Thursday, July 12, 2012

மறுபடியும் சுஜாதா

Posted by பால கணேஷ் Thursday, July 12, 2012

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக...

சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி?   -எம்.பரிமளா, சென்னை.

கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார் தொடர்பு? 
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.

இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்?  -வி.மகேஸ்வரன், காரைக்குடி.

திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி?  -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

தற்போ‌தைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  -என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.

கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?  -வி.அம்பிகை, சென்னை.

உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?  -ஆவடி த.தரணிதரன், சென்னை.

சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! -என்.அஞ்சுகம், பாலப்பட்டி.

உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-

பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!

‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?  -ந.வந்தியக்குமாரன், சென்னை.

இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்‌த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?  -ராஜசுதா, சேலம்.

சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? -எஸ்.வெண்ணிலாராஜ், வேம்படிதாளம்.

பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?  -எஸ்.ஏ.கேசவன், இனாம் மணியாச்சி.

‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? -எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.

தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?   -த.முரளிதரன், சென்னை.

‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’

அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்? -ஆடுதுறை கோ.ராமதாஸ், தஞ்சாவூர்.

‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.

71 comments:

  1. இதுவரை படிக்காத சுஜாதா அவர்களின்
    கேள்வி பதில் பகுதியைப் படித்து ரசித்தேன்
    படிக்காததெல்லாம் புதியதுதானே
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. முதல் வருகைக்கு இந்தாங்கோ...
      [im]http://www.etftrends.com/wp-content/uploads/2008/07/coffee.jpg[/im]

      Delete
  2. கணேஸ்.....ஃப்ரெண்ட்....என்னமோ மனம் சோர்ந்திட்டேன்.சுகம்தானே?சும்மாதான் இந்தப பக்கம் வந்தேன்.இப்பத்தான் பதிவு போட்டீங்கள்போல....வாசிச்சேன்.எப்பவும்போல அருமை....இலங்கத் தமிழை...அல்லது ஈழத் தமிழை சிங்களத் தமிழ் என்றே சொல்லிப் பழகிவிட்டார்கள் தமிழ் நாட்டுச் சகோதரர்கள்.நிறைய இடத்தில் நான் விளக்கம் தந்திருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நல்ல சுகம் ஹேமா... நானும கனநாளாய் என் ஃப்ரெண்டைக் காணலியேன்னு தேடித் தவிச்சுட்டுத்தான் இருந்தேன். ‘வானம் வெளித்த பின்னும்‘ போய்த் தேடி குரல் கொடுத்துட்டும் வந்தேன். இப்ப பாக்கறதுல ரொம்ப சந்தோஷம். அந்தக் கேள்விபதில்ல அப்படித்தான் இருந்தது. நீங்க சொல்ற விளக்கம்தான் சரி. ஆனா அந்தத் தமிழ்ல ஒரு அழகு உண்டுங்கறதுதான் சுஜாதா சார் மாதிரியே என் கருத்தும். மிக்க நன்றி ஃப்ரெண்ட்.

      Delete
  3. Replies
    1. ஆம்... இந்த மாதிரி நறுக் சுருக்கென்றும் ரசிக்கும் படியும் பதில் தருவதென்றால்... one and only Sujatha Sir! உங்களுக்கு என் இதய நன்றி நண்பா.

      Delete
  4. In a single word he has brought out the similarity between given factors. Really superb. In his reply to the question relating to corruption, the answer is AWESOME.

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் எதைச் சொல்வது எதை விடுவது என்றே தீர்மானிக்க முடியாமல் திணறத்தான் வேண்டியிருக்கிறது மோகன். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. இது வரை படித்ததில்லை! என்ன ஒரு ஷார்ட் அண்ட் க்ரிஸ்ப் பதிகள்!

    வஞ்ஜிப்பா / வருத்தப்பா; சர்வர் ப்ராப்ளம்; கள் அனுமதிக்காத திருக்குறள்; மலர்ப்பாதம் இலக்கணக்குறிப்பு; ’வயலின்’ மேன்மை; இலங்கைத் தமிழ்; - ஆஹா!

    முந்தய பதிவிற்கு லின்க் கொடுக்க முடியுமா? இந்த கேள்வி-பதில் தொகுதி முழுதாக எங்கே படிக்க முடியும்?

    பதிவிற்கு நன்றி.

    -ஜெ.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் பதில்களை ரசித்த ஜெ.க்கு ஒரு ஜே! இதோ... நீங்கள் கேட்ட லிங்க்:

      http://www.minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_25.html

      மிக்க நன்றி.

      Delete
  6. நயமான வினா விடைகள். படிக்க அளித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. சுஜாதா அவர்களின்
    கேள்வி பதில் பதிவிற்கு நன்றி sir

    r.v.saravanan
    kudanthaiyur.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சரவணன்.

      Delete
  8. சூப்பர் பதிவு

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே.

      Delete
  9. சுஜாத அவர்களின் கேள்வி பதில்களில் எப்போதுமே ஒரு ஈர்ப்புஇருந்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  10. எல்லாமே அருமையாக உள்ளன.

    //திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.//

    //மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்//

    போன்றவை என்க்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததுடன் நில்லாமல் மிகப் பிடித்த வரிகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். அருமை. உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. காதல் கவிதை எழுத கேள்விக்கு அருமையான நறுக் பதில்.

    ReplyDelete
    Replies
    1. நறுக் சுருக் பதில்களை ரசித்த தென்றலுக்கு என் இதய நன்றி.

      Delete
  12. நீ வாத... அர்த்தம் சொன்னாரா?

    ReplyDelete
    Replies
    1. இல்லையே அப்பா ஸார்... அந்த பாலின்ட்ரோம் சொன்னதோட நிறுத்திட்டாரு சுஜாதா சார். என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்க நானும் ஆவலாதான் இருக்கேன்.

      Delete
  13. எல்லாமே சுவாரஸ்ய பதில்கள். திருக்குறள் பதில் நானும் ரசித்தேன். பகிரவும் நினைத்திருந்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒரு ஸெட் ரெடி பண்ணி வெச்சிருக்கேன் பதிவு போட. அவ்வளவுதான் ஸ்டாக் ஸ்ரீராம் என்கிட்ட. வேற எதுவும் இருந்து நீங்க பகிர்ந்தீங்கன்னா மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  14. எப்படித்தான் இப்படில்லாம் சுவாரசியமாக பதில் சொல்ல முடிகிரதோ அதுக்குன்னு தனித்திறமை வேனும்.சுஜாதா த க்ரேட்

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்... ரசனைலயும் சரி, எழுத்துலயும் சரி... சுஜாதா சுஜாதாதான். ரசிச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  15. எவ்வளவு அருமையாக பதிலளிக்கிறார் பாருங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ஆம். மாறாத வியப்பில்தான் நானும். மிக்க நன்றி நண்பரே...

      Delete
  16. //மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.//
    என்ன எளிய நகைச்சுவை.. வாத்யார்!!!

    ReplyDelete
    Replies
    1. அவர் எதை எழுதினாலும் அடிச்சரடாக இருக்கும் அந்த மெலிதான நகைச்சுவைதான் வாத்யாரின் பலம் இல்லை... மிக்க நன்றி.

      Delete
  17. சுஜாதா கேள்வி பதில்கள் நன்றாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  18. மிகவும் ரசனையான பதில்கள். சர்வர் பிராப்ளம், பூண்டு, வயலின், வஞ்சிப்பா போன்ற சிலேடை நயங்களையும், காதல் கதை, சாப்பிடும் உதவி போன்ற நகைச்சுவைகளையும் மிகவும் ரசித்தேன். நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்களும் ரசித்ததில் பிடித்தவை எவை என்று சொன்னதன் மூலம் உங்கள் ரசனையும் என் ரசனையுடன் ஒத்துப் போவதை உணர்த்தி விட்டீர்கள் தோழி. என் இதயம் நிறை நன்றி உங்களுக்கு.

      Delete
  19. //ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.//
    மிஸ் யூ வாத்யாரே :(

    ReplyDelete
    Replies
    1. எக்ஸலண்ட் சுஜாதா. எக்ஸ்ட்ரார்டினரி வாசகர்கள். என்னை வியப்பூட்டும் விஷயம் இது நாகசுப்ரமணினன். தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  20. நகைச்சுவையுடன் நாகரீகமும் கலந்து
    நல்லவைகளின் பால் கவனத்தைத் திருப்பும்
    நயம் சுஜாதாவின் கை வந்த கலை.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக ரசித்து சிறப்பாகக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே...

      Delete
  21. சுஜாதாவில் கணேஷைப் பார்த்திருக்கிறோம். இப்போது கணேஷில் சுஜாதா! படிக்க ‘வஸந்த’மாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... கருத்துச் சொல்லியிருக்கும உங்களின் வார்த்தைகளே யானை பலம் தருகின்றன. மிகமிக நன்றி நண்பரே...

      Delete
  22. எனக்கு சுஜாதா அங்கிளை மிக பிடிக்கும்

    அவரை விட அவரின் எழுத்துகளை மிக பிடிக்கும்....

    ReplyDelete
    Replies
    1. அவரின் எழுத்துக்கள் வசீகரித்தவர்களில் எஸ்தரும் உண்டா? மிக்க மகிழ்ச்சிம்மா. என் மனமார்ந்த நன்றி உனக்கு.

      Delete
  23. சுஜாதா அவர்களின் பதில்களை படிக்க ஆரம்பித்தபோது, முதல் கேள்விக்கான பதில் மிக அருமை என நினைத்தேன். பின் அடுத்த கேள்விக்கான பதிலை படித்தபோது அதுவும் அருமை என நினைத்தேன். கடைசியில் படித்து முடித்தபோது சுஜாதா அவர்களின் எல்லா பதில்களுமே அருமை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். எந்த ஒரு பதிலையும் ரசிக்காமல் இருக்கு முடியாதுதான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  24. //கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.//

    மிக மிக சரி அதிகமாய் ரசித்தேன்

    அனைத்து கேள்விகளிலுமே இருபொருள் பட கூறி இருப்பது எவ்வளவு அழகு

    சுஜாதா - மந்திரப் பெயர் தான் சார்

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரின் பதில்களை ரசித்த நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  25. ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.//

    கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.//

    அருமையான பதில்கள். சுஜாதாவுக்கு நிகர் சுஜாதா தான்.
    மறுபடியும் சுஜாதா பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா ஸாரின் கேள்வ பதில்களை ரசித்து, மேற்கோள் காட்டி கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  26. தொடர்பே இல்லாத இரு விஷயங்களுக்கு உள்ள தொடர்பை எடுத்துச் சொல்ல சுஜாதாவால் மட்டுமே முடியும்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே... ஒரே ஒரு சுஜாதாதான். இணையற்றவர் அவர். ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி

      Delete
  27. ஏனோ தெரியவில்லை..படிக்கும்போதே கண்களை கண்ணீர் திரையிட்டது.

    What a loss to Tamilians!!

    Many thanks Ganeshji

    ReplyDelete
    Replies
    1. ஆம்... சுஜாதா உயிருடனில்லை என்ற விஷயத்தை நம்பவே வெகுநாட்களாயிற்று எனக்கு. நிச்சயம் தமிழர்களுக்கு இழப்புதான் நண்பரே. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி.

      Delete
  28. மறுபடியும் சுஜாதா.... மறுபடியும் கணேஷ் எனும் வாத்தியார் கதை தலைப்பு ஞாபகம் வந்தது.. நெட் பரவலாக இல்லாத காலத்திலேயே.. வாத்தியார் மின் அம்பலத்தில் கலக்கி கொண்டிருந்திருந்தார்.. அதை அழகாக எடுத்து போட்டு வாத்தியாரின் வாசக ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தற்கு நன்றிகள் கோடி,.....

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா ஸாரின் பதில்களை இப்போது தொகுத்து இரண்டு பதிவுகளாகப் பிரித்து ட்ராப்டில் போட்ட போது ‘மறுபடியும் கணேஷ்’, ‘மேலும் ஒரு குற்றம்’ நாவல்கள் நினைவுக்கு வர, ‘மறுபடியும் சுஜாதா’, ‘மேலும் கொஞ்சம் சுஜாதா’ என்று தலைப்பிட்டு டிராப்டில் வைத்தேன். இப்போது ஒன்றை வெளியிட்டேன். சரியாக நினைவுகூர்ந்த உங்களை வியக்கிறேன் பத்மநாபன். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  29. //மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.//

    என்னவொரு பதில்! வாத்தியார் வாத்தியார் தான்! :)

    பகிர்வுக்கு மிக்க நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... என்னமாய் ரசித்திருக்கிறீர்கள். அவருக்கிணை அவரேதான் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது வெங்கட். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  30. அன்புள்ள கணேஷ்,

    சுஜாதா என்றும் சூப்பர் ஸ்டார் தான். அருமையான பகிர்வுக்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா என்னும் சூப்பர்ஸ்டாரின் பரம விசிறிக்கு மனமகிழ்வுடன் கூடிய என்னுடைய நன்றி.

      Delete
  31. ரசனையான பதில்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மாதேவி.

      Delete
  32. சுஜாதா என்றால் சுஜாதாதான் அதில் ஐயமில்லை ஒவ்வொரு பதிலும் முத்துக்கள்!ரசித்துப் படித்தேன் அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  33. உண்மையில் எழுத்தாளர் சுஜாதாவின் மரணம் என்னால் நம்ப முடியாத ஒன்று. ஏதோ காய்ச்சல் என்றார்கள். மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார்கள்.கொஞ்சநாளில் மறைந்து விட்டார். உங்கள பதிவில் அவரை மீண்டும் வாசித்தேன்.நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் சுஜாதாவை தரிசிக்க முடிந்ததா? மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  34. Thalaivar thalaivar dhaan; thanks ganesh

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா ஸாரை ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  35. தங்களது தளத்திற்கு என் முதல் வருகை இது.. சுஜாதா அவர்களின் தீவிர வாசகன் நான். இந்த கேள்வி பதில்களை இதற்கு முன்னம் படித்ததில்லை.. மிக அருமை....பகிர்வுக்கு நன்றிகள்
    என்றும் அன்புடன்
    தமிழ்நேசன்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube