Monday, October 17, 2011

திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதில் நான் அவ்வளவு சமர்த்தன் அல்ல. வலைத்தளங்களில் பல வித்தகர்கள் தாங்கள் ரசித்த பலமொழிப் படங்களைப் பற்றி அழகாக விமர்சனம் எழுதுவதைப் படித்து ரசித்திருக்கிறேன். அவ்வளவே. நான் பார்த்த பிறமொழிப் படங்களில் எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த சில படங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என்ற எண்ணத்தில் பிறந்தது சற்றே நீளமான இந்தப் பதிவு.

போர் நிகழும் சமயத்தில் பாழடைந்த ஒரு பங்களாவில் பதுங்கியிருக்கிறான் பியானோ இசைக் கலைஞன் விளாடெக்.  அங்கே ஒரு பியானோவைப் பார்த்ததும் அவன் விரல்கள் இசைக்கத் துடிக்கிறது. ஆனால் இசைக்க முடியாத சூழல்! சப்தம் கேட்டால் அருகிலுள்ள ஜெர்மன் ராணுவ ஆஸ்பத்திரியிலிருக்கும் ஜெர்மானிய வீரர்களிடம் மாட்டிக் கொள்வான். இந்தச் சூழலில் அவன் பியானோவில் விரல் படாமல் இசைத்து, மனதில் அந்த இசையை அனுபவித்து மகிழும் காட்சி இருக்கிறதே... படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் மனதை விட்டுப் போகாது.

'THE PIANIST' என்கிற இந்தப் படத்தை நான் பார்த்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மனதில் நிற்கிறது. அதன் கதை முழுமையாக இங்கே...

1939ம் வருடம். போலந்திலுள்ள வார்ஸா நகரத்தின் ரேடியோ நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறான் விளாடெக். ரேடியோ நிலையம் குண்டுச் சத்தத்தில் அதிர்கிறது. பியானோ வாசிப்பதை நிறுத்தச் சொல்லி, அதிகாரிகள் ஓடுகின்றனர். இவன் தொடர்ந்து வாசிக்கிறான். ஸ்டுடியோவின் ஜன்னலருகே ஒரு குண்டு வெடிக்கிறது. விளாடெக் நெற்றியில் ரத்தக் காயம் பட்டு வெளியே ஓடி வருகிறான். மக்கள் அனைவரும் கூக்குரலிட்டபடி சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது டொராடோ என்ற பெண் அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள். அவன் நண்பனின் தங்கை என்றும், அவனின் பியானோ வாசிப்பு தனக்குப் பிடிக்குமென்றும் அந்த அவசர சூழலிலும் பேசும் அவளை அண்ணன் இழுத்துச் செல்கிறான்.

வீட்டுக்கு வருகிறான் விளாடெக். அப்பா, அம்மா, ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள் அடங்கிய குடும்பம் அவனுடையது. ஜெர்மானிய நாஜிப் படைகள் டிசம்பருக்குள் போலந்து மக்களை நகரின் கிழக்குப் பகுதிக்குச் செல்ல உத்தரவிட்டிருப்பதைக் கூறி எவ்வளவு பணத்தை தாங்கள் எடுத்துச் செல்ல முடியும் என்று அப்பா பேச, தங்கைகள் கேலி செய்து சிரிக்கின்றனர். விளாடெக்கின் பியானோவை விற்று பணம் சேர்க்கிறார்கள்.

டொராடோவை மீண்டும் சந்திக்கிறான் விளாடெக். அவளுக்கு செல்லோ என்ற வாத்தியத்தை நன்கு வாசிக்கத் தெரியும் என்பதை அறிந்து கொள்கிறான். பேசியபடி ஒரு காபி ஷாப்பிற்குச் செல்ல, அங்கே ‘ஜெர்மானியர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்ற போர்டைக் கண்டு கொதிக்கிறாள் அவள். அவன் சமாதானப்படுத்துகிறான். அவன் குடும்பம் மற்ற மக்களுடன் இடம் பெயர்கிறது. டொராடோ அவனைச் சந்தித்து, தான் வரவில்லை என்றும் அங்கேயே இருந்துவிடப் போவதாகவும் கூறுகிறாள். அவன் குடும்பத்துடன் நாட்டின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்கிறான். அங்கே ஒரு கிளப்பில் பியானோ வாசிப்பவனாக வேலையில் சேர்கிறான். சிறிது காலம் கழிகிறது.

யுத்தம் தீவிரமடைய, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் ஒரே சரக்கு ரயிலில் ஆடு மாடுகளைப் போல அடைத்து அழைத்துச் செல்கிறது ஜெர்மன் ராணுவம். மறுபடி சந்திக்கப் போவதில்லை என்பதை அறியாமலேயே தன் குடும்பத்தை அப்போது விளாடெக் பிரிகிறான். இளைஞர்கள் கேம்ப்களுக்கு அனுப்பப்பட்டு வேலை செய்யும்படி கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பியானோ இசைக் கலைஞன் விளாடெக் செங்கல் சுமப்பவனாக வேலை செய்ய நேர்கிறது. ஒருமுறை சாரத்தில் ஏறும் போது போர் விமானங்கள் வரும் சத்தத்தைக் கேட்டு செங்கற்களை நழுவவிட, ஜெர்மானிய அதிகாரி அவனை மயங்கும் வரை சாட்டையால் அடிக்கிறார்.

அவர்களி்ல் வேலை செய்ய இயலாத பலரை ஜெர்மானிய ராணுவம் இரக்கமின்றிக் கொல் வதைக் கண்டு குமுறுகின்றனர். வாரம் ஒரு முறை சென்று அவர்களுக்கு வேண்டிய ரொட்டி யும், உருளைக் கிழங்குகளும் வாங்கிவர ராணுவம் அனும திக்கிறது. அங்குள்ள இளைஞர் கள் அதனைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு மூட்டை யினுள் பதுக்கி எடுத்து வந்து ஆயுதங்கள் சேகரிக்கின்றனர். அவற்றை வாங்கச் செல்பவனிடம் மேற்குப் பகுதியில் வசிக்கும், தனக்குத் தெரிந்த இசைக்கலைஞரான ஒரு தோழியின் முகவரி தந்து பார்த்துவரச் சொல்கிறான். அவன் பார்த்து வந்து அவர்களிடம் பேசி விட்டதாகவும், அவனை தப்பிவரச் சொன்னதையும் சொல்கிறான்.

விளாடெக் தப்பிச் சென்று அவர்களைச் சந்திக்கிறான். அவர்கள் சொல்லும் ஒரு ஒளிவிடத்தில் மறைகிறான். ‘மிக அவசியமென்றால் இந்த முகவரிக்குச் செல்’ என்று ஒரு முகவரி அவனிடம் தரப்பட, அதை ஷுவில் மறைத்து வைத்துக் கொள்கிறான். அந்த இடத்தில் நீண்ட நாள் இருக்க முடியாத சூழல். ராணுவத்தின் குண்டு வீச்சால் அந்தக் கட்டிடம் பாதிக்கப்பட, அங்கிருந்து விலகி, தனக்கு கொடுக்கப்பட்ட முகவரிக்குச் செல்கிறான்.

அங்கு சென்றதும்தான் அது டொராடோவின் முகவரி என்பதையும், அவளுக்கு கல்யாணமாகி, அவள் கர்ப்பமாக இருப்பதையும் அறிகிறான். அவள் தன் கணவனிடம் அவனை அறிமுகப்படுத்தி அவனுக்கு அடைக்கலம் தரச் சொல்கிறாள். அவர் அவனை ஜெர்மானிய ராணுவ ஆஸ்பத்திரியின் அருகிலுள்ள ஒரு பில்டிங்கில் தலைமறைவாகத் தங்க வைக்கிறார்.

அங்கே சிலகாலம் மறைந்து வாழும் விளாடெக் இப்போது முகமெல்லாம் தாடி அடர்ந்து, இளைத்துப் போனவனாகக் காட்சி தருகிறான். ஆயுதங்கள் சேகரித்த போலந்து இளைஞர்கள் ராணுவத்தை எதிர்க்க, நிகழும் சண்டையில் அவன் மறைந்திருக்கும் பில்டிங் எரிகிறது. அங்கிருந்து விலகி தாக்குதலால் தற்போது பாழடைந்துவிட்ட ராணுவ ஆஸ்பத்திரியில் ஒளிகிறான். குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் அங்கிருக்கும் அழுக்குத் தண்ணீரைக் குடிக்கிறான்.

ஜெர்மானியப் படைகள் ஆஸ்பத்திரியையும் அழித்துவிட, வேறொரு பாழடைந்த கட்டிடத்தில் பரணில் ஒளிகிறான். அங்கே அவன் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒரு ஜெர்மானிய அதிகாரி, அவன் இசைக் கலைஞன் என்பதை அறிந்ததும் அவனைக் கொல்லாமல் தன் ராணுவக் கடமைகளுக்கு இடையே அவனுக்கு ரகசியமாக உணவு தந்து பராமரிக்கிறார். பின்னொரு நாளில் பிரிட்டன், பிரான்ஸ் படைகள் போரில் இறங்கி விட்டதாகவும் தங்கள் ஜெர்மன் ராணுவம் ஒரு வாரத்தில் வெளியேறி விடும் என்றும் சொல்லி, குளிரில் நடுங்கும் அவனுக்குத் தன் கோட்டைத் தந்து விடைபெறுகிறார்.

அவர் சொன்னபடியே படைகள் வெளியேறுவதைப் பார்க்கிறான். போலந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதையும், தன் நாட்டு மக்கள் விடுதலை பெற்றவர்களாய் வருவதையும் கண்டு மறைவிடத்திலிருந்து வரும் அவனை ஜெர்மானியன் என நினைத்து சுடுகின்றனர். ‘நான் போலந்துக்காரன்’ என்று அலறி, அவர்களிடம் உண்மையைச் சொல்கிறான். அவனைப் பராமரித்த ஜெர்மன் அதிகாரி இப்போது போலந்துப் படையினரிடம் கைதியாய் இருக்க, அவர் இவன் பெயரைச் சொல்லி, தகவல் அனுப்புகிறார். இவன் விரைந்து வந்தும் அவரைக் காப்பாற்ற இயலாமல் போகிறது.

விளாடெக் மீண்டும் வார்சா ரேடியோவில் இசைக் கலைஞனாக வேலைக்குச் சேர்கிறான். இது நிகழ்வது 1944ல் ‘அதன்பின் 2000ம் ஆண்டு வரை அவன் வாழ்ந்தான்’ என்று கார்டு திரையில் போடப்பட, படம் நிறைவடைகிறது.

போரின் கொடூரத்தை ஒரு பியானோக் கலைஞனின் வாழ்க்கையுடன் இணைத்து ஒரு கவிதை போல படத்தைக் கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி.  Władysław Szpilman என்ற இசைக்கலைஞனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அவரது சுயசரிதையிலிருந்து எடுத்து படமாக்கி யுள்ளனர். ரொனால்ட் ஹார்வுட்டின் கச்சிதமான திரைக்கதை படத்தின் விறுவிறுப்புக்குத் துணை நிற்கிறது. அழகான பின்னணி இசையும், கண்களில் ஒற்றிக் கொள்கிறார் போல துல்லியமான ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக நின்று மேலும் மெருகூட்டுகின்றன.

பல நாடுகளில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற, 143 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறை அவசியமாக, கட்டாயமாக பார்த்தே தீர வேண்டிய படம்.

இத்திரைப்படம் பெற்ற விருதுகள் :


* Academy Award for Best Actor – Adrien Brody
* Academy Award for Best Director – Roman Polanski
* Academy Award for Writing Adapted Screenplay – Ronald Harwood
* Palme d'Or, 2002 Cannes Film Festival[1]
* BAFTA Award for Best Film
* BAFTA Award for Best Direction – Roman Polanski
* César Award for Best Actor
* César Award for Best Director
* César Award for Best Film
* César Award for Best Music Written for a Film
* César Award for Best Cinematography
* César Award for Best Production Design
* César Award for Best Sound
* Goya Award for Best European Film

உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைத் தெரிவித்துச் சென்றால் மிக மகிழ்வேன்.

15 comments:

  1. //திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதில் நான் அவ்வளவு சமர்த்தன் அல்ல.//

    நம்பிட்டோம்! :-)

    படத்தைப் பார்த்ததுபோல ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். (எதுக்கு இவ்வளவு தன்னடக்கம்?)

    அருமை கணேஷ்! :-)

    ReplyDelete
  2. சேட்டைக்காரன் said...

    //திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதில் நான் அவ்வளவு சமர்த்தன் அல்ல.//
    நம்பிட்டோம்! :-)
    படத்தைப் பார்த்ததுபோல ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். (எதுக்கு இவ்வளவு தன்னடக்கம்?) அருமை கணேஷ்!

    -மிக்க நன்றியண்ணா. உன்னை விடச் சிறியவர்கள் யாரும் இல்லை என்று நினைத்தால் அனைவரும் உன்னை விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டதால்தான் இந்தத் தன்னடக்கம்.

    ReplyDelete
  3. saravanan said...

    V.good review

    -தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன் சார்!

    ReplyDelete
  4. வணக்கம் சார் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் அருமை இனி தொடர்ந்து வருவேன்

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா தங்களின் திரைப்பட விமர்சனம் பார்த்தேன் .இது முதல்த்தடவைபோல் தெரியவில்லை மிகவும் கற்சிதமாக எண்ணங்கள் இடம்மாறாமல் மனதைத் தொடும்படி விமர்சனம் எழுதியுள்ளீர்கள் .அருமை !....மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ......

    ReplyDelete
  6. அருமையான விரிவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. முதல்தடவையாக விமர்சனம் எழுதுவதுபோல் தெரியவில்லை..முழு திரைப்படத்தையே கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.அருமை
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. K.s.s.Rajh said...
    வணக்கம் சார் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் அருமை இனி தொடர்ந்து வருவேன்.

    -வாங்க ராஜா, நல்வரவு. பாராட்டுக்கு நன்றி.


    அம்பாளடியாள் said...
    வணக்கம் ஐயா தங்களின் திரைப்பட விமர்சனம் பார்த்தேன் .இது முதல்த்தடவைபோல் தெரியவில்லை மிகவும் கற்சிதமாக எண்ணங்கள் இடம்மாறாமல் மனதைத் தொடும்படி விமர்சனம் எழுதியுள்ளீர்கள். அருமை!....மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு......

    -நான் மிக ரசிக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரராகிய தங்களின் பாராட்டு எனக்கு பெரிய பலம். நன்றி.

    இராஜராஜேஸ்வரி said...
    அருமையான விரிவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    -தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    வேலன். said...
    முதல்தடவையாக விமர்சனம் எழுதுவது போல் தெரியவில்லை..முழு திரைப்படத்தையே கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.அருமை
    வாழ்கவளமுடன் -வேலன்.

    -நன்றி வேலன் சார். ஒவ்வொரு முறையும் வாழ்க வளமுடன்னு வாழ்த்தி முடிக்கற பாஸிட்டிவ் ஆள் நீங்க உங்க பாராட்டுக்கள் எனக்கு நிறையவே ஊக்கம் தருகின்றது. நன்றி.

    ReplyDelete
  9. விமர்சனம் அருமையா இருக்கு. இன்று முதல் தொடர்கிறேன்.

    நட்புடன்,
    http://tamilvaasi.blogspot.com/

    ReplyDelete
  10. தமிழ்வாசி - Prakash said...

    விமர்சனம் அருமையா இருக்கு. இன்று முதல் தொடர்கிறேன்.

    -நான் உங்க படைப்புகளை முடிஞ்ச போதெல்லாம் படிச்சுட்டு வர்றேன். உங்க வருகைக்கும் நட்பு கிடைச்சதுக்கும் மிக மகிழ்கிறேன் பிரகாஷ் சார்!

    ReplyDelete
  11. அதிகம் கேள்விப்பட்ட ஒரு படம் சிறப்பாக ,விரிவாக எழுதியுள்ளீர்கள்!

    ReplyDelete
  12. சென்னை பித்தன் said...

    அதிகம் கேள்விப்பட்ட ஒரு படம் சிறப்பாக ,விரிவாக எழுதியுள்ளீர்கள்!

    -மிக்க நன்றி சென்னை பித்தன் ஸார்...

    ReplyDelete
  13. மிக அருமையான ஒரு படம் பாஸ்! நன்றாக எழுதியுள்ளீர்கள்! நானும் இது பற்றி எழுதியிருக்கிறேன்!

    ReplyDelete
  14. நல்ல பதிவு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube