மெல்லிய சிரிப்பொலி ஒன்று எங்கிருந்தோ காதில் விழ, அவன் உடல் நடுங்கியது. ஜ்ல் ஜல் என்று கொலுசின் ஒலி காதுகளில் கேட்டது...’’

டைப்புவதை நிறுத்தினேன். ‘ஜல் ஜல்’ சத்தம் நிஜமாகவே கேட்டது போல இல்லை? திரும்பிப் பார்த்து, ‘பிரமை’ என்று தலையை உதறிக் கொண்டு தொடர்ந்தேன்.

‘‘கல்லறை அதிர்ந்து அதன் மேல்தளம் படீரென வெடித்துத் திறந்தது..’’ என்று டைப்பிய நொடியில் ‘‘என்னங்க...’’ என்று அருகில் குரல் கேட்க, திடுக்கிட்டு எழுந்து, அருகில் கையில் காஃபி டம்ளருடன் நின்றிருந்த சரிதாவின்மேல் இடித்துக் கொண்டேன்.

டம்ளர் உருண்டு காஃபி சிதறியது. இவள் எங்கே வந்தாள்? வெள்ளை பட்டுப்புடவையில் ‌தலைநிறைய பூ‌‌ வைத்துக் கொண்டு, தலைமுடியைப் பின்னாமல் விட்டுவிட்டு எதிரில் நின்று சிரித்தால் எனக்கு எப்படியிருக்கும்?

‘‘அடிப்பாவி! அசல் பேய் மாதிரியே வந்து நிககிறியே‌டி... அம்மா வீட்டுக்குப் போகலையா?’’ என்று நடுஙகிய குரலில் கேட்டேன்.

‘‘இல்லீங்க... வளைகாப்பு ஃபங்ஷன்ல எனக்கும் வளை போட்டுவிட்டு, பூ வெச்சு விட்டங்க. நான் என்னோட சாவி போட்டுக் கதவை திறந்துட்டு வந்தா... கம்ப்யூட்டர்ல பிஸியா இருந்திங்க. சரின்னு காஃபி போட்டுட்டு வந்தேன்...’’ என்றாள்.

‘‘நல்லா வந்தே போ... பேய்‌க்கதை எழுதப் போறேன்னு காலைலயே சொன்னேன்ல... ஜல்ஜல்னு கொலுசு சத்தத்தோட, மோகினி மாதிரி இப்படியா வர்றது? நீ பண்ணின கூத்துல ஒரு ட்ரெய்ன் என் மேல ஓடின மாதிரி ஹார்ட்பீட் இன்னும் அடிச்சுட்டிருககு பாரு... வேற காஃபி கொண்டு வா...’’ என்று அவளை அனுப்பிவிட்டு அடுத்த வரிக்காக சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். கேட்ச் இட்!

‘‘கல்லறை வெடித்துத் திறக்க, அதிலிருந்து ஒரு பெண்ணின் வளையல் அணிந்த கை வெளிப்பட்டு அவன் முகத்துக்கு முன்னே நீண்டது...’’ டைப்பிய அதே செகண்ட் வளையல் அணிந்த கரம் ஒன்று மானிட்டரின் முன் நீண்டதும் மீண்டும் திகிலில் அலறிவிட்டேன். ‘திடுக்’ என்று உடம்பு தூககிவாரிப் போட்டது.

‘‘என்னங்க இது வம்பாப் போ்ச்சு... கொலுசு சத்தத்துக்கு பயப்படறீங்களேன்னு அதைக் கழட்டி வெச்சுட்டு வந்து காபியக் கொண்டுவந்தா இதுக்கும் அலர்றீங்களே...’’ என்றாள் சரிதா.

‘‌ஞே’ என்று விழித்தேன். ‘‘நல்லாக் கொண்டு வந்தே போ...  கல்லறையிலிருந்து ஒரு கை வந்ததுன்னு எழுதிட்டிருக்கும் போது சத்தமில்லாம உன் கைய இப்படியா எதிர்ல நீட்டுவ?’’ காஃபியைக் குடித்துவிட்டு, கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டேன்.

றுநாள் காலை எழுந்தது முதலே ஏனோ சோம்பலாக இருந்தது. தோளின் மேல் யாரோ உட்கார்ந்திருந்ததுபோல ஒரு கனம். வலி இருந்து கொண்டே இருக்க, மரியாதையாக (திருதிரு) விழித்துக் கொண்டிருந்தேன். சரிதா என்னைப் பார்த்து பயந்துபோனாள். அவள் அம்மாவுக்கு போன் செய்து பேசினாள்.

‘‘என்னது...? மாப்பிள்ளை உன்னைப் பாத்து பயந்துட்டாரா? கல்யாணம் ஆன புதுசுலன்னாலும் அர்த்தமிருக்கு! இப்ப எப்படிடி?’’ கெக்கேபிக்கே என்று சிரித்தாள் அவள் அம்மா ஸ்பீக்கர் போனில் .

‘‘நீ வேற சும்மா இரும்மா. இவர் ஆளே சரியில்ல. என்ன பண்றதுன்னே புரியல...’’ என்று சரிதா கிட்டத்தட்ட அழும் குரலில் பேச, ‘‘அழாத சரி. நம்ம வீட்டுக்கு பக்கத்து தெருல இருக்கற அய்யனார் கோயில் பூசாரியை மத்தியானம் அனுப்பி வெக்கறேன். அவர் மந்திரிச்சா சரியாயிடும்’’ என்றாள் என் மாமியார்.

ய்யனார் கோயில் பூசாரி கருகருவென்ற நிறமும், எண்ணெய் மினுமினுப்புடன் தலையும், ம.பொ.சி. மீசையுமாக அவரே பார்ப்பதற்கு அய்யனார் போலத்தான் இருந்தார். ஒரு பலகையை வைத்து அதன் முன்னால் குத்து விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அருகில் கொஞ்சம் வேப்பிலைக் கொத்துக்களை வைத்து விட்டு என்னைப் பலகையில் உட்காரச் சொன்னார். சின்னவயதில் சினிமாவில் பார்த்த பி.எஸ். வீரப்பாவைப் போல சிரிப்பாரோ என்று கூடத் தோன்ற, பயத்துடன் உட்கார்ந்தேன்.

நல்லவேளை... அப்படியெல்லாம் சிரிக்காமல் மனோபாலா பேசுவது போல மென்மையாகப் பேசினார். ‘‘என்ன தம்பி... பயந்துட்டிங்களா? பேய் பிசாசுல்லாம் ஒண்ணுமே கிடையாது தம்பி. மனசுல பயத்தை வெச்சுக்கிட்டிங்கன்னா அதான் பேய், பிசாசு, பாம்பு எல்லாம்.’’ என்று ‌பேசிக கொண்டேயிருந்தவர், எப்போது வேப்பிலைக் ‌கொத்தை கையில் எடுத்தார்? எப்போது என் முகத்தில் அடித்தார்?

அடுத்த கணம்... உடம்பு ‘திடுக்’ என்று தூக்கிவாரிப் போட்டது. இயல்புக்கு வந்தேன். தோளில் நான் உணர்ந்த கனம் இப்போது இல்லை. உடம்பு லேசானது போல மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். (அதிர்ச்சியை இன்னொரு அதிர்ச்சியால் குணமாக்கி விட்டார் போலும்)

‘‘அவ்வளவு தாம்மா... இனி தம்பிக்கு ஒண்ணுமில்ல...’’ என்றபடி சரிதா தந்த ‘தட்சணை’யை வாஙகிக் கொண்டு போனார் அவர். ‘‘இனி ஒண்ணும் பயமில்ல... நீங்க தைரியமா கதையைத் தொடரலாம்’’ என்றாள் சரிதா. மூக்குக்கு மேலே கையை உயர்த்தி அவளைக் கும்பிட்டேன். ‘‘ஆளைவிடு தாயி... அந்த ஆசையை மூட்டைகட்டி பரண்ல தூக்கிப் போட்டுட்டேன். லைஃப்ல இனிமே பேய்க்கதையே எழுத மாட்டேன்’’ என்றேன். ‘‘அதுசரி... அம்மா வீட்டுல ரெண்டு நாள் தங்கப் போறேன்னுட்டுப் போனியே... ஏன் உடனே வந்து்ட்டே?’’ என்று கேட்டேன்.

‘‘அதுவா..? அம்மா வீட்டுக்குப் போனா பாவம் நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்களேன்னு திடீர்னு மனசுல தோணிச்சு. அடுத்த மாசம் பொங்கல் லீவுல உங்களோட போய்க்கலாம்னு வந்துட்டேன்...’’ என்றாள்.

என் மனம் நெகிழ்ந்து போனாலும் அதை வெளிக்காட்டாமல் அவளைச் சீண்டும் ஆசையில், ‘‘சும்மா டூப் விடாத. நீ இல்லாதப்ப வீட்ல ஏதாவது சேட்டை பண்றேனான்னு பாக்கத்தானே ஓடிவந்தே? நம்ம தெரு ஃபிகர்ல ஏதாச்சும் எனக்கு ரூட் போட்டுருமோன்னு பயம்.. அதான?’’ என்றேன்.

என் முகத்திலிருந்து மனதைப் படிக்கக் கற்று வைத்திருந்த அவள் சிரிப்புடன், ‘‘மனசுல மன்மதலீலை கமல்ன்னு நினைப்பு! அப்படியே பொண்ணுங்க வந்துட்டாலும்...’’ என்று முகவாயை தோளில் இடித்து பழிப்புக் காட்டியபடி உள்ளே சென்றாள்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube