Monday, August 11, 2014

ராமலக்ஷ்மியின் ‘அடைமழை’

Posted by பால கணேஷ் Monday, August 11, 2014
முத்துச் சரம் நமக்குத் தொடுத்து அளிக்கும் ராமலக்ஷ்மி ராஜன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.  பத்திரிகைகளில் (தளத்தில்) பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய் சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப் படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில் வாசித்து முடித்து விட்டேன். என்றாலும் அதைப் பற்றிப் பேச  இப்போதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

ராமலக்ஷ்மி  இயற்கை வர்ணனை, கதாபாத்திர வர்ணனை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாது, நம்மை நேரடியாகக் கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிற எளிமையான எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறார். அவர்தம் கதை மாந்தர்களும் 90 சதம் அடித்தட்டு மக்களாகவே அமைந்து விடுவது இப்படியான எழுத்து நடைக்கு கூடுதல் வேகத்தை அளிக்கிறது. ‘அடைமழை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 கதைகளின் மையச்சரடாக அமைந்திருப்பது மனிதம்தான். சக மனிதர்களின் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான அக்கறை என்று நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறுகிற விஷயங்களின் மீது விரல் நீட்டுகின்றன இவரின் கதைகள். அவற்றைச் சில வரிகளில் பார்த்து விடலாம்....

முதல் சிறுகதை ‘வசந்தா’ குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பரவி விட்டதாக நாம் நினைக்கும் இன்றையச் சூழலிலும் எவ்விதத்தில் அது நம்முடன் இருக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறது. இரண்டாவது கதையான ‘பொட்டலம்’ வசதிக் குறைவான பெற்றவர்கள் நல்ல கல்வியை விரும்பி பெரிய பள்ளியில் தங்கள் மகனைப் படிக்க வைப்பதால் அந்தச் சிறுவனுக்கு எழும் மனவியல் பிரச்னையையும் கூடவே ஆசிரியைகள் நடந்து கொள்ளும் விதத்தையும் கண்முன் படம் பிடிக்கிறது. மூன்றாவது கதை ‘வயலோடு உறவாடி’ விவசாய நிலங்களை மறந்து. துறந்து வாழும் நம்மை கையைப் பிடித்து அங்கே இழுத்துச் சென்று அதன் அருமையை மனதில் உணரச் செய்கிறது.

நான்காவது சிறுகதை ‘ஈரம்’ எனக்கு மிகப் பிடித்திருந்தது. கணவனின் விருப்பத்திற்காக வேலையை விட முடியாமல் குழந்தையை ‘க்ரச்’சில் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் குடும்ப, அலுவலகச் சூழல்கள் இவரின் எழுத்தில் ஒரு குறும்படமாய் மனதில் விரிகிறது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் படிப்பவரையும் தொற்றிக் கொள்கிறது. ஐந்தாவது சிறுகதை ‘அடையாளம்’ தன் பெயரை எவரும் விசாரிக்கக் கூட செய்யாமல் வாழும் ஒரு எளியவனின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிற சிறந்த சிறுகதை. ஆறாவது சிறுகதை ‘பயணம்’ கூட்டுத் தொழில் செய்யும் நண்பன் திட்டியதால் மன உளைச்சலுடன் ரயிலில் பயணிக்கும் ஒருவனுக்கு ஏற்படும் திடுக் அனுபவத்தை விளக்கி எதிர்பாராத முடிவினால் புன்னகைக்க வைக்கிறது. 

ஏழாவது சிறுகதை ‘ஜல்ஜல் எனும் சலங்கையொலி’ அவரது தளத்தில் படிக்கையிலேயே மனதில் தனியிடம் பிடித்த ஒன்று. படித்து முடிக்கையில் சுப்பையாத் தாத்தாவிடம் கதை கேட்க வேண்டுமென்ற ஏக்கம் என் மனதிலும் வந்தது. அவர் ஏன் அந்த ‘ஜல்ஜல் மாட்டுவண்டி’க் கதையை கடைசிவரை சொல்லவே இல்லை என்பதை நீங்கள் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிறப்பு. எட்டாவது சிறுகதை ‘அடைமழை’யை நட்சத்திரக் கதை என்றே சொல்லலாம். தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் ஒருவன். போலீஸ்காரர் ஒருவரால் துரத்தப்பட்டு, அவமானமடைந்து வாழ்க்கையின் முன்னேற சபதம் செய்து போராடுகிறான். சற்றே வளர்ந்துவிட்ட நிலையில் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்ப்பது போல அந்தப் போலீஸ்காரரின் கோணத்தில் அவர்கள் வாழ்வை அவன் பார்க்க நேரிடுகிறது. அங்கே மனிதம் மலர்கிறது.

ஒன்பதாவது சிறுகதை ‘சிரிப்பு’ உம்மணாமூஞ்சியான ஒருவனை சிரிக்கச் செய்வது எது என்பதை விவரித்து நம் உதடுகளிலும் புன்னகையை ஒட்டுகிறது. பத்தாவது சிறுகதை ‘பாசம்’ பிற்பட்டோருக்கான கோட்டாவில் ஸ்காலர்ஷிப்பில் மகனை பெரிய படிப்பு படிக்க அனுப்பிவிட்டு அவ்வப்போது அவன் கேட்கும் பணத்தை அனுப்ப அந்தப் பாசமுள்ள பெற்றோர் படும் பாட்டை ரத்தமும் சதையுமாக வர்ணிக்கிறது. இச்சிறுகதையின் முடிவு கண்களை வேர்க்கச் செய்து விடுகிற ஒன்று. பதினொன்றாவது சிறுகதை ‘உலகம் அழகானது’ எனக்கு மிகப் பிடித்தமான சிறுகதை. பார்க்கில் காலை நடைபயிலும் இரண்டு நண்பர்கள் அருகம்புல் விற்கும் வியாபாரிகளிடம், தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதே தொழில் நடத்தும் ஒருவனுக்காகப் பரிந்து பேச, அவர்களுடன் தகராறு செய்ய நேரிடுகிறது. பின்னர் அந்த வியாபாரிகளின் மனமாற்றம் நேர்ந்து அந்த வியாபாரிக்கும் ஓரிடம் கிடைக்கிறது அங்கு. இந்தச் சிறுகதையின் உள்ளீடான மனிதநேயமும், பாஸிட்டிவ் அப்ரோச்சும் சேர்ந்து ராமலக்ஷ்மியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக்கி விடுகிறது இதை.

பன்னிரண்டாவது சிறுகதை ‘இதுவும் கடந்து போகும்’ கூட பாஸிட்டிவ் அப்ரோச் கொண்ட கதைதான். ‘தானே’ புயலின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளின் பின்ணணில் துவங்கி உணர்வுகளைப் பேசும் கதை. படித்துத்தான் அதை நீங்கள் அனுபவிக்க முடியும். பதிமூன்றாவது சிறுகதை ‘அடைக்கோழி’ மருமகளின் விருப்பத்துக்கு மாறாக மாமியார் வளர்க்கும் கறுப்பி என்கிற கோழியையும் மாமியார்  உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட பின் அந்த அடைக்கோழி என்னாகிறது என்பதையும் விவரிக்கிறது. இதுவும் நுட்பமான உணர்வுபூர்வமான கதைகளில் ஒன்றாகக் குறிப்பிட வேண்டியது.

நான் தமிழில் ‘சுதாரித்துக் கொண்டு’ என்று வார்த்தை இருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். புத்தகம் பூராவிலும் ‘சுதாகரித்துக் கொண்டு’ என்றே வருகிறது. (சுதாரி - சரியா, சுதாகரி - சரியா?) பேச்சு வழக்கில் எது சரியான சொல் என்பது சரியாகத் தெரியவில்லை. யாராவது தமிழ் அறிஞர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். பார்க்கலாம்...

மொத்தத்தில் ‘அடைமழை‘ தொகுப்பைப் படித்து முடிக்கையில் உங்களுக்கு ஒரு மனநிறைவும், கூடவே லேசாய் மனதில் கனமும் ஏற்படுவதும், சிந்தனைகள் கிளறப்படுவதும் நிச்சயம் நடக்கக் கூடிய விஷயங்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுபோன்ற நல்ல கதைகள் சிலவற்றை நாமும் எழுதியாகணும் என்று மனம் உறுதி கொண்டது. தொப்பிகள் இறக்கப்பட்டன (ஹாட்ஸ் ஆஃப்-க்கு தமிழ்.. ஹி... ஹி...) ராமலக்ஷ்மி மேடம்!

51 comments:

  1. நல்ல அலசல். நானும் இவரது இரண்டு புத்தகங்களும் வாங்கியிருக்கிறேன். இவரது சிறுகதைகளை பத்திரிகைகளிலும் அவர் தளத்திலும் சுடச்சுட வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.

    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராய் என் அலசலை ரசித்து, ராமலக்ஷ்மி மேடத்தை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீ.

      Delete
  2. சகோதரி ராமலக்ஷ்மி அவர்களது பதிவுகளை அவரது வலைப்பூவில் படித்திருக்கிறேன். புத்தகம் இன்னும் படிக்கவில்லை. படிக்கிறேன் வாத்தியாரே...

    "சுதாகரித்து" என்ற வார்த்தையை பலர் பயன்படுத்துகிறார்கள். எனக்கென்னவோ இதுதான் மருவி "சுதாரித்து" என்றானதோ என்ற சந்தேகம். தேடிப்பார்க்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. அட... இப்படிக் கூட மருவிடுச்சுன்னு சமாதானம் பண்ணிக்குவீங்களா.... அப்ப இன்னும் நிறைய வார்த்தைய தமிழ்ல உண்டாக்கலாம் போலயே ஸ்பை..., சூப்பரு! இந்தத் தொகுப்பை படித்துப் பார்.. நான் சொன்னது மிகையில்லை என்பதை உணர்வாய். மிக்க நன்றி.

      Delete
    2. அடடே.. ஸ்கூல் பையன் இதை ஏற்கனவே சொல்லிட்டாரே.. கவனிக்கலியே..

      Delete
  3. தங்கள் பதிவை பார்த்தவுடன் படிக்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது இங்கெல்லாம் கிடைக்குமா தெரியலியே கிடைத்தால் நிச்சயம் வாசிப்பேன். நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. ராமலக்ஷ்மி மேம் தளத்துல நெட்ல ஆர்டர் பண்றதுக்கான லிங்க் இருக்கு பாரும்மா. வெளிநாட்டுக்கு எப்படி அனுப்புவாங்கன்னு தெரியல.... மகிழ்வு தந்த வருகைக்கு மனம் நிறைய நன்றி இனியாம்மா.

      Delete
  4. அருமையான சிறுகதை தொகுப்பை, அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா!! நான், இன்னும் இவரின் கதைகள் படித்ததில்லை!!! இனிதான் படிக்க வேண்டும்!!!

    முக்கோகிழானடிகளின் உருவத்தை நம் முன்னே காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், பாலகுமாரன் சார், முக்கோணமாக்கி இருப்பார் என எண்ணுகிறேன்!!!

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பார் பிரதர். பிடித்துப் போகும். உனக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  5. எல்லாக் கதைகளையும் அலசி படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள். அடைக்கோழியை ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாய் ஞாபகம். வாழ்த்துக்கள் உங்களுக்கும் கதை எழுதிய ராமலக்ஷ்மிக்கும்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.

      Delete
  6. விமர்சனம் அருமை சார்! அவரது வலைப்பூவில் அவர் எழுத்துக்களை பார்த்திருக்கின்றோம்...வாசித்திருக்கிறோம்.... இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்....வாசித்துவிடுகின்றோம்....

    ReplyDelete
    Replies
    1. வாசித்து மகிழுங்கள் நண்பரே... மிக்க நன்றி.

      Delete
  7. மிக்க நன்றி கணேஷ். ஊக்கம் அளிக்கும், விரிவான, நிறைகளோடு குறையையும் சொல்லியிருக்கும் விமர்சனம். சுதாரித்துக் கொண்டேன்:)!

    வாழ்த்தியிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த நூலைப் பற்றிப் பேசியதில் எனக்குத்தான் மகிழ்ச்சியும் பெருமையும். மிக்க நன்றிங்க.

      Delete
  8. ராமலக்ஷ்மியின் கதைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் தளத்தில் எல்லா கதைகளையும் படித்து விடுவேன், ’ஜல் ஜல் எனும் ‘சலங்கைஒலி’ ‘அடைக்கோழி’ இரண்டும் மிக பிடித்த கதை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மிக்கு.
    அழகாய் விமர்சனம் செய்து இருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து எனக்கு வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  9. ராமலக்ச்மி அவர்களுடைய போட்டோ பதிவுகளுக்கு நான் ரசிகன்... எங்கே கவிதைத் தொகுப்போ என்று பயந்துவிட்டேன்.. சிறுகதைத் தொகுப்பு பார்சல் ப்ளீஸ் :-)

    ReplyDelete
    Replies
    1. //எங்கே கவிதைத் தொகுப்போனு பயந்து விட்டேன்..
      கவிதைப்பிரியர்.

      Delete
    2. பார்சல்தானே... பண்ணிரலாம் சீனு.

      Delete
  10. வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///நன்று,சிறுகதைத் தொகுப்பு அலசல்.///சுதாரித்தல்/சுதாகரித்தல்............எங்கள் பக்கம் 'சுதாகரித்தல்'என்றே வழக்கத்தில் உண்டு.(பொருள் தான்.......தெரியல,ஹி!ஹி!!ஹீ!!!)

    ReplyDelete
    Replies
    1. எனக்குத்தான் ‘சுதாரித்தல்’ன்னே படிச்சுப் பழகிருச்சு. மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  11. அழகாய் விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இந்த நூலுக்கு எழுதியிருக்கும் அணிந்துரைக்கு உறை போடக் காணுமா அண்ணா இது? என்றாலும் நீங்கள் ரசித்ததில் மிகமிக மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  12. அருமையான விமர்சனம் கணேஷ் ஐயா.

    படைப்பாளி ராமலட்சுமிக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து படைப்பாளியை வாழ்த்திய அருணாவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. ராமலஷ்மி அக்காவின் அடைமழையில் அழகாக நனைந்து எங்களையும் அதில் நனைத்திருக்கிறீர்கள் அண்ணா.

    அக்கா அவர்களின் சிறுகதைகள் மிகவும் எதார்த்தமாய் இருக்கும்...

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அக்காவின் கதையை ரசித்து எங்களை வாழ்த்திய பிரதர் குமாருக்கு மிகமிக மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  14. 13 சிறுகதைகளின் ஒவ்வொரு கதையையுமே சில வரிகளில் புரிய வைத்துவிட்டீர்கள். தங்களுக்குப் பாராட்டுக்கள்!


    மேலும் சிறப்பான கதைகளைத் தந்த ராமலக்ஷமி மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கதைகளின் தன்மையைப் புரிய வைக்க சில வரிகள் தேவைப்படுகிறதுல்ல... பாராட்டி, வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  15. சுதாரித்துக் கொண்டு சுதாகரித்துக் கொண்டின் திரிபு - நகர வழக்கு. சுதாகரம் வடமொழி - மாற்றம், புது தோற்றம், மொத்த வடிவம், பூச்சு வேலை, சந்திரன் (மறைந்து தோன்றும் சந்திரனுக்கு சுதாகர), effulgence (யாருக்கு தெரியும் தமில்?), இத்யாதி பொருளில்... சுதாரித்துக் கொண்டு என்பதற்கு உண்மையில் அர்த்தமே இல்லை - ஆரிய மாயை எதிர்ப்போர் திரித்த சொல் - தமிழும் இன்றி வடமொழியும் இல்லாத ரெண்டுங்கெட்டான். நமக்குத் தான் லாயக்கு. ராமலக்ஷ்மிக்கு சுதாகரித்துக் கொண்டு தான் அழகுணு தோணுது.

    ஒரு வார்த்தையைப் பிடிச்சீங்களே?!

    ReplyDelete
    Replies
    1. அதான் எனக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்னு சரண்டராயிட்டனே முதல்லயே.... இப்படி ஒரு அழகான பொருள் இருக்குன்றது இப்பத் தெரிஞ்சுக்க முடிஞ்சதுல சந்தோஷம் எனக்கு. மிக்க நன்றி அப்பா ஸார் அழகான விளக்கத்துக்கு.

      Delete
    2. @ அப்பாதுரை, விளக்கத்துக்கு நன்றி :).

      @ கணேஷ்,
      வழக்கில் சுதாகரிப்பு என்றே சொல்வோம் எங்கள் பக்கத்தில். வழக்கில் இருப்பதாலேயே சரி என்றாகி விடாதுதானே. வடமொழியிலிருந்து வந்தது என்பது அப்பாதுரை அவர்கள் சொன்னதிலிருந்தே அறிந்து கொண்டேன். அவரும் எந்தப் பிரயோகம் சரி என உறுதியாகத் தெரியவில்லை என்றே முடித்திருக்கிறார்.

      இணையத்தில் சரி பார்ப்பதில் நம்பிக்கையில்லை என்றாலும் நேற்று பார்த்த போது‘சுதாகரித்துக் கொண்டு’ என நாலாயிரத்து சொச்சபேரும்,‘சுதாரித்துக் கொண்டு’ என பதிமூன்றாயிரத்து சொச்ச பேரும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆன்லைனில் கிடைக்கும் அகராதிகளும் நம்பகத்தன்மை அற்றவை என சொல்லப்படுவதால் தமிழறிஞர்கள் யாரேனும் தெளிவு செய்தால் நன்றாயிருக்கும். எப்படியானாலும் உங்கள் வரையில் உடன்பாடில்லாத ஒரு வார்த்தை பல இடங்களில் [சொல்லிய பிறகே கவனித்தேன், 7 கதைகளில்:)] வருவதை உன்னிப்பாகக் கவனித்தத் திறனுக்குத் தொப்பியை இறக்குகிறேன் நானும்:)!

      --

      Delete
    3. ரொம்ப நன்றி,அப்பாதுரை சார்!பொருளே தெரியாமல் இத்தனை ஆண்டுகளாக ஒரு சொல்லைப் பிரயோகித்திருக்கிறோம்/பாவித்திருக்கிறோம் என்னும் போது.........///அது ஏதோ வடமொழி அல்லது ஏதோ ஒன்றிலிருந்து வந்திருக்கும் என்ற எண்ணப்பாடும் இருந்தது.ஐயப்பாடு களைந்தமைக்கு மீண்டும் நன்றி!///பாலகணேஷ் சார் 'சுட்டியதால்' ஒரு சொல்லின் பொருள் தெரிந்து,ஐயப்பாடு நீங்கியது.நன்றி!!!

      Delete
    4. அப்பாதுரை சார்,

      //சுதாரித்துக் கொண்டு என்பதற்கு உண்மையில் அர்த்தமே இல்லை - ஆரிய மாயை எதிர்ப்போர் திரித்த சொல் - தமிழும் இன்றி வடமொழியும் இல்லாத ரெண்டுங்கெட்டான்.//

      ஆரிய மாயை எதிர்ப்போர் மீது என்ன கோபமோ?

      சுதாகரிப்பு , காரியாலயம், காரியதரிசி, ஜாகை , குமாஸ்தா அபிஷ்டு, அசமஞ்சம் என்பதான வடமொழி கலந்த மணிப்பிரவாள தமிழ் நடையினை , கல்கி, தேவன், ல.ச.ரா, நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி போன்றோர் படைப்புகளில் அதிகம் காணலாம், அவர்கள் யாரும் ஆரிய மாயை எதிர்ப்பாளர்கள் அல்ல!

      இது போன்ற சொற்களை பேச்சு வழக்கில் திரிபாக பேசுவதனை "மயிலாப்பூர், மாம்பல வாசிகளிடம் அதிகம் காணலாம் ,அவங்களூம் ஆரிய மாயை எதிர்ப்பாளர்கள் அல்லவே.

      மாம்பலத்துல பேச்சு வழக்கில் சுதாரிப்பு என்றால் வட சென்னையில் உசாரு (உஷாரு)

      விழித்துக்கொள்வது என நீட்டி முழக்கி தமிழில் எழுதலாம் ஆனால் பேச்சு வழக்கில் "முழிச்சிக்கிட்டான்" தானே :-))

      சுதாகரிப்பு என்ற சொல்லின் வேர்ச்சொல் "சுதா" என்பது அமிர்தத்தினை குறிப்பது , சுதாகரிப்பு என்பது அமிர்தம் கொடுப்பது என்ற பொருளீல் இல்லாமல் உயிர்ப்பிப்பது அல்லது உயிர்த்தலை குறிக்க " மறைந்த(இறந்த) சந்திரன் மீண்டும் வருவதை ,உயிர்ப்பதை சுதா சந்திரன் என்கிறார்கள், அதாவது பிறை நிலா, வளர்பிறை, என தமிழில் சொல்லலாம், சந்திரன் என்பதும் வடமொழி தானே!!!

      உயிர்க்கொடுக்கும் பெண் "சுதா" ,ஆண் "சுதாகர்" சுதாகர் என்பது சந்திரனை நேரடியாக குறிக்கும் சொல் அல்லனு நினைக்கிறேன்.
      ---------

      பாலகணேஷர்,

      பதிவுக்கு வந்தமா பதிவைப்பத்தி நாலு வார்த்தை சொல்லாமல் பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போட்டு கொல்றானே என "மைண்ட் வாய்சில்"(மனக்குரல்? மனம் வடமொழினு அப்பாத்துரை சார் சொல்லிடுவாரு, எனவே டமிலில் "மைண்ட் வாய்ஸ்"னே வச்சிப்போம்) திட்டுறது கேட்குது அவ்வ்!

      நல்ல புத்தக விமர்சனம், ஒரு கதை விடாம புத்தகத்தில இருக்க எல்லா கதைப்பத்தியும் குறிப்பிட்டு சொல்லி இருக்கீங்க , நூலாசிரியர் 'ராமலட்சுமி" அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

      Delete
    5. ஒரு கோபமும் இல்லை வவ்வால். கிண்டலுக்காகச் சொன்னது. ஆரிய மாயை எதிர்க்கப் பட்டதில் உடன்பாடு தான். இல்லையெனில் தமிழ் பிழைத்திருக்காது.

      Delete
    6. மறைந்து தோன்றும் சந்திரனை சுதாகரன் எனல் காரணப்பெயர் தான். சரியே.

      Delete
    7. ஆரிய மாயை எதிர்க்கப் பட்டதினால் தான் ஏதோ பெயரளவுக்காவது நாத்திகம் பிழைத்திருக்கிறது. மொழியை விட இது முக்கியம் ;)

      Delete
    8. மொழியில் கலப்பு தவறில்லை என்பது என் கருத்து வவ்வால். மனம் பிடித்திருக்கிறதா? உளமாற உபயோகிப்போம் (இதுவும் கலப்பு தேன் ஹி)

      Delete
  16. ராமலக்க்ஷ்மியா? இப்படி அழுத்துறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நம்ம சகப்ளாக்கர், தோழிங்கற உரிமைல அழுத்திட்டனோ...? ஹி... ஹி.. ஹி... இப்ப மாத்திடறேன்.

      Delete
  17. சுதாரம்னா வடமொழியில பருத்த வயிறுனு பொருள். தொப்பை.
    சுதாரித்துக் கொள்வது சரியா சுதாகரித்துக் கொள்வது சரியான உபயோகமா?

    ReplyDelete
    Replies
    1. சுதாரம் இல்லாம பண்ணணும்னுதான் நானும் போராடிக்கிட்டிருக்கேன். அவ்வ்வ்வ்... சுதாகரித்துக் கொள்வதுன்னே எழுதலாம் ஸார்.....

      Delete
  18. வாவ்! அருமை! ராமலக்ஷ்மிக்கு எங்கள் இனிய பாராட்டுகள்.

    இன்னும் புத்தகம் வாங்கலை. அடுத்த பயணம் வரை காத்திருக்கத்தான் வேணும்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் டீச்சர்... புத்தகம் வாங்க உதவுகிறேன். படித்து ரசியுங்கள். பாராட்டுகளை வழங்கிய உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  19. தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  20. ஒரு வார்த்தையில் இவ்ளோ மேட்டர் இருக்கா?
    சுதா(க)ரித்துகொள் மைதிலி!!
    ஹா...ஹா...
    அருமையான விமர்சனம் அண்ணா! தொப்பிகள் இறக்கப்பட்டன!!

    ReplyDelete
  21. அருமையான சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே
    அவசியம் புத்தகம் வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி

    ReplyDelete
  22. திருமதி ராமலக்ஷ்மியின் நேர்முக அறிமுகம் உண்டு. கவிதைகள் பல படித்திருக்கிறேன். புகைப்படங்களை ரசித்திருக்கிறேன் இச்சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படிக்க வேண்டும் உங்களது ழே போல ராமலக்ஷ்மிக்கு சுதாகரிப்பா.?.

    ReplyDelete
  23. அன்பு கணேஷ், நல்ல மதிப்புரை அளித்து ராமலக்ஷ்மியின் படைப்புக்கு மகுடம் சூட்டி இருக்கிறீர்கள்.இன்னும் நல்ல கதைகளை அவரும் எழுத நீங்களும் விமரிசக்கணும். சுதாகரம்னால் முதாகரம் நினைவுக்கு வருகிறது:)

    ReplyDelete
  24. புத்தகத்திருவிழா போகும் போது லிஸ்ட் ல இந்த புக்கயும். சேர்த்துகிறேன்... கதைகள். அத்தனைக்கும் சிறு. விளக்கம் கொடுத்திருந்தது சிறப்பு ...பின்னூட்டத்தில் ஒரு மாபெரும் விவாதமே ஓடிருக்கே !!! :)

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube