Saturday, June 9, 2012

நடை வண்டிகள்-20

Posted by பால கணேஷ் Saturday, June 09, 2012

 இந்திரா செளந்தர்ராஜனும் நானும் - 3

ச்சமயத்தில் மாதா மாதம் இந்திரா செளந்தர்ராஜனின் நாவல்களைத் தாங்கி ‘க்ரைம் ஸ்டோரி’ என்ற மாத நாவல் வெளிவந்து கொண்டிருந்தது. இந்திராஜியின் வாசகர்களுடன் பேசும் கடிதமும், கேள்வி பதில்களும், நாவலும் வரும். அடுத்து வந்த இதழில் வாசகர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ஒன்றிரண்டு பாராக்கள் எழுதியிருந்தார்.

‘இந்த மாதம் சில வாசக நெஞ்சங்களை சந்தித்தேன். அவர்களில் முக்கியமானவர் நெல்லை கணேஷ். இவர் திருநெல்வேலி தினமலரில் பணி புரிந்து வருகிறார். என் முதல் நாவலான ‘கோடைகாலக் கொலைகள்’ தொடங்கி சமீப நாவலான ‘பொன் மழை’ வரையில் ஒன்றையும் அவர் விட்டு வைத்திருக்கவில்லை’ என்று (என் நினைவிலிருந்து. இதழ் என்னிடமில்லை) தொடங்கி தன் மகிழ்வைக் குறிப்பிட்டிருந்தார். நான் திருநெல்வேலி தினமலரில் பணி புரியும் சமயத்தில் அவருக்கு அறிமுகம் ஆனதால் மதுரைக்காரனாக இருந்தாலும், இப்போது சென்னையில் வசித்தாலும் அவருக்கு மட்டும் ‘நெல்லை கணேஷ்’ தான்!

அவர் எழுதியதைப் படித்ததும் மிகமிக மகிழ்ச்சியுடன் என் நண்பர்களுக்கு அதைக காண்பித்து விட்டு மதுரைக்கு வந்ததும் அவர் வீட்டைத் தேடிச் சென்றேன். அவரின் குடும்பத்தினரை அறிமுகம் செய்தார். என்னை அறிமுகம் செய்வித்தார். என்னைப் பற்றிச் சில வரிகள் எழுதியதற்கு நன்றி ‌சொன்னேன். அவரது எழுதும் அறைக்கு அழைத்துச் சென்றார். முதல் சந்திப்பில் பேச அவகாசம் கிடைக்காததை எல்லாம் அன்று பேசித் தீர்த்தேன். கதைகள் தவிர்த்தும் பல விஷயங்களில் அவருடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார். அபிமான எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து நெருக்கமானவராக உணரத் தொடங்கியது அந்தச் சந்திப்பிலிருந்துதான்.

அதன்பின் மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாகிப் போனது. அப்போது அவர் ‘விக்ரமா விக்ரமா’ என்கிற தொடர் நாவல் எழுதிக் கொண்டிருந்தார். விக்கிரமாதித்தனும், வேதாளமும் இன்றைய உலகில் வந்தால் எப்படியிருக்கும் என்பதை வைத்து அதை எழுதத் துவங்கி இரண்டு நாவல்கள் வெளியாகியிருந்தன. அந்தச் சமயத்தில் சன் டிவியிலும் இதே கருத்தில் ‘விக்கிரமாதித்தன்’ தொடர் வெளியாவதற்கான அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிப் பேசும்போது ‘இப்படிப் ஒரு போட்டி ஏற்படுவது நல்லதுதான். .நாவலைப் படித்து விட்டு, அதேபோன்ற கதையை தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்களுக்கு உங்களின் தனித்தன்மை நன்கு புலப்படும்.’ என்றேன். இந்தக் கருத்தை ரசித்து, அடுத்த வந்த இதழில் எழுதினார்.

இவற்றை நான் சொல்லக் காரணம், ஒரு வாசகனாக என் மதிப்பீடு சரியாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைச் சொல்வதற்காகத்தான். நான் ‘க்ரைம் நாவல்’ அலுவலகத்தில் ஜி.அசோகன் அவர்களின் கீழ் பணி செய்தபோது, அங்கே‌ வெளிவந்து கொண்டிருந்த ‘பாக்கெட் நாவல்’ இதழில் மாதந்தோறும் இந்திரா செளந்தர்ராஜன்தான் நாவல்தான் வெளிவந்து கொண்டிருந்தது. அச்சமயங்களில் ஒவ்வொரு மாதமும் நாவலின் முடிவுப் பகுதியை அனுப்பியதும், போன் செய்து, ‘எப்படி இருந்தது?’ என்று கருத்துக் கேட்பார். மனதில் படும் நிறை குறைகளைத் தயங்காமல் சொல்வேன். ஏற்றுக் கொள்வார். ஏன் கதையை அப்படி முடிக்க வேண்டியிருந்தது, ஏன் அப்படி ஒரு திருப்பத்தை வைத்தேன் என்பதற்கான விளக்கங்களையும் ‌சொல்வார். அதைக் கேட்டுக் கொள்வதில் எனக்கு தனி மகிழ்ச்சி. (மற்றெந்த வாசகருக்கும் கிடைக்காத வாய்ப்பாயிற்றே!)

பொதுவாக அவரின் கதைகளும், அதில் சொல்லப்படும் கருத்துக்களும் எந்தக் குழப்பமுமின்றி தெளிவாக இருக்கும். என்றாலும் நிறைய இதழ்களுக்கும். தொலைக்காட்சித் தொடர்களுக்கும் ஒரே நேரத்தில் எழுதி வருகின்ற காரணத்தால், சில சமயங்களில் கதாபாத்திரப் பெயரை மாற்றி எழுதி விடுவார் என்பது அவரது பலவீனம். உதாரணமாக, முதல் ஐந்து அத்தியாயங்களில் பத்மினி என்று எழுதிவிட்டு ஆறாவது அத்தியாயத்தில் அதே கேரக்டரை பாரதி என்று எழுதி விடுவார். இதுபோன்ற விஷயங்களைக் கவனித்துக் குறிப்பிட்டால் என்னையே மாற்றிக் கொள்ளச் சொல்லி விடுவார். வேறு சில பதிப்பகங்களில் இப்படி வாசகர் நிலையில் படித்துக் கவனித்து மாற்றாமல் விட்டதால் பெயர் மாறி வந்த கதைகளும் உண்டு.

நெல்லையில் இருந்த காலகட்டத்தில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட விரும்பி அதற்கான உதவி கேட்டு அவரிடம் சென்றபோது, எதிர்பாராத அளவில் எனக்கு உதவினார். ஆனால் என்னால்தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விட்டது. அதைப் பற்றி...

                                                                             -தொடர்கிறேன்...

ரங்கராட்டினத்தில் சுற்ற... மேய்ச்சல் மைதானம்

28 comments:

  1. இந்திரா செளந்தர்ராஜன் போன்ற பெரிய எழுத்தாளரின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தது/இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    இது மற்றெந்த வாசகருக்கும் கிடைக்காத வாய்ப்புதான்.வாழ்த்துக்கள்!

    அவர் அளித்த அந்த எதிர்பாரா உதவியை ஏன் பயன்படுத்தவில்லை என அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் உடன் வருகையும் அருமையான கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. தங்கள் பயணத் துணையில் சந்திக்காத எழுத்தாளர்களே இருந்திருக்க முடியாது போலும் அப்படி ஒரு ஆச்சரியம் கூடுகிறது நடைவண்டிப் பயணத்தில் தொடருங்கள் தொடர்கிறோம் .

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டிப் பயணத்தில் உடன் வரும் என் ரசிகை/தோழியைக் கண்டு மகிழ்கிறேன். என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. பெருமை மிக்க அனுபவங்கள். மகிழ்ச்சி தொடருங்கள் தொடர்கிறோம். இவை (அனுபவங்கள்) மாபெரும் புத்தகங்கள் பிறருக்கு. நல்வாழ்த்து. 16 வயதிலிருந்து ஆனந்த விகடன் வாசிப்பது. தொடர் கதைகள், பயணக்கதைகள் யாவும் புத்தகமாக பைண்ட் செய்து வைத்திருந்தேன். இங்கு வந்தாச்சு. ஒவ்வொரு தடவையும் ''..அக்கா இதைக் கொண்டு.. போயேன்..'' என்பாள் என் தங்கை. பயணப் பெட்டிப் பொதி அதிகரிக்கும் என்று விட்டிட்டு வருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... பைண்ட் செய்து வைத்த புத்தகங்களை வாசிப்பதென்றால் எனக்கும கொள்ளைப் பிரியம் உண்டு. தங்களின் வருகைக்கும கருத்துக்கும் என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. வழக்கம் போல தொடர் நன்று! இரண்டு பதிவுகளா வலைப் பக்கம் காணவில்லை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. பெங்களூர் சென்றிருந்ததால் வலைப் பக்கம் வரவில்லை ஐயா. இதோ வந்துட்டேன். வருகை தந்த ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  5. பெரிய பெரிய எழுத்தாளர்கள் கூட இருந்து பழகும் வாய்ப்பு ம்ம்!! தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் நண்பரே. நடை வண்டிப் பயணத்தில் உடன் வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  6. உங்கள் அனுபவங்களை நீங்கள் எழுதவதால் எங்களுக்கும் ”அனுபவம்” என்ற பலாக்கனியின் சுவை கிட்டுகிறது... தொடருங்கள் கணேஷ்... சுவைக்க நாங்க ரெடி....

    ReplyDelete
    Replies
    1. அனுபவக் கனியைச் சுவைத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  7. ஃப்ரெண்ட் நீங்களே ஒரு நிறைவான புத்தகம் போல இருக்கே.சந்தோஷமாயிருக்கு.சுவிஸ் சொக்லேட் முழுக்க உங்களுக்கே தந்து முடிக்கலாம்போல இருக்கே.பிடியுங்கோ !

    ReplyDelete
    Replies
    1. என் மனதுக்குப் பிடித்தமான ஸ்விஸ் சொக்லேட் கிடைத்ததில் மிக்க மனமகிழ்வு ‌கொண்டு உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  8. அருமையான அனுபவங்களை பகிர்வது நாங்களும் நேரில் பார்ப்பது போல் உள்ளது.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அனுபவப் பயணத்தில் தொடர்ந்து உடன் வரும் தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  9. அருமையான பதிவு. இந்திரா செளந்தர்ராஜன் தற்போது தீபம் இதழில் எழுதும் 'சந்திரசேகரம்' தொடர் படிக்கிறீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பத்திரிகை படிக்கும் வாய்ப்பு இப்போது எனக்குக் கொடு்த்து வைக்கவில்லை நண்பரே. ஒன்றிரண்டு அத்தியாயம் படித்திருக்கிறேன். உங்கள் தளத்தில் ஒன்று படித்தேன். புத்தகமாக வரட்டும் என்று வெயிட்டிங்! மிக்க நன்றி!

      Delete
  10. அனுபவங்களை பகிர்வதால் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது ! தொடருங்கள் ! நன்றி சார் !

    ReplyDelete
    Replies
    1. அனுபவப் பகிர்வை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  11. சுவாரஸ்யமான பகிர்வு.

    எந்த ஆண்டுகளில் நெல்லையில் பணியாக இருந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமான பகிர்வு என்று மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! நெல்லையில் நான் 1995 தொடங்கி 1999 வரையில் இருந்தேன்.

      Delete
  12. மிகவும் இன்ரெஸ்டிங்காக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. // (மற்றெந்த வாசகருக்கும் கிடைக்காத வாய்ப்பாயிற்றே!)//

    உண்மை தான் ஐயா.

    நெல்லை என்ற பெயரைக் கேட்டாலே உடம்பிற்குள் மின் வேதியியல் பொறியியல் அணைத்து மாற்றங்களும் நிகழ்கின்றன. உங்களை நெல்லை கணேஷாக பார்பதிலும் எனக்கு மகிழ்ச்சியே. எனக்கு சென்னை பதிவர் சந்திப்பைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன். இல்லை பதிவாக எழுதுங்களேன். சந்திப்பில் கலந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க வேண்டும். வாத்தியாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube