Monday, September 26, 2011

வர்ணனைக் கடலிலிருந்து சில துளிகள்!

Posted by பால கணேஷ் Monday, September 26, 2011
பார்த்து ரசித்த ஒரு விஷயத்தை நாம் எழுதுவதற்கும், அதே விஷயத்தை சிறந்த எழுத்தாளர் ஒருவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அந்த வகையில் நான் படித்து ரசித்த சில ‘மின்னல் வரி’களை இப்போது  உங்கள் பார்வைக்கு பரிமாறியிருக்கிறேன்...


‘அவள் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்’ என்று ஒரு வரியில் நாம் சொல்வதை எழுத்தாளர் எப்படிச் சொல்கிறார் பாருங்கள்...


‘சர்... சர்...’ என மத்து போகும் திசைகளில் மோரின் துமிகள் வெளியே சிதறுகின்றன. மிதந்து மிதந்து கப்பலாய் வெண்ணெய் திரள்கிறது. தயிர் சிலுப்பிக் கொண்டிருந்த மாதம்மா, கூடத்தில் தன் கணவர் அந்தியப்ப கவுண்டருக்கும் ஒரே மகன் சீவகனுக்கும் நடக்கும் உரையாடலில் கை ஓய்கிறாள்.


-‘நெஞ்செல்லாம் நெருஞ்சி’ புதினத்தில் ஹம்சா தனகோபால் 
 
===========================================

 
பெண்ணின் அழகை வர்ணிக்காத எழுத்தாளர் எவரும் உண்டோ?


முழங்காலைக் கட்டிக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். அந்தத் தோரணையிலும் ஒரு ராஜகுமாரிக்கே உரிய கம்பீரம் இருந்தது. அவளது விழிகளின் இமை விளிம்புகளிலிருந்தும், கால் விரல், கை விரல், நகக் கண்களிலிருந்தும் உள்ளே ஊடாடிய பூரண எழில் நிரம்பித் தளும்பி பன்னீர்த் துளிகளாய் சிலுசிலுவெனச் சுற்றிலும் பரவிப் படர்ந்த மாதிரி இருந்தது.

-‘காகிதக் கமலங்கள்’ சிறுகதையில் திருப்பூர் கிருஷ்ணன்

===========================================

வள் சருமம் வெங்காயச் சருகு போல மெல்லியது. உற்றுப் பார்த்தால் அவள் உடம்பில் ரத்தம் ஓடுவது தெரியும். விரல்கள் முடிந்த பிறகு இன்னும் சிறிது தூரம் வளர்ந்து வடிவாக்கப்பட்டு சிவப்பு பூசிய நகங்கள். கையிலே ஒரு வளையம் மாட்டி, அதிலே சாவிகளைக் கோத்து வைத்திருந்தாள். கடற்கரை நண்டு போல நகர்ந்த படியே கோப்புகளைச் சேகரித்து விடுவாள்.

-‘அடைப்புகள்’ சிறுகதையில் அ.முத்
துலிங்கம்.

===========================================

வானத்தில் நிலவு இல்லை. இருள் கொடியில் நட்சத்திரப் பூக்கள் மட்டும் ஏராளமாகப் பூத்திருந்தன. அந்த நட்சத்திர ஒளியே மீனாவுக்கு ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கைப் போலப் பளிச்சென்று தெரியும் போலிருக்கிறது. அவள் ‘திடுதிடு’வென்று நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவன் மீனாவின் உருவத்தை விளக்காக நினைத்துக் கொண்டு அவள் நடக்கும் வழியில் காலை மாற்றி வைத்து போய்க் கொண்டிருந்தான்.

-‘நமக்கு நாமே’ நாவலில் டாக்டர் வாசவன்.


===========================================
 

பெண்ணை மட்டுமல்ல... குழந்தையையும் அழகாக வர்ணித்திருக்கிறார் இங்கே...
 
சு மாடுகள் தரிசில் மேய்ந்து கொண்டிருந்தன. சாயங்கால வெய்யிலில் அறுகம் புல்லும், ஆதாளையும், மத்தாங்கப் புல்லும் குளிர்ப் பசுமையாகச் சிரித்தன. புல்லுக்குள் என் மகள் பேச்சி உறங்கிக் கொண்டிருக்கிறாள். மூன்று வயசுப் பிஞ்சு. சின்னக் கன்னத்தில் வழிந்திருக்கிற எச்சிலில் சாயங்காலச் சூரிய இணுக்கு.

-‘மானுட மனம்’ சிறுகதையில் மேலாண்மை பொன்னுச்சாமி

===========================================

 
பெண்ணையும், குழந்தையையும் வர்ணித்ததை விட இயற்கையை வர்ணிக்கும் போது தமிழ் எப்படி அழகு பெறுகிறது பாருங்கள்...
 
பிறைமதி போன்று வளைந்திருந்த விந்திய மலைச் சாரலின் அடிவாரத்தை ஒட்டி அந்தக் கானாறு நெளிந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. பெருங் கற்பாறைகளின் இடையில் அது புகுந்து வரும் போது வெற்றிப் பெருமிதத்தில் உறுமியது. சுற்றிச் சுழன்று பள்ளத்தில் வீழ்ந்து மேலே தன்னைத் தடுத்தவர்களை நோக்கிச் சிரித்து விட்டு விரைந்தது. அந்தச் சிரிப்பின் ஒலி ஒரு சமயம் ‘கலகல’வென்றும் ஒரு சமயம் ‘குளுகுளு’வென்றும் வெவ்வேறு சமயம் ‘ஹோ ஹோ’வென்றும் ஒலித்தது.

-பரிவாதினி நாவலில் விக்கிரமன்.

===========================================


டர்ந்த பசுமையெல்லாம் குளிர் நிழலாகக் கவிந்து விதானம் வனையும் சாலை. தொலைவில் தெரிகிற மலையுச்சிகள் கனாவில் தோன்றும் லட்சியங்கள் போன்று தெளிவற்று ஆனால் அழகு சுடர, நெஞ்சை ரகசியமாக ஈர்க்கும் மர்ம உலகங்களாகக் காட்சி தந்தன. நீண்டு வளைந்த சாலையில் வழிப் போக்கர் யாருமில்லை. ஆனால் அந்தத் தனிமையே அந்த எழில் அரங்கில் ஏதோ புனிதமான பாதங்களின் வருகைக்‌காகக் காத்திருப்பது போல் ஆழ்ந்ததோர் உணர்ச்சியின் மெல்லிய உயிர்ப்பாகத் தோற்றம் அளித்தது.

-‘செடியாகி, மரமாகி’ சிறுகதையில் ஆர்.சூடாமணி.

===========================================

ந்த சல்லாப சுந்தரி சலசலவென்று தென்றலுடன் வந்து செம்பஞ்சு பாதத்தை எடுத்து வைத்த மறுகணம் அந்த மண்டபத்தின் மெல்லிய திரைகள் அவர்களைச் சூழ்ந்தன. ஓர் இன்பமான சதிக்குக் கட்டியம் கூறின. யவனன் முன் அவள் அமர்ந்து தங்கக் கோப்பையில் கருநீல நிறத்தில் பானத்தை அவனுக்கு ஊற்றிக் கொடுத்த போது, யவனன் அவளைத் தன்பால் இழுத்து கன்னத்தில் முத்தமிட்ட போது அவள் வசந்தகுமாரனைப் பார்த்தாள்.

-‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நாவலில் சுஜாதா

6 comments:

  1. இந்த மாதிரி வர்ணனைகளை வாசிக்கும்போதுதான் என் போன்றவர்களுக்கு, இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்ற புரிதல் ஏற்படுகிறது. ஒன்றைக்காட்டிலும் ஒன்று மிஞ்சும்படியாக இருக்கிறது. சூப்பர்ப்....!

    ReplyDelete
  2. பொறுக்கியெடுத்த முத்துக்கள்!
    நன்றி!

    ReplyDelete
  3. சேட்டைக்காரன் said...
    இந்த மாதிரி வர்ணனைகளை வாசிக்கும்போதுதான் என் போன்றவர்களுக்கு, இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்ற புரிதல் ஏற்படுகிறது. ஒன்றைக்காட்டிலும் ஒன்று மிஞ்சும்படியாக இருக்கிறது. சூப்பர்ப்....!

    நீங்களே இப்படிச் சொன்னால் நானெல்லாம்..? பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சென்னை பித்தன் said...

    பொறுக்கியெடுத்த முத்துக்கள்! நன்றி!

    -உங்களின் ரசிப்புத் தன்மைக்காகவே இன்னும் நிறைய முத்துக்கள் தேர்ந்தெடுத்து வழங்குகிறேன். நன்றி.

    ReplyDelete
  5. கலக்கல்
    பதிவு
    உங்கள் திறமை
    அபாரம்!!!!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

    கலக்கல் பதிவு. உங்கள் திறமை அபாரம்!!!! வாழ்த்துக்கள்.

    -மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி யானைக்குட்டி சார்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube