Thursday, April 18, 2013

‘கொசு’வநாத புராணம்!

Posted by பால கணேஷ் Thursday, April 18, 2013
மிஸ்டர் ‘கொசு’வை உங்களுக்குத் தெரியுமா? தினம் இரவில் உங்கள் கைகளிலோ அல்லது பிற பாகங்களிலோ தன் ஆன்டெனாவால் இன்ஜெக்ஷன் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிற அற்ப ஜந்துவைச் சொல்லவில்லை நான்! விஸ்வநாதன் என்று பெயரிடப்பட்டு, விசு என்று சுருக்கி அழைக்கப்பட்டு, பிறகு நண்பர்களால் ‘கொசு’வநாதன் என்று நாமகரணம் சூட்டப்பட்டு, அதுவும் சுருங்கி இப்போது விசுவுக்குப் பதில் கொசு என்று அழைக்கப்படும் மே.மாம்பலம் விஸ்வநாதனைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். அவர் ஏன் அப்படி அழைக்கப்படுகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் மே.மாம்பலம் கொசுக்களைப் பற்றி நீங்கள் நன்கறிந்து கொண்டாக வேண்டும்.

எங்கள் பகுதியில் மொட்டை மாடியில் படுத்திருந்தீர்களென்றால், ‘இவன் நம்மைக் கடிக்க சான்ஸே தர்றதில்லையே..’ன்னு கான்டான கொசுக்கள் பத்து இருபது ஒன்று சேர்ந்துச்சுன்னு வைங்க...  எல்லாம் ஒண்ணு கூடிச்சுன்னாக்க உங்களையே தூக்கிக் கொண்டு பறந்து நான்காவது வீட்டு மொட்டை மாடியில் போட்டுவிடும் அளவுக்கு ஊட்டமானவை இந்தப் பகுதி கொசுக்கள். சில ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதன் இங்கே குடிவந்ததும் முதலில் சந்தித்த பெரிய பிரச்னைகளே இரவானால் முற்றுகையிடும் கொசுக்களின் கடிதான்! மனைவியின் கடியையே இருபதாண்டுகளாய்த் தாங்கி வருபவரால் கொசுவின் கடியை இரண்டு நாள்கூட தாங்க முடியவில்லை. அவற்றை வீட்டினுள் வரவிடக் கூடாது என்று முடிவெடுத்தார். முடிவெடுத்தவர் என்ன பண்ணினார்ன்னா...

ஹாலில் ஏறத்தாழ முக்கால் வாசியளவு அடைக்கிற மாதிரி பெரிய கொசுவலை, அதற்குள் இன்னொரு சிறிய கொசுவலை என்று இரண்டடுக்குப் பாதுகாப்பு செய்து, தன் குடும்ப உறுப்பினர்களுடன் அதனுள்ளே படுத்தார் முதல் கட்டமாக! ஓரிரண்டு நாட்கள் கொசுவிடமிருந்து தப்பித்ததென்னவோ நிஜந்தான். அதன்பின் காலையில் அவர் மடித்து வைத்த கொசுவலைக்குள் சுண்டெலியார் ஒரு சிறு ஓட்டை போட்டுவிட, மூன்று நாளாக முற்றுகையிட்டுத் தோற்ற ஆவேசமோ என்னவோ... கொசுக்கள் நறுக்கென்று கடிக்கலாயின. வலையைத் தைத்து மறுபடி படுத்தார். மறுபடி சிற்றெலியார் கைவரிசை காட்ட... இனி எலிகளை விரட்டும் வரை கொசுககளை வலைமூலம் அடக்க முடியாது என்பதை உணர்ந்தார் விசு. முதல் முயற்சி தோல்வி.

வர் மனைவி குமுதம் (குமுதவல்லியின் சுருக்!) ‘‘ஏன்னா... கொசுவர்த்திச் சுருள் வாங்கிட்டு வந்து கொளுத்தி வெச்சா அந்தப் புகைக்கு எந்தக் கொசுவும் அண்டாது’’ என்றாள். அத்தோடு நிறுத்தியிருககலாம் அவள்... ‘‘‌காய்ஞ்ச வேப்பிலைகளை எரிச்சா அந்த மணத்துக்கும் கொசுங்க கிட்ட அண்டாதுங்க...!’’ என்று தான் எப்போதோ ‌புத்தகத்தில் படித்த ‌ஹெல்த் டி‌ப்ஸையும் நினைவு கூர்ந்தாள். ஆரம்பித்தது வினை! ‘‘ஆஹா... லைஃப்ல முதல் தடவையா நல்ல ஐடியா குடுத்திருக்கேடி...!’’ என்று விரைந்தோடிச் சென்று உடனே முப்பது பாககெட் வாங்கி வந்தார். வந்தவர் அன்று மாலையே எல்லா ஜன்னல்களையும், கதவையும் அடைத்துவிட்டு, ‘‘கொஞ்ச நேரம் புகை வீட்டுக்குள்ளயே சுத்தினப்புறம் கதவைத் திறந்தா கொசுவெல்லாம் இந்தத் திசைலயே அண்டாது. இதுலயெல்லாம் கஞ்சத்தனமே கூடாதுடி’’ என்று தாராளப் பிரபுவாய் ஒரு அறைக்கு நான்கு பத்திகளை ஏற்றி வைத்தார். கூடவே எங்கிருந்தோ பொறுக்கி வந்திருந்த முற்றிய வேப்பிலைகளையும் கொளுத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் கதவு உடைப்பதுபோல் இடிக்கப்பட... வேகமாய்ப் போய்க் கதவைத் திறந்தவரின் முகத்தில் பளீரென்று அடித்தது தண்ணீர்! ‘ஹா’வென்று அலறி விழுந்தார். அப்புறம்தான் புரிந்தது... தீயணைப்புப் படையினரின் ஹோஸில் இருந்து பீறிட்ட நீர் அது என்று! பக்கத்து வீட்டுக்காரன் இவர் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு மூலம் கசிந்த புகையைக் கண்டு உள்ளே தீப்பிடித்து விட்டதாய் எண்ணியதன் விளைவு! ஃபயர் சர்வீஸ்காரர்களிடம் விசு கன்னாபின்னாவென்று திட்டு வாங்கி, அசடு வழிந்ததும், பக்கத்து வீட்டுக்காரன் பழி சண்டை போட்டதும்தான் நிகரலாபமே தவிர இரண்டாவது முயற்சியும் படுதோல்வி தாங்க...!

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விசு, வேறொரு ஐடியாவைப் பிடித்தார். ஒரு குறிப்பிட்ட க்ரீமைத் தடவிக் கொண்டு படுத்தால் கொசு அண்டாது என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் அதில் ஒரு டஜன் ட்யூபுகளை வாங்கி வந்து தனக்கும், மனைவி குழந்தைகளுக்கும் தாராளமாக ஆயில் மசாஜ் செய்வது மாதிரி உடம்பு பூராவும் தேய்த்து விட்டுப் படுக்கச் செய்தார். ஊஹும்! ‌அந்தக் கீரிமின் நாற்றத்தாலேயே தூக்கம் வரவில்லை என்று மனைவி, குழந்தைகள் கோபாவேசமானதாலும், ரெண்டே நாளில் க்ரீமைப் பழகிக் கொண்ட கொசுக்கள், அதை அலட்சியம் செய்து ‘மவனே, எங்களையாடா ஒழிக்கப் பாத்தே?’ என்று முன்னிலும் உக்கிரமாய்‌க் கடிக்க ஆரம்பித்ததாலும் ஆஸ் யூஷுவல் இதுவும் ‌ஃபெய்லியர்!

விசுவைக கடிச்ச கொசு!
ந்த முயற்சிகளெல்லாம் ஒவ்வொன்றாய் நடந்து கொண்டிருந்த காலச்சதுரத்தில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், ‘‘இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா’’ என்கிற ரீதியில் இவர் புலம்பித் தள்ளி, ஆலோசனை கேட்க, முன்பே நான் குறிப்பிட்டதுபோல இவரின் பெயர் ‘விசு’விலிருந்து ’கொசு’வாக மாறியதுதான் மிச்சம். அப்போதுதான் அவரின் ‘நண்பேன்டா’ நரசிம்மன் ஐடியா தந்தார். ‘‘டேய் கொசு! ச்சே... விசு! இப்ப புதுசா மார்க்கெட்ல எலக்ட்ரானிக் பேட் ஒண்ணு வந்திருக்காம்,. அதை சார்ஜ்ல போட்டுட்டு கொசு வர்றப்ப வீசினா, பட் பட்னு எலக்ட்ரிக் ஷாக் பட்டு எல்லாக் கொசுவும் செத்து விழுந்துருதாம்...’’ என்றார். எத்தைத் தின்றால் கொசு ஒழியும் என்று காத்திருந்த விசு உடன் அதை வாங்கிக் ‌கொண்டு வீட்டிற்கு வந்து குமுதத்திடம் ‘டெமோ’ செய்து ‌காட்டினார்.

காற்றில் அந்த பேட்டை வீசி, ‘பட் பட்’டென்ற ஒலியுடன் கொசுக்கள் செத்து விழ, பெருமை ‌பொங்க மனைவியைப் பார்த்தார். ‘‘எப்பூடிடி?’’ குமுதம் சற்றும் அசராமல், ‘‘ஆமா... பெரிய லியாண்டர் பெயஸ்! சர்வீஸ் ஷாட் அடிச்சுட்ட மாதிரி போஸைப் பாரு...! எத்தனை நேரம் இதை வீசிட்டே இருப்பீங்கன்னு பாக்கறேன். நாங்க படுத்துக்கறோம். கொசு எங்களை அண்டாம, ராப்பூரா நீங்க பேட்டால அடிச்சுட்டே இருங்கோ...’’ என்றுவிட்டு நிம்மதியாகத் தூங்கினாள். பாவம்... கொசுவநாதன், ஸாரி, விசுவநாதன்தான் அணியணியாகத் திரண்ட கொசுக்களுக்கு முன் பேட்டைச் சுழற்றியே ஓய்ந்து போனார்.

‘‘ஏங்க... இந்தக் கொசுத் தொல்லைய ஒழிக்க வேற வழியே கிடையாதா?’’ என்று மறுநாள் மனைவி கேட்ட போதாவது இவர் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம்...! காக்கை வாகனர் ஸெவன் அண்ட் ஹாஃபாக நாவில வந்து அமர, ‘‘ஒரு வழி இருக்குடி. கொசுக்கள்லயே கடிக்கறது பெண் கொசுக்கள்தான்னு ஒரு மெடிக்கல் மேகஸின்ல படிச்சேன். பாத்தியா... கொசுக்கள்லகூட பிடுங்கறது பெண் கொசுக்கள்தான். நீ என்ன பண்றே...? ஆண் கொசுக்களைல்லாம் கண்டுபிடிச்சுக் கொன்னுடு. அந்த வருத்தத்துலயே பெண் கொசுக்களும் செத்துடும். கொசுத் தொல்லையிலயிருந்து நிரந்தர ரீலிஃப்!’’ என்றார். இதுபோதாதோ...? குமுதம் பத்ரகாளியாக அவதாரமெடுத்து, இவரை அன்பாக(!) ரெண்டு தட்டுத் தட்டி வராண்டாவில் தள்ளிக் கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு குழந்தைகளுட்ன் நிம்மதியாகத் தூங்கினாள். வராண்டாவில் இரவு முழுவதும் கொசுக்களுடன் யுத்தம் செய்த மிஸ்டர் விசு அதன்பின் குமுதத்தை என்ன... ஆனந்தவிகடன், கல்கியைக் கூட எதிர்த்துப் பேசுவதில்லை என்று முடிவுகட்டி விட்டார்.

போன வாரம் அவரைப் பார்த்தபோது... ‘‘ஹாய் கொசு, ஸாரி... விசு! இப்பல்லாம் நீங்க கொசுத் தொல்லையப் பத்தி யார்கிட்டயும் புலம்புறதில்லையாமே.. ப்ராப்ளம் சால்வ்டா?’’ என்று கேட்டேன். ‘‘ஆமாப்பா... அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு... முதலாவது, இப்பல்லாம் பாதி ராத்திரி கரண்ட் இருக்கறதில்லைங்கறதால கொசுக்களுக்கும் கண் தெரியறதில்லையோ என்னவோ... அவ்வளவா தொந்தரவில்லை. ரெண்டாவது கொசுக் கடியத் தாங்கிண்டு தூங்கறதுங்கறது இப்ப பழகிப் போயிடுத்து... வொய்ஃபோட பேச்சையே தாங்கிண்டு நாமல்லாம் தூங்கலையா என்ன?’’ என்று கேட்டுவிட்டு ‘ஈ’யென்று அத்தனை பற்களும் தெரியச் சிரித்தார் கொசு! ‘‘ஓய்..! அப்படிச் சிரிக்காதேயும்...! உம்ம பல்வரிசையப் பாத்தாலே குலை நடுங்கறது!’’ என்றேன். கப்பென்று வாயை மூடினார்! நான் அவரிடமிருந்து எஸ்கேப்பாகி ஓடினேன்!

பின்குறிப்பு: வைரமுத்து ஸார் மட்டும்தான் காவியம், காப்பியம்னுல்லாம் கதைகளுக்குப் பேர் வெக்கணுமா என்ன? நாம ஏன் ஒரு புராணத்தை எழுதக்கூடாதுன்னு நினைச்சப்பத்தான் இந்த ‘கொசுவநாத’ புராணம் உற்பத்தியாச்சு. ரசிச்சீங்களான்னு ஒரு வார்த்தை சொல்லிப்போட்டுப் போங்க!

54 comments:

  1. கொசுவை நாம் கடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஒற்றை வார்த்தையிலயே அதிகாலையில் என்னைச் சிரிக்க வைத்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸார்!

      Delete
  2. ஹாஹா ஹாஹா:-)

    காலச் சதுரத்தில் வந்தவர்கள் எல்லாமே சூப்பரு!

    இந்தக் கொசுக்களுக்குப் பயந்துதான் சென்னை வர கொஞ்சம் யோசனையா இருக்கும்..
    மொட்டை மாடியில் ஃபேன் வச்சுக்கிட்டுத் தூங்குவோம்.

    சண்டிகரில் இன்னும் சிரேஷ்டம். நம்ம வீட்டு பால்கனிகளில் கூட ஸீலிங் ஃபேன் போட்டு வச்சுருக்காங்க ஹவுஸ் ஓனர்கள். பாத்ரூமில்கூட ஸீலிங் ஃபேன் இருக்கு அங்கே! குளிக்கும்போதும் அண்ட முடியாது கேட்டோ:-)))

    ReplyDelete
    Replies
    1. பாத்ரூமில் கூட ஸீலிங் ஃபேன்! அமேஸிங்! இப்ப சென்னைல கொளுது்தற வெயில்ல பாதிக் கொசுங்க தலைமறைவாயிடுச்சு டீச்சர். தைரியமா வரலாம் நீங்க! சிரிச்சு ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. பாலா சார்.. இதுதான் விசுவை கடிச்ச கொசுன்னு போட்ட நேரம் அதை அடிச்சிருகலாமேன்னு கேக்க வந்தேன், அப்புறம் தான் தெரிஞ்சுது அது நீங்க எழுதின நீங்க கற்பனை புராணம்னு..

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் கற்பனையில்ல ஆவி! கொசுவால அன்றாடம் படற பாடுகளை கொஞ்ச்ச்சம் மிகையோட நகை சேர்த்து சொல்லியிருக்கேன். அவ்ளவ்தான். மிக்க நன்றி! (அதுசரி... மேட்டருக்கும் படங்களுக்கும் சம்பந்தம் இருக்கணும்னு நம்பற அவ்வளவு அப்பாவியா நீங்க? ஹி... ஹி...)

      Delete
  4. சென்னையில தான் சார் இந்த ப்ராப்ளம் எல்லாம்.. ஏன்னா ஒரு மணி நேரம் தான் கரண்ட் கட்டாகுது. கொசுக்களோட அட்டாக் அதனாலதான் பெரிய விஷயமா தெரியுது.. எங்க ஏரியாவுல இருக்கற மாதிரி பதினாலு, பதினைஞ்சு மணி நேரம் கரண்ட் கட் இருக்கும் போது சதா சர்வ காலமும் கடிச்சுகிட்டே இருக்க கொசுக்கள் என்ன ஈரமில்லாத பிராணிகளா? அதுங்களும் ஒரு கட்டத்துல டயர்ட் ஆயி இப்போல்லாம் பக்கத்துலையே வர்றது இல்லையே.. ( இந்த ஐடியாவ நீங்க கொசு சார்க்கு சாரி விசு சார்க்கு சொல்லி பாருங்களேன்..)

    ReplyDelete
    Replies
    1. இப்பல்லாம் சென்னைல நைட்ல ‌வோல்ட்டேஜ் கம்மியாதான் கரண்ட் தரப்படுது. ஓல்டேஜ் மட்டுமில்ல... இங்க வோல்டேஜும் ப்ராப்ளம்தான் ஆவி!

      Delete
  5. ‘கொசுவநாத’ புராணம்’ அருமை. இனி 'ஈயார் புராணம்' எதிர்பார்க்கலாமா?

    '

    ReplyDelete
    Replies
    1. இதை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி1 ஈயார் என்ன... எறும்பாரை வெச்சுக்கூட எழுதலாம்- நீங்கல்லாம் கூட இருக்கற பட்சத்துல!

      Delete
  6. ஆகா இன்னும் கொசுவுக்கு மருந்து கண்டு பிடிக்கலையா?

    ReplyDelete
    Replies
    1. நாம தான் கொசுவுக்கு  மருந்து :)

      Delete
    2. சூப்பராச் சொன்னீங்க அப்பா ஸார்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர் கவியாழி!

      Delete
  7. கொசு கடித்தால் பட்டு பட்டென்று அடித்துவிடலாம் ஆனால் மனைவியை அப்படி அடிக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. கொசுவோட சுபாவம் கடிக்குது.. அதுக்காக மனைவியை அடிக்குறதா ?   :)

      Delete
    2. நண்பா! கொசுவை அடித்தால் அது காலி! மனைவியை அடித்தால் நீ...? ஹா... ஹா...!

      Delete
  8. கொசுக்கடியையும் இவ்வளவு நகைச்சுவையாய்க் கடிக்க உங்களால்தான் முடியும் கணேஷ். காலக்கட்டத்தைக் காலச்சதுரமாக்கியது சூப்பர். ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவையால் தோரணம் கட்டி ரசிக்கவைக்கிறீங்க. இப்படித்தான் ஒவ்வொருத்தரும் பிரச்சனைகளைப் பார்த்து பயந்து அதைப் பற்றியே பேசிப் பேசி, தீர்வு புலப்படாத நிலையில் அதையே வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம் போலும். கொசுவநாதன் புராணம் - வெகுவாய் ரசித்தேன். பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவைத் தோரணத்தை வெகுவாய் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  9. மிக மிக நகைச்சுவையோடு எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர். பாரட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த பாராட்டிற்கு மனம் நிறைய நன்றி நண்பா!

      Delete
  10. தமிழ் நாட்டுல நிறைய பேர் ரத்ததானம் பண்ண முன் வரமாட்டேங்கிறார்கள் அதனால் கடவுள் தந்த பரிசுதான் இந்த கொசு

    ReplyDelete
  11. ஹா... ஹா... கொசு புராணம் அருமை...

    இங்கே மணிக்கொரு ஒரு முறை மின் வெட்டு என்று எழுப்பி விடும்...

    ReplyDelete
    Replies
    1. கொசுவைவிடப் பெரிய தொல்லையாயிற்றே மின்வெட்டு! மிக்க நன்றி நண்பா!

      Delete
  12. ‘கொசுவநாத’ புராணம் சுவாரஸ்யமாக கடிக்கிறது ..

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமான கடியைப் பொறுத்துக் கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  13. மேற்கு மாம்பலகொசுவை அடிச்சு துவைத்து அலசி பிழிந்து காயப்போட்டுட்டீங்க.மேற்கு மாம்பல கொசுவுக்கே இப்படீன்னா சைதாபேட்டை கொசு....???????

    பதிவுக்கு தலைப்பு சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சைதாப்பேட்டை கொசுக்கள் அடுத்த ஏரியாவுலயே மனுஷனைப் போட்டிரும்மா. தலைப்பையும் சேர்த்து ரசித்தமைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  14. ஹா! ஹா! நல்ல நகைச்சுவை புராணம்... நல்ல விடியல் இன்று... :)

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. போ கொசுவே போ.. நீ கடிக்கிறதை விட பயங்கற "கடி" யா எழுதற பாலகணேஷ் சார் கிட்ட மட்டும் ஓவர் டைம் பாரு..!

    ReplyDelete
    Replies
    1. ஹச்சச்சோ...! ஏதோ கொஞ்சமா கடிச்சதுக்கே இப்புடி கொசுக்களைத் தூண்டி விடறீங்க...! அடுத்து ஒரு மரணக்கடி எழுதலாம்னு இருந்தேன். அதுக்கு டைனசாரை விட்டுக் கடிககச் சொல்லிடுவீங்க போலருக்கே...! யாத்தே...! நான் எழுதலைப்பா. ஹி... ஹி... மிக்க நன்றி!

      Delete
  16. //காக்கை வாகனர் ஸெவன் அண்ட் ஹாஃபாக நாவில வந்து அமர,// ஹா ஹா ஹா இந்த வசனத்தை வெகுவாய் ரசித்தேன்....

    கொசுக்கடி கூட சகிசிக்கலாம் வாத்தியாரே... சென்னையின் இரவு நேர பவர் கட் ஷ்ஹ்ஹ்ஹ்ப்பாஆ முடியல.... பவரானந்த புராணம் எதாவது எழுதி இதுக்கும் ஒரு "வலி" பண்ணினா சந்தோசமா இருக்கும் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆமப்பா... நைட்டுல கரண்ட்டு தொல்லை ரொம்பத்தான் படுத்துது! ரசிச்சுப் படிச்ச உனக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  17. Just now I heard a joke about the mosquitoes - One of my bosses who visited Vadodara recently, (he is in top position in Bank) cracked this joke - He was bitten by a mosquito in the afternoon (in Mumbai mosquitoes take rest in the afternoon, it seems, as they do night duty). On being asked why are you biting me in the afternoon, the mosquito replied "what to do sir, we too have been given the budgets to achieve".

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் மோகன்! அப்பா ஸாரோட சேர்ந்து நானும் ரசிச்சு சிரிச்சுட்டிருக்கேன்!

      Delete
  18. இப்போது அரசாங்கத்தில் பெண் கொசுவைஎல்லாம் பிடித்து கு.க செய்து வருகிறார்களாம். எனவே கவலை வேண்டாம், நண்பர்களே... அடுத்த வருடம் முதல் இந்தத் தொல்லை இருக்காது என்று நண்பரிடம் சொல்லி விடுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இந்த சூப்பர் ஐடியாவை அரசாங்கத்துக்கு தந்தது நீங்க தான்னு காத்துவாக்கில செய்தி வந்ததே...! மிக்க நன்றி!

      Delete
  19. கொசுவநாத புராணம்... கின்னஸ் அவார்ட் வாங்கிற பதிவு.

    உங்க பதிவு படிக்கவர பயமா இருக்கு பிறதர்...:)

    சிரிச்சுசிரிச்சு எனக்கு இப்பெல்லாம் வயித்துவலி அடிக்கடி வருகுதே...:).

    உங்களுக்கு என்னமா கற்பனை கரைபுரண்டு ஓடுது...
    ரொம்ம்ம்ம்பவே ரசிச்சு சிரிச்சுப் படிச்சேன்.

    காலைல பேருந்தில் ஓரிடத்துக்குப் போகும்போது தற்சமயம் ஒரு ஈ-யைக்கண்டு அதிலிருந்து இந்த உங்க பதிவு மனசில் நிழலாட எனை மறந்து தனிமைல சிரிக்க பக்கத்தில இருகிறவங்க என்னையை ஒரு மாதிரிப் பார்த்துட்டாங்கன்னா பாருங்களேன்...:).

    இப்ப நினைச்சாலும் சிரிப்... ஐயோ வேணாம்...

    வாழ்த்துக்கள் பிறதர்! தொடரட்டும் உங்க சாதனை...

    ReplyDelete
    Replies
    1. அடாடா... வயித்து வலியே வந்துடுச்சா? அப்ப அடுத்த பதிவை சீரியஸா எழுதிர வேண்டியதுதான் சகோ! ரசித்துப் பாராட்டி என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. கொசுக்கும் கண்ணு தெரியலையா இல்லை கரண்டு இல்லையுனு சொல்லிடுச்சா
    ஹா ஹா நல்ல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த பூவிழிக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  21. ஆமா, அது எப்டி? எல்லா ஆண்களுமே ஒரே டையலாகையே சொல்ரீங்க! கொசுவுக்கு மட்டும் பெண் கொசு கடிக்கிரதா சொல்ர நீங்க, சிங்கத்துல ஆண் சிங்கம்தான் வாழைப்பழ சோம்பேரினு சொல்ல மாட்டிக்குரீங்க! பெண் பதிவர்கள் சங்கம் அமைச்சு இதுக்கு கடும் கண்டனப்பதிவு எழுதலாம்னு ஐடியா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! எப்டிதான் உங்களுக்கு மட்டும் பல்பு சூப்பரா எரியுதோ தெரியல! கற்பணைக் குதிரை சூப்பர் ஃபாஸ்ட்டா ஓடுது சார்! சூப்பர் பதிவு!!

    ReplyDelete
    Replies
    1. சங்கமா...? அவசியம் ஆரம்பிங்க தாயி! சூப்பர் பதிவுன்னு சொல்லி உற்சாகம் தந்த உனக்கு என் இதயம் நிறை நன்றி சுடர்!

      Delete
    2. சோம்பலா கொசுக்கடியா எது மேல்? நீங்களே சொல்லுங்க சுடர்விழி.
      (அதென்ன வாழைப்பழ சோம்பேறி?)

      Delete
  22. ஹா ஹா ஹா சிரிப்பதா அழுவதா என்று புயியவில்லை
    பாவம் ஐயா நீங்கள் எல்லாம் அனுபவித்தே எழுதியது போல்
    உள்ளது .உங்களையெல்லாம் கடித்த கொசுக்களை அப்பாத்துரை
    ஐயா சொன்னது போல் திருப்பிக் கடித்தேயாக வேண்டும் :)
    வாழ்த்துக்கள் துவண்டு கிடந்த மனத்தைக் கொஞ்சம் சிரிக்க
    வைத்தும் சிந்திக்க வைத்தும் எழுதிய பதிவு அருமை !.....

    ReplyDelete
  23. அதுவும் நல்லா இழுத்துப் போத்திட்டு தூங்க் முயற்சி செய்யும்போது, இந்த கொசு காது கிட்ட வந்து ரீங்காரம் பண்ணும்போது பயங்கர கோபம் வரும்..... யாரோ சொன்ன மாதிரி, அதை பிடிச்சு அது காதுல நம்மளும் ரீங்காரம் பண்ணாத் தான் கொசுவுக்கு புரியும்.....

    ரசித்து சிரித்தேன் கணேஷ். .

    ReplyDelete
  24. தோற்றுதான் போகிறோம் கொசுவிடம்:)! இரசிக்க வைத்தது பதிவு.

    ReplyDelete
  25. கடிக்கும் கொசுவை அடித்தால் சரியாப் போச்சு...
    சிரிக்க வைக்கும் பகிர்வு...
    அருமை அண்ணா....

    ReplyDelete
  26. கொசுப்புராணம் வயிற்று வலியைப்போக்கும் சிரிப்பொலி!

    ReplyDelete
  27. ஆனால் நான் சென்னை குழுவோடு வரும் போது ஒரு திரவத்தை கிரெம் லிங்குட் வாங்கி வருவதால் கொசுத்தொல்லை இல்லை ஆனால் மூக்கில் வரும் அடைப்புத்தொல்லை அதிகம் அண்ணாச்சி!ஹீ!`ம்ம்

    ReplyDelete
  28. அருமையான கற்பனை அண்ணா ! படித்தேன் ரசித்தேன்....

    ReplyDelete
  29. கார்ப்பேரஷன்ல நொச்சி செடி வளக்க போறாங்கலாமே! விஸ்வநாதனுக்கு சாரி கொசுவநாதனுக்கு அந்த ஐடியா சொல்லி பாருங்க.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube