Tuesday, January 20, 2015

மொறு மொறு மிக்ஸர் - 27

Posted by பால கணேஷ் Tuesday, January 20, 2015
சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. ஓரிரண்டு தினங்கள் தவிர, தினம் ஒரு முறை விசிட் அடிக்கும் படி அமைந்தது எனக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட, இவ்வாண்டில் நான் வடிவமைத்த புத்தகங்களையும் எனக்குப் பிடித்த புத்தகங்களையும் வாங்கிக் குவித்ததில் மனதிற்கு மிக நிறைவானதொரு பு.கண்காட்சியாக அமைந்தது இந்த வருடம்.

இந்த ஆண்டு சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிகம் விற்றதாக என் கணிப்பில் தெரிகிறது. முத்து-லயன் காமிக்ஸ் ஸ்டாலில் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வருகிறதென்று தெரிந்ததும் சிறுவயது நினைவுகள் உந்த, மறுபடி படிக்கும் (பார்க்கும்?) ஆவல் மீதூற, முதல் தினமே போய் விசாரிக்க, வந்த புத்தகம் அனைத்தும் விற்று விட்டது என்றார்கள். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று மறுதினம் போய்ப் பிடித்து விட்டேன். பௌன்ஸர் என்கிற அற்புதமான புதிய காமிக்ஸ் புதுவருடத்தில் வெளியிட்டும் கூட இந்த ஆண்டு காமிக்ஸ் ஸ்டாலில் அதிகம் புத்தகங்கள் விற்றது மாயாவிதான் என்கிறார் எடிட்டர் எஸ்.விஜயன். இ.கை.மாயாவிதான் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்!

இதைத் தவிரவும் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், தமிழில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறை படக் கதை புத்தகங்களாக ஒரு ஸ்டாலில் பார்த்தேன். இவை போன்ற புத்தகங்களை நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்ததையும் கவனித்தேன். இத்தகைய புத்தகங்கள் விற்பனையாவதன் மூலம் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் வளர்ந்து பின்னாளில் இலக்கியத்துக்கு வருவார்கள் - தமிழ்வாணனில் ஆரம்பித்த நான் லா.ச.ரா.வையும் படிப்பதைப் போல..! இது ஒரு நல்ல விஷயமாக மகிழ்வு தந்தது!

என் கண்ணில்பட்ட மற்றொரு பரபரப்பான விற்பனைப் புத்தகம் ‘மாதொருபாகன்’. ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் அதை எடுத்து பில் போட நின்றதை டிஸ்கவரி ஸ்டாலிலும், மற்ற இரு ஸ்டாலிலும் காண நேர்ந்தது.  ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும், சர்ச்சையின் மகத்துவம் புத்தக விற்பனையை எகிற வைப்பதே என்பது நிதர்சனம். ‘ஹும்... சரிதாயணத்தைக் கூட யாரை விட்டாவது எரிக்கச் சொல்லியிருக்கலாம்டா’ என்றது  மனஸ். ஹி... ஹி... ஹி...

பாரதி புத்தகலாயத்தில்... ச்சே... பாரதி புத்தகாலயத்தில் சத்யஜித் ரேயின் ‘பெலூடா’ கதைகள் மொத்தத்தையும் தனித்தனி புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த இந்த ஆண்டின் பொக்கிஷம்! நோ.. நோ.. ஃபலூடா இல்லீங்க.. பெலூடா. ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரியான கேரக்டராக அதைப் படைத்து அசத்தலாக துப்பறியும் கதைகள் எழுதியிருக்காரு சத்யஜித் ரே. சிறுவர்களுக்கான கதைகள்னு போட்டிருந்தாலும் கூட எல்லா வயதுக்காரர்களும் சுவாரஸ்யமாப் படிக்கற மாதிரி ஆபாசமில்லாத, சஸ்பென்ஸை மெயின்டைன் பண்ற சூப்பரான கதைகள் ஒவ்வொண்ணும்.

கிராமத்து திருவிழாவுல வண்டி கட்டிட்டு வர்ற ஜனம் கம்பளத்தை விரிச்சு உக்கார்ந்து கட்டுச்சோறு திங்கற மாதிரி புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் இருக்கற பரந்த வெளியில ஜனங்க உட்கார்ந்து ஸ்னாக்ஸையும், காபியையும், டிபனையும் ஒரு கை பாத்துட்டு, குஷியா பேசிட்டு இருந்தாங்க. அந்தக் கடைகள்ல சேல்ஸைப் பார்த்தா, உள்ள வித்த புத்தகங்களின் விலையவிட அதிகமா வசூலை அள்ளியிருப்பாங்கன்றது நிச்சயம். அனேகமா சில பப்ளிஷர்கள் அடுத்த தடவை உள்ள புத்தகக் கடை வெக்கறதைவிட வெளில ஸ்னாக்ஸ் ஷாப் வெச்சா லாபம்னு இங்க மாறிருவாங்களோன்னு தோணிச்சு எனக்கு. ஹி... ஹி... ஹி...

--------------------------------------------------------------

டிசம்பர் மாத இறுதியில் நம்ம கோவை ஆவி இயக்கிய ‘காதல் போயின் காதல்’ குறும்படத்தின் ஷூட்டிங் நடந்துச்சு. அதோட திரைக்கதைய ஆவி அனுப்பி வெச்சப்ப, நல்லா இருக்கறதாப் பட்டாலும்கூட கதாநாயகி பாத்திரத்துல ஒரு உறுத்தல் இருந்தது எனக்கு. ஆவியின் கதாநாயகி ஒரு Down to Earth கேரக்டர். நிஜவாழ்க்கைல அவளை மாதிரி ஒருத்திய நான் சந்திச்சிருந்தாலும்கூட நிழல்ல அப்படிக் காட்டாம வேறவிதமா பெட்டரா காட்டினா நல்லாருக்கும்னு தோணிச்சு. ஆவிகிட்ட என் கருத்தைச் சொன்னேன். அந்தக் கதையோட பெரும்பகுதி ஒரு காபி ஷாப்ல நடக்கற மாதிரி எழுதியிருந்தாரு ஆவி.

“காபி ஷாப்ல ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டா பத்தாயிரம் ரூபா கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. “அவ்வளவா..? ஒரு நாளைக்கு அது அதிகம்பா..”ன்னேன். “நீங்க வேற... ஒரு மணி நேரத்துக்கு அந்த ரேட் கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. தலை சுத்தி மயக்கமே வந்துருச்சு எனக்கு. அப்பறமென்ன... ஆவி, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்க்ரீன் ப்ளேல எறக்கி, கதைக் களத்தையும் நாயகி பாத்திரத்தையும்  மாத்தி மோல்ட் பண்ணி வேற ஒரு திரைக்கதை அனுப்பினாரு. படிச்சதுமே இது நிச்சயம் ரசிக்கப்படும்ங்கறது புரிஞ்சிருச்சு. ஆவிக்கு வாழ்த்து சொன்னேன். அவரும், நாங்களும் விரும்பியபடி அந்தப் படைப்பு வந்திருக்கறது கூடுதல் மகிழ்ச்சி.



படத்துக்கு நாயகன், நாயகி தேட ஆவி பட்ட பாட்டை தனிக் கட்டுரையாவே எழுதலாம். (மே..பி... ஆவி எழுதுவாரு பின்னால...) பதிவர் திருவிழா சமயத்துல சீனுவை க்ளோஸப், மிட் ஷாட்னு பல ஆங்கிள்ல பாத்துட்டு, ‘கண்டேன் கதாநாயகனை’ன்னு குதிச்சாரு ஆவி. முதலில் நடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த சீனுப்பயலை ஆவி பேசிப் பேசி, துப்பாக்கியை நீட்டாத குறையாய் மிரட்டி தன் குறும்படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தார். இப்போ என்னடான்னா... முதல் (குறும்)படம் வர்றதுக்கு முன்னாலயே ‘ஷைனிங் ஸ்டார்’னு பட்டமும் நிறைய ரசிகர் பட்டாளத்தையும் சேத்துக்கிட்டான் அம்ம பய... 

நாயகியா நடிக்க பலரை யோசிச்சும், முயற்சிச்சும் யாரும் செட்டாகாம ஏதேதோ காரணங்களால தள்ளிப் போனதால கொஞ்சம் வெக்ஸானாரு ஆவி. இப்படிப்பட்ட நிலையில நம்ம பதிவர் சிஸ்டர் கீதாரங்கன், கதாநாயகியைத் தந்தாங்க. மதுவந்தி! கீதாவின் உறவான இந்தப் பொண்ணு நாட்டியமும் தெரிஞ்சவளா இருந்தது கூடுதல் ப்ளஸ். முழு உற்சாகத்தோட உருவாக்கத்துக்கு ஒத்துழைப்புத் தந்து, நாங்க எதிர்பாராத பர்பாமென்ஸ்ம் தந்து அசத்திருச்சு பொண்ணு. 

அதே மாதிரி இந்த ப்ராஜக்ட்ல அசத்தின இன்னும் மூணு பேரு 1) மாஸ்டர் ரக்ஷித்! நிஜ ஸ்கூல்பையனான இவன் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டா சொல்றதை அப்படியே கிரகிச்சுக்கிட்டு சூப்பரான பெர்பாமன்ஸ் தந்து அசத்தினான். 2) துளசிதரன்! கதையில ஒரு கேரக்டருக்காக இவர் உருமாறி வந்ததைப் பாத்ததும் அசந்து போனேன். சின்ன கேரக்டர்னாலும் (படமே சின்னதுதானடா..!) அசத்தியிருக்காரு மனுஷன். 3) கீதா ரங்கன்! ஆவிக்கு துணை இயக்குனரா செயல்பட்டு ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து செஞ்சு... என்னத்தச் சொல்ல... ஆவி சொல்லுவாரு மீதிய...!

ஷூட்டிங்குக்கு பர்மிஷன் வாங்கலைன்னு போலீஸ்காரங்க சத்தாய்ச்சதையும், சரியான லைட்டிங் தராம மிஸ்டர் சூரியபகவான் படுத்தினதையும் மீறி, மொத்தமாப் பாக்கறப்ப ரிசல்ட் நல்லா, திருப்திகரமா வந்திருக்குது. இன்னும் சில மேம்படுத்தற வேலைகள் பாக்கி இருக்கறதால பிப்ரவரி 14ல டிரெய்லரும், அந்த மாத இறுதியில வெளியிடவும் ப்ளான் பண்ணிருக்காரு ஆவி. பாத்துட்டு வாழ்த்துங்க அவரை.

--------------------------------------------------------------

‘டெக்கமரான்’ங்கற இத்தாலியப் படம் பார்த்தேன் சமீபத்துல. கதைய விரிவாச் சொல்லப் போறதில்ல. ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்துக்க விருப்பம். கன்னியாஸ்திரீ மடத்துல செவிட்டு ஊமைன்னு பொய் சொல்லி தோட்டக்காரனா வேலைக்குச் சேர்றான் ஒருத்தன். அவனை அங்கருக்கற கன்னியா(?)ஸ்திரீகள் கையாளறாங்க. இது மதர் சுபீரியருக்குத் தெரியவர, அவங்க தன்னையும் கையாளச் சொல்ல... வெறுப்புல அவன் பேச, அவன் பேசக்கூடியவன்ங்கறது தெரியவர... உடனே வேகமா ஓடி... சர்ச் மேலருக்கற கண்டாமணிய அடிச்சு, எல்லாரையும் கூட்டி... (நீங்க நினைக்கற மாதிரி இல்ல...) ஜீசஸின் கருணையால இவனுக்குப் பேசவும் கேக்கவும் வந்துருச்சுன்னு எல்லார்கிட்டயும் அனவுன்ஸ் பண்றாங்க... ஹா.. ஹா... ஹா..! இந்துமத சாமியார்களை மோசமான காமாதூரர்களா காட்டினதைப் பல படங்கள்ல பாத்திருக்கேன். (நிஜத்துலயும் சிலர் அதைவிடக் கேவலப்பட்டாச்சு சமீப வருஷங்கள்ல)

ஆனா.. கிறிஸ்டியானிட்டிய இவ்வளவு போல்டா விமர்சிக்கற இப்படியொரு படத்தை இப்பதான் பாக்கறேன். அவங்க மதகுருமார்கள் எப்படி விட்டு வெச்சாங்கன்னு தெரியல. வொண்டர்..! ஆங்... நானும் பாத்தாகணுமே படத்தைன்னு அடம் பிடிக்கற ஆசாமிகள் ‘நீ குழாய்’ல தேடவும். கிடைக்கிறது. ‘விசேஷமான’ காட்சிகள்  படத்தில் ஆங்காங்கு கதைக்குத் தேவை(!)யென்பதால் வருவதால் நீங்கள் நல்லவராயின் பார்க்காமல் தவிர்க்கும் படியும், வல்லவராயின் தனிமையில் பார்க்கும் படியும் கோரப்படுகிறீர்கள். (இதனாலயே முதல்ல பாக்க ஓடிருவாங்களோ... -மைண்ட் வாய்ஸ். ஹி... ஹி... ஹி...)

--------------------------------------------------------------

டியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை.  சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம் கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு. காணாத வஞ்சம் சதை மூலம் தேடும் வடிகால். ஊண் வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி என்னும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புதான்!
-‘அபிதா’ நாவலில் லா.ச.ராமாமிர்தம்.

டைசியில் எல்லாப் பணமும் செலவழிந்து போய் செல்லாத ரூபாய்தான் மிஞ்சிற்று. அப்பொழுதுதான் செல்லாத ரூபாயாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது ஏன்று தோன்றிற்று. தெருவில் காய்கறிக்காரி போனால் நாலரையணாவுக்குக் கறிகாய் வாங்குகிறது. செல்லாத ரூபாயைக் கொடுத்து, “நாலரையணா எடுத்துக் கொண்டு பாக்கியைக் கொடு” என்கிறது. அவள், “செல்லாது, வேறு கொடுங்கள்” என்று திருப்பி விடுவாள். “வேறு ரூபாயில்லையே, நாளைக்கு வந்து வாங்கிக் கொள்ளேன்” என்கிறது. “சரி, அப்படித்தான் கொடுங்கள்” என்று போய் விடுவாள். ரூபாயில்லாமல் கடன் கொடு என்றால் கொஞ்சம் அவமானமாகத் தோன்றும். ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு கடன் சொன்னால் அதில் ஒரு கௌரவம் இல்லையோ...? அதே மாதிரி அந்த ஒற்றை ரூபாயைக் காட்டியே பத்து ரூபாய்க்குச் சாமான்கள் கடனாய் வாங்கி விட்டோம். அந்த ரூபாய் இல்லாவிட்டால் முடியுமா..? கடன் வாங்கினாலும் அவ்வளவு கண்ணியமாய்ச் செய்திருக்க முடியுமா..?
-‘செல்லாத ரூபாய்’ சிறுகதையில் எஸ்.வி.வி.

....புதிய புத்தகங்களைப் படிப்பதை விட இப்படிப் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பதில் தனி சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. புதுவரவுகளை படிக்க ஆரம்பித்து விட்டேன். என் ராசிக்கு நல்ல பலன்தான். இனி இந்த வருஷம் தொடர்ந்து இங்க செயல்படறதுன்னு முடிவும் பண்ணிட்டேன். உங்க ராசிக்கு.... ஹி... ஹி... ஹி....

58 comments:

  1. nindanaal piraku mindum ungalai ingu paarpathil makizchi sir!

    கிராமத்து திருவிழாவுல வண்டி கட்டிட்டு வர்ற ஜனம் கம்பளத்தை விரிச்சு உக்கார்ந்து கட்டுச்சோறு திங்கற மாதிரி புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் இருக்கற பரந்த
    வெளியில ஜனங்க உட்கார்ந்து ஸ்னாக்ஸையும், காபியையும், டிபனையும் ஒரு கை பாத்துட்டு, குஷியா பேசிட்டு இருந்தாங்க. அந்தக் கடைகள்ல சேல்ஸைப் பார்த்தா, உள்ள வித்த
    புத்தகங்களின் விலையவிட அதிகமா வசூலை அள்ளியிருப்பாங்கன்றது நிச்சயம். அனேகமா சில பப்ளிஷர்கள் அடுத்த தடவை உள்ள புத்தகக் கடை வெக்கறதைவிட வெளில ஸ்னாக்ஸ் ஷாப்




    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உனக்கு மனம் நிறைய நன்றி மகேஷ்.

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை மிக அருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்.. இந்த வருடம் இராசிபலன் நல்லா வேலை செய்து போல... ஐயாவுக்கு... கீ......கீ......கீ....த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... ராசிபலன்ல இந்த வருஷம் இன்னும் உச்சம் தொடுவேன்னுல்ல சொல்லியிருக்கு ரூபன். படித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வான நன்றி.

      Delete

  3. மிக்ஸர் அருமை....பாராட்டுக்கள் , ஆவியின் குறும்பட விபரங்கள் அறிய வாயப்பு கிடைத்தது உங்களால்......இனிமேல் ஆவியை பதிவர் என்று அழைப்பதா இல்லை குறும்பட இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் என்று அழைப்பதா? எப்படி அழைப்பது

    ReplyDelete
    Replies
    1. எப்படி அழைத்தாலும் ஆவி ஆவிதேங்... ஹா... ஹா... ஹா... நன்றி நண்பா.

      Delete
    2. Muthalil Pathivar, appuram thaan director, actor, producer ellaam.. :)

      Delete
  4. ஆவியின் மற்றுமொரு பரிணாமம் சிறக்கட்டும்...

    மின்னல் வரிகள் இனி அடிக்கடி மின்னட்டும் வாத்தியாரே...

    ReplyDelete
    Replies
    1. இனி இடைவெளி இன்றி மின்னும் டி.டி. மிக்க நன்றி.

      Delete
  5. நல்ல தொகுப்பு.

    குறும்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி மேம்.

      Delete
  6. நல்ல தொகுப்பு அண்ணா...
    மொறு மொறு சுவையாய்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உனக்கு இதயம் நிறை நன்றி தம்பீ....

      Delete
  7. நல்ல தொகுப்பு.

    குறும்படம் வெற்றி பெற ஆவிக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொகுப்பை ரசித்து எங்களை வாழ்த்திய நண்பனுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  8. வாத்தியார் பேக் டூ ஃபார்ம் !! சூப்பர் அண்ணே !!

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புத் தந்த உனக்கு மகிழ்வான என் நன்றி.

      Delete
  9. #இவ்வாண்டில் நான் வடிவமைத்த புத்தகங்களையும் #
    இந்த லைனை அடிக் கோடிட்டுக் காட்ட வேண்டாமா ,அதுதானே மற்றவர்களுக்கும் ,உங்களுக்கும் புத்தகக் கண்காட்சியில் நான் கண்ட வித்தியாசம் :)
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. தற்பெருமையாய்டும்னு செய்யலை ப்ரோ. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  10. சில நொடி சிநேகம் போலல்லாமல் இருந்தால் சரிதான்...
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் குழுவுக்கும்
    மிக்ஸர் வெரி டேட்ஸ்ட் சார்

    ReplyDelete
    Replies
    1. Y Sir? You didn't like Silanodi Snegam?

      Delete
    2. குடந்தை ஆர்.வி.சரவணன் பல சிரமங்களைச் சந்தித்து சிலநொடி சினேகத்தை படைத்தார். அது உங்களுக்குப் பிடிக்கலைன்னு தெரியுது. பட், அவரோட உயரம் அது இல்லன்றத வரும் அவரோட படைப்புகள் சொல்லும்பா. மிக்ஸரை ரசித்து எங்களை வாழ்த்திய உங்கள் அன்புக்கு இதயம் நிறை நன்றி.

      Delete
    3. Y Sir? You didn't like Silanodi Snegam? ///

      ஐயையோ... கோவப்படாதீங்க‌
      சி. நொ. சி. கத்துல சில பல குறைகளைக் காண முடிந்தது அவைகளை இம்முறை கவனத்தில் கொண்டால் மிக நல்லது
      குறிப்பாக எடிட்டிங்.

      Delete
    4. ஆத்மா சார், நாங்களும் அதில் பங்கெடுத்தக் காரணத்தினால் இதைச் சொல்ல முன் வருகின்றோம். குடந்தையாரின் முதல் முயற்சி. ஒரு இயக்குனாராக அவர் மனதில் கொண்ட பல விசயங்கள் திரையில் வராமல் போனதற்கு பல காரணங்கள், தடைகள் அவர் சந்தித்தவை. கடைசி நிமிடத்தில் லொக்கேஷன் மாற்ற வேண்டியச் சூழல், எல்லோருமே காமெராவின் முன் புதிது ...அதாவது நடிக்க......கன்னி முயற்சி, பல தடைகளினால் ஏற்பட்ட டென்ஷன் என்று.....ஒரு சில குறைகள் இருந்திருக்கலாம். யெஸ் நீங்கள் குறிப்பாக என்று சொல்லுவது சரியே. ஒரு இயக்குனராய் அவரது பரிமாணங்கள் பரிமளிக்கும் அடுத்த அவரது படைப்பில். நீங்களும்/பார்வையாளர்களும் சொல்லியிருக்கும் குறைகளை மனதில் அவர்/குழுவினரும் கொண்டுள்ளார்/கொண்டுள்ளோம். உங்கள் எல்லோரது ஆதரவும், ஊக்கமும் மிகவும் தேவை சார் படக் குழுவினர் எல்லோருக்கும். மிக்க நன்றி சார்!

      Delete
    5. ஒரு பேச்சுக்குச் சொன்னதே தவிற சி. நொ. சி கத்தை விமர்சிக்க வேண்டும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை அப்படிச் செய்ய வேண்டுமாகவிருந்தால் அது வெளியிடப்பட்ட காலப் பகுதியிலேயே சொல்லியிருப்பேன்
      முதல் முயற்சி என்பதால்தான் மௌனியானேன்..
      வாழ்க்கையில முதன் முறை என்கிறது ஒரு முறை மட்டும்தான் :) தல சொல்லித்தான் அதுவும் தெரியு எனக்கு... இதுவும் ஒரு பேச்சுக்குத்தான்...
      சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்

      Delete
  11. ஆமா அபிதாவ எப்போ என்கிட்டே கொடுக்கப் போறீங்க...

    KPK நானும் எழுதணும்.. ஆவி எழுதுவாரு அப்புறம் எழுதலாம்னு பார்த்தா,. ஹி இஸ் பிஸி..

    ReplyDelete
    Replies
    1. Neenga eluthunga hero.. naan innum oru vaaram konjam busy.. From Feb 1st week I'll be back to form..! :) :)

      Delete
    2. நீ எப்ப என் வீட்டுக்கு வந்தாலும் அபிதாவை எடுத்திட்டுப் போகலாம் தம்பீ... வருக... வருக...

      Delete
  12. Replies
    1. ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி டீச்சர்.

      Delete
  13. மொறு மொறு.... மொறு மொறு

    ReplyDelete
    Replies
    1. சுவைத்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி தென்றல் மேம்.

      Delete
  14. அருமை! நானும் ரசித்தேன்.. ருசித்தேன்!

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து ருசித்த சிஸ்டருக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! சொன்ன மாதிரியே பதிவு எழுதி அசத்திட்டீங்க! நானும் மாயாவி வாங்கி இருக்கேன்! இன்னும் படிக்கலை! இன்னிக்கு மதியம் உங்க சரிதாயணம் படிச்சி சிரிச்சு மாளலை! அதே புத்தகத்தில் நான் இருக்கிறேன் அம்மா வித்தியாசமான கதை! அருமையான கதைத்தொகுப்பு விறுவிறுவென ஒன்றரை மணியில் 128 பக்கங்கள் படித்து இடையில் பத்து நிமிடம் ரெஸ்ட் எடுத்தும் படித்து முடித்தேன்! வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து ரசித்ததைப் பகிர்ந்த உனக்கு என் மனம் நிறைந்த நன்றி சுரேஷ்.

      Delete
  16. Nice to see the cheerful BG again! Wish you a wonderful 2014! Missed you when I visited the fair on the 16th with my wife. Bought Devan's Justice Jagannathan, YGM on Sivaji, Irwing Wallace novel, Bharathi Mani's book. Can you give the list of the books you bought (and didn't buy due to budget despite interest!) - this will give us an idea for the purchase in the next fair! - R. J.

    ReplyDelete
    Replies
    1. என் போன் நம்பர்தான் இங்கே இருக்கிறதே... அழைத்திருந்தால் வந்திருப்பேனே ஜெ. மீண்டுமொரு சந்தர்ப்பம் அமைய காத்திருக்கிறேன். மீண்டும் என்னை சுறுசுறுப்பாகக் கண்டதில் மகிழ்ந்த உங்களுக்கு என் நன்றி. என் படிக்கும் ரசனை இலக்கியம் சார்ந்ததில்லை, வாசிப்பனுபவம் சார்ந்தது என்பதால் உங்களுக்கு என் லிஸ்ட் ஏமாற்றம் தந்தாலும் தரலாம். இதோ, வருகிறது நான் வாங்கிய லிஸ்ட்....

      Delete
    2. 1) செல்லாத ரூபாய் - எஸ்.வி.வி., 2) ராதையும் குந்தி தேவியும், பிரளயம் - எ.மூ.வீ.நாத், 3) மாணவர் தலைவர் அப்புசாமி - பாக்கியம் ராமசாமி, 4) ஆவி ராஜ்யம் - ரா.கி.ரங்கராஜன், 5) இங்க்கி பிங்க்கி பாங்க்கி - பா.ராகவன், 6) கிருஷ்ணனின் ரகசியம் - அஷ்வின் சாங்கி, 7) கிருஷ்ண அந்தாதி - கண்ணதாசன், 8) மகரிஷி - முத்துக்கள் பத்து, 9) செந்தாழம் பூவில் - சிவ.கணேசன், 10) என்றாவது ஒரு நாள் - கீதா மதிவாணன், 11) உருமாற்றம் - ப்ரான்ஸ் காப்கா, 12) மனப்பிராந்தி - ஆன்டன் செகாவ், 13) சரஸ்வதி சபதம் - சோ, 14) பெஃலூடா கதை வரிசை நூல்கள் - சத்யஜித் ரே.

      Delete
    3. We will definitely meet some time. Most authors of the books you have bought are my favourites too - though I was reluctant to buy translations as generally they don't have the 'jiivan' of the original when translated. Endamuri's book translation by Suseela kanagadhurga is an exceptionally nice translation. I also bought Sivasankari's kuru-novels and Kannadasan's Vanavasam. - R. J.

      Delete
  17. பு.கா அனுபவங்களை எல்லா தளங்களிலும் படித்து ரசித்து வருகிறேன்.

    சீனுவுக்கு வாழ்த்துகள். கலக்கியிருப்பார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசிக்கறதோட நீங்களும் எழுதறதுதானே... சீனுவை வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  18. கதம்ப உணர்வுகள் sorry கதம்ப நிகழ்வுகள் அனைத்தும் அருமை வாத்தியாரே....
    எனது பதிவில் ஒரு குறும்படம் // பேசு மனமே பேசு // காண்க.....

    ReplyDelete
    Replies
    1. கதம்பத்தை ரசித்த கில்லர்ஜிக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  19. வாழ்த்துக்கள்! இம்முறை மிக சில தருணங்களே புத்தகத் திருவிழாவில் பங்கேற்க நேர்ந்தது!

    ReplyDelete
    Replies
    1. அடாடா.... அடுத்த முறை அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டட்டும் நண்பா. மிக்க நன்றி.

      Delete
  20. அருமை,அட்டகாசம்.........மொறு,மொறு வென்று.............ச்சா.............அந்தப் படம் இங்க,பாக்க முடியாதே?

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே... (அதான் யூ ட்யூபில் கிடைக்குதுன்னு சொன்னேனே... பாக்கலாமேய்யா....)

      Delete
  21. வாத்தியாரே! வாங்க வாங்க! ரொம்பநாள் கழித்து வலையுலகில்....மகிழ்ச்சி...

    எங்களையும் பாராட்டிக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி. அது சரி கெட்டப்பு அப்படியா இருந்துச்சு?!!ஹ்ஹஹஹ .....துளசி

    ஹீரோயின் கிடைத்த அந்த தருணங்கள்......ஆவியும், நானும் ..ம்ம் டைரக்டர் ஆவி எழுதட்டும்...அது இன்னும் நன்றாக இருக்கும். நாங்களும் எங்கள் வலையில் எழுதறோம். அது படம் வந்த பிறகு..எழுதலாம் என்று எண்ணி உள்ளோம்.....ஏனென்றால் ஏற்கனவே நாங்க நீ................ளமா எழுதுவோம்...இது கண்டிப்பா ரொம்ம்ம்ம்ம்ம்பவே நீளமாகிடும்...ஸொ ரெண்டு பதிவாவது எழுதணும்....அதான்....--கீதா
    மிக்க நன்றி அண்ணா எங்களையும் சொல்லியதற்கு....இவை எல்லாவற்றிற்கும் காரணம் துளசி, குடந்தையார், இப்போ ஆவி....அப்புறம் நீங்க எல்லாரும்.....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இருவரையும் குறிப்பிடாமல் அந்த ப்ராஜக்ட் முழுமை பெறுமா துள்ஸி அண்ட் கீத்ஸ்... நிச்சயம் நீங்களும் எழுதுங்க. ரசித்துப் படித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  22. Look at the followers. Look at their comments.
    It conveys their happiness on your return.
    Thank God, you are back with a bang and you have come out of the shell.
    Keep it up with your usual way of writing like this.

    ReplyDelete
  23. ஒரே நாளில் இவ்ளோவா கொடுப்பீங்க. பாருங்க சிந்தாம சாப்பிடவேண்டாமா:((( எதை mention பண்ணி, இதைவிட. நான் இரும்புக்கை மாயாவி படித்தத்தே இல்லை அண்ணா:( இன்னும் சொல்லபோன சின்ன வயத்தில் காமிக்ஸ் சே படிச்சத்தில்லை. மகி, நிறையோடு சேர்ந்து இப்போ தான் கொஞ்சம் படிக்கிறேன். இடையில் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என நினைத்து மறந்தே விட்டேன்.ஏக்நாத் அவர்களின் கிடைகாடு புத்தகம் படிக்கக் கிடைத்ததது. அட்டைப்படம் அழகாக இருந்த அந்த புத்தகத்தில் நூல் அழகு என்று உங்கள் பெயர் தாங்கி இருந்த்தது. ரொம்ப மகிழ்ச்சி அண்ணா! இனி அடிகடி எழுதுவதாக சொல்லியிருக்கிறீர்கள். வாக்கு மாறகூடாது சொல்லிபுட்டேன். ஸ்பை சகோ வின் ஜூனியர் ஸ்பை இப்போ ரொம்ப பிரபலம் ஆகிவிட்டார் போலவே! சீனுவின் படங்களை பார்க்கையில் ஒரு நாயகன் உதயமாகிறான் என BGM கேட்குது:) நம் நண்பர்களின் படம் வெற்றியடைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (19/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube