Wednesday, July 25, 2012

உண்மையான தலைவர்

Posted by பால கணேஷ் Wednesday, July 25, 2012

மீபத்தில் ரமணி ஸார் பள்ளி நாட்களில் காமராஜருடனான அவர் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தார். நான் மிக வியக்கும் தலைவரான காமராஜரைச் சந்திக்கும் பாக்கியம் பெற்ற அவரின் அனுபவத்தைப் படித்ததில் மிக மகிழ்ந்தேன் நான். அந்தச் சமயத்தில் தான் காமராஜரைச் சந்தித்த அனுபவத்தை ந்ண்பர் ராஜேஷ்குமார் எழுதியிருந்தது என் நினைவுக்கு வந்தது. நீங்கள் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர் எழுதியதை இங்கே தருகிறேன்.

                              உண்மையான தலைவர்!

னக்குப் பிடிக்காத தமிழ் வார்த்தைகளில் ஒன்று அரசியல். கட்சித் தலைவர்களில் சிலரை மட்டும் ஓரளவு பிடித்துக் கொண்டிருந்தது- 1975 வரை. இப்போது அதுவும் இல்லை. ‘‘உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்?’’ என்று கேள்வி கேட்டால் என் பதிலுககாக 2012ம் வருஷம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்குள் ஒரு நல்ல தலைவர் உருவாகிவிட மாட்டாரா என்ன?

1968ம் வருடம். கோவை அரசினர் கல்லூரியில் நான் பி.எஸ்ஸி தேர்ட் இயர் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். அன்றைக்கு காலை 11 மணியிருக்கும். கெமிஸ்ட்ரி தியரில் க்ளாஸை முடித்துக் கொண்டு பாட்டனி ப்ராக்டிகல் லேபுக்கு நானும் என் க்ளாஸ்மேட்ஸ் ஐந்து பேரும் போய்க் கொண்டிருந்தபோது பி.ஏ. தேர்ட் இயர் படிக்கும் சண்முகசுந்தரம் வியர்வை வழியும் முகமாய் வந்தான். கல்லூரியின் மாணவர் தலைவர் தேர்தலில் இரண்டு வாரத்துக்கு முன்புதான் வெற்றி பெற்றிருந்தான். சமூகப் பணியில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். வகுட்டறையில் எப்போதாவது அதிசயமாய் இருப்பான்.

‘‘ப்ரதர்ஸ்! ஒரு நிமிஷம்..! ப்ராக்டிகல் கிளா‌ஸை கட் பண்ணிட்டு என்கூட கொஞ்சம் வர முடியுமா..?’’

‘‘எங்கே..?’’

‘‘ஒரு இடத்துக்குப் போறோம். ஒரு பத்து நிமிஷம் அங்க இருக்கறோம். உடனே வந்துடறோம். அது மோசமான இடமோ, சட்டவிரோதமான இடமே இல்லை. கண்ணியமான இடம்.’’

‘‘கண்ணியமான இடம்னா சொல்ல வேண்டியதுதானே...? எதுக்காக திரையைப் போட்டுட்டு பூஜை பண்றே?’’

‘‘ஆளுக்கு 100 ரூபாய் தர்றேன்... வர்றீங்களா?’’ சண்முகசுந்தரம் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்து இருந்த புத்தம் புது ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் காட்டினான். என்னோடு இருந்தவர்கள் வாயைப் பிளந்தார்கள். (1968ல் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அப்போது தங்கம் 1 பவுன் விலை 200 ரூபாய்)

ஆசை எங்களை காட்டிக் கொடுக்க, ஒரு தயக்கத்திற்குப் பின் நாங்கள் பரவசமாய் வாங்கிக் கொண்டோம். அவன் நடக்க ஆரம்பித்துவிட... பின்தொடர்ந்தோம். மனத் தண்டவாளத்தில் ஒரு கூட்ஸ் ரயில் ஓடிக் கொண்டிருந்தது. கல்லூரிக்கு வெளியே வந்தோம். ரோட்டோரமாய் நின்றிருந்த ஒரு வேனைக் காட்டினான் சண்முகசுந்தரம். ஏறி அமர்ந்ததும் வேன் புறப்பட்டது. பீளமேடு போகும் ரோட்டில் வேகமான பயணம். நானோ, நண்பர்களோ ஏதாவது பேச முயற்சி செய்த போதெல்லாம் தன் உதட்டில் ஆட்காட்டி விரலை வைத்து ‘உஷ்’ என்றான் சண்முகசுந்தரம். நாங்கள் பெட்டிப் பாம்பாய் அடஙகிப் போனோம்.

சரியாய் பதினைந்து நிமிஷ பயணத்துக்குப் பிறகு வேன் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜுக்குப் பக்கத்து ரோட்டில் திரும்பியது. அந்த ரோடு முழுக்கப் பரபரப்பாய் இருந்தது. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் பறந்தன. பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏதோ வாசகங்கள். படிப்பதற்குள் வேன் பறந்தது. ஒரு பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்து நிற்க, நாங்கள் இறங்கினோம்.

‘‘இப்பவாவது ‌சொல்லுடா. நாம எங்கே வந்திருக்கோம்?’’ அவன் உதட்டில் சின்னதாய் ஒரு புன்னகை. ‘‘இன்னிக்கு உங்களுக்கெல்லாம் ஒர நல்ல நாள். பெரிய அரசியல் தலைவர் காமராஜரைச் சந்திக்கப் போறீங்க!’’

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. ‘‘‘காமராஜரா..! உண்மையாவா..? எதுக்காக அவரைப் பார்க்கப் போறோம்?’’

‘‘டேய்..! நான் இப்ப காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணி செயலாளராய் இருக்கேன். கட்சியைப் பலப்படுத்த வேண்டிய யுக்திகளைப் பற்றிப் பேசறதுக்காக கட்சித் தலைவர்கள் வந்திருக்காங்க. இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணின்னு தனித் தனியாப் போய் காமராஜரைப் பார்த்துப் பேசணும். ஒவ்வொரு அணிக்கும் பத்து நிமிஷம் டயம். மாணவர் அணி சார்பா நான் பேசப் போறேன். நான் மட்டும் தனியா போய் நின்னா ஒரு மாதிரியா இருக்கும். அதான் உங்களையும் கூப்பிட்டேன்...’’

எனக்கு பயத்தில் வியர்த்தது. பங்களாவின் போர்டிகோவில் இருந்து காம்பெளண்ட் கேட் வரைக்கும் வரிசையாய் நாற்காலிகள் போடப்பட்டு, அவைகளில் கட்சிப் பிரமுகர்கள் சாய்ந்து உட்கார்ந்தபடி அரசியல் பேசிக் கொண்டிருக்க, எங்களை சண்முகசுந்தம் உள்ளே கூட்டிக் கொண்டு போனான்.

‌தொந்தி வளர்த்து குள்ளமாய் இருந்த ஒர பிரமுகர் எதிர்ப்பட்டார். பெருந்தலைவரோடு யாரோ ஒரு தொழிலதிபர் பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்லி எங்களைக் காத்திருக்கச் சொன்னார். காத்துக் கிடந்தோம். ஒரு பெரிய தலைவரைப் பக்கத்தில் இருந்து பார்ககப் போகிற ஆவல் எனக்குள்ளே கன்றுக்குட்டியாய் முட்டிக் கொண்டிருந்தது.

சரியாய் ஒரு மணி நேரம். அந்தத் தொழிலதிபர் வெளியே வந்ததும் நாங்கள் உள்ளே போனோம். தொளதொளப்பான வெள்ளை நிற கதர் சர்ட்டிலும், வேஷ்டியிலும் அந்த நெடிய கருப்பு மனிதர் சோபாவில் கம்பீரமாய்த் தெரிந்தார். நாங்கள் கும்பிட்டோம். ‘‘ஐயா.. வணக்கம்!’’

காமராஜர் எங்களை ஏறிட்டார். பிறகு அந்தக் குள்ளமான மனிதரைப் பார்த்து, ‘‘யார் இவங்க?’’ என்று கேட்டார். ‘‘அய்யா... இவங்க மாணவர் அணி..!’’ என்றார் அவர். காமராஜரின் முகம் லேசாய் மாறியது.‘‘மாணவர் அணியா? இவங்க எதுக்கு இங்கே வந்தாங்க?’’

‘‘அய்யா... நம்ம காங்கிரஸ் கட்சியைக் கல்லூரி லெவலில் இருந்தே பிரபலப்படுத்த வேண்டி...’’

‘‘நான்சென்ஸ்!’’ என்றார் காமராஜர். பிறகு எங்களைக் கோபமாகப் பார்த்து, ‘‘இன்னிக்கு என்ன கிழமை?’’ என்று கேட்டார்.

‘‘திங்கட் கிழமைய்யா...’’

‘‘காலேஜ் இருககா..?’’

‘‘இருக்கு அய்யா...’’

‘‘காலேஜ் இருக்கும்போது படிக்காம இங்க எதுக்காக வரணும்னேன்? போங்க, போய் ஒழுங்காப் படிங்க. படிச்சாத்தான் ஒரு வேலை கிடைக்கும். வேலை கெடைச்சாத்தான் பெத்தவங்களைக் காப்பாத்த முடியும். இந்த காங்கிரஸ் கட்சியை எப்படி பலப்படு்தறதுன்னு எனக்குத் தெரியும்னேன். போங்க... மொதல்ல இங்கருந்து...’’

காமராஜர் ‌போட்ட கத்தலில் நாங்கள் எல்லாம் அரண்டு போய் வெளியே வந்தோம். சண்முகசுந்தரத்தின் முகத்தில் சுரத்தே இல்லை. எங்களுடைய கைகளைப் பற்றிக் கொண்டு தொண்டையடைக்கச் சொன்னான். ‘‘ஸாரிடா! காமராஜர் இப்படிப் பேசுவார்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலைடா...’’

நான் சொன்னேன்: ‘‘ஒரு உண்மையான தலைவர் இப்படித்தான்டா பேசணும்...!’’ என்று!

==============================================

அடுத்த பதிவுக்கு ஒரு சின்ன(?) மு்‌ன்னோட்டம்:

                                          பொருட்காட்சியில் சரிதா!

க்ஸிபிஷன் கிரவுண்டின் வாசலில் நிறுத்திவிட்டு இறங்கியதும் பார்த்தால்... சத்தியமாக என் கார் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

‘‘இங்க பாரு சரி... நீங்க படுத்தின பாட்டுல பொறுக்க முடியாம நம்ம காரே கண்ணீர் விட்டு அழுவுது பாரு...’’ என்றேன்.

‘‘ஹய்யோ... ஹய்யோ... பெட்ரோல் டாங்க்ல ஏதோ லீக் ‌போலருக்கு. பெட்ரோல் ஒழுகிட்டிருக்குங்க. ஸ்மெல்கூடவா தெரியலை?’’ என்று தலையில் அடித்துக் கொண்டாள் சரிதா. ‘‘போய் முதல்ல அதை சரி பண்ணிட்டு வாங்க. நாங்க எக்ஸிபிஷன்ல சுத்திட்டிருக்கோம். வந்து ஜாயின் பண்ணிக்குங்க...’’ என்று விட்டு அந்தக் கும்பலுடன் உள்ளே போய் விட்டாள்.

==============================================

47 comments:

  1. அவரு தலைவர் - தலைவருக்கு எடுத்துகாட்டு இந்தியாவிலேயே இவர் ஒருத்தர்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே... தலைவருக்கு உதாரண புருஷர் அவரைவிட வேறு யார்? முதல் நபராய் வந்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. ஹா!ஹா!ஹா! இல்ல இப்போ காங்கிரஸ் கட்சிய எப்டியெல்லாம் பலப்படுத்துராங்கனு நினைச்சு பாத்தேன்,சிப்பு வந்துடுச்சு சிப்பு

    ReplyDelete
    Replies
    1. சிப்பு மட்டுமா கோகுல்... இன்றைய காங்கிரஸை நினைத்தால் அழுகையும்ல சேர்ந்து வருது. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  3. இம்மாதிரி தலைவர்கள் எல்லாம் இங்கே இருந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தியதற்கு எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்களுக்கும் அதை பதிவில் வெளியிட்ட உங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  4. He was the real leader; others are reel leaders in giving promises and in building up their images.

    ReplyDelete
  5. இந்தக் காலகட்டத்துக்கு யாராச்சும் இப்டி ஒரு தலைவர் வருவாங்களா? இந்த விசயத்தை நாங்கள் அறியத் தந்ததற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. இந்தக் காலகட்டத்துக்கு யாராச்சும் இப்டி ஒரு தலைவர் வருவாங்களா? இந்த விசயத்தை நாங்கள் அறியத் தந்ததற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. காமராசர் சொன்னதும் சரி, நீங்கள் சொன்னதும் சரி..
    இரண்டுமே "அப்படித் தான் இருக்கணும் (பேசணும்)" நன்றி சார் ! (த.ம. 3)

    ReplyDelete
  8. /ஒரு உண்மையான தலைவர் இப்படித்தான்டா பேசணும்.../

    நீங்கள் சொன்னதே சரி.

    ReplyDelete
  9. அட ஆமானேன் அவரு பெரிய தலைவருன்னேன், எனக்கும் அவர ரொம்ப பிடிகும்னேன், விருதுபட்டி நெல்லை கூட முன்னாடி இருந்தததால அவரு எங்கூரு காரரும்பேன், அவர பத்தி என்கிட்டே ஒரு சுவாரசிய தகவல் இருக்குன்னேன்... சொல்லட்டும்மா... இங்கயே சொல்லிட்ட அப்பா நா எப்படி பதிவு போடுறது

    சரிதாவுக்கான முன்னோட்டமே அருமை வாத்தியாரே

    ReplyDelete
  10. நான் சொன்னேன்: ‘‘ஒரு உண்மையான தலைவர் இப்படித்தான்டா பேசணும்...!’’ என்று!

    சரியா சொல்லிட்டிங்க. இது போன்ற பகிர்வுகளே நல்ல தலைவர்களை இளையதலைமுறைக்கு நினைவுபடுத்தும் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. காமராஜர் உண்மையில் வியப்பான மனிதர் தான் (TM 6)

    ReplyDelete
  12. -அவர்தான் தலைவர். இப்போது அப்படியெல்லாம் நினைத்தாவது பார்க்க முடியுமா?
    -அடுத்த பதிவுக்கு முன்னோட்டம் எல்லாம் கொடுத்து அசத்தறீங்களே....!

    ReplyDelete
  13. 1952 தேர்தலில் திரு காமராஜ் அவர்களுக்காகவும்,திரு எஸ்.ஆர் நாயுடு அவர்களுக்காகவும் பிராசாரம் செய்த சிறுவன் நான்.வெற்றி ஊர்வலத்தில் திரு எஸ்.ஆர்.நாயுடு அவர்களுடன் காரில் அமர்ந்து செல்லும் பாக்கியம் கிடைத்தது. காமராஜ் அவர்களைப் பார்த்ததோடு சரி.
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  14. நூற்றாண்டுகள் தாண்டியும் வழும் தகுதியுடைய ஒரே தமிழனத்தலைவர்...

    அழகிய பதிவு...

    ReplyDelete
  15. இதையெல்லாம் படிக்க படிக்க
    இன்றைய த்லைவர்களைப் பற்றித் தெரிய தெரிய
    மனம் சோர்ந்து போய்விடுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தன் வாரிசிடம் கட்சியை ஒப்படைகாத அவரைத் தலைவர் என்று கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  17. தலைவர் என்னா இப்படித்தான் இருக்கனும்.....

    ReplyDelete
  18. தலைவர்கள் இப்பல்லாம் விற்பனைக்கு !

    ReplyDelete
  19. காலத்தால் அழியாத காவியத்தலைவன் காமராஜர்.....!


    இன்னைக்கும் இருக்கானுங்களே.......இப்போ இவனுகளுக்கு காமராஜர்னாலே யாருன்னு தெரியாது....!

    ReplyDelete
  20. அற்புதமான பதிவு.நன்றி கணேஷ்..
    2-10-1975 முதல்,இன்றுவரை, இந்தியா,தலைவர் ஒருவருமின்றி தத்தளித்துகொண்டிருப்பது நிதர்சனம்.

    ReplyDelete
  21. டெல்லி அரசியலில் தமிழனுக்கு நீங்காத இடம் பிடித்து கொடுத்தவர்ன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய இந்த பிறந்த நாளில், வச்சந்த டிவில காமராஜர் பற்றிய குறும்படம் போட்டாங்க பார்த்தேன். அவங்கம்மா வீட்டில் ஒரு குழாய் இணைப்புக்காக, பஞ்சாயத்து தலைவரிடம் பேசும் காட்சியில் ஊருல இருக்குற எல்லா அம்மாக்களும்தான் வெயிலில் தண்ணீர் பிடிக்குறாங்க. அவங்களுக்குலாம் இலவசமா குழாய் இணைப்பு போட்டு குடுக்க முடியுமா? என் அம்மா மட்டும் என்ன ஸ்பெஷல்ன்னு பஞ்சாயத்து தலைவரை கடிஞ்சுக்குறதா ஒரு சீன்.

    ம்ம்ம்ம்ம் இப்போ அவர் ஸ்தானத்த்ல இருக்குறவங்களை நினைச்சு பார்த்தா ஆயாசமே மிஞ்சுதுங்கண்ணா.

    ReplyDelete
  22. தலைவர் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு....

    இனிய பகிர்வு. அடுத்த பதிவுக்கான முன்னோட்டமே கலக்கல்... காத்திருக்கிறேன்.

    த.ம. 11

    ReplyDelete
  23. நல்ல ஒரு எளிமையான தலைவர் வரலாற்றுக்குறிப்பு!

    ReplyDelete
  24. ஏன் அவரை தோற்கடித்துவிட்டு கழகத்தை ஆட்சியில் உட்கார்த்திவிட்டு இன்று எல்லோரும் காமராஜரை நினைக்கிறோம்? நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டோம். இன்று இரண்டு கழகங்களும் ஓட்டுப் போடும் மக்களில் பெரும்பான்மையை ஆளுக்குப் பாதியாய் பிரித்துக் கொண்டு மூளை மழுங்கச் செய்து விட்டார்கள். தலைவர்கள் என்ன செய்தாலும் தொண்டர்கள் வெறியாய் அவர்களுக்கே ஓட்டுப் போடுகிறார்கள். சிந்திக்கும் சிறிய சதவிகிதத்தினர் இங்கும் அங்கும் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு ஆட்சியாளரை மாற்றுகிறார்கள் - ஆட்சியின் தன்மையை அல்ல! விதி! - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வரிகள். 1965 ஆம் ஆண்டு இந்தி் எதிர்ப்பில் கலந்து கொண்டு ஓர் ஆண்டு கல்வியை வீணடித்தவன் நான். கழகத்தவர்களின் உண்மை முகம் தெரியாமல் அவர்களின் பேச்சில் மயங்கி தமிழகமக்கள் மோசம் போய்விட்டனர். அதிலிருந்து மீளவும் தெரியவில்லை.
      ஆனால் இப்போதுள்ள சோனியா காங்கிரஸ் அன்றிருந்த காமராஜ் காங்கிரஸ் அல்ல.

      Delete
    2. ஹய்யோ...ஹய்யோ சிந்திக்கிறதப்பத்திலாம் ஜெகந்நாதம் சொல்லுறார், யாராவது மாற்றுக்கேள்விக்கேட்டாலும் அவதூறா கிண்டல் செய்வார்,பிரபலமானப்பதிவர்னா அவர்கள் மனமகிழ்ச்சிக்கு கோரஸ் போடுவார் ,இங்கே மக்களே சிந்தியுங்கள்னு சொல்லுறார்.

      ----

      கணேஷ்,

      அப்போது திமுக மாணவர்களை உசுப்ப்பிவிட்டு கட்சியை வளர்த்துக்கொண்டிருந்த காலம்,அது தெரிந்தும் காமராஜர் அப்படி சொல்லி இருக்கிறார் என்றால், உண்மையில் பிழைக்க தெரியாத அரசியல் தலைவர் தான்.

      இன்றும் அண்ணாமலை பல்கலைப்போனால் பார்க்கலாம் எஞ்சினியரிங் காலேஜ் அருகே நான்முனை சாலையில் உதயகுமார் சிலை இருக்கும், திமுக மாணவர்களை பயன்ப்படுத்தி அரசியல் வளர்த்ததின் சாட்சியாக.

      Delete
  25. தலைவர் என்ற சொல்லுக்கு தகுதியானவர்..
    தலைமைப் பண்புகள் நிரம்பப் பெற்றவர்...
    எத்தனையோ வார்த்தைகளால் கர்ம வீரரை
    பாராட்டினாலும் அதற்கெல்லாம் மிஞ்சி
    தெரியக் கூடியவர்...

    அருமையான தலைவரின் வாழ்வு நிகழ்வொன்றை
    பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
  26. பெருந்தலைவர் இவரைப்போல் இன்னொருவர் நமக்குக் கிடைப்பாரா?

    ஐயா.... நாட்டைக் கெடுத்துட்டாங்க ஐயா.......

    ReplyDelete
  27. உண்மையிலேயே அவர் பெருந்தலைவர் தான்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  28. நமக்கு அவர் பெருந்தலைவர் ஆனால் இப்போது உள்ள தலைவர்களின் மனதில் பிழைக்க தெரியாத தலைவர்

    ReplyDelete
  29. நல்லதோர் அனுபவப் பகிர்வு.

    ReplyDelete
  30. உண்மையான தலைவர் உண்மையாகவே இருந்தார். இங்குள்ள தலைவர்கள் பாடம் படிக்கட்டும் உதாரணங்கள் மூலம்.மிக்க நன்றி.

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. விதிசமைக்கும் இறைவனும் ஏழைவாழ்வில்
    சதிசெய்வதுண்டு!
    சகலமும் அவர்வாழ்வென்று தமையீந்த
    பெருமான் பெருந்தலைவர் கர்மவீரர்!
    மீண்டும் புவிவந்தால் ஏற்போமா-என்னறிவு
    மீண்டும் தோற்கடிப்போம் என்கிறது!
    சாபவரம் பெற்றவராய்த் தமிழினம்-நமக்கு
    நல்லவைக் கண்ணில் தெரிவதில்லை!
    நான்மாறி எண்ணம் நாமாகி நாடுவாழவாழும்
    தலைவர்கள் நம்மிடையில்லை!
    வருவாரோ வாழ்வு தருவாரோ..ஆதங்கத்துடன்
    காத்திருப்போம் கனவு நனவாக!

    ReplyDelete
  33. அதுதான் கர்மவீர்ர்.அடுத்த பதிவுக்கான முன்னோட்டம் ஆவலைத்தூண்டுகிறது.

    ReplyDelete
  34. காமராஜர் வாழ்ந்த காலத்தில், அவரை மதிக்காமல், தூற்றி தோற்கடித்த பாவத்தின் பலனை இப்போது அனுபவிக்கிறோம். இன்னும் அனுபவிப்போம்.

    ReplyDelete
  35. இந்த வாரம் முழுக்கவே தலைவர் காமராஜரைப் பற்றிய நல்ல விசயங்களை படித்தும் பகிர்ந்தும் வருகிறேன்! இதுவும் சிறந்த தகவல்! சிறப்பான தலைவர்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  36. தலைவர் என்ற சொல்லுக்கு தகுதியானவர்...நல்லபகிர்வு...

    ReplyDelete
  37. Around the same period that you met the great Kamaraj, I too had the privilege to hav seen him in close quarters (if I recall correctly, in Simpsons' Chairman's house). I think he was out of power then. What struck me was his simplicity. He was the last statesman of Tamil Nadu.

    ReplyDelete
  38. இந்த பதிவை-
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

    வருகை தாருங்கள்-
    அய்யா!

    தலைப்பு; மூத்தவர்கள்,,

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube