Monday, March 4, 2013

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, March 04, 2013

==============================================================
முன்குறிப்பு: ‘‌எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது’ என்பவர்கள் (அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும்.
==============================================================

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’  பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.

எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்‌ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.

சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்‌னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

==============================================================
ஒரு ரசிகனின் பார்வைல நான் ரசிச்ச MGR சண்டைகளைப் பத்திச் சொன்னேன். அவற்றில் நடிச்ச வாத்யார் அதைப் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க விருப்பமுண்டா? சொன்னீங்கன்னா, அவரோட பழைய பேட்டிகள்லருந்து தொகுத்து ஒரு பதிவா தந்துடறேன். (ஹையா! இன்னொரு பதிவு தேத்த ஐடியா கிட்டிருச்சு. ஜாலி!)
==============================================================

71 comments:

  1. வாத்தியார் என்ன சொல்றாரு? அதையும் விவரமாகச் சொல்லிப்போடுங்கண்ணே..

    ReplyDelete
    Replies
    1. அடுத்தது ஒரு மிக்ஸர் கொறிக்கத் தரப்போறேன். அது முடிஞ்சதும் சொல்லிப் போ‌டறேனுங்கோ!

      Delete
  2. இந்தப் பதிவிலிருந்து மட்டும் விலகிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சரீ... புரிகிறது. நன்றி நண்பா!

      Delete
  3. காவல்காரன், ரகசிய போலீஸ் படங்களில் வாத்தியார் சண்டை வித்தியாசமாக இருக்கும்.
    ஒளிவிளக்கு/நம் நாடு படத்தில் ஒரு தூள் கிளப்பும் சண்டை பார்த்த ஞாபகம் - அப்புறம் புதிய பூமி - சிறந்த சண்டைகளில் ஒன்று

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... காவல்காரன், புதியபூமில்லாம் எனக்கும் பிடிக்கும். ரொம்ப ஓவரா புராணம் பாடிட்டே போறானேன்னு தோணிடுமேன்னுதான் ஷார்டடா சொன்னேன் அப்பா ஸார்!

      Delete
  4. நீரும் நெருப்பும் விட ஆயிரத்தில் ஒருவன் பெட்டர்.

    ReplyDelete
    Replies
    1. நீரும் நெருப்பும் படம் ரொம்பவே சுமார். நான் ரசிச்சது இடது கையால வாள் சுழற்றுகிற லாகவத்தைத் தான்! ஆயிரத்தில் ஒருவன்ல அந்த பழங்கால பாய்மரப் படகை வடிவமைச்சு கொண்டு வந்த விதத்துக்காகவே பாராட்டலாம்!

      Delete
  5. வாள் சண்டை என்றவுடனேயே அதிகம் ஞாபகம் வருவது "நீரும் நெருப்பும்" தான்...

    எம்.ஜி.ஆரைப் பிடிக்காது என்பவர்கள் கையில் சுருள் கத்தி கொடுத்தால் போதும்... கத்திக்கொண்டே பிடிக்கும் என்று சொல்லலாம்...

    பேட்டியை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு மிக்ஸர் தந்துட்டு அப்புறம் நீங்க விசிலடிச்சு ரசிக்க வாத்யார் பேட்டி வரும். மிக்க நன்றி நண்பா!

      Delete
  6. முன்குறிப்பு: ‘‌எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது’ என்பவர்கள் (அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும்.// எம்ஜிஆர் சண்டை என்றவுடன்.. ஆஹ் அதுகிடக்கட்டும் என்று நினைத்த என்னை, உங்களில் இந்த முன் அறிவிப்புதான் படிக்கத்தூண்டியது.. என்னமாய் விளம்பரம்..!!

    சண்டைகளை ரசித்தது இருக்கட்டும், அவர் குத்து விடும் போது டிஷ்யூம் சத்தம் வருமே அதையும் சொல்லியிருக்கலாம்..

    முன்பெல்லாம் சண்டைக் காட்சிகளின் போது நம்மை சிரிக்கவைப்பதற்கென்றே இடையில் சில நகைச்சுவை சண்டையும் வருமே.. ஒரு மாதிரியான மியூசிக் ஒலியுடன்..பெண்கள் சண்டை போடுவதைப்போலவும், நகைச்சுவை நடிக நடிகர்கள் வில்லன் கும்பலில் உள்ளவர்களோடு சண்டை போட்டு சொதப்பி விடுவதைப்போலவும் இருக்கும். சின்னகுழந்தையாக இருக்கும் போது இந்த காட்சிகள் அவ்வளவு தூகலத்தைக்கொடுக்கும் தெரியுங்களா..

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.. ஆனால் மலை உச்சியில் இருந்து குட்டிக்கர்ணம் போட்டு பாய்ந்து பாய்ந்து சண்டையிடுவது டூப் ஆட்கள்தானே..! பாவம்.

    சிறுவயதிலே நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்,..

    ReplyDelete
    Replies
    1. அந்த குத்து விடும் சப்தம் பின்னாட்களில் பிரபு, அர்ஜு்ன் காலங்களில் வேறுவிதமான சத்தமாக மாறியது. நகைச்சுவை கலந்த சண்டைகள் எபு்பவுமே ரசிக்க வைப்பவை. ரஜினியின் மிகப்பெரும வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். நடிகரின் மீது மிகப் பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதால் டூப்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என்பது எம்.ஜி.ஆரின் ‌எண்ணம். ஆக, ரசிச்சுப் படிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!‘

      Delete
  7. மாட்டுக்கார வேலன் சண்டைக்காட்சி எனக்கு மிகவும் பிடித்த சண்டைக் காட்சி.. (வாழைத் தோப்புக்குள் வரும் அந்த காட்சி)

    என் தந்தை வாத்தியார், வாத்தியார் என்று உயிரை விடுவார்.எங்கப்பாவே வாத்தியார், அவருக்கு யாரு வாத்தியார்ன்னு ஒரு ஆர்வத்துல தான் எம்ஜியார் படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் அவரோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ், ரோமேன்ஸ், டயலாக் டெலிவரி, அப்புறம் சண்டை காட்சிகள் இப்படி ஒவ்வொன்னும் எனக்கு ரொம்ப பிடிச்சு போனது.. எவர்கிரீன் ஸ்டார் அண்ட் டிரெண்ட் செட்டர்ன்னு சொல்லணும் அவரை..!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டு மகிழ்வு தந்த ஆனந்துக்கு மனம் நிறை நன்றி!

      Delete
  8. //கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.//

    தலைவர் கவுண்டமணிய அடிச்சிக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. தலைவர் கவுண்டமணி பெரும்பாலும் ஒரே ஒருத்தரத்தானே உதைச்சாரு. இவங்கல்லாம் வெரைட்டியா உதைச்சவங்களாச்சே..! ஆனாலும் கவுண்டர் உதை ஒரு தனி ஸ்டைங்கறது நிஜந்தான்! மிக்க நன்றி!

      Delete
  9. வாவ்!! படிக்குபோதே சண்டை காட்சிகள் கண்முன் படமா விரியுது சார்.. அவரை பற்றி யார் எழுதினாலும் படிக்கும் போதே ஒரு வித சந்தோசம் வருது! தொடர்ந்து இதுபோல பதிப்பு போடுங்க!!

    //ஒரு ரசிகனின் பார்வைல நான் ரசிச்ச MGR சண்டைகளைப் பத்திச் சொன்னேன். அவற்றில் நடிச்ச வாத்யார் அதைப் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க விருப்பமுண்டா?/// - இதென்ன சார் கேள்வி.. உடனே செய்யுங்க..பிளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. ரைட் சமீரா... உடனே ‌போட்டுரலாம். ரசிச்சுப் படிச்சுக் கருத்துச் சொன்ன உனக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. You have given a tip of an iceberg about MGR the great actor. Thank God you have focussed only on his fighting scenes not on other scenes - especially love scenes. In those days, most of the fathers encouraged to see Sivaji movies but not MGR movies for the reasons better known to them only. May be it is due to decent handling of love scenes by Sivaji.

    ReplyDelete
    Replies
    1. காதல் காட்சிகளா...? அதைப் பத்தி தனியா ஒரு கட்டுரையே எழுதணும். ஆனால் அதுக்கு சில வார்த்தைகளைப் பிரயோகித்தால் பெண் வாசகர்கள் என் முகத்தில் குத்துவார்கள் என்பதால் விட்ரலாம் மோகன! ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  11. MGR ரசிகர்களுக்கு ரஜினி என்றால் ஏன் எரிகிறது.
    "ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது."

    சண்டைக்காட்சிகளே அபத்தம்தான்.

    ReplyDelete
    Replies
    1. கண்ணை நம்பாதே!

      ஏதோ எம் ஜி ஆர் புகழ் பாடுறாரு. பாடிட்டுப் போகட்டுமே, விடுங்க.

      மற்ற நடிகர்களை முடிந்தவரை இறக்கி எம் ஜி ஆரை மேலே ஏற்றினால்தானே எம் ஜி ஆர் உயர்ந்தவராக தெரிவார்? அதனால அப்படி செய்றாரா இருக்கும்!

      எம் ஜி ஆர் ரசிகர்களுக்கெல்லாம் ரஜினி பிடிக்காது என்பது உண்மை அல்ல! என்னை மாதிரி ரஜினி ரசிகர்கள் பலருக்கு எம் ஜி ஆர் பிடிக்காமல் இருப்பதும் அரிதல்ல!

      ஒருவர் ரசனையை வைத்து யாரையும் மதிப்பிட முடியாது என்பது நான் கற்றது!

      ***சண்டைக்காட்சிகளே அபத்தம்தான். **

      :))))

      Delete
    2. நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிஞ்சுக்கலை கண்ணை நம்பாதே! ஹீரோ ஒரு குத்து விட்டா வில்லன்க வாயில அரை லிட்டர் ரத்தம் கக்கறது சின்ன கவுண்டர் விஜயகாந்த் பண்ணினது. ஒரு உதை விட்டா ஒன்ரை கிலோமீ்ட்டர் பறந்து எலக்ட்ரிக் கம்பத்துல மோதி அடியாள் விழறது சரத்குமார் ஆரம்பிச்சு இன்னிக்கு எல்லா ஹீரோவும் பண்றது. அதைத்தான் சொன்னேன். நகைச்சுவை தடவின ரஜினி சண்டைகள் எப்பவுமே ரசிக்க வைப்பவைதான். மிக்க நன்றி நண்பரே! அழகான ஒரு பதில் தந்த வருண், உங்களுக்கும் என் மனம் நிறைய நன்றி!

      Delete
  12. Bala Ganesah, Uzhaikkum Karangal maan komu sandaiya eppadi sir sollaama vittenga. Unga pechchu kaai !

    MGR is a truly a legend and his movies are a treat to everybody. Long live MGR's name. Thanks.

    ReplyDelete
    Replies
    1. அடடா... நான் மறந்தது தப்பாச்சே! நினைவுபடுத்தி, தலையில் குட்டிய நண்பர் கண்ணனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. உண்மைதான். சண்டைக்காட்சிகளில் ஒரு கலை அழகு இருக்கும் அப்போதெல்லாம்.

    காக்கிச் சட்டையில் போஸ்டர் ஒட்டும் காட்சியில் சின்ன ஏணியை வச்சுக்கிட்டு கமல் போட்ட சண்டை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.

    சும்மா பறந்து பறந்து போடும் சண்டையெல்லாம் ஃபாஸ்ட்பார்வேர்டு பண்ணத்தான் லாயக்கு.

    பதிவுலக நண்பர் ஆசாத் ஜி. ஒரு சண்டைப்பிரியர். அதுலே இருக்கும் நயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வார். எப்படியெல்லாம் சிலர் அருமையா சண்டைகளைக் கம்போஸ் பண்ணுறாங்கன்னு அவரெழுத்தில்தான் புரிஞ்சுக்கிட்டேன்.

    தசாவதாரம் முதல் ஸீன் சண்டையை அவர் எழுத்தில் வாசிக்கணும்.

    கிடைச்சால் உங்களோடு பகிர்ந்துக்குவேன். சரியா?

    ReplyDelete
    Replies
    1. காக்கிச் சட்டை மாதிரியே ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்துல கைல புஸ்தகத்தை வெச்சுக்கிட்டும், ‘அந்த ஒரு நிமிஷம்’ படத்துல பானைகள் மேல கால்களை மாத்தி மாத்தி வெச்சு ஒரு பானையும் உடையாம போடற சண்டையாகட்டும்... கமல் அசத்துனது ஒரு தனி பதிவே எழுதணும் டீச்சர்! ஆசாத்ஜியின் பதிவைப் பகிர்ந்ததுக்கு நன்றி. படிச்சு ரசிச்சு கருத்தும் போட்டுட்டேன். மிக்க நன்றி!

      Delete
  14. http://ennam.blogspot.co.nz/2008/06/blog-post.html

    ReplyDelete
  15. சிறுமியாக இருந்த பொழுது எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் எம் ஜி ஆர் படம் போட்டால் சணடைக்காகவும்,பாடலுக்காவுமே அம்மாவிடம் கெஞ்சி அனுமதி வாங்குவேன்.அம்மாவும் என்னை துணையுடன் அனுப்புவார்கள்.இப்பொழுதெல்லாம் டிவியில் வரும் திரைப்படங்களின் சண்டைக்காட்சியை காண நேரிட்டாலும் அலுப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பச் சரி ஸாதிகாம்மா. என் மனநிலையும் இப்படியே... மகி்ழ்வு தந்த கருத்திற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. சண்டைக் காட்சிகள் படம் என்றாலே எம்ஜிஆர்தான். நன்றாகவே ரசித்து பதிவை எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் ரசனையை ஆமோதி்த்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  17. //ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.//

    ரொம்ப கரெக்ட்.. இதில் சில மஹா ஒல்லியான ஹீரோக்கள் காட்டும் வீரதீர பிரதாபங்கள் நம்பவே முடியறதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நீங்க சொல்ற ஒல்லியான ஹீரோவின் மனசுல புரூஸ்லின்னு ஒரு நினைப்பு இருக்கலாமோ என்னமோ... ரசிச்சுப் படிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  18. சண்டையை பார்த்ததில்லை. சண்டை காட்சிகளை நீங்க ரசித்து சொன்னது நல்லாயிருக்கு..
    அவற்றில் நடிச்ச வாத்யார் அதைப் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க விருப்பமுண்டா?//

    தெரிஞ்சிக்கிறோம் சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சதுக்கு மிக்க நன்றி உஷா. வாத்தியாரின் பேட்டித் தொகுப்பு வியாழனன்று வெளியிடுகிறேன். அவசியம் பாருங்கள்!

      Delete
    2. என்னா? சண்டையைப் பார்த்ததில்லையா? இருக்குற வேலையெல்லாம் அப்படியே நிறுத்திட்டு மொதல்ல ஒரு எம்ஜிஆர் படத்தைப் பாருங்க சொல்றேன்...

      Delete
  19. நூறு பேரை தூக்கி அடிப்பார் ஒரு ஹீரோ. இதைவிட வாள் சண்டை மேல்.

    ReplyDelete
    Replies
    1. வாள் சண்டையி்ன் ரசனையே தனி மாதேவி. ரசிச்சப் படிச்ச உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  20. புரட்சி தலைவரின் மான் கொம்பு சண்டையை மறந்துட்டீங்களே?

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் வெங்க்! ஸாரி. ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. //(அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும்.//

    விலகி விட்டேன்.....

    ReplyDelete
    Replies
    1. கண்ணியமாய் விலகிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  22. /பறந்து பறந்து போடும் சண்டையெல்லாம் ஃபாஸ்ட்பார்வேர்டு பண்ணத்தான் லாயக்கு./ அதைதான் செய்திடுவேன்:)!

    பழைய பேட்டிகளின் பகிர்வுக்குக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்டுங்க மேடம்! பாஸ்ட் பார்வர்ட் பண்ணுவதே சிறப்பு! பழைய பேட்டித் தொகுப்பு வியாழனன்று வருகிறது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  23. தாமு, பிச்சை, பீடர் என்று இரண்டு மூன்று வில்லன்கள் இருந்தால் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு விதமான சண்டைக் காட்சி இருக்கும் எம்ஜிஆர் படங்களில்.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நான் குறிப்பிட விரும்பியது அப்பா ஸார் அந்த வெரைட்டிதான் மனசைக் கவர்ந்தது.

      Delete
  24. மிகவும் சுவாரசியமான ஆராய்ச்சி. அவருடைய சண்டைக்காட்சிகள் கண் முன் விரிந்தது. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  25. நான் முதலில் அவர் சண்டையை ரசித்தது 'மாட்டுக்கார வேலனி'ல்.

    எம் ஜி ஆர் - ஜஸ்டின் சண்டைக் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஸ்ரீராம். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  26. வாழ்வில் நமக்கு ஒரு நடிகர் பிடிக்கவில்லை என்றாலும், நம் மதிப்பிற்குரிய நண்பர் அந்த நடிகரின் ரசிகராக இருக்கும்போது, அவர் நட்பின்மீது உள்ள மதிப்பில் அவர் ரசனையை கவனிப்பதுண்டு.. எம் ஜி ஆர் சண்டைகள் அதுபோல் கவனிக்கப்பட்டனணு சொல்லலாம். எம் ஜி ஆர வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் சண்டைகளால் சிறுவர்களைக் கவர்ந்தார் என்பதே. ரஜினியையும் அதே போல சொல்லலாம். சண்டை என்பது ஒரு மிகப்பெரிய பிலஸ். அன்பேவா படத்தில்கூட சண்டை சேர்க்கபட்டிருக்கும். சண்டை இல்லாமல் வந்த எம் ஜி ஆர் படங்கள் தோல்வியடையும் என்பதையும் ஆராய்ந்து அறிந்து புரிந்து இருக்கார்கள் சினிமா வள்ளுனர்கள்!:)))

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் வருண். எம்.ஜி.ஆர். விரும்பியான நான் நான் சிவாஜி படங்களைப் பார்த்து ரசித்தது நீங்கள் சொன்ன அடிப்படையில்தான். ரஜினியின் ஆக்ஷன் வெற்றிக்குக் காரணம் அதில் மெலிதான நகைச்சுவை இருந்ததுதான். சண்டைக் காட்சிகள் இல்லாமல் படங்கள் அமைக்க எம்.ஜி.ஆரே விரும்பியதில்லை என்பது வியாழன் நான் வெளியிடும் அவர் பேட்டித் தொகுப்பு சொல்லும். உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  27. :)))

    எதற்கு இந்த சிரிப்பான்! என எண்ண வேண்டாம்.... எவ்வளவு ரசித்து எழுதி இருக்கீங்கன்னு நினைச்சு சிரித்தேன்! :)

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்து எழுதியதை சிரித்து ரசித்த நண்பருக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  28. பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது!

    நீங்கள் எழுதியிருப்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியே! சில நாட்களுக்கு முன் ஒரு புலியுடன் எம்.ஜி.ஆர் சன்டையிட்டதை ரசித்துப்பார்த்தேன். சண்டைக்காட்சிகள் மட்டுமல்ல, காலத்தால் அழியாத தித்திக்கும் பாடல்கள் பலவற்றைத் தந்ததற்காகவே அவரை என்றும் மறக்க இயலாத வண்ணம் செய்து விட்டார்!

    ReplyDelete
    Replies
    1. கரெக்‌ட். வாத்யார் படப் பாடல்கள் பத்தி தனியா பல பதிவுகள் எழுதலாம் மனோம்மா. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  29. சண்டை காட்சின்னாலே வாத்தியார் படம்தாங்க. என்ன ஒரு வேகம், சுறுசுறுப்பு. சும்மா மின்னல் மாதிரி சுத்தி சுத்தி வருவாரு. 'ஆயிரத்தில் ஒருவன்' இப்பதான் ரெண்டு நாள் அப்படி ரசிச்சு பாத்தேன். அதே மாதிரி குடியிருந்த கோவில் சண்டை காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படமே எனக்கு அவ்வளவு பிடிக்கும். பல தடவ பாத்திருக்கேன். தலைப்பை படிச்சதுமே மனசுல வந்த படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. நீங்களும்
    அதை பத்தி அழகா எழுதி இருக்கீங்க. ஆயிரம் இருந்தாலும் ஒரு கைல ஹீரோயினை தூக்கிண்டு, இன்னொரு கைல வாத்தியார் சண்டை போடற அழகே தனிதான், இல்லையா! :))
    காவல்காரன் - குத்து சண்டை, அன்பே வா - குண்டனோட, இதயக்கனி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - வாள் சண்டை, படகோட்டி கடைசி சண்டை இப்படி எல்லாமே கிளாஸ்.
    இதிலும் எப்பவும் ரொம்ப ரொம்ப ரசிச்சு பாக்கறது எம்.ஜீ.ஆர். நம்பியாரோட போடற சண்டைதான்.



    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனையுடன் என் ரசனையும் ஒத்துப் போவதில் ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மீனாக்ஷி!

      Delete
  30. சிலம்பாட்டம் பத்தி பேசும்போது எப்படிங்க பெரிய இடத்து பெண் சண்டைய மறந்தீங்க.
    தலைவர் மின்னல் வேகத்துல சிலம்பு சுத்துவாரு. எனக்கு தெரிஞ்ச வரையில் வேற எந்த நடிகரும் அந்த வேகத்துல சிலம்பு சுத்தினதில்ல

    ReplyDelete
    Replies
    1. சிலம்பத்தை நினைச்சதும் ‘தாயைக் காத்த தனயன்’ மனசுல வந்தது. பெ.இ.பெண் தோணாதது என் பிழை. அதுல வர்ற அந்த கம்பு சண்டை, அதுலயும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கண் மயங்கற நிலையிலயும் கம்பு வீசற லாகவம் இருக்கு பாருங்க... ரொம்பவே ரசிச்ச விஷயம் அது. நினைவுபடுத்தி, ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி பிரசன்னா கண்ணன்!

      Delete
  31. அந்த அந்தக் காலகட்டம் என்று ஒன்று இருக்கிறது.

    வயதானவர்கள் இன்றைய காதல் காட்சிகளைக் கலாய்க்கிற மாதிரி....

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ... வயதானவ்ன் விடும் பெருமூச்சு என்று நினைத்து விட்டீர்களா அருணா...! நான் அப்படியொன்றும் வயதானவனல்லவே! நான் பழைய படங்களை ஸ்லாகிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. நாளைய என் பதிவில் அதை விரிவாக விளக்குகிறேன். மிக்க நன்றி!

      Delete
  32. வரலாற்று நாவல்கள் படிக்கையில்...
    வாள் சண்டைகள் பற்றிய வருணனைகள்
    வருகையில்...
    கற்பனையிலேயே அதற்கான
    திரைபோட்டு
    இப்படித்தான் போரிட்டு இருப்பார்கள்
    என்று எண்ணம் தோன்றும்..
    அதற்கு உயிரூட்டம் கொடுத்தவை
    திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் சண்டைக் காட்சிகள்...

    அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ரசித்ததில் எனக்கு மிகமிக சந்தோஷம் மகேன். மிக்க நன்றி!

      Delete
  33. Looking to the numerous comments conveying so many things about the fighting scenes of the heroes on the silver screen, I really feel like wathcing MGR movies just for the sake of comparing the same with the present day fighting scenes of so called heroes. The arguments and the counter arguments put forth by the readers of the post, make me really feel proud that I am a regular reader of this post. Above all, the comments are very very decent like the author of the post. THIS IS THE SUCCESS OF THE AUTHOR.

    ReplyDelete
    Replies
    1. ஆ...! இதுபோன்ற மனம் திறந்த பாராட்டுக்கள்தான் இந்த வண்டி ஓடுவதற்கு பெட்ரோல் மோகன்! என் இதயம் நிறை நன்றி!

      Delete
  34. எத்தனை சண்டை போட்டாலும் புரட்சித் தலைவர் முகத்தில் துளிக் கூட அயர்வே தெரியாது! உடைகள் கசங்காது!அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி!
    உங்கள் பதிவு, அதற்கு வந்திருக்கும் கருத்துரைகள் எல்லாமே ரசிக்க வைத்தது.
    துரைஜி! புரட்சித் தலைவர் பாய்ந்து பாய்ந்து போடும் சண்டைகள் போலவே நீங்களும் பாய்ந்து பாய்ந்து போட்ட காமெண்டுகள் ரசிக்க வைத்தன!புரட்சித்தலைவரின் உண்மையான ரசிகன் நீங்கள் என்று மற்றொருமுறை (முதல்முறை எப்போ?) நிரூபித்து விட்டீர்கள்!

    நான் மிகவும் ரசிக்கும் சண்டைக் காட்சி:
    எங்கள் வீட்டுப் பிள்ளையில் ஒரு சினிமா காட்சிக்காக புரட்சித்தலைவர்
    சண்டை போட வருவார். தன்னுடன் மோத வருகிறவர்களை மொக்கு மொக்கென்று மொக்கிவிடுவார். அடிபட்ட ஒருவர் டைரக்டரிடம் வந்து 'ஸார்! இவன் நிஜமாவே அடிக்கிறான், ஸார்!' என்பார்!
    பயங்கர காமெடி!

    ReplyDelete
    Replies
    1. 'சார், இவன் நெஜமாலுமே அடிக்கிறான் சார்'என்று சீரியசாக சொல்வது.. நமக்கெல்லாம் ஒரே ஜாலியா இருக்கும். செம்ம சார்!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube