Thursday, September 15, 2011

இதுவும் ஒருவித வன்முறைதான்!

Posted by பால கணேஷ் Thursday, September 15, 2011
என்னுடைய அப்பாவின் காலத்தில் இல்லாத பல விஞ்ஞான வசதிகளை இன்று என்னால் அனுபவிக்க முடிகிறது. ‘‘அது சரியான ‌வேகத்தில் வீசப்பட்ட பந்து. அதை அவர் தடுத்து ஆடியிருக்க வேண்டும். பேட்டில் பட்ட பந்தை ஸ்லிப்பில் கேட்சாகி விட்டது’’ -இப்படி காதருகில் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு, எங்கோ நடக்கும் கிரிக்கெட்டின் வர்ணனையைக் கேட்டவர் என் அப்பா. எங்கோ நடக்கும் கிரிக்கெட்டை என் வீட்டு ஹாலில் இருந்தே தொலைக்காட்சியில் பார்க்கும் வசதி பெற்றிருக்கிறேன் நான். சினிமா பார்க்க தியேட்டருக்கு ஓடியவர் அவர். வீட்டிலேயே டிவிடி வாங்கி போட்டுப் பார்ப்பவன் நான். லேண்ட் லைன் தொலைபேசியை மட்டுமே பார்த்தவர் அவர். செல்போனைப் பயன்படுத்துகிறவன் நான்.


செல்போன் என்பது மிகவும் வசதிதான். கைக்கு அடக்கமாக இருப்பது, எங்கிருந்தும், யாரையும் அழைத்துப் பேசும் வசதி என்று இதில் கிடைக்கும் வசதிகள் பல. ஆரம்பத்தில் செங்கல் சைசுக்கு தொலைத் தொடர்பு வசதியை மட்டும் தாங்கி வந்த செல்போன்கள் இன்று கையடக்க அளவுக்கு மாறியது மட்டுமின்றி, அதிலேயே கேமரா, இன்டர்நெட், ஆடியோ, வீடியோ ப்ளேயர்கள் என்று பல வசதி(?)களை உள்ளடக்கியவையாக வருகின்றன. இது வரமா, சாபமா என்பதுதான் எனக்குப் புரியவில்லை.


செல்போனைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பாக என்னால் என் நண்பர்கள் பலரின் தொலைபேசி எண்ணை என்னால் நினைவிலிருந்து கூற முடிந்தது. ஆனால் இன்று... எவர் எண்ணும் நினைவில் நிற்காமல் செல்லில் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செல்போனை ஒருமுறை திருட்டுக் கொடுத்தபோது என் கான்டாக்ட்ஸை மீட்டெடுப்பதற்குள் திணறி விட்டேன். இந்த நிலை இன்று நிறையப் பேருக்கு ஏற்பட்டிருக்கும்.


முன்பெல்லாம் கடிதங்கள் எழுதும் பழக்கம் கொண்டிருந்தேன். நாவல்களைப் படித்ததும் எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது, நண்பர்களுக்கு எழுதுவது என்று அதிகளவில் தபால் துறையைப் பயன்படுத்தி வந்தேன். இப்போது இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலமே எல்லோரையயும் தொடர்பு கொள்ள முடிவதால் கடிதம் எழுதும் பழக்கமே என்னிடம் இல்லாமல் போய் விட்டது.


செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் அபராதம் என்றெல்லாம் அறிவித்த பின்னும் பலர் செல்லில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதை இன்றும் பார்க்கிறேன். சிலர் ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாதனத்தின் உதவியுடன் செல்லை எடுக்காமல் பேசுகின்றனர். சிலர் தோளில் இடுக்கியபடியே பேசிக் கொண்டு போகிறார்கள். எப்படியாயினும் போக்குவரத்தி்ல் கவனம் சிதறுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘‘அப்படி என்னடா அவசரம்? --------- (இந்த இடத்துல ஜாக்கிசேகரின் டிரேட்மார்க் வார்த்தையைப் போட்டுக் கொள்ளவும்) வண்டி ஓட்டிக்கிட்டே பேசி என்னத்தடா சாதிக்கப் போறீங்க?’’ என்று கத்தவேண்டும் போல எனக்குக் கோபம் வரும்.


செய்தித்தாள்களைப் பிரித்தால் செல்போனில் பேசியபடி ரயில்வே ட்ராக்கை க்ராஸ் செய்ய முயன்றவர்கள் ட்ரெய்னில் அடிபட்டு உயிரிழக்கிறார்கள் என்ற செய்தியை அடிக்கடி காண முடிகிறது.


நான் கவனித்த வரை ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் செல்போன் பயன்படுத்துகிறார்கள். பேருந்தில் பயணிக்கும் போது பார்த்தால் இரண்டு ஆண்கள் செல்போன் பேசியபடி இருந்தால், எட்டுப் பெண்கள் செல்போனில் பேசியபடி இருக்கிறார்கள். அதுவும் ஆண்கள் பேசுவது ஐந்து நிமிடம் என்று வைத்துக் கொண்டால் பெண்கள் பேசுவது இருபத்தைந்து நிமிடங்களுக்குக் குறையாமல்தான் உள்ளது.


செல்போனில் இன்டர்நெட் மற்றும் வெப்சைட் பார்க்கிறார்கள் பலர். கணினித் திரையில் வசதியாகப் பார்ப்பதை விட்டு இப்படி சின்னத் திரையில் பார்ப்பதால் கண்கள் கெடும் என்பதும், அருகில் இருக்கும் பலர் உங்கள் செல்போனின் திரையைப் பார்க்கிறார்கள் என்பதும் எனக்குப் பிடிக்காத விஷயங்கள்.


என் செல்போனில் எம்.பி.3 ப்ளேயர் தவிர வேறு வசதிகளை வைத்துக் கொள்ளவில்லை. தொலைத் தொடர்புக்காக ஏற்பட்ட கருவிக்கு அந்தப் பயன்பாடு மட்டும் இருந்தால் போதும் என்பது என்னுடைய எண்ணம். மற்ற வசதிகளை அனுபவிப்பதில் தவறில்லை. இன்று தவிர்க்க இயலாததும்கூட. ஆனால் நான் குறிப்பிட விரும்புவது, மற்றவரையும், உங்களையும் பாதிக்காத வண்ணம் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான்.


நான் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் ஆசிரியராக இருந்த ஊஞ்சல் இதழில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தேன். நான் எம்.ஜி.ஆரின் ‘உன்னை அறிந்தால்’ பாடலை காலர் டியூனாக அப்போதெல்லாம் வைத்திருந்தேன். அவர் காலர் டியூன் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.


அது பற்றிக் கேட்டபோது, ‘‘நான் ஏதாவது சோகமான மனநிலையில் ஒருவனுக்கு போன் செய்யும் போது ‘நாக்கமுக்க’ மாதிரி பாட்டைக் கேட்டால் எரிச்சல் வரும். நான் மகிழ்ச்சியான மனநிலையில் நண்பரை அழைக்கும்போது எதிர்முனையில் ‘எங்கே நிம்மதி’ பாடினால் என் சந்தோஷ மூட் போய் விடும். ஏன் இப்படி உங்களுக்கு்ப் பிடித்த பாட்டை அடுத்தவர் மீது திணிக்க வேண்டும்? இதுவும் ஒருவிதமான வன்முறைதான்.’’ என்று குறிப்பிட்டார். மிகவும் நியாயமாகவே தோன்றியதால் நானும் காலர் டியூனை எடுத்து விட்டேன். இப்போது என் போனிலும் ட்ரிங்... ட்ரிங்... தான்.


செல்போனைப் பொறுத்தமட்டில் என் நிலைப்பாடு இப்படி! உங்களுக்கு எப்படி?

7 comments:

 1. செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் அபராதம் என்றெல்லாம் அறிவித்த பின்னும் பலர் செல்லில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதை இன்றும் பார்க்கிறேன். சிலர் ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாதனத்தின் உதவியுடன் செல்லை எடுக்காமல் பேசுகின்றனர். சிலர் தோளில் இடுக்கியபடியே பேசிக் கொண்டு போகிறார்கள். எப்படியாயினும் போக்குவரத்தி்ல் கவனம் சிதறுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘‘அப்படி என்னடா அவசரம்? --------- (இந்த இடத்துல ஜாக்கிசேகரின் டிரேட்மார்க் வார்த்தையைப் போட்டுக் கொள்ளவும்) வண்டி ஓட்டிக்கிட்டே பேசி என்னத்தடா சாதிக்கப் போறீங்க?’’ என்று கத்தவேண்டும் போல எனக்குக் கோபம் வரும்

  வணக்கம் ஐயா உங்கள் கோவம் நியாயமானதே .தினந்தோறும் இந்தமாதிரி
  விசயங்களால் நிகழும் சாலை விபத்துக்களில் அநியாயமாக எத்தனை
  உயிர்கள் பறிக்கப் படுகின்றது இவ்விடயம் மிகுந்த கண்டணத்திற்கு உரியது .மிக்க நன்றி ஐயா தங்கள் சமூக சிந்தனை குறித்த பகிர்வுக்கு .முடிந்தால் ஒரு முறை வாருங்கள் என் தளத்திற்கும் .

  ReplyDelete
 2. வாழ்த்துகள் கணேஷ் ஜி.. புதிய தளத்துக்கும், சமுக கோபத்துக்கும்.. நான் தளம் ஆரம்பிக்க சொல்லித்தருகின்றேன் என்று சொல்லி மறந்து விட்டேன்... மன்னிக்கவும்.

  ReplyDelete
 3. ஹாப்பி இன்றுமுதல்ஹாப்பி...
  நலந்தானா..உடலும் உள்ளமும் நலந்தானா...
  நுர்று ஆண்டுகாலம் வாழ்க ...நோய்நொடியில்லாமல் வாழ்க....
  போன்ற பாடல்களை ரிங்டோனாக வைக்கலாமே...சமுக அக்கரை உள்ள பதிவு...நன்றி கணேஷ் சார்...
  நீங்கள் கேட்ட பட்டர்பிளை ஸ்கரீன்சேவர் லிங்க்:- http://velang.blogspot.com/2011/06/blog-post.html
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 4. கண்டுபிடிப்புகள் எல்லாம் நலம் தருவது பாவிப்பதை பொறுத்தே. என் அலைபேசியிலுள்ள காமராவை தான் அதிகம் பயண்படுத்துவது. பல அறிய புகைப்படங்கள் எடுக்க மட்டுமல்ல முகநூல் வழியாக நண்பர்களுடம் பகிரவும் இயல்கின்றது.

  ReplyDelete
 5. என் அலைபேசியில் இணைய இணைப்பு கூட எப்போதும் பயன்பாட்டில்தான் இருக்கும்..

  ஒருமுறை என் நண்பர் நான் பேருந்தில் வரும்போது அலைபேசியில் அலைத்து ஒரு விளக்கக் குறிப்பு கேட்டார்..

  சிலமணித்துளிகளில் அவரைக் காக்க வைத்து அலைபேசி வழியே இணையத்தில் தேடிச் சொன்னேன்...

  என்னைக் கேட்டால் அறிவியல் பலநேரங்களில் வரம் என்றுதான் சொல்வேன்..

  பயன்படுத்தத் தெரியாதபோதோ
  தவறாகப் பயன்படுத்தும்போது

  நிச்சயமாக இந்கக் கண்டுபிடிப்பு சாபம் தான் நண்பரே..

  காலத்துக்கு ஏற்ற பதிவு..

  ReplyDelete
 6. தலைப்புக்கேற்ப ஒவ்வொரு வரிகளும் மின்னல் வரிகள் தான் நண்பரே.

  ReplyDelete
 7. //செல்போனைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பாக என்னால் என் நண்பர்கள் பலரின் தொலைபேசி எண்ணை என்னால் நினைவிலிருந்து கூற முடிந்தது. ஆனால் இன்று...//

  அட நீங்க வேற மனைவியின் அலைபேசி எண்ணே நினைவில் இருக்க மாட்டேங்குது! அடுத்தவர்கள் எண் எங்கே நினைவில் இருக்கும்!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube