Monday, March 12, 2012

கேப்ஸ்யூல் நாவல் 5

Posted by பால கணேஷ் Monday, March 12, 2012

ரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர். 


இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் உறவும், குறிப்பாக.... உத்தமன், விச்வநாதன் காதல்களில்பொங்கிவரும் வர்ணனைகளும், உரையாடல்களும் காதல் ரசத்தில் மூழ்கடித்து விடும். அப்படி காதல் ரசத்தில் மூழ்கித் திளைக்க உடனே முழுக் கதையையும் தேடிப் பிடித்து படித்து மகிழுங்கள். 


கி.பி. பதினாறாம் நூற்றாண்டு. விஜயநகரத்திற்குள் உத்தமன் என்ற இளைஞன் மூன்று சகாக்களுடன் வருகிறான். பாண்டிய ராஜ வம்சத்தைச் சேர்ந்த இளவரசி உடன்கட்டை ஏற முற்பட, சகாக்களுடன் போய் அவளைக் காப்பாற்றி, குதிரையில் பறக்கிறான். ஏழு வீட்டார் என்ற கூட்டத்தின் தலைவர் சிங்கார பூபனின் ஆட்கள் அவர்களைத் துரத்துகின்றனர். ஒரு சத்திரத்தில் தங்கி, தான் மாலடிப் பெருமாள் என்ற சிற்றரசரின் மகன் எனவும், பாண்டிய ராஜவம்சத்தின் கடைசி வாரிசான அவள் தீக்குளிக்கக் கூடாதென்றும் சொல்கிறான் உத்தமன். அவள் சினத்துடன் மறுக்க, அப்போது சிங்காரபூபனின் ஆட்கள் அங்கு வர, சண்டை நடக்கிறது. உத்தமனையும் அவன் சகாக்களையும் கைது செய்து கொண்டு செல்கிறான் சிங்காரபூபன். வழியில் நண்பர்களின் சாதுர்யத்தால் தப்பும் உத்தமன், நண்பர்களைப் பிரிந்து செல்லும்படி நேர்கிறது.

மயக்கமுற்று குதிரையில் சாய்ந்திருந்த அவன் கண் விழிக்கும் போது, ஒரு இளைஞனை புலி துரத்தி வருவதைக் கண்டு, புலியுடன் போரிட்டுக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறான். அந்த இளைஞன் தன் பெயர் விச்வநாதன் என்றும் தான் விஜயநகரத்தின் ராஜப் பிரதானி என்றும் அறிமுகம் செய்து கொண்டு உத்தமனின் நண்பனாகிறான். உத்தமன் தன் சகாக்களை தேடிப் பிடித்து அவர்களுடன் சென்று பாண்டிய இளவரசியை மறைத்து வைத்திருக்கும் இடத்திலிருந்து மீண்டும் கடத்தி வந்து விஜயநகரத்தில் விச்வநாதனின் பாதுகாப்பில் அவளை விடுகிறான். அவள், உத்தாரணர் என்ற முள்ளிநாட்டுக் குறுநில மன்னரிடம் ஒரு ஓலை தரும்படியும், அதற்கு பதில் வரும்வரை உடன்கட்டை ஏறாமலிருப்பதாகவும் உத்தமனிடம் சொல்ல, உத்தாரணர் போலிப் பாண்டியரின் ஆதரவாளர் என்பதால் அவன் தயங்குகிறான். பின் சம்மதித்து, ஓலையுடன் புறப்படுகிறான்.

உத்தமன் செல்லும் வழியில் துரத்திவரும் விச்வநாதன், பாண்டிய நாட்டில் அவன் தங்கியிருந்த சமயம் அவனுககு ஏற்பட்ட காதல் அனுபவங்களை உத்தமனிடம் சொல்கிறான். தான் இளமையில் காதலித்த அந்தப் பெண்ணை பாண்டிய நாட்டில் உத்தமன் தேடித் தரும்படி வேண்டுகிறான். அவன் சொல்லும் அடையாளங்கள் பாண்டிய இளவரசி சந்திரமாலாவை ஒத்திருக்க, ஏற்கனவே அவளிடம் மனதைப் பறி கொடுத்திருந்த உத்தமன் திடுக்கிடுகிறான். ஆனாலும் நண்பனுக்காக சம்மதிக்கிறான். பின் விச்வநாதனிடம் அவன் தந்தை நாகம நாயக்கர் பாண்டிய நாட்டைத் தானே அபகரித்து மன்னனாகப் பார்க்கிறார் என்று உத்தமன் கூற, அவன் நம்ப மறுக்கிறான்.

விச்வநாதன் விஜயநகரம் திரும்பிச் செல்ல, உத்தமனைத் தொடர்ந்து வந்த சிங்காரபூபன், சாதுர்யமாக உத்தமனுக்கும் சகாக்களுக்கும் உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, ஓலையைத் திருடி விடுகிறான். தாமதமாக இதை அறியும் உத்தமன், எங்கும் நில்லாமல் உத்தாரணரை அடைந்து நடந்ததைக் கூறுகிறான். அவர், தான் பாண்டிய வம்சத்தின் எதிரி இல்லையென்பதையும், போலிப் பாண்டியரிடம் உளவறியவே அவர் ஆதரவாளராக நடித்ததையும் கூறி, இப்போது ஓலை தவறியதால் உண்மைப் பாண்டியருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்கிறார். உத்தமனை உடனழைத்துக் கொண்டு கடினமான மலையான குரங்கணி துர்க்கத்தில் மலை ஏறி வர, மேலே ஒரு மாளிகை எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு உண்மைப் பாண்டியரும் அரசியும் எரிந்து விட்டதாகப் புலம்பிக் கீழே வீழ்கிறார் உத்தாரணர். அக்கணமே அவர் உயிரும் பிரிகிறது.

உத்தமன் விரைந்து விஜயநகரம் வந்து இளவரசியிடம் நடந்ததைக் கூற, அவள் அவனைக் கோபிக்கிறாள். விச்வநாதனிடம் அனுமதி பெற்று முள்ளிநாடு விரைகிறாள். வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் அவளைக் காப்பாற்றுகிறான் உத்தமன். விளைவாக, அவன் கடும் காய்ச்சலால் அவதியுற, அவனுக்கு வைத்தியம் செய்வித்து தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் சந்திரமாலா. மயக்கம் தெளிந்த உத்தமன், தான் அரண்மனையில் இருப்பதை உணர்ந்து எழுந்து நடக்க, உத்தாரணரின் விதவை ராணி, சந்திரமாலாவைத் திட்டுவதைப் பார்க்கிறான். அவள் உண்மையில் உத்தாரணரின் மகள் மோகவல்லி என்பதும், பாண்டிய வம்சத்துக்காக உயிர்த்தியாகம் செய்ய முற்பட்டிருப்பதும் அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது. உண்மையான சந்திரமாலாவைக் காப்பாற்றிவிட்டு பின்னர் தான் உயிர்த்தியாகம் செய்வதாக தன் தாயிடம் உறுதி கூறுகிறாள் மோகவல்லி.

இதற்கிடையில் பூபன், போலிப் பாண்டியரின் தூண்டுதலின் பேரில் முள்ளிநாட்டு அரண்மனையைச் சுற்றி வளைக்க, சுரங்க வழியாக மோகவல்லியும் உத்தமனும் தப்பிச் செல்கின்றனர். குரங்கணி துர்க்கம் சென்று சந்திரமாலாவைத் தேடுவதாக சொல்லி, அவனைப் பிரிந்து செல்கிறாள் மோகவல்லி. அதே சமயம் பாண்டியநாட்டு மக்கள் உண்மைப் பாண்டியர் இறந்ததை அறிந்து புரட்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் மோகவல்லி எதிர்ப்பட, அவள்தான் பாண்டிய இளவரசி என்று புரட்சிப் படையில் சேர்ந்திருந்த பூபனின் ஆட்கள் சிலர் சொல்ல, புரட்சிப் படை அவளைப் பாண்டிய ராணியாக்கி விடுகிறது.

நாகம நாயக்கரோ அவளது அதிகாரத்தைப் பறித்து பொம்மை ராணியாக வைத்திருக்கிறார். மோகவல்லியைத் தேடி வரும் உத்தமனுக்கு அவள் இதைக் குறிப்பால் சொல்ல, அவன் விஜயநகரம் சென்று விச்வநாதனிடம் சொல்கிறான். இதே சமயம் கிருஷ்ணதேவ ராயருக்கும் நாகமரின் எண்ணம் தெரிந்துவிட, அவரை படையுடன் திரும்பிவரச் சொல்லி கடிதம் எழுதுகிறார். நாகமர் மறுத்துவிட, ராயர் கோபத்துடன் படையெடுத்துச் செல்லும்படி தளபதிகளிடம் சீற, நாகமரின் வீரத்தை எண்ணி தளபதிகள் தயங்க, விச்வநாதன் தான் சென்று, தந்தையென்றும் பாராமல் நாகமரை அடக்குவதாக உறுதிகூறி புறப்படுகிறான். உத்தமனின் துணையுடன் நாகமரை போரில் வெல்லும் விச்வநாதன், கைது செய்து ராயரிடம் அவரை அழைத்து வருகிறான்.

ராயர், விச்வநாதனுக்காக நாகமரை மன்னிப்பதுடன், போலிப் பாண்டியரை அடக்கி, அவர் சம்மதத்துடன் விச்வநாதனை மதுரையின் மன்னனாக்கி அனுப்புகிறார். விச்வநாதனும், உத்தமனும் முள்ளி நாட்டுக்கு வர, மோகவல்லியின் அரண்மனை ஏழு வீட்டாரால் எரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். அவளைத் தேடி குரங்கணி துர்க்கம் விரைகிறார்கள். அங்கே எதிர்ப்படும் ஏழு வீட்டார் படைகளை மொத்தமாக அழித்து, பூபனையும் ‌கொல்கிறான் உத்தமன்.

இறக்கும் தருவாயிலிருந்த உத்தமனின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி அங்குள்ள துர்க்கை கோயிலுக்கு விரைய, கோயில் தீப்பற்றி எரிவதையும், அதனுள் மோகவல்லியும், சந்திரமாலாவும் இருப்பதையும் அறிந்து, தீயினுள் பாய்ந்து சென்று முதலில் சந்திரமாலாவைக் காப்பாற்றுகிறான் உத்தமன். சந்திரமாலாவை தீ அண்டாமல் போர்வையாய் இருந்து பாதுகாத்த மோகவல்லியை உத்தமன் மீண்டும் தீயினுள் சென்று தூக்கிவர, தீயில் கருகிய அவள் உடலிலிருந்து உயிர் உத்தமனின் மடியில் பிரிகிறது.

விச்வநாத நாயக்கன், சந்திரமாலாவை மணந்து மதுரையில் நாயக்கர் வம்ச ஆட்சியைத் தொடங்கி வைக்கிறான். சந்திரமாலாவுக்கும் அவனுக்கும் குழந்தை பிறக்காததால் வேறொரு ராணியின் மூலம் பிறந்த நாயக்கர் வம்ச வாரிசுகளே பின்னாளில் பாண்டிய நாட்டை ஆண்டனர். (பின்னர் வந்த திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்றோர் நாயக்கர் பரம்பரையில் புகழ்பெற்றவர்கள்) விச்வநாதனின் ஒவ்வொரு வெற்றியிலும் உத்தமன் துணையாயிருக்க, அவனுக்கு உந்துசக்தியாக அவன் மனதில் நின்று தூது பாடிக் கொண்டிருக்கிறாள் மோகவல்லி.

58 comments:

  1. அருமையான கதை சுருக்கம்..நன்றி,திரு.கணேஷ்..

    ஆனால் பதினாறாம் நூற்றாண்டில்,ஐரோப்பிய நாடுகளில் ஒரு,விஞ்ஞான ,தொழிநுட்ப,மருத்துவ புரட்சியே நிகழ்ந்து கொண்டிருந்தபோது ,நம் நாட்டில் மோகவல்லி தூது நடந்து கொண்டிருந்தது என அறிய நம் உள்ளம "புளங்காகிதம்" அடைகிறது..
    ஒருவேளை 1900 ஆம் ஆண்டு பாரிஸ் மாநகரில் முதல் மெட்ரோ ரயில் நிலையம் தொடங்கப்பட்டதிற்கும்,அதற்கு சரியாக 112 ஆண்டுகளுக்குப்பிறகு நாம் அதே வேலைக்காக சென்னை மாநகரின் அண்ணா சாலையை தோண்ட ஆரம்பித்தற்கும் நமக்கு இயற்கையிலேயே இருக்கும் "வேகம்" மற்றும் "ஆர்வம" தான் காரணமோ என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. தமிழர்கள் நிறைய விஷயங்களில் பின்தங்கித்தான் இருந்தார்கள் நண்பா. பாதாள ரயில் என்பதுகூட இன்னும் இங்கு வரவில்லையே... ஆனால், நம் சித்த மருத்துவர்கள் செய்த மருத்துவ அற்புதங்களை நவீன மருத்துவர்கள் நினைத்தும் பார்க்க முடியாது. கணிதத்தில் நோபல் பரிசு பெற்றவன் தமிழன். சதுரங்கத்தை அறிமுகப்படுத்தியது இந்தியாதான். இப்படி பெருமைப்படத்தக்க பக்கங்களை மட்டுமே பார்ப்பது என் வழக்கம். என்னைப் பாராட்டியதற்கு என் இதயம் கனிந்த நன்றி தங்களுக்கு!

      Delete
    2. உண்மைதான் நண்பரே!
      இந்தியர்கள் மனித இனத்திற்கு என்ன செய்துள்ளார்கள் எனும் கேள்விக்கு,சுமார் இருபது சதவீத மனித இனத்தையே அவர்கள்தான் செய்துள்ளார்கள் என நான் பதிலளிப்பதுண்டு!(சும்மாவா 120 கோடி ஆச்சே!!)
      உங்களுடைய கேப்ஸ்யூல் பதிவுகள் மிக novel ஆக உள்ளன (pun intended)
      முடிந்தால்,
      முடிந்தால்,
      முடிந்தால்
      Jeffrey Archerஇன் "Kane and Abel" please!!
      சிரமத்திற்கு மன்னிக்கவும்.

      Delete
    3. முடிந்த வரை சீக்கிரம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன் நண்பரே... நன்றி!

      Delete
  2. அட...கொஞ்சம் நேரத்துக்கு வந்திருக்கேனே.அதிசயம்தான் !

    ReplyDelete
    Replies
    1. உங்க ஃப்ரெண்டோட இடத்துக்கு நீங்க எப்ப வந்தாலும் அதுவே மிக மிக சந்தோஷம்தான்!

      Delete
  3. ம்...சுருக்கமே சுவையாக இருக்கிறது ஃப்ரெண்ட்.இதுவே வாசித்த திருப்திதான்.நன்றி உங்களுக்கு !

    ReplyDelete
    Replies
    1. இது உங்களுக்கு திருப்தியாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்க கேட்ட மாதிரி முழுக்க முழுக்க காதல் ததும்பும் ஒரு கதையப் படிச்சிட்டு இப்ப ஒர்க் பண்ணிட்டிருக்கேன் ஃப்ரெண்ட்! கேப்ஸ்யூல் நாவல் 6 உங்க சாய்ஸ்தான்கறதை மகிழ்வோட தெரிவிச்சுக்கறேன்!

      Delete
  4. இந்த கதையை இதுவரை படித்ததில்லை அண்ணா. எனக்கு சாண்டில்யன் கதைன்னா ரொம்ப பிடிக்கும். அசலின் சுவை சிறிதும் குன்றாமல் நகல் இருக்கு பகிர்வுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. படிச்சு மகிழ்ந்து பாராட்டிய தங்கைக்கு என் இதய நன்றி!

      Delete
  5. சிறுவயதில் பு.தா, வின் கதைகளைத் தேடிப்பிடித்து படித்து என் அப்பாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.
    நல்ல அறிமுகம்

    ReplyDelete
    Replies
    1. புஷ்பா தங்கதுரை எழுதியவை சிறிது காலம் சென்று நிற்காது. ஆனால் அவர் ஸ்ரீவேணுகோபாலனாக எழுதியவை நீண்ட காலம் வாழும் என்பது என் கருத்து. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவகுமாரன் ஸார்!

      Delete
  6. ஸ்ரீ வேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’ வையும், புஷ்பா தங்கதுரையின் பெயரில் எழுதிய ‘என் பெயர் கமலா’ என்ற தொடரையும், படித்திருக்கிறேன். ‘தினமணி கதிர்’ இதழில் படித்திருக்கிறேன்.மிக அருமையான எழுத்தாளர். நான் படிக்காத அவரது ‘மோகவல்லி தூது’ கதையை சுவாரஸ்யம் குறையாமல் சுருக்கித் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. திருவரங்கன் உலா அவரது மாஸ்டர் பீஸ்! அதைச் சுருக்குவதற்கு இன்னும் உழைக்க வேண்டும். இந்தக் கதை உங்களுக்கு சுவாரஸ்யம் தந்த‌தற்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  7. எனக்கும் சாண்டில்யன் நாவல் பிடிக்கும் வசந்தமே
    மீண்டும் ஒரு யவன ராணி கதை சுருக்கம் படித்த ஜாபகம் வருகிறது வசந்தமே .

    ReplyDelete
    Replies
    1. நான் யவனராணியை சுருக்கி்த் தந்‌ததை நினைவுகூர்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி தென்றல்! விரைவில் மற்றொரு சாண்டில்யன் அவர்களின் நாவலை உங்களுக்காகத் தருகிறேன். சரியா?

      Delete
  8. நல்ல கதை சுருக்கம் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  9. படிக்கத்தூண்டுகிறீர்கள்!முயல்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ம்... படித்துப் பார்த்தீர்கள் எனில் ஸ்ரீவேணுகோபாலனின் அழகிய எழுத்து நடை மனதைப் பறித்து விடும். நன்றி!

      Delete
  10. கதைச்சுருக்கத்திலேயே முழு நாவலும் படித்த திருப்த்தியை கொண்டுவந்துட்டீங்க. வாழ்த்துகள் கணேஷ்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்ததில் மிக்க மனமகிழ்வுடன் என் நன்றியை உரித்தாக்குகிறேன்!

      Delete
  11. ரச்னையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்தது எனக்கு மனநிறைவு. தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  12. ரத்தினச் சுருக்கமாக இந்த நீண்ட நாவலை எழுத எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ரசிக்கவும் முடிகிறது, முழு நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. நன்றி. - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. நான் படித்து ரசித்தவற்றில் சிறந்தவற்றை இப்படி கேப்ஸ்யூல்களாக சுருக்கித் தருவதன் நோக்கமே பலர் படிக்கத் தூண்டுதலாக இது இருக்க வேண்டும் என்பதுதான். அவ்வகையில் நீங்கள் சொன்னதைக் கண்டதும் மிகமிக மகிழ்ந்தேன். மகிழ்வு தந்த தங்களின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  13. ஒரு பெரிய நாவலை இவ்வளவு சுருக்கமாக, அதே சமயம் முழுமையாகத் தர பெரும் உழைப்பு வேண்டும். பலே....மனப்பூர்வமான பாராட்டுகள். லதாவின் ஓவியத்தையும் எடுத்துப் போட்டிருப்பது கவர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டினால் மனமகிழ்ந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்!

      Delete
  14. முழு நாவலையும் படித்தது போன்ற உணர்வு அண்ணா. என்றாலும் நாவலை கையில் வைத்து படிக்கத்தான் எனக்கு விருப்பம் எழுத்தாளர்களின் பெருமை போற்றி ஊக்குவிக்கும் உங்களுக்கு இச்சிறியவளின் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது அன்புத் தங்கையே... எனக்கும் நாவலை அச்சுப் புத்தகமாக, அதுவும் படங்களுடன் இருந்தால் விரும்பிப் படிப்பதில்தான் ஈடுபாடு. இது படிக்கத் தூண்டுவதற்கான ஒரு தூண்டுதல் முயற்சிதானே அன்றி வேறில்லை. இதைப் பாராட்டியதற்கு என் இதய நன்றி!

      Delete
  15. இரண்டு பெரும் ஒரே ஆள் என்று இப்போதே கேள்வி படுகிறேன். தகவலுக்கு நன்றி சார். இப்போதுதான் ஆயிரம் ரூபாய்க்கு சாண்டில்யன் மற்றும் சுஜாதா புத்தகங்களை அள்ளி வந்துள்ளேன். மறுபடியும் வாங்கினால் வீட்டில் டின் கட்டி விடுவார்கள். அடுத்த மாதம் பார்க்க்லாம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? உங்களுக்கு ஒரு புதுத் தகவல் தந்ததில் மகிழ்ச்சி. புத்தகம் வாங்கும் விஷயத்தில் எல்லார் வீட்டிலும் ஒரே நிலைமைதான் போலும்... ஹி... ஹி...

      Delete
  16. வித்தியாசமான முயற்சி. மேலும் அதிக நாவல்கள் இதேப்போல் தர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பத்திரிகைத் துறையை நன்கு அறிந்தவரான உங்களின் பாராட்டினால் மகிழ்வுடன் என் நன்றி செந்தில்.

      Delete
  17. சுருக்கமே சுவாரஸ்யமாக உள்ளது.பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து நற்கருத்திட்ட தங்கைக்கு என் இதய நன்றி.

      Delete
  18. மேல்நிலைப்பள்ளி படிக்கையில் தான் இந்த இரு நாவலாசிரியர்களும் ஒருவரே என்ற உண்மை தெரிய வந்தது..
    ஆச்சர்யமாக இருந்தது...
    இரண்டும் இருவேறு துருவம்..
    எப்படி ஒரே மனிதனால் இத்தனை வேறுபாடு உள்ள
    பரிமாணங்களை காண்பிக்க முடிகிறது என்று....

    அருமையான ஒரு நாவலை இங்கே பகிர்ந்தமைக்கு
    நன்றிகள் நண்பரே...
    ரசித்து ரசித்து படித்த நாவல்....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த நினைவலைகள் மீண்டும் எழுந்ததா... மனமகிழ்வுடன் உங்களுக்கு என் இதயம்நிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.

      Delete
  19. விருவிருப்பான எழுத்து நடையில் மின்னுகிறது பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நண்பா.

      Delete
  20. கதைச்சுருக்கமே நாவலை விரைவில் படிக்கத் தூண்டுகிறது சார். நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  21. உங்கள் காப்சுலை பார்த்த பின் தான் என் மகளையும் இதைப்போல செய்ய சொல்லவேண்டும் என்ற எண்ணம் வருகிறது...அவளுடைய மேல் படிப்புக்கு இந்த செய்முறை நன்கு உதவும்...

    உங்கள் புண்ணியத்தில் நிறைய பேர் ஒரு பக்கத்தில் ஒரு காவியத்தை படிக்கிறார்கள்...-:)

    ஸ்ரீவேணுகோபாலன்=புஷ்பா தங்கதுரை இரண்டுமே இரு துருவம் தான்...இரண்டுக்குமே ஜெ தான் வரைந்தாரோ ?

    புதிய டாஷ்போர்டில் உங்கள் வலைப்பூ வருவதில்லை...நிறுத்தி இணைந்து பார்க்கிறேன்....கணேஷ் சார்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. ஒரு கதையோ, கட்டுரையோ அதன் பொருள் கெடாமல் சுருக்கிப் பழகுவது நல்ல பயிற்சி ரெவெரி ஸார். நிச்சயம் பின்னாளில் உதவும். (தமிழாசிரியையான என் சித்தி என்னைப் பழக்கினார் அப்படி) புஷ்பா தங்கதுரையின் கதைகள் என்றால் 99 சதவீதம் ஜெ.யின் படம்தான். ஆனால் ஸ்ரீவேணுகோபாலனுக்கு லதா, மாருதி, கோபுலு போன்று பல ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். கூகிளில் என்னவோ பிரச்சனை. எனக்கும் தோழி கீதமஞ்சரியின் பிளாக் அப்படித்தான் சரியாகத் தெரியாமல் போய், பின்தொடர்தலைத் துண்டித்து மீண்டும் இணைந்தேன். நீங்களும் அப்படியே செய்யுங்கள். தங்கள் வருகைக்கும் நற்கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  23. சுவையான கேப்சுல். இந்த நாவலைப் படித்ததில்லை. அறிமுகத்துக்கு நன்றி.
    புஷ்பாவின் ஊதாப்பூ என்றைக்கும் நெஞ்சில் நிற்கும் கதை. அந்த நாவலையும் திரைப்படத்தையும் சென்னை வரும்பொழுதெல்லாம் தேடுகிறேன்.. கிடைத்தால் தானே?

    ReplyDelete
    Replies
    1. என்ன அப்பா ஸார்? ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? திரைப்படம் மற்றும் நாவல் இரண்டையும் உங்களுக்குத் தர என்னால் முடியுமே... தொடர்பு கொள்ளுங்கள்... அவசியம் தருகிறேன்! மிக்க நன்றி!

      Delete
    2. நன்றி கணேஷ்.

      பின்னூட்டமிடும் போது அதைத் தான் நினைத்தேன் - எத்தனை முயன்றும் பெயர் நினைவுக்கு வர மறுத்துவிட்டது. நன்றி ஷைலஜா. திருவரங்கன் உலா பாதி படித்திருக்கிறேன்.

      Delete
  24. இரத்தின சுருக்கமாய் கதையை சொல்லி விட்டீர்கள். :) புஷ்பா தங்கதுரையின் இந்த கதையையும், கள்ளழகர் காதலி என்ற கதையையும் படித்திருக்கிறேன். ஆனால் இரண்டு கதைகளுமே அவ்வளவு நினைவில் இல்லை. அவருடைய க்ரைம் நாவல் இரண்டை படித்துவிட்டு, ஐயோ! என்று ஆகிவிட்டது. :) இவர்தான்
    ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரிலும் எழுதுகிறார் என்று தெரிந்த தினத்தில் இருந்து ஒரு நான்கு நாட்கள் என்னால் அந்த ஆச்சரியத்தில் இருந்து விடுபடவில்லை. என் அம்மாவிடம் புலம்பி தள்ளி விட்டேன். :)

    கணேஷ், உங்கள் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் எழுத வரும்போது அடுத்த பதிவு வந்து விடுகிறது. என்ன செய்ய! நான் அவ்வளவு சுறுசுறுப்பு! :) அப்பாடா, நல்ல வேளை! இந்த பதிவிற்கு பின்னூட்டம் போட்டு விட்டேன்.

    இந்த ஓவியம் 'லதா' அவர்கள் வரந்ததுதானே?! பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மிகவும் ரசித்தேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் மாதநாவல்களுக்குத் தீனி போட்ட அவர், விதிவிலக்காக ‘கடலுக்குள் ஜுலி’ போன்ற நாவலையும் எழுதியிருக்கிறார். மற்றபடி ஸ்ரீவேணுகோபாலன்தான் எனக்குப் பிடிக்கும். ஓவியர் லதாதான் வரைந்தது. சாண்டில்யனுக்கு அவர் வரையும் ஓவியங்கள் என் ஃபேவரைட்! நான் மிகமதிக்கும் சிலரில் ஒருவரான நீங்கள் எப்போது வந்து கருத்திட்டாலும் மிக்க மனமகிழ்வு கொள்வேன். அந்த மகிழ்வுடன் கூடிய என் நன்றி உங்களுக்கு!

      Delete
  25. ஒரு காலத்தில் நான் வெறித்தனமாக நாவல்களை படித்துவந்தேன். என் உலகமே சாண்டில்யன் அகிலன் ஜெயகாந்தன், சிவசங்கரி இந்துமதி லஷ்மி புஷ்பா தங்கதுரை ராஜாஜி இவர்களை போன்றவர்களால் சூழ்ந்து இருந்தது. இவர்களின் கதைகளுக்கு ஜெ..லதா போன்றவர்களின் படங்களும் அருமை நான் இந்தியா வரு ஒவ்வோரு தடவையும் எனக்கு பிடித்த புத்தகங்களை எல்லாம் வாங்கிவரவேண்டுமென் நினைப்பேன் ஆனால் பெட்டியில் இடம் இல்லாத காரணத்தால் வாங்காமல் வந்து விடுவேன். அந்த குறையை உங்கள் இந்த பதிவி நீக்கி வைத்தது. நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய... இன்னும் நான் நிறையப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தினால் இன்னும் பல நல்ல கதைகளை அறிமுகப்படுத்தும் தைரியம் வருகிறது. மிக்க நன்றி நண்பரே...!

      Delete
  26. திருவரங்கன் உலாவை ஒரு பத்து தடவை படிச்சிருப்பேன் (ஏன்னு சொல்லணூமா என்ன?:)) ஆனா இதை வாசிக்கவே இல்ல... உங்க புண்ணியத்துல அறிந்தேன் மகிழ்ந்தேன் போயி புக்கை வாங்கிடமாட்டேனா என்ன? நன்றி கணேஷ்

    ReplyDelete
    Replies
    1. திருவரங்கன் உலா எனக்கும் மிகவும் பிடிக்கும். (உங்களுக்கு ஏன் பிடிக்கும்னு நல்லாவே தெரியுமே) அதன் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையை வைத்து திருவரங்கன் திருவரங்கத்துக்கு வந்த கதையை அவர் எழுதிய ‘மதுரா விஜயம்’ படிச்சிருக்கீங்களா அக்கா? அதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். இதைப் படிக்கிறேன்னு சொன்னதுல மனமகிழ்வோடு கூடிய என் நன்றி தங்களுக்கு!

      Delete
  27. பார்த்து மகிழ்ந்து கருத்திட்டேன் தோழி. தங்களின் அன்புக்கு என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
  28. அழகாக தொகுத்து கொடுத்திருக்கீங்க. ரொம்ப நுணுக்கமான கதை அதற்கு சுருக்கம் எழுதுவது பெரிய விஷயம். நன்றி.....படித்த திருப்தி தந்துவிட்டீர்கள்.

    அப்புறம்...மோகவல்லி ஓவியம் வரைந்தது யார்?

    ReplyDelete
    Replies
    1. படித்த திருப்தி உங்களுக்குக் கிடைத்ததில் எனக்கு மனமகிழ்வு. அந்த அழகிய மோகவல்லி ஓவியம் ஓவியர் ‘லதா’வின் கைவண்ணம். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  29. ஏனோ தானோ என்றில்லாமல் மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கும் கதைச்சுருக்கம் இது.
    எண்ணத்திலும் எழுத்திலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது.
    நினைவு படுத்தியதற்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  30. மோகவல்லி தூது படித்ததில்லை, கணேஷ். திருவரங்கன் உலா, மதுரா விஜயம் இரண்டையும் பலமுறை படித்திருக்கிறேன். ஷைலஜா சொல்லும் காரணம் தான் நான் சொல்லுவதும்.
    இந்த நாவலையும் படித்துப் பார்க்கிறேன். பெரிய நாவலின் சுருக்கத்தை தெளிவாகக் கொடுத்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube