Thursday, April 25, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 5

Posted by பால கணேஷ் Thursday, April 25, 2013
சென்னையில் தினம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கம் இருப்பதால், இரவு தாமதமாகப் படுத்தபோதிலும், நல்ல அசதி இருந்தபோதிலும் காலை 6 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. மற்ற ரூம்மேட்கள் எழாத வண்ணம் கதவு திறந்து சோம்பல் முறித்தவாறு ஸிட்டவுட்டில் வந்து பார்த்தால்... ஸர்ப்ரைஸ் விசிட்டாக நேற்றெல்லாம் காணாமல் போயிருந்த மிஸ்டர் சூரியபகவான் தரிசனம் தந்தார்! உற்சாகமாய் அறையினுள் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியே வர, பக்கத்து அறை நண்பர்கள் இருவர் எழுந்து வெளியில் நின்றபடி சூரிய வெப்பத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். மூவருமாக காபி அருந்தும் உத்தேசத்தில் காலை வாக் கிளம்பினோம். டீக்கடை நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி இருந்தது.

நேற்று சூரியன் இல்லாததாலும், இரவு மழையினாலும் சரியாகக் கவனிக்காத பாதையை இப்போது நன்றாகப் பார்க்க முடிய... பகீரென்றது!. குறுகிய வளைவுகள், இரண்டு ஹேர்பின் திருப்பங்கள், அருகிலேயே சரிவான பள்ளத்தாக்கு! வேன் டிரைவர் கொஞ்ச்சம் அசந்திருந்தாலும் வேன் உருண்டு.... நினைக்கவே மலைப்பாக இருந்தது. ஓட்டுனர் ‘சக்தி’யை வாழ்த்தியபடி காபி குடித்துத் திரும்பினோம். மற்றவர்கள் நிதானமாக எழுந்து தயாரானது, நாங்கள் டிபன் சாப்பிட்டது போன்ற ரிபீட் விஷயங்களைத் தவிர்ததால்... காலை எங்கள் வேன் கிளம்பியபோது மணி ஒன்பதரை.

‘கோக்கர்ஸ் வாக்’கில் எங்களின் வாக்!œ
தசாரதி தலைவரிடம், ‘‘கோக்கர்ஸ் வாக் முதல்ல போயிரலாம்’’ என்றார். ‘‘‌கோக்கர்ஸ் வாக்ன்னா கையில ‘கோக்’ வெச்சுட்டு வாக் பண்ணனுமா தலைவா? போற வழியில வாங்கிட்டுப் போயிரலாமா?’’ என்று ‘கடி’த்தேன். முறைத்தார் தலைவர்! ‘‘ஏங்க இப்புடி? 1872ம் வருஷத்துல கோக்கர்ங்கற ஆளு உருவாக்கினது இந்த நடைபாதை. இ‌தோட நீளம் சுமார் ஒரு கிலோமீட்டர். நேத்து மாதிரி மேகமூட்டமா இல்லாம இன்னிக்கு சூரிய வெளிச்சம் இருக்கறதால அங்கருந்து பெரியகுளம், மதுரை மாதிரி ஊருங்களை பறவைப் பார்வைல நம்மால பாக்க முடியும்’’ அப்படின்னாரு.  கொடைக்கானல் பஸ் ஸ்டாணட்லருந்து அரை கிலோமீட்டர் தூரத்துலயே ‘கோக்கர்ஸ் வாக்’ இருக்கறதால நாங்க பேசிட்டிருக்கற நிமிஷங்கள்ல வேன் அதை அடைந்து விட்டது.

கோ.வா. புல்வெளியில் சற்றே ஓய்வு!
நாங்கள் அனைவரும் வேனிலிருந்து இறங்கியதும், ஓட்டுனர் வேனைச் செலுத்திக் கொண்டு போயே போய்விட்டார். ‘‘என்ன தலைவா?’’ என்று கேட்க, ‘‘இந்த நடைபாதையோட எண்ட்ல செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் வரும். அங்க வேனை நிறுத்திட்டு வெயிட் பண்ணுவார். வாங்க, நாம நடககலாம்’’ என்றார். சிமெண்ட் தளம் போடப்பட்டு, ஓரங்களில் புல்வெளி வளர்க்கப்பட்டிருந்த கோக்கர்ஸ் வாக் ரம்மியமாக இருந்தது. நிறையக் கடைகள் வழி நிறைய. கண்ணில் பட்ட இயற்கை அழகையும், அவற்றி்ன் பின்னணியில் எங்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். தலைவர் ‌சொன்னது மிகச் சரி! மேலேயிருந்தபடி கீழே தூஊஊஊரத்தில் தெரியும் நகரங்களைப் பார்க்கையில் பிரமிப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

தடுப்புக் கம்பிகளைத் தாண்டிப் பார்ததால்.. தன்னிகரற்ற இயற்கை எழில்!

நடைபாதையிலிருந்து வெளிவந்ததும் தலைவர் சொன்னது போலவே வேன் தயாராக இருந்தது. ‘‘அடுத்து எங்க போறோம் தலைவரே?’’ என்று கேட்க, ‘‘பேரிஜம் ஏரின்னு 24 ஹெக்டேர் பரப்பளவுள்ள பெரிய ஏரி ஒண்ணு இருக்கு. அதை உள்ள போய் பாக்கறதுக்கு கவர்மென்ட் பர்மிஷன் வாங்கணும். பேசி வெச்சிருக்கேன். அதனால அங்கயே போலாம்’’ என்றார். வேனில் ஏறியதும் வழக்கம் போல எங்களின் பாட்டும் கூத்தும் நடந்து கொண்டிருக்க... வழியில் ‘குணா குகை’ அருகில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் வண்டி தேங்கி நின்றது. ‘‘குணா குகைக்குள்ள போய்ப் பாத்துட்டு வரலாமா?’’ என்று குழுவின் இளையவன் கேட்க, ‘‘குகையில கமல் மாதிரி நின்னுக்கிட்டு கத்தலாம்னு நினைச்சா ஏமாந்துடுவடா. அந்த இடத்துக்குல்லாம் போக அலவ்ட் இல்ல. தள்ளியே நின்னு பாத்துட்டு வரலாம். அதுக்குத்தான டிக்கெட்’’ என்றார் உதவி ஆசிரிய நண்பர்.

குகையப் பாக்காம போயிட்டாங்களே அபிராமி!
‘‘சினிமாப் புகழ்‌ பெற்ற ஸ்தலம்ங்கறதால டிக்கெட் போடறாங்களா இங்க?’’ என்றேன் நான். ‘‘ஆமா.... இதென்ன பெரிய காசி, ராமேஸ்வரமா ஸ்தலம்னு சொல்ல? உமக்குன்னு வார்த்தை கிடைக்குது பாரு...!‘‘ என்று கிண்டலித்த உ.ஆ. தொடர்ந்து, ‘‘இந்த இடத்துக்கு ஆக்சுவலா பழைய பேரு ‘டெவில்ஸ் கிச்சன்’ங்கறதுதான். பிசாசின் சமையலறையா இருந்த இந்த இடம், கமல்ஹாசனால இப்ப குணா குகைன்னு பேர் வாங்கிருச்சு...’’ என்று மற்றொரு தகவலை அவிழ்த்தார். ‘‘தூரத்துல நின்னு இடத்தை வெறுமனே தரிசனம் பண்றதுல என்ன த்ரில் இருக்கு. நான் வரலை’’ என்று நானும் மற்றும் மூவரும பின்வாங்க, தலைவரும் எங்கள் அணியில் சேர, மெஜாரிட்டியின் காரணத்தால் குணா குகையைப் புறக்கணித்து மேலே பயணத்தைத் தொடர்ந்தோம்.

‘‘என் பக்தன் குணாவோட குகையப் பாக்காம வந்துட்டீங்களேடா பாவிங்களா...’’ அப்படீன்னு அபிராமி எங்க மேல கோவிச்சுக்கிட்டிருப்பாங்க போலருக்கு.... பேரிஜம் ஏரியின் நுழைவு வாயில்ல வேன் போய் நின்னதும், தலைவரும், பயணப் பொறுப்பாளரும் போய் கேட் கிட்ட பேசறாங்க. செல்லுல போன் பண்றாங்க. மறுபடி பேசறாங்க... என்னவோ நடந்துச்சு. பின்ன பேசாம திரும்பி வந்துட்டாங்க. தலைவர் முன் அனுமதி வாங்கியிருந்தும் ஏதோ குழப்பம் காரணமாக ‘பர்மிஷன் கிடைககல’ என்பதுதான் நெட் ரிசல்ட். அடுத்து எங்க போகலாம்னு அவங்கல்லாம் கூடி யோசிச்சுட்டிருக்க, நாங்க அங்க வித்துட்டிருந்த சூடான வேர்க்கடலைகளை வாங்கிச் சுவைத்தோம். பெரிய பாக்கெட்டாக இருந்ததால், ‘‘மிஸ்டர் சுடலை! இந்தாங்க, கடலை’’ என்று நண்பரின் கையில் பாதியைக் கொட்டினேன். ‘‘சுடலையாவது...! செமத்தியா சுடுதுங்க’’ என்று அலறினார் நண்பர் சுடலை.

பாறை லேசாச் சுட்டாலும், அதுவும் நல்லாத்தேன் இருந்துச்சுங்க!

இதற்குள் ‘‘எல்லாரும் வேன்ல ஏறுங்க. கிளம்பலாம்...’’ என்றார் ப.பொறுப்பாளர். ‘‘எங்க சார்?’’ என்று கேட்டோம். அருகில் இருந்த வழிகாட்டிப் பலகையைக் காட்டினார். ‘‘பூம்பாறை 23 கி.மீ.’’ என்றது அந்த போர்டு. வேனில் ஏறியதும், ‘‘பூம்பாறைங்கற இடத்துல என்ன விசேஷம்? அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா?’’ என்று நான் கேட்க, அனைவரும் ஒருவரையொருவர் கேட்க, யாருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. வேன் செல்லும் வழியில் அழகான பாறைச் சரிவு ஒன்று அனைவர் கவனத்தையும் இழுக்க, எங்களின் மொத்த கோஷ்டியும், அந்தப் பாறைச் சரிவில் சாய்ந்து நின்று (வைட்லென்ஸ் எதுவும் போடாமலே) படம் எடுத்துக் கொண்டோம்.

 வேன் புறப்பட... முன்னால் சென்ற கல்லூரி பஸ்ஸை முந்த... நாங்கள் கூச்சலிட... அவர்கள் விரைவெடுத்து முந்த... அவர்கள் கூச்சலிட... இப்படி மாற்றி மாற்றி கூச்சலும் விரைவுமாகச் சென்ற பயணம் சட்டென்று முடிவுககு வந்தது போல வேன் நின்றது. ‘‘இறங்குங்க எல்லாரும்...’’ என்றார் தலைவர். ‘‘என்னது...? அதுக்குள்ள 23 கிலோமீட்டர் வந்துட்டமா?’’ என்று வியந்தபடியே வேனிலிருந்து இறங்கினேன் நான்.

                                                                                                   -தொடர்கிறேன்....

55 comments:

  1. உங்ககூடவே பயணம் வந்தது போல சுவாரஸ்யமாக இருக்கு அண்ணே....!

    ReplyDelete
    Replies
    1. பயணக் கட்டுரையை ரசித்து உடன் பயணிக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி மனோ!

      Delete
  2. மிஸ்டர் சுடலையிடம் கடலை சுடலைன்னு கொடுத்தீங்களா? ஹா ஹா ஹா... நல்ல எழுத்து நடை.... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. டி.ஆர். மாதிரி ரைமிங்குக்காக சுடலை, கடலைன்னு எழுதலை ஸ்கூல் பையரே! நிஜ வாழ்விலும் சில நகைச்சுவைகள் ரசிக்க வெக்கும். அப்படி அமைஞ்சது அது. எழுத்து நடையை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  3. -தொடர்கிறேன்....///


    nalla viru viruppa poykiddu irunthichu sir
    sikirama adutha pakuthiya podunga.
    nalla svarasyamA irukku..

    ReplyDelete
    Replies
    1. நல்ல விறுவிறுப்பு, சுவாரஸ்யம்னு சொல்லி தெம்பூட்டிய மஹேஷ்க்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. இந்த கோடையில் நீங்கள் கோடைக்கானல் சென்று வந்து தரும் இந்த பதிவு எங்களுக்கெல்லாம் ஒரு கொடை தான்! பதிவின் ஒவ்வொரு வரியிலும் இழைந்தோடிய நகைச்சுவை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பயணத்தை ரசித்து என்னுடன் தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  5. அட அதுக்குள்ள 23 கிலோ மீட்டர் வந்துடுச்சா? உங்களைப் போலவே எனக்கும் ..... அதுக்குள்ளவே ஐந்தாவது பயணம் பற்றிய கட்டுரை வந்துடுச்சா......

    கடலை சுடலை.... ரசித்தேன்....

    ஒவ்வொரு இடங்களைப் பற்றி நீங்கள் சொல்லிச் செல்லும் போது அங்கே செல்லவேண்டும் எனும் ஆசை அதிகரித்து வருகிறது.....

    பணிச்சுமை அதிகமோ?

    ReplyDelete
    Replies
    1. அலுவலக பணிச்சுமை குறைவுதான் வெங்கட். ஒரு பொருளாதார கமிட்மெண்ட்டுக்காக நான் வீட்டில் ஏற்படுத்திக் கொண்ட பணிகள்தான் கழுத்து வரை அழுத்துகிறது. வலைக்காக நேரம் ஒதுக்க விழிபிதுங்க வைக்கிறது. விரைவில் இதுவும் கடந்து போகும். இன்னும் வேகமாக வந்துவிடுவேன். சீரியஸ் மனிதரான சுடலை சட்டென்று ஜோக் அடித்தது எனக்கே அப்ப வியப்பாதான் இருந்துச்சு வெங்கட்! ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  6. நானும் போயிருகிறேன்! ஆனால் எதுவும் நினைவில் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒரு முறை உங்களை அழைத்துச் சென்றுவிட்டால் போயிற்று! மிக்க நன்றி ஐயா!

      Delete
  7. ///சென்னையில் தினம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கம் இருப்பதால்///

    நல்ல வேளை உங்களுக்கு காலையில் வாக் போகும் பழக்கம் இருந்தற்கு. சிலருக்கு தூக்கத்தில் வாக் போகும் பழக்கம் இருக்கும் ஒரு வேளை அது போல இருந்து நீங்கள் இரவில் கேர்பின் வலைவுகளில் வாக் போய்.....நினைக்க முடியவில்லை.

    இதுக்குதான் நல்ல பழக்க வழக்கம் இருக்கணுமுங்கிறது

    நாட் Cat வாக் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனா கோக் வாக்பற்றி உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நல்லவேளையாக எனக்கு தூக்க வாக் என்றுமே இருந்ததில்லை. ‌கோக் வாக்கை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  8. அபிராமிய பாக்காம வந்துட்டீங்களே, நியாயமாரே??? ;-)

    ReplyDelete
    Replies
    1. நியாயமில்லதான் ஆவி! என்கூட ஒரு அபிராமி இருந்திருந்தா ஒருவேளை‌ போயிருப்பனோ என்னவோ... ஹி...! ஹி...! மிக்க நன்றிப்பா!

      Delete
  9. அய்யய்யோ மறுக்க ஒரு தபா ஒடனே கொடைகானல் போவணுமே... இந்த வாத்தியார் வுடமாடன்றாரே...

    அருமையான பயணக் கட்டுரை வாத்தியாரே... கோக்கர்ஸ் வாக் அருமையான நடை பயண இடம்.. சொல்லபோனால் கடவுள் படைத்த சொர்கத்துக்கு இணையான ரம்யம் அங்கே இருக்கும்...

    கடவுள் வெகு உயரத்தில் இருக்கிறார் நம்மை ஆண்ட விடாதா உயரத்தில் இருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. நம்ம மக்களை ஒருங்கிணைச்சு ஒரு டூர் ப்ளான் பண்ணு சீனு. நாம போய் சுத்திட்டு வந்திரலாம்! கொடைக்கானலை ரசித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  10. Though I had been to Kodaikanal two times, I feel like going there once more after seeing your post. Writing a travelogue is a difficult matter and that too writing interestingly is an entirely difficult matter which seems to be very easy for you. Keep it up. I also feel like travelling with you virtually while reading this post.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒரு முறை கொடைக்கானல் சென்ற அனுபவத்தை பெற்று என் எழுத்து நடையைப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. கோக்கர்ஸ் வாக் - மேக மூட்டத்துடன் இருந்தாலும் அதிகாலை நடப்பதற்கு இதமாகவும் இருக்கும்...

    சுவாரஸ்யமான பயணம்.... 23 கிலோமீட்டர் இன்னும் கடக்கவில்லை என்று மட்டும் தெரிகிறது...!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். 23 கி.மீ.யில் பாதியிலேயே வேன் நின்றது. காரணம் வரும் பதிவில் அறிவீர்கள். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  12. ம். அருமையான பயணத்தொடர்...

    பயணக்களைப்புத் தோன்றிவிடாமல் இருக்க ஊக்கிகளாக நகைச்சுவை ஊட்டதுடன் அழைத்துச்செல்லும் உங்கள் திறமை அருமை!

    வழமைபோல ரசித்து சிரித்து மகிழ்ந்து தொடர்கிறேன் நானும்...:)

    ReplyDelete
    Replies
    1. மெல்லிய நகைச்சுவையை ரசித்து உடன் தொடரும் சகோதரிக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  13. //‘‘இந்த இடத்துக்கு ஆக்சுவலா பழைய பேரு ‘டெவில்ஸ் கிச்சன்’ங்கறதுதான். பிசாசின் சமையலறையா இருந்த இந்த இடம், கமல்ஹாசனால இப்ப குணா குகைன்னு பேர் வாங்கிருச்சு...’’//

    இந்த தகவலை அர்விந்த்சாமியிடம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கேட்டது மூலமாக நான் தெரிந்து கொண்டேன்....:)

    நாங்களும் தொடர்ந்து வருகிறோம். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அரவிந்த் சாமி இதை உங்களுக்கு முன்னாலயே சொல்லிட்டாரா? நல்லது. போனபகுதியையும் சேர்த்துப் படித்து என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  14. டெவில்ஸ் கிச்சன் தான் கணா கேவ்ஸ் ஆகியிருக்கிறதா?
    ஆச்சர்யம் .
    கொடைக்கானல் சுற்றும் அனுபவம் கிடைக்கிறது .
    கோகர்ஸ் வாக்கிலிருந்து வைகை நதி ஒரு கோடு போல் தெரியும்.
    பார்க்க மிகவும் அழகு. போட்டோ எடுத்தால் சரியாகத் தெரியாது என்று நினைக்கிறேன். அதான் எடுக்கவில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. அது கேமராவில் அடங்கவில்லை ராஜி மேடம்! அதான் விஷயம்! கொடைக்கானல் சுற்றுகிற அனுபவத்தை படிப்பதன் மூலம் பெற்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. கொடைக்கானல் இரண்டுதடவை வந்திருக்கின்றேன். நீங்கள் போன இடம் பார்த்ததில்லை புதிதாக இருக்கின்றது. தொடர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓ... படித்து ரசித்து தொடரும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி மாதேவி!

      Delete
  16. மிகவும் சுவாரசியமான பயணம். பயணத்தைவிடவும் சுவாரசியம் உங்கள் எழுத்து. பாராட்டுகள் கணேஷ். அவ்வளவு தூரம் போய் முன் அனுமதி வாங்கியிருந்தும் பேரிஜம் ஏரியைப் பார்க்க இயலாமல் போனது வருத்தமே.

    பூம்பாறைக்குப் போகுமுன்னரே ஏதேனும் தடைக்கல்லா? தொடரும் போட்டு நிறுத்தியிருக்கும் இடத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கீதா... பேரிஜம் ஏரியப் பத்தி கேள்விப்பட்டிருந்தேன் நிறைய. மிஸ் பண்ணிட்டமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணின விஷயம் அது. ஆனா அடுத்த நாள் விஸிட் அடிச்ச எதிர்பாராத சர்ப்ரைஸ் இடத்தால அந்த வருத்தம் காணாமப் போயிடுச்சு. அதை பின்வரும் பகுதிகள் சொல்லும். பூம்பாறைக்குச் செல்லும் வழியில் தடைக்கல் ஏதுமில்லைங்க. இன்னொரு ரசிப்பிடம் வந்ததால் நிறுத்தினார்கள்! தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. உங்க பயணம் ஜாலியா போயிருக்கு குணா குகை என்பதை விட டெவில்ஸ் கிச்சன் நல்ல இருக்கில்ல இந்த பேரை சொன்னதாலேயே உள்ள போகலையோ இதானே உண்மை ........
    தொடர்கிறேன் நீங்க சொல்லும் விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... அப்படியும் இருக்கலாம் பூவிழி! நான் பயணம் சொல்லும் விதத்தை ரசித்துத் தொடரும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. நேராகவே இருந்து பார்த்தார்போல் உள்ளது உங்கள் வர்ணனை.படங்களும் பிரமாதம்

    ReplyDelete
    Replies
    1. வர்ணனையுடன் படங்களையும் ரசித்த சிஸ்டருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  19. ரதசாரதியா?
    உங்க எல்லாரையும் கொஞ்சம் வேறே மாதிரி கற்பனை செய்து பார்த்தேன்..! அதுவும் பொருத்தமாத்தான் தோணுது!

    ReplyDelete
    Replies
    1. கற்பனை சரிதான். ஆனா இளவரசிகளுக்கும் சேடிகளுக்கும் வழியில்லாமப் போச்சே...! அதான் வருத்தம்! ஹி... ஹி...!

      Delete
  20. படங்களும் எழுத்து நடையும் அற்புதம்... :)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்தும் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  21. கோக்கர்ஸ் வாக்கிற்கு இப்படி ஒரு வரலாறா.. நானும் கோக் விளம்பரத்திற்கு இப்படி ஒரு பெயர் வைத்துவிட்டார்கள் என்றே நினைத்திருந்தேன்... ஹா..ஹா..ஹா... கடலை சுடலை... நானும் ரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  22. கொடைக்கானல் எப்பவோ போனது...உங்க இடுகைல மறுபடி ஜாலியா போகிறேன் போட்டோல்லாம் என்ன கலக்கலா ம்?:)

    ReplyDelete
    Replies
    1. கொடைக்கு என்னுடன் உலா வந்து, படங்களையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றிக்கா!

      Delete
  23. You will get Abhirami even now; but your life will become like Guna Kamal ultimately. Is it OK?

    ReplyDelete
    Replies
    1. யப்பா... குடும்பம் கண்ணுல படாத தூரத்துல ஒரு அபிராமி கிடைச்சா நல்லாருக்குமேன்னு ஒரு சபல்ஸ்! அதுக்காக இப்படியொரு குண்டு வெககப் பாக்குறியளே நியாஆஆஆயமாரே!

      Delete
  24. எனக்கும் பிடித்த இடம் இந்த கோக்கர்ஸ் வாக். ரொம்பவும் சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது பயண அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவத்தை ரசித்து மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  25. ம்ம்ம்ம் கடைசியில பூம்பாறை அடுத்த ஏபிசோட்லதானா? ஓகே! சீக்கிறம் அடுத்த எபிசோட் வரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா அதிகம் காக்க வெக்காம அடுத்த எபிசோட் வந்துரும் சுடர்! மிக்க நன்றி!

      Delete
  26. உங்கள் பயண அனுபவங்கள் கொடுக்கும் இன்பத்தைவிட..
    புகைப்படங்கள் கொடுக்கும் இன்பம் அதிகம்..
    அந்த முதல் படத்தை பார்த்ததும்...
    " என்னிரண்டு பதினாறு வயது.." என்று
    நடிகர் திலகம் பாடிக்கொண்டே நடந்து வருவாரே
    அதுபோல இருந்தது...
    ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! மகத்தான மனிதருடன் நீங்கள் ஒப்பிடுவதைக் கேட்கையில் மனம் மகிழ்வில் நிறைகிறது மகேன்! படித்து ரசித்து கருத்தால் மகிழ்வு தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  27. மிக்க நன்றி D.D.! உங்களின் இந்தத் தகவலை உடனே பார்க்க இயலாமல் சற்று தாமதமாகத்தான் பார்க்கிறேன். உடன் அங்கு சென்று நன்றியையும் மகிழ்வையும் பதிவு செய்து விட்டேன். உங்களின் பயன்மிகு சேவைக்கு என் மனம் நிறைய நன்றி!

    ReplyDelete
  28. சுவாரஸ்யம். தொடருங்கள்.

    ReplyDelete
  29. //சென்னையில் தினம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கம் இருப்பதால்,//
    - நாங்க நம்ப மாட்டோம்?! ஹா.. ஹா..!


    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube