Monday, June 18, 2012

சென்னையில் பதிவர் சந்திப்பு!

Posted by பால கணேஷ் Monday, June 18, 2012
துவங்குவதற்கு முன்...

விஞர் மதுமதி எழுதிய இரண்டு நாவல்கள் இந்த மாதம் வெளியாகியிருக்கின்றன. அவற்றை வாங்கிப் படித்தேன்; ரசித்தேன். ‌என் தோழி ‘தென்றல்’ சசிகலாவிடம் கேட்டு மதுமதியின் தொ.பே.எண் பெற்று அவரைப் பாராட்டினேன். ஒரு மின்மடலும் அனுப்பினேன். மதுமதியின் திருமதி என் எழுத்துக்களுக்கு ரசிகை என்பது அப்போதுதான் தெரியவந்ததில் மிகமிக மகிழ்ந்தேன் நான். மதுமதியிடம் நான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருந்ததாலும், அவர் இருக்கும் ஏரியா என் வீட்டுக்கு அருகில்தான் என்பது தெரிந்ததாலும் ‘‘நாம சந்திச்சுப் பேசலாமே’’ என்றார் அவர்.  ‘‘ஞாயிற்றுக்கிழமை கோகுலோட ரிசப்ஷனுக்கு புதுச்சேரி போறதா இருந்தேன். எதிர்பாராத சொந்த வேலை ஒண்ணு வந்திட்டுது. ஞாயித்துககிழமை ஈவ்னிங் வரை ஃப்ரீதான் நான். அன்னிக்கு சந்திக்கலாம்’’ என்றேன். கவிஞரிடம். மகிழ்வுடன் சம்மதித்தார்.

இனி... பதிவர்கள் சந்திப்பு!

நேற்று காலை மதுமதிக்கு ‌போன் செய்து, ‘‘கிளம்பட்டுமா?’’ என்று கேட்க, ‘‘நான் புறப்பட்டாச்சு. உங்க வீ்ட்டுக்கு வழி சொல்லுங்க’’ என்று கேட்டு என் இல்லம் வந்தார் கவிஞர். அவருடன் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கையில் புலவர் சா.இராமாநுசம் மற்றும் சென்னைப் பித்தன் ஆகியவர்களைச் சந்திக்க நீண்டநாள் விருப்பம் என்றார் மதுமதி. சரி, சந்திக்க வைத்துவிடலாம் என்று போன்‌ செய்தால் புலவர் ஐயா போனை எடுக்கவே இல்லை. சில முறை முயற்சித்து, சலிப்பாகி செ.பி.க்கு போன் செய்தேன். உடனே போ‌னை எடுத்து, விஷயம் கேட்டதும், ‘‘வீட்லதான் இருக்கேன். உடனே கிளம்பி வாங்க’’ என்றார்.

என் வீட்டிலிருந்து கிளம்பிப் போகையில் மதுமதி, சசிகலாவுக்கு போன் செய்து, நாங்கள் இருவரும் செ.பி.யை சந்திக்கச் செல்வதைச் சொல்ல, அவரைப் பார்த்துவிட்டு தன் வீட்டுக்கும் அவசியம் வர வேண்டுமென்றும், எங்களுக்கு மதிய உணவு தயாரித்து வைப்பதாகவும் சசிகலா சொல்லியிருக்கிறார். மதுமதி விஷயத்தைச் சொல்லிவிட்டு என்னிடம் போனைத் தந்தார் மதுமதி.

‘‘அதில்லை சசி. நான் வீட்ல சொல்லிட்டு வரலை. அதான் யோசனையாயிருக்கு...’ என்றேன். ‘‘என்னது...?’’ என்றார் சசி. ‘‘இல்ல... மதிய சாப்பாட்டுக்கு தேடாதீங்கன்னு வீட்ல சொல்லிட்டு வரலையேங்கற அர்த்தத்துல... ஹி... ஹி...’’ என்றேன். ‘‘போன் போட்டு சொல்லிக்கலாம். பயப்படாம வாங்க, உங்க உயிருக்கு நான் கேரண்டி’’ என்றுவிட்டு போனை வைத்து விட்டார் சசி.

சென்னைப் பித்தன் எங்களை வரவேற்பதற்காக வாசலிலேயே காத்திருந்தார். சென்னையில் வெயிலில் காய்ந்து போய் வந்திருந்த எங்களுக்கு ‘ரெட் வைன்’ போன்றதொரு குளிர்பானம் தந்து குளிர்வித்தார். சென்னைப் பித்தனைப் பார்த்துப் பேசுவதென்றாலே பயம் எனக்கு. அவருடன் உரையாடும் விஷயத்தில் ஒரு ஆபத்து உண்டு. 

அவரிடம் எந்த விஷயமும் பேசலாம். படிப்பனுபவமும், வாழ்க்கையனுபவமும் சேர்ந்து வரும் அவர் கருத்துக்களைக் கேட்டுக கொண்டிருந்தால் நேரம் போவதை மறந்து விடுவோம் என்பதே என் பயத்துககான காரணம். நேற்றும் அப்படியே. மூவருமாகப் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ‘‘போட்டோல பாக்கறதை விட நேர்ல இளமையா இருக்கீங்க’’ என்றார் மதுமதியைப் பார்த்து செ.பி. ‘‘நான் போட்டோல இளமையா இருப்பேன். நேர்ல பாத்தா வயசுகூடின மாதிரி தெரியும். அவர் எனக்கு நேரெதிர்’’ என்று நான் சொல்ல, எங்கே சிரிக்கா விட்டால் நான் அழுதுவிடுவேனோ என்று பயந்து சிரித்து வைத்தார் மதுமதி.  திடீரென்று செல்லைக் கவனித்தால் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. மனமேயில்லாமல் எங்கள் உரையாடலுக்கு ‘தொடரும்’ போட்டுவிட்டு இருவரும் புறப்பட்டோம்.

தாம்பரத்திலிருந்து கொஞ்சம் தூரத்தில் தன் வீடு என்று சொல்லி, வழி சொல்லியிருந்தார் சசி. அது கொஞ்சம் தூரம் இல்லீங்க... கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் தூரம்! தாம்பரத்திலிருந்து பிரிந்த கிளைச சாலையில் போனோம், போனோம், வாழ்க்கையின் ‌ஓரத்துக்கே போய்விட்டோம் போலிருந்தது. இடையில் இரண்டு முறை மதுமதி ‌போன் செய்து, ‘ஏஙக, சரியாத்தான் வந்துட்டிருக்கனா?’ என்று சசியிடம் கேட்டுக் கொண்டார். ஒருவழியாக வீட்டைக் கண்டுபிடிச்சுப் போயிட்டோம்ங்க.

 சசியின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டோம். அநாயசமாக எழுதித் தள்ளும் கவிதைக்காரிக்கு சமையலும் கைவந்த கலை என்பது புரிந்தது.  நாங்க மூணு பேரும் சுவாரஸ்யமா பேசிக் கொண்டிருக்க, சசியின் இரண்டு பையன்களும் பேசுவதற்கே தயங்கினார்கள். ரொம்ப சாதுப் பிள்ளைகள் போலிருக்கிறதே என்று தோன்றியது. இல்லை... சரியான வால்கள் என்பது சற்று நேரம் பழகியபின் அவர்கள் பேச ஆரம்பித்ததும் புரிந்தது. சசியின் கல்யாண ஆல்பம் மற்றும் குழந்தைகளின் பிறந்ததின ஆல்பங்களைப் பார்த்தோம்.

மாலை சசியின் வீட்டிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தபோது ‘‘இப்ப ஒரு தடவை புலவருக்கு ட்ரை பண்ணிப் பாருங்களேன்’’ என்றார் மதுமதி. நான் முயற்சிக்க, புலவர் பேசினார். ‘‘புது ஃபோன் மாத்தியிருக்கேன் தம்பி. இதுல ரிங் சவுண்டே சரியாக் கேக்க மாட்டேங்குது. பித்தன் போன் பண்ணி நீங்க வந்துட்டுப் போனதை ‌சொன்னார். நான் எப்பவும் வீட்லதான் இருப்பேன். உடனே ரெண்டு பேரும் வாங்க’’ என்றார். விடு ஜூட் தாம்பரம் to கோடம்பாக்கம் புலவர் வீட்டுக்கு! அதிகம் சிரமப்படாமல் புலவரின் வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம். புலவரும் நண்பர் செ.பி. போல வாசலிலேயே காத்திருந்தார் எங்களுக்காய்.

கொஞ்சம் கவிதை, கொஞ்சம் பதிவுகள், கொஞ்சம் புலவரின் அனுபவங்கள் என்று பேசிக் கொண்டிருந்தோம். முதுமையின் காரணமாகவும், மருத்துவர் அறிவுரையினாலும் ‌முன்புபோல கணிப்பொறியில் அதிகநேரம் செலவிட முடியவில்லை என்றும், நிறையப் பேரின் தளங்களுக்குச் செல்வதுகூட இப்போது அதனால்தான் குறைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார் புலவர்.

 தனக்கும் டைப்பிங் செய்வதுதான் பிரச்னை என்றும், கீ போர்டில் நான்கு விரல்களால் ‘குதிரை ஓட்டுபவர்’தான் என்றும் மதுமதி சொன்னபோது வியப்பாக இருந்தது எனக்கு. ஆறு மணிக்கு எனக்கு வீட்டுவேலை இருந்ததால் கிளம்ப வேண்டியிருந்தது. இதுபோன்ற பதிவர் சந்திப்புகள் உற்சாகம் தருபவை என்றும் மாதம் ஒரு முறையாவது நிறையப் பேரை வரவழைத்து கலந்துரையாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தன் விருப்பத்தை புலவர் வெளியிட்டார். முயற்சிப்பதாகக் கூறி இருவரும் புறப்பட்டோம். அதன்பின் என் சொந்தப் பணியை நிறைவாய் முடித்தேன் நான்.

இப்படியாக... ஒரு திட்டமிடாமலே ஒரு ‘பதிவர்கள் சந்திப்பு’ நிகழ்ந்து ஞாயிற்றுக்கிழமை பொழுது இனிமையாகப் போனது மதுமதியின் உபயத்தால்! அன்னாருக்கு நன்றி! ‘‘வரலாறு ரொம்ப முக்கியம் நண்பரே. இந்த பதிவர்கள் சந்திப்பை பதிவாப் போடணும். நான் டி.என்.பி.எஸ்.சி. போடறதால நீங்கதான் நாளைக்கு உங்க வலையில போடணும்’’ என்று கட்டளையிட்டார் கவிஞர். உங்க விருப்பப்படி பப்ளிஷ் பண்ணிட்டேன் கவிஞரே..!

68 comments:

  1. அட ....திட்டமிடாமலேயே ஒரு மினி சந்திப்பு - தித்திப்புதான் போங்க

    ReplyDelete
    Replies
    1. ஆம். திடீரென்று நிகழ்ந்த இனிய சந்திப்பு - நீங்கள் சொன்னது போல ரொம்பவே தித்திப்புதான்.

      Delete
  2. மது மதி அண்ணா, சசி அக்கா (இருவரையும் நான் உரிமையோடு அழைப்பது)இருவரின் எழுத்துக்கள் மிக பிடிக்கும். மது அண்ணாவின் புத்தகம் எனக்கு கிடைக்கவில்வை மிக கவலை. எல்லோரையும் சநதிக்க எனக்கு அதீத விருப்பம் ஆனால் முடியாதுள்ளது. உங்களையும்தான் கணேஷ் அங்கிள்...

    ReplyDelete
    Replies
    1. சென்னை வந்தால் சொல்லு எஸ்தர். எல்லாரையும் சந்திக்க நான் கூட்டிட்டுப் போறேன். சரியா... மிக்க நன்றிம்மா.

      Delete
  3. மதுமதியை நானும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் விரைவில் கூடிவரும் என்று நினைக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சந்திக்கலாம். பழகுவதற்கினிய நண்பர். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

      Delete
  4. திட்டமிடாமலே ஒரே நாளில் மேற்கு மாம்பலத்தில் இருந்து செ.பி யை சந்தித்து விட்டு அங்கிருந்து தாம்பரம் போய் அங்கிருந்து கோடம்பாக்கம் வந்து ஸ்ஸ்..அசத்தி விட்டீர்கள்.அருமையான சந்திப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அருமையான சந்திப்பு என்று சொல்லி இதை ரசித்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. வெவ்வேறு இடங்கள்.. தூரம் இவற்றை பொருட்படுத்தாமல் சென்னைபித்தன் சார், சசிகலா, ராமானுஜம் சார் ஆகியோரை சந்தித்துள்ளீர்கள். உங்களையும் மற்ற மூவரையும் சந்தித்ததில்லை. விரைவில் ஏதேனும் நிகழ்வில் சந்திப்போம் !

    ReplyDelete
    Replies
    1. எனக்குள்ளும் உங்களைச் சந்திக்கும் ஆவல் உண்டு. விரைவில் தொலைபேசி விட்டு உங்கள் ஏரியாப் பக்கம் வருகிறேன் நண்பரே... தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

      Delete
  6. நல்
    சந்திப்புக்கள்
    சுவராசியமான அனுபவ தருணங்கள்
    நினைவில் மாயாத அழகிய பரிசு சார்

    உறவுகளின் சந்திப்பு இனிமையை அமைந்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. நினைவில் மாயாத அழகிய பரிசு - என் மனதில் உள்ள உணர்வுக்கு அழகாக வார்த்தை தந்து விட்டீர்கள் நண்பரே. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. விடுமுறை என்பதால் சற்று சோம்பல் காலை உணவு முடித்து கடல் புறாவோடு இணைந்திருந்தேன் .அலைபேசியில் அழைத்து மதுமதி பேசியதும் எனக்கு கோபம் என்னை மட்டும் விட்டுவிட்டு சென்னை பித்தன் ஐயாவை பர்க்கபோனர்தர்க்காக சரி கோவிக்காதிங்க உங்க வீட்டுக்கும் வரோம் என்று சொன்னங்க . சந்தோசம் தொற்றிக் கொண்டது மின்னல் என எழுந்து மினி லஞ்ச் செய்து கொடுத்தேன் . நல்ல வேலை பதிவைப் பார்த்ததும் தான் நிம்மதி இருவரும் நன்றாக இருப்பதால் .

    ReplyDelete
    Replies
    1. மினி லஞ்ச்சா சசி அது... செமத்தியான லன்ச்ன்னார் மதுமதி. அதுக்காகவே சசிக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.

      Delete
  8. சென்ற முறை தான் என்னைப் பதிவர் சந்திபிற்க்கு விட்டுச் சென்று விட்டீர்கள், அடுத்த முறை கண்டிப்பாக என்னையும் அழைத்துக் கொள்ளுங்கள், உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலில் உள்ளேன்.

    உங்கள் இனிமையான பதிவர் சந்திப்பை அதே இனிமையுடன் பகிர்ந்து கொண்ட விதம் அருமை வாத்தியாரே,

    //மதுமதி திருமதி// அருமை

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன சீனு... உங்களையும் அடுத்த முறை அவசியம் சேர்த்துக் கொள்கிறேன். அதிவிரைவில் அந்தச் செய்தி சொல்லுகிறேன். தொடரும் உங்கள் ஆதரவிற்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  9. Last Sunday must have been a most memoranble Sunday for you. Generally it was a lazy day for most of us but for you it was a busy one. Please keep up this habit of meeting such people on Sundays and we will follow you in this blog on Monday.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மோகன். இந்த ஞாயிறு பரபரப்பாகவும் மகிழ்வாகவும் சென்ற மறக்க இயலாத விடுமுறை நாள். எப்போது சந்திப்பு நிகழ்ந்தாலும் அவசியம் பகிர்கிறேன். தங்களின் தொடர் ஆதரவிற்கு என் இதய நன்றி.

      Delete
  10. திடீர் சந்திப்பைக்கூட பதிவர் சந்திப்பாக மாற்றி, அதை சுவைபட பதிவில் எழுதமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சுவைபட என்ற வார்த்தையே என்னை மகிழவைத்து விட்டது, உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  11. எழுத்துக்கள் மூலம் பெற்ற நட்பை நேரில் சந்திப்பது என்பது இனிமையான அனுபவமாகவே இருக்கும்,

    சந்திப்பு தித்திப்பாக இருந்தததை துள்ளலான எழுத்துகளில் அறிகிறேன், மிக்க மகிழ்ச்சி.!

    ReplyDelete
    Replies
    1. தித்திப்பான அந்த சந்திப்பை துள்ளல் நடையில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லி என்னை மகிழ்வில் துள்ள வைத்து விட்டீர்கள். என் மனமார்ந்த நன்றி.

      Delete
  12. புலவர் ஐயா,செ.பி ஐயா,கணேஷ் ஐயா,சசிகலா போன்றோரை இதற்கு முன்னால் சந்தித்தது இல்லை.நேற்று இந்த நால்வரையும் சந்தித்தது மகிழ்வான நிகழ்வு..புலவர் ஐயா,செ.பி ஐயா இருவரையும் வயதானவர்கள் என நினைத்தது தவறு என்று உணர்ந்தேன்..இருவரும் எழுபதைத் தாண்டிய இளைஞர்கள் என்பதை அறிந்தேன்.நன்றாக உபசரித்து மதிய உணவு கொடுத்த தோழி சசிகலாவிற்கு நன்றி..நிகழ்வை அழகாக பதிவாக்கிய தோழர் கணேஷ் அவர்களுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி உங்களுக்கு மட்டுமா கவிஞரே... எங்களுக்கும் உரித்தானது உங்களால். மிக்க நன்றி.

      Delete
  13. மனமார்ந்த வாழ்த்துகள் நண்பர்களே...!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்து மகிழ்வுடன் வாழ்த்திய நண்பர் மனோவிற்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. பரவாயில்லை! சென்னையில் இருக்கும் பதிவர்களுக்கு பதிவர்களுடன் ஒரு திடீர் சந்திப்பு! புலவரை அடிக்கடி சந்தித்து வாருங்கள்! பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆம்... ஒவ்வொரு சந்திப்பும் தனக்கு உற்சாக டானிக் என்கிறார் புலவர் ஐயா. எனக்கு மிக அருகிலுள்ள ஏரியாவில் அவர் வீடு இருப்பதால் இனி அடிக்கடி சந்திக்க உள்ளேன். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  15. போரடிக்கும் ஒரு காலையில் ஒரு மணிநேரமாவது இனிமையாகக் கழிந்ததே!நன்றி கணேஷ்&மதுமதி.
    //‘ரெட் வைன்’ போன்றதொரு குளிர்பானம்//
    யாராவது தப்பாக நினைத்து விடப்போகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. டும், டும், டும்! இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் அது ‘ரெட் வைனை’ நினைவுபடுத்திய சாதாரண குளிர்பானம் தான் என்பதே...

      தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே...

      Delete
  16. மதுமதி18 June 2012 2:14 PM

    .//.இருவரும் எழுபதைத் தாண்டிய இளைஞர்கள் என்பதை அறிந்தேன்.//
    மது! என் வயது 67 தான்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற வயது உடம்புக்கானது... மனதுக்கு?

      Delete
  17. கணேஷ் நீங்க ரொம்ப மோஷம் எனக்கு கொஞ்சம் போன் போட்ட்டு இருந்த என் விலாசம் தந்து இருப்பேன்ல...சசிகலா வீட்டை விட என் வீடு ரொம்ப பக்கம்தான். ஜஸ்ட் நீங்க மீனம்பாக்கம் வந்தீங்கன்னா.....அங்க ப்ளைட் நீறைய நிற்கும் அதுல ஏறி உட்கார்ந்த நம்ம வீட்டுக்க வந்திருக்கலாம்......

    இந்தியாவுல இருக்குற பதிவாளர்கள் கொடுத்து வைச்சவங்க...ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. சசி வீட்டுக்கு நீஈஈஈஈஈண்ட தூரம் போனப்ப நீங்க சொன்ன மாதிரிகூட தோணிச்சு. இந்தியாவுக்கு ஒரு விசிட் வந்தீங்கன்னா உங்களையும் கொடுத்து வைச்ச பதிவர் ஆக்க நானாச்சு... மிக்க நன்றி நண்பா.

      Delete
  18. திட்டமிடாமலேயே ஒன்றல்ல, பல பதிவர்களுடனான இனிய சந்திப்பை நிகழ்த்தி முடித்தது குறித்து வியப்புறுகிறேன். அனைவரும் ஒன்றாக சந்தித்திருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும். சுடச்சுட பதிவெழுதி அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி கணேஷ்.

    மதுமதியின் புத்தக வெளியீட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பச் சரி கீதா. இதே நினைப்பு எங்களுக்கும வந்துச்சு. அடுத்த முறை எல்லாரும் கலந்துரையாடற மாதிரிதான் ஏற்பாடு பண்ணப் போறோம். நீங்க, ஹேமா மாதிரி ப்ரெண்ட்லாம் பாக்க முடியலையேங்கறதுதான் குறை. மதுமதியை வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  19. வணக்கம் பாஸ் அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள்

    தேசம் கடந்து பல மையில்களுக்கு அப்பால் இருந்தாலும் என் மனதிலும் புலவர் ஐயா,செ.பி ஐயா,மற்றும் உங்களை(கணேஸ்)ஒரு முறை சந்திக்கவேண்டும் என்பது என் ஆசையும் கூட அடுத்த முறை இந்தியா வரும் போது சென்னை வரும் ஜடியா இருக்கு சந்தர்ப்பம் அமைந்தால் பார்கலாம்

    ReplyDelete
    Replies
    1. இங்க வர்ற சமயத்துல சொல்லுங்க ராஜ். எங்க எல்லாரையும் சந்திக்க நானும் உதவறேன். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  20. மதுமதி பாஸின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ராஜ்! கவிஞரின் சார்பாக என் நன்றி உங்களுக்கு.

      Delete
  21. Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி நண்பரே.

      Delete
  22. திட்டமிடா இனிமையான சந்திப்பு..... அனைவரையும் எப்போது சந்திக்கலாம்.?????

    ReplyDelete
    Replies
    1. விரைவில் சந்தி்க்கலாம் பிரகாஷ். தங்களின் வருகையும் கருத்தும் தந்த மகிழ்வடன் என் நன்றி!

      Delete
  23. இந்தப் பதிவைப் படித்ததும்
    எனக்கும் எழுத்தில் சந்தித்துக் கொண்டிருப்பவர்களையெல்லாம்
    நேரடியாக்ச் சந்திக்கும் ஆவல் பெருகுகிறது
    காலம் கனியும் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நானும் உங்களைச் சந்தித்து ‌உரையாட மிகு ஆவலுடன் உள்ளேன். நான் மதுரை வரும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். எப்போது காலம் கனியுமோ... பார்க்கலாம்! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  24. திட்டமிடாமல் நடந்தாலும் வாழ்நாளுக்கும் தித்திக்கும் இனிமையான சந்திப்பல்லவா! வாழ்த்துக்கள் Sir! மதுமதி அண்ணாவின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. யுவராணியைப் பாத்து நாளாச்சு. நலம்தானேம்மா? மதுமதியிடம் உன் வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். மகிழ்வு தந்த உன் வருகைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. எனது நலத்தை தெரிவிப்பதோடு நன்றிகளும் சார்!

      Delete
  25. இனிய சந்திப்பு... இனிமையான பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிமையான பகிர்விற்கு வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி நண்பா!

      Delete
  26. இனிய சந்திப்பு.... இனிய நினைவுகள்....

    உங்களை சென்னையில் சமீபத்தில் சந்தித்த தருணங்களை அசை போட்டபடியே படித்தேன்... மீண்டும் சந்திப்போம்....

    ReplyDelete
    Replies
    1. ஆம் வெங்கட். நண்பர்களின் சந்திப்பு ஒவ்வொன்றும் எனக்கு மகிழ்வையும் உற்சாகத்தையும் தருகிறது. முடியும் போதெல்லாம் சந்திக்கத்தான் வேண்டும். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  27. அப்பப்பா!நேற்று முதல் முயன்றும் தற்போது தான் தங்கள்
    பதிவை பார்க்க முடிந்தது.
    தாங்களும் மதுமதி அவர்களும் என் இல்லம் தேடி வந்து
    உரையாடி மகிழ்ந்தது நான் பெற்ற பேறு என்றே உள்ளம் மகிழ்கிறேன்
    இனி அடிக்கடி சந்திப்போம்! மாதம் ஒரு முறையாவது
    மற்றவர்களைய ஓரிடத்தில சந்திக்க ஏற்பாடு செய்வோம்
    மதுமது, நாவல் இரண்டையும் நேற்று கொண்டுவந்து
    கொடுத்தார். அவர் அன்புக்குஎன் உளங்கனிந்த நன்றி இரவே இரண்டையும் படித்து விட்டேன் மிக அருமையாக, சுவையாக எழுதியுள்ளார் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியவை
    மீண்டும் உங்கள் இருவருக்கும் நன்றி! நன்றி!!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. [co="red"]தங்களின் விருப்பப்படி சந்திப்புகள் இனி அடிக்கடி நடக்கும் படி ஏற்பாடு செய்து விடலாம். உங்களைச் சந்தித்து உரையாடுதலில அதிகம் பேறு பெற்றவர்கள் நாங்களே. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.[/co]

      Delete
  28. கணேஷ் அண்ணே,

    சற்று வயித்தெரிச்சலோடு பாராட்டுகிறேன். ( பின்ன ஃப்ரீ சாப்பாட்டுக்கு என்னை ஏன் கூப்பிடல?)

    // கீ போர்டில் நான்கு விரல்களால் ‘குதிரை ஓட்டுபவர்’//

    குசும்பு விட்டு போகலையே!

    ReplyDelete
    Replies
    1. [co="red"]முதமுதலா சாப்பிடப் போறமே... நாங்க டெஸ்ட் பண்ணிட்டு உங்களைக் கூப்பிடலாம்னுதான் கூப்பிடலை தம்பி. அடுத்த தடவை உங்களையும் கவனிச்சிடலாம். குசும்பு... கூடப் பிறந்ததாச்சே...! ஊக்கமளித்த உங்கள் கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி.[/co

      Delete
    2. பாத்திங்களா சந்தடி சாக்குல சசியோட சமையல கிண்டல் பண்றீங்க

      Delete
    3. [co="red"]கிண்டல் பண்ணுவேனா சசி..? அருமையான உணவாச்சே நீங்க தந்தது. புறப்பட்டப்ப அதைப் பத்தி தெரியாதுங்கறதுனால அப்படிச் சொன்னேன். கோபிக்கக் கூடாது. சரியா...[/co]

      Delete
  29. சுவாரஸ்யமாக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வைத் தந்த உங்களின் பாராட்டுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  30. அட... திடீர் சந்திப்பிலும் ஒரு சுவராஸ்யம்தான்... ம்... நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தந்த உங்களுக்கு உளம்கனிந்த நன்றி அன்பு!

      Delete
  31. நீண்ட நாளைக்குப்பிறகு வந்ததும் படித்த இந்தப்பதிவு வாசிக்கவே இதம்! நல்ல பொறுமையான வர்ணனை கணேஷ்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  32. மத்திய சென்னை,தென் சென்னைனு ஒரு ரவுண்ட் அடிச்சிட்டிங்க போல, எல்லாம் யூத் பதிவர்களா இருக்கீங்க :-))

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube