Tuesday, July 10, 2012

நடை வண்டிகள் - 25

Posted by பால கணேஷ் Tuesday, July 10, 2012

கடுகு அவர்களும் நானும்-3

டுகு ஸாரை நான் சந்தித்து விட்டு வந்தபின் சில நாட்கள் நான் பார்த்தவந்த வேலை என்னைச் சாப்பிட்டது. அதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஒருநாள் அவரே அலைபேசியில் அழைத்தார். ‘‘ப்ரீயா இருக்கீங்களா? வர முடியுமா?’’ என்று கேட்டார்.  நான் ப்ரீயாகத்தான் இருந்தேன். உடனே வருகிறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றேன்.

அச்சமயத்தில் என்னிடம் இருசக்கர வாகனம் எதுவும் இல்லாததால் சென்னையில் எங்கு செல்வதென்றாலும் பேருந்துகள்தான். எனவே சற்றுத் தாமதமாகவே அவரின் வீட்டைச் சென்றடைந்தேன். ‘‘என்னாச்சு... ஏன் நீங்க வர்றதுக்கு இவ்வளவு நேரமாச்சு?’’ என்று கேட்டார். நான் ட்ராபிக் ஜாமின் காரணமாக பேருந்து லேட்டாக வந்தது என்றேன். ‘‘நான் எழுதின சில கதைகளும், கட்டுரைகளும் இதில இருக்கு. இதை டைப் பண்ணித் தரணும் கணேஷ்’’ என்று எனக்காக எடுத்து வைத்திருந்ததைக் கொடுத்தார். உடன் செய்வதாகக் கூறி பெற்றுக் கொண்டேன்.

அதன்பின் ‌மற்ற விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். கணிப்பொறியில் பயன்படுத்துகிற தமிழ் ஃபாண்ட்கள் பற்றிப் பேச்சு வந்த போது கடுகு ஸார் சொன்னார். ‘‘நானே நிறைய ஃபாண்ட்ஸ் உருவாக்கியிருக்கேன், தெரியுமா?’’ என்றார்.

‘‘ஃபாண்ட்‌ஸை... உருவாக்கறதா..? எப்படி ஸார்?’’ என்றேன் வியப்புடன்.

‘‘Fontographer அப்படின்னு அதுக்கு ஒரு software இருக்கு. அதை நான் டில்லியில இருந்தப்பவே வாங்கினேன். அதைக் கத்துக்கிட்டு அதன் மூலமா ஃபாண்ட்ஸ் க்ரியேட் பண்ணலாம்’’ என்றார். அவர் உருவாக்கியிருந்த ‘ஆனந்தி’ என்ற புதிய, எளிய தமிழ் மென்பொருளின் குறுவட்டும், விளக்கப் புத்தகமும் இணைந்த பேக்கை எனக்குத் தந்தார். எம்.எஸ்.வேர்டில் டைப் செய்து, அங்கிருந்து காப்பி செய்து மற்ற சாப்ட்வேர்களில் பயன்படுத்தும் வண்ணம் அது உருவாக்கப்பட்டிருந்தது. அதை எனக்கு இயக்கிக் காட்டினார்.

தமிழில் எழுத்துக்களை டைப் செய்யும் போது கி என்பதில் க மற்றும் சுழி என இரண்டு ஸிலபிளாக எடுத்துக் கொள்ளும். க் என்பதும் அவ்விதமே க மற்றும் புள்ளி என்று இரண்டு. கடுகு ஸாரின் ஆனந்தியில் டைப் செய்துவிட்டு, மேலே இருக்கும் அவர் படத்தை (மேக்ரோவை) அழுத்தினால், இரண்டு ஸிலபிள்களாக இல்லாமல் இணைந்து ஒன்றாகி விடும். அப்படி அவர் டிஸைன் செய்திருந்த விதத்தைக் கண்டு வியந்து போனேன். அவர் தந்த அந்த சாப்ட்வேரை நான் பயன்படுத்தினேன்.

அவர் உருவாக்கியிருந்த ஃபாண்ட்களின் பெயர்களைப் பாருங்கள்: குந்தவி, வந்தியத்தேவன், கரிகாலன், தாரிணி. அவரின் பதிப்பகத்தின் பெயரோ நந்தினி. இவற்றையெல்லாம் பார்த்ததும் நினைத்திருப்பீர்கள் கடுகு ஸார் கல்கியின் அபிமானி என்று. அது உண்மையல்ல...

அவர் கல்கி அவர்களின் தீவிர பக்தர் என்பதே சரி. நந்தினி பதிப்பகத்தில் அவர் வெளியிட்ட ஆனந்தி சாப்ட்வேர், மற்ற புத்தகங்கள் அனைத்தையுமே ‘கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்ற வரிகள் இல்லாமல் வெளியிட மாட்டார். கல்கி அவர்களைச் சந்தித்ததையும், உரையாடியதையும் இப்போது கேட்டாலும் நேற்று நடந்தது போல் விரிவாகச் சொல்வார் அவர். (‘கமலாவும் நானும்’ என்ற அவரின் புத்தகத்தில் ‘கல்கியும் நானும்’ என்று தனிக் கட்டுரையாக அதை எழுதியிருக்கிறார். படித்துக் கொல்ல... ஸாரி, கொள்ளவும்)

கணிப்பொறியில் அவர் சேகரித்து வைத்திருந்த நிறைய போட்டோஷாப் ப்ரஷ் மற்றும் ஆக்ஷன் டூல்களை இயக்கிக் காட்டியபோது அவரின் கணிப்பொறி ஆர்வம் கண்டு வியந்து போனேன். அவருடைய ப்ரஷ் தொகுப்பு எனக்கு டிசைனிங்குக்குப் பயன்படும் என்பதால் ஒரு சிடியில் காப்பி செய்து எடுத்துக் கொண்டேன். ‘‘இதென்ன பெரிசு... டிடிபிக்கு யூஸ் பண்ற க்ளிப் ஆர்ட்ஸ் தொகுப்பு 14 சிடி இருக்கும்... டெல்லியில இருந்தப்ப என்கிட்ட இருந்துச்சு. அதை வரவழைக்கறேன். அடுத்த தடவை வர்றப்ப ஞாபகப்படுத்துங்க தர்றேன்...’’ என்றார். நான் கிளம்பத் தயாரானபோது, ‘‘முடியறப்போ டைப் பண்ணிட்டு வாங்க. ஒண்ணும் அவசரமில்லை’’ என்றார்.

டைப் பண்ணுகிற சாக்கில் அவருடைய எழுத்துக்களில் படித்ததை மீண்டும் படித்து ரசிக்கவும், படிக்காததை புதிதாய் ருசிக்கவும் கிடைத்த வாய்ப்பு அல்லவா...? எனவே அவர் கொடுத்த மேட்டர்களை ஆர்வமாகப் படித்து, அடித்து விரைவில் முடித்து விட்டேன். முடித்து விட்டு அவருக்கு போன் பண்ணி, வீட்டில் இருப்பாரா, வரலாமா என்பதைக் கேட்டுக் கொண்டு அவற்றைக் கொடுக்கச் சென்றேன். நான் கொடுத்த மேட்டர்களை கணிப்பொறியில் காப்பி செய்து விட்டு, ‘ஐயோ பாவம் சுண்டு’ புத்தகம் தயாராகி வந்திருந்ததைக் கொடுத்தார்.

கூடவே அந்த 14 க்ளிப் ஆர்ட் சிடிக்களையும்! அவற்றை நான் பிரதி எடுத்துக் கொண்டு பின்னொரு நாளில் அவரிடம் கொடுத்து விட்டேன். அந்த 14 சிடிக்களிலும் இருந்தவை க்ளிப் ஆர்ட் பொக்கிஷங்கள்! அவற்றை முழுமையாக நான் இன்னும் பயன்படுத்தி விடவில்லை என்பதும் இன்றுவரை பக்க வடிவமைப்புக்கு எனக்கு அவை துணை நிற்கின்றன என்பதும் நிஜமான நிஜம்.

அகஸ்தியன் மற்றும் கடுகு ஆகிய இரண்டு புனைபெயர்களுக்கான காரணம் கேட்டபோது விரிவாகச் சொன்னார். ‘கமலாவும் நானும்’ புத்தகத்தில் அதை விரிவாக எழுதியிருக்கிறார். அதன் சுருக்: ‘‘குமுதம் இதழில் என் கட்டுரைகளும, துணுக்குகளும் நிறைய வந்து கொண்டிருந்தன. பின்னர் சாவி ஸார் தினமணி கதிரில் ஆசிரியர் பொறுப்பேற்றதும் முன்பின் அறிமுகமில்லாத எனக்குக் கடிதம் எழுதி கதிருக்கு ஏதாவது எழுத வேண்டும் என்று சொன்னார். கதிரில் கதை எழுதலாம் என்று நினைத்தேன். அதாவது எனக்குக் கதை எழுத வரும் என்று நானே தீர்மானித்துக் கொண்டேன். அதுவும் நகைச்சுவைக் கதைகள். ‘அகஸ்தியன்’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு ஒரு பஞ்சு கதை எழுதி அனுப்பினேன்.’’

 இப்படி அகஸ்தியனாக அவதாரமெடுத்த கடுகு ஸார், சில நாட்களிலேயே எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்தபோது தானே அகஸ்தியன் என்பதைச் சொல்லி அவரின் வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார்.

இப்படி இன்னும் நிறைய விஷயங்களை நேரம் போவதே ‌தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெறும் சமயத்தில் அவர் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார். நான் அதிர்ச்சி, வியப்பு, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளின் கலவையாக அவரைப் பார்த்தேன். அவர் சொன்னதை என்னால் சட்டென்று நம்ப இயலவில்லை. அந்த விஷயம் என்னன்னாக்கே...

அடடா... பதிவு ரொம்ப பெரிசாயிட்ட மாதிரி இருக்கே... அதிகம் படிச்சா போரடிக்கும் இல்லயா... அதனால...

                                                                                -தொடர்கிறேன்...

51 comments:

  1. பதிவு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது
    நீங்க்கள் சொன்ன உடன் தான் பதிவின் நீளம் குறித்த
    ஸ்மரணையே வந்தது.
    வழக்கம்போல் உங்கள் மீதான பிரமிப்பை
    அதிகப் படுத்திப்போகும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நான் சொன்னதும்தான் நீளம் குறித்த நினைவே வந்தது எனில் எத்தகைய பெருமையான விஷயம் எனக்கு அது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் நண்பரே...

      Delete
  2. கடுகு அவர்கள் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் எழுத்துரு பற்றியும் அவர் பயின்றிருப்பது கண்டு வியக்கிறேன்.

    // குந்தவி, வந்தியத்தேவன், கரிகாலன், தாரிணி. அவரின் பதிப்பகத்தின் பெயரோ நந்தினி. // அருமை... ஒரு வாசகன் தான் விரும்பும் எழுத்தாளனுக்கு இதை விட வேறு என்ன செய்துவிட முடியும்

    //நான் அதிர்ச்சி, வியப்பு, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளின் கலவையாக அவரைப் பார்த்தேன். அவர் சொன்னதை என்னால் சட்டென்று நம்ப இயலவில்லை// நடை வண்டியில் ஏறிய பிறகு நடை பழகித் தானே ஆக வேண்டும் காத்துள்ளோம்

    த ம(2)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்டு என்னுடன் தொட்ர்ந்து பயணிக்கும் சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  3. ரமணி சார் முந்திக் கொண்டதல் என் த ம மூன்றாம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நல்லன கண்டவிடத்தில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவதில் ரமணி ஸாருக்கே என்றும் முதலிடம். நாமெல்லாம் அவர் பின்னால்தான் சீனு.

      Delete
    2. தங்கள் கூற்றை நான் ஆமோதிக்கிறேன் வாத்தியாரே

      Delete
  4. Replies
    1. சுவாரஸ்யம் என்று சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா.

      Delete
  5. You are not only expert in writing an article creating interest in the mind of the readers but also you know pretty well where to insert "to be continued". After reading your experience with Kadugu sir, I felt very bad when I read "to be continued" because you have ended this abruptly. Very sad.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் மோகன். அதிகம் காக்க வைக்காமல் விரைவிலேயே தொடர்ந்து விடுகிறேன். தொடரும் உஙகளுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. அவர் சொன்னதை என்னால் சட்டென்று நம்ப இயலவில்லை. அந்த விஷயம் என்னன்னாக்கே...
    சொல்லாம விட்டுடிங்களே. சீரியல் பார்த்த உணர்வு .

    ReplyDelete
    Replies
    1. ஆனா அழுகாச்சி சீரியல் இல்ல இது. அதனால தொடர்ந்து வாங்க தென்றல். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. எத்தனை பெரிய மனிதர்களுடன் உங்களுக்கு இருக்கும் நட்பு.. பிரமிப்பை ஏற்படுத்துகிறது.. தொடருங்கள் ..தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டிப் பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. நீங்கள் அதிர்ச்சி, வியப்பு, ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளின் கலவையாக கடுகு அவர்களைப் பார்த்ததின் காரணம் ஏற்பட அவர் சொன்ன அந்த வார்த்தை என்ன என அறிய ஆவலுடன் இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  9. ///பதிவு ரொம்ப பெரிசாயிட்ட மாதிரி இருக்கே... அதிகம் படிச்சா போரடிக்கும் இல்லயா////
    இல்லவே இல்லை..ரொம்ப இன்ரெஸ்டிங்காக இருக்கிறது இந்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. இன்ட்ரெஸ்டிங் என்று சொல்லி உற்சாகமூட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி. இந்தாங்க பிடியுங்க...
      [im] http://www.indiagiftbazaar.com/pimages/DCB5.jpg [/im]

      Delete
    2. கணேஷ் ரொம்ப நன்றி.....ஆனா சாக்லேட்டுக்கு பதிலாக பக்கோடா, அல்லது காரம் பரிசாக அளித்தால் அதை சாப்பிட்டு கொண்டே உங்கள் பதிவுகளை படிக்க ரொம்ப வசதியாக இருக்கும்

      Delete
    3. இங்கே வந்து பின்னுட்டம் அளித்த அனைத்து சகோதர சகோதரிகளும் மேலே உள்ள சாக்லேட்டை எடுத்துகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

      Delete
  10. ஆனந்தி பற்றி என்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள்..தெரியாத செய்திகளைத் தெரிந்து கொண்டேன்..இன்னும் தெரிந்து கொள்வேன்..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வளித்த தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி கவிஞரே...

      Delete
  11. சுவாரஸ்யமான தகவல்கள். சஸ்பென்ஸில் நிறுத்தி விட்டீர்களே.

    ReplyDelete
    Replies
    1. விரைவிலேயே தொடர்ந்து விடுகிறேன். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. மிகவும் பொல்லாதவர் நீங்கள்!
    பதிவை இப்படியா முடிப்பது!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. என் செய்வது ஐயா...? விரைவில் அடுத்து தொடர்ந்து விடுகிறேன். மிக்க நன்றி.

      Delete
  13. அதெப்படி கணேஷ் போரடிக்கும்?நடைவண்டி விரைவாக ஓடும்போது பிரேக் போட்டுட்டீங்களே!தொர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கும் தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. தொடர்ச்சி தொர்ச்சியாகி விட்டது.தொச்சுவின் பாதிப்போ!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இப்போதும் விழாக்களுக்குப் போனால் ’கமலா மாமியைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. தொச்சு வரலையா?’ எனக் கடுகு ஸாரைக் கேட்பவர்கள் உண்டு. அந்த கேரக்டரின் பாதிப்பு உங்களிடமிருப்பதில் மகிழ்ச்சியே.

      Delete
  15. ஒவ்வொரு எழுத்தாளர்களிடம் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் அதைசுவைபட சொல்லி வருகிரீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சுவைபடச் சொல்கிறேன் என்கிற தங்களின் பாராட்டில் மகிழ்ந்து போனேன். என் இதய நன்றி.

      Delete
  16. அடடா... விறுவிறுப்பாய் படித்துக் கொண்டு வந்தபோது திடீரென ப்ரேக் விட்டுட்டீங்களே கணேஷ்... காதலனுக்காய் நகம் கடித்துக் காத்திருக்கும் காதலி போல ஆக்கீட்டிங்களே என்னை! :))

    ReplyDelete
    Replies
    1. ஹப்பா... என்ன ஒரு உதாரணம்! அசத்திட்டீங்க வெங்கட். உடன் தொடர்ந்துடறேன். மிக்க நன்றி.

      Delete
  17. Replies
    1. ரசிததுப் படித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  18. பல அனுபவத்தைச்சொல்லும் குறிப்பு மிகவும் அதிகம் அனுபவம் அண்ணாவுக்கு! தொடருங்கோ பயணிக்கின்றேன்!போரடிக்காது படிக்க வேண்டியவை சுவை என்றால்!

    ReplyDelete
    Replies
    1. சுவையான அனுபவங்களை ரசித்துப் பாராட்டிய நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  19. களம் கண்ட மன்னவர்கள் பற்றி பேசும் போது
    நேரம் போவது தெரிவதில்லைதான் நண்பரே....
    அனுபவங்கள் நம்மை கட்டிப்போட்டு வைத்துவிடுகின்றன...
    அவர்போல நம்மால் பேசமுடியுமா என்று வாய்பிளந்து
    பார்த்துக் கொண்டிருக்கும் தருணம்...
    தொடர்ச்சி...
    தொடருங்கள் நண்பரே...
    அதே சுவாரஸ்யத்துடன் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டிக்காய் காத்திருந்து உடன் பயணித்து உற்சாகம் தரும் நண்பர் மகேனுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  20. நடை வண்டி வாசித்து விட்டேன் காலையிலேயே. பிரமிப்புத் தான் . அப்பா! எவ்வுளவு விடயம்! எவ்வளவு அனுபவம்! மிக்க நன்றி இவைகளைத் தருவதற்கு. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டியில் விட்டுப் போன அத்தியாயங்களையும் வாசித்துவிட்டு என்னை வாழ்த்திய உங்களின் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் தலைவணங்கிய என் நன்றி.

      Delete
  21. கடுகு ஸார் பற்றி படிக்கப் படிக்க திகட்டவில்லை.. காரணம் மேட்டர் அவரைப் பற்றி என்பதாலா.. அல்லது உங்கள் எழுத்தா.. ஸ்ரீரங்கத்தில் ஒன்று சொல்வோம்.. ஆபரணங்களால் ரெங்கனுக்கு அழகா.. அல்லது ரெங்கனால் ஆபரணங்களுக்கு அழகா என்று. அது போலத்தான் !

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... என்னைக கேட்டால் ரெங்கனால்தான் ஆபரணங்களுக்கு அழகு என்பேன். நான் ஆபரணம். ரசித்துப் படித்து அழகாய் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. கடுகு போல சிறியதான எழுத்துக்களாகவும் நீண்ட பகுதியாகவும் இருக்கிறதே என படிக்காமல் சோம்பலில் விட்டு விட்டேன்.

    பிறகு இப்போது தான் அந்த வலப்பக்கத்தில் உயரே உள்ள குதிரைக்குக் கீழேயுள்ள “பெரிதாக்கிப்படிக்க” என்பதைப் பார்த்தேன் மூன்றாவது பெரிய “அ” வை அழுத்தினேன். அடடா... என்ன அதிசயம். எல்லாமே மிகப் பெரியதாக பளிச்சென்று படிக்க வசதியானது.

    மற்றவை பெரியதாகியும் முதல் பத்தி முதல் வார்த்தை கடுகிலிருந்த “க” மட்டும் சிகப்புக் கலரில் சிறியதாகத் தோன்றியது. கடுகு தாளிக்கப்பட்டு சிவந்திருக்குமோ என்னவோ! ;)))))

    அருமையாக இருக்குது சார், இந்தத்தங்களின் கட்டுரை. மகிழ்ச்சியாக இருந்தது. சட்டென பாதியில் நின்று விட்டது போல ஒருவித சோகம் .. கடைசியில்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது தான். தொடர்ந்து எழுதுங்கள் .... கடுகுடனான தங்கள் அனுபவங்களை.

    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. மனம் திறந்த, மெலிதான நகைச்சுவை நிரம்பிய உங்களின் பாராட்டுரைகள் எனக்கு தனிப் பலத்தை அளிக்கிறது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  23. கடுகு சாரின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பர் விமலனுக்கு.

      Delete
  24. கணேஷ் ஸார்... தொடர் நீளவில்லை... இந்த அளவு ஓகே தான். தொடரில் நல்ல ப்ளோ இருக்கு... கீப் இட் அப்.

    ReplyDelete
    Replies
    1. ஓ.கே. மகிழ்வுடன் தொடர்கிறேன் பிரபு. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube