Saturday, June 30, 2012

சரிதாவும், வால்களும்!

Posted by பால கணேஷ் Saturday, June 30, 2012

ஷாப்பிங் மாலில் சரிதாவும் நானும் தேவையானவற்றை எடுத்துக் கூடையில் போட்டபடி நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிரே உற்பத்தியானான் அவன். ‘‘நீங்க... கணேஷ் தானே?’’ என்றான். தலையசைத்தேன்.

‘‘என்னைத் தெரியுதா?’’

‘‘நான் கண்ணாடி போட்டிருக்கறதால சரியாப் பாக்க முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா? ப்ளூ கலர் ஷர்ட் போட்டிருக்கீங்க. ப்ரவுன் கலர் பேண்ட் போட்டிருக்கீங்க. நல்லாவே தெரியுது உங்களை...’’

நோகாமல் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, அதில்லை நான் கேட்டது. என்னை யாருன்னு உனக்கு அடையாளம தெரியுதா?’’

‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு... ஆனா சட்னு நினைவுக்கு வரலை. ஏதாவது க்ளூ கொடேன்...’’

‘‘தே ப்ரித்தோ ஸ்கூல்ல உன்னோட படிச்சவன் நான்...’’

கூர்ந்து கவனித்தேன். அலைபாயும் தலைமுடியும், கூரான நாசியும், துறுதுறு கண்களும்... ஆஹா! நினைவு வந்துவிட்டது. ‘‘டேய், நீயாடா? மறக்க முடியுமா உன்னை? ஸ்கூல் டேஸ்ல ரெண்டு பேரும் சேர்ந்து கொஞ்சநஞ்ச லூட்டியாடா அடிச்சிருக்கோம். ஆமா, உன் பேர் என்ன?’’ என்றேன்.

இம்முறை வலிக்கிற மாதிரியே தலையிலடித்துக் கொண்டான். ‘‘சிவநாத்டா! சிவான்னு கூபபிடுவியே...’’ என்றான். ‘‘ஸாரிடா சிவா. சில விஷயங்கள் மட்டும் மறந்து போகுது. நல்லாயிருக்கியா? எங்க இருக்‌க இப்ப?’’

‘‘மயிலாப்பூர்லடா...’’ என்றான்.

‘‘அடப்பாவி! நான் மாம்பலத்துல இருக்கேன்டா. ஒரே ஊர்ல பக்கத்துல இருந்தும் தெரியாமப் போய்டுச்சே. மயிலாப்பூர்ல நீ எங்க இருக்க?’’ என்று‌ கேட்டேன்.

‘‘நடுத்தெருவுலடா...’’

‘‘சின்ன வயசுலயே உங்கப்பா கொடுக்கற பாக்கெட் மணியையெல்லாம் செலவு பண்ணித் தீத்துடுவ. நீ ஒருநாள் நடுத்தெருவுலதான் நிப்பேன்னு அப்பவே எனக்குத் தெரியும்டா...’’

‘‘அடேய் பாதகா! நான் குடியிருக்கற வீடு இருக்கற தெருவுக்குப் பேர் நடுத்தெருடா.’’ என்றான் கோபமாக. சரிதா குபுக்கென்று சிரித்துவிட, நான் அவளை முறைத்தேன். நாங்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புகள், விசிட்டிங் கார்டுகளைப் பரிமாறிக் கொண்டபின் நான் சொன்னேன்: ‘‘டேய், வர்ற ஞாயித்துக்கிழமை மனைவிகள், குழந்தையக் கூட்டி்கிட்டு... ஸாரி, மனைவி, குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு சாப்பிட வந்துடு’’ என்றேன்.

‘‘வார்த்தைய மாத்திப் பேசற வழக்கம் இன்னும் உன்னைவிட்டுப் ‌போகலையா? சரி, வந்துடறேன்’’ என்று புன்னகைத்துவிட்டுச் சென்றான் சிவா.

ஞாயிற்றுக்கிழமை மனைவி யசோதாவுடனும், மூன்று குழந்தைகளுடனும் வந்தான் சிவா. அமைதியான முகத்துடன் புன்னகைத்த அவன் குழந்தைகளைப் பார்த்து பரம சாதுக்கள் என்று நான் நினைத்தது எவ்வளவு தவறு என்பது சற்று நேரத்தில் புரிந்து விட்டது. பரம வானரங்கள் அவை!

சிவாவை ரொம்ப நாள் கழித்து சந்தித்ததில் நாங்கள் ஹாலில் உட்கார்ந்து பழைய கதை பேசிக் கொண்டிருந்தோம். சமையலறையில் சிவாவின் மனைவியுடன் சமையலில் ஈடுபட்டிருந்த சரிதா, சமையல் மேடைக்கு கீழேயிருந்த எண்ணைத் தூக்கை எடுப்பதற்காகக் குனிய, அதைக் கண்டதும் வேகமாக ஓடிவந்த சிவாவின் மூத்த பெண் அவள் மேல் கை வைத்து பச்சைக் குதிரை தாண்டியது.

அந்த வேகத்தில் சரிதா கவிழ்ந்து உருண்டுவிட, அவள் மேல் பாத்திரங்கள் டமடமவென உருள, எண்ணை தூக்கிலிருந்து கொட்ட... சமையலறையிலிருந்து வந்த களேபரமான சத்தத்தைக் கேட்டு தன் வாரிசுகளில் ஒன்றின் கைங்கரியமாயிருக்கும் என்றபடி ஓடிய சிவா, எண்ணெயில் கால் வைத்து ராபணாவென்று மல்லாந்து விழுந்து வைத்தான் பின்னந்தலை ‘ணங்’கென்று தரையில் மோதியது. நான் பதறி, அவனை கை பிடித்துத் தூக்கி நான் சோபாவில் உட்கார வைக்க, சோபா உறையெல்லாம் பாழ், எண்ணைக் கறை!

மல்லாக்க விழுந்து தலையில் அடிபட்ட தாக்கத்தில் அவன் இ.தி.கு.‌ போல விழித்தபடி இருக்க, ஹாலுக்குள் நுழைந்த சரிதா, ‘குறைவு குறைவு’ என்று (அதாங்க... லோ லோன்னு) அலறினாள். திரும்பிப் பார்த்தேன். சிவாவின் இரண்டாவது வாரிசு என் டேபிளில் இருந்த பென் ஸ்டாண்டில் இருந்து எடுத்த மார்க்கர் பேனாவை வைத்து சுவரில் சித்திரம் வரைந்து பழகிக் கொண்டிருந்தது. ஒரு பக்கச் சுவரில் பாதியளவில் மாடர்ன் ஆர்ட் மங்காத்தாவாக மாறி கிறுக்கித் தள்ளியிருந்தது.

வேகமாக சமையலறையிலிருந்து வந்த யசோதா அதன் முதுகில் ஒன்று வைத்து, மார்க்கர் பேனாவைப் பிடுங்கி வைத்தாள். ‘‘சின்னவன் எங்கடி காணோம்?’’ என்று முனகினான் சிவா ஈனஸ்வரத்தில். அனுபவ தோஷத்தால் யசோதா நேராக ஃப்ரிட்ஜின் அருகில் சென்று, பாதி திறந்திருந்த அதன் கதவை முழுவதுமாகத் திறந்தாள். யசோதா பெற்ற மூன்றாவது தவப்புதல்வன் உள்ளே சரிதா வைத்திருந்த கேக், சாக்லெட், தயிர் வகையறாக்களை வாயில் அடக்கி மென்று கொண்டு சாக்ஷாத் கண்ணன் போல சிரித்தான். சரிதாவின் கண்களில் தெரிந்த அனலுக்கு, பாத்திரத்தை அவள் முகத்தில் வைத்திருந்தால் சமையலே பண்ணியிருக்கலாம்.

ஒரு இடத்தில் நிற்காத அந்தக் குழந்தைகளை ஒரு வழியாக கண்ட்ரோல் செய்து சிவாவையும் யசோதாவையும் சாப்பிட வைத்து வழியனுப்பினேன். அவன் காரைக் கிளப்பிச் சென்றதும், உள்ளே வரத் திரும்பிய என்னை மாடிப்படி வளைவில் சோளக்கொல்லை பொம்மை போல கைகளைப் பரப்பி நின்று மறித்தார் வீட்டுச் சொந்தக்காரர்.

‘‘என்ன சார், டிராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி போஸ் கொடுக்கறீங்க..? வழியை விடுங்க’’ என்றேன்.

‘‘இந்தாப்பா... வர்ற மாசம் அட்வான்ஸைக் கொடுத்துடறேன். நீ வேற வீடு பாத்துக்கோ...’’ என்றார்.

‘‘ஏன் ஸார்...? வாடகைல்லாம் ஒழுங்காக் குடுத்துடறேனே...’’

‘‘அதெல்லாம் சரிதான். நீ குடிவரும்போது என்ன சொன்னே...? ஒரு புருஷன் பொண்டாட்டி மட்டும்தான்னு தானே சொன்னே?’’

‘‘இப்ப மட்டும் என்ன மூணு பொண்டாட்டியா வெச்சிருக்கேன்? ஒண்ணையே சமாளிக்க முடியலையே’’ என்றேன் கோபம் பாதியும், பரிதாபம் பாதியுமாக.

‘‘அசிங்கமாப் பேசாதய்யா... ஞாயித்துக்கிழமை ஒரு நாள் மனுஷன் நிம்மதியா வீட்ல இருக்க விடறீங்களா? உன் வீட்லருந்து ஒரே கூசசல், குழப்பம். என்னன்னு ‌போய்ப் பாத்தா... வீடெல்லாம் கன்னாபின்னான்னு கிறுக்கல். யுத்தகளம் போல வீடே கன்னாபின்னான்னு இருக்கு. நீ முதல்ல வேற வீடு பாரு...’’

அவரைச் சமாதானப்படுத்திவிட்டு வருவதற்குள் விழி பிதுங்கி விட்டது எனக்கு. வீட்டினுள் வந்து பார்த்தபோது... புயல் கடந்த பூமி போல இருந்தது. ‌தலையில் கை வைத்துக் கொண்டு வீட்டின் நடுவில் உட்கார்ந்திருந்தாள் சரிதா. ஐயோ பாவம்... எந்தப் பொருளும் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு வீடு நீட்டாக இருக்க வேண்டும் அவளுக்கு. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் என்னையே (வழக்கம்போல) சரமாரியாகத் திட்டுவாள்.

 ‘‘ஹப்பா... இனிமே யாரையாவது வீட்டுக்கு இன்வைட் பண்ணினா, குழந்தைங்களைப் பத்தி விசாரிச்சுட்டுத்தான் இன்வைட் பண்ணனும் போல...’’ என்று நான் சொன்ன அதே நேரம், அவளின் மொபைல் மெஸேஜ் வந்ததற்கு அடையாளமாய், ‘கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்கய்யா...’ என்று வடிவேலுவின் குரலில் அலறியது. மொபைலின் இன்பாக்ஸைத் திறந்து எஸ்.எம்.எஸ்ஸைப் படித்தவள் சொத்தைக் கடலையை மென்று விட்டவள் போல முகத்தைச் சுளித்தாள். திருதிருவென்று விழித்தாள்.

‘‘என்னாச்சு சரி? ஏன் அப்படி ‘‌ஙே’ன்னு முழிக்கிறே?’’

‘‘உங்கண்ணன் நாளைக்கு அவர் குழந்தைகளோட வரப்போறதா மெஸேஜ் குடுத்திருக்கார்... உங்கண்ணன் பசங்க ரெண்டும் சரியான ரெட்டை வாலாச்சே...’’

‘‘அதுக்கென்ன பண்ணச்‌ சொல்ற இப்ப...?’’

‘‘நிப்பாட்டணும். எல்லாத்தையும் நிப்பாட்டணும்’’ என்றாள். (நேற்று டிவியில் ‘தளபதி’ பார்த்த பாதிப்பு)

‘‘எங்கண்ணன் எதுக்கு எனக்கு போன் பண்ணாம உனக்கு மெ‌ஸேஜ் கொடுக்கறார்..?’’ என்றபடி அவள் மொபைலை வாங்கிப் பார்த்த நான் குபீரென்று சிரி்த்து விட்டேன்.

‘‘ஏன் சிரிக்கறீங்க?’’

‘‘கண் செக்கப் பண்ணி கண்ணாடி போடணும் உனக்குன்னு சொன்னா கேக்கறியா? மெஸேஜ் குடுத்திருக்கறது எங்கண்ணன் பாரதி இல்லடி. உங்கண்ணன் சாரதி. வரவேண்டாம்னு போன் பண்ணிச் சொல்லி நிப்பாட்டிரலாமா?’’ என்றேன்.

‘‘எங்கண்ணன் எப்பவோ ஒரு தரம் வர்றார். அது உங்களுக்குப் பொறுக்கலியா? அவரோட நாலு குழந்தேளையம் கூட்டிட்டு ஊரைச் சுத்திக் காட்டிட்டுத்தான் அனுப்பணும்’’ என்றாள்.

‘‘சரியாச் சொன்னே... அதுங்க குழந் தேளுங்கதான்! அதுங்கல்லாம் வாலில்லா ‘முன்னோர்கள்’ ஆச்சே! நாலு வாண்டுகளும் நாப்பது குழந்தைங்க பண்ற அட்டகாசத்தைப் பண்ணிடுமே.. இப்பவே வீட்டுக்காரரை தாஜா பண்றதுக்குள்ள ‌போறும் போறும்னு ஆயிடுச்சு. அந்த கும்பல் வேற வந்துச்சுன்னா... வேற வழியேயில்ல... நாம வேற வீடு பாக்க வேண்டியதுதான்!’’ என்றேன். ‘ஙே’ என்று விழிக்க ஆரம்பித்தாள் சரிதா.


Friday, June 29, 2012

நடை வண்டிகள் - 23

Posted by பால கணேஷ் Friday, June 29, 2012

கடுகு அவர்களும் நானும் - 1
கைச்சுவையாக நடிப்பதன் மூலம் சிரிப்பை வரவழைப்பதை விட பலமடங்கு கடினமானது நகைச்சுவையான எழுத்தின் மூலம் சிரிப்பை வரவழைப்பது. மனதை உருக்கி அழ வைக்கும்படி கதைகளை சற்று முயன்றால் எவரும் எழுதிவிட முடியும். நகைச்சுவையாக எழுதுவது அத்தனை சுலபமில்லை. (சிலபேர் நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதியே நம்மை அழ வைத்து விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்). நகைச்சுவை எழுத்தில் ஒரு ஜித்தர் கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள்.

என்னுடைய பள்ளி நாட்களிலேயே அகஸ்தியனின் எழுத்து எனக்கு அறிமுகம் ஆனது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் எந்தப் பத்திரிகையும் வாங்குவது கிடையாது. விகடன், குமுதம், கல்கி போன்ற வார இதழ்கள் எதுவும் எனக்குத் தெரியாது. செய்தித்தாள்கள் மட்டுமே அறிந்திருந்தேன். என் அத்தையின் கணவர் தினமணி நாளிதழில் ‘நேரக்காப்பாளர்’ பணியில் இருந்தார். ஆகவே தினமணி வெளியிடும் தினமணி கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகிய புத்தகங்கள் Complimentary ஆக அவருக்கு வந்து விடும். அவற்றைப் படிபபதற்காகவே ஞாயிறு வந்தால் அத்தையின் வீட்டிற்கு ஓடுவேன்.

அப்போது தினமணி கதிர் இதழில் ‘பெரியசாமி ஒளிக்கதிர்’ என்கிற அவரின் சிறுகதை ஒன்று வெளியாகியிருந்ததைப் படித்தேன். பேராசிரியர் பெரியசாமி ஒரு லேசர் மிஷினைக் கண்டுபிடிப்பார். அந்த ஒளிக்கதிரைப் பாய்ச்சினால் ஒரு பொருளை டெம்பரரியாக மறைய வைக்கவும், மீண்டும் தோன்றச் செய்யவும் முடியும் என்பது அவர் கண்டுபிடிப்பு. அதை ஒரு காலேஜில் டெ‌மோ காட்டுவதற்காக ‌மேஜையில் இருக்கும் டீ கப்பின் மேல் லேசரைப் பாய்ச்சி அதை மறைய வைப்பார். பின் வேறொரு விசையை முடுக்கி லேசர் மூலம் அதை மீண்டும் வரவழைப்பார். இதே பரிசோதனையை ஒரு கல்லூரி மாணவன் மேல் அவர் பிரயோகிக்க, மாணவன் காணாமல் போய் விடுவான். ஆனால் மீண்டும் வரவழைக்காது மிஷின்.

பெரிய கலாட்டாவாகி, பெரியசாமியின் நண்பர் மயக்கமடைந்து மிஷினின் மேல் விழ, ஏதோ ஒரு பட்டன் முடுக்கப்பட்டு பையன் மீண்டும் வந்து விடுவான். அனைவரும் அந்த ஹாலை விட்டே ஓட, மிஷின் வெடித்து தன்னையே அழித்துக் கொண்டு விடும். இந்தக் கதையை வரிக்கு வரி நகைச்சுவை ததும்ப அவர் எழுதியிருந்தார். சத்தம் போட்டுச் சிரித்துப் படித்து மகிழ்ந்தேன். அதன்பின் வந்த வாரங்களில் பேராசிரியர் பெரியசாமியை வைத்து ‌தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். (பேராசிரியர் பெரியசாமி கதைகள், சாமுவேல் சார் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து ‘ரொட்டி ஒலி’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.)

அதன் பின்னர் நான் படித்த அகஸ்தியனின் எழுத்துக்களில் வந்த கமலாவும், தொச்சுவும், அங்கச்சியும் முழுமையாக என்னை ஆட்கொண்டு ரசித்துச் சிரிக்க வைத்தனர். கடுகு என்ற பெயரில் சின்னச் சின்ன துணுக்குச் செய்திகளும், சுவாரஸ்யமான கட்டுரைகளும் வெளியானதை படித்திருந்தேன் நான். அகஸ்தியன்தான் கடுகு என்பது மட்டும் அப்போது எனக்குத் தெரியாது. அப்போதைய தினமணி கதிரின் ஆசிரியர் சாவி ஸார் 128 பக்கங்களுக்கும் அதிகமாக கனமான மாத நாவல் ஒன்றும் தினமணியிலிருந்து வெளியிட்டு வந்தார். அந்த மாத இதழில் படித்த ‘மிண்ட்டா ரோடு’ மற்றும் ‘சொல்லடி சிவசக்தி’ ஆகிய அகஸ்தியனின் நாவல்கள் நினைவை விட்டு நீங்காகதவை.

மதுரையை விட்டுச் சென்றதும் இந்த படிப்புத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் கல்லூரி நாட்களில்தான் படிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் ‌கொண்டேன். அச்சமயம் சாவி இதழிலும் மோனாவிலும் அகஸ்தியனை மீண்டும் படித்தேன். மோனா மாத இதழில் ‘கொல்லவல்லாயோ கிலியே’ என்ற தலைப்பில் ஒரு க்ரைம் கதை அவர் எழுதியிருந்தது என்னை விழி உயர்த்த வைத்தது. அவர் எழுதிய ‘அலைபாயுதே கண்ணா’ நாவல் என் ஆல்டைம் ஃபேவரைட்களில் ஒன்று.

பின்னாளில் வெளிவந்த பாரதிராஜா இயக்கிய ‘புதுமைப் பெண்’ படத்தின் கதை பல அம்சங்களில் இந்த நாவலை ஒத்திருந்தது. (நோ... நோ... பாரதிராஜா சுட்டு விட்டார் என்றெல்லாம் உடனே நினைத்துவிட வேண்டாம். கடுகு ஸாரே அப்படி நினைக்கவில்லை.) வியக்கத் தக்க பல ஒற்றுமைகள் இரண்டுக்கும் இருந்ததை ஒரு கடிதமாக பாரதிராஜாவுக்கு கடுகு ஸார் எழுத, அதற்கு அவர் தந்த பதிலையும் ‘பாரதிராஜாவும் நானும்’ என்ற தன் பதிவில் எழுதியிருக்கிறார் கடுகு அவர்கள்.

இப்படி என் பள்ளி நாட்களிலும், சற்றே இடைவெளிக்குப் பின் கல்லூரி நாட்களில் தொடங்கி இன்று வரை ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்துக்குச சொந்தக்காரரான கடுகு என்கிற அகஸ்தியனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று மட்டும் எனக்குத் தோன்றியதில்லை. காரணம்... அவர் கட்டுரைகளைப் படித்ததிலிருந்து டெல்லியில வசிக்கிறார் என்பதை புரிந்து கொண்டிருந்தேன். ‘சுபா’வுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, சென்னைவாசியாக நான் ஆகிவிட்ட ஒரு காலச்சதுரத்தில் சுபா சொல்லித்தான் கடுகு ஸார் சென்னைவாசியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன என்கிற விஷயம் தெரிந்தது.

பிற்பாடு சுபாவின் மூலமாகவே கடுகு அவர்களுடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது. (ஒரு பள்ளி மாணவன் தென்னை மரத்தைப் பற்றிய கட்டுரைக்கு மனப்பாடம் செய்து கொண்டு போக, பரீட்சையில் பசுவைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டிருக்க, இவன் படித்த தென்னை மரத்தைப் பற்றி விரிவாக எழுதி கடைசியில், ‘இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தில் பசுவைக் கட்டுவார்கள்’ என்று எழுதினான் என்ற துணுக்குச் செய்தி இந்தக் கட்டுரையைப் படிக்கையில் உங்கள் நினைவில் இடறினால் நான் பொறுப்பல்ல.) அந்த முதல் சந்திப்பில் துவங்கி...

                                                                          -தொடர்கிறேன்...

==================================================

                               சென்னையில் பதிவர் சந்திப்பு - ஆகஸ்டு-19 

லையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. 

கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பன உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். பட்டியல் தயாரிக்க வசதியாயிருக்கும்.

                                   நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை)  
                                 இடம் : மாணவர் மன்றம், சென்னை.

தங்களின் வருகையை 98941 24021(மதுமதி), 73058 36166(பா.கணேஷ்), 94445 12938(சென்னைப்பித்தன்), 90947 66822(புலவர்.சா.இராமநுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

==================================================

Monday, June 25, 2012

மொறு மொறு மிக்ஸர் - 8

Posted by பால கணேஷ் Monday, June 25, 2012

முதல்ல ஒரு சின்னப் புதிரோட ஆரம்பி்க்கலாம். இங்க தீக்குச்சிகளால ஒரு மீன் உருவம் செஞ்சிருக்கேன். இதுலருந்து மூணே மூணு குச்சிகளை மட்டுமே நகர்த்தி, வலது பக்கம் பார்த்திட்டிருக்கற இந்த மீனை இப்படி இடது பக்கம் பாக்கற மாதிரி பண்ணனும். எப்படி சாத்தியம்னு யோசிங்க. யாரும் விடை சொல்லாட்டி அடுத்த பதிவில் விடை சொல்லப்படும்.

===========================================

கோபம், சந்தோஷம் ‌சோகம் -இந்த மாதிரி பல .உணர்ச்சிகளின் கலவையாதான் மனுஷன் வாழ வேண்டியிருக்கிறது. இந்த எழில்மிகு சென்னையில சின்னச் சின்ன விஷயங்கள்கூட எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது. 

போன வாரம் என் நண்பன் ஒருவனுக்காக மே‌.சைதாப் பேட்டையில் வீடு பார்க்கப் போயிருந்தோம். வீட்டுக்காரர் வாடகை, அட்வான்ஸ் போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டு, ‘கரண்ட் சார்ஜ் ஒரு யூனிட்டுக்கு நாலு ரூபாய் கொடுத்துடுங்க’’ என்றார். ‘ஈ.பி. ஆபீசுக்கு அவ்வளவா கட்ட வேண்டியிருக்கு்ம்’ என்ற எண்ணம் மனதில் ஓட, நான் கேள்வியாக அவரைப் பார்க்க, ‘‘மத்தவங்கல்லாம் 5 ரூபா, 6 ரூபான்னு வாங்கறாங்க... நான்தான் நியாயமாக் கேட்டிருக்கேன்’’ என்றார். இது எப்படி இருக்கு? ‘‘அவனவன் கொலையே பண்றான். நான் கையத் தானே வெட்டறேன். எவ்வளவு நல்லவன் நான்?’’ என்கிற மாதிரி இல்லை..? குறைந்தபட்ச அயோக்கியனாய் இருப்பது என்பதே நல்லவனுக்கான அளவுகோலாய் மாறி விட்டதா என்ன?

இன்னொரு ‌எரிச்சல் இந்த ஏ.டி.எம். இயந்திரங்கள் படுத்தும் பாடு. குறிப்பாக நான் கணக்கு வைத்திருக்கும் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மிஷின்கள். ஏதாவது அவசரத்துக்கு 100 அல்லது 200 எடுக்கலாம் என்று நினைத்தால், 500க்கு குறைந்து பணம் தர மாட்டேன் என்று அடம் பிடிககின்றன. தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களை அதிகப் பணம் ‌எடுத்து நிறைய செலவு பண்ண வைத்துக் காலியாக்குவதில் இந்த மிஷின்களுக்கு என்ன அற்ப சந்தோஷமோ?

===========================================


ஸார்..! உங்க ஸ்பிரிங் நாற்காலியிலே ஏதோ ரிப்பேர்னு சொன்னீங்களாமே மானேஜர்கிட்டே? அதுக்கு தச்சனைக் கூப்பிட்டு வந்திருக்கேன். என்னங்க ஸார் ரிப்பேர் அதிலே..?’’

===========================================

ரு சம்பவம் என்னால் மறக்க முடியாதது. மழை பெய்து ஓய்ந்து தண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருந்த ஒரு மழை நாளில் நான் காலை ஜாகிங் போய்கொண்டிருந்தேன். ஒரு பெரிய கார்  என்னைக் கடந்து வேகமாய் போனது. நான் ஓடிக்கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருக்க அந்தக் கார் போன வேகத்தில் என் மேல் நீரை இறைத்துவிட்டு போனது. நான் ஓடுவதை நிறுத்திவிட்டு அந்தக் காரை வெறித்துப்பார்த்தேன். அந்தக் கார் நிற்பதுபோல வேகம் குறைந்தது  ஆனால் அது சிக்னலுக்கு அருகில் இருந்ததால் உடனே விரைந்து சென்றுவிட்டது. நான் கார் காரனை உரக்கத்திட்டிவிட்டு ஓடுவதைத் தொடர்ந்தேன்.

அன்றைக்கே  அதைப் பற்றி மறந்தும் போனேன். அந்த வாரம் முழுக்க அவ்வப்போது மழை பெய்ததால் தினமும் காலையில் ஓடும் பழக்கம் நின்றுபோய் ஒரு நான்கைந்து  நாட்களுக்குப் பிறகு மழை நின்ற அன்று  மறுபடி ஜாகிங் போனேன்.  என் மேல் தண்ணீர் இறைத்துவிட்டுப் போன அதே ஸ்தலத்தில் ஒருவர் என்னை வழிமறித்தார். நான் இந்தியன் என்பதை கண்டுபிடித்தவர் போல ரொம்ப பிரயத்தனப்பட்டு ”நமஸ்தே” என்று கைக்கூப்பினார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்ல அவர் உடனே “ என்னை மன்னிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு முன்பு இந்தச் சாலையில் காரில் போகும்போது உங்கள் மேல் தண்ணீர் இறைத்துவிட்டுப் போயிட்டேன். சிக்னலைக் கடப்பதிலேயே கவனமாய் இருந்ததால் உங்களை கவனிக்கவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் சப்தம் வந்தபின் கவனித்தேன் என் பின்னால் கார்கள் வந்து கொண்டிருந்ததால் உடனே காரை நிறுத்த முடியவில்லை. மன்னிக்கணும்” என்றார்.

நான் வியந்து போனேன். அவர் என்னைவிட இருபத்து ஐந்து வருடங்கள்  மூத்தவர். அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட விதமும் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்பதற்காக அந்த சாலையில் கடந்த நான்கு நாட்களாய் அதே நேரத்தில் காத்திருந்து என்னை சந்தித்திருக்கிறார் என்பதும் என்னை மிகவும் நெகிழ்வித்தது. நான் மிகுந்த பெருந்தன்மை உணர்வுள்ளவனாய் “ பரவாயில்லை சார். கார் ஓட்டும் போது இது சகஜம். உங்கள் கனிவுக்கு நன்றி” என்று அவரை சமாதானம் செய்தேன். என்னுடன் இரண்டு நிமிடம் பேசிவிட்டு மறுபடி ஒரு நமஸ்தே சொல்லிவிட்டு அவர் மனநிறைவோடு காரில் ஏறிப் போனார்.

-‘கதவுகள் திறக்கும்’ அனுபவத்தொடரில் ஆனந்த்ராகவ்

பி.கு.: ஆ.ரா. வசிப்பது இந்தியாவில் அல்ல... வெளிநாட்டில்

===========================================

ரு மலையின் உசசியில ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சிட்டு ஒரு காதல் ஜோடி நிக்கறாங்க. நோ... நோ... புன்னகை மன்னன்ல மாதிரி குதிக்கப் போறாங்கங்கற உங்க கற்பனையை கட்... கட்! அவங்க அங்க நின்னபடி பேசிக்கறாங்க.

ஆனந்த்: ‘‘ரேணு! இந்த மலையோட ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஒரு மலை உச்சியில நின்னு நாம சத்தமா நம்ம பேரைச்‌ சொன்னா எதிரொலியா அதே குரல்தான் திரும்ப வரும். இந்த மாலையில மட்டும் நம்ம பேரை கத்திச் சொன்னா, நம்ம லவ்வரோட பேரைச் சொல்லும்...’’

ரேணு: ‘‘‘ரியல்லி? நான் ட்ரை பண்ணிப் பாக்கறேன்... ரோமியோ...’’ என்று கத்துகிறாள். மலை ‘ஜுலியட்’ என்று குரல் தருகிறது. ரேணு ‘அட’ என்று வியந்து போனவளாய், ‘‘ஆனந்த்!’’ என்று சத்தமாய்க் கத்துகிறாள். மலை ‘‘ரேணு’’ என்கிறது. ரேணு குதூகலமாய் ஆனந்தைக் கட்டிக் கொள்கிறாள். ஒன்றிரண்டு நொடிகள் கழித்து மலை ‘‘ப்ரியா, தீபா, திவ்யா’’ என்று சொல்லிக் கொண்டே போகிறது. ஓ நோ..! அதன்பின் அங்கு என்ன நடந்திருக்குமென்பது உங்கள் கற்பனைக்கே!

===========================================

டி.எம்.எஸ். சிவாஜிக்கு ஒரு மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் பாடுகிறார் என்று சில பதிவுகளுக்கு முன்னால் எழுதியிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் பழைய குமுதம் புத்தகம் ஒன்றைப் புரட்டுகையில், குமுதத்தில் அந்நாளிலேயே (1965-70) இதே கேள்வியை எழுப்பியிருந்ததை கவனித்தேன். அந்தப் பகுதியை ஸ்கேன் செய்துவிட்டேன் உடனே. இதோ அது...



புதிரின் விடை :


அடுத்த பதிவுல சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா... மக்களை அதிகம் வெய்ட் பண்ண வைக்க விரும்பாம சொல்லிட்டேன்.
கத்தரித்தவை-5 கண்டு புன்னகைக்க... மே.மை. செல்க!

Saturday, June 23, 2012

நடை வண்டிகள் - 22

Posted by பால கணேஷ் Saturday, June 23, 2012

இந்திரா சௌந்தர்ராஜனும் நானும் - 5
அதன் பின்னர் நெல்லையில் இருந்து மதுரை வரும் போதெல்லாம் தவறாமல் அவரைச் சந்தித்து உரையாடுவது என்பது நிகழ்ச்சி நிரலில் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சிறிது காலத்தில் நெல்லையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. சென்னை வந்த பின் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வதோடு சரி. சென்னை வரும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் ‘ப்ளையிங் விசிட்’டாகத்தான் வருவார் என்பதால் சந்திக்கும் வாய்ப்புக் குறைந்து‌ போனது.

ஜி.அசோகன் அவர்களின் க்ரைம் நாவல் அலுவலகத்தில் நான் பணியில் இருந்த சமயம் ‘பாக்கெட் நாவல்’ இதழில் மாதந்தோறும் அவரது நாவல்தான் வெளிவந்து கொண்டிருந்தது. அதனால் ஒவ்வொரு மாதமும் நாவல் அனுப்பியது்ம் கருத்துக் கேட்பார். பாராட்டுதலோ, குறைகளோ மனதில் தோன்றியதை மறக்காமல் ‌சொல்வேன்.

அந்தப் பணியிலிருந்து விலகிய பின்னர் பணத்தேவை எனக்கு அதிகம் இருந்த ஒரு காலகட்டத்தில் அவரது நூல்களை மாதந்தோறும் வெளியிட்டு வந்த பதிப்பாளர் பொன்.சந்திரசேகர் என்பவரை அறிமுகம் செய்வித்தார் இந்திராஜி. (பொன்.சந்திரசேகர் இன்றளவும் என் நல்ல நண்பர்களில் ஒருவர்.) அவர் வெளியிட்டு வந்த இந்திராஜியின் நாவல்களை வடிவமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறத்தாழ ஓராண்டு காலம் அதை மகிழ்வுடன் செய்து கொண்டிருந்தேன். அதன்பின் வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்து கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்த காலகட்டத்தில் அந்தப் பணியைத தொடர இயலாமல் விட்டுவிட்டேன். சமீபத்தில் நண்பர் சந்திரசேகர் மீண்டும் தொடர்பு கொண்டு எனக்கு அந்த வாய்ப்பைத் தந்ததால் இப்போது தொடர்ந்து அதில் ஈடுபட்டிருக்கிறேன்.

தினம தவறாமல் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் கொண்ட ஆன்மீகவாதி அவர். ஜோதிடம், ஜாதகம் இவற்றில் எல்லாம் துளியும் நம்பிக்கையற்றிருந்த எனக்கு அவை முறைப்படி பயின்று செய்தால் அரிய‌ கலைகளே என்பதை விளக்கிப் புரிய வைத்தவர் அவர். இப்படி அவருடன் பழகி வருவதில் நான் கற்றதும் பெற்றதும் அதிகம். இன்றளவும் எங்களி்ன் நட்பு தொடர்ந்து கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

                                              -‘இந்திரா செளந்தர்ராஜனும்’ நானும் நிறைகிறது;
                                                             ‘கடுகு அவர்களும் நானும்’ துவங்குகிறது.

======================================================================

                         அரிய(க்குடியின்) நகைச்சுவை!

ந்த நாளில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இசை மேதை. நாங்கள இருந்த தெருவில்தான் அவரும் அப்போது இருந்தார். ஐயங்காருக்கு ‌சிலேடையும், கிண்டலும் ரொம்பத்தான் உண்டு. ஒரு சிஷ்யன் அவரெதிரில் பவ்யமாக வந்து நின்றான்.

‘‘எங்கேடா உன்னை ரொம்ப நாளாக் காணும்?’’

‘‘காசிக்குப் போயிருந்தேன்...’’

‘‘அப்படியா? உனக்கெதுக்குடா காசி?’’

‘‘ஏதோ போனேன். அங்கேயும் ஒரு நல்ல குரு ‌கிடைச்சர். நாலு கீர்த்தனை கத்துக் கொடுத்தார்.’’

‘‘பரவாயில்லையே... எங்கே... ஒண்ணு பாடு!’’

சிஷ்யன் அப்படியே .உட்கார்ந்து பாடத் தொடங்கினான். சங்கீதத்தில் அரைகுறையான எனக்கே கேட்கச் சகிக்கவில்லை. ஆனால் ஐயங்காரோ புன்னகை மாறாமல் உட்கார்ந்திருந்தார். இளைஞன் பாடி முடித்ததும், நக்கலாக ஒரு கேள்வி கேட்டார்:

‘‘ஏண்டா அம்பீ! காசிக்குப் போறவா, போயிட்டு வந்ததுக்கு அடையாளமா காயை விடுவா, கனியை விடுவா. நீ சுருதியையே விட்டுட்டியேடா...’’

அ...ப்....பா... அன்றைக்குச் சிரித்த சிரிப்பில் வயிற்று வலியே வந்து விட்டது.

                                                            -‘சிரிக்கப் பழகு’ நூலில் அனுராதா ரமணன்

மேய்ச்சல மைதானத்தில் - கேப்ஸ்யூல் நாவல்-1

Thursday, June 21, 2012

சரிதாவின் செல்ல ‘டார்லிங்!’

Posted by பால கணேஷ் Thursday, June 21, 2012

ரு வாரமாக அலுவலகத்தில் நிறைய ஆணி பிடுங்க வேண்டிய நிலை எனக்கு. காலையில் போனால் வருவதற்கு இரவாகியதில் மூட் அவுட்டாகி சோர்ந்து போயிருந்த சரிதாவைக் கவனிக்கவே முடியவில்லை. அன்று இரவு உணவு பரிமாறியபடி சொன்னாள். ‘‘என்னங்க... இது கொஞ்சம்கூட நல்லால்லை...’’

‘‘கேரட் பொறியல்தானே? நிறைய உப்பு சேர்த்துட்டே... அதான்...’’ என்றேன். கோபமாய் முறைத்தாள். ‘‘அதில்லை. நீங்களானா காலையில போனா நைட்தான் வர்றீங்க. வீட்ல போரடிக்குது. புத்தகம் படிச்சா சோம்பலா, தூக்கம்தான் வருது. இருக்கற டிவிடி எல்லாத்தையும் ரெண்டு போட்டுப் பாத்துட்டேன். ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போலாம்னா, அவஅவ ஸம்மர் வெகேஷன்னுட்டு ஊருக்குப் போயிட்டாளுங்க. ப்ளாட் சிஸ்டத்துல மத்தவங்கட்ட அரட்டை அடிக்கவும் முடியலை. வாழ்க்கையே வெறுத்துப் போகுதுங்க...’’

‘‘வாழ்க்கை வெறுத்துடுச்சா? தற்கொலை பண்ணிக்கறதுல்லாம் சட்டப்படி தப்புடி’’

‘‘எனக்கென்ன தலையெழுத்தா? நான் எங்கம்மா வீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு வர்றேன்...’’

‘‘ஒரு வாரம் நிம்மதி’’ என்று நான் முணுமுணுத்தது அவள் காதில் விழுந்து தொலைத்தது. ‘‘என்னா...து? என்ன சொன்னீங்க?’’ என்று தோள்கள் ஏறி இறங்க, ஜல்லிக்கட்டில் சார்ஜ் செய்த காளை மாதிரி புஸ் புஸ்ஸென்று கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள்.

‘‘ஐயோ, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட சரி. ஒரு வாரம் வீட்டு வேலை எதுவும் செய்யாம, நிம்மதியா அம்மா வீட்ல நீ என்ஜாய் பண்ணுங்கறதைத்தான் சுருக்கமா நான் சொன்னேன்... ஹி... ஹி...’’ என்றேன்.

ரு வாரம் சந்தடியில்லாமல் சந்தோஷமாகப் போனது. திரும்பி வந்த சரிதா கொண்டு போயிருந்த சூட்கேஸுடன் சேர்த்து ஒரு கூடையையும் கொண்டு வந்திருந்தாள். ‘‘என்னங்க... இந்தக் கூடைல என்ன இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்...’’

‘‘என்ன.. . உங்கம்மா முறுக்கும், லட்டும் பண்ணிக் குடுத்து விட்ருப்பாங்க. சரியா...?’’ என்றபடி கூடைக்குள் கை விட்டவன் சுருக்கென்று கையை வெளியே எடுத்தேன். கையில் ஏதோ ஈரமாகப் பட்டது போலில்லை? கூடைக்குள் எட்டிப் பார்க்க, நாக்கை நீட்டியபடி மினியேச்சர் போல குட்டி நாய் ஒன்று வாலாட்டியது. ‘‘ஐயய்யே... என்னம்மா இது?’’ என்றேன் முகத்தைச் சுளித்தபடி. எனக்கு செல்லப் பிராணிகள் என்றாலே அலர்ஜிதான்.

 ‘‘அதுங்களா.. அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டு ரோஸி குட்டி போட்டிருந்துச்சு. ரொம்ப அழகா இருந்துச்சா... அதான் ஒண்ணை எடுத்துட்டு வந்துட்டேன்’’ என்றாள். அது வேண்டாம் என்று நான் மறுக்க, அவள் வாதாட, நாய் இடையில் குலைக்க, கடைசியில் (வழக்கம் போல) என் குடும்பத்தை அவள் வம்புக்கிழுத்துவிட பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டியதாயிற்று நான்.

‘நாய் படாத பாடு’ என்கிறார்களே... சரிதாவின் ‘டார்லிங்’(நாயின் பெயர்)கைப் பார்த்திருந்தால் பழமொழியை மாற்றி ‘மனுஷன் படாத பாடு’ என்று சொல்லி விடுவார்கள. அடுத்த நாள் டார்லிங்குக்காக ஷாப்பிங் போய்விட்டு அவள் வாங்கி வந்திருந்தவைகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். நாய்க்குக் கூட இவ்வளவு வெரைட்டியாக சோப், ஷாம்பு, பிஸ்கட் எல்லாம் இருக்கிறதா என்ன? 

‘‘சரி... உனக்குக் கூட அழகுபடுத்திக்க இவ்வளவு ஐட்டம்லாம் வாங்கின மாதிரி தெரியலையே...’’ என்றேன். ‘‘சும்மா இருங்க... எப்பப் பாரு கண்ணு போட்டுக்கிட்டு’’ என்றாள். அதற்கு குளியல், அலங்காரம், கழுத்துப் பட்டை என அமர்க்களப்பட்டது. அது சொகுசாக மனுஷப்பாடு பட்டு வீட்டில் இருக்க நான் தான் அதற்கான செலவுகளால் விழி பிதுங்கி ‘நாய்படாத பாடு’ பட்டேன். அது இருக்கும் திசைப் பக்கமே போகாமல் வேறுபுறமாக ஓடிச் சென்று கொண்டிருந்தேன்.

‘‘என்னங்க... நைட்ல டார்லிங் சரியாவே தூங்க மாட்டேங்குது’’ என்றாள் ஒரு முறை. ‘‘நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க ‌வையேன்...’’ என்றேன் கேலியாக. ‘‘ஏன்... அது ஒழுங்கா இருக்கறது பிடிக்கலையாக்கும்? அது ஓடிப் போகறதுக்கு வழி சொல்றீங்க?’’ என்று கோபத்தில் ‌தான் ‘ஸேம் ஸைடு கோல்’ போடுவதை அறியாமல் அவள் பேச, நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அதன்பின் தானே புரிந்து கொண்டு அமைதியாக அப்பால் சென்றாள்.

‘நாய் ஜாக்கிரதை’ என்று ஒரு சின்ன போர்டை வாசலில் பொருத்த வேண்டுமென்றாள் சரிதா. ‘‘அடியே... உன் ‘டார்லிங்’கெல்லாம் ஒரு நாய்ன்னு இந்த போர்டை வெச்சேன்னா வர்றவங்கல்லாம் சிரிப்பாங்க...’’ என்றேன். ‘‘வாயை மூடுங்க... போர்டு வெச்சாத்தான் நம்ம வீட்ல இது இருக்கறது எல்லாருக்கும் தெரியும்’’ என்றாள். ஒன்றிரண்டு முறைகள் சரிதா வீட்டில் இல்லாதபோது அதை வேறிடத்தில் கொண்டு விட்டும்கூட எப்படியோ வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டது அது

தெல்லாம் பற்றாதென்று, ஒருநாள் ஏதோ விசாரிக்க ஒரு போலீஸ்காரர் வர, சரிதா அவரை வீட்டில் உட்காரச் சொல்லி காபி எடுத்துவர உள்ளே செல்ல, தெரிந்து செய்ததோ... தெரியாமல் செய்ததோ... டார்லிங் அவர் காலில் கடித்து வைத்திருக்கிறது. அவர் அலறிய அலறலில் அக்கம்பக்கத்தினர் ஓடிவர, அவர்களில் ஒருவராக பக்கத்து வீட்டு சுஷ்மாவின் பாஸ்போர்ட் என்கொயரிக்காக வந்திருந்த போலீஸ்காரர். அந்த போலீஸ், இந்த போலீஸைக் கண்டதும் பாய்ந்து ஓடி கையில் விலங்கை மாட்ட... அப்போதுதான் தெரிந்திருக்கிறது எங்கள் வீட்டுக்கு வந்தது போலீஸ் வேடத்திலிருந்த கேடி என்று!

ன்ன்ததைச் சொல்ல... விலைவாசியின் வேகத்தில் ‘டார்லிங்’கின் மதிப்பு எங்கள் அபார்ட்மெண்ட்டில் ஏறி விட்டது. அதை விரட்டும் என் எண்ணத்தில் மண்! அலுவலகம் செல்ல நான் பைக்கை உதைக்கும் நேரம் என் பேகைத் தந்தபடி, ‘‘என்னங்க... இப்பல்லாம் டார்லிங்கைச் சகிச்சுட்டு வாழப் பழகிட்டீங்க போல...’’ என்றாள் சரிதா. ‘‘உன்னையே சகிச்சுட்டு வாழப் பழகலியா... அதுமாதிரித்தான்...’’ என்றவன் அடுத்த ஸெகண்ட் எஸ்கேப்பாகி விட்டேன்.

ண்மையில் இப்போது (வேறு வழியில்லாமல்) அதைச் சகித்து வாழப் பழகி விட்டேன். இருந்தாலும் அதை டிஸ்போஸ் பண்ணிவிடும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. டியர் சார்/மேடம்...! உங்களுக்கு சமர்‌த்தான குட்டி நாய் வேண்டுமா? திருடனைக்கூட பிடித்துத் தரும் புத்திசாலியாக்கும். முற்றிலும் இலவசம்! உடனே என்னைத் தொடர்பு கொள்ளுங்களேன் - சரிதாவுக்குத் தெரியாமல் - ஹி... ஹி...!

=================================================================

                  வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், திரு,சென்னைப பித்தன் அவர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்.

=================================================================

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube