Friday, January 25, 2013

‘முகில்’ கிளப்பிய ‘திகில்’!

Posted by பால கணேஷ் Friday, January 25, 2013

ந்த ஒரு புத்தகத்தையும் முழுதாகப் படிக்காமல் அதுகுறித்து அறிமுகம் தருவது எனக்கு வழக்கமில்லை. இந்தமுறை நான் பாதியளவு படித்திருக்கும் இந்த ‘வெளிச்சத்தின் நிறம் கறுப்பு’ புத்தகம் பற்றிச் சொல்கிறேன் என்றால் புத்தகத்தின் சுவாரஸ்யத்தை உங்களால் உணர முடியும். புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இந்த மெகாசைஸ் புத்தகத்தை முதலில் படிக்க ஆரம்பித்ததன் காரணம்...

 1) நூலாசிரியர் ‘முகில்’ நான் கிழக்குப் பதிப்பகத்தில் வேலை செய்தபோது அங்கு உதவியாசிரியராக இருந்தவர். 2) நான் மிக ரசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். 3) அவர் எதுபற்றி எழுதினாலும் அதில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிராது -ஆகியவை தான். நூலாசிரியர் முகில் இப்போது முழுநேர எழுத்தாளர். புத்தகம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். இவர் எழுதிய சந்திரபாபு பற்றிய நூல், முகலாயர்கள், செங்கிஸ்கான், அகம்புறம் அந்தப்புரம், கிளியோபாட்ரா என்று பல சுவாரஸ்யமான  நூல்களைப் பலர் படித்து அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இப்போது அறிக.

பர்முடா முக்கோணத்தின் மேல் மிதந்த கப்பல்களும், பறந்த விமானங்களும் ஏன் காணாமல் ‌போயின என்பதை ஆராய்ச்சி செய்து பல புத்தகங்கள் வந்துவிட்டாலும் தீராத ஒரு புதிராக நீடிக்கிறது அது. அதைப் போல இந்த பூமிப் பந்தின் மேல் நிகழும் பல விஷயங்களின் பின்னே மறைந்துறையும் மர்மங்கள் விடுவிக்கப்படாதவைகளாகவே இருக்கின்றன. அத்தகைய இருட்டான பல கேஸ்களை தன் சுவாரஸ்யமான எழுத்து நடையில் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் முகில். நான் சொல்லிப் புரிய வைப்பதைவிட, முன்னுரையில் முகில் சொல்லியிருப்பதன் ஒரு பகுதியை இங்கே தருவது ஏற்புடையதாயிருக்கும் :

‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடை தெரியாத மர்மங்கள் காலந்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. இந்தப் புததகம் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது சற்றுக் கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மீகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பைகேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நாம் சுற்றிவரப் போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப்போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமலைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக, அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டுகிற மநதிரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம். பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகுவைத்துவிட்டு இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தேவையில்லை. உலகில் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தப் புத்தகம். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். எனில் அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால் என் பதில் - அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!


என்ன... அப்படியென்ன விடைகாண முடியாத மர்மங்களின் மேல் முகில் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் என்று அறியும் சுவாரஸ்யம் எழுகிறது தானே... நூலின் முடிவில் இதற்கு உதவிய புத்தகங்கள், ஆவணப் படங்கள், இணைய தளங்கள் என்று முகில் தந்திருக்கும் லிஸ்ட் மட்டுமே ஏழு பக்கங்ள் நீள்கிறது. அத்தனை ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதில் பிரமித்துப் போனேன். நான் ரசித்த ஒரு சுவாரஸ்ய கட்டுரையின் சில பகுதிகள் உங்களின் ஒரு சோறு பதத்திற்காய் இங்கே:

                                              நாய்களின் தற்‌கொலை முனை

தை நீங்கள் படிக்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில் அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்து கொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு தொடருங்கள். ஒரு நாய் எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடிய சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்தப்போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்து கொள்ளாது என்கிறீர்களா... உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்துவரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு- அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு வாருங்கள்.

-இப்படி நம்மை அழைத்துச் சென்று, தோ்ட்டத்தின் அழகை வர்ணித்தபின்.. கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர தடிமனான கைப்பிடிச் சுவர், சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதான அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். ஒரு நாய் தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றி, முன்னங்கால்களை சுவர்மேல் வைத்துக் கொண்டு கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களை உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலையும் செய்து கொள்ளலாம். அக்டோபர் 2005ல் அப்படித்தான் குதித்து விட்டது பென்..

என்று மர்மத்தை ஆரம்பித்து, பென்னின் உரிமையாளரிடம் வரும் நண்பர் தன் நாய் அதேபோல் இறந்ததைச் சொல்லும் போது வியப்பை ஏற்படு்ததி, அடுத்தடுத்து தற்செயலாகவும், சோதனைக்காகவும் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட நாய்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கிறார். அங்கே மட்டும் நாய்கள் எல்லாம் ஏன் குதித்து உயிர் விட வேண்டும் என்று கண்டறிய ஆன்மீகத்தின் வழியிலும், விஞ்ஞான ரீதியாகவும் நடந்த பல ஆராய்ச்சிகளை விரிவாக விவரித்திரு்க்கிறார் முகில். முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்....’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்திற்குச் சென்று....

அலுவலகப் பணி, வெளி வேலைகள் இவற்றுக்கிடையில் கிடைக்கும் சமயங்களையெல்லாம் ‘என்னை உடனே படித்துமுடி’ என்று திருடிக் கொண்டு தொல்லை தந்து கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம். இத்தனைக்கு மேலும் விரிவாக நான் என்னத்தைச் சொல்ல...? ‘தமிழக அரசியல்’ இதழில் ஏறத்தாழ 35 வாரங்கள் முகில் எழுதிய இந்தத் தொடரை 320 பக்கங்களில், 200 ரூபாய் விலையில், 10/2 (8/2), போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை-17ல் இருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். (தொ.பே.2423 2771, 65279654).

=====================================

ன் ‘சரிதாயணம்’ நூலுக்கு இந்தப் பதிவில் அழகான அறிமுகம் தந்த வெங்கட் நாகராஜ், இந்தப் பதிவின் மூலம் அழகான ஒரு திறனாய்வைச் செய்த சீனு, இந்தப் பதிவின் மூலம் மனமகிழும் மதிப்புரை தந்த ஸ்ரவாணி, இந்தப் பதிவின் மூலம் என்னைப் பெருமைப்படுத்திய ‘எங்கள் ப்ளாக்’ மற்றும் இந்தப் பதிவின் மூலம் இனி படிக்கப் போவதாகச் சொன்ன ஹாரி ஆகிய என் நட்புகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. இன்னும் இந்தப் புத்தகம் பற்றி எழுதவிருக்கும் உங்களில் பலருக்கும், இவற்றையெல்லாம் படி்த்து எனக்கு தெம்பூட்டும் கருத்தைத் தந்த அனைத்து நல்இதயங்களுக்கும் மனநெகிழ்வுடன் என் நன்றி!

30 comments:

  1. படிக்க படிக்க ஓர் ஈர்ப்பு.. வெளிச்சத்தின் நிறம் கருப்பு சூப்பரா இருக்கும் போலிருக்கே..!

    சார் உங்க புக் "சரிதாயணம்" கோவையில் கிடைக்குமா??

    ReplyDelete
    Replies
    1. கோவை மற்றும் பல ஊர்களில் கிடைக்க இனிதான் ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு அனுப்பியுள்ளேன். ஸ்டால் எண் இன்று மாலை தெரிவிக்கிறேன். மிக்க நன்றி.

      Delete
  2. மர்மங்களும் அவை அவிழ்ந்த முடிச்சுகள் பற்றிய திகில்களும் அருமை.
    ஆனால் நம் ரசனை வேறு என்பதால் வேறு புத்தகங்கள் படிக்க உள்ளன.
    உங்கள் நூல் பற்றிய அறிமுகம் எம் கடமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  3. சுவாரசியமான புத்தகத்தை பற்றி தகவல் கொடுத்திருக்கீங்க.நீங்க எழுதியிருப்பதை படித்த பொழுது அந்த புத்தகத்தை உடனடியாக படிக்க வேண்டும் என ஆர்வம் எழுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் இந்த சுவாரஸ்ய புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் எழுதினேன். உங்கள் கருத்து தந்த மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  4. சுவாரஸ்யமானதொரு புத்தகத்தைப் பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நானும் படிக்க வேண்டும்! படித்தபின் தாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் தருகிறேன் ஐயா. உங்களின் படிக்கும் ஆர்வத்துக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. அந்தப் புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது உங்கள் பதிவு

    ReplyDelete
    Replies
    1. படியுங்கள், ரசியுங்கள் முரளி. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  7. நிச்சயம் சுவரசியதிர்க்கு பஞ்சம் இருக்காது போல... வாங்கிய புத்தகங்களை முடித்தவுடன் என் லிஸ்டில் இதற்கு தான் முதலிடம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சீனு. என் இதயம் நிறை நன்றி உனக்கு!

      Delete
  8. என்னை உடனே படித்துமுடி’ என்று திருடிக் கொண்டு தொல்லை தந்து கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

    அருமையான பகிர்வுகள்... பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. எழுத்தாளர் முகில் அலுப்பு தட்டாமல் நன்றாக எழுதுவார். அவருடைய ”வெளிச்சத்தின் நிறம் கருப்பு” என்ற நூலையும் உங்களது “சரிதாயணம்” என்ற நூலையும் வாங்கி (விலைக்குத்தான்) படித்துப் பார்க்கிறேன்.




    ReplyDelete
    Replies
    1. படித்து ரசிக்கிறேன் என்று சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  10. சுவாரஸ்யமான புத்தக அறிமுகம்! படிக்க வேண்டிய படிக்க தூண்டும் புத்தகம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  11. இந்த புத்தகத்தைப் படித்தால் பல மர்மங்கள் பற்றி அறிய முடியும் போலிருக்கிறதே!

    மர்மங்கள் மர்மங்களாகவே இருந்தால் தான் சுவை. அதனால் தான் நீங்களும் இந்தப் புத்தகத்தை பாதி படித்துவிட்டு, எங்களுக்கு அதில் பாதி சொல்லிவிட்டு மேலே என்ன நடந்திருக்கும் என்று மர்மமாகவே யோசிக்க விட்டுவிட்டீர்களோ?

    நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் தான்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... நிறைய சொல்லிட்டா படிக்கறப்ப கிடைக்கற த்ரில் கெட்டுடும். அதான் மர்மத்தை தொட்டுக் காட்டிட்டு விட்டுட்டேன் நிச்சயம் படிச்சு ரசியுங்கம்மா. மிக்க நன்றி.

      Delete
  12. புத்தக முகப்பைப் பார்த்தால் பி தி சாமி எழுதிய 'நரபலி இரவு' புத்தகம் நினைவுக்கு வ்சருகிறது!

    அறிமுகத்தைப் படித்துக் கொள்வோம். வாங்கக் கூடாது என்ற எண்ணத்தை உடைத்து விட்டீர்கள். டயல் ஃபார் புக்ஸ் நம்பர் எங்கே.... செக் செய்துடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. டயல் ஃபார் புக்ஸ் எனக்குக் கூட சொன்னதும் சில புத்தகங்களை தேடிவாங்கித் தந்தார்கள். நல்ல ஏற்பாடு அது! புத்தகத்தைப் படிக்க இருக்கிறீர்கள் என்பதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. மர்மங்கள் பற்றிய நூலுக்கு சிறப்பான அறிமுகம்!

    ReplyDelete
    Replies
    1. நூ்ல் அறிமுகத்தை ரசித்த கு்ட்டனுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. நல்ல ஒரு புத்தகத்தை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  15. எனக்கும் படிக்க ஆசை வந்திடுச்சே!! ரொம்ப நல்ல இருக்கு சார் புத்தகம்... நீங்க படிச்சதும்.. எனக்கு அனுப்பிடுங்க....

    ReplyDelete
  16. சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் போல் தெரிகிறது. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  17. நானும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கலாம்னு யோசிச்சேன். விலையைப் பார்த்ததும் ஜெர்க்காகி திட்டத்தை ஒத்திப் போட்டுட்டேன். உங்க பதிவைப் படிச்சதும் அடுத்த வர்ற ஈரோடு கண்காட்சியில் வாங்கிரணும்னு முடிவு பண்ணிட்டேன்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube