சிறுவர்களின் உலகம் கதாநாயகர்களால் நிரம்பியிருப்பது. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயதில் தன் அப்பா செய்வதை போல பேப்பர் படிப்பது, சைக்கிள் ஓட்ட முயற்சிப்பது என்று குழந்தை சிறுவனாக முயற்சிக்கிற வயதில் முதல் ஆதர்ஸ ஹீரோ அப்பாதான். அதன்பின் பள்ளி செல்லத் துவங்கி, உலகத்தை சற்றே அறிமுகம் செய்து கொள்கிற பருவத்தில் டீச்சர், பிறகு திரையில் பார்த்து ரசிக்கும் கதாநாயகர்கள் என்று உருவங்கள் மாறலாம். மாறாதது கதாநாயகன் என்கிற பிம்பம்.
வீட்டில் அப்பாவோ அம்மாவோ நிறையப் படிக்கிற பழக்கத்தை மேற்கொண்டிருந்து, குழந்தைகளையும் அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களைப் படிக்கப் பழக்குகிற பெற்றோர்களைப் பெற்ற குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் புத்தகங்கள் மூலமும் தங்களுக்கான கதாநாயகர்கள் கிடைக்கப் பெறுவார்கள். மதுரையில் இவன் தன் ஏழாவது வயதிலேயே அப்பாவை இழந்து விட்டதால் அண்ணனும் இவனும் படித்து வளர்வதே போராட்டமாக இருந்த சூழ்நிலையில் இவன் வீட்டினர் புத்தகங்கள் எதுவும் வாங்குகிற நிலையில் இல்லை. டி.வி.எஸ். நகரில் இருந்த சமயம் சமவயதில் பக்கத்து வீட்டில் இருந்த ஆனந்த் பழக்கமானான். அவன் அப்பா கிருஷ்ணாராவ் அவனுக்காக வீட்டில் நிறைய (பெரும்பாலும் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம்) காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பார். வண்ண வண்ணமாக அழகு கொஞ்சுகிற படங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்த பொழுதில்தான் இவனுக்குள்ளிருக்கும் வாசகன் விழித்துக் கொண்டான். ஆதர்ஸ கதாநாயகர்களும் மனதினுள் நுழைந்தார்கள்.
அப்பாவுடனும் அப்பா இறந்த பின்னர் தனியாக மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படங்களின் மூலமும் இவன் மனதில் அதுவரை இருந்த ஒரே கதாநாயகன் எம்.ஜி.ஆர்.தான். ஆனந்தின் வீட்டில் படித்த காமிக்ஸ்கள் மூலம் ரசனைக்கு உத்தரவாதமளிக்கும் அடுத்தடுத்த கதாநாயகர்கள் அணிவகுத்தனர். கதாநாயகர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்... அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கப் போனால் ஆனந்து ரொம்பவே அலட்டிக் கொள்வான். ஹோம் ஒர்க் பண்ணணும், அப்பா திட்டுவாரு, புறப்படு என்று விரட்டப்பட நேரிடும். ஆனந்தை ஆனந்தப்படுத்தி விட்டுத்தான் இவன் ஓசிப் புத்தகம் படித்து ரசிக்க வேண்டிய நிலை. கொடுமைடா சாமி!
மந்திரக் குகை மர்மம், இடியின் மைந்தன் போன்ற மாயாஜால காமிக்ஸ்கள் மனதைக் கவரத்தான் செய்தன. அவற்றில் இடம் பெறும் வீரர்கள் நினைத்தபடி உருமாறும், மின்னலைக் கட்டுப்படுத்தும் போன்ற சாகசங்கள் செய்வது பிரமிப்பைத் தந்தன. (இதையே கொஞ்சம் சஸ்பென்ஸ் சேர்த்துச் சொன்னா அதான் ஹாரிபாட்டர். அதுக்குத் தாத்தால்லாம் தமிழ்ல உண்டுங்க.). ஆனாலும் அந்தந்த கதையுடன் முடிந்து விடுவதால் மனதில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமரவில்லை அவை என்பதே நிஜம். கல்கியில் அப்போது வாண்டுமாமா எழுதும் சரித்திரம் சாகஸம் நிரம்பிய காமிக்ஸ் கதைகளும். ‘நந்து சுந்து மந்து’ போன்று சிறுவர்களை வைத்து எழுதிய கலகல துப்பறியும் கதைகளும் அப்படித்தான்.
முதலில் மனதில் பதிந்த கதாநாயகர் இரும்புக் கை மாயாவி. தன்னுடைய இரும்புக் கரத்தை ஏதாவது ஒரு பிளக் பாயிண்டில் செருகி மின்சாரத்தைத் தனக்குள் பாய்ச்சிக் கொண்டார் என்றால் அவர் உருவம் கண்ணுக்குத் தெரியாது. இரும்புக் கை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். இந்த வசதியைப் பயன்படுத்தி அவர் ஈடுபட்ட சாகசங்கள் அடங்கிய ஒவ்வொரு காமிக்ஸும் பித்துப் பிடித்த மாதிரி துரத்தித் துரத்தி (ஆனந்திடம் கெஞ்சி ஓசிவாங்கி) படிக்க வைத்தன இவனை. (இப்போ வாங்கலாம்னு ஆசைப்பட்டாலும் இவன் குறிப்பிடற ஹீரோக்களோட காமிக்ஸ்ல ஒரு பிரதி கூட பழைய புத்தகக் கடைல கூடக் கிடைக்கலை. அவ்வ்வ்வ்வ்).
மாயாவிக்கு அடுத்தபடியாக மனதில் இடம் பிடித்த கேரக்டர்கள் லாரன்ஸ் அண்ட் டேவிட். லாரன்ஸ் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் மாதிரி கம்பீரமாக இருப்பார். டேவிட் என்பர் அதிபலசாலியாக மொட்டைத் தலையுடன் நம்மூரு எஸ்.ஏ.அசோகன் மாதிரி இருப்பார். உளவுத் துறை இவர்கள் இருவரையும் சேர்ந்துதான் கேஸைக் கவனிக்கச் சொல்லும். ‘பாஸ்’ என்று லாரன்ஸை அழைக்கும் டேவிட் பின்னாளில் இவன் படித்து ரசித்த, இன்றளவும் ரசித்துக் கொண்டிருக்கும் கணேஷ்-வஸந்த்துக்கு முன்னோடியாக இவன் மனதில் பதிந்த ஹீரோக்கள். ஒருவர் புத்திசாலியாக துப்பறிபவர், மற்றவர் அதிரடியாக ஆக்ஷனில் களமிறங்குபவர்கள் என்ற இந்த ஜோடி மிகப் பிடித்தமான ஒன்றாகிப் போனது.
அதன்பின் தினமணி கதிரில் வெளிவந்த ரிப்கெர்பி என்கிற துப்பறிவாளர் மனதைப் பறித்தவர். படிய வாரிய தலையும், இன்னாளில் இவன் அணிந்திருப்பது போன்ற கண்ணாடியும், வாயில் எப்போதும் புகையும் பைப்புமாக ஒரு கல்லூரிப் பேராசிரியர் போலத் தோற்றமளிக்கும் இவர் தான் துப்பறியும் கதைகளில் நிறைய சாகசங்களும் செய்வார். காமிக்ஸாக தமிழிலும் நிறைய வந்திருக்கின்றன.
அதற்கு அடுத்தபடியான மற்றொரு கதாபாத்திரம் சாகச வீரர் ஜானி நீரோ. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல, தமிழில் அந்த வயதில் பார்த்த சில ஜெய்சங்கர் படங்கள் போல அடுத்தடுத்து சாகசங்கள் தூள் பறக்கும் காமிக்ஸ் கதாநாயகனான இந்த ஜானி நீரோ மனதில் தனியிடம் பிடித்துக் கொண்டார்.
இப்படி மனதில் இடம் பிடித்த காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரைப் பற்றியும் எழுத முற்பட்டால் தொடர்பதிவுகளாக நீளும் அபாயம் உண்டு என்பதால்தான் மனதை அதிகம் ஆக்ரமித்த இந்தக் கதாநாயகர்களை மட்டும் இவன் குறிப்பிடுகிறான். இந்த நான்கு (ஐந்து?) கதாநாயகர்களும் கல்லூரி செல்லும் காலம் வரையிலும் கூட மனதில் நிலைத்திருக்கத்தான் செய்தனர். இப்போதும் நினைத்துப் பார்க்கையில் இவனுக்கு இளம் பருவத்தில் ஓர் இனிய உலாச் சென்று வந்த திருப்தி கிடைக்கத்தான் செய்கிறது. பருவங்கள்தோறும் கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருந்தாலும், படிக்கிற அவர்களே பின்னாளில் கதாநாயகர்களாக உருவெடுத்தாலும்கூட இளம் வயதில் மனதில் பதிந்த கதாநாய பிம்பங்கள் மாறுவதேயில்லை.
காமிக்ஸ் கதாநாயகர்களை ரசிக்கையில் சினிமாவில் பார்த்து ரசித்த கதாநாயகனையே காமிக்ஸிலும் ரசிக்க முடிந்ததென்றால் அது டபுள் குஷிதானே... அப்படித்தான் அமைந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறிவதாக வந்த காமிக்ஸ், அதேபோல வாலிப வயதில் கணேஷ் மட்டும் துப்பறிந்த சுஜாதாவின் முதல் நாவலான ‘நைலான் கயிறு’ நாவலை வஸந்த் கேரக்டரை சேர்த்து படக் கதையாக வந்த ஒரு மாதநாவல் புத்தகம். இவை இரண்டையும் படித்து, ஓவியங்களைப் பார்த்து ரசிக்கையில் கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே... வார்த்தைகளில் கொண்டுவர முடியாத வர்ணஜாலமான ஒன்று.
படித்து ரசித்து சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களில் பலவற்றை காலத்தின் ஓட்டத்தில் நாம் இழந்து விடுவது அனைவரின் வாழ்விலும் நடக்கிற ஒரு விஷயம். அதுபோல பழைய பொக்கிஷங்களில் இவன் தொலைத்த லிஸ்டில் இந்த காமிக்ஸ்களும் அடக்கம். பின்னாளில் ஊர் ஊராக பழைய புத்தகக் கடைகளில் வேட்டையாடிய போதும் இவை சிக்கவில்லை. அந்த வேட்டைகளின் பலனாக வேறு பல அரிய பொக்கிஷப் புத்தகங்கள் இவனுக்குச் சிக்கின என்பது வேறு விஷயம்.
சில நாட்களுக்கு முன் இணையதளம் ஒன்றில் வாத்யார் துப்பறிந்த அந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டதும் இவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவன் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய இங்கே க்ளிக்கி அந்தப் புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்து, பார்த்து ரசியுங்கள். சினிமாவில் பார்த்த வாத்யாரின் சாகஸங்கள் படக்கதையாகப் பார்க்கையில் கிடைப்பது தனி சுகம். கணேஷ் வஸந்த் துப்பறிந்த அந்த படக்கதை புத்தகம் இப்படிக் கிடைக்குமா, இல்லை... கடைசிவரை நினைவுகளில் மட்டுமே தங்கிவிட்ட ஒன்றாகிவிடுமா தெரியவில்லை..!
|
|
Tweet | ||
இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ் அன்ட் டேவிட், ரிப் கெர்பி, நுனி நீரோ என்று தேடித் தேடி ஒவ்வொரு வாடகை புத்தக நிலையமாக அலைந்த , இளமைக்கால நினைவுகள் மீண்டும் அலைமோதுகின்றன நண்பரே
ReplyDeleteநன்றி
தம 2
உங்களிடமும் இந்த இனிய நினைவுகள் மனதில் படிந்திருப்பதை அறிய மகிழ்ச்சி. இன்றைய குழந்தைகள் மிஸ் பண்ணுகிற விஷயங்களில் இவையும் ஒன்று இல்லையா...? வருகைக்கும் உற்சாகம் தந்த கருத்துக்கும் மனம் நிறைய நன்றி நண்பரே...
Deleteஇந்த ஆனந்து அதிகம் காமிக்ஸ் படிச்சதில்லை சார். காமிக்ஸ் படிக்க ஆரம்பிக்கற வயதிலேயே ராஜேஷ்குமார் தான் படிப்பான்.. :) :)
ReplyDeleteஇப்போ இறக்கி படிச்சு அந்த குறைய போக்கிடறேன் சார்..
நான் சந்திச்ச நண்பர்களிடம் கவனிச்ச ஒரு விஷயம் என்னன்னா... காமிக்ஸ் படிக்கறதுக்கு மட்டும் வயசு வித்தியாசமே கிடையாது ஆனந்து. எப்பவும் எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சிறுவன் அழியாமல் இருப்பான். அதை நிறையப் பேர் உயிர்ப்பிக்கத் தவறிடறாங்க, அவ்ளவ்தான். நீ படிக்க நிறைய நல்ல காமிக்ஸ் நான் பிடிஎப்ஆ தர்றேன். கேட்டு வாங்கவும். மிக்க நன்றி.
Deleteதிரு பால கணேஷ், என்னுடைய e-mail - madhu.p.iyer@gmail.com என்ற முகவரிக்கு வாண்டு மாமா கதைகளை முக்கியமாக பலே பாலுவும் பாட்டில் பூதமும் அனுப்ப முடியுமா? என் பெண்ணிற்கும் இந்த கதைய்களை அறிமுக படுத்த விரும்புகிறேன்
Deleteaahha!!!! Colourfull post!!! KALAKITTENGA BOSS!!!
ReplyDeleteIn a hurry, I read it as Double Kushboothane instead of ..... in 10th paragraph.
Yesterday only I was going through the old letters (roughly 25 years old) written by my co-borns, friends and room mates.
I had the same feelings which you underwent while recollecting the comic books
The font size is so big that I can read the same without spex. Keep it up.
திரு பாலகணேஷ்,
ReplyDeleteபால்ய தினங்களுக்கு சுகமாக பயணம் செய்யும் பதிவு. ஜானி நீரோ, லாரன்ஸ்-டேவிட், இரும்புக்கை மாயாவி, ரிப் கெர்பி, சார்லி, விங் கமாண்டர் ஜார்ஜ், காரிகன், முகமூடி வேதாளர்,கிஸ்கோ கிட் என பல கதாநாயகர்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்துவிட்டீர்கள். பலே பலே. காமிக்ஸ் கதைகளுக்கு வயதே ஆவதில்லை- அவைகளைப் படிக்கும் ரசிகனின் மன நிலையைப் போலவே. நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.
அருமையான நினைவுகள்! இரும்புக்கை மாயாவி படித்தது இல்லை! முகமூடி மாயாவி எனக்கு பிடித்த ஹீரோ!,ராணிக்காமிக்ஸ் நிறைய சேர்த்து இருந்தேன்! தினமணிக் கதிரில் வந்த சூப்பர்தும்பி என்னால் மறக்க முடியாத ஒரு சித்திரக் கதை! வாண்டுமாமா எழுதியதில் கபிஷ், சி.ஐ.டி சிங்காரம், பார்வதி சித்திரக்கதைகள் மறக்க முடியாதது. நானும் அந்த பழைய காமிக்ஸ்காலம் திரும்புமா என்று யோசிக்கிறேன்! நல்ல பகிர்வு! நன்றி!
ReplyDeleteஅண்ணா அருமையான கட்டுரை... நானும் 6-7ம் வகுப்பு வரையில் இந்த காமிக்ஸ் களின் அடிமைதான்... முகமூடி வீரர் மாயவி தோன்றும் என்ற வார்த்தைகளை காமிக்ஸ் புத்தகங்களில் தேடித் தேடி அவருடையதை மட்டும் படித்தவள்( சில நேரங்களில் அவரது புத்தகங்கள் கிடைக்காத போது காமிக்ஸ் படிக்க வேண்டும் என்ற ஒற்றை ஆர்வத்தில் பிற புத்தகங்கள் படித்ததும் உண்டு) ஆயினும் முகமூடி வீரர் மாயவியும் அவரது மகன் ரெக்ஸ்ம், அவரது மர வீடும் குகையும், அமேசான் காட்டு ஆறுகளில் அவரது பயணமும் அப்பப்பா மறக்கவே முடியாது. அந்த புத்த்கங்களில் படித்து அன்று முதல் இன்று வரை மர வீடுகளின் மீது ஒரு காதலே உண்டு(இன்று வரை அப்படியான வீடு ஒன்றையும் பர்த்ததில்லை என்பது வேறு கதை). ஆனால் என்ன அப்புத்தகங்களை பாதுகாப்பாக எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த வயதில் தோன்றவே இல்லை... அப்புறம் என்ன அம்மாவின் புண்ணியத்தில் அனைத்தும் எடைக்கு சென்றதுதான் மிச்சம்
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி இன்னும் என்னில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் ,அதனால் தான் >>> கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!
ReplyDeleteகடிக்கிற கொசு சாகிறமாதிரி..
நம் உடம்பிலும் கரெண்ட்டை
மிகச் சிறிதாய் சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
சந்தோசமா கரெண்ட்டிலே கையை வைக்கலாம் !<<<இன்றும் இப்படி என்னால் பதிவு போடமுடிகிறது !
த ம 5
நைலான் கயிறு நாவலில் கணேஷ் பாதியிலேயே கழன்றுகொள்வார். இறுதியில் கண்டுபிடிப்பவர் இன்னும் சிலநாட்களில் ஓய்வு பெறப் போகும் காவல் அதிகாரி என்று ஞாபகம்.....
ReplyDeleteகுழந்தைப் பருவம் முதல் இன்றுவரை மனத்தில் குடிகொண்டுள்ள ஆதர்ச காமிக்ஸ் கதாநாயகர்கள் பற்றிய உங்கள் நினைவுகள் வாசிக்கும் ஒவ்வொருவரையும் கடந்தகாலத்துக்கு அழைத்துச்செல்லும் என்பது உண்மை. நானும் இரும்புக்கை மாயாவி, சிலந்தி மனிதன் போன்றவற்றை வாசித்திருக்கிறேன். ஆனால் அதிரடி களத்தை விடவும் அதிகம் பிடித்தது அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, கோகுலம் கதைகளே. நினைத்துப் பார்த்து ஏங்கவைக்கும் இனியதொரு கனாக்காலம் அது.
ReplyDeleteஇந்த காலகட்டத்தில் ‘அணில்’ என்றொரு சிறுவர் இதழ் வந்துகொண்டிருந்தது. வாசகர்களில் எவரேனும் வாசித்த அனுபவம் உண்டா?
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
விரிவான விளக்கம் மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறுவயதில் காமிக்ஸ்களை படிப்பதற்காகவே ஒரு பழைய புத்தககடையிலேயே கிடப்பேன் .. பெரும்பாலும் முகமுடி மாயாவி தான் என் பேவரைட் . அதன்பின் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ்கள் சில படித்திருக்கிறேன் . மற்ற காமிக்ஸ்களெல்லாம் படிக்கவேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு . ஆனால் எங்கும் கிடைக்கவில்லை . பாலகாண்டத்து நினைவுகளை உசுப்பேற்றிவிட்டீர்கேள ப்ரோ . இன்னைக்கு முழுவதும் அதேபித்து பிடிச்சு ஒவ்வொரு பழைய புத்தக கடையா அலையவேண்டியதுதான் .
ReplyDeleteநன்றி அண்ணா
இந்தக் கதைகளை படிக்கும்போது ஒரு அலாதி இன்பம். நானும் எனது நினைவுகளில் மூழ்கிப் போனேன் கணேஷ்.
ReplyDelete