சுரேகா, கேபிள் சங்கர் போன்றவர்கள் ‘கேட்டால் கிடைக்கும்’ என்ற அமைப்பைத் துவங்கி நல்ல விஷயம் செய்கிறார்கள். ஆபரேஷனுக்கு ரத்தம் தேவையென்றாலும், இயலாதவர்களுக்கு மருத்துவத்துக்கு பணம் தேவைப்பட்டாலும் முகநூலில் பகிர்ந்து கொண்டால் உடன் உதவி கிடைக்கிறது. முகநூல் சாட்டிங்கின் மூலம் நண்பர்களின் பதிலை உடனுக்குடன் பெற்று எழுத்து மூலம் உரையாட முடிகிறது.
இப்படி நமக்குப் பயன்தரும் சாதகமான அம்சங்கள் மலிந்து கிடக்கும் இதே முகநூலின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தால்தான் திடுக்கிட வேண்டியிருக்கிறது. முகநூலில் அறிமுகமான ஒரு இளைஞனும் இளைஞியும் புகைப்படங்களைப் பரிமாறிக் கொண்டு, பின் நேரில் சந்தித்து, காதலை வளர்த்து, கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் பார்க்க முடிகிறது. அதேசமயம் முகநூலில் அறிமுகமான நண்பனைச் சந்திக்க வந்து கற்பை இழந்த, பணத்தைப் பறிகொடுத்த பெண்களின் கதைகளும் நிறைய காணக் கிடைககின்றன.
ஒரு எழுத்தாளனின் படைப்புகளை, எழுத்தை ஆழ்ந்து படித்தீர்களென்றால் படைப்புகளுக்குள் அந்தப் படைப்பாளியின் குணாதிசயங்களும் அங்கங்கே தென்படுவதைக் கண்டுபிடித்து விடலாம். உதாரணமாக, கதை/கட்டுரையில் இரண்டு பேர் ஹோட்டலில் டிபன் சாப்பிட ஆர்டர் கொடுப்பதாக எழுதியிருந்தால், அந்த இடத்தில் எழுத்தாளர் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களைத்தான் இயல்பாக எழுதியிருப்பார். கதாபாத்திரங்களுக்கு அணிவிக்கும் ஆடையில் எழுதுபவனின் விருப்ப நிறத்தை நாம் அடையாளம் காணலாம். இப்படி என் எழுத்தைப் படித்தால் என் கேரக்டரை ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.
ஆனால் ‘சாட்’டில் நிகழ்த்தும் உரையாடலில் இப்படி எதிராளியின் குணாதிசயத்தைப் படித்து விடுதல் முற்றிலும் இயலாத ஒன்று. பரம அயோக்கியனாக இருக்கும் நான், எதிர்முனையிலிருக்கும் பெண்ணைக் கவர, உத்தமனாக என்னை வெளிப்படுத்துக் கொள்ளுவது மிகச் சுலபமாக முடியும். அப்படி வெளிப்படும் முகத்தை நம்பி விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைக் கண்டால் மனம் பதைக்கிறது. அதிலும் ஆண்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எந்தப் பிரச்னையென்றாலும் அதன் வீரியத்தை அதிகம் தாங்க வேண்டியிருப்பது பெண்கள்தான். இப்படி ஏமாறுகிற பெண்களைப் பற்றித்தான் எனக்குள் சிந்தனை அலை புரள்கிறது.
திருமணம் ஆன ஒரு ஆண் தனக்கு அறிமுகமான பெண்ணிடம முதலில் அவள் போட்டோவை அனுப்பச் சொல்ல வேண்டியது, பிறகு ‘டி’ போட்டுப் பேசுதல், அவள் எதிர்ப்புக் காட்டாமலிருந்தால் ‘இரட்டை’ அர்த்தம் வரும் வார்த்தைகளை வீசி, அதற்கும் அவள் இடம் கொடுத்தால் நேரடியாகவே இச்சை வார்த்தைகளை வீசி பெண்களைப் பிடிக்கும் விளையாட்டைக் கண்டால் கொடுங்கோபம் வருகிறது - அதற்கு இடம் கொடுக்கும் பெண்களின் மீது சற்றே அதிகமாக! அதிலும் திருமணமான பெண்கள், குழந்தைகள் உள்ள பெண்கள்கூட இப்படி என்பது தெரியவரும்போது ‘கொலைவெறி’யே வருகிறது. காரணம் கேட்டால் ‘என் கணவன் ரசனையில்லாதவன். இந்த நண்பன் என் படைப்பை என்னமாய் ரசிக்கிறான்’ என்று பதில் வரும்.
அதல்ல விஷயம்... அவன் ரசிப்பது உங்கள் படைப்பையல்ல... .உங்களையே! உங்கள் சிந்தனைகளை, திறமையை வெளிப்படுத்தினால் அவரைப் போல பல நண்பர்கள் ரசிக்கிறோம், பாராட்டுகிறோம் உங்கள் எழுத்தை. அதில் திருப்தியடைய வேண்டியதுதானே நியாயம். கணவன் இல்லாவிட்டால் என்ன, என் திறமையை ரசிக்க இத்தனை பேர் இருக்கிறார்களே என்று நிறைவடைவதை விட்டுவிட்டு, இப்படி இச்சக வார்த்தைகளை வீசும் ஆண்மகனை நம்பி முறைதவறி நடந்தால் பின்விளைவுகள் என்னாகும், தன் குழந்தைகளின் பிற்கால நிலை என்ன என்பதைச் சிறிதுகூட யோசிக்காமல் தன் சுகத்தை மட்டுமே எண்ணுவது ஒன்றாம் நம்பர் அயோக்கியத்தனம்! உங்களை முழுமையாக நம்பி வேலைக்கு அனுப்பும், இணையத்தில் உலாவ அனுமதிக்கும் உங்களின் இல்லறத் துணைக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கைத் துரோகமல்லவா இது! இதுபோன்ற மனப்போக்கினால் தான் நிறைய விபரீதஙகள் நிகழ்கின்றன.
கணவனைப் புறக்கணித்து, விவாகரத்து வாங்கிவிட்டு, மனதுக்கு(?)ப் பிடித்தவனுடன் இணைவது இந்நாளில் வெகு சுலபம். அல்லது இணையாமலேயே யாருக்கும் தெரியாமல் ரகசிய உறவை வைத்துக் கொள்வது (வைப்பாட்டன்?) கூட சாத்தியம்தான். ஆனால் 50 வயதை நெருங்கினால் காம சிந்தனை தணிந்து உடலும் அதை விரும்பாத காலகட்டத்திலிருந்து இறப்பு வரை துணை வருவது இதுபோன்ற காமத் துணை அல்ல! புனிதமான மாங்கல்யத்தைத் தந்த கணவனும், ரத்தத்தைப் பகிர்ந்து பிறந்திருக்கும் குழந்தைகளும்தான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுதல் மிக அவசியம்.
‘உனக்கேன் இவ்வளவு அக்கறை? யாருக்குமே இல்லாத அக்கறை?’ என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு முன்பே பலரும் முகநூல், கூகிள் டாக் போன்ற விஞ்ஞான விஷயங்களினால் ஆண், பெண் உறவுகளில் ஏற்படும் இப்படிப்பட்ட சிககல்களை விரிவாக எழுதி அபாய அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். ஒரு ஆண், பெண்ணைக் கவர எப்படியெல்லாம் அஸ்திரங்களைப் பயன்படுத்தக் கூடும் என்பதை
இங்கே க்ளிக்கினால் தெளிவாக, விரிவாக எடுத்துரைத்திருப்பதைப் படிக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை நான் கேள்விப்பட்டவைகளாக மட்டுமே இருந்த இப்படிப்பட்ட அருவருப்பான விஷயங்களை கண்கூடாகப் பார்க்கும் பாக்கியம்(?) வாய்த்தது. ஒரு பெண் என் முகத்தை முகநூலில் பார்த்தும்(!) காதல் பேச்சு பேசத் துவங்கியது. உடனே ந்ட்பு வட்டத்திலிருந்து அதை வெட்டி விட்டேன். அதனாலேயே பெண்களின் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிற ஒருவன் என்கிற காரணத்தினால், பெண்களுக்கு ஒரு எச்சரிக்கைச் சங்கை ஊத வேண்டும் என்று விரும்பினேன். இதன் மூலம் ஊதிவிட்டேன்.