Saturday, July 14, 2012

நடை வண்டிகள் - 26

Posted by பால கணேஷ் Saturday, July 14, 2012

கடுகு அவர்களும் நானும் - 4 

நான் விடைபெற்றுக் கிளம்பும் நேரத்தில் கடுகு ஸார் கேட்டார்: ‘‘ஒவ்வொரு இடத்துக்கும் பஸ் பிடிச்சு, ட்ராபிக் ஜாம்ல மாட்டி... கஷ்டப்பட்டுப் போகறதுக்குப் பதிலா நீங்க ஒரு டூ வீலர் வாங்கிக்கிட்டா என்ன?’’

‘‘எனக்கு அந்த அளவுக்கு வசதியில்ல ஸார்...’’ என்றேன். சற்றும் தயக்கமின்றி உடனே பதில் வந்தது அவரிடமிருந்து: ‘‘நம்ம ஏரியாவுல ராம்கே ஏஜென்ஸி இருக்குல்ல.. அங்க போய் உங்களுக்குப் பிடிச்ச மாடல் வண்டி எதுன்னு பாத்துட்டு கொட்டேஷன் வாங்கிட்டு வாங்க. அதுக்கான மொத்தப் பணத்தையும் நான் கொடுத்துடறேன். உங்ககிட்டருந்து அந்தத் தொகையை நான் மெதுவா வாங்கிக்கறேன்...’’

நான் வியப்பு, அதிர்‌ச்சி, ஆச்சர்யம் ஆகியவற்றின் கவலையான உணர்ச்சிகளுடன் அவரை ஏறிட்டேன். ‘கடுகு ஸாரின் பேச்சிலேயே இயல்பான நகைச்சுவை இருக்குமே... அந்த வரிசையில் ஒன்றாக ஜோக் அடிக்கிறாரா, இல்லை சீரியஸாகத்தான் சொல்கிறாரா’ என்கிற சந்தேகம் எனக்கு. அவர் முகபாவம் அவர் ‌சொன்னது நிஜம்தான் என்பதை உணர்த்தியது எனக்கு.

 ‘‘ஸார்... வாகனம் வாங்கறதுங்கறது பெரிய தொகை. சென்னை ட்ராபிக்ல போயிட்டு வர்றதுக்கு டிவி‌எஸ் சூப்பர் எக்ஸ்எல் மாதிரி சின்ன வண்டிதான் லாயக்கு. அதை என்னிக்காவது ஒரு நாள் வாங்கிடணும்னு நான் ஏற்கனவே முடிவு செஞ்சு வெச்சுட்டேன். ஆனா, எனக்கு வர்ற வருமானத்துல ஐநூறு ஆயிரம் மிஞ்சறதே பெரிய விஷயம். நான் எப்படி உங்களுக்குப் பணம் தர முடியும்? இதெல்லாம் ஆகற காரியமில்லை ஸார்...’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் பேசாதீங்க. உங்களுக்கு ஐநூறு கிடைக்கறப்ப ஐநூறை கொடுங்க. ஆயிரம் கிடைக்கறப்ப ஆயிரம் கொடுங்க. 200 கிடைச்சா 200 கொடுங்க. மெதுவா பதட்டமில்லாம தரலாம் நீங்க. உடனே போய் நான் சொன்னபடி பாத்துட்டு வாங்க...’’ என்றார். போனேன். நான் நினைத்த அந்த வாகனத்தின் அன்றைய விலை (2006ல்) 23 ஆயிரத்தில் இருந்தது. அதன் கொட்டேஷனுடன் வந்தேன். உடனே செக் எழுதிக் கொடுத்தார். உற்சாகமாய்ச் சென்று உடனே வாகனத்தை புக் செய்தேன்.

அந்த வாகனம் பத்து நாட்களின் பின்னால் என் கையில் கிடைத்தபோது அடைந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என்றும் மறக்க இயலாது. வாகனத்தை பூஜை போட்டதும் எடுத்துக் ‌கொண்டு அவரின் இல்லத்திற்கு விரைந்தேன். புதிய வாகனத்தைக் காட்டினேன். பார்த்து மகிழ்ந்தார். ஆசி பெற்றேன்.

 நான் அந்த வாகனத்திற்கான தொகையை உண்மையிலேயே அவர் சொன்ன மாதிரிதான் எனக்குப் பணம் கிடைத்த போதெல்லாம் 300, 500 என்றெல்லாம் பிய்த்துப் பிய்த்து வருடக் கணக்காகத் தந்தேன். மிகப் பொறுமையாக பெற்றுக் கொண்டார். இடையில் நான் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்த காலங்களிலும் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்ட பின்பும் கூட கையில் பணம் இல்லாமல் ஜீரோவாக இருந்தேன். அச்சமயங்களில் எதுவும் தரவில்லை. ஆனாலும் அவர் என்னை எதுவும் கேட்டதுவோ, விரைவுபடுத்தியதோ இல்லை. அத்தகைய பெருந்தன்மையாளர் அவர். ஒரு விபத்தையும் ஏற்படுத்தாத, ராசியான அந்த வாகனத்தைத் தான் இன்றுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

புதிய வாகனத்துடன் நான் ‘சுபா’வின் இல்லம் சென்று விவரம் ‌சொன்னதும் வியந்து போனார்கள் நண்பர்கள். பாலா ஸார் உடனே போன் செய்து கடுகு ஸாரைப் பாராட்டினார். என்னிடம், ‘‘எங்க மூலமா அறிமுகமாகியிருக்கீங்கன்ற நம்பிக்கைலதான் கடுகு ஸார் இதைச் செஞ்சிருக்கார். அதனால அவர் சொன்னபடி முடியறப்பல்லாம் பணம் கொடுத்துடுங்க. வாகனம் கைல வந்துட்டா, நம்ம கைத் திருகல்ல அது பறக்குதுங்கற உணர்ச்சில எல்லாரும் ஓவர் ஸ்பீடாப் போவாங்க... அதை மட்டும் செய்யாதீங்க. நிதானம்தான் நல்லது’’ என்று சாலையில் செல்வதற்கு எனக்கு உபயோகமான பல டிப்ஸ்களை அவர் அனுபவத்திலிருந்து சொன்னார்.

அதைத் தவிர இன்னொன்றும் செய்திருக்கிறார் பாலா. நான் கிளம்பிப் போனதும், மீண்டும் கடுகு ஸாருக்கு போன் செய்து, ‘‘கணேஷ் தன்னால முடியறப்பல்லாம் கரெக்டா பணம் குடுத்துடுவார். ஸப்போஸ்... ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால அவரால தர முடியாமப் போச்சுன்னா, கவலைப்படாதீங்க. எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்க. அந்தத் தொகைக்கு நான் செக் கொடுத்துடறேன் உங்களுக்கு’’ என்று சொல்லியிருக்கிறார். ‘‘அதுக்கெல்லாம் தேவையிருக்காது பாலா’’ என்று சொன்ன கடுகு ஸார் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் மூச்சு விடாமல் இருந்து விட்டு, சென்ற ஆண்டில் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் சொன்னார். இந்த மூன்று எழுத்தாள நண்பர்களின் அன்பையும் எண்ணி வியந்தும் நெகிழ்ந்தும் போனேன் நான்.

-இந்த ‘நடைவண்டிகள்’ தொடரில் இதுவரை நான் எழுதியவற்றைத் தொடர்ந்து படித்துவரும் நண்பர்கள் என்னை நேரில் சந்திக்கையில் சொல்லுவது- ‘‘எப்படி இத்தனை பெரிய மனிதர்களின் நட்பு கிடைச்சு பழக முடிகிறது? கொடுத்து வைத்தவர் நீங்கள்’’ என்பதுதான். ஆம். நான் பழகியவர்கள் உண்மையில் பெரிய ‘மனிதர்கள்’தான்! ஆனால் நான் பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்ற ஒரு சாதாரணன் என்பதே உண்மை. ஏதோ இறையருளால் இத்தகைய நல்ல நட்புகள் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

இப்போதும்கூட வலையில் எழுதத் தொடங்கியதன் விளைவாக பல நல்ல நட்புகள் கிடைக்கப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களால் பல இனிய அனுபவங்கள் என் கணக்கி்ல சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. யார் கண்டது...? சில வருடங்கள் கழித்து, ‘நடைவண்டிகள்- பாகம் 2’ ஆக வலையுலகில் எழுதியதால் எனக்குக் கிடைத்த நண்பர்கள் பற்றி எழுதுவேனோ என்னவோ...

                                                                         -தொடர்கிறேன்...

40 comments:

  1. உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான். இல்லாவிடில் எழுத்துலக ஜாம்பவான்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்திருக்குமா? எத்தனை பேருக்கு எழுத்தாளர் கடுகு போன்று பிறருக்கு உதவும் குணம்/எண்ணம் வரும்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்! நடைவண்டியில் உங்களோடு பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வாழ்த்துகளுடன்!

    ReplyDelete
    Replies
    1. கடுகு ஸாரை வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி.

      Delete
  2. கடுகு சார் உண்மையிலேயே மிகப் பெரிய மனிதர்.உங்கள் எழுத்துலக நண்பர்கள் அனைவரையும் பார்த்து வியந்து நிற்கிறேன்.
    இடையில் வந்த பிரச்சினை என்ன என்பது தெரியாது.ஆனால் உங்களைப் போன்ற நல்லவருக்குப் பிரச்சினைகள் தூளாகும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்து என்னை நெகிழ வைக்கிறது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் நண்பரே...

      Delete
  3. பாராட்டுக்குரிய உயரிய பண்பு.

    நடைவண்டிகள் நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்துகின்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்.

      Delete
  4. எப்படிபட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் கஷ்டங்ககள் வரும் போகும் ஆனால் நல்லவனுக்கும் நல்லவர்கள் துணை எப்போதும் கூட வரும் என்பது உங்கள் அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம். என் அனுபவத்தில் நான் கற்ற பாடமும் அதுவே. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா.

      Delete
  5. உண்மையில் அவரின் பரந்த மனசு என்னை வியக்க வைத்தது.

    அத்தகைய அரியதோர் பரிசைப் பெற உங்களின் மனசும் நட்பும்

    உயர்ந்ததே. இனிதே தொடரட்டும் உங்கள் நட்பும் நடைவண்டிப் பயணமும்.

    ReplyDelete
    Replies
    1. நலம்தானே தோழி.... உங்களின் வருகையும் கருத்தும் மனதை மிகமிக மகிழ்வு கொள்ளச் செய்கிறது. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. எத்தனை பெரிய மனது கடுகு அவர்களுக்கு! கூடப்பிறந்த சகோதரர் கூட கடன் கொடுக்க மறுக்கும் காலமிது கணேஷ்.

    நிச்சயம் நீங்களும் கொடுத்து வைத்தவர் தான்.

    தொடரட்டும் உங்கள் நடைவண்டிப் பயணம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை வெங்கட். உடன் பிறந்தவர்களும் உதவி செய்ய யோசிக்கிற காலம்தான் இது. அத்தனை பெரிய விஷயத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்த உயர்ந்தவருக்கு என்ன செய்துவிட இயலும் நான்? தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. அருமையான அனுபவங்களைச் சொல்லி அருமையான மனிதர்களைப் பற்றி எங்களுக்கு அறியத் தருகிறீர்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தொடர்ந்து வருவதில் எனக்கு மிகமிக மகிழ்வு ஸ்ரீராம். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  8. நடை வண்டி ரசிகர்களுக்கு:
    நண்பர் கணேஷ் எழுதியதில் சில காலி இடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.
    முதன்முதலில் என்னை சந்தித்த அன்று அவர் சொன்னது: என் தந்தை இப்போது இல்லை. உங்களை என் பெற்றோராகக் கருதி நமஸ்காரம் செய்கிறேன். உடனே சாஷ்டங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
    இரு சக்கர வாகனம் வாங்க உதவுகிறோம் என்று, என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கமலேயே முதலில் சொன்னது என் மனைவிதான்.

    ’கணேஷ் பணம் தர முடியாமப் போச்சுன்னா...” என்று பாலா சொன்னபோது,அவரிடம் நான் சொன்னது அல்லது கேட்டது: பணம் என்ன உங்களைக் கேட்டா கொடுத்தேன்? கணேஷுக்கு கேரண்டி நாங்களேதான்.”

    பார்த்தவுடன் கணேஷ் மீது எங்களுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது என்றால் அதற்கு காரணம் கணேஷ்தான். ஆகவே கணேஷ்தான் பாராட்டுக்குரியவர்.


    இந்த நடைவண்டியில் என்னைப் பற்றி எழுதி இருப்பது யாருக்கு அதிக மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று ஊகிக்க முடியுமா” எங்களுக்கா? இல்லை. எங்களைவிட அதிக சந்தோஷம் அடைந்திருப்பவர் கணேஷாகத்தான் இருக்கும்.
    -----
    கணேஷ் அவர்களுக்கு: உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.
    --கடுகு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னது போல பாலா சாருக்கு நீங்கள் சொன்ன பதிலையும், கமலா அம்மாவைப் பற்றியும் எழுத விட்டுப் போனது என் மறதியினால் வந்த பிழைதான். மன்னிக்க. நானும் ஒரு திருத்தம் சொல்கிறேன்... உங்களை என் தந்தையாகவும் அம்மாவை தாயாகவும் கருதுகிறேன் என்று கடந்த காலத்தில் சொல்லிவிட முடியாது. என்றென்றும் என் மனதில் அதுவே. வலையுலகில் என்னை சின்னக் கடுகு என்று அழைக்கிறபோது நான் அடையும் மகிழ்வை என் சொல்ல... நகைச்சுவை எழுத்தில் என் குருவுமான தங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி. கடைசியில் நீங்கள் சொல்லியிருப்பது 100க்கு 100 உண்மை. மிகமிகமிக மகிழ்வுடன் இருக்கிறேன் நான்.

      Delete
  9. சிலரிடம் இருக்கும் மனித நேய பண்பு கடைசி வரை மாறாது...வாழ்கையில் அவர்கள் எத்தனை பெரிய நிலையை எட்டினாலும் கூட..!

    உங்கள் எழுத்துக்கள் மூலம் கடுகு சார் அவர்களுள் ஒருவர் என உணர்கிறேன்! (TM 6)

    ReplyDelete
    Replies
    1. உணர்வது சரிதான் வரலாற்றுச் சுவடுகள் சார்... அவர் மனிதநேயத்தில் சிகரம்தான். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  10. // அதுக்கான மொத்தப் பணத்தையும் நான் கொடுத்துடறேன். உங்ககிட்டருந்து அந்தத் தொகையை நான் மெதுவா வாங்கிக்கறேன்...’’// மனதில் பலபடிகள் உயர்ந்து விட்டார்,
    //அதை என்னிக்காவது ஒரு நாள் வாங்கிடணும்னு நான் ஏற்கனவே முடிவு செஞ்சு வெச்சுட்டேன். ஆனா, // நாம் ஆசைப்பட்ட வண்டியை ஆசையோடு இன்னொருவர் அதிலும் நமக்குப் பிடித்தவர் மரியதையனவர் வாங்கிக் கொடுத்தால் அந்த உணர்வு விவரிக்க முடியாது தான்....
    //ஆனால் நான் பெரிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்ற ஒரு சாதாரணன் என்பதே உண்மை. ஏதோ இறையருளால் இத்தகைய நல்ல நட்புகள் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.// இந்த வரிகளைப் படிக்கும் பொழுது பெரிய மனிதர்களுடன் பழகிய சாதாரண மனிதராக இருந்த நீங்கள் என் மனதில் உயர்ந்த மனிதன் ஆகிவிட்டீர்கள்.

    //சில வருடங்கள் கழித்து, ‘நடைவண்டிகள்- பாகம் 2’// என்ன நடை வண்டிகள் முடிந்து விட்டதோ என்று நினைத்தேன் நல்ல வேலை தொடர்கிறேன் என்று போட்டுள்ளீர்கள் ,
    நியாபகம் இருக்கட்டும் தொடர்கிறேன் என்று போட்டுள்ளீர்கள்


    கடுகு அவர்கள் உங்களைப் பற்றி கூறிய வரிகளையும் மீண்டும் மீண்டும் படித்தேன், உங்கள் மீதும் அவரும் மற்ற நண்பர்களும் வைத்திருக்கும் நட்பு அளவில்லாதது .

    //எங்களைவிட அதிக சந்தோஷம் அடைந்திருப்பவர் கணேஷாகத்தான் இருக்கும்.// நிச்சயமாக உண்மை தான் வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றவர்களைச் சந்தித்து நிறைய அனுபவங்கள் கிடைத்தபின் எழுதி விடலாம் சீனு, வரும் பதிவர் சந்திப்பு அதற்கு நல்ல துவக்கமாக அமையட்டும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. நல்ல பகிர்வு ! வாழ்த்துக்கள் ! (த.ம. 7)

    ReplyDelete
    Replies
    1. வாக்கிட்டு வாசித்து உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே...

      Delete
  12. இப்படியும் ஒரு நட்பா - என்று வியக்க வைத்தது உங்களுக்கும் கடுகு சார், கமலா மாமி தம்பதியருக்கும் உள்ள நட்பு! இவ்வளவு பெரிய மனமும் (பணம் கொடுத்ததற்கு மட்டுமில்லை, நீங்கள் வாகன வசதியில்லாமல் சிரமப்படுவதால் வருந்தி, கேட்காமலேயே உதவி செய்யும் எண்ணம் கொண்டதால்) அன்பும் உள்ள தம்பதியரை நீங்கள் பெற்றோர் ஆகவே ‘பாவிப்பதில்’ ஆச்சரியமே இல்லை. கடுகு தம்பதியருக்கு வணக்கம். உங்கள் உளமார்ந்த நன்றி தெரிவித்தலுக்கும், மரியாதைக்கும் வணக்கம். - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. கடுகு ஸாரிடம் பெருமதிப்புக் கொண்ட நீங்கள் தெரிவித்த கருத்து மகிழ்வூட்டியது. தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  13. கடுகு ஐயா பொயர்தான் சிறிது உள்ளமோ கடலை விட பெரிது!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. மிகமிக உண்மை ஐயா. தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. வாழ்வில் இத்தகையோருடன் பழகும் வாய்ப்பு கிட்டியது உங்களுக்கு இறைவன் நல்கிய ஒரு வரம்/ இறைவனிடம் வரம் பெற்று, நல்லோருடன் இருப்போர், நலமான வாழ்வு வாழ்வார்கள்! பகிர்விற்கு நன்றி!
    எல்லாம் கிருஷ்ணன் செயல்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஆன்மீகம் எழுதும் உங்களின் கருத்து எனக்கு மிகமிக மகிழ்வளிக்கிறது. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. ஒரு நூரு ரூவா கைமாத்தா கேட்டாலே முகம் திருப்புர உலகம். இப்படி கேக்காமலே உதவி செய்பவங்களும் இருக்காங்கதான் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைச்சிருக்கு. நீங்க பகிர்ந்து கொள்வதால் எங்களுக்கும் அவர்களை தெரிந்து கொள்ள முடிகிரது நன்றி

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவத்தால் சில நல்லவர்களை அடையாளம் கண்டு மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  16. கடுகு ஸார் - கமலா மாமியின் பெருந்தன்மையும், அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்ட விதமும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. கேட்டால் உதவுவது மனித குணம். கேட்காமல் உதவுவது தேவ குணம் அல்லவா? அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டி ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே...

      Delete
  17. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று கூறுவார்கள். இங்கு காரம் என்பதை இயல்பான குணம் என்று எடுத்துக் கொண்டால். திரு.கடுகு அவர்களுக்கு உப’காரம்’ தான் இயல்பான குணம் என்பது புலப்படுகிறது. பகிர்விற்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. அழகான வார்த்தைகளால் கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  18. நல்ல மனிதர்களின் நட்பும் அந்த நினைவுகளும் எப்போதுமே பசுமையானது. நீங்கள் நல்ல மனிதர்களின் நட்பை பெரும் வரம் பெற்றவர்.

    ReplyDelete
    Replies
    1. வரம் பெற்ற என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி பாலா.

      Delete
  19. Really heart warming...thanks for sharing...gives a positive vibe when I finished reading this

    ReplyDelete
  20. இறையருளால் இத்தகைய நல்ல நட்புகள் கிடைக்க ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.


    இனிய வாழ்த்துகள்..
    வலைச்சர அறிமுகத்திற்கும்..

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube