Monday, April 7, 2014

சரிதாவும் செல்போனும்..!

Posted by பால கணேஷ் Monday, April 07, 2014
‘லை டிடெக்டர்’ என்று ஒரு கருவி இருக்கிறதாம். அது பொய் பேசுகிறவர்களைக் கண்டுபிடித்து விடுமாம். அதென்ன பெரிய விஷயம் ஐயா....?. மனிதர்களைப் பொய் பேச வைக்கும் கருவி ஒன்றிருக்கிறது... தெரியுமா உங்களுக்கு...? அசோக் பில்லரில் இருக்கும்போதே,  ”சைதாப்பேட்டை வந்துட்டேன். இன்னும் அஞ்சே(?) நிமிஷத்துல வந்துருவேன்” என்று பல்லாவரத்தில் நின்றிருப்பவரிடம் புளுகுவதில் தொடங்கி இந்தக் கருவி வயது பாகுபாடில்லாமல் அனைவரையும் பொய் பேசவைக்கிறது. ‘செல்போன்’ என்பது அதன் பெயர். சரி, இந்தக் கருமத்தை விட்டொழிச்சுட்டு இருந்துடலாம்னாலும் முடியல... எத்தனை தொல்லை தந்தாலும் மனைவிகளைச் சகிச்சுக்கிட்டு வாழற மாதிரி இதோடயும் வாழறது பழகிப் போய்டுச்சு. ஸாரி... சென்ற வாக்கியத்தில் ‘மனைவிகள்’ என்றிருப்பதை ‘மனைவி’ என்று திருத்தி வாசிக்கவும். ஹி... ஹி... ஹி...!

மேற்கண்ட பாராவில் இருப்பது நான் சொல்கிற பொன்மொழிகள் அல்ல... சரிதாவின் ‘பெண்மொழி’கள்தான் அவை - கடைசி இரண்டு வரிகளைத் தவிர... ஹி... ஹி... ஹி...!. செல்போன்கள் அறிமுகமாகி பேஸிக் மாடல் வகையைப் பயன்படுத்த நான் பழகிய நாளிலிருந்து ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இன்றைய தினம் வரை “உனக்கும் ஒரு செல்போன் இருந்தா நல்லது. வாங்கிக்கம்மா...” என்று நான் பலமுறை வற்புறுத்தியபோதும் மறுத்து வந்தவள் சரிதா. “அதெதுக்கு வீணா தொல்லை...? உங்களுக்கு போன் பண்வறன்லாம் ஒண்ணு குளிக்கும் போது பண்றாங்க... இல்ல, சாப்பிடும் போது பண்றாங்க... நானாவது நிம்மதியா இருக்கேனே...” என்பாள். சரி... அதுவும் சரிதான் என்று நாளது வரை நான் நிம்மதியாகவே இருந்து வந்தேன். 

பெரிய பவுன்ஸரை வீசப் போகிறாள் என்று நாம் எதிர்பார்க்கும் சமயம் நோபால் வீசுவதும், நோபாலை எதிர்பார்க்கும் சமயம் பவுன்ஸரை நம்மிடம் பிரயோகிப்பதுமான மனைவி இனத்தின் வாடிக்கைப்படி ஒரு (அ)சுப தினத்தின் காலையில் என்னிடம் நெருங்கி வந்தாள் சரிதா.
“என்னங்க... நேத்து என் ஃப்ரண்ட் தமிழ் பேசினா...”

“ஓ... முந்தாநாள் வரைக்கும் உன் ஃப்ரண்ட் தெலுங்குல பேசிட்டிருந்தாளா...?”

“ஐயோ... கடவுளே... நான் சொன்னது என் ஃப்ரண்ட் தமிழரசி பேசினாங்கறதை...”

“அப்புடித் தெளிவாச் சொல்லு... புடவை கட்டின நவீன நாரதராச்சே உன் தமிழரசி!” இப்போ என்ன கிளப்பி விட்டிருப்பாளோ என்று சந்தேகாபஸ்தமாக சரிதாவைப் பார்த்தேன்.

“என்னங்க... எனக்கு உடனே ஒரு செல் வாங்கித் தரணும் நீங்க...”

“வாங்கிட்டாப் போச்சு... டார்ச் லைட்டுக்கா இல்ல வால் கிளாக்குக்கா?”

“ஈஸ்வரா... நான் சொன்னது பேட்டரி செல் இல்லீங்க... செல்போன்...”

“என்னது? நீயா செல்போன் கேக்கறே? ஆச்சரியமாயிருக்கே...?”

“அது ஒண்ணுமில்லீங்க... தமிழ் புதுசா ஒரு செல் வாங்கியிருக்காளாம். சும்மா சும்மா போன் பண்ணி ரொம்பத்தான் பீத்திக்கறா. எனக்கு ஒரு மொபைல் உடனே வாங்கியாகணும்...”

“சரி, வர்ற ஸண்டே உனக்கு ஒரு ஸ்மார்ட் போனாவே வாங்கிரலாம்...”

“வேணாம்... போனாவது ஸ்மார்ட்டா இருக்கட்டுமேன்னுதான் நீங்க ஸ்மார்ட் போன் வாங்கிக்கறதை நான் கண்டுக்கலை. எனக்கு சிம்பிளான போன் போதும்” என்ற சரிதாவை நான் முறைக்க... (வழக்கம் போல) கண்டுகொள்ளாமல் சமையலைறை நோக்கிச் சென்றாள் அவள்.

செல்போன் வாங்கி வந்த கையோடு அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை என்னை விவரிக்கச் சொல்லி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். நான் லைன் போட்டுக் கொடுக்க, அவள் தோழிகளிடமெல்லாம் புது போன் வந்த சரித்திரத்தை(!) சொல்லி, தன் நம்பரையும் பரப்பி... ஞாயிற்றுக்கிழமை நன்றாகவே போனது. முக்கியமான நம்பர்களை ‘ஸ்பீட் டயல்’லில் போட்டு எப்படி அழைப்பது என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன்.

டுத்த தினம் நான் அலுவலகத்தில் முக்கியமான ஆணி ஒன்றை பிடுங்கிக் கொண்டிருந்த சமயம் ‘சம்சாரம் என்பது வீணே... ஸாரி... வீணை’ என்று பாடி அழைத்தது என் மொபைல். சரிதா அழைக்கிறாள் முதல்முறையாக1

“சொல்லும்மா...”

“ஒண்ணுமில்லீங்க... புதுபோன்ல உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு. அதான் கூப்ட்டேன்...”

 “நல்லாக் கூப்ட்டே...! மத்தியானம் லன்ச் டயம்ல கூப்டிருக்கலாம்ல? இப்படியா பிஸியான வொர்க்கிங் ஹவர்ல் சும்மா கூப்பிடுவ..? வைடி போனை..” என்று (ஆங்)காரமாகச் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினேன். ஆனாலும் பாருங்கள்... முக்கியமான ஆணிகளைப் பிடுங்கி, சற்றே ஃப்ரீயானதுமே, ‘ஆசையா மொததடவையாக் கூப்பிடறவ கிட்ட இப்படியா எரிஞ்சு விழுவ?’ என்று படுத்த ஆரம்பித்தது மனஸ். அவளுக்கு டயல் செய்தால்... ‘இந்த எண் அழைப்பு எல்லைக்கு அப்பாலுள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்கிற மறுமொழி கிடைத்தது. அந்த தினத்தின் லன்ச் அவரிலும் மாலையிலும் தன் முயற்சியில் மனந்தளராத விக்ரமாதித்தன் போல நான் மீண்டும் மீண்டும் முயற்சிக்க, கிடைத்ததென்னவோ அதே பதில்தான். என்னவாயிற்று இவளுக்கு ஏன்ற குழப்பத்துடனேயே வீடு திரும்பியவனை கோபமாக வரவேற்றாள் சரிதா.

“ஏங்க... நான் ஸ்மார்ட் போன் வேணாம்னு சொன்னது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படியா மட்டமான போனா வாங்கித் தர்றது. உங்ககிட்ட போன் பண்ணிட்டு கட் பண்ணதுமே ஆஃப் ஆயிடுச்சு. திரும்ப ஆன் பண்ணி, தமிழ்கிட்ட பேசிட்டு வெச்சா மறுபடி ஆஃப் ஆயிடுது. வந்த எரிச்சல்ல அப்படியே போட்டுட்டேன். ஒரொருத்தர் பொண்டாட்டிக்குன்னு உருகி உருகி(?) செய்யறாங்க. நீங்களும் இருக்கீங்களே...” என்று அவள் பேச்சை (வழக்கம்போல்) நான் ஸ்டாப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்க, நான் அவள் போனை எடுத்து ஒரு கால் செய்து முடித்தேன். சரியாகத்தானே இருக்கிறது?

“சரி, சரியாத்தானே இருக்கு உன் போன்?”

“என்னத்த சரியா இருக்குது? இப்படிக் குடுங்க...” என்று வாங்கி தன் தோழிக்கு கால் செய்து பேசினாள். அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நான் ஒரு குட்டித் தூக்கமே போடும்ளவுக்கு ‘கொஞ்ச நேரம்’ பேசிவிட்டு காலை கட் செய்தாள். இருங்கள்.... நியாயமாக அதை கட்ட்ட்ட்ட் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். காலை கட் பண்ணுவதற்கு ரெட் பட்டன் மேல் வைத்த விரலை எடுக்காமலேயே வைத்திருந்தால் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் என்னவாகும் ஸ்வாமீ? அய்யோ... அய்யோ... என்று வடிவேலு மாடுலேஷனில் சொல்லிக் கொண்டு அவளுக்கு பொறுமையாக எடுத்துச் சொன்னேன்.

“இப்படித் தெளிவா முதல்லயே சொல்லிக் கொடுத்திருக்கலாம்ல? நான்னா எதுலயும் உங்களுக்கு அலட்சியம்தான்” என்று சரிதா சரியாக அதற்கும் பழியை என்மீது போட்டாள். அவ்வ்வ்வ்வ்!

ப்படியாகத்தானே செல்போனுடன் பழகி அதன் மூலம் ரேடியோ கேட்கவும், பாடல்கள் கேட்க/பார்க்கவும் இதன் முக்கிய பயன்பாடான பேசுதலை அவ்வப்போதும் செய்து வந்து கொண்டிருந்தாள். நானும் நிம்மதியாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன். அதற்கும் ஆப்ப்டிக்க வந்து சேர்ந்தான் என் ஆஸ்தான வில்லன. அன்று மாலை நான் வீடு திரும்புகையில் பல்லெல்லாம் வாயாக வரவேற்றாள் சரிதா. “என்னங்க.. உங்க போனைக் குடுங்க...” என்று வாங்கி, சரியாக ஸ்வைப் செய்து ஒரு கால் பேசிவிட்டு வைத்தாள். நெட் கனெக்ஷனை ஆன் செய்து ‘மின்னல் வரிகள்’ தளத்தை ஓபன் செய்து காண்பித்தாள். ‘ழே’ என்று விழிக்க ஆரம்பித்தேன் நான்.

“எப்படி சரி.. எப்படி இதெல்லாம்...?” என்று வியந்த அதேநேரம். “நான்தான் அக்காவுக்குக் கத்துக் கொடுத்தேன் அத்திம்பேர். ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்... இதெல்லாம் நின்னு சொல்லித்ர நேரமில்லாம ஓடிட்டிருக்கீங்க” என்று உள்ளறையிலிருந்து வந்தபடி சிரித்தான் வாசன் என்கிற அந்த உத்தம வில்லன்.

சரிதா என்னை ஏறிட்டாள். “என்னங்க... நெட்ல ப்ரவுஸ் பண்ண... போட்டோ எடுக்க... எத்தனை வசதி இருக்குது? உடனடியா எனக்கு இந்த ஸண்டே ஒரு ஐ போன் வாங்கிக் குடுத்துடுங்க...” என்றாள். இரட்டை டவரை மோதிய விமானம் நேரே என்னை வந்து தாக்கிய மாதிரி இருந்தது எனக்கு.

 ஐபோனுக்கு ஆகக்கூடிய செலவை நினைத்ததுமே லேசாக தலை சுற்றத் தொடங்கியது. சரி, அதையாவது சமாளித்து விடலாம். அதன் மூலம் சரிதா நெட்டில் உலவினால்...? ஐயையோ... அந்த விபரீதத்தை நினைத்ததுமே அட் எ டைம் நான்கைந்து ரோலர் கோஸ்டரில் பயணித்துவிட்டு வந்த மாதிரி தலை மேலும் சுழலவாரம்பித்தது துதைப் படிக்கிற நீங்க எல்லாரும் நல்லவங்க, வல்லவங்க (ஐஸ்!. அதனால உங்க அனுபவத்துலருந்து இதைத் தடுகக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க ஐயாமார்களே... அம்மாமார்களே..!

65 comments:

  1. Replies
    1. முதல் நபராய் வந்து ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி மகேஷ்.

      Delete
  2. அருமை.

    காலத்துக்கு ஏற்ப எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளட்டுமே:)!

    ReplyDelete
    Replies
    1. கற்றுக் கொள்வது நல்லதுதான். ஆனால் நான் கலாய்ப்பதைக் கண்டால்... பூரிக்கட்டைகள் பறக்குமே...! என் செய்வேன் யான்? ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  3. வேறு வழியில்லை... வாங்கித் தர வேண்டும்... இல்லையெனில் சிம்பிளான போன் உங்கள் கைக்கு வர வாய்ப்பிருக்கிறது... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. குடும்பத்துல என்ன சிக்கல் வரும்கறதை கரெக்டாக் கணிச்சுச் சொன்ன அனுபவசாலி டிடிக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  4. ஹஹஹா.. //அவ இவ்வளவு நாள் தெலுங்கிலயா பேசினா//

    சுஜாதாவின் கணேஷ் வசந்த், ராஜேஷின் விவேக் ரூபலா, PKP யின் பரத்-சுசீலா மாதிரி சரிதாக்கா வர்ற கதைகளும் ஸ்டார் வேல்யு உள்ள கதைகள் ஆயிடுச்சு.. முகநூல் ஒப்பன் பண்ணினதும் இதை பார்த்தேனோ இல்லையோ ஓடி வந்துட்டேன். ஹிஹிஹி. ஜூப்பரு..

    ReplyDelete
    Replies
    1. ஆக... நானும் ஒரு பெரிய ரைட்டராயிட்டேன்ங்கற ஆனந்து...! ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றி.

      Delete
  5. கணேஷ் சார்! சரிதா அக்காவோட புது போன் நம்பர் குடுங்க, இதை SMS அனுப்பனும் .
    //சரிதா அக்கா! மின்னல் வரிகள் ஒப்பன் பண்ணி முழுசா படிக்கலையா. உங்கள கதாநாயகியா வச்சுத்தானே கதைகளை ( உண்மைகளை) எழுதிக்கிட்டிருக்கார்.//

    ஏதோ உங்க புகழைப் பரப்ப என்னால முடிஞ்சுது

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்! உங்க சமூகசேவைக்கு ஒரு எல்லையே கிடையாதா முரளி? டாங்ஸு!

      Delete
  6. "சம்சாரம் என்பது"height of the jokes.
    எனக்கு ஹுமர் ரொம்ப பிடிக்கும்!
    திரும்ப திரும்ப வந்து இந்த ஜோக்கை படிக்கலாம் போல !
    செம காமெடி!!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த மைதிலிக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  7. இன்னா வாத்யாரே... சொந்த செலவுல சூனியம் வச்சுக்கினியே...!
    'மின்னல் வரிகள்' மாறி 'இடி முழக்கங்கள்' ன்னு எதுனா தளத்த கிரியேட்டு பண்ணிக்குட்த்து... வூட்டுக்காரம்மா மைன்ட்ட டைவர்ட்டு பண்ணி... ஒரு பேமஸ் பதிவராக்கி வுட்டுடுபா... அல்லாம் தன்னால சரியா பூடும்...!

    குவிக் ட்ரீட்மண்டு வாத்யாரே...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. அட... ஸோக்கான அய்டியாவாக் கீதுப்பா... படா டாங்ஸு நைனா.

      Delete
  8. பானைப் பிடித்தவள் பாக்கியசாலி. (செல்) ஃபோனைப் பிடித்தவளின் கணவன் துர்பாக்கியசாலி என்று இதுக்குத்தான் போன வருடமே முகநூலில் நான் ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்! :)))

    சரளா நகைச்சுவை. ச்சே.... சரள நகைச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. அதுலயும் நீங்க முந்திககிட்டு முகநூல்ல பகிர்ந்தாச்சா...? நகைச்சுவையை ரசிதத உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  9. //சரளா நகைச்சுவை. // ;-)

    ReplyDelete
  10. அட இப்பத்தான் அவங்களுக்கு செல்போனே வாங்கி கொடுத்திருக்கீங்களா.... டூ மச்...

    ReplyDelete
    Replies
    1. போன் முன்னாலயே வந்தாச்சுங்க. ஐபோன் ஆசையும் பதிவும் மட்டும் தான் தாமதமா வந்திருக்குது. மிக்க நன்றி.

      Delete
  11. அதன் மூலம் சரிதா நெட்டில் உலவினால்...?
    >>
    உங்க ஆசை தங்கச்சிகளான ராஜியும், சசியுமே நெட்டுல உலா வரும் போது!! சரிதா மேடம் வரக்க்கூடாதா!? வரச்சொல்லுங்கண்ணே! எத்தனையோ இம்சைகளைத் தாங்கிக்கிறோம். அதை தாங்க மாட்டோமா!?

    ReplyDelete
    Replies
    1. இம்சைகளைத் தாங்க தயாரா இருக்கும் தங்கைகளே... விரைவில் உங்கண்ணியை அனுப்பி வெக்கறேன்... இருங்க...1

      Delete
  12. Very jealous of you!! sorry jealous of your hilarious writing. So, you will be careful now while talking i.e.writing about saritha madam in your post.
    Like Vadivelu : Tell yourself : BE CAREFUL!!

    ReplyDelete
    Replies
    1. ‘இனி உஸாரா எழுதணும் அதான் நல்லது,,,’ ‘யாருக்கு?’ ‘யாருக்கோ...’ அப்படின்னு மனசுல டயலாக் சொல்லிட்டிருந்தேன். உங்க டயலாக்கும் ஜுப்பரு. என் எழுத்தினைப் பொறாமையுடன் ரசிக்கும் உங்களுக்கு உளங்கனிந்த நன்றி.

      Delete
  13. சரிதாயணம் புக் தொடர்ச்சியா இது....
    நல்ல நகைச்சுவையாய் இருந்தது....

    ReplyDelete
    Replies
    1. சரிதாயணம பாகம் 2க்காக தொடர்ந்து எழுதப்படும் சிறு(ரி)கதைகளில் இதுவும் ஒன்ற நண்பரே. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  14. டைமிங் காமெடியில் கலகலப்பாய் செல்கிறது கதை! இறுதிவரை சுவாரஸ்யம்! சிறப்பான கதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரஸித்துப் படித்த சுரேஷுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. அப்போ கூடிய விரைவில் அண்ணியின் வலைதளத்தையும் பாக்கலாம்னு சொல்லுங்க... :P

    ReplyDelete
    Replies
    1. ஏதேது... எல்லாருமாப் புடிச்சு அவளை இழுத்துட்டே வந்துருவீங்க போலருக்குதே... அவ்வ்வ்வ்! டாங்ஸூம்மா...

      Delete
  16. சரிதா மேடம் நம்பர் ப்ளீஸ்.....

    ReplyDelete
    Replies
    1. ஹலோ... ஹலோ... ஹலோ... என்னமோ சொல்றங்க அருணா... சரியாவே கேக்க மாட்டேங்குதேப்பா... ஹலோ.... ஹலோ...

      Delete
  17. இதிலிருந்து தப்பிக்க வழியில்லை
    பொறுத்துக் கொள்ள வேண்டுமானால்
    வழி சொல்லலாம்
    வழக்கம்போல் சுவாரஸ்யமான பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி,

      Delete
  18. 'சம்சாரம் என்பது வீணே...சாரி வீணை!' ரொம்பவும் ரசித்தேன்.
    உஷார்! மின்னல் வரிகளை மிஞ்சிவிடப் போகிறார் சரிதா!

    ReplyDelete
    Replies
    1. நாம எப்பவுமே உஸாரு தாம்மா... ரசித்துப் படித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  19. Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  20. ஹஹ்ஹா செமக் காமெடி அங்கிள் .....வைச்சாங்களா பெரிய ஆப்பு i போன் ன்னு ....நல்லா யோசிச்சி செமக் காமெடி யா எழுதி இருக்கீங்க ..

    ReplyDelete
    Replies
    1. காமெடியை ரசித்த இளவரசிக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  21. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  22. ஹா... ஹா... ரசிக்க வைத்தது அண்ணா....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த பிரதருக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. ஒன்னும் பண்ண முடியாது, விதி வலியது

    ReplyDelete
    Replies
    1. ஆமாமுங்கோ... மிக்க நன்றிங்கோ...!

      Delete
  24. எத்தனை எத்தனை இடங்களை இங்கே குறிப்பிட்டுச் சொல்வது... அதனை ரகளை.....

    எல்லோர் வீட்டிலும் சரிதா தொல்லைகள்! என்னத்த சொல்ல!

    சரி சரி ஃபோன் வருது.அப்புறம் வரேன்! :)

    ReplyDelete
    Replies
    1. படித்து எனக்கு பூஸ்ட் தரும்படியான கருத்துச் சொன்ன நண்பனுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  25. ஹஹஹ் நல்ல நகைச்சுவை! (நீங்க பாட்டுக்கு நகைச்சுவைன்னு சிரிச்சுட்டீங்க......என் பாடுல்ல..திண்டாட்டம்...அப்படின்னு நீங்க சொல்றது காதுல கேக்குது!......)

    என்ன வாத்தியார் சார் எப்படி சாமாளிக்கறதுனு உங்களுக்கு சொல்லியா தரணும்....!ஹி ஹி ஹி!!!!!! (அசட்டு ஹி ஹி ஹி.....அதாவது இங்கருந்து சொல்ல முடியாததுனால இப்படி ஒரு ஐஸ்!!1)

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐஸ்...! படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  26. ஹையையோ இனி மின்னல் வரிகள் அவ்ளோ தானா..... (சும்மா) ரசித்தேன் சிரித்தேன்... நம்ம ஊட்லேயும் அதே...அதே

    ReplyDelete
    Replies
    1. ஆமோதித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  27. அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான் வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமெல்லாம் வேறுதான் . வேண்டாம் என்றால் வேண்டும் இத்தனை நாட்களில் சரிதாயணம் தெரிந்திருக்க வேண்டுமே.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அழகான பாடலின் துணை கொண்டு விள்க்கிட்டீங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஸார்.

      Delete
  28. //ஒண்ணு குளிக்கும் போது பண்றாங்க... // எப்ப இருந்துண்ணா இந்த பழக்கம் ?

    As usual அதிரடி சரவெடி ...!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா.. ஹா... ரொம்ப நாளா இருக்கற பழக்கம்தான் தம்பீ. சரவெடியை ரசிததமைக்கு நன்றிகள் பல.

      Delete
  29. முதல்ல செல்போன் கேட்டாங்க, அப்புறம் ஸ்மார்ட்போன் கேட்டாங்க... அடுத்து நெட் கனெக்சன்... அப்புறம் ப்ளாக்கர் கணக்கு ஓப்பன் பண்ணச் சொல்லுவாங்க.... வாத்தியாரே Be Careful...

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ஸ்.பை. என் முகத்துக்கு நேரே விரலை நீட்டி நான் சொல்லிக் கொள்கிற டயலாக் உனக்கெப்படித் தெரிந்தது. ஹி... ஹி... டாங்ஸு!

      Delete
  30. சொன்னா நம்ப மாட்டீங்க, நம்ம (என்னையும் சேர்த்து சொல்றேன்) எல்லாம் "பெண்ணடிமைத்தனம் நிரம்பிய கலாச்சாரத்தில்" பிறந்து வளர்ந்து முத்திப் போயி இருக்கோம் என்பது கசப்பான உண்மை. ஆனால் ஆண் பெண் சமம், சரி சமம், சிவ பெருமான் பார்வதிக்கு பாதி உடலைக் கொடுத்த பரம்பரை நாங்கனு சும்மா ஒப்புக்குச் சொல்லி பெருமை அடிச்சுக்குவோம்.

    ஆனால் உண்மையில் நம்ம யாருனு இதுபோல் சூழல்களில்தான் உணருகிறோம்! :)

    என்னைக்கேட்டால் சரிதா அவர்களுக்கு உங்க செல் ஃபோனைக் (ஐ ஃபோனை) கொடுத்துட்டு, நீங்க ஒரு ஆயிர ரூபாய் போன் வாங்கிக்கோங்க. சனியன் ஒழிஞ்சதுனு (போனைச் சொன்னேன்) நீங்க ஏதாவது ஜாகிங், க்ரிக்கட், டென்னிஸ்னு விளையாடலாம், நெறியா உருப்படியான காரியம் செய்யலாம்- இந்த வலைதளத்தில் குப்பை கொட்டுவதுக்கு.

    மனதுக்கும் உடலுக்கும் நல்லதுங்க. நெசம்மாத்தான் சொல்றேன். :)

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையில ஆணாதிக்கம் பத்தில்லாம் நான் யோசிக்கிறதில்லை பிரதர். பட்... உங்க ஐடியா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  31. வழக்கம்போல் வரிக்கு வரி நகைச்சுவை மிளிரும் எழுத்து. அண்ணியும் நீங்களும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டாலும் எங்களுக்கென்னவோ கலகலப்பான பதிவு கிடைத்துவிடுகிறது. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. அடடே... சரிதா உங்களுக்கும் அண்ணி ஆயாச்சா கீதா..? நகைச்சுவையை ரசித்துப் பாராட்டின உங்களுக்கு மகிழ்வுடன் என் ந்ன்றி.

      Delete
  32. வாசன் என்று ஒரு அப்பாவியை இழுத்து வந்த வாத்தியாரை கண்டிக்காத இந்த அப்'பாவி' சமுதாயத்தை வன்மையாக கண்டிக்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. நான் : விகடன் அதிபர் ஸ்ரீனிவாசன்ங்கற பேரை சுருக்கி வாசன்னு வெச்சுக்கிட்டாரு மக்களே... அவர் பேர்ல உள்ள மரியாதையில வெச்சதாக்கும் இந்த கேரக்டர் பேரு...!
      மனஸ் : முதல்ல ஸ்ரீனிவாசன்னு பேர் வெக்கலாமான்னு யோசிச்சு அதப்படிச்சட்டு ஒரு அப்பாவி வருத்தப்படக் கூடாதேன்னு வாசன்னு பேரைச் சுருக்கின உள் ரகசியத்தை இங்க ஒருத்தன் எப்படிக் கண்டுபிடிச்சான்னே தெரியலையே... ஹி... ஹி.... ஹி...

      Delete
  33. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  34. இந்தாம்மா .... என் போனை வேணா நீ வச்சுக்க. எனக்கு பேசிக் மாடலே போதும்.
    ......
    க்கும்... என்கிட்டே பழசை தள்ளிவிட்டு .... மெதுவா நீங்க புதுசு வங்க ஐடியாவா ?
    அதெல்லாம் .. கதைக்கு ஆவாது சாமி.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube