Monday, September 17, 2012

சென் ஸார் என்பவரைத் தெரியுமா?

Posted by பால கணேஷ் Monday, September 17, 2012

ந்தியாவில் திரைப்படங்களில் ஆபாசமான வசனங்களோ, பாடல்களோ, இறையாண்மை(அப்படின்னா?)க்கெதிரான கருத்துக்களோ இடம்பெறாமல் தணிக்கை செய்வதற்காக ‘சென்சார் போர்டு’ என்கிற ஒரு அமைப்பு இருக்கிறது. அதனிடம் சான்றிதழ் பெற்ற பின்னர்தான் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்த ‘சென்சார்’ என்கிற விஷயத்தை நான் கவனித்த பழைய படங்களிலிருந்து துவங்கி தற்காலத்திற்கு வருகிறேன்.

பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே...’’ என்று எழுதியிருந்தார் கண்ணதாசன். சென்சார் ஆட்சேபித்ததால் இந்த வரிகள் மாற்றப்பட்டு, ‘‘வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே, அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே...’’ என்று இப்போது கேட்டால் ஒலிக்கும். உதட்டைசைவிற்கு ஏற்றதாக இருப்பதால் ‌அது பெரிதாகத் தெரியாது.

சென்சாரி் இந்த பருப்பு வேகாமல் போனது அபிநய மன்னரான எம்.ஜி.ஆரிடம்தான். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் ‘சக்கரைக் கட்டி ராசாத்தி’ பாடலில் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உதட்டில் உள்ளதைத் தரவோ’’ என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். ‘உதட்டில் உள்ளதை’ என்ற வரிகளை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘உரிமை சொல்லி நான் வரவோ, என் உயிரை உன்னிடம் தரவோ’’ என்று மாற்றிப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் காட்சியில் ஸ்பஷ்டமாக தன் உதட்டையும், சரோஜாதேவியின் உதடையும் சுட்டிக் காட்டி அபிநயித்திருப்பார் எம்.ஜி.ஆர். நல்ல டமாஸு!

அப்படித்தான் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்ற பாடலில் ‘‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’’ என்று வரும் ஒரு வரிசை சென்சார் ஆட்சேபித்ததால் ‘‘மேடையில் முழங்கு திரு.வி.க. போல்’’ என்று மாற்றியிருப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் உதட்டசைவோ மிகத் தெளிவாக ‘அறிஞர் அண்ணா’ என்றே இருக்கும்.

கன்னாபின்ன‌ொவன்று சென்சார்‌ போர்டு இப்படி மாற்றுவதை தன் படத்திலேயே துணிச்சலாக விமர்சித்தவர் சோ! ஏதோ பெயர் நினைவில்லாத ஒரு படத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த சென் தம்பதியினரின் வீட்டில் அவரும் அவர் நண்பனும் குடியிருப்பார்கள். தங்கள் போர்ஷனிலிருந்து வெளிவரும் போது, ‘‘அர்ஜண்டா ஒரு போன் பண்ணனும்டா’’ என்பார் சோ. ‘‘சென் சார் கிட்ட பர்மிஷன் வாங்கிப் பண்ணேண்டா’’ என்பார் அவர் நண்பர். ‘‘சென் மேடம் நல்லவங்கடா. போன் பண்ண விடுவாங்க, சென்சார் ஒரு மடையன், முட்டாள்!’’ என்பார் சோ. அரங்கையே அதிர வைத்த வசனம் அது அந்நாளில்.

இப்படியெல்லாம் நல்ல தமிழ் வரிகளையே ஆட்சேபித்த சென்சார் என்கிற அமைப்பு பின்னாளில் அருமையாக எழுதி வரும் நம் சமகாலக் கவிஞரான வைரமுத்துவையும் விட்டு வைக்கவில்லை. உயர்ந்த உள்ளம் படத்தில் ‘‘கலசம் இங்கு கவசமாகும், காமன் அம்பு முறிந்து போகும்.’’ என்று அவர் எழுதியிருந்த வரிகளை மாற்றச் சொன்னதால், ‘‘விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம், தொடங்கு கண்ணே புதிய பாடம்’’ என்று மாற்றிப் பதிவு செய்திருந்தார்கள். வைரமுத்துவையும் விட்டு வைக்காதது இந்த சென்சார்!

இவ்வளவு விழிப்பாகச் செயல்பட்ட சென்சார் போர்டு பின்னாளில் தாராள மனம் கொண்டு ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா, இல்ல ஓடிப் போயி கல்யாணம் கட்டிக்கலாமா?’ என்பது போன்ற இலக்கியத் தரமான(?) பாடல் தொடங்கி எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள். (இன்றைய ஆபாச வரிகள் அடங்கிய பாடல்களின் உதாரணங்களை விலாவரியாக அடுக்கி இதை ஆபாசப் பதிவாக மாற்ற நான் விரும்பாததால் ஒன்றை மட்டும் சொல்லியிருக்கிறேன்.) சமூகத்தில் விரசம் என்பதன் அளவுகோல் என்பது மாறிவிட்டதா... இல்லை, தொலைக்காட்சி செய்யாத கெடுதலையா சினிமா செய்துவிடப் போகிறது என்கிற அலட்சியமா... புரியவி்ல்லை.

பாடல்களில் இப்படி என்றால் வசனங்களில்... யப்பா! வசூல்ராஜா படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் வசனம் ஒன்று சைலண்ட் செய்யப்பட்டிருக்கும். அடுத்த செகண்ட் கமல் இப்படிச் சொல்வார்: ‘‘இன்னா சார், பெத்த பொண்ணையே லோலாயி, பூட்ட கேஸ்ன்னு சொல்றீங்க?’’ என்று. அட ஞானசூன்யங்களா...! இப்படித் தெளிவாக வசனத்தைச் சொல்வதற்கு என்ன எழவுக்ககாகய்யா பி,ராஜ் பேசும் வசனத்தை வெட்டினீர்கள்? ஒருவேளை வில்லன் சொன்னால் ஆபாசம். கதாநாயகன் சொன்னால் ஆபாசமில்லை என்பது அளவுகோலா?

யதார்த்தமான மனிதர்களைக் காட்டுகிறேன் பேர்வழி என்று பாரதிராஜா தன் படம் நெடுக தக்காளிக்கான எதுகைச் சொல்லை இறைத்திருந்தார். அதுவும் ஆட்சேபிக்கப்படாமல் வெளியானது. இவையெல்லாவற்றையும் மிஞ்சி விவேக் என்கிற காமெடியர் தன் அங்க அசைவுகளாலும், வார்த்தைகளாலும் இரட்டை அர்த்தம் எதுவுமின்றி வெளிப்படையாக ஒற்றை அர்த்தத்திலேயே காமெடி(?) என்கிற பெயரில் கூத்தடித்து வருகிறார். (இவருக்கு ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் வேறு. கலைவாணர் இருந்திருந்தால் இதைக் கேட்டுக் கதறி அழுதிருப்பார்.)

இதையெல்லாம் கவனித்து வருகிற எனக்கு பல நாட்களாகவே மனதில் எழும் கேள்வி: ‘‘சென்சார் போர்டு என்கிற ஒன்று திரைப்படங்களுக்குத் தேவையா?’’ என்பதுதான். படத்தைத் தயாரிப்பவர் அதை நேரடியாக தியேட்டர்களிலோ, டிவிடிகளிலோ வெளியிட்டு விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? தமிழக அரசு சந்துக்குச் சந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழக மக்களைக் கெடுப்பதை விடவா அதிகமாக சினிமாக்கள் கெடுத்துவிடப் போகின்றன? பேருக்கு செயல்படுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பும், அதற்கு தெண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஏழெட்டு அதிகாரிகளும் இருந்து கண் துடைப்பாக செயல்படுவதை விட இழுத்து மூடிவிடுவது உத்தமம் என்பது என் கருத்து.

தணிக்கைத் துறையைப் பொறுத்த வரையில் என் நிலைப்பாடு இப்படி! உங்கள் கருத்து எப்படி?

70 comments:

  1. இந்த உறுத்தலும் ஆதங்கமும் எங்களுக்குள்ளும் இருக்கு சார்
    நல்ல கேள்வி எழுப்பட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. என் ஆதங்கத்தை ஆமோதித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. தணிக்கைத் துறையைப் பொறுத்த வரையில் என் நிலைப்பாடு இப்படி! உங்கள் கருத்து எப்படி?=அப்படியே..

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி கவிஞரே...

      Delete
  3. ‘‘சென்சார் போர்டு என்கிற ஒன்று திரைப்படங்களுக்குத் தேவையா?’’ தேவையென்றால் தேவைதான்.

    ReplyDelete
    Replies
    1. தேவைதான் சசி. ஆனால் செயல்படுவதாக இருக்க வேண்டுமே என்பதே என் கருத்து. மிக்க ந்ன்றிம்மா.

      Delete
  4. தேவையா?? - சசி அக்கா சொல்வது போல தேவைதான்.. அவர் எப்படி சொன்னார் என்பது தெரியவில்லை; இது என் கண்ணோட்டம்,
    சென்சார் என ஒன்று இருப்பதால் தான் பல அபாயகரமான காட்சிகள் நீக்கபடுகின்றன.. அதுவும் இல்லையென்றால் நம் ஆட்கள் ஹலிவூட்-டை மிஞ்சி விடுவார்கள்..
    பருத்தி வீரன் என்று ஒரு படம் - பல பேருக்கு favorite படம்.. என்னால் சகிக்க முடியவில்லை அதில்வரும் பல உரையாடல்கள் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி.. கொடுமையிலும் கொடுமை அதற்கு தமிழக அரசு விருது கொடுத்தது... இப்படி பல படங்கள் உள்ளன. எல்லாம் சொல்லபோனால் பின்னுட்டம் ஒரு பதிவாகிவிடும்!

    இன்று வெளிப்படையாக ஆபாசமாக பேசுவது தான் உலகத்தரம்(?) என எண்ணுகின்றனர்.. எங்கே போகிறது தமிழ் சினிமா?? குடும்பத்துடன் இன்று ஒரு படம் பார்க்கும் யோக்கியதையில் தான் உள்ளதா?? இதற்கு முழு பொறுப்பு -- உப்பு சப்பில்லாத சென்சார்... பாடல் காட்சிகளில் வரும் ஆபாசமே முன்பு பெரிதாக இருந்தது; இன்று..படம் முழுக்க உடையும் வசனமும் ஆபாசம் தான்...

    //விவேக் -இவருக்கு ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் வேறு. கலைவாணர் இருந்திருந்தால் இதைக் கேட்டுக் கதறி அழுதிருப்பார்.)// - பல நேரங்களில் நானும் இதைதான் நினைப்பேன்.. அவரின் காமெடிகள் அவர் மகள் பார்க்க கூட கூசிபோவார்..

    பழைய படங்கள் பற்றி பல தெரியாத உண்மைகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றிகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. சென்சார் என ஒன்று இருப்பதால் தான் பல அபாயகரமான காட்சிகள் நீக்கபடுகின்றன.. அதுவும் இல்லையென்றால் நம் ஆட்கள் ஹலிவூட்-டை மிஞ்சி விடுவார்கள்..
      உண்மை தான். இருப்பினும் சட்டத்தைப் போல் தான் சென்சாரும் செயல்படுகிறது. அங்கே வலிமையானவர்களுக்கு சலுகைகளும், எளிமையானவர்களுக்கு கஷ்டங்களும் எப்பொழுதும் நிகழ்கிறது.

      இன்று வெளிப்படையாக ஆபாசமாக பேசுவது தான் உலகத்தரம்(?)
      உண்மையில் இந்த கேள்விகள் நிறையப் பேரின் மனங்களில் எழவில்லை. எனவே அதையெல்லாம் இன்னும் ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
      உங்களின் பின்னூட்டம் ஒரு பதிவாகவே எனக்குத் தெரிகிறது.

      Delete
    2. எல்லாம் தமிழ் சினிமா பற்றிய வயிற்றெரிச்சல் தான் சார்.. இதைபற்றி எழுதிக்கொண்டே போகலாம்... இப்போதைய படங்களில் ஒரு காட்சியாவது முகம் சுளிக்காமல் பார்க்க முடிகிறதா? ஒன்று ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள் இல்லையென்றால் அதிநவீன ஆடை குறைப்பு... வீட்டில் படம் பார்பதையே தவிர்த்து விட்டேன் (தியேட்டர் செல்வேன் என தப்பா நினைசிடதீங்க)..

      Delete
    3. எக்ஸலண்ட் சமீரா. ஆடைக்குறைப்பு, ஆபாச் பச்சை வசனங்கள் இவற்றையெல்லாம் எழுதினால் தொடராகி விடும் என்றுதான் சுருக்கி எழுதினேன். என்னுடைய ஆதங்கத்தின் அதே அளவான ஆதங்கமும் கோபமும் உன்னுள்ளும் இருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றிம்மா.

      Delete

    4. என்ன செய்வது ஒரு காலத்தில் கலை தான் கல்வியைப் போதித்தது. அப்பொழுது கலை உச்சத்தில் இருந்தது. கல்வியும் உச்சத்தில் இருந்தது. இன்றும் கலை தான் நமது கல்வியை வளர்கிறது. இன்றைய கலையான சினிமாக்கள் தான் நம் கல்வித்துறையை பெரிதும் சலனப்படுத்துகிறது

      அதற்கு சிறந்த உதாரணம். நம்முடைய கல்வித் தரத்தைப் பற்றி உலக நாடுகள் கேள்வி எழுப்புவது தான். இந்தியாவில் கல்வித் தரமில்லை எனவே தான் பல லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுகின்றனர்.
      ஒரு நாட்டில் கலை எப்படியிருக்கிறதோ, அப்படியே கல்வியும் இருக்கும்.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தென்கொரியாவும்,ஈரானும்.
      நம்முடைய கல்வித் தரமும் அதுப் போல் சீரடைய வேண்டுமெனில், கலையும் சீரடைய வேண்டும்.
      எனவே நம்முடைய இன்றைய கலைகளில் பிரதானமாக இருக்கும் திரைப்படங்கள் மறுமலர்ச்சி பெற வேண்டும்.
      மறுமலர்ச்சிக்கு சிறந்த கலைஞர்கள் திரைத்துறைக்கு வர வேண்டும்.
      அப்பொழுது நீங்கள் சொல்லும் இரட்டை அர்த்த வசனங்கள், ஆடைக் குறைப்பெல்லாம் இருக்காது.


      Delete
  5. பெரிய திரைக்கு இருக்கு சென்சாரு, சின்ன திரைக்கும் விளம்பரங்களும் ஏன் இல்ல??

    ReplyDelete
    Replies
    1. சின்னத் திரைக்கும் ‘நான் லீனியர் எடிட்டிங்’ என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. எதுவும் சரியாகச் செயல்படுவதில்லை என்பதே உண்மை. நன்றிங்க.

      Delete
  6. உங்கள் ஆதங்கம் புரிகிறது.....என்ன செய்ய...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. ஆதரித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  7. ஹா ஹா ஹா தலைபி ரசிக்கும் படி இருந்தது..இப்போதெல்லாம் சென்சார் வேளை செய்கிறதா என்றே தெரியவில்லை... நல்ல அலசல் வாத்தியாரே வைரமுத்து வாலியின் ஆபாச வரிகளை நல்ல வேலை நீங்கள் குறிப்பிட வில்லை...

    சோ வின் வசனங்கள் எபோதுமே எனக்குப் பிடிக்கும்... அவர் பேசிய வசனங்கள் எக்காலத்திற்கும் பொருந்தும்

    ReplyDelete
    Replies
    1. வாலி எழுதிய விரசப் பாடல்களைப் பட்டியலிட்டால் இடம் பற்றாது சீனு. ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. It is a very good post. I think I have to thank the auto man to cure your wound, of course in a cruel way, because not only you have come so fast but also with new thought. It will be an unending subject if we start analysing the way censor is working in our country as well as the quality of movies being released nowadays. As you rightly said there is no necessity for any censor board nowadays. You see the reviews of the movies which concludes with the wordings - this is a good movie, one can watch it with FAMILY which means that it has no objectionable scenes that creat an embarrasing situation for parents. In recent news, I read that a movie which was rejected at state level, got the certificate to release at central level. This is how the Censor Board is functioning. WHAT ELSE TO SAY. Thank God I am happy that nobody has made a film featuring Sunny Leon - Got the point!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது மிகச் சரி. படம் எடுக்கும ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துப் பெண்களை முதலில் பார்க்கச் சொன்னால் இவையெல்லாம் சரியாகிவிடும்தான். நற்கருத்துச் சொன்ன உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. நாளை நமதே படத்தின் 'என்னை விட்டால்' பாடலில் 'அரச மரத்தின் இலைகளில் ஒன்று' வரி 'அழகர் மலையின் இலைகளில் ஒன்று' என்று மாறி,
    'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா' பாடல், 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி' என்று மாறி,
    எங்க வீட்டுப் பிள்ளை பாடலில் 'இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்ற வரிகள் 'இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்' என்று மாறி....
    என்று இந்த லிஸ்ட் கொஞ்சம் நீளம்! 'எங்கள் ப்ளாக்'கிலும் இது பற்றிய பதிவொன்று வந்தபோது மீனாக்ஷி இன்னும்பல பாடல்களை இந்த வரிசையில் நினைவு படுத்தியிருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் நிறையப் பாடல்கள் தெரியும் ஸ்ரீராம். எல்லாவற்றையும் எழுதினால் மிக நீண்ட பதிவாகி சலிப்புத் தட்டி விடுமே எனறுதான் சுருக்கி வரைந்தேன். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. ‘‘சென்சார் போர்டு என்கிற ஒன்று திரைப்படங்களுக்குத் தேவையா?’’ என்பதுதான்.

    சென்சார் போர்டு தேவைதான். ஆனால் சரியான அனுகுமுறையுடன். நம் தமிழர்களின் வாழ்க்கை முறைக்கு ஊறு விளைவிக்கும் காரணிகளை களையும் பாரபட்சமின்றி நடுநிலையுடன் செயல்படும் சென்சார் போர்டு தேவை.


    கண்ணதாசனின் எத்தனை நல்ல வரிகள் இந்த சென்சார் போர்டினால் நம் காதிற்கு எட்டாமல் போய்விட்டது.
    சென்சார் போர்டுப் பற்றீய ஒரு சரியான பார்வையைத் தருகிறது உங்களின் கட்டுரை.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையை ரசித்துக் கருத்திட்ட தமிழ்ராஜாவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. அண்ணே உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.//சென்சார் போர்டு என்கிற ஒன்று திரைப்படங்களுக்குத் தேவையா?’’ என்பதுதான்.// கண்டிப்பா தேவைதான் என்பேன்.சீரியல்களுக்கும் வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அது தேவைதான்மா. ஆனா விழிப்பா செயல்பட வேணாமாங்கறதுதான் என் ஆதங்கம். மிக்க நன்றிம்மா.

      Delete
  12. கண்டிப்பாக தேவை தான் பால கணேஷ் ஆனால் இன்னும் சரியாக முறைபடுத்த பட வேண்டும் சென்சார் போர்டு
    மேலும் டிவி க்கு கட்டாய தேவை சென்சார்

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் சரவணன். டிவிக்கும் வேறயா... சரியா செயல்பட்டாலே போதும். மிக்க நன்றிங்க.

      Delete
  13. கண்டிப்பாக தேவை... பணம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது என்பது என் கருத்து...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் நற்கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. எல்லாம் அந்த ‘பா’ணாவுக்குத்தான் (பரமசிவத்திற்குத்தான்) தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. சென்சாரின் கைகள் நீள வேண்டிய இடத்தில் நீளாமலும் தேவையற்ற இடத்தில் நீளுகின்றது என்பது என் கருத்து. பாடல் வரிகளில் ஆபாசமான வரிகள் வரும்போது சவுண்டை மட்டும் கட் பண்ணிட்டு, அந்த ஆபாச வரிகளுக்கேற்ப ஆடிய ஆபாச அசைவுகளை கட் பண்ணாம விட்டுடுறாங்க. நம்மா ஆளுங்க கோடு போட்டா ரோடு போடுவாங்க, ரோட்டையே போட்டு குடுத்தா?!

    சின்னத்திரை மட்டுமல்ல, பத்திரிகைகளுக்கும் சென்சார் வேண்டும் என்பது என் விருப்பம். அரைகுறை ஆடை அணிந்த விளம்பரங்கள், கள்ளக்காதல், எப்படி கொலை செய்தது, போதை மருந்து விழிப்புணர்வுன்னு சொல்லி எதைலாம் சாப்பிட்டா போதை வரும்ன்னு விலாவரியா எடுத்து சொல்றதுக்கலாம் ஒரு தடா வரனும்ண்ணா

    ReplyDelete
    Replies
    1. தங்கையின் கருத்தை நான் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். நன்றிம்மா.

      Delete
  16. Very detailed analysis. Liked many parts, particularly about MGR. But I feel Censor is required

    ReplyDelete
    Replies
    1. நானும் MGR பற்றிய செய்தியை ரசித்தேன் சார்.. அவர் எல்லாருக்குமே வாத்தியார் தான் (அது சென்சார் போர்டு-அ இருந்தாலும் சரிதான்)

      Delete
    2. நான் MGR ன் தீவிர ரசிகன்தான் சமீரா. சென்ஸார் குறித்து நல்ல கருத்தளித்த மோகனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. //கலசம் இங்கு கவசமாகும், காமன் அம்பு முறிந்து போகும்//
    அடுத்த வரி மலர்ந்த தேகம் கிளர்ந்து போகும்...

    இது என்னிடம் கேசட்களிலும், சிடிகளிலும் இருக்கிறதே? ஒரு வேளை, படத்தில் நீக்கப் பட்டுவிட்டதோ?

    சென்சார் தேவையா என்றால் தேவைதான். ஆனால் அவர்கள் வேலைத் தரம் பிரிப்பதாக இருக்க வேண்டுமே தவிர வெட்டுவதாக இருக்கக் கூடாது.
    தரம் பிரிக்கப்பட்டப் பிறகு அது முறையாகச் செயல்படுத்தப் படவும் வேண்டும். அதாவது ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படத்தை அதற்கானத் த்யேட்டர்கள்/ அந்த வயதை எட்டியவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

    ஆனால், தற்போது ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்களும் சில காலங்களுக்குப் பின் எந்த நேரத் தணிக்கையும் இன்றித் தொலைக்காட்சிகளில் அனைவரும் காணும் நேரத்தில் ஒளிபரப்பப் படுகின்றன. உதா. நடுநிசிநாய்கள் என்ற திரைப்படம் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானப் படம். ஆனால் இது ஞாயிறு/விடுமுறை தினத்தில் மதியம் 11 மணிக்கு ஒளிபரப்பாகியது. இதை யார் கட்டுப்படுத்துவது. இது போன்றவைத் தீர்மானிக்கப்பட/தடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ஸ்ரீனி. இதுபோன்ற திரைப்படங்கள் தொலைக்காட்சியிலும் உடனே ஒளிபரப்பப்படுவதுதான் எனக்குள்ள கோபமும். மிக்க நன்றி.

      Delete
  18. மிகமிகத் தேவையான அலசல் கணேஷ். பின்னூட்டங்களும் மிகச் சரியாகவே அலசலை முன்வைக்கின்றன. திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் கூட சென்சார் தேவை என்பேன். இன்றைய காலகட்டத்தில் சென்சார் என்னும் அமைப்பு தங்கள் கடமையை சரிவர செய்வதில்லை என்ற பெரும்பாலானோருடைய கருத்தே என் கருத்தும்.

    அன்று திரைப்படங்களை என் அப்பா முதலில் பார்த்துவிட்டு வந்து வீட்டில் குடும்பத்துடன் போகலாமா கூடாதா என்று சொல்வார். இன்று அப்படியில்லை. வீட்டுக்கூடத்துக்கே நம் அனுமதியின்றி பல நிகழ்ச்சிகளும் வந்துவிடுகின்றன. தற்காலப் பிள்ளைகளுக்கும் கிரகிப்புத் திறன் அதிகம். வயதுக்கு மீறிய வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளால் சீரழிவது குழந்தைகளின் எதிர்காலம்தான். அதனால் தணிக்கைத் துறை தன் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து தன் பணியைச் செய்தாலே பல வக்கிரங்களையும், வன்முறைகளையும் அதனால் உண்டாகும் தேவையற்ற மனக்குமைவுகளையும் தவிர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய குழந்தைகளிடம் கிரகிப்புத் தன்மை அதிகம் என்கிற உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரி. மொபைல் போன் பற்றி என்னைவிட என் தங்கை மகளுக்கு அதிகம் தெரிகிறது. சரியான படி தணிக்கைத் துறையின் செயல்பாடு சரியானபடி அமைய வேண்டும் என்பதுதான் என் கருத்தும். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  19. நியாயமான கேள்வி தான்..... என்னத்தை சொல்வது...

    ReplyDelete
    Replies
    1. ஆதங்கத்தைப் பகிர்ந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி தோழி.

      Delete


  20. //தமிழக அரசு சந்துக்குச் சந்து டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழக மக்களைக் கெடுப்பதை விடவா அதிகமாக சினிமாக்கள் கெடுத்துவிடப் போகின்றன?//

    ' ஏம்மா!! பள்ளிக்கூடத்திற்குப் போகல்லையேன்னு என்ன மட்டும் ஏன் திட்டறே ...
    அண்ணன் அஞ்சு வருசமா ஸ்கூலுக்கு போகாம ரௌடியாயிட்டானே...அவனைக் கேட்க மாட்டேங்கறேய'

    'இல்லேடா !! அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நான் செஞ்ச தப்பு அவன இப்ப இல்ல, இன்னும் அம்பது வருசத்துக்கு
    அவனை வாட்டிக்கிட்டே இருக்குமடா....
    ஒரு புள்ளையத் தான் கவனிக்காம போயிட்டேன்னா இன்னொன்னையும் கவனிக்காதேன்னா சொல்றே !!
    இன்னும் அஞ்சு வருசம் கழிச்சு, நீ என்னை அம்மான்னு கூப்பிடணுமா வேண்டாமா ?'

    எங்க கிராமத்திலே வயல் வரப்புலே என்னிக்கோ கேட்டது இன்னைக்கும் நினைவு இருக்கு.
    இப்ப‌,
    அண்ணன் .......... லே இருக்காரு.
    தம்பி.......... ஆடிட்டரா இருக்காரு.

    இதுக்கும் அதுக்கும் என்ன கனெக்சன்? அப்படின்னா கேட்கறீக..?

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com






    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நீங்க சொன்னது நல்லாவே புரியுதுங்க. சூப்பரு. மிக்க நன்றி.

      Delete
  21. //பேருக்கு செயல்படுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பும், அதற்கு தெண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஏழெட்டு அதிகாரிகளும் இருந்து கண் துடைப்பாக செயல்படுவதை விட இழுத்து மூடிவிடுவது உத்தமம் என்பது என் கருத்து.//

    ஹா...ஹா..ஹா....

    தூங்குறவங்களுக்கு எதுக்கு சம்பளம்னு சொல்றீங்களா... சரிதான்!

    அன்றைய காலம் இன்றைய காலம் சென்சார் துறை ஒப்பீட்டை பார்த்த பின் தான் இன்றைய சென்சார் துறையும் 'தூக்கம்' புரிகிறது.. இதெல்லாம் இப்ப சாதாரண விஷயம் என அவர்கள் நினைத்துவிட்டார்கள் போலும்...

    கண்டிப்பாக மாற்றம் தேவை...

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. அருமையாக விரிவாக அலசி
    ஆராய்ந்து பதிவிட்டிருக்கிறீர்கள்
    தங்கள் தர்மீகக் கோபமும் நியாயமானதே
    பேருக்கு ஒன்று இருக்கையிலேயே இப்படி இருக்கிறது
    அப்படி ஒன்று இல்லையென்று சொன்னால்
    என்ன ஆகும் என நினைக்க பயமாகத்தான் இருக்கிறது
    சிந்திக்கத் தூண்டும் பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸார். இருந்தும் இல்லையென்று இருப்பதால் வந்த கோபம்தான் அது. தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  23. இதுபோல் தணிக்கை குழுவினர் மாற்ற சொன்ன திரைப்பட பாடல் வரிகள் அநேகம் உண்டு.‘பாக்யலக்ஷ்மி’ என்ற படத்தில் திரு A.L.இராகவன் குழுவினர் பாடிய,'கல்லூரி ராணிகாள் உல்லாச தேனிகாள்
    பொல்லாத இந்த மாலை நேரமே!’ என்ற வரிகளை ஒத்துக்கொள்ளாததால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள், அதை "சிங்கார சோலையே உல்லாச வேளையே,பொன்னான இந்த மாலை நேரமே , என்று மாற்றினாராம்.
    படத்தில் வரிகள் மாறியிருந்தாலும் இசைத்தட்டுகளில் அவை ’கல்லூரி ராணிகாள் என்றே இருக்கும்.
    அதுபோல M.G.R அவர்கள் நடித்த AVM ன் ‘அன்பே வா’என்ற திரைப்படத்தில் திரு TMS அவர்கள் பாடிய
    புதிய வானம் புதிய பூமி - எங்கும்
    பனிமழை பொழிகிறது என்ற பாடலில்
    ‘உதய சூரியனின் பார்வையிலே
    உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே’
    என்ற வரிகளை நீக்க சொல்லியதால் இதுபோல் தணிக்கை குழுவினர் மாற்ற சொன்ன திரைப்பட பாடல் வரிகள் அநேகம் உண்டு, ‘பாக்யலக்ஷ்மி’ என்ற படத்தில் திரு A.L.இராகவன் குழுவினர் பாடிய ‘’கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள்
    பொல்லாத இந்தமாலை நேரமே!’’ என்ற வரிகளை ஒத்துக்கொள்ளாததால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அதை "சிங்கார சோலையே உல்லாச வேளையே,பொன்னான இந்த மாலை நேரமே , என்று மாற்றினாராம்.
    படத்தில் வரிகள் மாறியிருந்தாலும் இசைத்தட்டுகளில் அவை ’கல்லூரி ராணிகாள் என்றே இருக்கும்.
    அதுபோல M.G.R அவர்கள் நடித்த AVM ன் ‘அன்பே வா’என்ற திரைப்படத்தில் திரு TMS அவர்கள் பாடிய
    புதிய வானம் புதிய பூமி - எங்கும்
    பனிமழை பொழிகிறது என்ற பாடலில்
    ‘உதய சூரியனின் பார்வையிலே
    உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே’
    என்ற வரிகளை நீக்க சொல்லியதால் அதை
    ‘புதிய சூரியனின் பார்வையிலே
    உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே' என மாற்றினார்களாம்.

    என்னைக் கேட்டால் தணிக்கைக்குழு என்பது ஒரு 'Necessary Evil’ என்பேன்!


    ReplyDelete
    Replies
    1. அருமை... உங்களின் நற்கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸார்.

      Delete
  24. பொதுவாக நங்கள் நினைப்பதை நீங்கள் எங்கள் சார்பில் எழுதினமாதிரி இருக்கு ஃப்ரெண்ட்.பின்னூட்டங்களிலும் சிலர் விளக்கம் தந்திருக்கிறார்கள் நன்றி !

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து என் கருத்தையும் ஆமோதிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி ஃப்ரெண்ட்.

      Delete

  25. கடமை உணர்வோடு கண்ணியமான கட்டுப்பாடு
    சினிமாவோடு முக்கியமா தொலைக்காட்சிக்குத் தேவை

    ReplyDelete
    Replies
    1. புலவர் ஐயாவின் கருத்து மிகச் சரியே. தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  26. விரசம் என்று பார்த்தால் திருப்பாவையில் இல்லாத விரசமா? சௌந்தர்யலகரியில் இல்லாத விரசமா? அதையெல்லாம் மாற்ற முடியுமா?
    விரசம் என்று எதுவும் இல்லை. இது விரசம் அது விரசம் என்று சொல்லும் அத்தனை பேரும் பொய்யர்கள் என்று நினைக்கிறேன். மதம் தெய்வம் என்று ஓடும் அத்தனை பேரும் விரசம் ஆபாசம் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பொய்யர்கள். தன்னம்பிக்கையோ பிறர் மீது நம்பிக்கையோ அற்றவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பாவையையும். சௌந்தர்ய லகரியையும் படித்து விரசத்தை உணர்பவர்களை விட சினிமா. டிவி பார்ப்பவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம் அப்பா ஸார். சிறுவர்களைக் கலைக்க இன்று எத்தனையோ விஷயங்கள் மலிந்து கிடக்கையில் இந்த தணிக்கைக் குழுவாவது விழிப்பாய் இருக்க வேண்டாமா?

      Delete
  27. விரசம் என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே? பிடிக்கவில்லையென்றால் ஒதுங்க வேண்டியது தானே? தணிக்கை செய்வது மாற்றுவது எல்லாம் கபடம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா... நீங்களும் சென்சார் போர்டே தேவையில்லைங்கறீங்க... ரைட்டு.

      Delete
  28. சென்சார்ன்னு ஒன்னு இன்னும் இருக்கா? நான் மூடிட்டானுகன்னு நினைச்சேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நியாயமான சந்தேகம்தான் உங்களுக்கும் வந்திருக்கு நண்பா. மிக்க நன்றி.

      Delete
  29. நல்ல அலசல் கணேஷ். பின்னூட்டங்களும் போட்டி போடுகின்றன...

    ReplyDelete
    Replies
    1. என் அலசலோடு பின்னூட்டங்களையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  30. ///சென்சாரின் கைகள் நீள வேண்டிய இடத்தில் நீளாமலும் தேவையற்ற இடத்தில் நீளுகின்றது என்பது என் கருத்து. பாடல் வரிகளில் ஆபாசமான வரிகள் வரும்போது சவுண்டை மட்டும் கட் பண்ணிட்டு, அந்த ஆபாச வரிகளுக்கேற்ப ஆடிய ஆபாச அசைவுகளை கட் பண்ணாம விட்டுடுறாங்க////

    ராஜி அவர்கள் சொன்னதுதான் எனது கருத்தும்

    ReplyDelete
    Replies
    1. தங்கை ராஜியின் கருத்தை ஆமோதித்து என் பதிவை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  31. இப்போ வர வர .. கொலைவெறியை தூண்டும் பாடல்களும் , காட்சிகளும் மிகையாக உள்ளதுங்க சார் .. என்னத்த பண்ண ஆனா ஈழம் என்றோ பிரபாகரன் என்று சொன்னால் போதும் கண்ணில் விளக்கெண்ணெய் கொண்டு தேடும் இந்த அரசாங்கம் எதோட வலையில் சிக்கி இருப்பது நன்கு புலப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா.

      Delete
  32. One thing you have missed to mention! When a film has objectionable scenes and the Chennai sensors advise a cut or change, the film directors approach Deli / Mumbai censors and get approval!

    -R. J.

    ReplyDelete
  33. I was also thinking about how the censor allowed Kamal saying "Lolayi" and censored Prakashraj's reference.
    Then, I realized, may be Kamal can do it because of his character being Vasool Raja and its acceptable for them to speak like that. Whereas Prakashraj is a doctor and Dean and them saying those words needs to be censored.
    Btw, I agree with you on Vivek being called as Chinna Kalaivanar.
    I still think we need censor as we need someone to regulate things even if they do a poor job.

    -Murugappan.

    ReplyDelete
  34. எனக்கும் எப்பொழுதும் இந்த ஆதங்கம் உண்டு! இப்பொழுது வருகிற எந்த படத்தையும் பெற்றவர்களோடு பார்க்க முடிவதில்லை! தாங்கள் குறிப்பிட்ட காமெடியன் விவேக் நடித்த படங்கள் பலதில் நான் கண்டு வெறுத்ததும் ஆதங்கப்பட்டதும் இதுவே!!! விஷமம் வீரியம் கொண்டு விரைந்து செல்கிறது நாம் இன்னும் இருக்கிறதா? இல்லையா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்!!!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube