Friday, June 28, 2013

விதிகள் மீறப்படுவதற்கா?

Posted by பால கணேஷ் Friday, June 28, 2013
மைதியாக, இனிமை நிரம்பிய முகத்தினனாக வாழ வேண்டும் என்று மனம் விரும்பினாலும், நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களால் ஆன இச்சமுதாயம் நம்மை அப்படி இருக்க விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் என் மனம் சினங்கொண்டு ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறது. இப்படி பொதுப்படையாகச் சொன்னால் எதுவும் புரியவில்லை அல்லவா? சற்றே உதாரணங்களுடன் விளம்பிட விழைகின்றேன் யான்.

சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம். கோயமுத்தூருக்குப் பயணச் சீட்டு பெறுவதற்காக அடுத்தடுத்து அனுமனின் வால் போல நீண்டிருக்கும் நான்கு வரிசைகளில் ஒன்றில் நின்றிருக்கிறேன் நான். எனக்கு முன்னால் எத்தனை பேர் என்று எண்ணிப் பார்த்து, ‘இருபத்தைந்து பேர் கடந்து சென்றபின்தான் நாம் பயணச் சீட்டு பெற இயலுமா?’ என்று பெருமூச்சினை வெளியேற்றிக் கொண்டிருந்த ‌வேளையில் விறுவிறுவென்று வந்த, ஆடம்பரமாக உடையணிந்த ஒருவர் வரிசையில் தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் முன்னால் நின்றிருப்பதைக் கண்டதும், அவர் பெயர் சொல்லிக் கையாட்டியபடி அவர் பின் சென்று நின்று கொண்டார். வரிசையிலுள்ளவர்கள் ஆட்சேபிக்க, ‘‘இவர் என்னுடன் இருந்தவர்தான். ‘அல்பசங்கை’க்காக போயிருந்தார்’’ என்று முன்னால் நின்றிருந்த அந்தத் தடியர் விளக்கம் கூறி கேட்டோர் வாயை அடைத்து விட்டார். அதன்பின் வந்த மற்றொரு இளைஞன், முன்னால் நின்றிருந்த ஓரிருவரிடம் சென்று தனக்கும் சேர்த்து ஒரு ஈரோட்டுக்கு ஒரு பயணச்சீட்டு எடுத்துத் தரும்படி மன்றாடிக் கொண்டிருந்தான்.

அண்ணா அறிவாலயத்திலிருந்து உடனடி வளைவு எடுத்து வாணிமகால் நோக்கிச் செல்லும் சாலையில் என் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். எதிரில் சிவப்பு விளக்கு பளிச்சட, வாகனத்தை நிறுத்துகிறேன். ஒரு நிமிடக் கரைசலில் எதிரே சென்று கொண்டிருந்த வாகனங்கள் குறைந்துவிட, ஒன்றிரண்டு வாகனங்களே தூரத்தில் வருவதைக் கண்ணுற்று என் பின்னால் நின்றிருந்த ஒன்றிரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை அலட்சியம் செய்து தங்கள் வாகனத்தை விரட்டுகின்றனர். எனக்குப் பின்னே நின்றிருக்கும் மகிழ்வுந்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் ஒலி எழுப்புகிறார். திரும்பிப் பார்த்தால் என்னை முன்னேறச் சொல்லி சைகை காட்டுகிறார். எதிரில் பார்த்தாலோ சிவப்பு விளக்கு இன்னும் பச்சையாக மாறியிருக்கவில்லை. அதன்பின் 35 விநாடிகள் காத்திருந்து பச்சை மாறிய பின்பே நகர்த்துகிறேன். என்னைக் கடந்து செல்லும் மகிழ்வுந்துக்காரர், வேகம் குறைத்து, ‘‘வேலைவெட்டி எதுவும் இல்லியாய்யா உனக்கு? அனாவசியமா என்னையும் லேட் பண்ணிட்டியே...! .... .......’’ என்று (கோடிட்ட இடங்களில் பிரசுரிக்கத் தகாத சொற்கள்) என்னை வழுத்திவிட்டு விரைகிறார்.

இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் எனக்குள் எழுந்த சினவெறிக்கு அளவேயில்லை. இப்படி முறைதவறி வரிசையைப் புறக்கணித்து பயணச்சீட்டைப் பெறுபவர் மனதில் ‘தான் புத்திசாலி’ என்றும் ‘காரியம் சாதிக்கும் திறமையாளன்’ என்றும் பெருமை இருக்க வாய்ப்புண்டு. அது நிஜமா? நான்கைந்து வரிசையை ஒழுங்குபடுத்த ஒரு காவலரே உளர் என்கிற நிலையில் அவர் எத்தனைதான் கவனித்துத் திருத்த முடியும்? அங்கே சுயஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டியது பொதுமக்களின் பொறுப்பல்லவா?  வரைமுறை மீறி, ஒருவன் விரைந்து பயணச் சீட்டு பெறுவதன் மூலம் விதிகளை மதித்து ஒழுங்காக நிற்கும் அனைவரையும் முட்டாளாக்குகிறான் என்பதல்லவா பிரத்யட்சம்! இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக் குரல் கொடுத்து, சண்டையிட்ட அனுபவம் எனக்கு உண்டெனினும் அன்றைய தினம் என் அவசரம் கருதி பொறுமையாய் இருந்ததன் மூலம் நானும் ஒரு குற்றவாளியானேன்.

விதிகளைப் புறக்கணித்து வாகனத்தை விரைவுபடுத்திச் சென்ற அந்த மகிழ்வுந்து வாணிமஹால் அருகில் சிவப்பு விளக்குக்கு கட்டுப்பட்டு நின்றிருந்தது. விதிகளை மதித்து நிதான வேகத்தில் சென்ற நானும் அந்த மகிழ்வுந்தின் பின்னாலேயே என் வாகனத்தை நிறுத்தினேன். எனில், அந்த (தேவையற்ற) விரைவு காரணமாக அவர் சாதித்ததுதான் என்ன? அவரின் விரைவினால், பதட்டத்தினால் ஏதேனும் விபத்து நிகழ்ந்திருந்தால் அதனால் வேதனையும், காலதாமதமும் தானே மிச்சம்? வேறென்ன பயன் விளைந்துவிடப் போகிறது? ஏதோ தீப்பற்றிக் கொண்ட இடத்திற்கு விரைவது போல ஏன் இப்படி அனைவரும் கன்னாபின்னாவென்று வேகத்தில் விரைகிறார்கள்? மேல்நாடுகளில் இருப்பது போன்று இங்கு வெவ்வேறு வாகனங்களுக்கு தனித்தனி பாதைகளா ஒதுக்கப்பட்டிருக்கிறது?

இந்த இரண்டு விஷயங்களும் என்னுள் எழுப்பிய கேள்வியொன்றை உங்கள் முன் வைத்திட விழைகின்றேன். யாரேனும் அருகிலிருந்து வலியுறுத்தினால், தண்டித்தால்/கண்டித்தால் மட்டுமே விதிகள் பின்பற்றப்பட வேண்டியவை. இல்லாவிட்டால் விதிகளை மீறி நடந்தாலும் குற்றம் ஒன்றுமில்லை என்கிற மனப்பாங்க‌ை எவர் விதைத்தது இந்த மனிதர்களுக்கு? ஏதோ ஓரிருவர் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தது போக, அவர்களைக் கண்டு பலரும் விதிகளைக் கடைப்பிடித்து என்ன ஆகப் போகிறது, நாம் ஏமாளியாவதுதான் மிச்சம் என்று தாங்களும் மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளதே! கல்விச் சாலைகளில் ஒழுக்கமும் நன்னடத்தையும் போதிக்கப்பட்டது எல்லாம் வீண்தானா?

கோலெடுத்தால் ஆட்டம் போடும் குரங்கினமா இந்த ம(ஆ)க்கள்? எனில், கடும் தண்டனைகளுக்கு மட்டும்தான் நம் மக்கள் கட்டுப்படுவார்களா? என்னதான் வழி இதுபோன்றவற்றைக் (தீர்வு காண்பதற்கல்ல) கண்ணுறும்போது பொங்கிக் கொந்தளித்த சினமடையும் மனதைக் கட்டுப்படுத்துவதற்கு? இதுபோன்ற பல வினாக்கள் என்னுள்ளே விடையற்றுத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. என்னரும் தோழர்களே... எவர் விண்டுரைப்பீர் இதற்கான விளக்கத்தினை...!

84 comments:

  1. எனக்குள் எழுந்த சினவெறிக்கு அளவேயில்லை? அப்படியா? வருத்தமானச் செயலுக்கு திருந்தச் சொல்லி வருந்த்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருந்திய தங்களுக்க என் மனம் நிறை நன்றி!

      Delete
  2. இது தவறுதான் என்றே நானும் சொல்கின்றேன் கணேஷ். தனிமனித ஒழுக்கம் இங்கு நம்முடைய நாட்டிலே பேணப் படுவதே இல்லை என்பது உண்மைதான். நாடு வாழ்க! ஜனநாயகம் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. ஆதங்கத்தைப் பகிர்ந்துதான் ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டியுள்ளது ஸ்ரீராம். மிக்க நன்றி!

      Delete
  3. வாகனம் ஓட்டுவதற்கும் அதன் கட்டுபாட்டை பற்றி கல்வியிலும் சொல்லிக்கொடுப்பது நல்லது என்றே தோன்றுகிறது அண்ணே...!

    இங்கே மும்பையில் டிக்கெட் எடுக்க எந்த கொம்பனா இருந்தாலும் பின்னாடி நிக்குறவங்க விடவே மாட்டாங்க...!

    ReplyDelete
    Replies
    1. ஆம்! கல்விச் சாலைகளில் அழுத்தமாக போதிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தும் மனோ! மிக்க நன்றி!

      Delete
  4. மீறுவதும் அடங்கி இருப்பதும் அவரவர் எண்ணப்படி என்றாகிவிட்டது. விதிகளை நாம் மீறாமல் இருக்கலாம்.. மற்றவர்களிடம் இதற்காக சணடை இடுவது நம் அமைதியையும் குலைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ரிஷபண்ணா... இப்படி நினைச்சுதான் ஆறுதல் படுத்திக்க வேண்டியிருக்கு. ஆனாலும் அப்பப்ப கோபம் தலைதூக்கிடுது. என்னத்தச் சொல்ல...! மிக்க நன்றி!

      Delete
  5. தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும், அதுவும் தானாக உணரவும் வேண்டும்...

    கோபத்தோடும் ஆதங்கத்தோடும் நாட்கள் நகருகிறது என்பதும் உண்மை... வேறு வழியில்லை...

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரைத்தீர் தனபாலன். மிக்க நன்றி!

      Delete
  6. தி.த அண்ணன் கூறியது போல தனிமனித ஒழுக்கம் வளரவேண்டும்... அப்போதுதான், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கு முடியும். அடுத்த முறை ரயில் டிக்கெட் எடுக்க வேண்டுமானால், லோக்கல் ஸ்டேசன் ஏதேனும் ஒன்றில் எடுத்து விடுங்கள்... எரிச்சல் ஏற்ப்படாது!!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இது நல்ல யோசனையாகப் படுகிறதே. இனி இதை பின்பற்றிப் பார்க்கிறேன் நண்பா. மிக்க நன்றி!

      Delete
  7. டிக்கெட் கவுண்ட்டரில் இதுபோல் முன்னேறிச் சென்று அடுத்தவர்களைக் கோமாளிகளாக்கும் மனிதர்களின் செயல் கண்டிக்கத்தக்கதே. அந்நேரங்களில் அவரை எதிர்த்துக் குரல் கொடுப்பதில் தப்பேயில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எண்ணிப் பல சமயங்களில் அனைவரும் மௌனம் காத்துவிடுவது உண்டு. அதையே தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு நமக்கு முன் டிக்கெட் எடுத்துச் சென்றுவிடுவர். அதேநேரம் நாம் அவரை எதிர்த்துச் சத்தம் கொடுக்கையில் நமக்குத் துணையாக மேலும் நான்கைந்து பேர் சப்போர்ட் செய்ய, தவறு செய்பவர் வேறு வழியில்லாமல் பின்னால் சென்றுவிடுவார். இதை நான் கண்கூடாக நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

    சிக்னலில் நின்று நிதானித்துப் போனதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள். உங்களைத் திட்டிவிட்டுச் சென்றவருக்கு எங்கே ஆபத்து காத்திருக்கிறதோ? அதனால் அவர் திட்டியதை மன்னித்து விடுங்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. //அதேநேரம் நாம் அவரை எதிர்த்துச் சத்தம் கொடுக்கையில் நமக்குத் துணையாக மேலும் நான்கைந்து பேர் சப்போர்ட் செய்ய, தவறு செய்பவர் வேறு வழியில்லாமல் பின்னால் சென்றுவிடுவார்.//

      ரெம்ப அரிதுதான் . பெரும்பாலும் அப்டில்லாம் யாரும் சப்போர்ட் பண்றது கிடையாது .

      Delete
    2. ஜீவன் சொல்வது நிஜம் சுபத்ரா. இதற்கு முன் நான் ஒரு முறை வாக்குவாதம் செய்தபோது எனக்கு சப்போர்ட் பண்ண யாருமில்லை. சிக்னலில் நின்று சென்றதற்காக மகிழ்ச்சி கொள்ளச் சொன்ன உங்களுக்கு மன நிறைவுடன் என் நன்றி!

      Delete
  8. /‘‘வேலைவெட்டி எதுவும் இல்லியாய்யா உனக்கு? அனாவசியமா என்னையும் லேட் பண்ணிட்டியே...! .... .......’’ என்று (கோடிட்ட இடங்களில் பிரசுரிக்கத் தகாத சொற்கள்) என்னை வழுத்திவிட்டு விரைகிறார்/

    வயது வித்யாசம் பார்க்காமல் ஏசுவது கண்டிக்கத்தக்கது. வண்டி நம்பர நோட் பண்ணி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அவன் அப்படித் திட்டுவான் என்று எதிர்பாராத பிரமிப்பில் நம்பர் குறிக்கத் தோன்றவில்லை சிவா. குறித்துத் தகராறு செய்துதான் என்ன பயன்? சில விஷயங்களை சொல்லித் திருத்துதல் எளிதல்ல. நற்கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

      Delete
  9. இதை எல்லாம் சகஜம் என்று நாம் எடுத்துக்கொண்டு தானே இத்தனை நாள் இருந்தோம் இனியும் இருப்போம்... வேற வழியில்லை இதுதான் இன்றைய சமூகம்...

    ReplyDelete
    Replies
    1. நம்மால் இயன்றவரை குரல் கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம் நண்பா. சகித்துக் கொண்டு வாழ்தல்தான் பழகி விட்டதே! மிக்க நன்றி!

      Delete
  10. மின்னல்வரிகள் பால.கணேஷ் சார்! ரொம்பவும் அறச்சீற்றத்தோடு ஒரு பதிவு போட்டு இருக்கிறீர்கள். நானும் உங்களை மாதிரி நிறைய பட்டு இருக்கிறேன். என்ன செய்வது? நம்மை வளர்த்த பெற்றோர் நம்மை நேர்மை, நியாயம், ஒழுங்கு, கட்டுப்பாடு என்று வளர்த்து விட்டார்கள். இதுபோல் சுயஒழுங்கு (SELF DICIPLINE) இல்லாத ஆசாமிகள் யாரோடும் சண்டைபோட நமக்கு நேரம் இல்லை. யாரும் நமக்கு ஆதரவாக வந்து குரலும் கொடுக்க மாட்டார்கள். தர்க்கம்தான் மிஞ்சும்.


    ReplyDelete
    Replies
    1. நான் மனதில் உணர்ந்ததை நீங்கள் எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. அம்பி! அந்நியனாய் மாறவேண்டிய காலம் வந்துவிட்டது போலும்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் ரெமோவாக்கின என்னை அம்பியாக்கிட்டீங்களா? ஹா... ஹா... அப்ப அடுத்தது நிச்சயம் அன்னியன் அவதாரம் தேங்! மிக்க நன்றி!

      Delete
  12. //சுயஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டியது பொதுமக்களின் பொறுப்பல்லவா?//

    ரொம்பச்சரி. மும்பையைப் பொறுத்தவரை பேருந்துக்குக்கூட வரிசையில் நின்று ஏறுவோம். குறுக்கே யாரும் புகுந்தா மத்தவங்க உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. அடிபிடி நடக்கும் ஒரே சந்தர்ப்பம் மின்சார ரயிலில் ஏறும்போது மட்டுந்தான் :-)

    ReplyDelete
    Replies
    1. அடடே... கேட்பதற்கே சந்தோஷமா இருக்கு. தமிழ்நாட்ல பஸ்ல அடிச்சுப் புடிச்சு மத்தவங்களை மிதிச்சுத் தள்ளிட்டு ஏர்றதைப் பார்த்து நொந்து போயிருக்கோம். ஹும்...! தகவல் சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. அம்மாதிரியான ஆசாமிகளை கண்டு சாக்கடையில் என்று ஏதோ சொல்வார்களே அப்படித்தான் நகரவேண்டியிருக்கு. அதுவே அவர்களுக்கு மேலும் கவர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது என்ன செய்வோம். அனுபவித்து தான் ஆகவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சசி... பொறுத்துத்தான் (வேறுவழியின்றி) போக வேண்டியுள்ளது பிரத்யட்ச நிலை. இது மாற வேண்டும் என்று விரும்புவோம். மிக்க நன்றி!

      Delete
  14. தனி மனித ஒழுக்கம் அனைவராலும் கடைப் பிடிக்கப்படுமாயி்ன் நாடு உறுதியாக முன்னேற்றம் அடையும். ஆனல் ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா! அனைவரும் அப்படி மாறினால் நீங்கள் ‌‌சொன்னாற்போல் நாடு உயர்ந்து விடும். அதற்கு நிறையப் படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. மிக்க நன்றி!

      Delete
  15. ஜனத்தொகை முக்கிய காரணி. சட்டம் ஒழுங்கை பாதுகாப்போரின் அலட்சியம் இரண்டாவது காரணி. விபத்து ஏற்படுத்திய பணக்காரரை தப்பவிட்டு அப்பாவியை பிடிக்கும் போலீஸ், ஒரு சின்ன வழக்கையும் 5, 10 வருஷம் இழுக்கும் வக்கீல்களும் நீதிபதிகளும்! இன்று படித்தது: விதிமுறைப்படி நம்பர் ப்ளேட் இல்லாத வாகனங்களின் ப்ளேட்டை எடுத்து புது ப்ளேட் போட்டு வெறும் 100 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள், 5000 ரூபாய் விதித்தால் என்ன? விபத்து வழக்குகளை 6 மாதத்திற்குள் தீர்க்காத நீதிபதிகளை பதவிநீக்கம் செய்தால் என்ன? செல்போன் உபயோகித்துக்கொண்டே வண்டி ஓட்டுபவர்களுக்கு 2 நாள் சிறையும் 10000 ரூபாய் அபராதமும் விதித்தால் என்ன? போதும், எனக்கும் பி.பி. ஏறுகிறது. - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. நியாயமான குமுறல்கள். எனக்கும் ஏற்புடைத்தான கருத்துக்கள்! மிக்க நன்றி ஜெ!

      Delete
    2. ஊழல் பெருச்சாலி வாழும் நம் நாட்டில் இவை எல்லாம் நடக்குமா ?

      Delete
  16. ஒருவன் விரைந்து பயணச் சீட்டு பெறுவதன் மூலம் விதிகளை மதித்து ஒழுங்காக நிற்கும் அனைவரையும் முட்டாளாக்குகிறான் என்பதல்லவா பிரத்யட்சம்! இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக் குரல் கொடுத்து, சண்டையிட்ட அனுபவம் எனக்கு உண்டெனினும் அன்றைய தினம் என் அவசரம் கருதி பொறுமையாய் இருந்ததன் மூலம் நானும் ஒரு குற்றவாளியானேன்.

    ஆளத் துயர் கொண்டு அழகாய் வடித்த செய்தி கண்டு
    பாழாய் போகும் இப்படிச் சில மனிதர்களை ஏன்தான்
    இறைவன் படைத்தான் என்று நானும் எரிச்சலடைகின்றேன் ஐயா !
    பகிர்வுக்கு மிகக் நன்றி .

    ReplyDelete
    Replies
    1. கவிதை நடையில் என் கருத்துக்களுடன் ஒத்திசைந்து கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்?நற நறவென பற்களை கடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

    கோலெடுக்காமலே ஆட்டம் போடு குரங்குகள் இவர்கள்.அதுஎல்லாம் சரிதான்.உங்களுக்கு என்ன ஆச்சு?சரிதா peesiya செந்தமிழின் பாதிப்பா?

    ReplyDelete
    Replies
    1. அது பழைய கதைம்மா. அதன் பாதிப்பில்ல... பொதுவா நகைச்சுவை அதிகமா நான் எழுதறதால, சீரியஸ் பதிவுகள் மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளை மட்டும் நல்ல தமிழில் எழுதினால் வித்தியாசம் தெரியுமேன்னு நினைச்சேன். அதான் இப்படி! மிக்க நன்றி!

      Delete
  18. என்னுள்ளும் பல நேரங்களில் எழும் கோபங்கள், நம் மக்கள் என்றும் எதிலும் அவசரமாயும், பிறர் எக்கேடு கேட்டுப் போனால் என்ன என்ற மனநிலையிலும் தான் உள்ளனர், என்ன செய்வது இந்தியராய் வாழ்வதில் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்தியராய் என்பதை தமிழராய் என்று மாற்றிக் கொண்டு உன் வரிகளுடன் உடன்படுகிறேன் சீனு. மிக்க நன்றி!

      Delete
  19. மிகவும் நியாயமான கோபங்கள்! அவர்கள் தவறு செய்வது மட்டுமின்றி நம்மையும் திட்டிச்செல்வது கண்டிக்கத்தக்க ஒன்று! இவர்களெல்லாம் அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தானாய்த் திருந்த வாய்ப்பு் கம்மி, அடித்துத் திருத்த வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது சுரேஷ். மிக்க நன்றி!

      Delete
  20. அண்ணேன் ...! மொத பத்தி படிச்சோன்ன கொஞ்சம் குழம்பிப்போயிட்டேன் . ஆத்தாடி நீங்களும் விளக்கவுரை தனியா தேவைப்படுற மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டீங்களேன்னு ...!

    சமயத்துல இப்புடி ரெம்பப் பேரு நரம்புல ஏறுறாங்கன்னேன் ...! இதுவாது பரவால்ல நாம ஏதாவது எதிர்த்து கேட்டோம்னா , பக்கத்துல இருக்க ஒரு பயபுள்ளையும் ஏன்னு கூட கேக்காது . ஏதோ நாம நம்ம வூட்டு வாய்க்கதகராறு பிரச்சனைய வேடிக்கபாக்குற மாதிரிதான் பாப்பாய்ங்க . ஒருசில ராயல் மொன்னைகள் அப்டியே நக்கலா ஒரு பார்வை வேற பாப்பாய்ங்க பாருங்க ( வெரி சில்லி பீப்புள்ஸ் னு முனுமுனுப்பு வேற ). இப்டி நக்கலா வேடிக்கை பாக்குரவங்கள அப்டியே சிங்கம் சூர்யா மாதிரி ஒன்றர டன் வெயிட்டுல ஓங்கி ஒரு போடு போடலாம்னு தோணும் .ஆனா நாம இருக்குற இருப்புக்கு பருப்பு எடுத்துடுவாய்ங்கன்னு பயந்து ஓடியாந்துடுவேன் .

    அப்டியே எதுனா நியாம் பேசுனா, ஏதோ ஒரு படத்துல மாதவன மனநல நோயாளி மாதிரி பாப்பய்ங்களே அப்டிதான் பாக்குறாங்க ...!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான்ப்பு! அப்படித்தான் பாக்குறாய்ங்க... என்னத்தச் சொல்ல! மிக்க நன்றி!

      Delete
  21. தண்டனைகள் அதிகமானால்
    குற்றங்கள் குறையும்!

    குற்றம் செய்தவனை தண்டிக்க சட்டம் தான் வரவேண்டும் என்று
    காத்திருப்பதில் பயன் இல்லை.
    ஒரு கன்னத்தில் அறைந்தால் உடனே அவனின்
    இரு கன்னத்திலும் பல அறைகள் கொடுத்துவிட வேண்டும்.
    பிறகு நடப்பது நடக்கட்டும்.

    நியாயமான கண்டிப்பும் நேர்மையானது தான்.
    பகிர்விற்கு நன்றி பாலகணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு உங்களின் கோபம் மிகப் பிடிச்சிருக்கு அருணா. முண்டாசுக்காரன் இதுக்குத்தான் ரெளத்திரம் பழகுன்னாரு. மிக்க நன்றி!

      Delete

  22. வரிசையில் முறைமீறி முன்னேறும் பலருடன் சண்டை போட்டிருக்கிறேன். இம்மாதிரி நேரங்களில் யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதுபோல்தான் இருக்கும். நாம் துவங்கி வைத்தால் பலரும் சேருவார்கள். அதற்கு மனோதிடம் வேண்டும். சிவப்பு விளக்கை மீறுபவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எப்படியாவது தண்டனை கிடைக்கும். இல்லாவிட்டால் எல்லோரும் THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED என்று இருந்துவிட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கு ஜி.எம்.பி. ஸார். வாட் டு டூ? மிக்க நன்றி!

      Delete
  23. எனக்கும் மற்றவர்களின் இந்த செயல்கள் கோபத்தை ஏற்படுத்தும் வரிசையில் எனக்கு முன்பாக யாராவது வந்து புகுந்தால், அவரை, எனக்குப் பின்னால் நிற்கச் சொல்லுவேன். அடுத்து உள்ளவர் அனுமதித்தால் நிற்கட்டும். இல்லை அவரும் உடன்படவில்லை என்றால் அதற்கும் அடுத்தவரிடம் உரிமை கோரட்டும். பொதுவாக எனக்குப் பின்னால் நிற்கச் சொன்னால், அவர் கியூவின் கடைசிக்குச் சென்றுவிடுவார். வாகனங்கள் ஓட்டியதில்லை. எனக்காக வாகனம் ஓட்டுகின்ற ஓட்டுனரிடம், 'சாலை விதிகளை மீறக் கூடாது' என்று கண்டிப்பாக சொல்லிவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கருத்தை வழங்கிய கே.ஜி. ஸாருக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  24. ஏனிப்படி சட்டம் ஒழுங்கு எதையும் கடைபிடிக்காமல் நடக்கின்றார்கள் என்று மட்டுமே கவலைகொள்ளமுடிகிறது.

    வருத்தம்தான்...:(

    த ம.11

    ReplyDelete
    Replies
    1. கவலையையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete


  25. என்னதான் நாற்சந்திகளில் சிக்னல் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தம் வண்டிகளை
    ஓட்டிச் செல்வது கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலுமே இந்தியாவில் காணப்படுகின்றது என்றாலும்,
    சென்னை, ஹைதராபாத் நகரங்களில் , சாலை விதிகளை புறக்கணித்து செயல்படுதல் ஒரு
    விதிவிலக்கு ஆக இல்லை, அன்றாட வழக்காகவே இருக்கிறது.

    ஆர்காட் ரோடு, வளசரவாக்கம், லாமெக் ஸ்கூல் பகுதியில் இருக்கும் சிக்னல் இருந்தும் ஒன்று தான்
    இல்லாமல் இருக்கும்பொழுது என்ன குழப்பம் இருக்கிறதோ அது இன்னமும் தொடர்கிறது.

    இது பற்றி மூன்று முறை நான் ஹிந்துவில் எழுதினேன். ஒரு முறை என் கடிதம் வெளியிடப்பட்டது. அண்மையில் இருக்கும் லாமெக்
    பள்ளி மாலையில் முடியுறும் காலத்திலாவது கண்காணிப்பு கண்டிப்பாக தேவை. பள்ளிக்குழந்தைகள் அந்த சாலையில் ஓடுகிறார்கள், வாகனங்களின் வேகத்திலிருந்து தப்ப.
    அந்த கடிதம் வெளியிடப்பட்ட ஒரு சில நாட்களில் ஒரு போலீஸ் அலுவலர் அங்கு போடப்பட்டிருப்பினும் பயன்
    எதுவும் இல்லை. அவர் அவர் தொழிலை ( ! ) செய்கிறார். யார் யாரைக் கேட்பது ?

    திண்டுக்கல் தனபாலன் கூறியது போல், தனி நபர் ஒழுக்கம் திருந்தவேண்டும். ஒரு சராசரி இந்தியன்
    பொது வாழ்வில் விதிகளை மதித்து நடப்பதில்லை.

    இங்கு பார்க்கிறேன். சிக்னல்களில் சிவப்பு எரிகையில் அடுத்த தரப்பிலிருந்து வண்டிகள் வராவிடினும்
    பச்சை எரிந்தபின்பு தான் தமது வண்டியை எடுக்கிறார்கள்.

    நமது நாட்டில் 130 கோடி மக்களுக்கு 130 கோடி போலீஸ் காரர்கள் தேவை. இதைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.
    இருந்தாலும் இது தான் நடப்பு உண்மை.

    சுப்பு தாத்தா.
    நியூ ஜெர்சி.

    ReplyDelete
    Replies
    1. அங்கு நீங்கள் பார்த்த அதே சின்ஸியாரிட்டி இங்கும் வர வேண்டுமென நான் விரும்புகிறேன். ஆனாலும் நீங்கள் சொன்ன நடப்பு உண்மையும் சுடுகிறதே சுப்புத்தாத்தா! என் செய்வது?
      மிக்க நன்றி!

      Delete
    2. இங்கு(அமெரிக்கா) பவர்கட்டு(புயலால்) வந்தாலும் நாலுமுனைச்சாலைகளில் யார் எந்த திசையில் முதலில் வருகிறார்களோ அவர்கள்தான் முதலில் செல்லுவார்கள் இதை யாரும் மீறுவதில்லை

      Delete
  26. வருத்தம் அளிக்கும் நிகழ்வுகள். விதிமுறைகளை மீறுவது பெரிய குற்றமா என்கிற மனோபாவமே பலருக்கும் இருக்கிறது:(!

    ReplyDelete
    Replies
    1. இந்த மனோபாவம் சற்றேனும் மாற வேண்டும் என்பதே என் ஆசை. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  27. ‘ஆடை இல்லா ஊரில் ஆடை கட்டியவன் பைத்தியக்காரன்.’என்பார்கள். என் செய்ய! நம்மவர்களில் பெரும்பான்மையோர் விதியை மீறுவது என்பதை விதியாகவே கொண்டிருக்கிறார்கள். இதை திருத்த ஒரே வழி. இளமையிலேயே பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டியதுதான். அதுவரை நாமாவது விதியை மதித்து நடப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நலலதொரு கருத்துரையை வழங்கிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  28. பைத்திகார உலகம் அண்ணே இவனுங்களும் சரியாய் நடக்க மாட்டனுங்க சரியாய் நடக்குறவங்களையும் நடக்க விட மாட்டானுங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பிரதர். அதான் வருத்தமே! மிக்க நன்றி!

      Delete
  29. அமெரிக்காவிலிருந்து வந்த புதிதில் இது போன்று பலரையும் கடிந்து கொண்ட சம்பவம் உண்டு. அது மட்டுமா.. நான் மட்டும் சாலை விதியை பாலோ பண்ணப் போய் கையை உடைத்துக் கொண்ட சம்பவமும் அரங்கேறியது.

    இப்போல்லாம் சிக்னலில் நாலு என்ற எண் வரும்போதே வண்டியை முறுக்கி விடுகிறேன். இதுவும் நம் தமிழ் கலாச்சாரத்தில் ஒன்றாகிவிட்ட பின்பு அதை ஏற்றுக் கொள்ள தயங்குவதில் பயனில்லை..(இது என் தனிப்பட்ட கருத்து)

    ReplyDelete
    Replies
    1. ரோமில் இருக்கும் போது நீயும் ரோமனாக இரு என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல நாமும் மாறிடணும்ங்கறீங்க ஆவி... ரைட்டு. ஆனா சில விஷயங்கள்ல நான் மாற விரும்பலை. இப்படியே இருந்துட்டுப் போறேன் என்ன பட்டம் கிடைச்சாலும்.. மிக்க நன்றி!

      Delete
  30. //அங்கே சுயஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டியது பொதுமக்களின் பொறுப்பல்லவா? //

    நல்லா ஜோக் அடிக்கிறீங்க ...

    இன்று ஒரு நிகழ்வு: சிகப்பு விளக்கு எரிந்து கொண்டு இருக்கும்போதே வண்டிகள் போகலாம் என்று கைகாட்டினார் போலீஸ்காரர். அவர் பக்கத்தில் நிறுத்தி சிகப்பு விளக்கு இருக்கும்போதே போகச் சொல்கிறீர்களே என்றேன். முதலில் கூட்டம் நிறைய என்று என்னவோ சொன்னார். எனக்குத் தெரிந்தது சிகப்பு என்றால் போகக்கூடாது என்றேன். நீங்கள் தவறாகச் செய்யலாமா என்றேன். ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார். நல்ல இளைஞர். என்ன நினைத்தாரோ ... சாரி .. சார். என் தப்பு தான் அது. இனி மாத்திக்கிறேன் என்றார்.
    இது எனக்கு ஆச்சரியமளித்தது,

    ReplyDelete
    Replies
    1. இங்க தி.நகர் பஸ் ஸ்டாண்ட் முன்னாலயும் இப்படி சிவப்பு இருக்கும் போதே போலீஸ்காரர் தலையிட்டு இது மாதிரி மாத்தி விடுறாங்க. ஆனா அங்க விபத்து நேராம கண்காணிக்க அவங்க இருக்காங்க. போலீஸில்லா சிக்னல்கள்ல பொதுமக்கள் நடந்துக்கற முறைதான் என்னை கோவப்பட வைக்குது தோழரே. மிக்க நன்றி!

      Delete
  31. இரண்டு விடயம் சிக்கல் அண்ணாச்சி ஒன்று பொதுவிதி என்ன என்று இந்தியாவில் இன்னும் விழிப்புணர்வு போதியளவு இல்லை இது இலங்கைக்கும் பொறுந்தும் அது எதக்கு நமக்கு!ம்ம்,!ஹீம்ம்
    //இரண்டாவது நம்மினம் மட்டும் எங்கும் பொறுமையாக கியூ வரிசையில் இருப்பதே இல்லை அதே மலையாளி .ஹிந்திக்காரன் காத்து இருந்து டிக்கட் வாங்கியதை என் அனுபவத்தில் சென்னையில் பார்த்த்தாள் உங்களிடம் சிணக்கின்றேன்!ஹீ சாலை விதி எல்லாம் வெறும் சாட்டு!ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நற்கருத்தைப் பகிர்ந்த நேசனுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  32. சுய ஒழுக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது மிக அரிதான ஒன்றாகிவிட்டது, நம்மிடையே. எப்போது இது போன்ற செயல்கள் மற்றவர்களால், 'சாமர்த்தியம்' என்று பாராட்டப்படுகிறதோ, அப்போதே நம்மிடையே fundamentally something wrong !

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்1 நான் சொல்வதும் இதேதான்! ‘சாமர்த்தியமா டிககெட் வாங்கிட்டேன்’ ‘சாமர்த்தியமா சீட் புடிச்சுட்டேன்’ என்று விதிமீறலை சாமர்த்தியமாகக் கருதும் விபரீத மனப்பாங்குதான் எனக்கும் கோபத்தை வரவழைக்கிறது. மிக்க நன்றி பந்து!

      Delete
  33. எனக்கும் பல முறை இது போன்ற கோபங்கள் வந்தது உண்டு.

    சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரை சென்றபோது அந்த மணல் பறப்பில் இருந்த காபி கப்புகள், மக்கள் தின்று போட்ட பிளாஸ்டிக் கவர்கள், இவைகளை பார்க்கும் போது கடுங்கோபம் வந்தது. இதே போல் காரில் இருந்து குப்பைகளை ரோட்டில் வீசுபோர், ஓடும் பேருந்தில் இருந்து குப்பைகளை ரோட்டில் வீசுபோர் கண்டால் கடும் கோபம் வரும்.

    என்னால் முடிந்தவரை இந்த தவறுகளை என் நண்பர்களும் உறவினர்களும் செய்யாமல் பார்த்துக்கொள்கிறேன்.

    இந்த கருத்தை படிப்பவர்களும் இதை பின் பற்றுவீர் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இதேதான் ரூபக்...! நாமளும் நம்மைச் சுத்தியிருந்தவங்களும் தப்பு பண்ணாம பாத்துக்கிட்டோம்னா, மெல்ல மெல்ல ஊரே மாறிடும். மனிதத் தொடர்களால் ஆனதுதானே சமூகம். நல்ல விஷயம் பகிர்ந்த உனக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  34. அறவுணர்வும் மனச்சாட்சியை மதிக்கும் மாண்பும்
    இருப்பவர்கள் மட்டுமே நல்ல சமூக மனிதனாக
    இருக்கமுடியும்.சட்டத்திற்கு மட்டுமே பயப்படுபவன்
    காலப் போக்கில் அதை மீறவே அதிகம் விருப்பம் கொள்வான்
    தங்கள் அறச் சீற்றம் உள்ளம் கவர்ந்தது
    காரணம் நானும் குணத்தில் தங்கள் இனமே

    ReplyDelete
    Replies
    1. என்னைப் போல் ஒருவரைக் கண்டதில் மிகமிக மகிழ்வு கொண்டு உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      Delete
  35. கணேஷ் - இங்கே எல்லாவற்றிற்கும் சுதந்திரம்..... தெருவோரங்களில் ஒன் பாத்ரூம் போவது முதல் எல்லாவற்ற்றிகும். “திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்” என்பது போல இவர்களாக திருந்தினால் தான் உண்டு. இவர்களைக் கண்டு சினம் கொண்டால் நாள் முழுதும் சினம் கொண்டபடியே தான் இருக்கவேண்டும் - அப்புறம் நம்மை சிடுமூஞ்சி என அனைவரும் சொல்லி விடக்கூடும்.....

    அனைவரும் தன்னைப்பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள் - நாட்டுக்கு எது நல்லது என யோசிப்பதில்லை. சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் இங்கே. பயமுறுத்தும் சட்டங்களோ, அதை நடைமுறையில் பயன்படுத்தும் நல்ல அலுவலர்களோ இங்கே இல்லை என்பதும் இவர்களுக்கு சுலபமாக தவறுகள் செய்ய வழி செய்கிறது.....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் வெங்கட். ஆனால் நான் ஒருநாளும் சிடுமூஞ்சியாக மாறிவிட மாட்டேன். மிக்க நன்றி!

      Delete
  36. விதிமுறைகளை தாண்டி மனிதன் தன மன சாட்சிக்கு கட்டுப் பட்டு நடக்க நினைத்தால் அன்றி இதில் எதுவும் மாறிட போவதில்லை... விதி முறை மீறல்களை எல்லாம் நாமே செய்துவிட்டு பின் பலன் வந்து நிற்கையில் யாரை நொந்து என்ன பயன்... நம்மால் முடிந்தது நம் வீட்டிலும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் முடிந்த வரை தனி மனித ஒழுக்கத்துடன் வாழ வைக்க முயற்சிப்பதே..செய்யும் தவறுகளை எல்லாம் செய்துவிட்டு பின்பு அரசாங்கத்தையும் இன்ன பிறரையும் குற்றம் சொல்லும் மனப்பாங்கும் மாற வேண்டும்... இதெல்லாம் போதிக்க வேண்டிய கல்வி கூடங்கள் வெறும் மதிப்பெண் பெரும் இயந்திரங்களை மட்டுமே உருவாக்கி கொண்டிருகின்றன... என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. நம்மால் இயன்றது நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் முடிந்த வரை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ வைக்க முயல்வதே. இதே எண்ணம்தான் எனக்கும் ப்ரியா. மிக்க நன்றி!

      Delete

  37. kg gauthaman சொல்வதுபோல் நமக்கு முன்னே நிற்பவரை நமக்குப் பின்னே நிற்கச் சொல்லலாம். ஆனால்...... நமக்கும் முன்னே .... அதற்கும் முன்னே.... முன்னேஏஏஏ... நிற்கப் போனால்....?

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நொந்து கொள்ள வேண்டிய விஷயம்தான் ஜி.எம்.பி.ஸார். மறுமுறையும் விசிட் செய்து கருத்துப் பதிந்து உற்சாகம் தந்த உங்களுக்கு நெகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  38. கோலெடுத்தால் ஆட்டம் போடும் குரங்கினமா இந்த ம(ஆ)க்கள்....!

    தடி எடுத்தவன் தண்டல்காரனாகிப் போகிறான் ..!

    ReplyDelete
  39. தனி மனித ஒழுக்கம் என்பது அவரவருக்கு வர வேண்டும் அண்ணா...

    ReplyDelete
  40. அண்ணே சென்னையில்தானே இத்தனை நாளா இருக்கீங்க?
    அப்புறம் என்ன புதுசா இப்படியெல்லாம் எழுதுறீங்க?

    ஒரு நாளுக்கு ஆயிரம் பஸ்ஸு சென்னையிலிருந்து மதுரைக்கு போகுது. எல்லா பஸ்ஸும் கரெக்டா மதுரைக்கு போய் சேர்ந்துடிச்சு.

    இப்படி சொன்னா உங்களுக்கு எப்படி கோவ கோவமா வருமோ அப்படித்தான் இந்த பதிவ படிச்சா வருது.
    கேள்விபட்டதில்லையா, "எம் மவன் சாமர்த்தியம் யாருக்கு வரும். அவன் வரிசையிலேயே நிக்க மாட்டான். எப்படியாவது வரிசையில் புகுந்து ரேஷன்/டிக்கெட்/பால் வாங்கிட்டு வந்துவிடுவான்" என்று கூறுவதை! இப்படி அட்டூழியத்துக்கு ஆரம்பத்திலிருந்தே "தப்பில்லை" எனும் மனப்பிராந்தியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
    தவறு நடந்தால் முடிந்தால் கையால் தடு இல்லையென்றால் வாயால் தடு அதுவும் முடியவில்லையென்றால் குறைந்தது (at least) இது தவறு என்று மனதில் எண்ணிக்கொள். நீங்கள் மனதில் மட்டும் நினைக்காமல் பதிவிலும் போட்டதற்கு நன்றிங்கண்ணா!

    ReplyDelete
  41. விதிகள் மீறத்தான் படுகின்றன. அப்பாவிற்காகப் படிக்கிறோம்; போலீசுகாக ஹெல்மெட் அணிகிறோம்; இப்படி இருக்கையில் விதிகளை யாருக்காகக் கடைப் பிடிக்கப் போகிறோம்?
    விதிகள் இருப்பதே அவற்றை மீறத்தான் என்று பலர் நினைக்கிறார்கள்.
    வருத்தமான விஷயம், கணேஷ். ஆனால் கோபப்பட்டு பலனில்லை.

    ReplyDelete
  42. சாலை விதிகளைப் போல எல்லா இடங்களுக்கும் விதிகள் உண்டு, ஆனால் நம் குணம் - ஜனநாயகம் கொடுத்த பரிசு- அதை கேட்க மாட்டோம். சமீபத்திய செய்தியில் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாணவர்களை காலர் இல்லா t -shirt போடவேண்டாம், மாணவிகள் 'தகுந்த' உடை அணியவேண்டும், எல்லோரும் IT கம்பனி ஊழியர்கள் போல ID badge அனியவெண்டுஅம் என்று விரும்பியது. ஆனால் அதற்கு, என்னவோ தங்கள் சுதந்திரம் பறிபோய் விட்டதாய் எல்லோரும் எதிர்ப்பு. பள்ளிக்கூடம் போல் uniform போடச் சொல்லவில்லை, வெளி ஆட்களை கண்டுகொள்ள மாணவர்களக்கு badge - இதில் என்ன தவறு? இன்னும் சில வருஷங்களில் வேலைக்குப் போனால் ஆபீஸ் விதிகளை இவர்களால் ஆட்சேபிக்க முடியுமா? ராணுவத்திலோ, போலிசிலோ, ஒரு dress code இல்லையா, அதை ஒழுங்கு என்றுதானே பார்க்கவேண்டும்? தன்னலம் கருதாத சேவை குழுக்கள் கூட தங்கள் அடையாளத்திற்கு ஒரு குறிப்பிட்ட வண்ண scarf ஆவது அணிவதில்லையா? இந்த மாணவர்களில் சிலர் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்களை அரசும் ஒன்றும் செய்வதில்லை. எங்கும் எதற்கும் எதிர்ப்பு. நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும். - ஜெ.

    ReplyDelete
  43. நம் நாட்டில் இருந்தபோது விதிமீறல்கள் என்பவை வாழ்வின் ஒரு அங்கமாகவும் வாழ்வதற்கான பெருமிதமாகவும் நினைப்பவர்களைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். விதிகளை மதித்து நேர்வழியில் செல்லும் நம் போன்றவர்களை அப்பாவிகள் எனவும் பிழைக்கத்தெரியாதவர்கள் எனவும் கேலிபேசுவார்கள். அவர்களது குறுக்குவழிக்கு நாம் தடையாய் இருப்பதாய் எண்ணி வசைபாடுவார்கள். தங்கள் ஆதங்கத்தை உணரமுடிகிறது கணேஷ். பிற பதிவுகளிலிருந்து அழுத்தமான பதிவாய் வித்தியாசப்படுத்தி எழுதப்பட்ட எழுத்து நடை என்னை மிகவும் ஈர்த்தது.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube