Monday, August 13, 2012

நடை வண்டிகள் - 30

Posted by பால கணேஷ் Monday, August 13, 2012

                        நானும் அனுராதாரமணனும்-3

னும்மாவின் தாத்தா அந்நாளில் பிரபலமான நாடக/திரைப்பட நடிகர். அம்மாவழிப் பாட்டியும், அப்பாவழிப் பாட்டியும் தன் பேத்தி சங்கீதம் கற்றுக் கொண்டு கச்சேரிகள் செய்ய வேண்டும் என்கிற ஆசையுடன் சங்கீத வாத்தியாரை வீட்டுக்கு வரச்செய்து சங்கீதம் கற்றுத்தர ஏற்பாடு செய்திருந்தார்கள். அரியக்குடி ஐயங்கார் வேறு அவர்கள் இருக்கும் அதே தெருவிலேயே குடியிருந்தவர். இப்படியான சங்கீத சூழ்நிலையில் வளர்ந்து சங்கீதம் படித்தவராக இருந்ததால் ராகங்கள் அனைத்தும் அவருக்கு அத்துபடி. குங்குமம் இதழில் டிசம்பர் மாதத்தில் சங்கீத விமர்சனங்கள் எழுதிவந்த ‘காமேஸ்வரி ஐயர்’ அனுராதா ரமணன் அவர்கள்தான். சகுந்தலா பாலு (பெண்கள் துப்பறியும் பாக்டரி - அவள் விகடன்), சாரதா நடராஜன் (வரம் தரும் விரதங்கள் - குங்குமம்) இப்படிப் பலபெயர் மன்னியாக எழுதிக் குவித்தவர் அனும்மா.

நான் சொல்ல வந்த விஷயம் அதில்லை. சங்கீதத்தில் நிறைய ஈடுபாடும் ஞானமும் உள்ள அவரை அந்த ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலருக்காக இளம் திரைப் பாடகர்கள் அனைவருடனும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து விரிவான ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அந்த கலந்துரையாடல் முடிந்ததும் வந்திருந்த இளம் பாடகர்கள் அனைவருக்கும் சிநேகிதியாகி விட்டார் அனும்மா. தன்னுடன் பழகும் எவரையும் தன் இனிய சுபாவத்தில் நண்பர்களாக்கி விடுவதுதானே அனும்மாவின் சிறப்பம்சம்! அவருடைய தொ.பே. எண்ணை வாங்கிக் கொண்டு, அவ்வப்போது பேசி அவருடன் தொடர்பில் இருநத அந்த ‘இளம் குயில்’களை தன் பிறந்த நாள் விழாவில் பாடுவதற்கு அழைத்திருந்தார் அனும்மா.

அனும்மாவின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக் கொள்வது எளிது. அவரின் பிறந்த நாளுக்கு அரசாங்க விடுமுறைகூட உண்டு. ஏனென்றால் ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர் அவர். அனும்மா பிறந்ததினக் கொண்டாட்டத்தை கலாக்ஷேத்ரா காலனியில் ஒரு திறந்தவெளி தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதிவேகமான பீட்டில், இரைச்சலான குரலில் இன்றைய திரைப்பட சங்கீத(?)த்தைப் பாடும் அந்த இளம் கலைஞர்கள் அனைவரும் அனும்மா தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்த பழைய பாடல்களைப் பாடியபடி இருந்தது ஒருபுறம் கேட்கவே ரம்மியமாக இருந்தது. ஓவியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட பிரபலங்களும் வந்திருந்ததில் எனக்குப் பிடித்த பல பிரபலங்களை நான் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது இரண்டாவதான கூடுதல் மகிழ்ச்சி. விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் ஓரிரு வார்த்தைகள் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தது அன்றைய தினத்தின் மூன்றாவது மகிழ்ச்சி. விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் அவர் எழுதிய ‘உறவுகள்’ புத்தகத்தை கையெழு்த்திட்டு அவர் வழங்கியிருந்தார் என்பது நான்காவது போனஸ் மகிழ்ச்சி.

அந்தப் பிறந்ததினக் கொண்டாட்டத்தின் பின்னர் நண்பர் பி.கே.பி.யின் மகள் ஸ்வர்ண ரம்யாவின் திருமணத்தில் அனும்மாவை மீண்டும் சந்தித்தேன். அதற்குப் பின்னர் அவர் வீட்டுக்குச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவரிடம் சொன்னேன். ‘‘ஒரு பத்திரிகையாசிரியர் காஞ்சி ஸ்வாமிகள் சர்ச்சை பலமாக அடிபட்ட சமயத்தில் உங்களைப் பற்றி ஒரு மோசமான கருத்துச் சொன்னார். அவர் உங்கள் பிறந்த நாளிலும், ரம்யாவின் கல்யாணத்திலும் உங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு ரொம்ப ஆச்சரியம்ங்க’’ என்றேன். பட்டென்று அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயரைச் சொன்னார் அனும்மா. நான் வியந்தேன். ‘‘மனுஷங்களை என்னால புரிஞ்சுக்க முடியும் கணேஷ். ஒரு பெண் தன்னந்தனியா கணவன் இல்லாம ரெண்டு பெண்களை வளர்த்து ஆளாக்கி, கல்யாணம் செஞ்சு வெக்கறான்னா இந்த சமூகம் பின்னால என்னென்ன பேசும்கறது எனக்கு நல்லாவே தெரியும். அது அவங்க இயல்பு. பேசிட்டுப் போகட்டும். நாம நல்லவிதமாவே நடந்துப்போம்’’ என்றார் அந்த பெரியமனதுக்காரி.

அதன்பிறகு வந்த காலத்தில் நான் நிறையப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டதால் அடிக்கடி அவரைப் பார்க்க முடிந்ததில்லை. எப்போதாவது சந்திக்கும் சமயங்களில் புன்னகை பூத்த முகத்துடன் அன்பாய்ப் பேசுவார். மறக்க இயலாத ஒரு தினத்தில் நான் அலுவலகம் போய்க் கொண்டிருந்த வழியில் கைபேசி ஒலித்தது. மறுமுனையில் பேசிய பாலா ஸார் அனும்மா உறவுகளையும் நட்புகளையும் விட்டு உலகை விட்டுப் பிரிந்து விட்டதாக சோகச் செய்தி சொன்னார். பதறியடித்து உடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அனும்மாவைத் தெரிந்தவர்கள் ஒரு விஷயத்தை நன்கு அறிவார்கள். அவர் உடலில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், வியாதிகளுடன் போராடினாலும் எப்போதும் அழுது வடியும் முகத்துடனோ, கசங்கிய சேலையுடனோ அவரைப் பார்ப்பது இயலாது. உறுத்தாத மெல்லிய மேக்கப்புடன் புன்னகை முகமாய்த்தான் எப்போதும் இருப்பார்.

அன்றைக்கு நான் கண்ணாடிப் பெட்டிக்குள் அவரைப் பார்த்தபோதும் அப்படித்தான் இருந்தார். உறங்குவது போலத்தான் இருந்ததே தவிர, அந்த உடலிலிருந்து ஜீவன் பிரிந்து விட்டது என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டது. அவரைப் பார்த்து நான் கதறி அழுதேன் என்று சொன்னால் அது பச்சைப் பொய். பழகிப் பேசிய நாட்களும், அவரின் அன்பான புன்னகை முகமும் நினைவில் நிழலாட, அப்போதைய கோலத்தைக் கண்டதும், கண்கள் தளும்பி, இரு சொட்டு நீர் வழிந்தது என்பதே உண்மை. அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தி விட்டு வந்து சில வருடங்கள் கழித்து இதை நினைவுகூர்ந்து ‘டைப்’பும் போதும்கூடக் கண்கள் பனிக்கிறது எனக்கு என்பது நிஜமான நிஜம். மனதிற்கினிய அந்தத் தோழியின் புகழ் வாழி!

                                                                                       -தொடர்கிறேன்...

46 comments:

  1. அருமையான அனுபவங்கள்... நெகிழவைத்து விட்டீர்..

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராய் வந்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. நெகிழ்வான நினைவுகள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்து உற்சாகக் கருத்திடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  3. மனதை வருடும் வண்ணம் எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  4. அனுராதா ரமணன் என்று பெயரை சுண்டல் மடித்து தரும் பொட்டலத்தில் கண்டால் கூட வரி விடாமல் படித்து விடுவேன்.பல அறிந்த அறியாத செய்திகளைதந்துள்ளீர்கள் கணேஷண்ணா மிக்க நன்றி .இறுதிப்பாராக்கள் மனதை நெகிழச்செய்து விட்டது.இன்னும் விரிவாக அத்தியாயங்களை நீட்டிப்பீர்கள் என்று நம்புகிறேன்:)

    ReplyDelete
    Replies
    1. படித்து மனம் நெகிழ்ந்த அன்புத் தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. நெஞ்சம் கனத்துப் போனது சிறந்தவர்களின் நட்பு சிகரமாக தங்களுக்கு கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல நட்பு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் தென்றல். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. படித்து முடிக்கும் பொழுது எனது கண்களிலும் இரு துளி கண்ணீர் பணித்தது உங்கள் நட்பின் ஆழம் வியந்து

    ReplyDelete
    Replies
    1. நெகிழ்ந்து படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பா.

      Delete
  7. ஆத்மார்த்தமாக எழுதியுள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம். மனம் நெகிழ்கிறது இன்றும் அவரின் நட்பை எண்ணும் போது. மிக்க நன்றி நண்பரே.

      Delete
  8. மனதை நெகிழவைத்துவிட்டது உங்கள் பதிவு. நானும் அவர் புகழ் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நெகிழ்ந்து என்னையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே.

      Delete
  9. அவரின் பல புனை பெயர்கள் தெரிந்து அதிசயித்தேன்.
    இறுதி பத்தி படிக்கும் போது மனம் கனத்தேன்.
    அந்த இனிய சகாப்தத்தின் புகழ்
    என்றும் நிலைத்திருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழி. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  10. அவரின் மற்ற புனைப் பெயர்கள் இன்றுதான் தெரியும்.

    அடுத்தது யாரோ?

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவர் பெயரை சொல்லப் போவதில்லை ஸ்ரீராம். நீங்கள் ஊகித்து உணர வேண்டியிருக்கும். மிக்க நன்றி.

      Delete
  11. நெகிழ வைக்கும் இனிய அனுபவம் சார்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 7)

    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  12. அனுபவங்கள்
    மனம் கனத்துப் போனது
    இறுதி வரியில்

    ReplyDelete
    Replies
    1. மனம் கனத்து பதிவைப் படித்த உங்களுக்கு மனநெகிழ்வுடன் நன்றி.

      Delete
  13. அனுராதா ரமணனை மறக்கவே முடியாது. அவரின் எழுத்து அனைவரையும் கட்டிப்போட்டுவிடும்.

    ReplyDelete
    Replies
    1. அனைவரையும் கட்டிப் போடும் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete

  14. உருக்கமான மனதை நெகிழ வைத்த பதிவு! அவர் நல்ல எழுத்தாளர்! இறந்தும் இறவாப் புகழுடையவர்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. உருக்கமான எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதய்ம நிறை நன்றி.

      Delete
  15. அனுராதா ரமணன் எழுதிய ' மன ஊஞ்சலுக்காக' மனம் நிறைய அவரைப் பாராட்ட விரும்பி அவரை சந்தித்திருக்கிறேன். பல முறைகள் அவரிடம் பேசியிருக்கிறேன் என்றாலும் முதல் முறை அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பேசியது மறக்க இயலாதது. நீங்கள் குறிப்பிட்ட அந்த சர்ச்சை[ காஞ்சிப்பெரியவர் ] பற்றி பேச்சு வந்தபோது, குரல் கம்ம, கண்கள் கலங்க அவர் குமுறியது என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. ஆயிரம் அவதாரங்கள் எடுத்தாலும் அடிப்படையில் அவர் ஒரு பெண் என்பதை அவரின் குமுறல் இனங்காட்டியது.

    அவரின் பிறந்த நாள் நெருங்குகிறது. அந்த நல்ல இதயம் கொன்ட பெண்மணிக்கு என் நினைவஞ்சலிகள்!

    ReplyDelete
    Replies
    1. அந்த சர்ச்சை பற்றி அவர் என்னிடம் மனம் திறந்து சொன்னவை நிறைய உண்டுங்க. அதை இன்று அவர் இல்லாத நிலையில் கிளற விரும்பாமல் தான் தாண்டிச் சென்று விட்டேன். அந்த நல்லிதயத்துடன் பழகிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. பிரிவு,இழப்பு என்பது வேண்டவே வேண்டாம் என்று நினைத்தாலும் இதுதான் விதி என்பதை எவராலும் மாற்றமுடியவில்லையே ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஹேமா... சில பிரிவுகள் நிகழவே கூடாது என மனம் விரும்பினாலும் காலத்தால் அது நிகழும் போது வலியுடன் தாங்கத்தானே வேண்டியுள்ளது. மிக்க நன்றி.

      Delete
  17. அருமையான எழுத்தாளர்.. அன்பான பெண்மணி.. அவரின் மறைவு தமிழ் வாசகர்களுக்கு ஒரு பெரும் இழப்பு!!
    அவர் மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்..

    பதிவிற்கு (பகிர்விற்கு) நன்றி சார்....

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  18. மனதிற்கினிய தோழி அனுராதா புகழ் வாழி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  19. சிறப்பான எழுத்தாளரை பற்றிய சிறப்பான நினைவுகள்! அவர் புகழ் வாழியவே! நன்றி!

    இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  20. அனுராதா ரமணனை நினைவு படுத்தியதற்கு நன்றி.ஜாம்பவான்களுடனான
    இங்கல் ஆபவங்களை தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  21. மிகவும் அற்புதமான ஒரு பெண்மணி. எழுத்தாற்றலை விடவும் அவரது மனத்துணிவு என்னை வியக்கவைக்கும். தாங்கள் குறிப்பிட்டதுபோல் உடல் மன வேதனைகளை வெளிக்காட்டாது, எப்போதும் மெல்லிய ஒப்பனையுடனான புன்னகை தவழும் முகம் அவரது ப்ளஸ் பாயிண்ட். அவரைப் பற்றிய பகிர்வுக்கும் அவரது பிறந்நாளின் நினைவுகூரலுக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான அந்தப் பெண்மணியை நினைவுகூர்ந்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. உங்கள் நடை வண்டியில் நானும் மெளன பயணம் இன்று நான் தொடர்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  23. நெகிழ வைத்த நடைப்பயணம்...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube