Wednesday, February 1, 2012

நடை வண்டிகள் - 1

Posted by பால கணேஷ் Wednesday, February 01, 2012
ராஜேஷ்குமாரும் நானும்! - 1

ராஜேஷ்குமார் அவர்களை ‘க்ரைம் கதை மன்னன்’ என்றுதான் பெரும்பாலோர் அறிந்திருப்பீர்கள். அவர் ‘குமுதம்’ இதழிலும், ‘சாவி’ அவர்கள் ஆசிரியராக இருந்த ‘குங்குமம்’ இதழிலும், பின்னர் சாவியிலும் ஏராளமான சிறுகதைகள் எழுதும் போதிலிருந்தே அவரின் ரசிகன் நான். அவர் எழுதிய சிறுகதைகளையெல்லாம் சேகரித்து பைண்ட் செய்து வைத்திருந்தேன். (அவருடனான என் நட்பு இறுகுவதற்கு அவை ஒரு கருவியாக இருந்தது பின்னாட்களில்).

அவர் சாவி அவர்கள் நடத்திய ‘மோனா’ வில் முதல் நாவல் எழுதி, பின்னர் மாலைமதியில் சில நாவல்கள் எழுதிய போதெல்லாம் படித்து ரசித்திருக்கிறேன். கடிதமிட்டதில்லை. சில காலம் கழித்து ‘க்ரைம் நாவல்’ என்று மாதம் ஒரு நாவல் ராஜேஷ்குமாரை எழுதவைத்து தனி சிம்மாசனத்தில் அவரை அமர வைத்தார் திரு.ஜி.அசோகன் அவர்கள். அவ்வளவுதான்... ராஜேஷ்குமார் என்ற ராக்கெட் டேக் ஆஃப் ஆகிப் பறக்க ஆரம்பித்தது. சில சமயங்களில் மாதம் ஆறு, ஏழு நாவல்கள் கூட அவருடையது வெளிவரும். ‘க்ரைம் கதை மன்னன்’ என்ற அடைமொழியும் அவருடன் ஒட்டிக் கொண்டது.

அந்நாட்களில் அவ்வப்போது அவருக்கு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறேன். நாவலின் ப்ளஸ் மைனஸ்களை அலசி எழுதுவேன். எதற்கும் அவரிடமிருந்து பதில் வந்ததில்லை. அந்நாட்களில்தான் ‘நாம் எழுதும் கடிதங்களை எழுத்தாளர்கள் படிக்கிறார்களா?’ என்ற சந்தேகம் என் மனதில் எழும். ‘தினமலர்’ நாளிதழில் கணினி வடிவமைப்பாளாகச் சேர்ந்த பின்னர், பல பதிப்புகளுக்கும் பணிமாற்றம் கிடைத்தது. (சில காலம் அந்நிறுவனத்தில் வேலை செய்தேன்) அப்படி 1995ன் இறுதியில் எனக்கு கோவை தினமலர் அலுவலகத்துக்கு மாறுதல் கிடைத்து கோயமுத்தூர்வாசியானேன்.

கோவையில் அவர் இருக்கும் முகவரி தெரியும் என்பதால் ஒரு சுபதினத்தில் அவரை நேரில் சந்திக்கச் சென்றேன். ஒப்பணக்கார வீதியில் ஒரு எளிமையான வீடு. (பி்னனாட்களில்தான் சொந்த வீடு கட்டிக் கொண்டார்.) மாடியறையில்தான் அவர் எழுதுவது வழக்கம் என்பதால் அங்கு அழைத்துச் சென்றார். கைலி, பனியனில் எளிமையாக இருந்தார். அதே எளிமை அவரின் பேச்சிலும் இருந்தது. அந்நாட்களில் நான் பக்குவப்பட்டவனாக இல்லை. நிறையக் குறைகள் என்னிடம் மிகுந்திருந்த காலகட்டம் அது. அவரைச் சந்தித்ததும் ப்ளஸ் பாயிண்ட்டுகளையும், பாராட்டையும் சொல்வதற்குப் பதிலாக குறை சொன்னேன்.

‘‘எண்ணி ஏழே நாள்-ன்னு உஙக நாவல் படிச்சேன் ஸார். இதை எழுதறதக்கு ஒரு ராஜேஷ்குமார் தேவையில்ல. கதை எழுதணும்னு நினைக்கிற என்னை மாதிரி கத்துக் குட்டிகளே எழுதிடுவாங்க. நீங்கதான் எழுதினீங்கன்னு நம்பவே முடியலை ஸார்...’’ என்றேன். துளியும் கோபப்படாமல் ரசித்துச் சிரித்தார்.

‘‘என்ன பண்றது கணேஷ்? சில சமயங்கள்ல அன்புக் கட்டளைகளை மறுக்க முடியாம அதிக நாவல் எழுதும்படி ஆகறபோது இப்படி சில லைட் சப்ஜெக்டா அமைஞ்சுடுது. உங்களுக்குத் திருப்தி தரலை. ஆனாலும் எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்கள் வந்திச்சு’’ என்றார். அதன் பின்னர்தான், நான் அவருக்கு எத்தனை காலமாக வாசகன் என்பதையும் நான் படித்த கதைகளைப் பற்றியும் விரிவாகப் பேசினேன். எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் குறுக்கிட்டு விட்ட என்னிடம் பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசினார். சிறுபிள்ளைத்தனமாக, ‘‘ஸார், நீங்க இப்ப எழுதிட்டிருக்கற நாவலோட பக்கத்தை நான் பாக்கலாமா? உங்க கையெழுத்தைப் பாக்கணும் போல இருக்கு’’ என்றேன். சிரித்தபடி எழுதிக் கொண்டிருந்த பக்கத்தைக் காட்டினார். படித்தேன். திருமதி. தனலட்சுமி ராஜேஷ்குமார் தந்த காபியைக் குடித்துவிட்டு விடைபெறும் போது, ‘‘அடிக்கடி வந்துட்டிருங்க’’ என்றார். அந்த வார்த்தைகளில் மிக மகிழ்ந்து போனேன்.

சும்மாவே குதிக்கிற குரங்கு, கள்ளைக் குடிச்சுடுச்சுன்னா சும்மா இருக்குமா? அதன் பின்னர் அவர் நாவல்களைப் படித்த உடன், வாசகர் கடிதமாவது, ஒண்ணாவது... நேரே வீட்டிற்குப் போய் கதவைத் தட்டி விடுவேன். என் கருத்தைச் சொல்வேன். அவர் பதிலளிப்பார். வேறு பல விஷயங்களையும் உரையாடுவார். சில அவசர சமயங்களில் மட்டும் உடனே பேச்சை முடித்துக் கொண்டு விடுவார். இப்படியாக அவருடன் பழகியதில் எழுத்தாளர் - வாசகர் என்ற கட்டத்தைத் தாண்டி நண்பர்கள் என்று சொல்லக் கூடிய அந்தஸ்து எனக்குக் கிட்டியது.

அவரைச் சந்தித்த அடுத்த ஆண்டில் - அதாவது 1997 -ல் எனக்குத் திருமணமானது. வேலூரில் நடந்த திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்தேன். கல்யாணத்திற்கு அவர் வராவிட்டாலும் வாழ்த்தாவது வரும் என்று காத்திருந்தேன். வரவில்லை. கல்யாணம் முடிந்து கோவை திரும்பியதும் சண்டை போட அவர் வீட்டுக்குச் சென்றேன். என் மனைவிக்கு படிப்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் பிரபல எழுத்தாளர் என்று அவரை அறிந்திருந்ததால் அவர் என் நண்பர் என்பதில் ஒரு  த்ரில். அவளையும் உடன் அழைத்துச் சென்றேன். ஆனால் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவரின், அவர் மனைவியின் அன்பான உபசரிப்பில் சண்டை போட வந்தது மறந்து விட்டது. ஒரு ஆதங்கமாகக் கேட்டபோது, கோவையில் போஸ்டல் ஸ்ட்ரைக் காரணமாக வாழ்த்துத் தந்தி அனுப்ப இயலாத நிலையை விளக்கினார். (அப்போது செல்ஃபோன் என்கிற வஸ்து இப்படி வெகுஜனப் புழக்கத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்க.)

என் மனைவிக்கு அவரின் எளிமையும் கலகலப்பான, அன்பான பேச்சும் மிகப் பிடித்திருந்தது. வீ்டடிற்கு வந்து சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். எல்லாம் கல்யாணமான புதிதில்தான். சில நாட்களிலேயே நான் அடிக்கடி அவரை சந்திக்கப் போவதும், ஒரு சில விஷயங்களை அவருக்காகச் செய்ததும் அவளுக்குப் பிடிக்காமல் போக, எங்களுக்குள் பெரும் சண்டை மூண்டது. வாய்ப் பேச்சாக ஆரம்பித்த அது, பின்னர் ஒரு சவாலில் போய் முடிந்தது. விளைவு... என் நண்பர் ராஜேஷ்குமார் தங்கம் என்பதை நான் ‌அறிந்திருந்தும், தங்கத்தை உரசிப் பார்க்க வேண்டிய நிலை! என் மனைவியின் காரணமாக, ஒரு சோதனை வைத்தேன் அவருக்கு.

என்ன சோதனை அது? அவர் எவ்வளவு தேறினார் என்பதை அறிய... ப்ளீஸ், வெய்ட்டீஸ்!

69 comments:

  1. நண்பர் மணிஜி அவர்களுக்கு...
    தாங்கள் கேட்ட ‘மூன்றாவது கண்‘ என்னிடம் இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அடுத்த பதிவு உடன் வருமா...?

    சா இராமாநுசம்

    ReplyDelete
  3. @ புலவர் சா இராமாநுசம் said...

    வேறு ஏதாவது விஷயம் பற்றி பதிவிட்டு விட்டு இதைத் தொடந்தால்தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே வரும் புதனன்று அடுத்த பகுதி வெளியிட உத்தேசம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும மனமார்ந்த நன்றி ஐயா...

    ReplyDelete
  4. க்ரைம் சக்ரவர்த்தி ராஜேஷ்குமாருடன் தங்களின் அனுபவ பகிர்வு அருமை. இதுவும் தொடருமா? காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. @ குடந்தை அன்புமணி said...

    சின்னச் சின்ன காத்திருத்தல்களில் சுவாரஸ்யம் உண்டுதானே நண்பா... எனக்கு இது முதல் தொடர் என்பதால் விரைவில் தொடர்ந்து செல்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  6. நான் அவரின் தீவிர ரசிகன் ..

    ReplyDelete
  7. உங்கள் நட்பு வளர்ந்த விதம் அழகு. என்ன சோதனைன சார் வைத்தீர்கள்? ரொம்ப எதிர்பார்க்க வச்சிட்டீங்களே. சரி. குருவின் ஸ்டைல்தானே சிஷ்யனுக்கும் வரும். சீக்கிரம் அடுத்த பதிவு போட்டிடுங்க சார்.

    ReplyDelete
  8. அடாடா - இது என்ன சஸ்பென்ஸ்! உடையுங்க - உடையுங்க உடனே - உங்க சஸ்பென்சை!

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா.நடை வண்டி ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்களா..மகிழ்ச்சி..முதல் பகுதியில் எனது மானசீக் குருவுக்கும் உங்களுக்குமான உறவை சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள்..பொதுவாகவே ஆரம்பத்திலிருந்து நாவலாசிரியர்கள் பற்றிய விசயங்களை பத்திரிக்கைகளில் தேடித் தேடி படிப்பேன்.இந்த தொடரைத் தவறவிட்டுவேனா என்ன..நடை வண்டியில் ஒரு ஓரமாய் துண்டைப் போட்டு இடம் பிடித்துவிட்டேன்..உங்களோடு தொடர்ந்து நானும் பயணிக்கிறேன்.கசப்பான அனுபவங்கள் கூட உங்கள் சொல்நடையால் இனிக்கட்டும்..

    ReplyDelete
  10. நானும் ராஜேஷ்குமார் அவர்களின் நாவல் படித்து இருக்கிறேன்.அவரைப் பற்றிய இப்பதிவு மிக மிக அருமை

    ReplyDelete
  11. ராஜேஸ்குமார் எனக்கு பிடித்த எழுத்தாளர். அவருக்கே டெஸ்ட்டா? வீட்டுக்கு சுமோ அனுப்பவா?

    ReplyDelete
  12. உங்களின் திரு. ராஜேஷ்குமார் உடனான அனுபவங்கள்

    படிக்க மிகவும் சுவராஸ்யமாக உள்ளது. அவரின்

    கையெழுத்தைப் பார்க்க உங்களின் ஆவல் ரசிக்கத் தக்கது.

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டீர்கள் .

    அத்தானே ஒரு நல்ல தொடரின் வெற்றி.

    போன பதிவிலேயே சொல்ல நினைத்தேன்.

    உங்களின் புது வலை முகப்பு நல்ல தேர்வு.

    நன்றாக உள்ளது.

    ReplyDelete
  13. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    நீங்களும் ரா.கு.வின் தீவிர ரசிகர் என்பதில் மிக மகிழ்ச்சி மற்றும் என் இதயம் கனிந்த நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  14. @ துரைடேனியல் said...

    அந்த சோதனையைச் சொன்னால் என்னைத் திட்டுவீர்கள் துரை! இருந்தாலும் உண்மையைச் சொல்லித் தானே ஆக வேண்டும்? பொய் கலக்காமல் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன், பார்த்துவிட்டுத் திட்டுங்கள்! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி துரை!

    ReplyDelete
  15. @ மதுமதி said...

    நண்பரே... என் மனதைப் படித்தது போல, ‘கசப்பான அனுபவங்கள்கூட உங்கள் சொல்நடையால் இனிக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் விரும்பியதும் அதுதான். க்ரைம் கதை எழுதுவதில் உங்கள் மானசீக குருவா அவர்? மிகமிக மகிழ்ச்சி! தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  16. @ dhanasekaran .S said...

    ஆயிரம் நாவல் கடந்த அபூர்வ எழுத்தாளராயிற்றே... உங்களையும் அவர் கவர்ந்ததில் வியப்பென்ன? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனசேகரன்!

    ReplyDelete
  17. @ ராஜி said...

    ஹய்யோ... இதுக்கே வீட்டுக்கு சுமோ அனுப்பட்டுமான்னு கேக்கற தங்கச்சி, என்ன பண்ணினேன்னு தெரிஞ்சா, கட்டையிலயே அடிப்பாங்க போலயே... நான் எஸ்கேப்ரா சாமி!

    ReplyDelete
  18. @ ஸ்ரவாணி said...

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பதில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். வலைப்பூவின் முகப்பு உங்களைக் கவர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி! தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு... வேறென்ன! என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  19. @ kg gouthaman said...

    உடனே உடைக்க கொஞ்சம் தயக்கமாதான் இருக்கு- என் இமேஜ் போயிடுமேன்னு... சீக்கிரமே சொல்லிடறேன் ஸார்...! தங்களின் வருகை தந்த மகிழ்வுடன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  20. என் மறுமகள் களுக்கு ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல்களின் கதைகளைச்சொல்லுவேன். ஆர்வமாக கேட்பார்கள் அவங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது நாம அவங்களுக்கு படிச்சு சொல்லும்போது நாமும் அந்தக்கதைக்குள்ளயே போயிட்டு வந்துடுவோம். நல்ல எழுத்தாளர்+ நல்ல மனிதர். பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. @ Lakshmi said...

    க்ரைம் கதை மன்னனை நீங்களும் ரசித்து, கதையாகச் சொல்லி வேறு மகிழ்ந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. தங்களின் வாழ்த்துக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  22. நானும் ஒரு காலத்தில் ராஜேஸ்குமாரின் ரசிகைதான்.அவர் எழுதி வெளிவரும் இதழ்களை உடனே வாங்கி வந்து படித்து விடுவேன்.(இப்பொழுதுதான் புத்தகத்தை கையில் எடுத்தாலே கொட்டாவி வருகின்றது) :()

    அபிமான எழுத்தாளருடனாக நட்பும் சம்பவங்களையும் மீள் பதிவாக உங்கள் எழுத்தில் வாசிக்கும் பொழுது சுவாரஸ்யமாக உள்ளது.முக்க்கியமான இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்கள்.

    வரும் புதன் கிழமைக்கு வெயிடிங்

    ReplyDelete
  23. @ ஸாதிகா said...

    ஆம், நாட்கள் செல்லச் செல்ல படிக்கும் விஷயத்திலும் மாற்றம் வரும்தான். அன்புத் தங்கை என்னுடன் தொடர்ந்து வருவதைக் (காத்திருப்பதைக்) கண்டு மனமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்!

    ReplyDelete
  24. உங்களது அனுபவத்தை மிகப்படுத்தாமல் இயல்பாக பதிவு செய்துள்ளீர்கள். நான் ராஜேஷ்குமார் அவர்களின் மிகப்பெரிய ரசிகன்.

    ReplyDelete
  25. திரு.ராஜேஷ்குமார் பற்றிய தங்களின் நினைவுகள் அருமை.ஆனால் இப்படி சஸ்பென்ஸில தொடரும் போட்டுவிடீங்களே? அடுத்த பகுதி எப்போ?

    ReplyDelete
  26. வணக்கம் பாஸ் நான் ராஜேஸ்குமார் அவர்களின் தீவிர ரசிகன்.அவருடனான உங்கள் அனுபவங்களை அழகாக மீட்டியிருக்கின்றீர்கள் அருமை அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

    ReplyDelete
  27. ஏனையா இந்த சஸ்பென்சு...? தாங்க முடியல... உடனே அடுத்த பதிவை போடும்....அது வரை உங்களை செல்லமாய் திட்டிகொண்டிருன்க்கும் ஒரு ராஜேஷ்குமார் வாசகன்.

    ReplyDelete
  28. அப்பா!இப்ப உங்க பதிவுக்கு பின்னூட்டமிடவே பயமா இருக்கே!உங்களைப்போல எளிமையான பதிவர்களாலே என்னப் போன்றோரும் பதிவுலகில் இருக்கிறோம்.(நானும் கச்சேரிக்கு போறேன்ல நானும் பதிவு எழுதுறேன்னு சொல்றேன்.)

    ஓகே சார் நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.உங்க மொறுமொறு மிக்சர் பதிவில் சொல்லிக்கொடுத்த கமர்கட்டை நான் செய்து பார்த்ததை என் பதிவில் போட்டுள்ளேன்.செய்முறைகளை உங்க பதிவிலிருந்து காப்பி,பேஸ்ட் செய்துள்ளேன்.

    இருக்கட்டும் இனி காப்பி,பேஸ்ட்டை கட் பன்னிடுறேன்றிங்களா?

    ReplyDelete
  29. @ பாலா said...

    மற்றுமொரு க்ரைம்கதை மன்னரின் ரசிகரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி பாலா. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  30. @ RAMVI said...

    தங்களுக்கு இந்த அனுபவப் பகிர்வு பிடித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அதிகம் காக்க வைக்காமல் உடன் அடுத்த பதிவைத் தந்து விடுகிறேன். தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்...

    ReplyDelete
  31. @ K.s.s.Rajh said...

    வாஙக ராஜ். கொஞ்சம் சுய தம்பட்டம் சேர்ந்த இந்த அனுபவத்தைப் படிச்சுட்டு அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்னு சொன்ன உங்களை எனக்கு மிகமிகப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  32. @ Kolipaiyan said...

    முதல் வருகைன்னு நினைக்கிறேன். நல்வரவு. அடுத்த பதிவு வரும் வரை திட்டிக் கொண்டிருக்கும் அளவுக்கு க்ரைம்கதை மன்னரின் ரசிகனைச் சந்தித்ததில் அகமகிழ்வு எனக்கு. என் மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு.

    ReplyDelete
  33. @ thirumathi bs sridhar said...

    என்ன்ங்க இது... அனுபவம்கறதே பகிர்ந்துக்கறதுக்கும் மத்தவங்களுக்கு பயன்படறதுக்கும் தானே... உங்களுக்கு எதையும் எடுத்துப் போட உரிமை உண்டு. இதில் எனக்கு மிகமிக சந்தோஷம். (இப்படிச் சொல்லிட்டு மின்னல் வரிகள் பக்கம் வராம மட்டும் இருந்துடாதீங்க. நான் ரொம்ப எளிய ஆசாமிதான்) உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  34. ராஜேஷ்குமார் அவர்களின் சில நாவல்களைப் படித்திருக்கிறேன். மாதம் ஒரு நாவல் எழுதுவதே கடினம். அதுவும் அவர் சில சமயங்களில் மாதம் ஆறு, ஏழு நாவல்கள் எழுதினார் என்பதைப் படிக்க பிரமிப்பாக உள்ளது. நீங்கள் அவருக்கு வைத்த சோதனையில் அவர் தேறியிருப்பார் எனத்தெரியும். ஆனால் அது என்ன என்பதைப் படிக்க ஆவலுடன் உள்ளேன்.

    ReplyDelete
  35. அன்பு நண்பர் கணேஷ்,
    பள்ளிக் காலங்களில் தேடித் தேடி படித்த ஒரு
    எழுத்தாளர் தங்களுக்கு நெருக்கமானவர் என்று
    அறிந்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி..
    அருமையான அனுபவப் பகிர்வு நண்பரே..
    நடக்கட்டும் நடைவண்டிப் பயணம்..

    ReplyDelete
  36. முக்கியமான இடத்துல தொடரும் போட்டதோடல்லாமல் தொடர்ச்சி வேறு எதாவது பதிவு போட்ட பின் தொடர்கிறேன் என்கிறீர்களே...நியாயமா இது?

    ReplyDelete
  37. ஆவலான அழகான வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் சொல்லத் தொடங்கியிருக்கீங்க.அடுத்த பதிவு சீக்கிரமாப் போடுங்க !

    ReplyDelete
  38. @ வே.நடனசபாபதி said...

    ஒரு காலத்தில் அவர் மாதம் ஆறு நாவல்கள் எழுதினார். ‘எழுத்து கம்ப்யூட்டர்’ என சக எழுத்தாளர் ராஜேந்திரகுமாரே வியப்புடன் குறிப்பிட்டார் என்றால் பாருங்களேன்... பின்னர் அவர் தன் கமிட்மெண்டுகளை குறைத்துக் கொள்ள முடிவெடுத்த போது வருந்தத் தக்க ஒரு விஷயம் நடந்தது. அதை பின்னர் பதிவில் சொல்கிறேன். தங்களின் தொடர் வருகைக்கும் மதிப்பு மிக்க கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  39. @ மகேந்திரன் said...

    மகேன், நீங்கள் ரசித்துப் படித்திருக்கிறீர்கள் நாவல் ரத்னாவை என்பதில் என்க்கும் மனநிறைவு. தங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு என் இதயம் கனிந்த ந்ன்றி.

    ReplyDelete
  40. @ ஸ்ரீராம். said...

    ஸ்ரீராம் ஸார் கேட்ட பின்னால மறுப்புண்டா... அடுத்த பதிவுல தொடர்ந்துடறேன் ஸார்... சரிதானே... மிக்க நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  41. @ ஹேமா said...

    அடுத்து நீங்க கேட்டபடி காதல் ரசம் ததும்பும் கதைய கேப்ஸ்யூல் நாவல் பப்ளிஷ் பண்ணலாம்னு இருந்தேன் ஹேமா... நண்பர்கள் நீங்க எல்லாரும் சொல்றதால அதை தள்ளி வெச்சுட்டு அடுத்த பதிவாவே தொடர்ந்துடறேன். என்னை உற்சாகப்படுத்தும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  42. அண்ணன் ராஜேஷ்குமார் குடும்ப நண்பர் பலவருடப்பழக்கம். குணத்தில் குன்று . அவரைப்பற்றி நீங்க சொல்றதும் படிக்க இதமாக உள்ளது ஆமா அதென்ன கடசில ச்ஸ்பென்ஸ் கணேஷ்?

    ReplyDelete
  43. @ ஷைலஜா said...

    ஆமாக்கா... குணத்தில் அவர் குன்று என நான் அனுபவித்து உணர்ந்ததை உரத்துச் சொல்லத்தான் இதை எழுதவே ஆரம்பித்தேன். அதுசரி... கடைசில சஸ்பென்ஸ் கொடுக்காம விட்ற முடியுமா? அடுத்த பதிவுக்கும் ஆர்வமா நண்பர்கள்லாம் வரணும்ல... ஹி... ஹி...

    ReplyDelete
  44. அனுபவ பதிவு அருமை ! அடுத்த பதிவு எப்போ சார் ? நன்றி !

    ReplyDelete
  45. @ திண்டுக்கல் தனபாலன் said...

    தயாராயிட்டிருக்கு. நாளைக்கே போட்டுறலாம் நண்பா... தங்களின் உற்சாகமூட்டும் கருத்துக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  46. இவரின் கதைகள் படித்துள்ளேன். எமுதுற்கள் தொடர்கிறேன். மிக் ஆர்வமாக உள்ளது வாசிக்க. முன்பு விழுந்து விழுந்து வாசித்தேன் ;ராஜேஷ்குமாரின் கதைகளை. பைண்ட் செய்த ஞாபகமும் உண்டு. நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  47. மிக அருமையான அனுபவம் பற்றிய பகிர்வு.ராஜேஷ்குமார் பாணியில் சஸ்பென்ஸ் முடிவு!

    ReplyDelete
  48. @ kovaikkavi said...

    தங்களின் வருகைக்கும் நல்ல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  49. @ சென்னை பித்தன் said...

    அனுபவப் பகிர்வை ரசித்த தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  50. நினைவலைகள் ரொம்ப இயல்பாக எழுதிருக்கீங்க. அப்புறம் என்னாச்சுன்னு படிக்க ஆவல். பிரபல எழுத்தாளரின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete
  51. @ Shakthiprabha said...

    அவரிடம் நான் கண்ட அந்த எளிமை இன்று வரை தொடர்வதுதான் பெரிய விஷயம். தொடரும் உஙகளின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  52. @ Shakthiprabha said...

    அவரது அந்த எளிமை இன்றுவரை தொடர்வதுதான் எனக்கு மிகப் பிடித்த விஷயம். தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  53. நல்ல அனுபவப்பகிர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. அவரது தொடர்கதையைப் போலவே சுவாரஸ்யம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. ராஜேஷ்குமாரின் உழைப்பு என்னைக் கவர்ந்த அளவுக்கு அவரின் எழுத்து கவரவில்லை. ஏனோ தெரியவில்லை, ஒரு நாவல் கூட முழுமையாகப் படிக்க முடிந்ததில்லை.

    ReplyDelete
  56. @ விமலன் said...

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி ஸார்!

    ReplyDelete
  57. @ Ramani said...

    ஊக்கமளிக்கும் தங்களின் வருகை மற்றும் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  58. @ அப்பாதுரை said...

    அதனாலென்ன ஸார்... அந்த நல்ல மனிதரைப் பற்றி நானறிந்ததைச் சொல்லும் உந்துதல் எனக்கு. அவ்வளவே... தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!

    ReplyDelete
  59. என்னங்க..அவர் கதையைப் போல சஸ்பென்ஸா?
    ஹூம்..சீக்கிரம் ஆரம்பிங்க....

    ReplyDelete
  60. நன்றி பகிர்விற்கு... www.rishvan.com

    ReplyDelete
  61. @ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    நல்வரவு ஐயா. தங்களின் விருப்பப்படி உடனே தொடர்ந்து விடுகிறேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  62. @ Rishvan said...

    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  63. அனேகமாக ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ராஜேஷ் குமாரை படிக்க துவங்கி விட்டேன். அவரது மென்மையான குணம் பிடிக்கும். கோவையில் இருந்து கொண்டு தமிழகத்தை தன் கைக்குள் வைத்திருந்த அவரது ஆளுமை பிடிக்கும். தங்கம் தங்கம் தான் என நிரூபணமான அடுத்த பகுதியை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  64. @ ரசிகன் said...

    நான் இளைஞனாக இருக்கும் போதிலிருந்துதான் அவரது எழுத்துக்கு ரசிகன். அந்த நல்ல மனிதரைப் பற்றி படிக்க நீஙகள் ஆவலோடு காத்திருப்பதில் மகிழ்கிறேன். நன்றி.

    ReplyDelete
  65. அட ராஜேஷ் குமார் பற்றிய பதிவு என்பதால் முடிவில் சஸ்பென்ஸ்.... :)

    என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இரண்டாம் பகுதிக்கு விரைகிறேன்....

    ReplyDelete
  66. @ வெங்கட் நாகராஜ் said...

    கொஞ்சம் லேட்டாக வருவதில் இது சௌகரியம் இல்லையா... உடனே இரண்டாம் பகுதிக்கு விரைய முடிகிறதே... வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  67. இப்பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும் நன்றி..
    http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_11.html

    ReplyDelete
  68. @ மதுமதி said...

    என்னாது... நேரமிருந்தாலா? கிண்டலா கவிஞரே... நான்தான் தவறாமல் உஙகள் தொகுப்பை பார்வையிடுபவனாயிற்றே... அவசியம் அங்கிப்பேன்.

    ReplyDelete
  69. க்ரைம் மண்ணைப் பற்றிய கட்டுரையில் இருந்தே க்ரைம். அவருகி சோதனையா. இப்போது தான் படிக்க ஆரம்பித்தேன் என்பதற்காக லேட் கமெண்ட் என்று வருந்த்ததீர்கள். ஆரம்பமே அசத்தல்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube