Saturday, September 24, 2011

புத்தகங்களை நேசிப்பவரா நீங்கள்..?

Posted by பால கணேஷ் Saturday, September 24, 2011
புத்தகங்கள் வாசிப்பதை மிகவும் நேசிப்பவன் நான். அழகப்பா கலைக் கல்லூரியின் நூலகத்தில்தான் எனக்கு சாண்டில்யன், கல்கி, லக்ஷ்மி, தமிழ்வாணன், இன்னும் நிறையத் தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். அன்றிலிருந்து இன்று வரை புத்தகங்கள் படிப்பது அதிகமாகி வருகிறதே தவிரக் குறையவில்லை. ஒரு சிலருக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வந்து விடும். எனக்கோ புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் மறந்து விடும். என்னை நான் வளர்த்துக் கொள்ள புத்தகம் படிக்கும் பழக்கம் பெருமளவில் உதவியாக இருக்கிறது.


நான் படிக்க விரும்பும் புத்தகங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். யாரிடமிருந்தாவது இரவல் பெற்றுப் படிக்க நேரிட்டால் படித்துவிட்டு பத்திரமாகத் திருப்பிக் கொடுத்து விடுவேன். ஆனால் என்னிடம் படிப்பதற்காக புத்தகங்களை இரவல் வாங்கிப் போன பலர் திருப்பித் தந்ததில்லை. இப்படி நான் இழந்த நல்ல புத்தகங்கள் நிறைய.


சிலர் என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிச் சென்ற புத்தகங்களை திருப்பித் தரும்போது அழுகை வராத குறை எனக்கு. பளபளவென்று புதிதாய் நான் கொடுத்த புத்தகம் கற்பிழந்த கன்னியென கசங்கிப் போய் (சில சமயங்களில் பக்கங்களில் லேசான கிழிசல் வேறு) திருப்பித் தரப்படும் போது எரிச்சல் பொங்கி வரும் எனக்கு. ‘வீட்டில் குழந்தை கசக்கி விட்டது, தண்ணீரில் நனைந்து விட்டது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு ஆங்கிலேயன் நமக்குக் கொடுத்துச் சென்ற கொடையான ‘ஸாரி’ என்ற வார்த்தையும் இலவச இணைப்பாக எனக்குத் தரப்படும். ‘‘எல்லா மொழியிலும் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ஸாரி’’ என்று விஜயகாந்த் போல சொல்லத் தோன்றும். எதற்கு இந்த டென்ஷன் என்று இப்போதெல்லாம் யாருக்கும் புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை நான்.


நம்மில் நிறையப் பேர் புத்தகங்களை வாழையிலையைச் சுருட்டுவது மாதிரி மடக்கியும், கசக்கியும் படிப்பதன் காரணம் என்ன? நாம் பணம் கொடுத்து வாங்கியவையாக இருந்தால் இப்படி கையாள்வோமா? நிறையப் பேருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டுமே இருக்கிறது. ‘‘வாய் இருக்கிறது. சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. டிபன் வாங்கித் தா’’ என்று யாரிடமேனும் கேட்பீர்களா? நீங்கள் சாப்பிட நீங்கள்தானே செலவழிக்கிறீர்கள்? ‘‘கண்கள் இருக்கின்றன, படிக்கும் பழக்கம் இருக்கிறது, புத்தகம் தா’’ என்று வாங்கிப் படிப்பது மட்டும் அசிங்கமாக சிலருக்குத் தெரியவில்லை. படிக்கும் விருப்பம் இருந்தால் வாங்கிப் படிக்க வேண்டியதுதானே?


நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். ஒரு தினமலர் வாங்கிப் படிப்பவர், டீக்கடையில் தினத்தந்தி படிப்பதையோ, விகடன் படித்துக் கொண்டிருப்பவர் அருகில் குங்குமம் படித்துக் கொண்டிருப்பவரிடம் எக்ஸ்சேஞ்ச் செய்து படிப்பதையோ நான் குறை சொல்லவில்லை. இரவல் வாங்குவதை மட்டுமே பழக்கமாக வைத்திருக்கும் சிலரைத்தான் சொல்கிறேன். பரிமாற்றம் மிகவும் சரியான விஷயம். ஓசியில் பெற்றுக் கொள்வதுதான் எனக்கு எரிச்சல் தரும் விஷயம். ஓசிப் பேர்வழிகளைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு இப்படிச் செய்யத் தோன்றும் :

ரயில் பயணங்களின் போது புத்தகம் படிப்பது என் பழக்கம். எப்போதடா புத்தகத்தை மூடுவான் என்பது போலக் காத்திருந்து ‘‘சார், கொஞ்சம் படிச்சுட்டுத் தர்றேனே’’ என்று கேட்பார்கள். நான் நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுவேன். (அழகான ஃபிகராக இருந்தால்கூட). ‘‘பாவிகளா... கேன்டீன்லருந்து ஆளுங்க வர்றப்பல்லாம் கட்லெட், பஜ்ஜின்னு கண்டதையும் வாங்கித் தின்னவும், நாலஞ்சு காபி குடிக்கவும் செலவு பண்றீங்களே..? வண்டில ஏறும் போது ஒரு விகடனோ, நியூஸ் பேப்பரோ வாங்கிட்டு வர மாட்டியா? படிக்கிறதுக்குச் செலவு பண்றவன் என்ன கேனையனா?’’ என்று மனதிற்குள் அவர்களை சகஸ்ரநாம அர்ச்சனையே செய்வேன்.


‘மிகவும் கொடூரமாகச் சிந்திக்கிறாய்’ ‘சின்ன விஷயத்துக்கு உன் ரியாக்ஷன் ஓவர்’ என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? உண்மையைச் சொல்லப் போனால் எனக்கும் தெரியவில்லை. நான்தான் இப்படி இருக்கிறேனா, மற்றவர்களுக்கும் இப்படி எண்ணங்கள் தோன்றியதுண்டா? என்னுடைய இந்த அணுகுமுறை சரியா, தவறா? இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?


நல்லவங்க நீங்க (என் போஸ்ட்டை படிக்கிறீங்களே...) ல்லாம் சொல்லுங்களேன். தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

16 comments:

  1. //ஆனால் என்னிடம் படிப்பதற்காக புத்தகங்களை இரவல் வாங்கிப் போன பலர் திருப்பித் தந்ததில்லை.//

    புத்தகங்களை இரவல் கொடுக்காதீர்கள்; திரும்பி வராது. காரணம், என்னிடம் இருக்கிற பல புத்தகங்கள் இரவல் வாங்கியவை தான்.
    :-)

    இரயிலில் ஓசியில் பேப்பர் வாசிக்கிற அனுபவத்தின் சுகம் தெரியலியே உங்களுக்கு...? :-)))))))))

    ReplyDelete
  2. இரவல் வாங்குவதை மட்டுமே பழக்கமாக வைத்திருக்கும் சிலரைத்தான் சொல்கிறேன். //

    எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு..

    ReplyDelete
  3. தவறே இல்லை.நீங்கள் சொல்லிவிட்டீர்கள்;பலர் சொல்வதில்லை.

    ReplyDelete
  4. வணக்கம்!நானும் உங்களைப் போல புத்தகங்களை நேசிப்பவன்தான்.உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் எனக்கும் பலமுறை புத்தகங்களினால் கிடைத்து இருக்கிறது.நல்ல பதிவு.தொடருங்கள்.

    ReplyDelete
  5. எனக்கோ புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் மறந்து விடும். என்னை நான் வளர்த்துக் கொள்ள புத்தகம் படிக்கும் பழக்கம் பெருமளவில் உதவியாக இருக்கிறது.

    உண்மைதான். உணர்ந்து எழுதிய பகிர்வு

    ReplyDelete
  6. பொருத்தமான் அருமையான் படங்கள்.

    ReplyDelete
  7. இதுக்கு தான் எல்லோருக்கும் e - books ஆ மெயில்ல அனுப்பறது. problem over

    ReplyDelete
  8. தங்களின் பதிவுவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  9. RAMVI said...
    தங்களின் பதிவுவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    -தங்களின் அன்புக்கும் என்னை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அவசியம் பார்க்கிறேன்...

    ReplyDelete
  10. //ஒரு சிலருக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வந்து விடும். எனக்கோ புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் மறந்து விடும்.//

    நானும் இதே போலத்தான். முன்பு புத்தகம். இப்போது வலைப்பக்கம்.

    பல விஷயங்களில் நமக்குள் ஒற்றுமை உள்ளன. சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். vgk

    //சென்னை பித்தன் said...
    தவறே இல்லை.நீங்கள் சொல்லிவிட்டீர்கள்;பலர் சொல்வதில்லை.//

    இதை நானும் ஆமோதிக்கிறேன்.
    vgk

    ReplyDelete
  11. வலைச்சரத்தில் இன்று நம் திருமதி ரமாரவி அவர்கள் மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுளதற்கு, என் மனமார்ந்த் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    என் தமிழ்மண நட்சத்திரப் பதிவுகளின் போல வருகை தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இன்று முதல் நான் என்னை உங்களின் பின் தொடர்பவராக ஆக்கிக் கொண்டுள்ளேன்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  12. /ஒரு சிலருக்கு புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் வந்து விடும். எனக்கோ புத்தகம் படிக்க ஆரம்பித்தால் தூக்கம் மறந்து விடும்.//
    நானும் இதே போலத்தான். முன்பு புத்தகம். இப்போது வலைப்பக்கம்.
    பல விஷயங்களில் நமக்குள் ஒற்றுமை உள்ளன. சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். vgk
    //சென்னை பித்தன் said...
    தவறே இல்லை.நீங்கள் சொல்லிவிட்டீர்கள்;பலர் சொல்வதில்லை.//
    இதை நானும் ஆமோதிக்கிறேன்.
    vgk

    -நன்றி சார். எனக்கு புத்தகங்கள் படிப்பதும், வலைப் பூக்கள் படிப்பதும் மிகப் பிடித்தமானவை. (தொலைக்காட்சி பிசாசிடம் அகப்படாத காரணத்தால்) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...

    வலைச்சரத்தில் இன்று நம் திருமதி ரமாரவி அவர்கள் மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுளதற்கு, என் மனமார்ந்த் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    என் தமிழ்மண நட்சத்திரப் பதிவுகளின் போல வருகை தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    இன்று முதல் நான் என்னை உங்களின் பின் தொடர்பவராக ஆக்கிக் கொண்டுள்ளேன்.
    அன்புடன்
    vgk

    -பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. நீங்கள் என் பதிவுகளைப் படித்துக் கருத்திடுவீர்கள் என்பதை எனக்குக் கிடைத்த கெளரவமாகக் கருதுகிறேன். நன்றி ஐயா...

    ReplyDelete
  14. சரியாகச் சொன்னிங்க சார்!

    ReplyDelete
  15. @ திண்டுக்கல் தனபாலன்

    -கை கொடுங்க சார்! நீங்களும் என் கட்சியா? நன்றி!

    ReplyDelete
  16. அநியாயத்துக்கு அப்பாவியா புத்தகங்களை எல்லாம் இரவல் தந்து இருக்கீங்களே! நானும் உங்க கட்சிதான்! பதிவு அருமை!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube