Sunday, January 22, 2012

ஞாபக நதிக் கரையினிலே...

Posted by பால கணேஷ் Sunday, January 22, 2012
நேரத்தின் மதிப்பை உணராத பெரும்பாலனவர்களை நான் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை என்னுடைய நேரத்திற்குக் கொடுக்கும் மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்புக் கொடுப்பேன்.

 ‘‘இதோ அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்’’ என்று போன் செய்யும் என் நண்பன் கால் மணி நேரம் கழிந்து வந்து சேர்கிறான். தாமதமாய் வந்துவிட்டோமே, அடுத்தவனின் நேரத்தை வீணடித்து விட்டோமே என்று எந்த உணர்வுமின்றி இருக்கிறான். ’அஞ்சு நிமிஷம்’ என்பது பலரின் அகராதியில் ‘கால் மணி நேரம்’ அல்லது ‘அரை மணி நேரம்’ என்று அர்த்தமாகிறது. இதுகுறித்து எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி இவர்கள் இருப்பதுதான் இன்னும் கொடுமை.

இன்னொரு நண்பரின் இப்படிச் செய்வார். அவரும் நானும் வடபழனி சந்திப்பில் சிக்னலில் நின்றிருக்கும் போது போன் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘‘அசோக் பில்லர் வந்துட்டோம் பிரதர். அங்கயே இரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறோம்’’ என்பார் ஈக்காடு தாங்கலில் காத்திருக்கும் நண்பரிடம். வடபழனி சிக்னலிலிருந்து ‘அஞ்சு’ நிமிஷத்தில் ஈக்காடுதாங்கலை அடைவது ஹெலிகாப்டரில் போனால்தான் சாத்தியம்!  ஏனிப்படி அனாவசியமாகப் பொய் சொல்லி அந்த நண்பரைக் காத்திருக்க வைத்து அவமதிக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.

இதுபற்றி என் ஆதங்கத்தை, கோபத்தை என் நண்பன் ஒருவனிடம் வெளிக்காட்டியபோது அவன் சொன்னான். ‘‘ஆமாம். அஞ்சு நிமிஷத்துல வர்றேன்னு சொல்லிட்டு பத்து நிமிஷத்துல வந்நதுக்கு கோவிச்சுக்றியே... அந்த அஞ்சு நிமிஷத்துல என்ன சாதிச்சுடப் போறியாம்?’’ கடுங்கோபத்துடன் அவனைத் திட்டிவிட்டுக் கிளம்பி விட்டேன். இந்த அலட்சியம்தான் நமக்கெல்லாம் பெரும் எதிரி. ஐந்து நிமிடத்தில் முடிக்கக் கூடிய காரியங்கள் எதுவும் எனக்கு இருக்காதா? அதைத் தீர்மானிக்க அவன் யார்? மற்றவர்களின் நேரத்தை மதிக்காதவனால் தன்னுடைய நேரத்துக்கு மதிப்புத்தர இயலாது. நேரத்துக்கு மதிப்புத் தராதவனால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது.

நான் யாரையாவது சந்திக்கப் போகிறேன் என்றால் அவர் இருக்கும் ஏரியாவை அடைவதற்கு டிராஃபிக்கில் எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதைக் கணக்கிட்டு ஒருவேளை எதிர்பாராத டிராஃபிக் ஜாம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதையும் கருத்தில் கொண்டு, பத்து நிமிடம் கூடுதலாக ஒதுக்கித்தான் நேரம் ஃபிக்ஸ் பண்ணுவேன். சொன்ன நேரத்திற்கு சரியாக வருவதாலும், தேவையற்ற அரட்டையைத் தவிர்த்து பேச வேண்டிய விஷயங்களைப் பேசுவதாலும் மற்றவர்களிடம் மதிப்புக் கூடுமென்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். நீங்களனைவரும் இதுபோல நேரத்திற்கு மதிப்புத் தர வேண்டுமென்பது என் ஆசை.

ஆசைக்கு அளவேதும் உண்டோ? சைக்கிளில் செல்கையில் பைக்கில் செல்ல ஆசை. பைக்கில் செல்கையில் அருகில் கார் ஓட்டுபவனைப் பார்த்து ஆசை. கார் வாங்கியதும், விமானத்தில் பறப்பதைப் பற்றி ஆசை. விமானத்தில் பறக்கும் வசதியை அடைந்து பறக்கும் போதோ, ‘ஒரு காலத்துல நிம்மதியா காலார நடந்து போன சுகம் வருமா?’ என்று அதை நினைத்து ஆசை. ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். தலையைப் பிச்சுக்கலாம் போல ஒரே குழப்பமாயிருக்கு கடவுளே!

கடவுளை வேண்டினானாம் ஒருத்தன்: ‘‘பசி தாங்க முடியலையே இறைவா. இன்னிக்கு நான் நடந்து போற வழியில எதாவது பணம் கீழே கிடந்து எனக்குக் கிடைககற மாதிரி பண்ணு. எவ்வளவு பணம் கிடைச்சாலும் அதுல பாதிய உன் உண்டியல்ல போட்டுடறேன்...’’ தரையைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றவனின் கண்களுக்கு சற்று தூரத்தில் 500 ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்து கிடப்பது கண்ணில் பட்டது. உடனே அதைப் பாய்ந்து எடுத்த அவன் மகிழ்ச்சியுடன் சிரித்தான். சற்று யோசித்தான். பின் வானத்தை நோக்கி கை நீட்டிச் சொன்னான்: ‘‘கடவுளே... உன்னோட 500 ரூபாயை எடுத்துக்கிட்டு என்னோட பங்கை கண்ணுல காட்டினதுக்கு ரொம்ப நன்றி!’’. இப்படிச் சுயநலமாக நேர்மையற்று சிந்திப்பதுதான் மனிதனின் மனம்.

மனம் என்பது மனித உடலில் எங்கே இருக்கிறது? அலுவலகம் போ, வீட்டுககு வா, இவன் உன் நண்பன் என எல்லாவற்றையும் அறிவுறுத்துவது மூளை. அதிலிருந்துதான் எண்ணங்கள் பிறக்கின்றன. எனில் அதுதான் மனமா? பின்னே ‘நெஞ்சைத் தொட்டுச் ‌சொல்லு’ என்று மனம் என்கிற வஸ்து அங்கிருப்பது போல் பேசுகிறோமே... அது ஏன்?  அழுவதும், சிரிப்பதும், பாடுவதும், படம் வரைவதும் எல்லாம் மனதின் செயலா அன்றி மூளையின் செயலா? மூளை எனில் இனி ‘மனச்சாட்சியைக் கேட்டுப் பாரு’ என்று சொல்வதற்குப் பதில் ‘மூளையக் கேட்டுப் பாரு’ என்று சொல்ல வேண்டுமோ? என்ன ஒரு இடியாப்பக் குழப்பம்!

இடியாப்பம்தான் எனக்கு மிகவும் பிடித்த டிபன். ‘சேவை’ என்று எங்கள் வீட்டில் அழைக்கப்படும் அதை தேங்காய் சேவை, எலுமிச்சம் சேவை, வெல்ல எள்ளுப்பொடி சேவை என்று என் அம்மா பல வெரைட்டிகளில் செய்து தருவார்கள். ஆசையாக அடிககடி செய்யச் சொல்லிச் சாப்பிடுவேன். ‘அன்னையோடு அறுசுவை போம்’ என்று சொன்னவன் எவனோ அவன் வாயில் சர்க்கரை போட வேண்டும். மனைவி வநததும் அது போச்சு. இவள் சமையலில் பல விஷயங்களை நன்றாகவே செய்வாள் என்றாலும் இந்த சேவை விஷயத்தில் வீக். ‘‘சரி, தா... சாப்பிட்டு வைக்கிறேன்’’ என்கிற மாதிரிதான் இருக்கும் என்னவள் செய்வது! வாட் டு டூ? எல்லாம் விதி!

விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்கிறார்களே... உங்களுக்கு அதில் உடன்பாடு உண்டா? கல் தடுககினால் நீங்கள் கீழே விழுவீர்கள் என்பது பெளதீக விதி. இன்ன கரைசலை இன்ன கரைசலுடன் சேர்த்தால் இன்ன செயல் நிகழும் என்பது ரசாயன விதி. இதுபோன்ற விதிகளின்மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. தலையில் எழுதப்பட்டதாகச் சொல்லும் விதி மேல்தான் நம்பிக்கை இல்லை. ‘விதிப்படிதான் நடக்கும்’ என்று அதன்மேல் பழியைப் போட்டு சோம்பி உட்கார்ந்து விடுவது தவறு என்பது என் எண்ணம்.

எண்ணம் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும் என்பது நிஜம்தானா? ‘அன்பைக் கொடுத்து, அன்பைப் பெற்று மகிழ்ச்சியாய் வாழத்தான் இந்தப் பிறவி’ என்பது என் கருத்து. அப்படித்தான் வாழ முயற்சித்து வருக்கிறேன். நல்லெண்ணங்களுடன், பாசிட்டிவ் திங்க்கிங் உடன் இருந்தால் மற்றவர்களுக்கும் அந்த எண்ண அலைகள் பரவும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். நிஜமா என்பதுதான் தெரியவில்லை. டிவியில் சீரியல்களைப் பார்த்தால் மனநலம் பாதிக்கும் என்பதிலிருந்து இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டல்லவா வைத்திருக்கிறது இந்த டிவி.

டிவி பார்ப்பதில் இன்றைய குழந்தைகள் கவனம் திரும்பியதால் பல நல்ல விளையாட்டுக்களை அவர்கள் இழந்து விட்டார்கள். படிப்பு, டியூஷன், அப்பா-அம்மா விருப்பத்திற்காக பாட்டு, டான்ஸ் ‌போன்ற கிளாஸ்கள் எல்லாம் போக கிடைக்கும் சற்று நேரத்தில் அவர்கள் டிவியில் போ‌கோ போன்ற சேனல்களைப் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் முன் கேம்ஸ் விளையாட அமர்ந்து விடுகிறார்கள். ரோட்டில் ஆடுவதென்றால் கிரிக்கெட்தான் விளையாட்டு போலருக்கு. நான் சின்னப் புள்ளையில விளையாடின கோலிக் குண்டு, பம்பரம் போன்ற விளையாட்டுக்க ளெல்லாம்கூட வரும் காலத்தில் வழக்‌‌கொழிந்து விடும் என்று தோன்றுகிறது. பாவம் குழந்தைகள்!

குழந்தைகள் என்றால் பிடிககாதவர்களே இருக்க முடியாது... žம்கிீபந‌ைிகர்ரரவிீரஙயரக்ர

சரிதா: ஐயய்யோ... இவருக்கு என்னமோ ஆய்டுச்சு. ஏதோ சீரியஸா டைப்படிக்கிறாரேன்னு பாத்தா நான்ஸ்டாப்பா புலம்பிட்டேயில்ல இருக்காரு. ஸாரி மக்கா! அடுத்த பதிவு எழுதறதுக்குள்ள இவரை சரி பண்ணிடறேன். ஸீ யு!

67 comments:

 1. ஒரே பதிவில் தொடர் பதிவை படித்த அனுபவம்.
  புதுமையான முயற்சி.

  ReplyDelete
 2. நேர விரயர்களை கண்டால் எனக்கும் கோபம் வரும்.
  அதுவும் பணி நேரத்தில் நாம் பணியை ஒப்படைக்க வேண்டியவர் சரியாக கடைசி நிமிடத்தில் வரும் போது செம கடுப்பா இருக்கும்.சரியா சொல்லவும் முடியாது , பணி முடிஞ்சு போற திருப்தியும் இருக்காது.அப்புறம் வீட்டுக்கு போனப்புறம் போன் போட்டு அது என்னாச்சு,இது என்னாச்சுன்னு கேக்கும் போது இந்த பொடலங்காய்க்கு நாமளே அவர் வேலையும் பாத்துடலாம்னு நினைக்க தோணும்.

  ReplyDelete
 3. அந்தாதி பாணியில் விசயங்களை கோர்த்து சொன்னது உண்மையில் சிறப்பு..புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ளுகிறீர்கள்..தொடர்ந்து சிறப்புற வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. @ கோகுல் said...

  கரெக்ட் கோகுல்! பணியிடங்கள்லயும் சரி, மத்த இடங்கள்லயும் சரி... நேரத்தை மதிச்சு நடக்கறவங்கதானே சாதிக்க முடியும்? இனியாவது அப்படி செயல்படாதவங்க எல்லோரும் அப்படிச் செயல்படணும்னு நான் விரும்பறேன். முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி கோகுல்!

  ReplyDelete
 5. @ மதுமதி said...

  கவிஞரானதால கரெக்டா சொல்லிட்டிங்க. ‘அந்தாதி’ பாணியில எழுதணும்னு ரொம்பநாள் எண்ணம். ‘ஆச்சி’ ப்ளாக்ல ரெண்டு பாராவை இப்படி எழுதியிருந்தாங்க. பாத்தவுடனே நீண்டநாள் ஆசை ஞாபகம் வந்து, இப்ப நிறைவேறிச்சு. தமிழ் சினிமாவுலகூட இப்படி ரெண்டு பாட்டு உண்டு. ‘ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்’னு மூன்று முடிச்சுலயும், ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’னு இதயக் கனியிலயும் வரும். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

  ReplyDelete
 6. உங்களைப்போலவே நேரத்திற்கு மதிப்பு கொடுப்பவன் நான்.நேர மேலாண்மையைப் பற்றியும், நேரம் தவறாமை பற்றியும் எனது பதிவில் எழுத இருக்கிறேன்.
  கவிஞர் மதுமதி அவர்கள் சொன்னதுபோல் அந்தாதி கவிதைபோல் பதிவிட்டிருக்கிறீர்கள். புதிய முயற்சி. வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. அந்தாதிப்பதிவா?பேஷ்..பேஷ்..

  ReplyDelete
 8. குழந்தைகள் என்றால் பிடிககாதவர்களே இருக்க முடியாது... žம்கிீபந‌ைிகர்ரரவிீரஙயரக்ர
  ///என்னண்ணே புதுசா பாஷை கத்துக்க்றீங்களா?

  ReplyDelete
 9. நேரத்துக்கு மதிப்புத் தராதவனால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது.
  ///
  உண்மைதான்..கபோர்டை திறந்து டிரஸ்ஸை எடுத்துக்கொண்டே ”இதோ உங்கள் வீட்டுக்கு பக்கத்திலே வந்துட்டேன்” என்று கூசாமல் பொய் சொல்பவர்களையும் பார்த்து இருக்கின்றேன்.இப்படி பொய் சொல்லி மற்றவ்ர்களின் நேரத்தி சூறை ஆடுவதில் என்ன திருப்தியோ?

  அதே நேரம் இப்படியும் சிலர்.சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு பக்கத்திலேயே நின்று கொண்டு இதோ கிளம்பிட்டேன்.இன்னும் ஒரு மணி நேரத்தில் உன் வீட்டில் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டு ஐந்தே நிமிடத்தில் காலிங் பெல்லை அடிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ள இயலாது.இல்லை பிரதர்?

  ReplyDelete
 10. அருமையான கருத்துக்கள்.
  நேரத்திற்கு மதிப்பு கொடுக்காதவன் எதையும் சாதிக்க முடியாது என்று நீங்க கூறியிருப்பது சிறப்பு.

  ReplyDelete
 11. முடியாது , பாராட்டாமல் இருக்க முடியல கணேஷ் சார்!
  புதிய முயற்சி சிறப்பாக உள்ளது.
  500 rs கதையில் மனிதனுக்கு தான் என்ன ஒரு
  presence of mind & புத்திசாலித் தனம் , ஹஹா !
  நல்ல வேளை சரிதா விற்கு என் நன்றிகள்
  என் பொன்னான நேரத்தைக் காபாற்றியதிற்கு!

  ReplyDelete
 12. @ வே.நடனசபாபதி said...

  அவசியம் எழுதுங்கள். லேனா போன்றவர்கள் புததகம் எழுதியும், நம்மைப் போன்றவர்கள் வலையில் எழுதியு்ம் சிலருக்காவது நேரத்தை மதிக்கும் பண்பு ஏற்பட்டால் மகிழ்ச்சிதானே! உங்கள் வருகைக்கும் பாராட்டக்கும் என் மனமார்ந்த நனறி!

  ReplyDelete
 13. @ ஸாதிகா said...

  புது பாஷை இல்லம்மா தங்கச்சி. ‌கீ போர்டுல இருந்து என் கையப் பிடிச்சு இழுத்துட்டா. அதான்... அப்படி விழுந்துடுச்சு! பொன்னான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறாயம்மா. ஒரு மணியில் வருகிறேன் என்று சொல்லி அரை மணியில் வந்தாலும் எரிச்சல்தான்! சரியான நேரத்தைச் சொல்லி அதன்படி நடந்து கொண்டால்தான் எங்குமே மதிப்பு. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் பக்கா! (மகிழ்வுடன் சொல்லிக் கொள்ள முடிகிறது என்னால்) வருகைக்கும் உற்சாகமூட்டிய கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்ம்மா!

  ReplyDelete
 14. @ RAMVI said...

  தங்களின் வருகையாலும், என் கருத்தைப் பாராட்டிக் கூறியதாலும் மிகமிக மகிழ்ந்தேன். தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியை நவில்கிறேன்!

  ReplyDelete
 15. @ ஸ்ரவாணி said...

  ரசித்தவற்றை அழகாகக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளீர்கள். தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி!

  ReplyDelete
 16. புதுமை இந்த அந்தாதி பாணில பதிவை நகர்த்திப்போனது அதுக்கு ஒரு சபாஷ் கணேஷ்!நேரம் பொன்னானது அதை மதிக்க தெரிஞ்சிருக்கணும். எண்ணம்பற்றிய வார்த்தைகளும் அருமை. நெகடிவாகவே பேசுபவர்களிடமிருந்து ஒதுங்குவது நல்லது/ சீரியசா எழுதினாலும் சிந்திக்கிறவிதத்துல எழுதி உள்ளதற்கு பாராட்டு!

  ReplyDelete
 17. @ ஷைலஜா said...

  சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நாகரிகக் கோமாளி என்.எஸ்.கே.வை எனக்குப் பிடிக்கும். நாமும் சில பதிவுல சிரிச்சுட்டு சில பதிவுல சிந்திக்கலாமேன்றது என் எண்ணம். சரிதானேக்கா! அந்தாதி ஸ்டைலைப் பாராட்டினது அட் எ டைம் டஜன் வைட்டமின் மாத்திரை சாப்பிட்ட தெம்பு தருது! பேசுவதில் நெகட்டிவ் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் (99 சதவீதம்) இருக்கிறேன். ஒரு சதவீதம் என்னன்னு கேக்கறீங்களா? மெயின் ரோட் ட்ராஃபிக்ல முட்டாள்களைப் பாத்தா திட்டுவேன். தட்டிக் கொடுத்த உங்களுக்கு என் அன்பும் நன்றியும்!

  ReplyDelete
 18. அந்தாதி பாணியில் சொல்லிச் சென்ற விதம் அருமை
  சொல்லிச் சென்ற விஷயங்களும்
  அனைவருக்கும் பயனுள்ளவைகளே
  பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. படித்துக்கொண்டிருக்கும் போதே உட்கார்ந்த இடத்தில்
  இருந்து எழுந்து கைகள் தட்டி ஒலி எழுப்பி விட்டேன்.

  அந்தாதி கவிதை தான் பார்த்திருக்கிறேன்..
  அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.
  ஆச்சர்யமாக படித்தேன் கொஞ்சம் கூட
  விலகல் இல்லாமல் அந்தாதி முறையை
  அற்புதமாக கையாண்டிருப்பது.

  நேரம் மிக மிக முக்கியம்..
  என்னுடைய எண்ணமும் அதுதான்..
  நம் நேரம் சிறிது குறைந்தாலும் பரவா இல்லை
  அடுத்தவர்களின் நேரம் மிக முக்கியமானதாக
  கருதுவேன்...

  கலக்குங்க நண்பரே..

  ReplyDelete
 20. வார்த்தைகளால் ஆன அந்தாதரி நன்று

  ReplyDelete
 21. தினமும் விடிகாலையில் எழுந்துக்கனும்ன்னு அலாரம் வச்சுட்டு படுப்பேன். அலாரமும் கரிக்கிட்டாதான் அடிக்கும். அதை ஸ்னூஸ்ல போட்டுட்டு இன்னும் அஞ்சு நிமிசம், இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு எழுந்துக்கலாம்ன்னு தூங்கிட்டு அப்புறம் அவசர அவசரமா வாரி சுருட்டிக்கிட்டு எழுந்துக்குற எனக்கு நேரத்தின் மதிப்பை உணர வைத்த பதிவிது(ம்க்கும் இதுப்போல நூறு கதை படிச்சுட்டே நீயாவது திருந்துறதாவது.)

  ReplyDelete
 22. நான் சொல்ல நினைத்ததும் இதுவே மதுமதி முந்திக்கொண்டார்.

  அந்தாதி பாணியில் விசயங்களை கோர்த்து சொன்னது உண்மையில் சிறப்பு..புதுப்புது முயற்சிகளை மேற்கொள்ளுகிறீர்கள்..தொடர்ந்து சிறப்புற வாழ்த்துகள்..

  ReplyDelete
 23. பதிவிடும் முறையில் புதுமுறைகளை கையாள்கிறீர்கள்.பதிவு முழுக்க சிந்திப்பும்,பாடமுமாக உள்ளது.உங்கள் மனைவி சமைக்கும் எதாவது ஒன்று உங்க அம்மாவிற்கு செய்யத் தெரியாமல் இருந்திருக்கும்.அதில் பேலன்ஸ் பண்ணிடுங்க.

  ReplyDelete
 24. @ Ramani said...

  நான் முன்னெடுத்த முயற்சியை தாங்கள் ரசித்துப் பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 25. @ மகேந்திரன் said...

  படிக்கும் போதே கையொலி எழுப்பினேன் என்று நீங்கள் சொன்னதிலிருந்தும், நேரத்தின் அருமை பற்றி எழுதியதைப் பாராட்டியதிலிருந்தும் எந்த அளவு இதை ரசித்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன் மகேன். அந்த ரசனைக்கு ஒரு சல்யூட்! தோளி்ல தட்டி உற்சாகப்படுத்தும் நண்பருக்கு என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 26. @ ராஜி said...

  நீ குறிப்பிடறது சோம்பல்ம்மா. அதையும் உதறிட்டு நேரத்துக்கு எழுந்துக்கணும்னு ஒத்துக்கறேன். நான் சொல்ல வந்தது யாரையாவது சந்தி்க்கப் போகும்போது, அல்லது ஏதாவது ஃபங்ஷனுக்குப் போனா சரியான நேரத்துக்குப் போகணும்கறது. அந்தாதி பாணியைப் பாராட்டினதுக்கு நன்றிம்மா!

  ReplyDelete
 27. @ Lakshmi said...

  புதிதாக முயன்ற ஒரு விஷயத்தை தட்டிக் கொடுத்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!

  ReplyDelete
 28. @ thirumathi bs sridhar said...

  முயற்சியைப் பாராட்டியது மகிழ்வு தந்தது. ஒண்ணு இல்லீங்க... நிறையவே அம்மாவைவிட புதுசா செய்வாள். அதிலயும, ரவா இட்லின்னு ஒண்ணு... பிரமாதமாப் பண்ணுவா. ஆகவே குறையொன்றுமில்லையம்மா! (முன்னயே அந்தாதி டைப்ல எழுதிப் பாத்தா என்னன்னு தோணிருந்தாலும் உங்களோட சென்ற பதிவுல ஒரு பாரா முடிந்த வரில அடுத்ததை ஆரம்பிச்சிருந்ததை பார்த்தததும் ஆசை தீவிரமாகி எழுதிட்டேன்.) உங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தாங்க்ஸ்!

  ReplyDelete
 29. நிச்சயம் நேரத்தை எல்லோரும் மதிக்க வேண்டும்.
  வேண்டும் வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டால் ஆசை குறைந்து விடும் என்றார் புத்தக் கடவுள்.
  கடவுளையே ஏமாற்றும் பேராசையை உடையது மனம்.
  மனம் எங்கிருந்தால் என்ன எண்ணங்கள் தொடர்ந்து வந்தால் சரி...
  சரிதான்..இடியாப்பத்தில் சதி செய்வது உங்கள் 'சதி'யா ஊழா.....
  ஊழ் நன்றாக இருந்தால் எண்ணங்களும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 30. அந்தாதி சூப்பர்.
  இந்த லேட்டாகும் நபர்களைக் கண்டால் எனக்கு எப்போதும் கோபம் வரும்!

  ReplyDelete
 31. வணக்கம் பாஸ் நல்ல ஒரு பகிர்வு
  என்னிடம் உனக்கு இருக்கும் நல்ல பழக்கம் என்ன என்று கேட்டால் நான் துணிந்து சொல்வேன் நான் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பவன் என்று.எனக்கும் நேரம் தவறுபவர்களை(தவிர்க்க முடியாத காரணங்கள் ஓக்கே)பெரிதாக பிடிப்பதில்லை

  ReplyDelete
 32. மற்றவர்களின் நேரத்தை மதிக்காதவனால் தன்னுடைய நேரத்துக்கு மதிப்புத்தர இயலாது. நேரத்துக்கு மதிப்புத் தராதவனால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது.

  மிகமிகச் சரியான வார்த்தகள்! மனிதனின்
  நல்வாழ்வுக்கு கடைபிடிக்க வேண்டிய உண்மைகள்!
  அந்தாதி உரைநடை அழகு! இனி, கவிதை
  வந்தாகும் எழுதிப் பழகும்!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. //எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி இவர்கள் இருப்பதுதான் இன்னும் கொடுமை.//

  உண்மைதாங்க....

  ReplyDelete
 34. நேரத்தின் அருமையை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் உங்களது எழுத்து நடை.மிக எளிமையான, சொல்ல வரும் விஷயத்தை தெளிவாக சொல்லும் விதம்.
  மிக்க நன்றி. வாழ்த்துக்கள் கணேஷ் சார்.

  ReplyDelete
 35. நேரம்,நேர்மை என்னைப்போலவே நீங்கள்ன்னு சந்தோஷப்பட்டுக்கிறேன்.என்னைப்போலவே மத்தவங்களும் இருக்கனும்ன்னு நினைப்பேன்.அது தப்புன்னும் தோணுது சிலசமயம்.

  ReplyDelete
 36. நேரம்...அந்தாதி...படபடவென்று கொட்டிவிட்டீர்கள் கணேஷ் சார்...தொடருங்கள் இதே வழியில்...

  ReplyDelete
 37. எனக்கும் நேரம் பொன் என்பதில் ஒரே கருத்துத் தான். அதையும் கடைப்பிடிப்பேன். விழாக்களுக்குப் போய் காவல் இருப்பது தான் கணவர் சிரிப்பார் நான் தானே சொன்னேனே என்று. அந்தாதியும் நன்று. நல்ல இடுகை சகோதரா வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 38. எல்லாமுமே அருமை! நன்றி Sir!

  ReplyDelete
 39. பொறுப்புணர்வுடன் சிந்தித்து எழுதி உள்ளீர்கள், நியாயமான ஆதங்கம் தான், நல்ல பதிவு

  ReplyDelete
 40. பொறுப்புணர்வுடன் சிந்தித்து எழுதி உள்ளீர்கள், நியாயமான ஆதங்கம் தான், நல்ல பதிவு

  ReplyDelete
 41. @ ஸ்ரீராம். said...

  ஹா... ஹா... கை கொடுங்க ஸ்ரீராம் ஸார்! மனம் விட்டு ரசிக்க வைச்சது உங்க கருத்து! அந்தாதி பாணியில இப்படி பதில் சொல்லக்கூட முடியும்னு நான் எதிர்பார்க்கலை. தங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 42. @ சென்னை பித்தன் said...

  அந்தாதியை ரசித்த தங்களின் வருகைக்கும் மதிப்புமிகு கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 43. @ K.s.s.Rajh said...

  ஆமாம் நண்பா! தவிர்க்க இயலாமல் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால் நான் உடனே ஃபோன் செய்து தகவல் சொல்லி விடுவேன். மற்றபடி சரியான நேரத்தை கடைப்பிடிப்பதே நல்லது என்பது என் அனுபவம். நீங்களும் அவ்விதமே என்பதறிந்து மகிழ்ச்சி. மிக்க நன்றி!

  ReplyDelete
 44. @ புலவர் சா இராமாநுசம் said...

  உண்மை புலவரையா! தாங்கள் கொடுத்த ஊக்கத்தில் சில க‌விதைகள் எழுதி்ப் பார்த்தேன். எனக்கு திருப்தி தருபவற்றை விரைவில் பதிவிடுகிறேன். தங்களின் தெம்பூட்டும் கருத்துக்கும் வருகைக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 45. @ ஆ.ஞானசேகரன் said...

  இது விஷயத்தில் தான் செய்வது தவறு என்பதை உணராதவர்கள் நிறையப் பேர். நான் பார்ப்பவர்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்வேன் இந்த விஷயத்தை. தாங்கள் ஆமோதித்துக் கருத்திட்டதற்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 46. @ புவனேஸ்வரி ராமநாதன் said...

  ஹை! என் எழுத்து நடையை நீங்கள் ரசித்துப் பாராட்டியதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு! தெம்பூட்டிய கருத்துத் தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

  ReplyDelete
 47. @ ஹேமா said...

  நிஜம்தான் ஹேமா! ‘எல்லாரும் உங்களை மாதிரி நடந்துக்கணும்னு எதிர்பாக்கறது ரொம்பத் தப்பு. அவங்கவங்க ப்ளஸ் மைனஸோடதான் ஏத்துக்கணும். நீங்க என்ன உலகத்தைத் திருத்தப் பிறந்தவரா?’ன்னு என் நண்பர் ஒருத்தர் சொல்வார். நேரம் தவறாமையில நம்மைப் போல மத்தவங்க நடந்துக்கணும்னு ஆசை மட்டும்தான் நாம படலாம். வற்புறுத்த முடியாதுல்ல... நீங்களும் என்னைப்‌ போல் மதிப்புத் தரும ஒருவர் என்பதை அறிந்து மிகமிக மகிழ்ந்தேன். தங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 48. @ ரெவெரி said...

  நேரத்தின் மதி்ப்பில் துவங்கித் தொடர்ந்த அந்தாதியை தாங்கள் ரசித்துப் பாராட்டியதில் மிகுந்த மன நிறைவு எனக்கு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 49. @ kavithai (kovaikkavi) said...

  நேரத்தின் மதிப்பைத் தெரிந்து வைத்துள்ள தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 50. @ திண்டுக்கல் தனபாலன் said...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் ஸார்!

  ReplyDelete
 51. @ நம்பிக்கைபாண்டியன் said...

  உங்களின் பெயரே அழகாக இருக்கிறது. தாங்கள் இதை ரசித்துப் பாராட்டியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே!

  ReplyDelete
 52. நேரத்தின் மகிமையை உணர்த்தியமைக்கு நன்றி..
  5 நிமிடம் லேட்டானதால் ரயிலை தவிரவிட்டவர்களை கேட்க சொல்லுங்கள்.அந்த 5 நிமிட நேரத்தின் அருமை அப்போது தெரியும்.
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  ReplyDelete
 53. எண்ணத் தொடர்களை வச்சு என்ன்மா வெல்லாம் ஓட்டுறிங்க.மனம் ஒரு குரங்கு இன்னு சும்மாவா சொன்னாங்க.நேரத்தை மதிக்கணும்.அப்படின்னு சொன்னது எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு ..

  ReplyDelete
 54. hmm...

  மூளை என்பது நாம் சிந்திக்க, செயல்பட உபயோகிக்கும் ஒரு "கருவி" மனம் அதை ஆட்டுவிக்கிறது. புத்தி (பலர் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை) பாடம் புகட்டுகிறது.

  தொடருங்கள்...

  ஆசைப்படுவது துக்கத்துக்கு வழி - புத்தர்.
  அனைத்துக்கும் ஆசைபட்டால், அதுவும் புளித்துப் போய் ஆசையற்று போய்விடுவோம் என்கிறாரோ ஜக்கி வாசுதேவ்?

  ReplyDelete
 55. ..ஹிஹி.. விதிப்படி இல்லீங்க, வீதிப்படி. வீதிப்படி எல்லாம் நடக்கும்னு எழுத வந்தவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செஞ்சுட்டாரு. செஞ்ச மிஸ்டேக் அப்படியே தொடர்ந்துடுச்சு.. ஹிஹி..

  ReplyDelete
 56. வேலன். said...

  ஆம்! நேரத்தின் அருமை அதைப் பறிகொடுத்தவர்களுக்கு நன்கு தெரியும்தான்! நல்ல கருத்தைச் சொன்ன நண்பர் வேலனுக்கு மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 57. @ Kalidoss Murugaiya said...

  தங்களின் கருத்துக்களைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே! தங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete
 58. @ Shakthiprabha said...

  மூளை என்பது நாம் சிந்திக்க, செயல்பட உபயோகிக்கும் ஒரு "கருவி" மனம் அதை ஆட்டுவிக்கிறது. புத்தி (பலர் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை) பாடம் புகட்டுகிறது.
  -தங்களின் இந்த வரிகளோடு நான் நூறு சதம் உடன்படுகிறேன். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி. மிக்க நன்றி!

  ReplyDelete
 59. @ Shakthiprabha said...

  மூளை என்பது நாம் சிந்திக்க, செயல்பட உபயோகிக்கும் ஒரு "கருவி" மனம் அதை ஆட்டுவிக்கிறது. புத்தி (பலர் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை) பாடம் புகட்டுகிறது.
  -தங்களின் இந்த வரிகளோடு நான் நூறு சதம் உடன்படுகிறேன். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி. மிக்க நன்றி!

  ReplyDelete
 60. @ அப்பாதுரை said...

  ஹா... ஹா... நகைச்சுவை ததும்ப நீங்கள் சொல்லியிருப்பதை ரசித்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 61. இந்த அலட்சியம்தான் நமக்கெல்லாம் பெரும் எதிரி. ஐந்து நிமிடத்தில் முடிக்கக் கூடிய காரியங்கள் எதுவும் எனக்கு இருக்காதா? அதைத் தீர்மானிக்க அவன் யார்?

  ....... சரியான கேள்விதான்..... இங்கே இந்திய மாணவர்கள் சிலர், appointment கொடுக்கப்பட்ட சரியான நேரத்துக்கு வராமல், "பத்து நிமிடங்கள் late ஆக வருவதற்குள் Professor காத்து இருக்காமல் சென்று விட்டார்களே," என்று அலுத்துக் கொண்டதை கேட்டு இருக்கிறேன். என்னத்த சொல்ல?

  ReplyDelete
 62. @ Chitra said...

  அடாடா... வெளிநாட்டுக்குச் சென்றும் அவர்களின் நேரம் தவறாமையைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் நம் இந்திய மாணவர்களை என்னவென்று சொல்வது சிஸ்டர்? வருத்தம்தான்! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 63. அந்தாதி அருமை. பெரிய விஷயங்களை நாலு வரியில் சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு ஒரு பாராட்டு. அந்தாதி என முடிவு செய்து விட்டதாலும் சப்ஜக்ட் ஒரே ஒரு விஷயமாக இல்லாததாலும் இடியாப்பம் போல இருந்தாலும், சுவையாகவே இருந்தது.

  ReplyDelete
 64. @ ரசிகன் said...

  படித்து, ரசித்து, மனம் விட்டுப் பாராட்டிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube