Monday, July 8, 2013

மீண்டும் ஞாபகநதிக் கரையினில்!

Posted by பால கணேஷ் Monday, July 08, 2013
வனுடைய அண்ணன் முதலில் பணியமர்ந்தது கோவையிலிருக்கும் மில் ஒன்றில். எனவே போத்தனூர் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான் இவன். ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவுக்கான போட்டிகள் பல அறிவிக்கப்பட்ட சர்க்குலர் வகுப்பிற்கு வர, ஆசிரியர் ஒவ்வொன்றாக படித்தார். ‘‘நான் விரும்பும் தலைவர் - இது தலைப்பு! பேச்சுப் போட்டில யார்லாம் கலந்துக்கறீங்க? கை தூக்குங்க’’ என்றார். சற்றும் யோசிக்காமல் கை தூக்கி விட்டான் இவன். (யோசிச்சிருக்கணும்!) வீட்டுக்கு வந்ததும்தான் ஒரு வாரத்துக்குள் எப்படித் தயாராவது, என்ன பேசுவது என்று கவலைகள் துரத்தின இவனை. இவன் படித்திருந்த, நினைவில் இருந்த அம்பேத்கர் பற்றிய விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி விட்டு ஹேமாக்காவை தேடிப் போனான்.

இவர்கள் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி சே.போ.கழகத்தில் நடத்துனராக இருந்த கிருஷ்ணசாமி வீடு. அவர் மகள் பத்தாம் வகுப்பு ஹேமலதாவுக்கு இவன் என்றால் கொள்ளைப் பிரியம். ஹேமாக்கா இவன் எழுதியதைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘‘இது பத்தாதுடா. டீடெய்ல்ஸ் கம்மியா இருக்கு’’ என்று நிறையச் சேர்த்து, திருத்தி அழகாக்கித் தந்தாள். கூடவே, ‘‘இதைப் படிச்சுட்டு வந்து என்கிட்ட பேசிக் காட்டணும்’’ என்று அதட்டி அனுப்பினாள். இயல்பிலேயே இவனுக்கு மனப்பாடம் செய்யும் திறனும் ஞாபகசக்தியும் அதிகம் இருந்ததால் உடனேயே நெட்டுருப் பண்ணிவிட்டு வந்தான். ‘‘பேசறேன். சரியா இருக்கா பாருக்கா’’ என்றுவிட்டு கடகடவென்று நான் ஸ்டாப்பாகச் சொல்லி முடித்தான். ஹேமாக்கா பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘‘இப்படி மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்கிற மாதிரி பேசக் கூடாதுடா’’ என்று சொல்லிவிட்டு ஏற்ற இறக்கங்கள், பேச்சை நிறுத்த வேண்டிய இடங்கள் (கைதட்டலுக்காகவாம்! என்ன ஒரு நம்பிக்கை என் மேல்!) என்று எல்லாம் சொல்லித் தந்து பேசிக் காட்டினாள்.

அதன்படியே இவன் மறுபடி பேசிக் ‌காட்டி, ஓகே வாங்கி போட்டிக்கு முன்தினம் வரை குஷியாக தயாராகியிருந்தான். போட்டிகள் பள்ளியில் நடைபெற, ஒவ்வொருவராக அழைக்க இவன் பேரும் அழைக்கப்பட்டது. மேடையில் ஏறுகிறான். மைக் முன் நிற்கிறான். எதிரே எல்லா வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள்! நா எழவில்லை. தொண்டை உலர, ‘ஙே’யென்று விழிக்கிறான். பையன்கள் பக்கமிருந்து பலத்த சத்தம், கூச்சல்! வகுப்பு ஆசிரியர் இவன் நிலையைச் சட்டென்று புரிந்து கொண்டு, அடுத்த பெ‌யரை அழைத்தார். அவ்வளவுதான். அடுத்த கணம் யார் கண்ணிலும் படாமல் ஸ்கூலில் இருந்து எஸ்கேப்பாகி ஓடிவிட்டான் இவன்.

ஆனால் மாலையில் ஹேமாக்காவின் கண்ணில் படவேண்டியிருந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ‘‘நல்லாத்தானடா தயார் பண்ணின? ஏன் அப்படி சொதப்புன?’’ என்று‌ கோபமாகக் கேட்டு தலையில் நறுக்கென்று ரெண்டு குட்டு குட்டினாள். கண்ணீருடன் கோபித்துக் கொண்டு போய் இரண்டு நாட்களாகப் பேசாமலிருந்த இந்த ஆண் சிங்கத்தை சமாதானப்படுத்த, பின்னால் அவளே பக்கோடாவும், ஜிலேபியும் வாங்கித் தந்தாள். அதன் சுவை இப்போதும் மனதில் இனிக்கிறது. (சமீபத்தில் சிரிப்பரங்கம் நிகழ்ச்சியில் மேடையி்ல் பேசி கைதட்டல் வாங்கியபோது இவன் இந்தப் பள்ளி நிகழ்வை நினைத்து சிரித்துக் கொண்டான் தனக்குள்!)

வன் பத்தாம் வகுப்பு படித்தது தேவகோட்டையில் தே பிரித்தோ பள்ளியில். அங்கேயும் இதேபோல் ஆண்டுவிழா வர, தமிழாசிரியர் தாசரதி ஐயா சொன்னார்- ‘‘நம்ம தமிழ் வகுப்பு சார்பா மூவேந்தர்கள் புகழ் பாடற மாதிரி ஒரு உரைச்சித்திரம் தயாரிக்கப் போறேன். உங்கள்ல மூணு பேர் சேர, சோழ, பாண்டியரா நடிக்கணும்’’. என்று. சொன்னதுடன் நில்லாமல் அப்போதே மாணவர்களை ஸ்கேன் செய்து வெங்கடசுப்ரமணியனை முதலில் செலக்ட் செய்தார். வெங்கி்ட்டு நெருங்கிய நண்பன் இவனுக்கு என்பதால் இவனுக்கு படு குஷி! அடுத்ததாக சிவாவை செலக்ட் செய்தவர், மூன்றாவதாக இவனைப் பார்த்து ‘‘நீங்க சோழ மன்னர் தம்பி’’ என்றதும் குஷி ப்யூஸ் போன பல்பானது.

‘‘ஐயா...! மன்னர்னா கம்பீரமா இருக்கணும். நான் சரியா வர மாட்டேங்கய்யா’’ என்று இவன் சொல்ல... ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும்யா. நீங்க ராஜகம்பீரமா(!)தான் இருக்கீங்க. நீங்க சரியா இருப்பீங்கய்யா’’ என்று வாயை அடைத்தார் தமிழய்யா. ‘‘எனக்கு மேடையில பேசறதுன்னா வராதுங்கய்யா. அதனாலதான் சொல்றேன்’’ என்று இவன் மீண்டும் நழுவ, ‘‘பேச‌வே வேண்டாம்யா. உங்களுக்குப் பின்னால டேப்ல உரைச்சித்திரம் ஓடிட்டிருக்கும். நீங்க மூவேந்தர்களும் பேசாம சிம்மாசனத்துல(?) உட்கார்ந்திருந்தாப் போறும்யா’’ என்று ஒரு பவுன்ஸர் வீசி, இவனை க்ளீன் போல்டாக்கினார் தாசரதி ஐயா. வேறு வழியில்லாமல், ‘‘அப்ப நான் பாண்டிய மன்னராத் தான் இருப்பேன் (ஊர்ப்பற்று!)’’ என்று அடம் பிடித்து ஒப்புக் கொண்டான் இவன்.

ஆண்டுவிழா தினத்தன்று முகத்தில் கன்னாபின்னாவென்று மேக்கப்(?) போட்டுவிட்டு, மீசையெல்லாம் ஒட்டி, தலையில் டம்மி கிரீடம் ஒன்று வைத்து, மூன்று சாதாரண சேர்களை சிம்மாசனமாக்கி வரிசையாய் உட்கார வைத்தார் தமிழய்யா. ‘‘அக்கம் பக்கத்து ஸ்கூல், காலேஜ்லருந்து எல்லாரும் வருவாங்கய்யா. யாராவது பக்கத்துல வர்ற சமயத்துல மட்டும் கண்ணை இமைக்காம நேராப் பாருங்க’’ என்றார் தமிழய்யா. அவர் சொன்னதை இம்மி பிசகாமல் செய்தோம் - பக்கத்து கல்லூரி, ஸ்கூல் பெண்கள் வந்தபோது மட்டும்! ஹி... ஹி...!

இரண்டாம் நாளன்று மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் தமிழய்யா வந்து, ‘‘அவ்வளவு தான்யா. எல்லாரும் மேக்கப்பைக் கலைச்சுட்டு வீட்டுக்குக் கிளம்புங்கய்யா’’ என்று விட்டார். மாலை வரை ஆகுமென்று அனைவரும் வீட்டில் சொல்லிவிட்டு வந்திருந்தோம். வெங்கிட்டு சட்டென்று ஒரு யோசனை சொன்னான். ‘‘டேய், காரைக்குடிக்குப் போய் சினிமா பாத்துட்டு வரலாம்டா. இப்ப விட்டா இது மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்காதுடா’’ என்று அவன் யோசனை ஏற்கப்பட்டு, ஆளுக்கொரு சைக்கிளில் 25 கி.மீ. தூரம் (என நினைக்கிறேன்... அதற்குக் குறையாத தூரம்) காரைக்குடிக்கு சைக்கிளிலேயே சென்று ஜாலி கலாட்டா, அரட்டை இத்யாதிகளுடன் திரைப்படம் பார்த்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்தபோது சந்தோஷத்தால் மனம் நிரம்பியிருந்தது. அன்று வெங்கிட்டு சொன்னதென்னவோ மிகச் சரியாகத்தான் போயிற்று. அதன்பின் அதுமாதிரி ஒரு சந்தர்ப்பம் எங்கள் பள்ளி வாழ்வில் அமையவில்லை!

என்ன... கொசுவத்தி சுத்தறது ரொம்ப ஓவராப் போயிட்டிருக்குன்னு தோணுதோ? அடுத்த முறை வழக்‌கமான நம்ம ஏரியாவுக்குள்ள புகுந்துரலாம். சரியா...?

81 comments:

  1. (பக்கோடா, ஜிலேபியுடன்) சுவையான நினைவலைகள்... பாண்டிய மன்னருக்கு வாழ்த்துக்கள்...

    காரைக்குடியில் பார்த்த படம்...?

    ReplyDelete
    Replies
    1. அப்போது வளரும் இயக்குனராக இருந்த ராமநாராயணன் இயக்கிய ‘இளஞ்ஜோடிகள்’ என்ற படம் அன்று பார்த்தோம் டி.டி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நி்றை நன்றி!

      Delete
  2. தமிழார்வம் அதிகம் இருந்த போதும் பள்ளியில் எனக்கு எப்போதும் கொடுக்கப்பட்டது ஹிந்தி உரை வாசிப்பு மட்டுமே.. ஒரு முறை தமிழ்ப் பேச்சை நானே கேட்டு வாங்கி கொண்டு பல்பு வாங்கிய கதை நினைவுக்கு வந்தது.. சுவை நிறைந்த கதை.. உருவகப்படுத்தி பார்த்த போது காமெடியாக இருந்தது.. மனம் விட்டுச் சிரித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இப்படிச் சொல்லி்‌ட்டா எப்பூடி ஆனந்து? அந்த பல்பு வாங்கின கதைய உடனே ‘பயணத்துல’ எழுதிடணுமாக்கும்! நாங்களும் சிரிக்க வோணாமா? மனம் விட்டுச் சிரித்த உனக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  3. கொசுவத்தி சுத்தறது ரொம்ப நல்லாவே இருக்குங்க எனக்கு பிடித்து இருக்குங்க தொடருங்க

    ReplyDelete
    Replies
    1. தெம்பூட்டிய வார்த்தையைத் தந்த மதுரைத் தமிழனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. மீண்டும் திரும்ப பெற முடியாத அந்த நாட்களை இப்படி நினைவுகளில் அசைபோட்டு மகிழ்வதால் மட்டுமே இன்னும் உயிரில் கொஞ்சம் பசை இருக்கிறது .......அருமை பாலா சார் நானும் என் பால்யம் சென்று வந்தேன் உங்கள் பதிவின் மூலம்

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் சரளா! பசுமையான அந்த நினைவுகளெல்லாம்தான் இன்னும் உயிர்ப்பசையை செழிப்பாக வைத்திருக்கிறது. உங்களின் பால்யத்துக்குச் சென்று திரும்பியதாகச் சொன்ன உங்கள் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  5. மலர்ந்த நினைவுகளின் பதிவு அருமை:)!

    ReplyDelete
    Replies
    1. படித்து, ரசித்து, பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete

  6. //சமீபத்தில் சிரிப்பரங்கம் நிகழ்ச்சியில் மேடையி்ல் பேசி கைதட்டல் வாங்கியபோது இவன் இந்தப் பள்ளி நிகழ்வை நினைத்து சிரித்துக் கொண்டான் தனக்குள்!//

    பள்ளியில் நத்தை தன் ஒட்டினுள் சுருக்கிக்கொள்வது போல் இருந்தவர்கள் பலர் பின்னாட்களில் பிரபலமானவர்களாக ஆனதை பார்த்திருக்கிறேன். தங்களின் பள்ளி நிகழ்ச்சியும் அதையே நினைவூட்டுகிறது. பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே!

      Delete
  7. என்னண்ணா! எதாவது கட்சியில சேர்ந்துட்டீங்களா?! சுயசரிதைலாம் எழுதறாப்புல தெரியுது?!

    ReplyDelete
    Replies
    1. இல்லம்மா... ப.மு.க. (பதிவர் முன்னேற்றக் கழகம்)ன்னு ஒரு கட்சியை ஆரம்பிக்கலாமான்னு ஐடியா இருக்கு. அதான் சுயசரிதைல்லாம்... ஹி... ஹி...!

      Delete
  8. //இவன் பத்தாம் வகுப்பு படித்தது தேவகோட்டையில் தே பிரித்தோ பள்ளியில். அங்கேயும் இதேபோல் ஆண்டுவிழா வர, தமிழாசிரியர் தாசரதி ஐயா சொன்னார்//

    அண்ணா நானும் ஐயாவின் மாணவனாக, கல்லூரி படிக்கும் போது பாரதி கலையிலக்கியப் பெருமன்றத்தில் ஐயாவுடனும் இருந்திருக்கிறேன்... அருமையான அற்புதமான மனிதர் அவர். வீட்டுக்கு சென்றால் என்னய்யா சாப்பிடுறீங்க என்ற கணீர்க்குரலில் வாஞ்சை இருக்கும்...

    தேவகோட்டை - காரைக்குடி 18 கி.மீ. ஆமா எந்த தியேட்டரில் படம் பார்த்தீர்கள்... என்ன படம்?

    சுய சரிதை நல்லாயிருக்கு... இன்னும் கொசுவர்த்தி சுத்துங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நெருங்கி வந்துட்டீங்க குமார்! சின்னப் பையன்க தானேன்னு இல்லாம எல்லாரையும் வாங்கய்யா, சொல்லுங்கய்யா என்று மரியாதையாகப் பேசுகிற தாசரதி ஐயாவின் குரலும், அவர் உருவமும் இப்பவும் பசுமையா என் மனசுக்குள் படமா ஓடுது. மறக்க இயலுகிற மனிதரா...? காரைககுடி நடராஜா தியேட்டர்ல (இப்ப இருக்கா? அப்பவே டப்பா மாதிரி இருக்கும்) நாங்க பார்த்த படம் ராமநாராயணன் இயக்கிய ‘இளஞ்ஜோடிகள்’ படம். உங்கள் வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் கொசுவத்தி இனி அப்பப் சுழலும். மிகமிகமிக நன்றி நண்பா!

      Delete
    2. அண்ணா...
      காரைக்குடி நடராஜா இப்போ புதுப்பொலிவுடன் இருக்கு அண்ணா... இப்போ ரிலீஸ் படங்கள் மட்டுமே... நிறைய மாற்றம்... உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணா...

      Delete
  9. மலர்ந்த நினைவுப் பதிவு.
    நகைச்சுவை மிக மிக நன்று.
    ரசித்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. ஹா ஹா ஹா தாராளமா உங்க கொசு வத்தி சுருள நல்லாவே சுத்துங்க.. கூட சுத்த நாங்க தயாராவே இருக்கோம்,

    சினிமாக்கு போய், வீட்ல மாட்டி அடிபட்டு அலுத்து இருப்பீங்கன்னு எதிர்பார்த்தா, அப்படி எந்த நல்ல காரியமும் நடக்காம ஏமாத்திடீங்களே

    ReplyDelete
    Replies
    1. சேட்டைல்லாம் வெளிலதான். வீட்ல நான் எப்பவுமே நல்ல புள்ளை சீனு! என்னுடன் பயணிக்கத் தயாராயிருக்கும் உனக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. Ever Green Sweet Memories. Please do not compare it with Mosquito Coils.

    ReplyDelete
    Replies
    1. ஓ.கே. மோகன். இனி அந்த வார்த்தையைத் தவிர்த்துவிட்டு என் மலரும் நினைவுகளைத் தொடர்கிறேன். மிக்க நன்றி!

      Delete
  12. ஞாபகநதிக்கரையினில்...என்று அழகான தலைப்பு கொடுத்து அதைவிட அழகாக எழுதியிருக்கிறீர்கள். கணேஷ் கை பட்டதால் கொசுவர்த்தி கூட இனிமையான மணம் வீசுது. தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தலைப்பை பாராட்டினதுலயும், மணம் வீசுகிறது என்று ‌சொன்னதுலயும் மகிழ்வுல ஒரு சுற்று பூரித்து விட்டேன் ஷமி! உற்சாகம் தந்த வார்த்தைகளுக்கு என் உளம் நிறைய நன்றி!

      Delete
  13. அருமையான மலரும் நினைவுகள்.... அனைவருடையதையும் தூண்டி விட்டிருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. உங்க பள்ளி நாட்கள் மனசுக்குள்ள வந்துச்சா எழில்? ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  14. கொசுவத்தியும் ஜிலேபியுமாக மலரும் இனிய நினைவுகள்..!

    ReplyDelete
    Replies
    1. இனிய நினைவுகளை ரசித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி!

      Delete
  15. சுவையான நினைவுகள்! நிறுத்தாதீர்கள் ஐயா! கூட பயணிக்க நாங்கள் தயார்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த கருத்துக்கு மனம் நிறைய நன்றி சுரேஷ்!

      Delete
  16. //கைதட்டலுக்காகவாம்! என்ன ஒரு நம்பிக்கை என் மேல்!//
    அய்யே பில்டப்ப பாரு பக்கிரிக்கு! அது உம்மேல் இர்ந்த நம்பிக்கேல்லப்பா, தன்னம்பிக்க... அக்கா தன் மேல் வச்ச நம்பிக்க! ரெண்டு கொட்டு இல்லேபா ரெண்டாயிரம் கொடுத்திருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. நிஜந்தான் பிரதர்! ஹேமாக்கா தன் ஃப்ரண்ட்ஸ் கிட்டல்லாம், ‘என் தம்பி இன்னிக்கு பேசப்போறான்; அசத்தப் போறான்’னுல்லாம் சொல்லி வெச்சிருக்கு. அதான் நான் ஏமாத்துனதுல ‌கடுங்கோபம் அவளுக்கு. இன்னும் குட்டு வெச்சிருந்தாலும் தப்பில்லன்னு இப்பத் தோணுது. மிக்க நன்றிப்பா!

      Delete
  17. அப்போ பேச பயந்த அப்பாவி 'இவனா' இப்போ பதிவுலகத்துல இந்தப் போடு போடுவது!
    இப்போ நீங்கள் இத்தனை பிரபலம் என்று ஹேமாக்காவுக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. அந்த ‘இவனா’ இவன்? என்று என் மனசுக்குள்ளயும் அப்பப்ப பிரமிப்பு தலைதூக்குவது நிஜம்தான் ரஞ்சனிம்மா. கோவையிலருந்து வந்தபின் ஊர் ஊரா மாறினதுல ஹேமாக்கா குடும்பத்தோட டச்சில இல்லாமப் போயிட்டோம். இப்ப எங்க இருக்காங்களோ... எப்படி இருக்காங்களோ..! தெரிஞ்சுக்க ஆசையில மனசு துடிக்குது. ஹும்...! காலம் கை குடுக்குமான்னு பாக்கலாம். உற்சாகம் தந்த உங்கள் வருகைக்கு உளம்கனிந்த நன்றிம்மா!

      Delete
  18. நல்லா இருந்துச்சு. என்ன படம்னு சொல்லவில்லையே....!

    ReplyDelete
    Replies
    1. காரைக்குடி நடராஜா தியேட்டரில் அப்போது வளரும் இயக்குனராக இருந்த ராமநாராயணன் இயக்கிய ‘இளஞ்ஜோடிகள்’ங்கற படம் ஸ்ரீராம் அது. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
    2. ராமநாராயணன் வளர்ந்துட்டாரா?

      Delete
  19. ஞாபக நதியில் எங்களையும் தொபுக்கடிர் என்று இழுத்துவிட்ட அண்ணன் ஓஓஓ சாரி பாண்டிய மன்னன் அவர்களுக்கு நன்றிகள் பல .

    //இவன் பத்தாம் வகுப்பு படித்தது தேவகோட்டையில் தே பிரித்தோ பள்ளியில்.//

    தே பிரித்தோ பள்ளியிலா படிச்சீங்க ...! ரெம்ப நல்ல பள்ளிக்கூடம் , கண்டிப்பு , கல்வின்னு , கலைன்னு எல்லாத்துக்கும் பெயர் பெற்ற பள்ளிக்கூடம் .நாங்கூட ஒருமொற அங்க போயிருக்கேன் . அப்ப நான் அமாரவதிபுதூர் குருகுல மாணவன் .

    ReplyDelete
    Replies
    1. அட... அ.புதூர் குருகுலத்துல படிச்சிங்களா தம்பி...! எல்லாரும் ரொம்ப பக்கத்துலதான் இருந்திருக்கோம்! நினைவுகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. மலரும் நினைவுகள் எங்களையும் முகம் மலரச்செய்தன. ராஜாவானாலும் பாண்டிய நாட்டுக்குதான் ராஜாவாவேன் என்று சாதித்த தங்கள் ஊர்ப்பற்றை என்னவென்று சொல்வது? மேடையில் சொதப்பிய நினைவும் சுவையாக இருந்தது. இனிய நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. இனிய நினைவுகளை படித்து ரசித்து உலா வந்த உங்களுககுஎன் மனம் நிறைய நன்றி தோழி!

      Delete
  21. என்ன சினிமான்னு சொல்லவே இல்லை????

    ReplyDelete
    Replies
    1. சொல்லிட்டனே... ராமநாராயணன் இயக்கிய ‘இளஞ்ஜோடிகள்’ படம்தான் அதுன்னு சொல்லிட்டேனே டீச்சர்...! மிக்க நன்றி!

      Delete
  22. இனிக்கும் நினைவுகள் ஜிலேபியைப் போலவே

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளின் இனிப்பை ரசித்து எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. மலரந்த நினைவுகள். சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் எனக்கூறி மகிழ்வு தந்த மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  24. மலரும் நினைவுகள்...

    ReplyDelete
    Replies
    1. மனதில் என்றும் நிற்கும் பசுமையான நினைவுகளும் கூட ஜீவா. ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. ரம்மியமான நினைவுகளும் கூட. மிக்க நன்றி ஜீவா!

      Delete
  25. பள்ளி நினைவுகளுக்கு என்னையும் அழைத்து சென்றது உங்கள் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. பள்ளிப் பருவம் சென்று மீண்ட தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
    2. ரசித்துப் படித்த தென்றலுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  26. மீண்டும் கொசுவத்தி.....

    உங்களோடு நாங்களும் ரசித்தோம் உங்கள் நினைவுகளை....

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளை ரசித்து எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  27. ‘//பேச‌வே வேண்டாம்யா. உங்களுக்குப் பின்னால டேப்ல உரைச்சித்திரம் ஓடிட்டிருக்கும். நீங்க மூவேந்தர்களும் பேசாம சிம்மாசனத்துல(?) உட்கார்ந்திருந்தாப் போறும்யா’’//
    அந்தக் காலத்திலேயே டப்பிங்கா

    ReplyDelete
    Replies
    1. ஹலோ... அதென்ன அநதக் காலம்னுட்டீரு... அதென்ன சங்க காலமா? 25 வருஷம் முந்தின நிகழ்வு தானய்யா... ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
    2. என்ன செய்ய.. முரளிதரன் ரொம்போ யங்கு. நாம.. நீங்க.. ஓகே, நாம கொஞ்சம் கோல்டு.

      Delete
  28. autograph நன்றாகவே சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தொடருங்கள்.....
    உங்கள் சிரிப்பந்தாதியும் படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்......

    ReplyDelete
    Replies
    1. இதைப் படித்ததுடன் அதையும் படித்து ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  29. சுவாரசியம். தன்மைக்கும் படர்கைக்கும் (?) தாவுவது கொஞ்சம் நிரடுதே?

    ReplyDelete
    Replies
    1. என்னே கூர்ந்த கவனிப்பு அப்பா ஸார்! இனி கவனமாய் இருப்பேன் நான். மிக்க நன்றி!

      Delete
  30. 'ஙே' வந்துடுச்சே? ழே இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அவசரத்துல டைப்பினதுல மறந்துபோய் வந்துடுச்சு. ஹி... ஹி...!

      Delete
  31. மலரும் நினைவுகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளை ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  32. பேசறதுக்காக நல்லாத் தயார் செஞ்சுட்டுப்போயும் சொதப்பின கட்டத்தை ரசிச்சேன். ஏன்னா நானும் அந்தக்கட்டத்தைக் கடந்திருக்கேன் :-))

    பொங்கல் விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்த பேச்சுப்போட்டியில் நல்லா தயார் செஞ்சுட்டு, மேடையேறப்போற கடைசி நிமிஷத்தில் பார்த்தால், ஜட்ஜுகளில் ஒருத்தரா எங்கப்பா. அவ்ளோதான்.. சப்த நாடியும் ஒடுங்கி, வீட்டுக்குள்ள ஓடிப்போயிட்டேன். விழா அமைப்பாளர்கள் என் பெயரை ஏலம் போட்டுக் களைச்சுட்டாங்க. வீட்டுல அப்றம் அர்ச்சனை கிடைச்சது தனிக்கதை :-))))))

    ReplyDelete
    Replies
    1. ஹை! எனக்கு சீனியரான உங்களுக்கும் இப்படியொரு அனுபவமா? சின்ன ஆறுதல்! டாங்ஸுங்கோ!

      Delete
  33. உங்க வலைப்பூவை ஹேமாக்கா வாசிக்க நேர்ந்தா நிச்சயம் பிரமிச்சுப்போயிருவாங்க.. வாசிக்கணும்ன்னு நானும் வேண்டிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்தைப் படிக்கும் போதே கண்ல தண்ணி முட்டிருச்சு சாந்தி மேம்! இந்த விஷயத்தை எழுதினப்பவும், பப்ளிஷ் பண்ணப்பவும் என் அடிமனசுல ஓடிட்டிருந்த எண்ணத்தை ஸ்கேன் பண்ணின மாதிரி சொல்லிட்டீங்க. மிகமிக நெகிழ்வுடன் நன்றி!

      Delete
  34. நினைவலைகள் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

    எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நாடகத்தில் வேஷம் எல்லாம் போட்டுக் கொண்டு மேடை ஏறிய பின் பேச்சே வராததால் என் பெயரை மட்டும் சொல்லி விட்டு வந்தது. இன்றும் நினைவில்....:))

    எங்கள் மகளும் பாரத மாதா வேஷம் போட்டு வீட்டில் பேச வைத்து தயார் செய்து பள்ளிக்கு சென்றதும் ”அம்மா அம்மா” என்று மட்டும் சொல்லி விட்டு வந்து விட்டாள்....:)))

    ReplyDelete
    Replies
    1. அட‌ேடே... நான்தான் ரொம்ப அப்பாவியா இருந்துட்டேன்னு நெனச்சா, நீங்களும் துணைக்கு இருக்கீங்கன்றதுல சின்ன ஆறுதல்! ரசித்துப் படித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete

  35. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சம்பவங்கள் இளவயது சம்பந்தப்பட்டது இருக்கும். அது என்ன கொசு வத்தி சுற்றல். ? ஊதுபத்தி மணம் அல்லவா கமழ்ந்தது.

    ReplyDelete
  36. இரசித்துப் படித்தேன். (பின்னோட்டத்தையும்)
    சுயசரிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி பாலகணேஷ் ஐயா.

    ReplyDelete
  37. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே......!

    ReplyDelete
  38. உங்க கொசுவத்திய நல்லா சுத்துங்க, சுயசரிதை எழுதறத உங்க கிட்ட இருந்து நாங்களும் கத்துக்கறோம்.

    அப்பறம் அந்த ப.மு.க. ல எனக்கும் ஒரு சீட் ஒதுக்கிடுங்க. ஹி... ஹி..

    ReplyDelete
  39. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  40. ஆஹா வாசனையான மலரும் நினைவுகளா!!

    ReplyDelete
  41. நினைவுகளை மீட்டிப் பார்ப்பதிலும் ஒரு சுகம் இருக்கு தங்கள் பள்ளி நினைவுகளைச் சொல்லி என்கனவுகளையும் நினைவூட்டி விட்டீங்க நன்றி
    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. அழகான அனுபவம் சார்.. ஆனலும் நீங்க மோசம் சார்.. ஹேமா அக்கா அவ்ளோ அழகா ப்ரிபேர் பண்ணி கொடுத்ததும் கோட்டை விட்டுடீங்களே...

    நானும் நிறைய பள்ளிவிழக்களில் பேசி இருக்கிறேன்...ஆனா பயந்தது இல்லை!! இப்ப எனக்கும் கொசுவத்தி சுத்துறது... ஹவ்வ்வ்வ்.....

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube