Saturday, March 9, 2013

மொறுமொறு மிக்ஸர்-16

Posted by பால கணேஷ் Saturday, March 09, 2013
 ‘‘டாக்டர்... எனக்கு மூச்சு விடறதுல ப்ராப்ளம் டாக்டர். ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ என்றபடி டாக்டரிடம் வந்தான் ஒருவன். ‘‘நோ ப்ராப்ளம்... நான் கம்ப்ளீட்டா நிறுத்திடறேன் -மூச்சு விடறதை!’’ என்றாராம் டாக்டர். CCTP என்கிற சென்‌னை போக்குவரத்துக் காவல் துறையும் அந்த டாக்டர் மாதிரிதான் நடந்து கொள்கிறது. அசோக் நகரிலிருந்து வடபழனி கங்கையம்மன் தெருவுக்கு போக வேண்டுமென்றால் நான் அம்பேத்கர் சிலையருகில் வந்து வலதுபுறம் திரும்ப வேண்டும். இப்படி திரும்புபவர்களால் டிராஃபிக் ஜாம் ஆகிறது, அதை கவனிக்க கஷ்டமாக இருக்கிறது என்று எந்த கான்ஸ்டபிள் புண்ணியவானோ புலம்பியிருக்க வேண்டும்...! ‘நோ ரைட் டர்ன்’ என்று ‌போட்டு, போகிற வழியெல்லாம் இடைவெளிகளில் டூ வீலர் திரும்ப முடியாதபடி கற்களைப் போட்டு (நல்லா இருப்பீங்கடா!) என்னை லக்ஷ்மன் ஸ்ருதி வரைக்கும் கொண்டு போயிட்டாங்க படுபாவிங்க. வேற வழியில்லாம மெயின்ரோடுல வடபழனி போய், சுத்தி வந்தேன். மூணு கிலோமீட்டர் வெட்டி பெட்ரோல் செலவு.

இதுக்கு ஒரு வயித்தெரிச்சலான பின்கதை என்னன்னா... கங்கையம்மன் ‌கோயில் தெருவுல என் வேலைய முடிச்சுக்கிட்டு வர்றப்ப, எந்த இடத்துல வலதுபக்கம் திரும்பக்கூடாதுன்னு என்னை கான்ஸ்டபிள் விரட்டினாரோ அதே இடத்துல நாலஞ்சு மோட்டார் பைக் காரங்க, ஒரே நேரத்துல ‘போடாங்க...’ என்கிற மாதிரி அவர் கண்ணெதிரி‌‌லேயே வேகமாக திரும்பிக் கடந்து சென்றார்கள். தனி ஆளா செஞ்சா தப்பு, கும்பலா செஞ்சா தப்பில்லங்கற சென்னைவாசிகளோட மனோபாவம் சரிதான் போலருக்கு!

===============================================

ப்ப ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடலாம். தமிழில் சில புகழ்பெற்ற நாவல்களி்ன் பெயர்களை இங்கே குறிப்புகளாகக் கொடுத்திருக்கேன். தலைப்புகள் என்னங்கறதை நீங்க கண்டுபிடியுங்க (இந்த முறை நிச்சயமா விடை நான் சொல்ல மாட்டேன்பா)

1. ஒரு ஆள் அடை அணியாம இருந்தா நிர்வாணம் என்போம். ஒரு சிட்டியே ஆடை அணியாம இருந்தா என்ன சொல்வீங்க? சுஜாதா எழுதிய த்ரில்லர் இது.

2. பெரிய பெண் உருவ விளக்கு அல்லது  Explain The Poetry -இந்த வாக்கியத்தை தமிழ்ப்படுத்துங்கள். அகிலன் எழுதிய புகழ்பெற்ற நாவல் இது!

3. மன்னர்கள் அனுப்பும் ஓலைகளில் விஷயங்களை எழுதினதுக்கப்புறம் பதிக்கப்படறது இது. சாண்டில்யன் எழுதிய நாவல்!

4. விமானம் பறக்கறதைப் பாக்கறதே தனி அழகு! இவங்க குறிப்பிடற விமானங்களைப் பாக்கறது இன்னும் ரசனையானது! இந்துமதியின் பெயரை இன்றும் அழுத்தமாய் பதிவு செய்து கொண்டிருக்கும் படைப்பு இது.

5. ‌கொலை பண்றது பாவம்ங்க. ஆனா மருத்துவர்கள் இந்தக் கொலையப் பண்ண அனுமதிக்கணும்னு ஒரு கோரிக்கையும் அதுக்கு மறுப்புகளும் இன்னிக்கும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. சிவசங்கரி எழுதிய மனதைத் தொடும் நூல் இது!

மீபத்தில் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. தமிழ் உணர்வுள்ளவர், போராட்ட குணமுள்ளவர் என்றெல்லாம் அறியப்படும் ஒருவர் எழுதியிருந்த நூல் அது. புத்தகத்தில் அவர் சொல்லவந்த கருத்துகள் தமிழர்களுக்கு எழுச்சியூட்டறதா அமைஞ்சிருந்தது. ஆனா நாலைஞ்சு பக்கங்கள் படிச்சதுமே நான் புக்கைத் தூர எறிஞ்சிட்டேன். காரணம்...? அவர் எழுதியிருந்த் வாக்கியங்கள் - தமிழ்க் கற்றவன் நான் - செய்துக் கொண்டிருந்தேன் - இப்படி எங்க எங்க ஒற்று வரக்கூடாதுன்னு கூடத் தெரியாம ஏராளமா ‘ப்’ ’க்’ ‌போட்டு எழுதியிருந்தார். அடப்பாவிகளா...! இப்படில்லாம் நீங்க ‘வாழ’ வெக்காம இருந்தா தமிழ் தானா வாழ்ந்துரும்டா... இலக்கணத்தைப் படிச்சு, பிழையில்லாம எழுதத் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் தமிழ் உணர்வைப் பத்திப் பேசுங்கய்யா...! (எழுத்துப் பிழைகள் யாருக்கும் வரும். அவை மன்னிக்கப்படலாம் என்ப‌தை நான் நன்கறிவேன். இங்க நான் சொல்லியிருக்கறது தமிழை வாழ வைக்கிறேன்னு புலம்பற, கர்ஜிச்சுக்கிட்டிருக்கற சிங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்) முண்டாசுக் கவிஞர் இதையெல்லாம் மனசுல தீர்க்கதரிசனமாப் பாத்துட்டுதான் ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’னு எழுதினாரோ!

===============================================

ப்பாதுரை ஸார் கிட்ட அப்ரெண்டிஸாச் சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். தமி்ழ்ப் பாடல்களை ஆங்கிலத்துல என்னமா முழிபெயர்த்து... ஸாரி, மொழிபெயர்த்து சப்-டைட்டில் எழுதறாரு! இங்கே க்ளிக்கி படியுங்க! நானும் ஒன்றிரண்டு ட்ரை பண்ணினேன்...

Why? Why? Why?                         Went to buy air
Lifting a Bowl - why?                      bought a poetry
Swimming in many thoughts       she asked and bought
Why? Why? Why?                          what happend to that virgin?


என்ன அப்பா ஸார்... என்னை அசிஸ்டெண்ட்டாச் சேத்துக்குவீங்கதானே? ஹி... ஹி... ஹி...

===============================================

முன்னணி தமிழ் நாளிதழ்களைப் பாத்தா சிப்பு சிப்பா வருது. முந்தாநேத்து ஒரு முன்னணி நாளிதழ்ல போஸ்டர் நியூஸ் இப்படி - ‘பெண்கள் மூளை எப்படி வேலை செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்! அடப்பாவிகளா... மூளை வேலை செய்யாமலா மேரிக்யூரி ரெண்டு நோபல் பரிசு வாங்கினாங்க? விண்வெளில பறந்த கல்பனா சாவ்லாவுல இருந்து கல்வியறிவு இல்லாத மதுரை சின்னப்பொண்ணு வரை எத்தனையெத்தனை பெண்கள் சாதிச்சிருக்காங்க!  ‘பெண்களின் மூளை வேலை செய்யும் விதம்- அதிர்ச்சி தகவல்கள்’னு தலைப்பு குடுத்திருந்தா நியாயம்! அதவிட்டுட்டு மணிமேகலை பிரசுர புத்தகத் தலைப்பு மாதிரி இப்படியா வெப்பீங்க?

இன்னொரு முன்னணி நாளிதழ்ல இப்படி நியூஸுக்குத் தலைப்பு தந்திருந்தாங்க. ‘மெரீனாவில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!’ என்னது...? பாலச்சந்திரன் மெரீனாவுல கொல்லப்பட்டாரா?ன்னு அதிர்ந்து போய் செய்தியப் படிச்சதும்தான் புரிஞ்சது... பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்து மெரீனாவில் ஆர்ப்பாட்டம்’னு தலைப்பு வந்திருக்கணும்கறது. என்ன க்வாலிபிகேஷன்ல நிருபரையும், உதவி ஆசிரியரையும் வேலைக்கு வெச்சு இப்டில்லாம் வெளியிடறாங்களோ... என்னமோ போடா மாதவா...!

===============================================

Ohkay! To end with a smile...

* One spelling error or omission of a letter can destroy your life- A husband messaged his wife: "I'm having a wonderful time, Wish you were her"

* The three steps of a man's life : teenage has time and energy, but no money; Working age has money and energy, but no time; Old age has money and time but no energy!

Ha..! Ha..! Ha...!
See you, Bye!

===============================================

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : மாகியின் பரிசு-1

=============================================== 

Thursday, March 7, 2013

சண்டைகள் பற்றி வாத்யார்!

Posted by பால கணேஷ் Thursday, March 07, 2013

ங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்?

வீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்!

டத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியா‌கவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா?

ங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா? மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள்‌ நம்பக் கூடாது? அர்ஜுனன் ‌போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால் ன்ெ போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.

ங்கள் படங்களில் ‘ஸ்டண்ட்’ அதிகமாக இருக்கிறதே... தேவைதானா?

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உங்களை ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று முரண்டாபாகக் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

த்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று யார் யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும் ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.

சினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாயிருந்து அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாற பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நடிப்பதுதான் நாடகம்’ என்பது.

அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா? கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா? நடிப்பால்தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்‌களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாட்கம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோ்ன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.

சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதனால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
.

============================================

ல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு வருடங்களில், பல்வேறு பத்திரிகைகளில் மக்கள் திலகம் அளித்த பேட்டிகளைத் தொகுத்து, ‘‘‘எம்.ஜி.ஆர். பேட்டிகள்’ என்று ஒரு தொகுப்பு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் எஸ்.கிருபாகரன் என்பவர். 208 பக்கங்களில் 130 ரூபாய் விலையில் மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. (Manonmani Pathipagam, 35/14, East Rajaveethi, Opp: Babu Suriya Hote near bus stand, Kanchipuram-631 501. Email: kirubakar08@yahoo.com) அந்த நூலிலிருந்து சண்டைக் காட்சிகள் பற்றி வாத்யார் கூறியவற்றை மட்டும் தொகுத்து இங்கு அளித்திருக்கிறேன். புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால்: நடிகர், அரசியல்வாதி, இசை ரசிகர், போன்ற அவரின் பல்முகங்களைத் தாண்டி எம்.ஜி.ஆர். என்ற மனிதரை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்!

============================================

Wednesday, March 6, 2013

அடங்கொண்டு போராடிய சீனு!

Posted by பால கணேஷ் Wednesday, March 06, 2013

தி்ங்கள்ன்று மாலை பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் அந்த பார்க்கில் நாம் சந்திக்கலாம் என்று போன வாரமே சீனு சொல்லியிருந்தான். ஸாரி, ‘ர்’. நேற்று மாலை கிளம்பும்முன் அவரின் செல்லுக்கு போ்ன செய்தால் முழு ரிங் போயிற்று. எடுக்கவே இல்லை. சரி, பார்க்கில் பேசிக் கொள்ளலாம் என்று 6.30 மணிக்குச் செல்ல வேண்டியதை என் வழக்கப்படி 6.25க்கு அடைந்து விட்டேன். பார்க் வாசலில் என் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தேன்.

என் கண்களையே நம்ப முடியவில்லையே... நடைபாதைகள் சுத்தமாய் துடைத்து வைக்கப்பட்டு ஒரு அழுக்கை காணோம். செடிகள் அழகாய் கத்தரித்து ட்ரிம் செய்யப்பட்டிருக்கின்றன. ‘சார் டீ’ என்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டு அலையும் ஒருவரையும் காணோமே... ஏதோ தவறிப் போய் சிங்கப்பூர் பார்க் ஒன்றில் நுழைந்துவிட்ட மாதிரியல்லவா இருக்கிறது. இப்படிப் பராமரிக்கும் மாநகராட்சிக்கு ஜே!

-இப்படியெல்லாம் எழுதத்தான் ஆசை எனக்கு. ஆனால் முடியலையேஏஏஏஏ! வழக்கம் போல முன்னால் வரும் வட்ட பீடத்தின் மத்தியில் அதிகம் அழுக்குப் படாத ஒரு இடமாகப் பார்த்து அமர்ந்தேன். தவறாமல் அருகில் வந்து ‘டீ வேணுமா சார்?’ என்றார் வியாபாரி. சீனு வரும் வரை பொழுதுபோகட்டுமே என்று அங்கு வட்டப்பாதையைச் சுற்றி நடந்து கொண்டிருந்த ஜனங்களை நோட்டமிட்டேன். நடையர்கள்தான் எத்தனை விதம்! மிலிட்டரி மார்‌ச் போல கைகளை வீசி சீரான ஒழுங்குடன் நடந்து செல்லும் முதியவர், ‘என்னையாடா சண்டைக்குக் கூப்பிட்டே?’ என்கிற தினுசில் கைகளை வீசி அதிர அதிர நடந்து வரும் ஒரு குண்டு மாமி, அது நடையா இல்லை ஓட்டமா என்று தெரியாதபடி நடையோட்டமாகச் சென்ற ஒரு மத்திய வயது நபர், பின்னாலேயே அவர் நடந்து வருகிறாரா, இல்லை காற்று அவரைத் தள்ளிக் கொண்டு வருகிறதா என்ற குழப்பம் ஏற்படும்படி நம்ம ‘சேட்டையண்ணா’ மாதிரி ஊசி உடம்புடன் ஒருவர், அதற்குப் பின்னால் ஒரு இளம்பெண்ணின் தோளில் கை போட்டுக் கொண்டு.. காதலன் - என்றுதான் நினைக்கிறேன். கணவனாக இருந்தால் அவன் முகத்தில் சிரிப்பிருந்திருக்காது, தோளில் கை போட்டிருக்க மாட்டான் - அப்பப்பா... விதவிதமான மனிதர்களைப் பார்த்ததில் பொழுதுபோனதே தெரியவில்லை.

சீனு வந்து சேர்ந்ததும் கோபமாக, ‘‘ஏண்டா பாவி இவ்வளவு லேட்?’’ என்றேன். அவரின் டிரேட் மார்க்கான ‘ஹீ... ஹீ...’ என்கிற சிரிப்பை உதிர்த்துவிட்டு ‘ஆதிபகவன்’ படத்தை மேட்னி ‌‌ஷோவில் பார்த்துவிட்டு வந்த ‘ஆனந்த அனுபவ’த்தை புலம்பித் தள்ளினார். அவஸ்தைப்பட்டது அவர்தானே, நானல்லவே... ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்! கையோடு கொண்டு வந்திருந்த நான் கேட்டிருந்த ‘டாலர் நகரம்’ புத்தகத்தை எனக்களித்தார் சீனு. ‘‘ஏன் வாத்தியாரே எப்பவும் பழைய படங்களையும் பாட்டுகளையும் ரசிச்சு எழுதறீங்க...? புதுப் படங்களை எழுதினா என்ன?’’ என்று கேட்டார் சீனு. அதன் பின்விளைவுகளை அறிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டார்.

‘‘அதில பார் சீனு... புதுசா ஒரு படம் வெளியானதும் அதைப் பாத்துட்டு சுடச்சுட விமர்சனம் எழுதறதுக்கு கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில், பி.பிரபாகரன், மெ.ப. சிவகுமார், இப்ப நீயின்னு ஒரு குரூப்பே இருககு. இவங்களோட போட்டி போட்டு புதுப்படங்களை எழுதற அளவுக்கு எனக்கு ஸ்பீட் பத்தாதுங்கறது ஒரு காரணம். பழைய படங்களைப் ப்த்தி எழுதறதுக்குக் காரணம்... அப்பல்லாம் ஹீரோங்கறவன் நல்லவனா இருந்தான், கெட்ட காரியங்களைச் செய்யறதுக்கு வில்லன் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ டபுள் ஆக்ட் பண்ணினா மட்டும் ஒரு கேரக்டர் வில்லனாவும், ஒண்ணு ஹீரோவாவும் நடிப்பாங்க. 

ஆனா இப்ப... நீ பாத்துட்டு வந்த படத்தையே எடுத்துக்க... ஆதி அயோக்கியன், பகவன் பரம அயோக்கியன். படம் பூரா வர்றதுனால அந்த நடிகர் ஹீரோ! அப்படித்தானே?. விளங்கிரும்! ஹீரோயின் ஓவரா எக்ஸ்போஸ் பண்ண முடியாதுங்கறதால ஐட்டம் சாங் பண்றதுக்குன்னு அப்ப தனி ஆர்ட்டிஸ்ட் இருந்தாங்க. இப்ப... ஹீரோயினே எல்லாத்தையும் பண்ணிடறாங்க. பழைய படங்கள்ல ஒரு கிறிஸ்தவர் கெட்ட காரியம் பண்றதா காட்டினா, அதே படத்துல இன்னொரு கிறிஸ்தவர் கேரக்டர் நல்லவரா, நல்லதுக்காக உயிரையும் விடறவரா காட்டப்படும். இப்ப... ரியலிஸத்தை காட்டறேன் பேர்வழின்னு தீவிரவாதம், பயங்கரவாதம்லாம் அப்படியே படமாகுது. அந்தக் கண்றாவியத்தான் பேப்பர்லயும், ஊடகங்கள்லயும் பாத்துத் தொலைக்கறோமே... இவிங்கவேற காட்டணுமா?

அன்பை வளர்க்கற மாதிரி படங்கள்தான் இப்பத் தேவை. தன் சித்தப்பா ஹார்ட் அட்டாக்ல ஆஸ்பத்திரில அட்மிட் ஆனாக்கூட சாத்துக்குடியும், ஹார்லிக்ஸும் குடுத்துட்டு, ஒரு தடவை பாத்துட்டு வந்துட்டா ‌போதும்கற அளவுலதான் இப்பல்லாம் பாசம் இருக்குது. இன்னொரு குடும்பத்தை கெடுக்கவும்... சில சமயங்கள்ல சொந்தக் குடும்பத்‌துலயே ஒருத்தரை வாழ விடாம செய்யவும் திட்டம் போடறதை விஸ்தாரமா காட்டி நம்ம டி.வி. சீரியல்கள் கட்டிக்கிட்ட புண்ணியம் அது! ஆகவே அன்பு, நட்பு மாதிரி நல்ல விஷயங்களைச் சொன்ன பழைய படங்களதான் என்னோட சாய்ஸ் சீனு! நீ குறிப்பிடற பழைய படங்கள் வந்த காலத்துல 20 படங்கள் வந்தா அதுல மூணு சொத்தையா இருக்கும். இப்ப... 20 படங்கள் வந்தா அதுல மூணுதான் நல்லதா இருக்குது... என்ன சொல்றே?’’ என்றேன்.

‘இப்பிடி தனியா வந்து மாட்டிக்கிட்டேனே’ங்கற மாதிரி சீனு ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டே தலையாட்டினாரு. பார்வை மட்டும் சுத்திலும் அலைபாய்ஞ்சுட்டிருந்துச்சு. (என்னை மாதிரி) வாலிப வயசு பாருங்க... ஹி... ஹி..! நான் விடாம, ‘‘சரி... அடுத்த மேட்டரை கவனி. நகைச்சுவைன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? ‘கண்ணா லட்டு திங்க ஆசையா?’ படம் சமீபத்துல ஹிட்டாச்சு. நான் கவனிச்ச வரைக்கும் சந்தானம் அடிக்கற பஞ்ச் பூராவுமே பவர்ஸ்டாரை கலாய்ச்சுதான். இல்லாட்டி மத்த படங்கள்ல கூட வர்ற (ஹீரோ உட்பட) கேரக்டர்ஸை வார்றார். இதப்பாத்து ஜனங்க சிரிக்கறாங்க. இது எத்தனை நாள் தாங்கும்? ‘அன்னை’ன்னு ஒரு படத்துல சந்திரபாபு வீட்டுக்குள்ள புகுந்த ஒரு பெருச்சாளியை அடிச்சுக் ‌‌கொல்றேன்னு மத்த நகைச்சுவை நடிகர்கள் துணையோட ஒரு கலாட்டா பண்ணுவாரு பாரு... அது காமெடி! சாப்ளின் ஸ்டைல்! வெறும் டயலாக் பேசி சிரிக்க வெக்கறது மட்டுமில்ல காமெடி...’’ என்றேன்.

‘‘கரெக்ட் வாத்யாரே... உலகத் தலைவர்கள் பத்தி நீங்க எழுதறது ரொம்ப நல்லாயிருக்கு’’ என்று வேகமாக டாபிக் மாற்றினார் சீனு. சரி, பயல் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டு, ‘‘அதுசரி... நீ நகைச்சுவை சிறுதை எழுதப் போறதா சொன்னியே... எங்கப்பா இன்னும் காணம்? அடிக்கிற அடியில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கி, நானும் சேட்டைக்காரனும், பேட்டைய விட்டே ஓடியிருக்க வேணாமா?’’ என்று கேட்டேன். இடுப்பில் கை வைத்து (நோ... நோ...அவர் இடுப்புல தாங்க..!) முறைத்தார் சீனு. ‘‘வாத்யாரே... நீங்க பேசறது உங்களுக்கே ஓவராத் தெரியலையா? ‌எழுதறேன்னு மட்டும்தானே நான் சொன்னேன்... கொஞ்சம் முக்குனதுல கழு்த்துவரை வந்துட்டுது. விரல் வழியா இறகக வேண்டியதுதான் பாக்கி’’ன்னார். ‘‘அவலோட... ச்சே, ஆவலோட காத்திருக்கேன். சீக்கிரம் இறக்கிடுய்யா ராசா’’ என்றேன் நான். அதன்பின் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். இருட்டி விட்டதால் காற்று வரவில்லை, அதற்குப் பதில் கொசுக்கள்தான் அதிகம் வரத் துவங்கின என்பதால் எங்கள் ‘கச்சேரி’யை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

====================================================

பி.கு.: அப்பனே சீனு! ‘நான் எப்போ வாத்யாரே பார்க்குக்கு வந்தேன்? இப்பிடி என்னை மாட்டி விட்டுட்டீங்களே’ன்னு அப்பாவித்தனமா கமெண்ட் போட்டுராத! நேத்து போன் அடிச்சும் நீ எடுக்காதததால நான் மட்டும் பார்க் போய் காத்து வாங்கினேன். அப்படியே நீ வந்தா என்ன பேசியிருப்போம்ங்கறதை மனசுல ஓட்டி எழுதிட்டேன்கற விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்! யார்ட்டயும் சொல்லிராத! அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... அப்பயும் சொல்லிராத! (இனிம போன் பண்ணினா பயபுள்ள எடுக்காம இருக்கும்கறீங்க... ஹி... ஹி...)

====================================================

Monday, March 4, 2013

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, March 04, 2013

==============================================================
முன்குறிப்பு: ‘‌எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது’ என்பவர்கள் (அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும்.
==============================================================

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’  பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.

எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்‌ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.

சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்‌னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

==============================================================
ஒரு ரசிகனின் பார்வைல நான் ரசிச்ச MGR சண்டைகளைப் பத்திச் சொன்னேன். அவற்றில் நடிச்ச வாத்யார் அதைப் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க விருப்பமுண்டா? சொன்னீங்கன்னா, அவரோட பழைய பேட்டிகள்லருந்து தொகுத்து ஒரு பதிவா தந்துடறேன். (ஹையா! இன்னொரு பதிவு தேத்த ஐடியா கிட்டிருச்சு. ஜாலி!)
==============================================================

Friday, March 1, 2013

தெரியுமா இவரை? - 4

Posted by பால கணேஷ் Friday, March 01, 2013
========================================================
‌எச்சரிக்கை : சற்றே நீண்ட பயணம்! கவனமாகச் செல்க!
========================================================

                         ஹோசிமின் (Ho Chí Minh)

பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். இங்கேயுள்ள படத்தில் சோனியாகக் காட்சிதரும் இந்த எளிய மனிதருக்கு வாய்ச்சிருந்தது இரும்பு இதயமுங்க. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, ‌அதோட மூக்கை உடைச்சவரு இவருன்னா நம்புவீங்களா? விரிவாச் சொல்றேன், கேளுங்க...

இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வெச்ச பேரு சிங்சுங். அப்ப... ‘ஹோசிமின்’ அப்படிங்கற பேர் எப்படி வந்‌துச்சுன்னு யோசிக்கறீங்களா? ‘‌ஹோசிமின்’ என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர்ங்கறதால மக்கள் வெச்ச பேரு அது. அதுவே நிலைச்சுடுச்சுன்னா எந்த அளவுக்கு மக்கள் தலைவரா இருந்திருப்பாருன்னு பாத்துக்கங்க.

பிரான்ஸ் தனக்கு தோதானவங்களை வியட்நாம் அரசுல அமர்த்திட்டு அவங்களை வெச்சு பொம்மலாட்ட அரசியல் நடத்திட்டிருந்துச்சு. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேக்கற வேலையத்தான் சிறுவனா இருந்தப்ப ஹோசிமின் செஞ்சாரு. உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யறப்பவே நாட்டு விடுதலைககாக ஏதாச்சும் செய்யணும்ங்‌கற அழுத்தமான விதை இவர் மனசுல விழுந்துருச்சுங்க. இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினாரு. பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னால ஒண்ணும் வேலைக்காவலை. சரின்னு பிரான்ஸுக்கே போய், பாரீஸ்ல ஒரு தபால் நிலையத்துல வேலை பாத்துக்கிட்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதிச்சாங்கன்றதுல இருந்து பல தகவல்களை சேகரிசசுக்கிட்டாரு.

வியட்நாமுக்கு அவர்  திரும்ப வந்தப்ப... 1940ம் ஆண்டு. அப்ப பிரான்ஸ் கிட்ட இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றிச்சு. பிரான்ஸோட கொடுமைல இருந்து விடுபட்டாச் சரின்னுட்டு வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு த்நதாங்க. ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைங்க அடிமைங்க தானே... அதனால இவங்களை விரட்டியடிச்சு நாம சுதந்திர நாடாகணும்’’ அப்படின்னு மக்கள்கிட்ட முழங்கி, எழுச்சியை உண்டுபண்ண முயன்றாருங்க ஹோசிமின். இதை வேடிக்கை பாத்துட்டிருக்க ஜப்பான் அரசு என்ன இனா வானாக்களா? இவரை நசுககிடலாம்னு முனைஞ்சது. வியட்நாமில் இருந்த அடர்ந்த காடுகள் ஹோசிமினுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள்ள இருந்துக்கிட்டே அவர் ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினாரு. (நோ... நோ... காட்ல இருந்த கொரில்லாக் குரங்குகளை வெச்சு இல்ல... மறைஞ்சிருந்து எதிர்பாராம தாக்குதல் நடத்துறவங்களுக்கு கொரில்லாப் படைன்னு பேரு.) அந்த  கொரில்லாப் படைக்குப் பயிற்சி கொடுத்து தகுந்த சந்தர்ப்பத்துக்காக கொக்கு மாதிரி காத்திருந்தார்.

1945ம் வருஷத்துல ஜப்பான் மீது குண்டுகள் வீசப்பட்டு, அது கலகலத்துப் போயிருந்த சமயம்... பிரான்ஸ் வியட்நாமைக் கைப்பற்றுவதற்கு முன்னால தன் கொரில்லாப் படையோட ஹோசிமின் ஜப்பானியர்களை விரட்டியடிச்சு, நாட்டைக் கைப்பத்திட்டாரு. சின்ன வயசுலருந்து அவர் வெச்சிருந்த ஆசை நிறைவேறிட்ட சந்தோஷத்தோட வியட்நாம் சுதந்திர நாடாயிட்டதா உலகத்துக்கு பறை சாற்றினாரு. கையோட தேர்தலையும் நடத்த... அவர் கட்சி ஜெயிச்சு நாட்டுக்கு அவர் தலைவரானாரு. பிரான்ஸ் கொஞ்சம் லேட்டா சுதாரிச்சுக்கிட்டு யுத்தத்துக்கு படைதிரட்டி வந்துச்சு. வியட்நாமில யுத்தம் ஆரம்பிச்சது.

போர்க் கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள்னு இப்படி சகல ஆயுத வசதிகளோடயும் இருந்த பிரான்ஸை போதிய ஆயுத வசதிகள் இல்லாத ஹோசிமின், ‘‘எங்கள்ட்ட வாலாட்டினா கடைசில தோக்கறது நீங்களாதான் இருப்பீங்க’’ன்னு எச்சரிச்சாரு. ‘ஹா... ஹா... நல்லாவே ஜோககடிக்கிறாரு இவரு’ன்னு சிரிச்சுக்கிட்டே வந்த பிரான்ஸ், ஐம்பத்தைந்து நாட்கள் நடந்த போரில, காட்டில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டிருந்த ஹோசிமின் படைகளை எதிர்கொள்ள முடியாம மண்ணைக் கவ்வுச்சு. பிரான்ஸ் இப்படி தோல்வியைச் சந்திச்சாலும் தெற்கு வியட்நாம் அதோட கட்டுப்பாட்டிலதான் இருந்து்ச்சு. வடக்கு்ப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். ‘என் நாட்டை முழுமையா மீட்டே தீருவேன்’ன்னாரு ஹோசிமின்.

அசைவின்றி, சத்தமின்றி எரியும் புத்தபிட்சு!
பிரான்ஸ், ஹோசிமினை ஒரு கம்யூனிஸ்ட்னு சொல்லி அமெரிக்கா கிட்ட உதவி கேட்டுச்சு. கட்டப் பஞ்சாயத்துன்னா குஷியாகற, கம்யூனிஸ்ட்ன்னாலே பிடிககாத அமெரிக்கா  பிரான்ஸுக்கு ஆயுத உதவி பண்ணிச்சு. வியட்நாம் பூரா குண்டு மழை, துப்பாககி சத்தம்தான். பல ஆண்டுகள் ஹோசிமின் படை பிரான்ஸுக்கு தண்ணி காட்ட, அந்த கேப்ல அமெரிக்கால மூணு ஜனாதிபதிகளே பதவி மாறிட்டாங்கன்னா பாத்துக்குங்களேன். ‘சரி, இதெல்லாம் வேலைக்காவாது’ன்னு முடிவுகட்டி அமெரிக்காவே 1965ம் ஆண்டு நேரடியா போர்ல இறங்கிச்சு. அங்க புடிச்சது அமெரிக்காவுக்கு சனி. அதுவரைக்கும் தோல்வியே காணாத அமெரிக்காவோட மூக்கை உடைச்சாரு ஹோசிமின்.

எப்படிங்கறீங்களா...? அமெரிக்கப் படைங்க இரக்கமே இல்லாம வடக்கு வியட்நாம் மேல மானாவாரியா குண்டு வீசித் தாக்க ஆரம்பிச்சது. நிறைய கொரில்லா வீரர்களை வீழ்த்தியதா கொக்கரிச்சது. உண்மையில கொரிலாக்களால நிறைய அமெரிக்க வீரர்கள் இறந்ததையும், பலர் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடினதையும் அமெரிக்கா மறைச்சுட்டது. ‘சமாதானமாப் போயிடலாமே. வடக்கு வியட்நாமை மட்டும் நீ வெச்சுக்கோ’ன்னு ஹோசிமினுக்கு தூது விட்டுச்சு. ‘சுதந்திர நாடே என் லட்சியம்’னு உறுதியா முழங்கினாரு ஹோசிமின்.

1968ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமி்ட்டிருந்த அமெரிக்கப் படைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்துல இருந்த சமயம், சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினோட படைகள் திடீர்னு வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டாங்க. அமெரிக்க தூதரக அலுவலகம் உட்பட கொரில்லாப் படையினர் கைப்பற்றிட்டாங்க. இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிச்சுக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுச்சு. கம்யூனிஸ்ட்னு சந்தேகப்படற அப்பாவி பொதுஜனங்களைக் கூட கேள்விமுறையில்லாம சுட்டுத் தள்ளினாங்க. வயசானவங்க, குழந்தைங்கன்னு எந்த இரக்கமும் பார்க்கல. அவ்வளவுதான்... அது‌வரைக்கும் ‌ஹோசிமினோட கொரில்லாப் படைகள்தான் போராடிக்கிட்டிருந்துச்சு. இப்ப பொதுமக்கள்லருந்து புத்தபிட்சுக்கள் கூட போராட ஆரம்பிச்சாங்க. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இல்லாம புத்தபிட்சுக்கள் நடுரோட்ல தங்களைத் தாங்களே எரிச்சுககிட்டாங்க. இதையெல்லாம் டி.வி.யில பாத்த அமெரிக்க ஜனங்களே, தங்கள் அரசை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்ப எலக்ஷன் டயம்ங்கறதால ‘வியட்நாம்லருந்து படைகளை விலக்கிக் கொள்வேன்’னு உறுதிமொழி தந்து ஜனாதிபதியானாரு நிக்ஸன். (பி்னனால வாட்டர்கேட் ஊழல்ல பேர் நாறின அதே ஆசாமிதாங்க). படைகளை விலக்கிக்கற மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே, வியட்நாம் மேல தாக்குதலை தீவிரமாக்கி டபுள் கேம் ஆடினாரு அந்த பாவி மனுஷன்! ஏதோ உலகப் போர் ரேஞ்க்கு விமானங்கள் குண்டு மழை பொழிய... இடைவிடாத யுத்த பூமியாகவே தொடர்ந்தது வியட்நாம். இந்த நிலையிலதான் ஒரு பெரிய திருப்பம் வந்துச்சுங்க. 1972 மார்ச் மாசத்துல ‘நேப்பாம்’ங்கற கொடூரமான குண்டை அமெரிக்கா வீச, ஒரு வியட்நாமிய கிராமமே பத்தி எரிஞ்சுச்சு. அதுல தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றிட்டு நிர்வாணமா கதறிக்கிட்டு ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பாத்தவங்க அத்தனை பேர் மனசையும் உலுக்கிச்சு. (உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் இங்கே). அமெரிக்காவுலயே ஜனங்கள்ட்டருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த அதேசமயம் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண்டிச்சுக் குரல் கொடுத்து பாய ஆரம்பிச்சுச்சு.

கடைசியில வேற வழியே இல்லாம எல்லாத் துருப்புகளையும் வாபஸ் வாங்கிக்கிட்டாரு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன். வட வியட்நாம், தென் வியட்நாமோட இணைச்சு ஒரே சுதந்திர நாடாக மாறிச்சு. ஆனா விதியோட ‌கொடுமையான விளையாட்டு என்னன்னா... இதைப் பாக்கறதுக்கு ஹோசிமின் உயிரோட இல்ல. அதற்கு முன்னாலேயே இறந்து விட்டிருந்தார். அவர் இறந்தாலும் அவரோட புகழ் இறக்கலை. வெற்றிக்கு அருகாமை வரை தங்களை வழிநடத்தின அந்தத் தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள் ஒரு்ங்கிணைந்த வியட்நாமின் தலைநகரான சைகோனுக்கு ‘ஹோசிமி்ன் சிட்டி’ன்னு பேர் வெச்சு கெளரவப்படு்த்தினாங்க. ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube