சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என்றாலே நினைவில் முட்டுபவை ‘கடல் புறா’வும், ‘யவனராணி’யும்தான். யவனராணியைவிடவும் கடல்புறா அவரின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதன் நாயகன் தரைப்படைத் தளபதியான கருணாகர பல்லவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மரக்கலம் (கப்பல்) செலுத்தும் கலையை அகூதா என்ற சீன கடற்கொள்ளைக்காரனிடம் கற்று தனக்கென்று ‘கடல்புறா’ என்ற மரக்கலத்தை வடிவமைத்து கடல்வீரனாக மாறி, சோழதேசத்திற்கு வெற்றி தேடித் தருவான். அந்நாளில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் வாணிபத்தை விஸ்தரிக்க, தமிழக மன்னர்களோ மரக்கலம் ஓட்டி போர் செய்து தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்தனர். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி இயற்கை அனுகூலமாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தியும் அனுகூலமற்ற நேரங்களில் போராடியும் அந்நாளிலேயே பலநாடுகளுக்கு கப்பலில் சென்று சாதித்த இனம் தமிழினம்.
இந்த நாவலில் சாண்டில்யன் மரக்கலத்தின் வகைகள் என்னெனன என்பதை விரிவாக விளக்கி எழுதியிருப்பார். கப்பல் தலைவன் பருவக் காற்று வீசும் தருணம் உட்பட ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கிட்டு செயல்படுவதை சொல்லியிருப்பார். மரக்கலத்தின் பாய்மரத் தண்டில் ஏறி நடுத்தண்டில் நின்ற வண்ணம் கருணாகர பல்லவனும் காஞ்சனா தேவியும் காதல் செய்வார்கள். அப்படி ஒவ்வொரு வரியையும் காட்சிகளையும் ரசித்து பலமுறை நான் படித்த புத்தகம் என்றால் அது ‘கடல்புறா’தான். ஒவ்வொரு முறை படிக்கையிலும் மானசீகமாக கருணாகரனாக என்னை உணர்ந்து கடல் பயணத்தின் சுகத்தை மனதில் காட்சிப்படுத்தி நுகர முயல்வேன். ஓரளவுதான் உருப்பெறும். விஷுவலாக என்னால் உணர முடியாது. அந்த அவஸ்தையைத் தீர்த்து வைத்தது நான் பார்த்த வாத்யாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.
படத்தில் வைத்தியராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு கடத்தப்பட்டு கடல் வீரனாக மாறுவார். கருணாகர பல்லவன் போல பாய்மரத்தில் நடுத்தண்டில் தொங்கியபடி ‘காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையெ’ என்று பாடுவார். சேந்தன் கடல்புறாவில் சுக்கான் பிடிப்பது போல படத்தில் நம்பியார் சுக்கான் பிடிப்பார். காஞ்சனாவுடன் கருணாகரன் காதல் செய்வது போல வாத்யார் ஜெயலலிதாவுடன் பாய்மர ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவார். அட... இதிலும் வாத்யாரின் கப்பல் சர்வாதிகாரியின் கபப்லுடன் கடல் போரில் ஈடுபடுகிறது! வாளேந்தி விளையாடுகிறார் வாத்யார்...! அந்நாளைய மரக்கலங்கள் எப்படி இருந்தன. எப்படி செலுத்தப்பட்டன என்பதை நாவலில் அந்த ஜாம்பவான் வர்ணித்திருந்ததை வண்ணத்தில் என் கண்முன் காட்சிப்படுத்தினார் இந்த ஜாம்பவான். அதன்பின் என் கப்பல் கனவுகள் கலர்ஃபுல்லாகின. அவற்றில் எனக்குப் பதில் வாத்யார்தான் தெரியத் தொடங்கினார் கதாநாயகனாக. வாத்யாருக்கு இந்தப் படம் உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது ஒரு ஆங்கிலப்படம் என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் கடல்புறாதான் இப்படத்தின் பெயரைச் சொன்னால் மனதில் நிழலாடுகிறது.
வாத்யாரின் வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க தனியிடம் இந்தப் படத்துக்கு உண்டு. சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த பி.ஆர்,பந்துலு அவர்கள் ஒருசமயம் நஷ்டத்தில் இருந்து மீள ஒரு வெற்றிப்படம் தந்தேயாக வேண்டிய கட்டாயத்தில், தயக்கத்துடன் வாத்யாரை அணுக, உடனே சம்மதித்து அவர் நடித்துத் தந்த படம் இது. பின்னாளில் பத்மினி பிக்சர்ஸில் தேடிவந்த மாப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 என பல வெற்றிப்படங்கள் வாத்யாரின் தோட்டத்தில் விளைய அச்சாரமிட்ட மெகாஹிட் படம் இது. மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும் இன்று கேட்டாலும் ரசிக்க வைப்பவை. காட்சிகளுக்கு அழகுசேர்த்த வசனங்களாலும் குறிப்பிடத்தக்க படம் இது. இன்றளவும் பதிவர்கள்/பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்’ என்ற வசனமாகட்டும், ‘உங்கள அதிகாரமென்ன சிலப்பதிகாரமா? காலத்தை வென்று நிலைப்பதற்கு?’ என்கிற வீரவசனமாகட்டும், ‘சற்றுப்பொறு கண்ணே... இவருடன் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்ற கேலி+ஜாலியாக வாத்யார் சண்டைக்குத் தயாராகும் வசனமாகட்டும், ‘மணிமாறா... மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கொக்கரிக்க, ‘ஏன் தெரியாமல்... சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்’ என வாத்யார் அசால்ட்டாக பதிலளிப்பதாகட்டும் அத்தனையும் கைதட்டல் பெற்ற ரசிக்கத்தக்க வசனங்கள். நாகேஷின் காமெடியும் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.
இத்தனை சிறப்புகளுடன் என் மனதில் பசுமையாக இடம் பிடித்திருந்த இந்தப் படத்தை பார்த்து பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில், துல்லிய ஒலிச்சேர்க்கையில் வருகிறது என்ற அறிவிப்பைக் கண்டவுடனேயே முதல் நாளே பார்க்கும் ஆவலில் மெட்ராஸ்பவன் சிவகுமாரைப் படுத்தியெடுத்து டிக்கெட் புக் பண்ண வைத்துவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமிக்ஸில் இப்படி ஆர்வமாக ஓடிப்போய்ப் பார்த்து நொந்த அனுபவம் மனதின் ஓரத்தில் வந்து போனாலும்கூட வாத்யார் படம் என்பதால் எப்படி இருந்தாலும் பார்க்கலாம் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
படம் இன்ப அதிர்ச்சி தந்தது. டைட்டிலை புதிதாக கிராபிக்ஸ் வொர்க் செய்திருந்தது வெகுஜோர். அகன்ற திரையில் வாத்யாரும் நம்பியாரும் மோதும் சண்டையில் வாட்கள்கூட பளிச்சென்று காட்சி தருகின்றன. கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார். விஜயலக்ஷ்மி நெற்றியின் நடுவில் வைக்காமல் வலது ஓரத்தில் பொட்டு வைத்திருப்பதுகூட துல்லியமாகத் தெரிகிறது. ஹி.... ஹி.... ஹி...! இன்னொரு ப்ளஸ் நம்ம விச்சு-ராமு பேர்ட்ட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை எடுத்துக்கிட்டு அதைக் கெடுக்காம அழகா டிஜிட்டலைஸ் பண்ணியிருக்கறது செவிகளுக்கு மதுரம்! படத்தை டிஜட்டலைஸ் பண்ணுவதற்காக நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டு அசத்தலா பண்ணியிருக்கற டீமுக்கு தரலாம் பாராட்டும் பொக்கேயும்..! (இன்னொரு முறை படத்தப் பாத்துரணும்னு முடிவு பண்ணிருக்கேன் மக்கா)
நாகேஷின் காமெடிசீன் ஒன்று மட்டும் வெட்டப்பட்டிருக்கிறது. (மண்டையோட்டை கையிலெடுத்து ‘எவனோ ஒருத்தன் சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்’ என்கிற சீன்) ஆனால் அது பலமுறை இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் உறுத்தவில்லை. என் ஆச்சரியம் என்னவெனில் சென்னை போன்ற மகாநகரத்தில் எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். வாத்யாரின் அறிமுகம், பளிச் வசனங்கள், பாடல்கள் இவற்றுக்கு அங்கும் விசிலடித்து சிலர் ரசித்ததும்தான். தலைவா... நீ இன்னும் சாகவில்லை,,!
ஆயிரத்தில் ஒருவன் - மிஸ்பண்ணக் கூடாதவன்!
|
|
Tweet | ||
அதானே...! தலைவர் படம் என்றால் எத்தனை முறையும் பார்க்கலாம்... பார்க்காதவர்களை அழைத்து சென்று அவர்கள் ரசிப்பதையும் ரசிக்கலாம்...
ReplyDeleteஅவர் எங்கே மறைந்தார்...? பலரின் மனதில் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறார்...!
வாழ்த்துக்கள் வாத்தியாரே (2)
// இன்றைய நஸ்ரியா போல... // ஆவி சீக்கிரம் வாப்பா...! ஹிஹி...
ஆமாம் டி.டி. இப்போ பார்க்கையிலும் திரைக்கதையின் டெம்ப்போவுக்காக அவர் மெனக்கெட்டிருக்கறது தெரியுது. பலமுறை பார்க்கலாம். என்னது... ஆவி சீக்கிரம் வரணுமா..? எத்தனை நாளா இந்த கொம்பு சீவற வேலை? ஹா... ஹா... பட், திரட்டிகள்ல இணைச்சுட்டு வர்றதுக்குள் கருத்து சொல்லிருக்கற உங்க ஸ்பீட் என்க்கு ரொம்பப் புடிச்சிருக்கு...
Delete// இன்றைய நஸ்ரியா போல... //
Deleteசத்தியமா எனக்கும் அப்படித்தான் தோணிச்சு வாத்தியாரே..
இன்றைய நஸ்ரியா தம்மா.. அன்றைய அம்மா யம்ம்ம்மா.
Deleteநினைத்தாலே இனிக்கும் பார்த்து நானும் நொந்து போயிருந்ததால் இனி எந்த "பழைய" படமும் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.... நீங்க சொல்வதைப் பார்த்தால் சூப்பரா இருக்கும் போலிருக்கே...
ReplyDeleteநானும்தானே உன்கூட சேர்ந்து நொந்தவன் ஸ்.பை... பட், இது புதுவிதமான ரசனைக்குத் ஃபுல்மீல்ஸ் போட்ட அனுபவம். ரொம்பவே சூப்பரா இருக்கு. போய்ப் பாருய்யா... (இல்ல... பார்க்கலாமா?)
DeleteWow...paarkka asaiya iruke.....
ReplyDeleteவுடாதம்மா... வூட்டுக்காரரை அவசியம் கூட்டிட்டுப் போகச் சொல்லிப் பாரு... இல்ல... அவர்தான் உன்கிட்ட பர்மிஷன் வாங்கி படம் பாப்பாருன்னா... ஹி.. ஹி...! உடனே போய்ப் பாத்துரும்மா...!
Deleteகடல் புறா - பலமுறை படித்துப் படித்து ரசித்த கதை ஐயா
ReplyDeleteஅக் கதைக்குத் தன்னுடைய நடிப்பால் உயிர் கொடுத்தவர்தான் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் காலத்தால் அழிக்க இயலாதவர்,
என்றென்றும் வாழ்வார்
நீங்களும் என்போல்தான் என்பதில் மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஇதுமாதிரி சாகசக் காட்சிகள் நிறைந்த படங்கள் எவர்க்ரீன். ஹீரோ வாத்யார்னா கேட்கணுமா? ஹவுஸ்ஃபுல் சரி... வந்திருந்த ரசிகர்களின் ஏஜ் க்ரூப்? கடல்புறா முழுமையாகப் படித்ததில்லை.
ReplyDeleteஆனால் யவனராணி பலமுறை படித்திருக்கிறேன். சாண்டில்யனுக்கு சங்கைக் காட்சிகளின் வர்ணனையும் சரி, காதல் காட்சிகளின் வர்ணனைகளும் சரி அல்வா சாப்பிடுவது போல. அவர் கதைகளின் ஹீரோ இமேஜ் ஒரு பெர்பெக்ட் சூப்பர் ஸ்டார் இமேஜ். கதாநாயகத்தனம் பிரமாதமாக வெளிப்படும் அவர் கதைகளில்.
வயதானவர்கள், இளைஞர்/இளைஞிகள குழந்தைகள் என மிக்ஸ்ட் ஏஜ்க்ரூப் ஸ்ரீராம். கடல்புறா தவறவிடக் கூடாத புத்தகம். படியுங்க. கதாநாயகனை ரசித்து செதுக்கி வடிவமைக்கும் வாத்யாருக்கு சாண்டில்யன் கதைகள் பொருத்தமானவைதான். இல்லை...! மிக்க நன்றி.
Delete//சங்கைக் காட்சிகளின் வர்ணனையும்//
Deleteசண்டைக் காட்சிகள் என்று டைப்படிக்க நினைத்தது சங்கைக் காட்சிகள் என்று வந்து விட்டது! ஸாரி!
//சங்கைக் காட்சிகளின் வர்ணனையும் சரி, //
Deleteநான் எதோ இலக்கியம்னு நினைச்சேன்.. ஹிஹிஹி..
:))))))))
Deleteஇந்தப் படத்தை டீவில பலமுறை பார்த்திருக்கிறேன்.. ஆனாலும் பெரிய திரையில் முதல் முறை பார்க்கிறேன்..அடடடா.. இன்னைக்கு வர்ற படங்கள பெருசுக ஏன் திட்டறாங்கன்னு இப்போதான் காரணம் புரிஞ்சது.. கருத்துள்ள பாடல்கள், உண்மையிலேயே "அழகான" ஹீரோயின், மொக்கையாக அல்லாமல் கேட்பவர்களை ஈர்க்கும் பஞ்ச் டயலாக்குகள், சிச்சுவேஷனுக்கு ஏற்ற இசை.. இது எல்லாத்துக்கும் மேலே எம்ஜியார்.. ஸ்க்ரீன்ல வர்ற காட்சிகளில் சுற்றி உள்ளவர்கள் யாரையும் பார்க்க தோணவில்லை.. (சில இடங்களில் ஹீரோயினை கூட..), நகைச்சுவை மட்டும் சில இடங்களில் அறுவை , அதுவும் கதை சீரியஸா போகும்போது "வசந்த்" செய்கிற காமெடி போல் இருந்தது.. பீல் குட் மூவி..
ReplyDeleteஎம்,ஜி,ஆரின் பெரும்பாலான படங்களில் திரைக்கதை போரடிக்காமல் விண்ணென்று இருக்கும். அதனால்தான் அவர் படங்கள் எப்பவும் மாஸ் எண்டர்டெய்னர். இந்தப் படத்திலும் நாடோடி மன்னனிலும் வசனங்கள் ரொம்பவே ஷார்ப்பா இருக்கும். ரசிச்சு கைதட்டலாம்.
Delete//எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். //
ReplyDeleteஎங்க ஊர்ல மதிய காட்சி பார்த்தேன்.. பத்துபேர் தான் இருந்தாங்க.. மே பி இரவுக் காட்சி கூட்டம் வந்திருக்கலாம்... இன்னொரு முக்கிய காரணம் ஊரில் எங்கயும் போஸ்டர்களே ஒட்டப்படவில்லை..!
போஸ்டர்கள் ஒட்டக் கூடாதுன்னு தேர்தல் ஆணையம் தடை விதிச்சிருக்கறதா கேள்விப்பட்டேன். அதனால சீக்கிரமே பிக்கப் ஆகிடும். இந்த குவாலிட்டில க்ளாஸிக் எண்டர்டெய்னரை மிஸ் பண்ணா ஜனங்கதான் பாவம்...!
Deleteத்லைவர் படம் என்றாலே தனி மவுசுதான்! போரடிக்காது! அதென்னவோ தெரியவில்லை இப்போது எத்தனை படங்கள் வந்தாலும், அவர் படம் டி.வியில் போட்டால் அதைத் தான் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விடுவதுண்டு!
ReplyDeleteஅருமையாக, ரசித்து, ரசித்து வர்ணித்துள்ளீர்கள்! ஆயிரத்தில் ஒருவன் புதிய ரீமிக்ஸுடன் வந்தது பார்ர்காவில்லை! நீங்கள் கூறியிருந்தது போல நொந்து நூலாக்கி விடுமோ என்ற பயம்தான்!
ஆனால் தாங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது பார்க்கும் ஆவல் வந்துவிட்டது! தலைவராச்சே!
எல்லாம் சரி அதென்ன //ஜெயலலிதா நஸ்ரியா போல்//......
ஆவி......எங்கிருக்கின்றீர்கள்?!!!!! பாருங்கள் வாசித்தீர்களா?!!!!!
சாணிட்ல்யனின் கடல் புறா எத்தனை தடவை வாசித்திருப்போம் என்று தெரியவில்லை!
பழைய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள்! அருமை!
பகிர்வுக்கு நன்றி
ரசித்து ருசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.
Deleteஆரம்பத்தில் புத்தக விமர்சனம் என்று நினைத்தேன்... படிக்க படிக்க அப்படியே கடல் புறாவிலிருந்து ஆயிரத்தில் ஒருவனுக்கு மாறிய எழுத்து நடை... அருமை! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...
ReplyDeleteஇந்த டூ இன் ஒன்..ஐ ரசித்த ப்ரியாவுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஇங்கே பார்க்க வசதியில்லை.... உங்களை நினைத்தால் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது வாத்தியாரே......
ReplyDelete//கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார்.
அட உங்க கிட்ட இருந்து ஆவி பழகினாரா இல்லை ஆவிக்கிட்ட இருந்து நீங்க நஸ்ரியாவை பிடிச்சுக்கிட்டீங்களா! ஒரு டவுட்டு!
சரிதான்... நிறைய டூர் போக உங்க மாதிரி வாய்ப்பு எனக்கு அமையலையேன்னு இங்க பெருமூச்சு. நீங்க என்னடான்னா என்னப் பார்த்து பொறாமைன்றீங்க. இ.அ.ப. தான் போலிருக்கு. நஸ்ரியாவை ஆவிதான் என்கிட்ட ஒட்ட வெச்சார், ஹி... ஹி... ஹி...!
Deleteநானும் படம் பார்த்து சுவைத்தேன். இதுபோல சிவாஜியின் அந்தநாள், எம்ஆர்ராதாவின் இரத்தக் கண்ணீர் போன்ற காவியங்களும் டிடிஎஸ் நுட்பத்தில் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஉங்களின் விருப்பம் நிறைவேறுவதாகுக! படத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
DeleteSir,
ReplyDeleteDo you mean to say that Nasriya will be TN's future CM???
ஆஹா... பத்த வெச்சுட்டியே பரட்டை.. நான் குறிப்பிட்டது அழகுன்ற அம்சத்துல மட்டும் தானுங்கோ..! ரொம்ப நன்றிங்கோ...
Deleteஆயிரத்தில் ஒருவன் என்றதும் நினைவுக்கு வருவது ..நாணமோ ,இன்னும் நாணமோ பாடல்தான் !
ReplyDeleteத ம +1
என் கணிப்பில் ‘அதோ அந்தப் பறவை’க்கு அப்புறம்தான் நீங்க சொன்ன பாட்டு. ஆனாலும் இப்ப ரீஸ்டோரேஷன் வெர்ஷன்ல டிஜிட்டல் சவுண்ட்ல நாணமோ பாட்டு பாக்கவும் கேக்கவும்... ஆஹா..! ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஇந்தப் பதிவை படித்ததும் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் பார்க்கும் ஆர்வம் பிறந்ததோ இல்லையோ விரைவில் கடல்புறா படிக்க வேண்டும் வாத்தியாரே... வெகுநாளைய விருப்பம்..
ReplyDeleteகுமுதத்துல வந்த ஓவியங்களோட கடல்புறா என்கிட்ட இருக்கு பிரதர். எப்ப வேணா வாங்கிப் படிச்சுக்கலாம் நீயி. ரைட்டா...
Deleteஇன்றைய பஞ்ச டயலாக்களின் முன்னோடியான வசனங்கள்.
ReplyDeleteஒரு காட்சில் ஜெயலலிதா தலைவருக்கு உணவு தயார் செய்து வைத்துருப்பார் ,அவரது தோழி கேட்ப்பார் "என்ன பாயசம் , உங்களை இப்படி பார்த்தாலே போதுமே " இப்போ தான் டி.வி ல பார்த்தேன் . ஓடும் மேகங்களே இப்போ கேட்டாலும் செம சாங் , அதோ அந்தபறவை போல அட்டகாசமான பாடல் . சொல்லிகிட்டே போகலாம் .எங்க ஊர் திருவிழாவில் ஸ்க்ரீன் கட்டி ஓட்டுவார்கள் . மொட்டை மாடியில் உக்கார்ந்துகிட்டு ,பால்கனி எபெக்ட்ல படம் பார்ப்போம். 80கள் போய்டுச்சு. எலிமெண்ட்ரி யும் போய்டுச்சு !! ஹும் லாலிபாப் நாட்கள் நினைவில் வருகின்றன !!
அதுமாதிரி ஸ்க்ரீன்ல கட்டின திரைகள்ல பாத்தும், டப்பா தியேட்டர்கள்ல ரசிச்சும் என் மனசில பதிஞ்ச ஆயிரத்தில் ஒருவன் இப்ப ரீஸ்டோரேஷன் வர்ஷன்ல டிஜிட்டல்ல ரசிக்கறப்ப தந்தது 100 மடங்கு அதிக சந்தோஷம். உங்க்ளின் பால்யத்தை நினைவுகூர்ந்து ரசித்ததில் மகிழ்வுடன் என் நன்றி.
Deleteவாத்தியாரின் படங்கள் நல்லவன் வாழ்வான் என்ற சேம் பார்முலாவை மட்டுமே கொண்டிருந்தாலும் காலத்தால் அழியாதவை! இந்த படத்தை டீவியில் சிலமுறை பார்த்திருக்கிறேன்! எங்கள் பகுதியில் திரையிடும் சமயம் பார்க்க வேண்டும். கடல்புறா சாண்டில்யனின் மாஸ்டர் பீஸ்! மீண்டும் படிக்க வேண்டும். அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇந்தப் படம் உட்பட அனைத்துப் படங்களிலும் வில்லனைத் திருத்த முயல்வாரே தவிர கொல்ல மாட்டார் வாத்யார். இப்படி பல பார்முலாக்கள் அவருக்கு உண்டு. அத்தனை கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு விறு விறு திரைக்கதைகளால் வென்றவர் அவர். இந்தப் பகிர்வை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஅன்பின் பால கணேஷர்,
ReplyDeleteஆயிரத்தில் ஒருவன் ,என்றும் பசுமையான ஒரு திரைப்படம், இப்பவும் தொ.காவில் போட்டால் பலரும் பார்க்க விரும்பும் ஒருப்படம்,அதிகமா ராஜ் டிவில தான் போடுவாங்க, நானே ரெண்டு ,மூனு தடவைப்பார்த்துட்டேன்.
இப்படம் "captain Blood" என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலே.
http://www.imdb.com/title/tt0026174/
http://en.wikipedia.org/wiki/Captain_Blood_(1935_film)
நாவலாக எழுதப்பட்டு ,படமான ஒன்று.
இது போல ஹாலிவுட் தழுவல் படங்களை வைத்து பதிவு எழுதலாம்னு நினைச்சுக்கிட்டு , அப்படியே கிடப்பில் போட்டதால்,நீங்க ஆயிரத்தில் ஒருவன்ன் என ஆர்ரம்பித்தது நினைவுக்கு வந்துவிட்டது.
# 1000 ஒருவன் பெரும்பாலும் கோவா, கார்வார் ஆகியப்பகுதிகளில் எடுக்கப்பட்டதாம், வழுக்கும் பாறைகளில், எம்ஜிஆர் மற்றும் நம்பியார் டூப் போடாமல் பல காட்சிகளில் நடித்ததாக ,நம்பியாரே பலப்பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
# இப்படத்தில் "நாகேஷ்" அந்த தேன்கூடு" தலையனுக்கு எப்பவும் தலைவர் மேல பொறாமை தான் என ஒரு வசனம் சொல்லுவார் ,அது இருந்ததா. அக்காலத்திலயே ,கலைஞர் , எம்சிஆர் இடையே இருந்த பூசலை மறைமுகமாக கட்டும் வசனம்னு கேள்விப்பட்டேன்.
# கடல்புறா ,அக்கால சரித்திர நாவல்களில் கிளாசிக் என பட்டியலிட்டால் எப்பவும் முன்னால வரும். சிருங்கார ரசம் அப்படியே சொட்டும்ல :-))
அக்கால வரலாற்றில் சவுத் சீனக்கடலில் உண்மையிலே கலங்கடிச்சது சீனக்கடற்கொள்ளையர்கள் தான் ,அதில ஒரு பெண் கடற்கொள்ளைக்காரி கூட ரொம்ப ஃபேமஸ்.
சீனக்கடற் கொள்ளையரை தாக்குப்புடிச்சு நின்றது ,அப்போதைய ராஜேந்திர சோழனின் கடற்படை மட்டுமே, அதை கடற்புறாவில் சித்தரித்தும் இருப்பார் சாண்டில்யன். சீனாவில் சோழப்பாணி கோயில்கள் கட்டப்பட்டுள்ளது ,இப்போ புத்த மடங்களாகிடுச்சு.
தழுவல் என்ற வார்த்தையை தூண்டுதல் மாத்திக்கலாமா வவ்வால் (உங்க அனுமதியோட). சீனுக்கு சீன் கதையை சுடாம தமிழுக்கும் தனக்கும் ஏற்றபடி அதை மாத்தி உருவாக்கினதுலதான் வாத்யாரோட வெற்றி அடங்கியிருக்கு. நாடோடிமன்னன் கூட அவர் ரசிச்ச ‘இஃப் ஐ வேர் எ கிங்’ படத்தோட தாக்கம்தான். இந்தப்படம் ஏதோ பைரேட் படத்தோட பாதிப்புன்னு தெரியும். படத்தோட பேர் இப்ப நீங்க சொல்லித்தான் தெரிஞ்சது.
Deleteஅப்புறம்... நாகேஷ் ‘தேன்கூடு தலையன்’னு சொன்னதுமே பக்கத்துல இருந்த சிவாட்ட ’பார்ரா. கவுண்டமனிக்கே இவர்தான்யா முன்னோடி’ன்னு கமெண்ட் அடிச்சேன் நேத்து. இப்ப நீங்க நினைவுவெச்சு கேக்கறீங்க. ஹேட்ஸ் ஆஃப்.
ஆமாம். கார்வாரின் இயற்கை எழில் இப்ப அகன்ற திரைல மனசை அள்ளுது.
சாண்டில்யனின் சிருங்கார மற்றும் வீர ரசத்தை நீங்களும் ரசிக்கறீங்களதுல செம குஷி எனக்கு.
அழகான கருத்துக்கு அன்புடன் என் நன்றி.
ஆங்கிலப் படத்தை தழுவி எடுத்திருந்தாலும், ஆயிரத்தில் ஒருவன் போன்ற ஒரு தமிழ்ப்படம் இனி தமிழில் வரப்போவதில்லை.
Deleteஅன்பின் பாலகணேஷர்,
Deleteதூண்டுதல்,தாக்கம் ஆகியவற்றை தழுவல் வகையிலே வச்சிக்கலாம், ஆனால் அட்டக்காப்பி தான் மோசம்!
தமிழைப்பொறுத்த வரையில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு நேர்த்தியான ஆக்கம். எனவே காப்பி என்றெல்லாம் சொல்ல மாட்ட்டேன்.
#//கவுண்டமனிக்கே இவர்தான்யா முன்னோடி’ன்னு கமெண்ட் அடிச்சேன் நேத்து. இப்ப நீங்க நினைவுவெச்சு கேக்கறீங்க. ஹேட்ஸ் ஆஃப்.//
நீங்களும் நம்மைப்போலவே "கவனிக்கிறதில்" கில்லாடி என அறிவதில் மகிழ்ச்சி.
இந்த கவுண்டமணி ஒப்பீடை நானும் சொல்லியிருக்கிறேன் ,இப்போ குறிப்பிட மறந்துவிட்டேன்.
காதலிக்க நேரமில்லை படத்திலயே ,எங்கப்பனா ,கடைஞ்ச மோர்ல வெண்ணை எடுப்பான் என ,அவன் ,இவன் டைப்பில தான் நாகேஷ் பேசுவார், அதை தான் பின்னர் வந்த கவுண்டமணி,விவேக் போன்றவர்களும் செய்துள்ளார்கள், என்ன நாகேஷ் ஒரே ஸ்டைலில் செய்யாமல் அடிக்கடி மாத்திக்கிட்டார், மற்றவர்கள் அதையே அதிகம் செய்து "ஸ்டைலாக" பதிய செய்துவிட்டார்கள்.
//சாண்டில்யனின் சிருங்கார மற்றும் வீர ரசத்தை நீங்களும் ரசிக்கறீங்களதுல செம குஷி எனக்கு. //
ஹி...ஹி...ஹி!
-------------------------
//ஆயிரத்தில் ஒருவன் போன்ற ஒரு தமிழ்ப்படம் இனி தமிழில் வரப்போவதில்லை.//
குட்டிப்பிசாசு, உண்மை!
ஹாலிவுட்டில் எல்லாம் , காலம் மாறிடுச்சு என கதை சொல்லாமல் தொடர்ந்து பீரியட் படங்களையும் எடுப்பார்கள்,நம்ம ஊர்ல தான் , இப்போ டிரெண்ட்டுக்கு பீரியட் படம் எடுத்தால் ஓடாதுனு சொல்லிடுவாங்க, உண்மையான காரணமென்னவெனில், இப்ப இருக்கவன் எவனுக்கு "சிரத்தையாக" படமெடுக்க தெரிவதில்லை அவ்வளவே :-))
டைட்டானிக் எல்லாம் வரும் முன்னரே கப்பல் செட்டை கடலில் போட்டு எடுத்தப்படம் ஆயிரத்தில் ஒருவன் , ஆழம் குறைவான கடலில் நிரந்தரமாக கப்பல் போல செட் போட்டார்களாம், ஓடாத கப்பலை ஓடுவது போல காட்டியது கேமரா டிரிக் :-))
பி.ஆர் பந்துலு அக்காலத்தில் பிரம்மாண்ட வரலாற்று ,புராணப்படங்களை எடுப்பதில் வல்லவர் என்பதால் ,தென்னிந்தியாவின் செசில் டி மில் ,என பென்ஹர் படம் எடுத்த இயக்குனருடன் ஒப்பிட்டு சொல்வார்களாம்.
என்னோட ஃபேவரிட் எம்.ஜி.ஆர் படங்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கில்லை. தியேட்டரில் பார்க்க ஆசையாய் இருக்கிறது..ஹூம்!
ReplyDeleteநிஜம்தான். ஆ,ஒருவன்., மா,வேலன், உ,சு,வாலிபன் இதையெல்லாம் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு என்கிட்ட கணக்கே இல்ல பிரதர். நினைவுகளை மீட்டின உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஅன்புமிக்க கணேஷ்..
ReplyDeleteவரலாறுக்கே வாழ்வு தந்த வள்ளல் நம் எம்.ஜி.ஆர்.
நாம் தேடித் தேடி.. ஓடி ஓடி.. திரையரங்குகளில் நுழைவதற்குள் எத்தனையோ சவால்களைச் சந்தித்து ஒரு வாத்தியார் படம் என்பது..
நமக்குள் தரும் நம்பிக்கை.. உணர்வுகள்.. சமூக நியதிகள்.. .. இதற்கு முன்னோ.. பின்னோ.. எந்த நடிகருக்கும் வாய்க்காதது.
ஆனால் .. இன்றைய திரைப் படங்களில் வரும் கதாநாயகர்களை எல்லாம் பார்க்கும்போது - நம் எம்.ஜி.ஆரின் உயரம்
இன்னும் உயர்ந்து கொண்டே போகிறது.
அவர் திரையில் தோன்றுகிறார் என்றால் அதைவிட சந்தோஷம் எம்.ஜி.ஆர் ரசிகனுக்கு வேறென்ன இருக்கப் போகிறது?
முதல் காட்சியில் அவரின் பரிமாணம் - ஏதோ தேடிக் கிடைத்த செல்வத்தைக் கையில் பெற்றவர்களாக நாம்.
ஒரு திரைப்படம் - அதன் பெயரை இந்தச் சமூகம் நினைவு வைத்துக்கொண்டாலே அது தரமான படம் என்று சொல்லலாம்.
49 ஆண்டுகளுக்குப் பின் - ஆயிரத்தில் ஒருவன் - நவீன தொழில்நுட்பத்தில் திரையில் வடிக்கப்பட்டிருக்கும் உன்னதம்.
மக்கள் திலகத்தின் வாழ்வில் மறக்க முடியாத மாணிக்கக் கல்.. ஆயிரத்தில் ஒருவன்.
மணிமாறன் - என்கிற பாத்திரம் இன்றைக்கும் அந்த பெயர் கேட்கப்படும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். தானே நம் கண்களுக்குத் தெரிகிறார்.
கதையின் நாயகி.. ஜெயலலிதா - முதல் முறையாக புரட்சித்தலைவருடன் இணைந்து நடித்த படம் என்கிற பெருமையும்..
இசை அமைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் சகாப்தம் நிறைவுக்கு வந்த வரலாறு ..
பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம்..
கவியரசு கண்ணதாசன் அவர்களும் காவியக் கவிஞர் வாலி அவர்களும் பாடல்கள் வரைந்தளிக்க. நமக்கு இன்றும் கிடைத்துக்கொண்டிருக்கும் விருந்தல்லவா அனைத்துப் பாடல்களும்..
எம்.என். நம்பியார் ராம்தாஸ் ஆர்.எஸ். மனோகர்.. நாகேஷ் என்று ஒரு பட்டாளம் திரையில் சேர்ந்து உருவாக்கிய
உன்னத சித்திரம்..
நாங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்று செம்மாந்திருக்கச் செய்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
அத் திரைப்படத்தை.. புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்து பெரும் பேறு பெற்ற திவ்ய பிலிம்சாரின்
தயாரிப்புக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
அன்று திரையில் கதா நாயகி.. இன்று.. தமிழகத்தை ஆளும் புரட்சித்தலைவி.. இத்திரைப் படத்திற்கு வாழ்த்துகள்
தெரிவித்துள்ளமை இன்னும் பெருமை சேர்க்க ..
கடல்புறா.. யவனராணி.. புகழ்.. சாண்டில்யன் அவர்களது.. கதையோட்டத்தை.. இந்தத் திரைப்படத்தோடு இணைத்து
நீங்கள் தந்திருக்கும் திரை விமர்சனம்.. நிச்சயமாக ஒரு புதிய பரிமாணமாய் காட்சியளிக்கிறது.
எம்.ஜி.ஆர். என்கிற பெயர்ச் சொல் - நமக்கெல்லாம் சக்தி தரும் மந்திரச் சொல் என்பதை உங்கள் ஒவ்வொரு வரியும்
உணர்த்துகிறது.
இன்றைக்கு இருக்கும் இத்தனை தொழில்நுட்பங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்திருந்தால்.. எத்தனை எத்தனை
சாதனைகள் எழுதப்பட்டிருக்கும் என்பதற்கு எல்லைகள் இல்லை.
நம்மைப் பொருத்தவரை..14.03.2014 என்பது இனிய திருநாள். எங்கள் இறைவன் இறக்கவில்லை .. இன்னும்
எங்கள் மனதில் வாழ்கிறார் என்கிற உண்மைதனை உணர்வுடனே.. உரக்கக் குரல் கொடுக்க வைத்த திருநாள்.
உங்கள் எழுத்து என்னையும் எழுத வைத்திருக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
அன்புடன்..
காவிரிமைந்தன்
அபுதாபி
00971 50 2519693
kaviri2012@gmail.com
thamizhnadhi.com
உங்கள் கருத்தை எடுத்துப் பதிவிட வேண்டுமென்று நினைத்தேன் காவிரி ஸார்... நீங்களே பதிலளித்ததில் மிக்க மகிழ்ச்சி. வாத்யார் இறக்காமல் மனங்களில் வாழ்கிறார் என்பதும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே அசத்திய வாத்யாருக்கு இன்றைய தொழில்நுட்ப வசதிகள் கிடைத்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்பது நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் விஷயம். உங்கள் கருத்துடன் வரிக்கு வரி ஒத்துப் போகிறேன் நான். மிகமிக மகிழ்வுடன் என் நன்றி.
Delete//கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார்.//
ReplyDelete:) ஆவி எழுதச் சொன்னாரா ...? கடல புறா படிச்சுருக்கேன் , ஆனா மறந்துட்டு , மறுபடியும் படிக்கணும் ....................
ஆவி எழுதச் சொன்னாரா...? ஹி... ஹி... அப்டில்லாம் இல்லீங்க. கடல்புறா மறக்கற கதையா ஜீவன்? திரும்ப அவசியம் படி. மிக்க நன்றி.
Deleteநானும் அனுபவித்த படம். படம் பார்த்து பல வருஷம் கழித்துத் தான் 'கடல் புறா' படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களைப் போலவே நானும் நினிக்கிறேன். படம் இந்தக் கதையை மூலமாகக் கொண்டிருக்க வேண்டும் - யார் ஒத்துக்கொண்டாலும் இல்லையென்றாலும். படம் எடுத்த விதமும் பாடல்களும் நடிகர்களும் கதையை ஒரு பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. - ஜெ.
ReplyDeleteஎன் அலைவரிசையில் ஒத்துநின்று ரசித்த உங்களுக்கு மனம் நிறை நன்றி ஜெ!
Deleteமறுபடியும் ஆயிரத்தில் ஒருவனை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டுவிட்டீர்கள். எல்லோருக்கும் பிடித்த எம்.ஜி.ஆரின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இப்படத்தில் எனக்கு எல்லா பாடல்களுமே பிடிக்கும்.
ReplyDeleteஇந்த வெர்ஷனில் பாடல்களைக் கேட்டால் இன்னும் பிடித்துப் போகும் கு.பி. அவசியம் பாருங்கள்... மிக்க நன்றி.
Deleteஅருமையான அனுபவம் சார்.
ReplyDeleteஆம் சிவா. அந்த அனுபவம் எனக்குக் கிடைக்கக் காரணமான உனக்கு நெகிழ்வான நன்றி.
Deleteவிமர்சனத்துக்கு நன்றி,பாலகணேஷ் சார்!///என்னது இது எதுக்கெடுத்தாலும் 'நம்ம' நஸ்ரியாவ எல்லாரும் பங்கு போட்டுக்கத் துடிக்கிறீங்க?நல்லால்ல சொல்லிட்டேன்,ஹூம்!!!(உங்க "இளவரசி" இந்தப் பக்கம் வர்றதில்லியே?ஹ!ஹ!!ஹா!!!!)
ReplyDeleteஇளவரசி எப்பயாச்சும்தான் பிரதர் இந்தப் பக்கம் வருது. அதனால நீங்க பயப்பட வேணாம். மிக்க நன்றி.,
Deleteஅருமையான நடிப்பு வாத்தியார் படத்தில் நானும் இந்தப்படம் திரையரங்கில் பார்த்தேன் அது ஒரு காலம் கடல்புறா வாசித்ததும்!ம்ம்
ReplyDeleteகாலம் மாறும் நேசன். கவலை வேண்டாம். வாத்தியார் படத்தையும் கதையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.
Deleteபெஸ்ட் படம்...என் விமர்சனம் வருது...
ReplyDeleteகொடைக்கானல் ஒலிபரப்பு நிலையம் தொடங்கப்பட்ட புதிதில் தொலைக்காட்சியில் பார்த்த முதல் திரைப்படம். கருப்பு வெள்ளையில் பார்த்தபோதே மனம் கொள்ளை கொண்டுவிட்டது. அதன்பின் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்று நினைவில்லை.
ReplyDeleteகடல்புறா...ம்ஹூம்... அப்போதெல்லாம் குமுதத்தைக் கையில் தொடவே வீட்டில் அனுமதியில்லை. அதிலும் சாண்டியல்யன்.. கேட்கவே வேண்டாம்.
நினைத்தால் இனிக்கும் பட விமர்சனம் படித்தபிறகு சற்று பயமாகத்தான் இருந்தது. நல்லவிதமாக தயாரித்திருக்கிறார்கள் என்று அறிய மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.
முந்தைய பின்னூட்டத்தில் சிறு திருத்தம். அது கொடைக்கானல் ஒளிபரப்பு நிலையம் என்றிருக்கவேண்டும்.
ReplyDeleteபலமுறை பார்த்த படம். அருமையான பாடல்கள் கொண்டதும். பதிவும் பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்:).
ReplyDeleteயவனராணி கடல்புறா எல்லாம் படித்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போல் எதுவும் துல்லியமாக நினைவிலில்லை. உங்கள் nostalgia ரசித்தேன்.
ReplyDeleteகடல்புறா பிடிக்கும். ஆயிரத்தில் ஒருவன் பிடிக்காது. கடல்புறா புத்தகட்த்தை ஒரே நாளில் முழுமூச்சாய் படித்து முடித்தேன். காலைல 9 மணிக்கு சும்மா 5 நிமிசம் படிக்கலாம்ப்ன்னு எடுத்தவ சுவாரசியம் காரணமாய் புத்தகம் முடிக்க மணி எட்டாகிட்டு. உங்க மாப்பிள்ளை வந்து சமைக்கலியான்னு கேட்டார் நான் ஜுரம்ன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.
ReplyDelete