Wednesday, April 3, 2013

வியக்க வைத்த ‘லைட்ஸ் ஆன்’

Posted by பால கணேஷ் Wednesday, April 03, 2013
சினிமா செய்திகளை... அதுவும் பழைய சினிமா செய்திகளைப் படிப்பதில் என்ன சுவாரஸ்யம் கிடைத்துவிடப் போகிறது? என்று ஒரு எண்ணம் மனதின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தது ‘லைட்ஸ் ஆன்’ புத்தகம் கையில் கிடைத்த போது. அந்த எண்ணத்தின் விளைவு... சற்றே தாமதமாக அசுவாரஸ்யமாகத்தான் புரட்டத் துவங்கினேன். ஆனால் என் மண்டையில் தட்டி, ‘என்னையா அப்படி நினைச்ச?’ என்றது புத்தகம். அத்தனை சுவாரஸ்யம்! பழமையில் சுவை இல்லையென்று எவர் சொன்னது? அதிலும் எழுதியது எழுத்துலக ஜாம்பவான் ரா.கி.ரங்கராஜனாயிற்றே..!

சூர்யா என்ற பெயரில் அழுத்தமான சிறுகதைகள், ஹம்சா என்ற பெயரில் நகைச்சுவை, முள்றி என்ற பெயரில் மழலைகளுக்கான எழுத்து, டி.துரைஸ்வாமி என்ற பெயரில் துப்பறியும் கதை, கிருஷ்ணகுமார் என்ற பெயரில் திகில் கதைகள், மாலதி என்ற பெயரில் குறும்பு கொப்பளிக்கும் கதைகள், அவிட்டம் என்ற பெயரில் நையாண்டிக் கட்டுரைகள், மோகினி என்ற பெயரில் சரித்திரக் கதைகள், லலித் என்ற பெயரில் ஒரு சுவாரஸ்ய தொடர்கதை...  இப்படி பல துறைகளில் பல பெயர்களில் எழுதி அசத்தியவர் ரா.கி.ர. ஒரு எழுத்தாளன் பல துறைகளில் எழுதுவது என்பதே சற்றுக் கஷ்டமான விஷயம்தான். அதிலும் எழுத்து நடையும்,.சொல்லுகிற ஸ்டைலும் பார்த்தீர்களென்றால் தனித்தனி நபர்கள் எழுதியது போலிருக்கும். ‌ஒரே எழுத்தாளர் எடுத்த தசாவதாரங்கள் இவை என்றால் நம்புவதற்கு மிகக் கடினமான விஷயம்.

அப்படிப்பட்டவர் ‘வினோத்’ என்கிற புதிய அவதாரமெடுத்து குமுதத்தில் சினிமா செய்திகள் எழுதவந்த சுவாரஸ்ய சம்பவத்தை அவருடைய நண்பரும், எழுத்தாளருமான ஜ.ரா.சுந்தரேசன் தன் (அழகான) மதிப்புரையில் சொல்லியிருக்கிறார். ஒருநாள் எடிட்டர் எஸ்.ஏ.பி. ‘நட்சத்திரக் குப்பை’ என்ற ஆங்கில புத்தகத்தில் வந்த சினிமா செய்திகளைக் காட்டி, ‘‘மிகவும் சுவாரஸ்‌யமாக இருக்கிறது. நான் இதைத்தான் முதலில் படிப்பது வழக்கம். ஒரு சினிமாச் செய்தியை ரத்தினச்சுருக்கமாக, சுவாரஸ்யமாகக் கொடுத்து, அதில் ஒரு பூனை படமும் போட்டு... ம்ஹ்ம்... நம் குமுதத்தில் இதுமாதிரி‌யெல்லாம் வருவதில்லையே...’’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார். அடுத்த இதழுக்கு சினிமா நிருபர் எழுதிக் கொண்டு வந்த செய்திகளை ரா.கி.ர எடுத்துக் கொண்டு தானே விசாரித்து வந்த மாதிரி கற்பனை செய்து புது பாணியில் ஜாலியாக எழுதினார். எடிட்டர் அதைப் படித்துவிட்டு, ‘‘அற்புதமாக இருக்கிறது. யார் எழுதியது?’’ என்று ஆவலுடன் ரா.கி.ர.விடம் விசாரிக்க, ‘‘நான்தான் எழுதினேன்’’ என்றார் ரங்கராஜன்.

அப்போது முதல் ‘லைட்ஸ் ஆன்’ என்‌ற தலைப்பில் ‘வினோத்’ என்கிற புனைபெயரில் எழுதத் தவங்கினார் ரா.கி.ர. ‘லைட்ஸ் ஆன்’ எழுத அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை மிகமிக அதிகம். சில செய்திகளை சம்பந்தப்பட்டவர்களிடம் போன் செய்து விசாரித்தும், சில விஷயங்களை சம்பந்தப்பட்டவர்களை அலுவலகத்திற்கு வரவழைத்தும் கேட்டு உறுதி செய்து கொண்டு, சினிமாத் துறையை எட்டிக்கூடப் பார்க்காமல் 24 மணி நேரமும் சினிமாக்காரர்களுடன் பழகிய மாதிரி எழுதியிருக்கிறாரென்றால்... என்ன சொல்ல! பெரும்பாலான செய்திகளின் முடிவில் ஒரு ஆங்கிலப் பழமொழி அல்லது கேட்சிங்கான ஆங்கில வார்த்தையுடன் முடிப்பது ‘வினோத்’தின் வழக்கம். அதற்கு தனி ரசிகர் வட்டமே உண்டு. பல பொன்மொழிப் புத்தகங்களைப் புரட்டி ரெஃபரன்ஸ் எடுத்து, ‘சாதாரண சினிமா செய்தி தானே’ என்று அலட்சியம் இல்லாமல் அவர் சிரத்தை எடுத்ததன் பலன்... இப்போது படித்தாலும் அந்த செய்திகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

புத்தகத்தல் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் சுவாரஸ்யத் துணுக்குகளிலிருந்து சில துணுக்குகளை உங்கள் ரசனைக்காக இங்கே சுவைக்கத் தந்திருக்கிறேன்...!

‘‘இருபதே நாட்களில் படம் எடுத்து முடித்து ரிலீஸ் பண்ணுகிற திறமை எவருக்கு இருக்கிறதோ அவர்தான் சிறந்த டைரக்டர். 120 ரோலும் 90 நாளும் செலவழிக்கிறவர்கள் எல்லாம் சிறந்த டைரக்டர் என்று சொல்லக் கூடாது- என்னையும் சேர்த்துத்தான்!’’  -கோவை செழியனின் தங்கக் கொலுசு கேசட் வெளியீட்டு விழாவில் கே.பாலசந்தர். Quote of the year.

விசுவிடம் ஒரு வழக்கம். படம் முடிந்ததும் திருப்பதிக்குப் போ்ய் மொட்டை போட்டுக் கொள்வார். அந்தப் படத்தின் பத்திரிகைக் காட்சியின் போது மொட்டைத் தலையுடன் காட்சியளிப்பார். ஆகவே ‘உறவு ஊஞ்சலாடுகிறது’ பிரிவியூவில் மொட்டைத் தலையாக இல்லாமல் முடித் தலையாக இருந்தது raised many an eyebrow. குடும்பத்தில் ஏதோ துயர நிகழ்ச்சி நடந்து விட்டதால் கோயிலுக்குப் போகவில்லையாம். மொட்டையும் போடவில்லையாம். 

‘‘சின்னக் கவுண்டரில் விஜயகாந்துடன் பம்பரம் விடுகிறீர்களே... சின்ன வயதில் பம்பரம் விட்டுப் பழக்கம் உண்டா?’’ என்று கேட்டதும், ‘‘ஐயோ, அதை ஏன் கேட்கிறீர்கள்?’’ என்று அழகாய் புருவத்தை நெரித்தார் சுகன்யா. ‘‘எனக்கு பம்பரம் விடக் கொஞ்சமும் தெரியாது. பொள்ளாச்சியில் பம்பரமும் கயிறும் வாங்கிக் கொடுத்து தினம் பயிற்சி செய்யும்படி சொன்னார் டைரக்டர் உதயகுமார். காலையில் ஷுட்டிங் புறப்படும் முன்பும், மாலை ஷுட்டிங் முடிந்தபின்பும் பம்பரம் விட்டுப் பழகிக் கொண்டேன். பம்பரத்தை உள்ளங்கையில் ஓடவி்டடாலே குறுகுறுப்பு்த் தாங்காது. வயிற்றிலே விட்டால்...? பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன்!’’  ஆக, சுகன்யா on 'top'.

ப்படி இன்னும் நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய இந்தப் புத்தகத்தை சென்னை அடையாறில் கஸ்தூரிபா நகரில் கால்வாய்க்கரைத் தெருவில் 37ம் எண்ணில் இயங்கி வரும் தங்கத்தாமரை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 160 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.70. இயன்றால் வாங்கிப் படித்து, இந்த சுவாரஸ்ய நூல் காட்டும் பழைய சினிமா உலகத்தில் உலாச்சென்று வாருங்கள், மகிழுங்கள் என்பதே என் விருப்பம் பரிந்துரை.

மே.மை.யில் இப்போது : பதியைக் கொன்ற பாவை-7


52 comments:

  1. லைட்ஸ் ஆன் எழுதி வந்தது ரா.கி.ர என்பது இப்போதுதான் அறிய வருகிறேன்:).

    ReplyDelete
    Replies
    1. ஒரு புதிய தகவல் என் மூலம் அறியக் கிடைத்ததா? மிக்க மகிழ்ச்சி மேடம்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  2. ரசிக்க வைத்த புத்தக விமர்சனம்...

    இரு பெயரில் எழுதவே நாக்கு தள்ளுகிறது.. இதில் பல பெயர்களில் பல துறைகளில் எழுதி இருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் ஜாம்பவான் தான்.

    புத்தக விமர்சனம் மெய்யாலுமே சோக்கா கீது வாத்யாரே

    ReplyDelete
    Replies
    1. பல பெயர்களில் பல துறைகளில் மட்டுமில்லை சீனு... ஒவ்வொரு துறையிலும் ஸ்கோர் பண்ணியவர் அவர். பன்முக எழுத்தாளரான சுஜாதாவே வியந்த எழுத்தாளர் ரா.கி.ர.ன்னா சொல்லணுமா? புத்தக விமர்சனத்தை ரசித்த உனக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  3. Very Interesting... :) Thank U for the info!

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை நீங்கள் ரசித்தது மாதிரியே புத்தகத்தையும் மிக ரசிப்பீர்கள் சுபத்ரா! வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாருங்கள். மிக்க நன்றி!

      Delete
  4. இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை தல....

    ஆணி அதிகம். விரைவில் படித்து விடுகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. படித்துவிட்டு ரசித்ததை உங்கள் பாணியில் எழுது்ங்‌க வெங்கட்! படிக்க வெயிட்டிங்! உங்களின் வருகை மற்றும் கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  5. பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது... (top...!)

    நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி சார்...

    பாடல் வரிகள் - நிறைவுப்பகுதி தொகுத்துள்ளேன்... வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. புத்தக அறிமுகத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி! பாடல் வரிகளின் நிறைவுப் பகுதியைக் கண்டேன். மனம் கொள்ளை கொண்டது நண்பா!

      Delete
  6. "லைட்ஸ் ஆன்" எழுதினது வினோத் இல்லையா.. நான் முன்பு விடாமல் படிக்கும் ஒரு பகுதி அது..

    அவர் மட்டுமா, த்ரில், காமெடி, வரலாறு, சினிமா, பயணப் பகிர்வுன்னு பல ஜானர்லையும் கலக்கும் எங்க பாலகணேஷ் சாரும் ஜாம்பவான் தான்..! Master of all trades!!

    ReplyDelete
    Replies
    1. என்னை மிக உயரத்தில் வெச்சுட்டீ்ங்களே ஆனந்த்...! உங்கள் ரசனைதான் என் எழுத்துக்களை உயிர்ப்பிக்கிறது. மனம் நெகிழ்ந்த நன்றி உங்களுக்கு!

      Delete
  7. நான் லைட்ஸ் ஆன் பகுதியின் தீவீர ரசிகர்
    இதுவரை ரா,கி ர தான் எழுதுகிறார் என்கிற விவரம்
    தெரியாது.சுவாரஸ்யமான பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  8. எனக்கு புதிய ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தியிருக்கின்றீர்கள்.இவ்வளவு திறமையான எழுத்தாளரா? என்று வியக்கின்றது என் மனம்

    ReplyDelete
    Replies
    1. புகழ்பெற்ற எழுத்தாளரை அறிந்து கொண்டஉங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. ஒரு மினி லைப்ரரியே உங்கள் கைவசம் இருக்கும் போது சுவாரஸ்யமான புத்தகங்களை தேடி போற வேலைய வைக்காம ஈஸியா அறிமுக படுத்தி விடுகிறீர்கள். வாசிப்பிற்கான நேரத்தை சரி செய்ய முடியாமல் திணறும் எனக்கு உங்கள் விமர்சனங்கள் பெரிய உதவி..!

    ReplyDelete
    Replies
    1. நூல் விமர்சனத்தை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. அவரது எழுத்துநடைக்காகவே ரசித்த பகுதிபற்றி ரசனையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்லுப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  11. Not lights on is famous for English proverbs but also if my memory is right, for so many abbreviations which made the readers to pluck their hair to find out its expansion. These abbreviations actually started in Question Answer part and then it skips to Lights On. Even in your last post, you have used such an abbreviation i.e. Gu.Mi.Si.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மிகச் சரியே. அவர் கொடுக்கும் சுருக்கங்கள் மிகவே யோசிக்க வைக்கும். ரசனைக்கும் உத்தரவாதமானது. மிக்க நன்றிப்பா!

      Delete
  12. ரா.கி.ரங்கராஜன் ஒரு பன்முக எழுத்தாளர்.லைட்ஸ் ஆனில் அவரது ஆங்கில பஞ்ச் அற்புதமாக இருக்கும். பின்னர் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் பற்றியும் சைட்ஸ் ஆன் என்றும் எழுதினார் என்று நினைக்கிறேன்.பள்ளி வயதில் படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மாலைமதி நாவல் இதழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விமர்சனம் மற்றும் சுவாரஸ்யங்களை ஸைட்ஸ் ஆன் என்ற பெயரில் எழுதினார் ரா.கி.ர. அவரது எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி முரளி!

      Delete
  13. குமுதத்தில் வந்தபோது மிக ரசித்த பகுதி. மறுபடி நினைவு படுத்தியதில் சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ்ந்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

      Delete

  14. குமுதம் வாங்கியவுடன் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கும் பகுதி லைட்ஸ் ஆனும், அரசு பதில்களும்தான். சரியாகத்தான் பரிந்துரைத்து உள்ளீர்கள்.
    மிக்க நன்றி

    புதுகை ரவி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  15. தசாவதாரம் வியக்க வைத்தது.
    தகவலுக்கு நன்றி.
    அப்போ சுனில் யார் ?

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய ஆசிரியர் குழுவில் எவரோ அது! தசாவதாரத்தைப் படித்து வியந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  16. வியக்க வைக்கிறது உங்களின் “லைட்ஸ் ஆன்“ பதிவு.
    எதையும் படிக்கும் பொழுது தான் நம் அறியாமையை
    அறிய முடிகிறது பால கணேஷ் ஐயா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நூல் அறிமுகத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. நானும் திரு ராகிர-வின் விசிறி. அதுவும் இந்த லைட்ஸ் ஆன் பகுதியைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எனக்கு எழுதிய பதில் கடிதத்தைத் தான் நான் அவரது மறைவுக்கு எனது அஞ்சலியாக என் பதிவில் போட்டிருந்தேன்.
    இதோ இணைப்பு:http://wp.me/p244Wx-jY

    அவர் எழுதிய பஞ்ச் வாக்கியங்கள் இன்னும் என் நாட்குறிப்பில் இருக்கின்றன.

    பொழுதுபோக்காகப் படிக்க நல்ல புத்தகம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்ட பதிவை நான் முன்பே படித்ததுண்டு ரஞ்சனிம்மா. அப்பல்லாம் வேர்ட்பிரஸ்ல கருத்து போடத்தான் தெரியாது. இந்த புத்தகத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த ந்னறி!

      Delete
  18. அறிந்திராத தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. அறிந்திராதவற்றை அறிந்து கொண்ட தங்கைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  19. லைட்ஸ் ஆண் எழுதியது ரா.கி.ரங்கராஜன் என்பது இப்பொழுது தான் எனக்குத் தெரியும் . அது ஒரு நல்ல சுவாரஸ்யமான பக்கம். அதிலிருந்து சில வற்றை எடுத்துப் போட்டதைப் படித்ததில் என் வயதில் சில வருடங்களைத் தொலைத்து விட்டேன்.
    நன்றி பாலகணேஷ் சார் பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் மேடம்! இந்தப் பகிர்வை ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  20. குமுதத்தில் ரா.கி. ரங்கராஜன் எல்லா பத்திரிகையாளர்களிடம் இருந்து செய்திகளை வாங்கி மாற்றி எழுதுவார் அதற்காக தனியான சன்மானம் வந்து விடும்.

    Lights on is not written by a single person. Perfectly edited by Ra.ki.Rangarajan as vinoth

    லைட்ஸ் ஆனில் பங்கெடுத்த பத்திரிகையாளர்கள்:

    1.செல்லப்பா
    2.பாரிவள்ளல்
    3.மயிலை ஸ்ரீதரன் (தற்போது சுப்ரஜா ஸ்ரீதரன் என்ற பெயரில் முக நூலில் active ஆக உள்ளார்.
    4.ரங்கராஜன் என்கிற சுதாங்கன்
    5.ராமசந்திரன் ( புகைப்பட நிபுணர் உத்ராவின் சகோதரர் ,சில நாட்கள் பத்திரிகையாளராகவும் பணி ஆற்றினார்.பின் முழு நேர புகைப்படக்காரர் ஆகி விட்டார்.
    6.தவிர சில சினிமாகாரர்கள் அவர்களே தொலைபேசியில் சில சிக்கலான விஷயங்களை சொல்வார்கள் பிறர் பற்றி. அது கிராஸ் செக் செய்யப்படும்.

    ReplyDelete
    Replies
    1. செல்லப்பா என்பவரிடமிருந்துதான் பெரும்பாலான தகவல்கள் வரும் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா. தகவல்களை அவர் கிராஸ் செக் செய்தது பற்றியும் எழுதியிருக்காங்க. ஆனா இத்தனை பேர் பின்னணியில உதவினது இப்ப நீங்க ‌சொல்லித்தான் தெரியுது.

      Delete
    2. Publisher may conveniently given credit to Chellappa alone.But the fact is fact.May be the result of ignorance of the publisher at the time publishing the same.

      Delete
  21. புத்தகமாக லைட்ஸ் ஆன் - சுஜாதா தேசிகன்
    http://sujathadesikan.blogspot.com/2013/02/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. சீனியர் சுஜாதா தேசிகன் ஸார் அருமையா எழுதியிருக்கார். ரா.கி.ர. மறைவிற்கு முன் அவர் கண்ணில் புத்தகத்தைக் காட்டிவிட வேண்டுமென்று சுபாவுடன் நானும் சேர்ந்துதான் பணி செய்தேன். ஆனால் முடியாமல் போன குற்றஉணர்வு இன்னும் தேசிகன் žஸாரைப் போல என்னுள்ளும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. விதி!

      Delete
  22. லைட்ஸ் ஆனில் பங்கெடுத்த பத்திரிகையாளர் செல்லப்பா பற்றி சுப்ரஜா ஸ்ரீதரன்...

    நாங்கள் இருவரும் அப்பொழுது ஃபிரீலான்சர்ஸ்தான். குமுதம், குங்குமம், சாவி ,சுஜாதா இதழ்களுக்கு அவரும் எழுதுவார்.

    அப்பொழுது மயிலை ஸ்ரீதரன் என்கிற பெயரில் எழுதி வந்ததால் பார்க்கும் போதெல்லாம் மீசையும் சிரிக்க "என்ன மயிலை" என்று கூப்பிடுவார் .

    குமுதத்தில் சில முறை அவர் எழுதி தந்த ஐடியாவை என்னிடம் தந்து முடித்து தரச் சொல்வார்கள்.அவரிடம் அந்த விஷயத்தை சொல்வேன் .

    ''அட ,போய் முடிச்சுட்டு வாங்க ,யார் எழுதினா என்ன என்பார் எந்த வருத்தமும் இல்லாமல்"

    ஒரு முறை குமுதத்தில் இருவரும் இருந்த பொழுது ''ஒரு நகைச்சுவை நடிகர், பிரமாதமா வருவார், வாங்க அறிமுகப் படுத்தி வைக்கிறேன்". வெளியில் அழைத்து வந்தார். வாசலில் அந்த நடிகர் ஸ்கூட்டரில் சாய்ந்து நின்று காத்திருந்தார்.

    அவரை அறிமுகப் படுத்திய செல்லப்பா,"இப்ப நாளும் படத்துல கமிட் ஆகியிருக்காரு ,பாரதி ராஜா படத்துல நாலு ஹீரோல ஒரு ஹீரோவா கமிட் ஆயிட்டாரு "என்றார்.

    செல்லப்பாவை போலவே அவர் அறிமுகப்படுத்துபவர்களும் சாந்தமானவர்களாகவே இருப்பது ஒரு விசித்திரமாகவே இருக்கும்.

    குமுதம் அலுவலக வாசலுக்கே வந்து பேட்டி தந்த அந்த நடிகர்தான் பின்னாளில் ஜனரஞ்சகமாக கலக்கிய ஜனகராஜ்.

    ஒரு கொயர் நோட்டுப் புத்தகம் நிறைய வைத்திருப்பார் செல்லப்பா. அதில்தான் தான் பிரபலங்களைப் சந்தித்துப் பேட்டி எடுக்கும் போது அதிலேயே கேள்விகளையும் பதில்களையும் எழுதி கொள்வார்.

    அது பற்றி கேட்டபோது ,''தொகுத்து எழுதும் போது நினைவில் இருக்கும். இது நமக்கு நினைவூட்டலாகவும் ஆதாரமாகவும் இருக்கும்" என்பார்.

    குமுதம் தவிர பிற இதழ்களில் மீசை என்று பேரைப் போட்டு எழுதுவார்.

    ''குமுதத்தில எழுதறதால தான் நம்மளை எல்லோரும் கூப்பிட்டு மாட்டார் அசைன்மெண்ட் தராங்க,அவங்க பத்திரிகையில நம்ம பேரு ரெகுலரா வந்தா போதும்"என்பார்.

    மிகவும் ப்ராக்டிகலான மனிதர்.எல்லா மனிதர்களையும் அவருக்கும் சில குறைகள் இருந்தாலும் அவரது சாந்தமான குணத்தினாலும் ஸ்நேகமான சிரிப்பினாலும் நிறைவான குனங்களினாலும் என்றும் மனதில் நிற்பார் குமுதம் செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. செல்லப்பா ஸாரிடம் இத்தனை ப்ளஸ் பாயிண்ட்டுகளா? என்ன ஒரு பெருந்தன்மையான இளகிய மனமுள்ளவராக இருந்திருக்கிறார்!

      Delete
  23. செல்லப்பா பற்றி சுப்ரஜா ஸ்ரீதரன் மேலும் கூறுகிறார்...


    செல்லப்பா குழந்தை மாதிரி .திடீர் என்று ரெண்டு நாள் அவரை காணும்.திரும்பி வந்தவரிடம்,''எங்க சார் போனீர்கள் ?" என்று கேட்டேன்.

    ''படத்துல நடிச்சுட்டு வரேன் ,அதுவும் மகேந்திரன் படத்துல" என்றார் குழந்தையாக.

    ''என்ன படம் சார் ?"

    "நம்ப சுகாஸினி நாயகியாக நடிக்கிற படம், உங்களுக்குத் தெரியுமே உங்க நண்பர் மோகன் நடிக்கிற படம், அதுல ராஜா அற்புதமா ஒரு பாட்டு போட் டுருக்காரு, காலையில ரெண்டு பேர் ஜாக்கிங் போயிட்டே இருக்கும் பின்னணியில இந்தப் பாட்டு வரும், அதுல ஆரம்பத்துல குளத்துல குளிச்சிட்டு ஒரு ஆலாபனை" என்று முகம் மலர.

    படத்தில் அற்புதமாக வந்திருந்தது.

    ''எங்க எடுத்தது சார் ?'என்று கேட்டேன்.

    ''மகேந்திரன் யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு,ஆனா விடியகாலையில மூணு மணிக்கே எழுப்பி ,ஐஸ் கட்டி தண்ணியில இறக்கி விட்டாங்க "என்றார் சிரித்துக் கொண்டே.

    கடைசி வரை பல முறை கேட்டும் அவர் சொல்லவில்லை .

    அந்தப் பாடலை மீண்டும் யூ ட்யூப்பில் பார்த்தேன்.

    மனம் நெகிழ்ந்தது .

    http://www.youtube.com/watch?v=yeBs2V0C4f0

    ReplyDelete
    Replies
    1. யூடியூபில் போய் அந்தப் பாடலை நானும் இப்போது பார்த்தேன். குளத்தில் பெரிய மீசையுடன் ஆலாபனை செய்யும் அவரைப் பார்க்கையில் உண்மையில் என் மனசும் நெகிழ்ந்துதான் போனது. நல்ல பல தகவல்களைச் சொல்லிய உங்களுக்கு மனம் நெகிழும் என் நன்றிகள் அண்ணா!

      Delete
  24. சுவாரஸ்யமான தகவல்கள். புத்தக பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. புத்தகப் பகிர்வை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  25. பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
    Replies
    1. பல புதிய தகவல்களை அறிந்து கொண்ட குட்டனுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube