புத்தகம் வடிவமைப்பவனாக இருக்கிற ஒருவனுக்கு வடிவமைக்கத் தரப்படுகின்ற ஒவ்வொரு புத்தகமும் சப்ஜெக்ட்தான். வாசகநிலையில் இருந்து படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அப்படிப் படிக்கவும் இயலாது. ஏனென்றால் பதிப்பாளர்கள் அச்சாகும் இடத்திலும், பைண்டாகும் இடத்திலும் தாமதமானால் பொறுத்துக் கொள்வார்கள்... வடிவமைப்பாளனிடம் வரும்போது மட்டும் காலில் கஞ்சியைக் கொட்டிக்கொண்டுதான் வருவார்கள். ஹி... ஹி... ஹி... நான் சொல்ல வந்த விஷயம் அதில்லை. அப்படிப் புத்தகங்களை வடிவமைக்கையில் படிக்க நேரிடும் சில பக்கங்கள் நம்மை உள்ளிழுத்து முழுமையாக வாசிக்க வைத்துவிடும் அனுபவம் வெகுசில புத்தகங்களில்தான் ஏற்படும். சமீபத்தில் அப்படி எனக்கு அமைந்த ஒரு புத்தகம் கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா’.
இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கணேசகுமாரனின் முதல் நாவல் முயற்சிதான் இந்த ‘மெனிஞ்சியோமா’. படித்துப் பல நாட்கள் ஆகியும் இந்தக் கதை தந்த பாதிப்பு இன்னும் மனசில் பச்சைப்பசேல்.
மரபார்ந்த கதைசொல்லும் முறைகள், நவ செவ்வியலின் கூறுகள் இவற்றிலிருந்து விலகி இன்றைய தகவல் யுகத்தில் உருவாகும் பிரதிகள், ஆய்வுகள் மற்றும் தரவுகளின்மீது கட்டமைக்கப்படும் புனைவுகளாக எழுதப் பெறுவதைக் காண்கிறோம். -இப்படியான இலக்கிய வார்த்தைகளால் புத்தகத்தைப் பற்றிய ஆழமான முன்னுரை தந்திருக்கிறார் திரு.நேசமித்ரன். இலக்கியத்துக்கும் எனக்கும் ரொம்பவே தூரம்கறதால எனக்குத் தெரிஞ்ச எளிய நடையில உணர்ந்ததைச் சொல்றேன். ஹி.. ஹி... ஹி....
கதையின் நாயகன் சந்துருவிற்கு மூளையில் ஒரு சிக்கல் என்பதால் அந்தப் பிரதேசத்தில் ஒரு ஆபரேஷன் செய்யப்படுகிறது. அதன் பிள்விளைவாக அவன் அனுபவிக்கும் அவஸ்தைகளையும். வலி, வேதனைகளையும் வார்த்தைகளின் துணைகொண்டு ஜீவனுடன் நம்மிடம் கடத்துகிறது நாவல். வெறும்வார்த்தைக்காய் நான் இதைச் சொல்லவில்லை -உண்மையில் படிக்கையில் சந்துருவாக என்னை உணர்ந்தேன் நான். சாதாரணமாக எதற்கும் கலங்காத என் கண்கள் கலங்கின என்றால் அது மிகை வார்த்தையில்லை.
நோயுற்றிருக்கும் உறவினர்களையோ, நண்பர்களையோ காண்பதற்கு மருத்துவமனைகளுக்குச் செல்லும் சமயம் அங்கே கண்ணில்படும் பல நோயுற்றவர்களின் காரணமாக திரும்புகையில் மனசு பாரமாகிவிடும் எப்போதும். எத்தனையெத்தனை கஷ்டங்கள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் படைத்தது இந்த உடலம்! பல வியாதிகள் நாமாக (அறிந்தோ, அறியாமலோ) வரவழைத்துக் கொள்பவை வேறு. ‘இப்படியொரு துன்பம் நமக்கோ, நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ வரக்கூடாது... நோய்த் துன்பம் எதுவும் இல்லாம ஓரிரவில் பொட்டுன்னு போயிரணும் உசிரு’ இப்படியான எண்ணம்தான் என்னுள் எழும். சந்துருவின் துன்பமும் ‘இவனைப் போல யாருக்கும் வரக்கூடாதுய்யா’ என்று எண்ண வைப்பதுதான்.
கணேசகுமாரன் அற்புதமான எழுத்து நடையைக் கைக்கொண்டிருக்கிறான். சந்துருவின் தவிப்பையும், தகிப்பையும் முப்பரிமாணத்தில் நம்மிடம் கடத்த அவன் எழுத்துநடையால் முடிகிறது. ஆபரேஷனின் பிறகு தாகத்தால் ஜீவன் தவித்து சந்துரு அவஸ்தைப்படுவதும், தரக்கூடாது என்ற டாக்டரின் கண்டிப்பான உத்தரவால் அது மறுக்கப்படுவதும், அதற்கு நிவாரணமாக அவன் செய்யும் செயலும் படிக்கையில் உருக்கிவிட்டது அவன் எழுத்து. அப்பாவிடம் சொல்லாமல் பக்கத்து பார்க்குக்கு வாக்கிங் போக, அங்கே ஃபிட்ஸ் வந்துவிட, சந்துருவின் நிலையை கணேசா சொல்லும்போது விழியோரம் துளிர்க்கும் நீரை அடக்குதல் சிரமம்தான்.
சந்துருவின் துன்பங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கிற, அவனைப் பராமரித்து ஆதரவாய் இருக்கிற அப்பாவின் நிலை மற்றொரு துயரமுனை. தன் அவஸ்தை பொறுக்காமல் உயிர்விட எண்ணி சந்துரு தூக்க மாத்திரைகளை விழுங்க, நோயின் தீவிரத்தால் அது உயிரைப் போக்காமல் மேலும் துன்பத்தைத் தர, அப்பாவின் பார்வையும் அது கேட்கும் கேள்விகளையும் எதிர்கொள்ளும் சந்துருவின் நிலையை கனேசா விவரிக்கையில் மனசு பதைத்துப் போனது.
கணேசகுமாரன் இக்கதையில் நோயின் தன்மையையும், மருந்தின் பெயரையும் தந்திருந்தாலும் (சந்துருவின் டிஸ்சார்ஜ் ஷீட் முழுமையாக தரப்பட்டிருக்கிறது) மருத்துவர்களைக் கொண்டு புரியாத மெடிக்கல் வார்த்தைகளால் நோயைப் பற்றி விவாதிக்க வைக்கவில்லை. மாறாக அதன் விளைவுகளையும், சந்துருவின் கஷ்டங்களையும் உணர்வுபூர்வமாக விளக்கத்தான் முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான்.
சந்துருவின் அவஸ்தையை, வலியை எதற்காக நான் இந்த முப்பரிமாண எழுத்தில் படிக்க வேண்டும், அதனால் பாதிக்கப்பட வேண்டும், இதைப் படிப்பதால் என்ன பிரயோஜனம்? என்றெல்லாம் புத்திபூர்வமாகக் கேள்வி கேட்பீர்களாயின்.. வெல், இந்தப் புத்தகம் தேவையில்லைதான். ஆனால் உணர்வுகளை மதிப்பவர்களாக இருப்பீராயின், புத்தகம் என்பது ஏதோ ஒரு உணர்வால் படிப்பவனைப் பாதிக்க வேண்டும் - அது சிரிக்க வைப்பதாகவோ, கலங்க வைப்பதாகவோ - என்பதை ஒப்புக் கொள்வீராயின் நீர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
‘கணேசகுமாரனின் இந்த முதல் நாவல் முயற்சி தனதான திசைகளை அங்கீகாரங்களை அடையும் தகுதிகளோடு இருப்பதாகவே நம்புகிறேன்’ என்கிற நேசமித்ரனின் வார்த்தைகளோடு நானும் உடன்படுகிறேன். இன்னும் பல எழுத்து முயற்சிகளை அவன் முன்னெடுத்து வெல்ல என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
நூலின் விலை 80 ரூபாய். வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் (யாவரும்.காம்) தொடர்புக்கு : editor@yaavarum.com / 90424 61472 / 98416 ஆன்லைனில் வாங்கியும் படிக்கலாம்.
பின்குறிப்பு : ஒரு எழுத்தாளனை ‘அவன்’ என்று ஏகவசனத்தில் எழுதியிருக்கிறேனே என்று என்னைத் தவறாக எண்ண வேண்டாம். அதற்கான உரிமையை அவனி(ரி)டமிருந்து பெற்றிருக்கிறேன். ‘அவர் இவர்’ என்றால்தான் வெகுசம்பிரதாயமாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது எனக்கு.
|
|
Tweet | ||
நல்ல, உணர்வு பூர்வமான விமர்சனம் கணேஷ். படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. எங்கள் ப்ளாக் பதிவொன்றில் புதிய எழுத்தாளர்கள் யாருடைய எழுத்துகள் கவர்கிறது என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு விடை சொல்கிறது உங்கள் பதிவு.
ReplyDeleteகவர்கிறதா...? அதுக்கும் மேல... உலுக்கிடுச்சு ஸ்ரீ. மிக்க நன்றி.
Deleteஇவ்வளவு சின்ன புத்தகத்தில் இவ்வளவு உணர்வுகளை ஒளித்து வைத்திருக்கிறாரா... நாளைக்குள் முடித்து விடுகிறேன் வாத்தியாரே...
ReplyDeleteஉணர்வுகள் உனக்கும் பாதிச்சுதான்னு படிச்சுட்டு சொல்லு ஸ்.பை. மிக்க நன்றி.
Deleteநோய்த் துன்பம் எதுவும் இல்லாம ஓரிரவில் பொட்டுன்னு போயிரணும் உசிரு ////
ReplyDeleteதப்பு தப்பு தப்பு... வாழ்கையில் 100 வீதம் இறைவனுக்குப் பொறுத்தமானத செய்திருப்போம் என்பதற்கு சாத்தியம் குறைவு
பொட்டுனு உசிரு போனா நாம செய்த பாவமான செயல்களுக்கு பாவ மீட்சி செய்வது எப்போது ? :)
நாம் பாவம் செய்திருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத் தயங்கும் மனத்தைத்தான் நாம் பெற்றிருக்கிறோம் ஆத்மா. தவிர, ஆஸ்பத்திரிகளில் போகும் போது அந்த உணர்வு எழுவதை தவிர்க்க இயலாது. படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி.
Deleteஎழுத்தாளருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஆன்லைனில் வாங்கிப் படிக்கிறேன் என்று கதைவிட விரும்பல்ல...
ReplyDeleteஎப்பயாச்சும் நம்ம கையில கிடைக்கும் கிடைச்சவுடன் யாரோ எப்போதோ இப் புத்தகம் தொடர்பா ஒரு பதிவெழுதியிருந்தாரே என்று சிந்திப்பேன் அப்போ உங்க நினைவு வரும்... அதை நினைச்சியே நாவலை படிக்கிறேன் ஓகேவா சார் :)
வெரி ப்ராக்டிகல் ஆத்மா. பட், உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. அப்படியே செய்யுங்கோ... டாங்ஸு....
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
புத்தகம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படிக்க வேண்டும் என்ற ஆசைதான் அதனால் ஆன்லைனில் வேண்டுகிறேன் புத்தகத்தை... பகிர்வுக்கு நன்றி. த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களுக்கு குழந்தை மனசு வாத்தியாரே... கலங்காமல் என்ன செய்யும்...?
ReplyDeleteநல்ல விமர்சனம். படிக்க முயல்கிறேன் கணேஷ்.
ReplyDeleteநிச்சயம் வாங்கிப் படித்து விடுவேன்
ReplyDeleteவஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்
பெறுதல் என்றால் அது மிகச் சிறப்பாக
இருக்கத் தானே சாத்தியம்
அற்புதமான உணர்வுப் பூர்வமான விமர்ஸனம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஉரிமை உள்ளவர்களை அவன் இவன் என்றுதான் எனக்கும் அழைக்கப் பிடிக்கும்.
போலி மரியாதை தேவையில்லாத உணர்வே சிறந்தது.
அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் வாத்தியாரே....
ReplyDeleteதமிழ்.மணம் - நவரத்தினம்
கதை எழுதிய கணேச குமரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteசிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
சிறப்பான விமரிசனம்
ReplyDeleteமரபார்ந்த கதைசொல்லும் முறைகள், நவ செவ்வியலின் கூறுகள் #இவற்றிலிருந்து விலகி இன்றைய தகவல் யுகத்தில் உருவாகும் பிரதிகள், ஆய்வுகள் மற்றும் தரவுகளின்மீது கட்டமைக்கப்படும் புனைவுகளாக எழுதப் பெறுவதைக் காண்கிறோம். # இதைப் படித்ததும் அரண்டு போனேன் ,நீங்களுமா பாலகணேஷ் ஜி என்று சொல்ல நினைத்தேன் :)(எப்படித்தான் யோசிப்பாங்களோ ?)
ReplyDeleteத ம 10
சொன்னா நம்புங்க அண்ணா! புத்தக அட்டை வலி தருவதாக இருந்ததால், கொஞ்சம் மென்மனம் படைத்த நான் பதிவை படிக்க நாள் கடத்தினேன். நான் ஒரு புத்தகத்தை படித்தால் அந்த உணர்விலே அடுத்த சிலநாள் சுத்திகொண்டிருக்கிற டைப். சரிதாயணம் படித்துவிட்டு, ரெண்டு மூணு நாள் ஸ்கூட்டியில் பள்ளிக்கு செல்லும் வழியில் சிரிப்பை அடக்க வெகு பாடுபட்டேன். so இந்த புத்தகத்தை படிக்க பயமா இருக்கு:((((
ReplyDeleteஉங்கள் விமர்சனமே உணர்வு பூர்வமாக இருக்கும் போது புத்தகத்தை வாசித்தால் மனம் கனக்கும் போல இருக்கின்றதே...நோய் வரக்கூடாது...வந்தா தொடரக் கூடாது....தொடர்ந்தால் வாழக் கூடாது...நல்ல விமர்சனம்...இன்னும் உங்க புக்கே இருக்கு வாசிக்க, அடுத்து தென்றல் கீதா புத்தகம், ம்ம்ம் (நாங்க ரெண்டு பேராச்சே...வாசிச்சு எழுத நினைத்துள்ளோம்...பார்ப்போம் அதற்கு பின் இந்தப் புத்தகம்..லிஸ்ட் பெரிசாயிடுச்சு....
ReplyDeleteமெனிஞ்சியோமா - பெயரைப் பார்த்ததுமே அந்நோயைப் பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. நோயைப் பற்றிய புரிதலே படுபயங்கரமாக இருக்க, அதைக் கொண்டு தேர்ந்த நடையில் கதை படைத்தால் உணர்வுகளை உலுக்கியெடுக்காமல் என்ன செய்யும்? மிக நேர்மையான விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது. வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன். நன்றி கணேஷ்.
ReplyDelete