Saturday, October 27, 2012

சிரித்திரபுரம் - 6

Posted by பால கணேஷ் Saturday, October 27, 2012
                                                          
                                                       காட்சி - 10

பெளர்ணமிக்கு அடுத்த தினம். விரிஞ்சிபுரம் கோட்டைக்கு எதிரில் வில்லவ நாட்டு அரசன் படைகள் சுற்றி வளைத்து கூடாரமடித்திருக்கின்றனர். அதில் அலஙகாரமான கூடாரம் ஒன்றினுள் வேலைப்பாடமைந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் வில்லவ நாட்டு மன்னன் போதை திருமனை சந்தியுங்கள்.

போதை : (ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் உறிஞ்சியபடி) என்ன கொடுமை...! மதிய உணவு நேரம் நெருங்கியும் இன்னும் உணவு வந்த பாடில்லை. போர் முற்றுகை என்பதால் சமையல் கலைஞர்களை விரட்டவும் முடிவதில்லை. போர் என்றாலே துன்பம் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும்...

அவன் தளபதி சூரராஜேந்திரன் கூடாரத்தினுள் நுழைகிறான்.

சூர : அரசே! ஒரு விண்ணப்பம்...!

போதை : ஆஹா... தின்ன அப்பம் கொண்டு வந்திருக்கிறாயா? கொடு... நல்ல பசி எனக்கு!

சூர : (ஙே என்று விழித்தபடி) அரசே...! தின்னுகிற அப்பத்தைச் சொல்லவில்லை. இது விண்ணப்பம்!

போதை : பசி நேரத்தில் என்னய்யா விண்ணப்பம்? சரி, சொல்லித் தொலை!

சூர : நாம் முற்றுகையிட்டு ஒரு நாள் கடந்து விட்டது. எதிரி மண்ணு மாதிரி உள்ளேயே இருக்கிறான். அவன் நாட்டு மக்கள் சிலரைப் பிடித்து வந்திருக்கிறேன். அவர்களைக் கொன்று உடல்களை அவன் கோட்டையில் வீசட்டுமா?

போதை : (ஒரு விரலளவு பொடியை மூக்கில் உறிஞ்சியபடி) சேச்சே...! பொடி மக்களை... மன்னிக்க, குடிமக்களை எதுவும் செய்யக் கூடாது. இன்னும் ஒரு நாள் பொறுப்போம். அவனிடமிருந்து ஏதும் செய்தி வராவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்.

சூர : இரண்டில் ஒன்று பார்ப்பது என்றால்... என்ன சொல்கிறீர்கள் மன்னா?

போதை : ஒன்று நாம் அவர்களைத் தாக்கி வெற்றியைப் பெற வேண்டும். அல்லது...

சூர : அல்லது...?

போதை : வெற்றியை அவர்களுக்கே கொடுத்து விட்டு, நாம் நம் நாட்டுக்கே திரும்பிவிட வேண்டும். அதைத்தான் இரண்டில் ஒன்று என்றேன்.

சூர : (தலையில் அடி்த்துக் கொண்டு) ஐயோ...! உங்களை போர்க்களம் வரை இழுத்து வருவதற்கே எனக்கு மூச்சுமுட்டி விட்டது. இங்கே வந்து இப்படியெல்லாம் நீங்கள் பேசுவது தெரிந்தால்... எதிரி தைரியம் பெற்று விடுவானே! அவனை வென்று அவனிடமிருந்து கப்பம் பெற வேண்டாமா?

போதை : (கோபமாக) பிசாசுக்குப் பிறந்தவனே! ஏனடா பசி நேரத்தில் திரும்பத் திரும்ப அப்பத்தை நினைவுபடுத்துகிறாய்?

ஒரு காவலன் வேகமாக உள்ளே நுழைகிறான்.

காவ : அரசே! எதிரியிடமிருந்து தூது வந்திருக்கிறது.

போதை : ஆஹா...! புறாவைத் தூது அனுப்பியிருக்கிறானா? உடனே அதை வறுத்து எடுத்து வா!

காவ : (பீதியுடன்) புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!

போதை : என்னது...? யானையா? எங்கே, வரட்டும். பார்க்கலாம்!

காவலன் செல்ல, சற்று நேரத்தில் அமைச்சர் தெய்வயானை உள்ளே நுழைகிறாள்.

தெ.யானை : வணக்கம் அரசே! எங்கள் மாமன்னர் உங்களுக்கு ஒரு ஓலை விடுத்துள்ளார்...! (நீட்டுகிறாள்)

போதை : தளபதியாரே...! அவன் எழுதியிருப்பதைப் படியும்!

சூர : (மனதிற்குள்) ஹும்..! கல்விச்சாலைக்கு ஒழுங்காப் போயிருந்தா நீரே படிச்சிருக்கலாம். (ஓலையை வாங்கிப் படிக்கிறான்) ‌வில்லவ மன்னா! உன் படைகளை எல்லாம் திரட்டி வந்து என் கோட்டை முன் உட்கார்ந்து விட்டாய். முன்யோசனையுடன் என் மகனின் படைகள் போன வாரமே புறப்பட்டு சுற்று வழியாகச் சென்று நீ கிளம்பியதும் உன் நாட்டைக் கைப்பற்றி விடச் சொல்லி அனுப்பி விட்டேன். இந்நேரம் அவன் படைகள் உன் நாட்டை நெருங்கியிருக்கும்.. உடனே நீ அங்கு திரும்பிச் சென்றால் உன் நாடு உனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் இரண்டு நாடுமற்று நீ நாடோடியாய்த் திரிய வேண்டியதுதான். எம் மக்கள் பஞ்சத்திற்குப் பழக்கப்பட்டவர்கள். வருஷக்கணக்காய் நீ முற்றுகையிட்டாலும் தாங்குவோம். நீதான் பாவம்... பசி தாங்காமல் உயிரை விடுவாய்!

போதை : ஆஹா...! பட்டினியில் உயிரை விடுவதா? என்ன சோதனை சூரா இது? பேசாமல் நாம் படைகளுடன் பின்வாங்கி விடலாமா?

சூர : என்ன... பின்வாங்குவதா? வேதனை...! மன்னா...! சோதனை வந்தால் அதிலிருந்து தப்ப மாற்று வழிதான் யோசிக்க வேண்டும். இன்றிரவு தாக்குதல் நடத்திவிட வேண்டியதுதான்.

தெ.யானை : ஒருக்கால் நீங்கள் இப்படிப் பேசினால், உங்களிடம் ஒப்படைக்குமாறு எம் மன்னர் மற்றொரு ஓலையும் தந்திருக்கிறார். (தருகிறாள்).

சூர : (படிக்கிறான்) போதை திருமா! பின்வாங்க மறுத்து நீ போரிடத் துணிந்து விட்டாயா? என் அமைச்சர் தெய்வயானையை இக்கணமே உன் முன் பரதநாட்டியம் ஆடச் சொல்லியிருக்கிறேன். அவள் ஆடினால் நிலநடுக்கம் ஏற்பட்டு, உன் யானைகள் வெறி கொண்டு உன் படையையே சட்னி ஆக்கி விடும். நாசங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. தொலைந்து போ! -இப்படிக்கு மணிமாற பாண்டியன்.

தெ.யானை : மன்னா! என் நாட்டியத்தைத் துவங்கட்டுமா? (அபிநயம் பிடித்து ஒரு குதி குதிக்கிறாள். கூடார நிலம் அதிர...)

போதை : (திகிலுடன்) ஐயோ, வேண்டாம்... தளபதி! நம் படைகள் இக்கணமே பின்வாங்கட்டும். இது எமது உத்தரவு! யானை! நான் இதோ கிளம்பி விட்டேனென்று உன் மன்னனிடம் சொல்...! கூடார வாயிலை நோக்கிச் செல்ல... தெ.யானை ஹா... ஹா.. வென்று உரக்கச் ‌சிரிக்கிறாள். அவன் ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது.

                                                            காட்சி - 11

ன்னர் மணி சிம்மாசனத்தி்ல் அமர்ந்திருக்க, எதிரே மந்திரி பிரதானிகள் அமர்ந்திருக்கின்றனர்.

மார்த் : மன்னா...மழை வரும் என்று தோன்றுகிறது. எங்கோ தொலைவில் இடி இடிக்கும் சப்தம் கேட்கிறதே..!

மணி : அது இடி சப்தமல்ல... சிரிப்பு சப்தம்! நிலம் அதிர்கிறது... இதிலிருந்தே புரியவில்லையா? அமைச்சர் யானை சிரித்தபடி வந்து கொண்டிருக்கிறாள்.

மணி சொல்லி முடிப்பதற்குள், ஹா... ஹா...வென வாய்விட்டுச் சிரித்தபடி உள்ளே நுழைகிறாள் தெய்வயானை.

தெ.யானை : வெற்றி! வெற்றி! எதிரி தலைதெறிக்கப் பின்வாங்கி ஓடிவிட்டான். வேந்தே! உங்களுக்கே ஜெயம்!

மணியின் அருகில் அமர்ந்திருக்கும் அரசி புவனமுழுதுடையாள் சந்தேகமாக மணியைப் பார்க்கிறாள்.

புவன : என்னது..? ஜெயமா? யாரவள்?

மணி : நாசமாப் போச்சு. நீ நினைக்கிற மாதிரி எதிரி நாட்டுப் பெண்ணில்லை. வெற்றி என்பதை அவள் வேறு வார்த்தைகளில் சொல்கிறாள். மிக்க மகிழ்ச்சி யானை! உன் உதவியால் கிடைத்த இந்த வெற்றிக்கு எமது பரிசை இதோ பெற்றுக் கொள்!

-என்று ஒரு முத்துமாலையைப் பரிசளிக்கிறான். அவள் மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறாள்.

அவைக்கவிஞர் : வில்லவனை வென்ற விறல் வேந்தர்... வாழ்க. ••

மணி : இப்போதுதான் புறாத் தூது வந்தது. அமைச்சர் சாத்தனார் ஜெயபுரியிலிருந்து சிவப்புக் கற்களை வாங்கி அனுப்பியிருக்கிறாராம். வந்து சேர்ந்ததும் துரிதமாய் மாளிகை வேலைகள் துவங்கப்பட வேண்டும். நாளை அது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட உத்தேசித்துள்ளேன். காலையில் அனைவரும் தவறாது வந்து விடுங்கள். இப்போது சபை கலையலாம். (போகிறான்.)

                                                                                                -தொடரும்...

================================
•• ஆதாரம் : செங்கழுநீர் வளவனார் இயற்றிய ‘மணிமாற பரணி’ என்ற நூல். (ஹி.... ஹி...)
================================
  

34 comments:

 1. இதுக்குப்பேருதான் சிரித்திர புரமா? வாவ்... அருமை! சுவையோ சுவை! நகைச்சுவை! ஆமாம் சுவை மட்டும்தாநே இங்க இருக்கு? நகை எங்க? அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. நகைய எல்லாம் அ.நம்பி பறிச்சுக்கிட்டு மாளிகை கட்டப் போயிட்டாருங்கோ... ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 2. வரிக்கு வரி நகைச்சுவை!! அருமை சார்.. தொடருங்கள். :)

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 3. உங்களின் நவரச சுவை அருமை,இம்ம்ம் நானும் ஒரு இன்ச் மூக்குபொடி போடபோறேன்

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 4. பசி பசி என்று ஒரு பக்கம் போதை திருமன் (மூக்குப்பொடி ஓயாம போடுறதுனால இருக்குமோ?) எதிரி நாட்டை பிடிக்க இப்படி ஒரேடியா வந்து ப்ளான் பண்ணாம கூடாரம் போட்டா இப்படி தான்....

  சூர ராஜேந்திரன் அப்பப்ப கொடுக்கும் பஞ்ச் டயலாக் செம்ம சிரிப்பு...

  ஒழுங்கா சமையல் பாத்திரங்களும், சமைக்க தேவையான உணவும் கொண்டு வந்திருக்கலாம் தானே? ஓகே ஒகே போருக்கு வந்திருக்காங்க. கல்யாணத்துக்கு இல்லை....

  பொடிப்போட்டு போட்டு நம்மையும் சிரிக்கவைத்த போதை திருமனுக்கு இன்னும் பீதி கிளப்புறமாதிரி தெய்வானை..

  செம்ம சிரிப்பு.... தூதா புறா வந்தா அதை வறுத்து தின்னுடுவாங்களா.. அது சரி.. இவர் குணம் தெரிந்து தான் தெய்வானையை அனுப்பி இருக்கார் மணி....

  தெய்வானை தூது மாதிரியே தெரியலை. டெரர் மாதிரி வந்து ஓலையை கொடுத்துட்டு.... அதை ஒத்துக்கலன்னா இன்னொரு ஓலையாம்.... போறியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கட்டா (யானைக்காலால் மிதிப்பட்டு) ஹுஹும் தப்பு தப்பு டான்ஸ் ஆடி படையை சிதறடிக்கட்டா.. டீலா நோ டீலா மாதிரி கேட்டாக்க பாவம் போதை திருமன் தான் என்ன செய்வார்? துண்டக்காணோம் துணியக்காணோம்னு பொடி டப்பாவை காணோம்னு ஓடி இருந்திருப்பார்... அதான் ஓடிட்டாரே...

  தெய்வானை வருவதை இடி வருவதற்கு சமமாகச்சொல்லி சிரிக்கவைத்து விட்டீர்கள் கணேஷா....

  ரசிக்கவும் சிரிக்கவும் வைத்த அருமையான பகிர்வு....

  எவ்ளோ நாள் கழிச்சு கமெண்ட் பாக்ஸ் தெரியுது...

  மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் கணேஷா.... வெற்றிகள் நீங்கள் ஏறி வரும் படிகளாகட்டும்பா....

  ReplyDelete
  Replies
  1. எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும். இல்லாட்டா போதை திருமன் கதி தான். ஹா.. ஹா... ரசி்த்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 5. அட்டகாசம் சார்.. இன்னைக்கு எபிசொட் தேவயானை-யால் கலை கட்டிவிட்டது... சுடர் கேட்டதை நானும் கேட்கிறேன் சிரித்திரபுரி மன்னா!! நகை எங்கே??? சுவையை கொடுத்து நகையை பறித்துகொண்டீர்கள். இதற்கு தண்டனை: உங்கள் கனவில் இன்று தெய்வயானை வந்து நடனமாடுவாள் விடிய விடிய!!!!! ஹிஹிஹி!!!

  ReplyDelete
  Replies
  1. ஹய்யோ... இப்படி ஒரு கொடுமையான தண்டனையாம்மா எனக்கு சமீரா..? நான் அம்பேல். அடுத்த பதிவுல நகையவும் கொடுத்துரலாம். மிக்க நன்றி.

   Delete
 6. தெய்வானையால் கிடைத்தது வெற்றியும் சிரிப்பும் !

  ReplyDelete
  Replies
  1. தெய்வயானையையும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 7. //புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!//

  யானையை வறுக்குமளவு மன்னன் மணியிடம் சட்டியில்லையா? அல்லது அந்தச் சட்டியை வாங்குவதற்கு சட்டியிலேயே எதுவுமில்லையா? ஐயகோ! :-)

  ReplyDelete
  Replies
  1. அத்தனை பெரிய சட்டி இருந்தால் போதை திருமன் ஏனய்யா பசியில் வாடப் போகிறான்? ஹி.. ஹி... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 8. Replies
  1. ரசித்ததை அருமையாக ஒரே வார்த்தையில் வெளிப்படுத்தி மகிழ்வித்த சாரல் மேட்த்துக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 9. ஹா ஹா ஹா ஹா ரொம்ப நாளைக்கு அப்புறமா நல்லா சிரிச்சேன், இம்சை அரசன் புலிகேசி நேரில் வந்தாப்ல இருக்கு ஹி ஹி...!

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நாளுக்குப் பின் மனம் விட்டுச் சிரிச்சதா நீங்க சொன்னதுல என் மனம் மகிழ்ச்சியில நிறைஞ்சிடுச்சு நண்பா. மிக்க நன்றி.

   Delete
 10. புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை...!
  >>>
  ஹா ஹா சூப்பர். யானையை தனி ஒரு ஆளால் சாப்பிட முடியாது. அதனால, யானைக்கறியை சாப்பிட ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. வெஜ் பிரியர்கள் உள்ளே வரக்கூடாதுன்னு ஒரு போர்டு வைக்க ஏற்பாடு பண்ணுங்க மன்னவா!

  ReplyDelete
  Replies
  1. யானைக்கறி தின்ன பதிவர் சந்திப்பா... நம்ம ரெண்டு பேருக்கு ஓகே. மத்தவங்களுக்கு என்ன கறிம்மா போடுறது? ஹி... ஹி... படித்து ரசித்த தங்கைக்கு என் இதய நன்றி.

   Delete
 11. ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 12. உங்கள் பெயரின் prefix ஆன 'பால'என்பதின் அர்த்தம,significance எல்லாம் இந்த சீரியலை படித்தால்தான் புரிகிறது.இதை ஒரு ஆடியோ book ஆக வெளியிட்டால் தமிழ் நாட்டில் பல கைக்குழந்தைகளை படுத்தாமல் சாப்பிடவைக்கலாம்.
  புழலில் பல குற்றவாளிகளை திருத்தி நன்னடைப்படுத்தலாம்.
  பல saw mills களில் மின் செலவை கணிசமாக குறைக்கலாம்.
  முதல் அமைச்சர் ஒரு பெண்;அதுவும் மிக ஸ்தூல சரீரம் என்பதுதான் சற்று மனகிலேசத்தைத் தருகிறது!எதற்கு வீண் ரிஸ்க் சுவாமி?
  வாழ்க!! வளர்க!!!

  ReplyDelete
  Replies
  1. இதை புத்தகமாக்ககலாம் என்று என் மனதில் ஒரு சபலம் உண்டு கண்பத். ஆடியோ புத்தகம்...? புதுசா சொல்லியிருக்கீங்க. பாக்ககலாம். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

   Delete
 13. இறுதியில் ஆதாரம் என்று என்னவோ
  நீங்கள் போட்டு
  இருப்பதற்கு அர்த்தம் என்ன ?
  சுட்ட பதிவா , சுடாத பதிவா ??!!
  ஒண்ணும் புரியலையே ....
  எப்படி இருப்பினும் சிரித்து
  சிரித்தே ஆள் க்ளோஸ் ...
  பிடியுங்கள் எம் மனமார்ந்த பாராட்டுக்களை !

  ReplyDelete
  Replies
  1. ஆதாரம் என்பதற்கு பின் ஹி... ஹி... போட்ருக்கேனே... அப்டின்னா உட்டாலக்கடி காமெடின்னுதானே அர்த்தம். ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 14. சார்! சிரிச்சு மாளலை...சூப்பரு!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த துரைக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 15. /// அப்பம் - விண்ணப்பம்...

  புறா அல்ல அரசே! வந்திருப்பது யானை... ///

  ரசித்தேன்... சிரித்தேன்...
  tm10

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 16. மணிமாற பரணியிலிருந்து இரண்டொரு பாடல்களை மேற்கோள் காட்டி எங்களின் தாளாத் தமிழ் தாகத்தைத் தீர்த்திருக்கலாமே!

  ReplyDelete
 17. சிரித்தேன்....ரசித்தேன்....சிரித்துக்கொண்டே ரசித்தேன்....ரசித்துக்கொண்டே சிரித்தேன்....
  சிரித்து, ரசித்து ....அய்யய்யோ!

  நிறுத்திக் கொள்ளுகிறேன்.

  ReplyDelete
 18. வாத்தியரே வசனங்களும் அதைக் கூறும் பாத்திரங்களின் பெயர்களும் மிக அருமை... பாத்திரப் படைப்பும் அதற்க்கு நீங்கள் வைக்கும் பெயரும் உக்காந்து யோசிபீன்களோ

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube