Friday, March 7, 2014

கதாநாயகனின் கதை!

Posted by பால கணேஷ் Friday, March 07, 2014
பால் அருந்தும் பிள்ளைப் பிராயத்திலிருந்து பள்ளி செல்லும் பையனாகிற பருவம் வரை ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முதல் கதாநாயகனாக இருப்பார்கள். அப்பாவின் நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை ரசிப்பது முதல் ரசனைகள் வரை அப்பாவைச் சார்ந்தே இருக்கும் பள்ளி செல்லும் பருவத்தில். இவனுக்கும் அப்படித்தான். அதிலும் சில விசித்திரங்கள் உண்டு. இவன் தந்தையிடமிருந்த கன்னாபின்னாவென்ற வாசிக்கும் வழக்கம் கல்லூரிப் பருவத்தில்தான் இவனை ஆட்கொண்டது. ஆனால் அப்பாவுக்குப் பிடித்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். பள்ளிப் பருவத்திலேயே இவனை ஆட்கொண்டார்.

இவனுக்கு ஆறு வயதாக இருந்த சமயம் இவர்கள் இருந்தது மதுரையில் கிருஷ்ணாராவ் தெப்பக்குளத் தெருவில். தெரு முனை திரும்பினால் தேவி தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் வாத்யார் படம் எதுவும் ரிலீஸாகக் கூடாதே என்பதுதான் இவன் பெருவிருப்பமாக இருந்தது. காரணம்... அப்பா சொந்த பிசினஸ் செய்து வந்தவராக இருந்ததால், கடையை அடைத்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க அழைத்துச் செல்வது பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து தியேட்டர் செல்வதற்கு குதிரை வண்டி வைப்பார் அப்பா. குதிரை வண்டி சவாரி என்றால் இவனுக்கு கொள்ளைப் பிரியம். லொடக் லொடக்கென்று இதமான ஆட்டத்துடன் செல்லும் அந்த வண்டியில் முந்தி ஏறி, வண்டிக்காரரின் அருகில் உட்கார்ந்து கொண்டு குதிரையைக் கவனிப்பதும், (முடிந்தால்) அதன் வாலைப் பிடிப்பதும் இவனுக்கு சுவாரஸ்யமான, ரசனையான விஷயங்கள். அதற்காகவே அப்பாவுடன் சினிமாவுக்குச் செல்லும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பான் இவன்.

அம்மாவுக்கு சிவாஜி என்றால் பிடிக்கும். அண்ணன் நடுநிலை - எவரென்றாலும் ஓ.கே. படம் போனால் சரி - அப்பாவுடன் சேர்ந்து இவனுககும் எம்.ஜி.ஆர். என்றால் மிகமிகப் பிடிக்கும். வீட்டில் எந்தப் படம் போவது என்பது பற்றிய உரையாடல் நடைபெற்றால்... பெரும்பாலும் மதியம் அப்பா சாப்பிட வீட்டுக்கு வரும் சமயங்களில் நடைபெறும்... அப்போது இவன் முந்திக் கொண்டு வாத்யார் படத்தை முன்மொழிவான். அதுவும் எப்படி...? ‘ல்தகாசைஆ' என்று விஜய் சொல்வது போல... ‘‘அப்பா! கைளிமாதந்சவ வேண்டாம்ப்பா... நாம ணைவீயதஇ போலாம்ப்பா..." என்பான். (இவனெல்லாம் அப்பவே அப்புடி!) இந்த வகைப் பேச்சை கிரகித்துக் கொள்ள முதலில் ரொம்பவே சிரமப்பட்ட அப்பா, விரைவில் அதற்குப் பழகி விட்டார். ஹால் அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்து, ‘‘சரிடா... போலாம்" என்பார். ஆஹா... நம்ம வீட்லருந்து சிந்தாமணி தியேட்டர் ரொம்பத் தூரமாச்சே... இன்னிக்கு குதிரை வண்டி சவாரி நிச்சயம் என்று இவன் இரவை எதிர்பார்த்திருப்பான்.

இன்றைய தேதியில் வளரும் பிள்ளைகளுக்கும்... ஏன்... சில வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டி சவாரி அனுபவம் வாய்த்திராது என நினைக்கிறேன். இயந்திரக் குதிரைகள் பரவலாகி, போக்குவரத்து விழிபிதுங்கத் துவங்கியிருக்கும் இன்றைய நகர நாகரீகத்தில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்து போய் விட்டன. இதேபோல வழக்கொழிந்துபோன மற்றொரு விஷயமும் உண்டு. மதுரையில் அப்போதெல்லாம் இடைவேளைக்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். அவர்கள் சத்தமில்லாமல் ஊடாடி, விற்பனையையும் கவனிப்பார்கள். ஆக... எப்போது வேண்டுமானாலும் (கையில் சில்லறை இருந்தால்) ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு ஆனந்தமாகப் படம் பார்க்கலாம். சிந்தாமணி தியேட்டரில் பால்கனியில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த சீட்டில் இவன் அமர்ந்திருக்க, இவனுககு அடுத்த சீட்டில் இருந்த கனவான் ஒருவர் ட்ரே சுமந்து வந்தவனிடம சாக்லெட்டோ, பிஸ்கட்டோ வாங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திரையில் சண்டைக் காட்சி வந்திருக்க, வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி 20 பேரை சமாளிக்க, சண்டை தந்த உற்சாகத்தில் இவனும் ‘‘அப்புடி அடி’’ என்று கத்தி,  வாத்யார் மாதிரி கையை வீசி துள்ளிக் குதிக்க, இவன் கை ட்ரேயில் சாடி அதிலிருந்த மிட்டாய், பிஸ்கட் வகைகள் அனைத்தும் பூமித்தாய்க்கு அர்ப்பணமாயின. அப்புறமென்ன... தியேட்டர் ஸ்பீக்கரை விடப் பெரியதான ட்ரேவாலாவின் வாயை அடைக்க இவன் அப்பா சில பண நோட்டுகளைத் திணிக்க வேண்டியிருந்தது.

இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த வாத்யாரை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது இவனுக்குப் பெருவிருப்பமாக இருந்தது. 7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் இவன் ஆசை நிறைவேறியது. நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய இவன் முதல்வர் எம்.ஜி.ஆரை இரண்டு முறை அருகில் பார்த்தான். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை (மட்டுமே... இன்றுள்ள தமிழறிவு அன்றில்லை) பார்த்ததும் இன்றும் இவன் நினைவில் பசுமையாய். சரிசரி.... அதிகம் ஜல்லியடிக்காமல் இவன் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த இவன் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசைகளில் இருந்தான். அருகாமையில்தான் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். இவன் கண்கள் வாசலையே பார்த்தபடி இருக்க... அதோ பெருங்கூட்டம் புடைசூழ வாத்யார்! இவன் நன்றிருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. வாத்யாருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைப் பிடித்து நிற்க வைத்தார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் பார்த்தான் இவன். வாத்யார் மேடையில் பேசியது இன்று இவனுக்கு நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் நிழலாடுகிறது.

இர்ணடாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்கள் டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்' நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனான் இவன். (நாடகம் என்ற வடிவத்தை இவன் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்' நாடகம் நடந்தது. இவனும் இவன் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆமாம்... சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்... வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.

அவர் முதல் வரிசையில் இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர... அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் அவன். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் இவனைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே" என்கிற எண்ணத்தை இவனில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே பார்த்தான்...? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தான். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.

நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனான் இவன். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும, பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் இவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் தான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் இவனுக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல... உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டான் இவன்.

இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் இவன் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" ஹும்...! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்...!


43 comments:

  1. அடடா...! என்னவொரு ரசனை... அருமையான சந்தர்ப்பம் நழுவிப் போச்சே... ம்... மனதில் தான் என்றும் வாழ்கிறாரே...

    இங்கு அவர் முதல் முறையாக வென்றவுடன், இங்கு வந்தும் பார்க்க முடியவில்லை... சின்ன வயது... இரண்டு நாள் கழித்து விசயம் அறிந்து அழுதேன்...!

    ள்கக்துத்ழ்வா ரேயாதித்வா...

    ReplyDelete
    Replies
    1. ரசனையை ரசித்த உங்களுக்கு... ன்டவுழ்கிம ன்எ றின்ந!

      Delete
  2. அந்த நாள் ஞாயபகம் நெஞ்சிலே ...
    வாத்தியாரின் வாத்தியாரை பற்றி அருமையான நினைவலைகள்.
    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  3. நானும் மதுரையில் TMS அய்யா அவர்களுடன் ஒருமுறை உரையாடினேன் ,உங்களைப் போலவே ,அவரிடம் ஒரு ஆட்டோ கிராப்ட் வாங்காமல் விட்டோமே என்று இன்றும் வருந்துவதுண்டு !
    நானும் உலகத்தமிழ் மாநாட்டில் தலைவரை பார்த்தேனே ,உங்களைநானும் பார்த்திருக்க வாய்ப்புண்டு போல் தெரிகிறதே !அப்போ நீங்க காண்ணாடி இல்லாமல் இருந்து இருப்பீர்கள் ,அதனால் அடையாளம் தெரிந்து இருக்காது ,,,அவ்வ்வ்வ்!போதும் நிறுத்திக்கிறேன் !
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. தவறவிட்ட தங்கத் தருணங்கள் பல அனைவர் வாழ்விலும் உண்டுபோலும்! மதுரையில் என்னுடன் உலகத் தமிழ் மாநாட்டை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  4. நினைவினைவிட்டு ஒருபோதும் நீங்க நினைவலைகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. நினைவலைகளை ரசித்த உங்களுக்கு என் நெஞ்சம் நிறைய நன்றி!

      Delete
  5. ஆஹா! வாத்தியாரை நான் ஆறு முறை நேரில் பார்த்திருக்கிறேன். அதில் ஒரு தடவை, மிகவும் நெருக்கமாக! சுவாரசியமான இடுகை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கண்ணா... உங்களை என் கருத்துப்பெட்டில பாத்து எவ்வளவு நாளாச்சு! வாத்யாரை நீங்க சந்திச்ச அனுபவங்களை நேரில் சந்திக்கையில் விரிவாக் கேட்டு தெரிஞ்சுக்கறேன். இப்பகிர்வை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  6. அன்பின் பாலகணேஷர்,

    நல்ல விவரணை!

    அக்கால அப்பாக்கள் எல்லாம் இப்படித்தான் போல, இப்பவும் ,எங்கம்மா திட்டிக்கிட்டு இருப்பாங்க,அப்போ காசை கரியாக்கிட்டாருன்னு அவ்வ்!

    அப்போவே கார் வாடகைக்கு எடுத்துட்டு போயி மெட்ராஸ்ல ரூம் போட்டு தங்கி "தலைவரைப்பார்ப்பாராம்" ,எங்க மாவட்ட அமைச்சரை தான் அதுக்கு தொல்லைப்பண்ணுவாங்க, அவரு ஏன்யா சும்மா வந்து உயிரை எடுக்கிறேன்னு திட்டுவார்னு ,ஊருக்கு வந்தா மட்டும் நல்லா பேசுறான்,அங்கே தொறத்துறான் ,தலைவருக்கு இதெல்லாம் தெரியாதுனு ,ரொம்ப அப்பாவியா நம்பினவங்க :-))

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் வவ்வால்! அண்ணன் மட்டும் என்னைப் பாத்திருந்தாருன்னா நடக்கறதே வேற. இவங்கதான் அவரை நெருங்க விட மாட்டேங்றாங்க & என்பது வெகுஜனக் கண்ணோட்டம். இதை மாத்தறது ரொம்பக் கஷ்டம். அழகிய கருத்திட்ட உங்களுக்கு அன்புடன் என் நன்றி!

      Delete
  7. அடடா.............அருமையான ஒரு சந்தர்ப்பம் கை நழுவிப் போச்சே?அதனால் என்ன,இப்போ தான் நினைந்து,நினைந்து உருக முடிகிறதே?அது போதும்.'ஆட்டோ கிராப்' நெஞ்சிலேயே குடியிருக்கிறதே?

    ReplyDelete
    Replies
    1. ஆம்...! நெஞ்சிலேயே ‘ஆட்டோகிராப்’ தங்கி இப்போது திரும்பிப் பார்த்தாலும் இனிக்கிறதே! மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. Wow The way you described your experience is really nice; it is almost like a live relay.

    ReplyDelete
    Replies
    1. நேத்து ‘ப்ரியா’ன்னு ஒரு சிஸ்டர்ட்ட பேசிட்டிருந்தப்ப எம்.ஜி.ஆர். பத்தி பேசி, நினைவுகளைக் கிளறி விட்டாங்க அவங்க. அதான் சின்னவயசு ஞாபகங்கள் அலைபுரள எழுதித் தள்ளிட்டேன். எடிட் பண்ணாமயே வெளியிட்ட இதை நேரலை போல இருக்குன்னு நீங்க பாராட்டறப்ப ரொம்ப மகிழ்வா இருக்கு நண்பரே! மிக்க நன்றி!

      Delete
  9. 7 வயதுக்கு முன் உங்கள் கதாநாயகன் தந்தையுடன் படம் பார்த்ததை எழுதி இருப்பதை ரசித்தேன். நல்ல நினைவாற்றல்நானும் எம்ஜீயாரின் நிறங்கண்டு வியந்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நினைவாற்றல்தான் எனக்கு வரம் மற்றும் சாபம் இரண்டுமே ஐயா! புரட்சித் தலைவரை என்னைப் போல நீங்களும் ரசித்ததனை உணர்ந்து மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  10. என் தந்தையும் எம்ஜிஆரின் ரசிகர். நானும் அப்படியே. எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தில் எம்ஜிஆர் நம்பியாரிடம் அடிவாங்குவதைப் பார்த்து அழுதவர்களில் நானும் ஒருவன். "இன்னொரு எம்ஜிஆர் வந்து பிறகு அடிப்பாருடா" என்று என் அப்பா சமாதானப்படுத்தும்வரை அழுதுகொண்டிருந்தேன்.

    ஒருமுறை தியேட்டரில் விக்கிரமாதித்யன் (ரீரிலிஸ் தான்!) படம் பார்க்கப் போனோம். தாமதமானதில் படத்தின் தொடக்கத்தில் இடம்பெரும் சண்டைக்காட்சியை தவறவிட்டுவிட்டோம். படத்தை முதலிலிருந்து போடச்சொல்லி அப்பாவிடம் அடம்பிடித்து இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நான்லாம் படம் ஆரம்பிச்சு கொஞ்சம் லேட்டாப் போயிட்டா, அதே படத்துக்கு மறுபடி கூட்டிட்டுப் போகச் சொல்லி அப்பாட்ட அடம் பிடிக்கறவன். உங்களின் பால்ய நினைவுகளையும் இப்ப இங்க பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைய நன்றி!

      Delete
  11. எனக்கு எம்ஜிஆரை பிடிக்கவே பிடிக்காது. ஆனா, எனக்கே தெரியாது என் ஒன்றரை வயசில் என்னைத் தூக்கி கொஞ்சி இருக்கார். அருப்புக்கோட்டையில் அப்பா, அமா குடி இருந்த போது அம்மாவுக்கு டைஃபாய்ட் காய்ச்சல்ன்னு ஹாச்பிட்டலில் அட்மிட் ஆகி இருந்தாங்களாம். அப்போ, ஜாதி கலவரத்துல பாதிக்கப்பட்டவங்களைப் பார்க்க வந்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் என்னையும் தூக்கி கொஞ்சி பிஸ்கட் பாக்கட் தந்ததா அம்மா சொல்வாங்க.

    ReplyDelete
    Replies
    1. அடடே... வாத்யாரின் தங்கக்கரம்பட்ட சுட்டிப் பெண்ணாம்மா நீ! அதுவும் ஒரு பாக்கியம்தான்!

      Delete
  12. Replies
    1. ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  13. ஹையோ பாலா சார் எங்க அப்பாவும் தலைவரின் தொண்டர்.
    எனக்கு நடிகராய் தெரிந்ததை விட முதல்வராய் தான் அதிகம் தெரியும் .
    அப்பா தலைவர் பீரியட்ல எம்.எல்.ஏ . அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது எங்கள் தெருவில் 24மணிநேரமும் இறைவா உன் மாளிகையில் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!! எங்க அமைவிற்கு நடிகராய் சிவாஜியை பிடித்தாலும் , தலைவரை ரொம்ப பிடிக்கும்.தலைவரோட பொன்மனசுக்கு தான் அவர் மார்கழியில் இறந்து நேரா வைகுண்டம் போய்ட்டார் எனும் என் அம்மா அதே போல் ஒரு மார்கழியில் தலைவர் நினைவு தினத்துக்கு மறுநாள் இறந்தார்!! என் past க்கு கடத்திட்டு போய்விட்டுடீங்க. nostalgia!! super!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனமும் என் எழுத்தின் மூலம் கடந்தகாலம் சென்று வந்ததில் மகிழ்வுடன் மைதிலிக்கு என் நன்றி!

      Delete
  14. எனக்கும் வாத்தியார் என்றால் மிகவும் பிடிக்கும். சிவாஜியின் படங்களை விட எம்.ஜி ஆரின் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அருமையாக அவரை ரசித்ததை விவரித்த பாங்கு சிறப்பு! வாத்தியாரை ரசித்த வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்துப் பாராட்டிய, என் போன்ற வாத்யார் ரசிகனுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  15. எழுத்து நடையை ரசித்தேன், அதிலும் குதிரை வண்டி பற்றியும் தியேட்டரில் தின்பண்டங்கள் விற்பது பற்றியும் சொல்லும்போது நானும் உங்களுடன் பயணித்தது போன்ற மனநிறைவு... நான் சிறு வயதில் ராமேஸ்வரம் போனபோது குதிரை வண்டியில் போன ஞாபகம்... வாத்தியாரை நேரில் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. உனக்குக் கிடைக்காதவற்றை என் பகிர்வின் மூலம் உணர்ந்து மகிழ்ந்தமைக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  16. வாத்தியார் "வாத்தியாரை" கண்டு சிலாகித்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் அருமை..!! இன்னும் இது போன்ற மலரும் நினைவுகளை எடுத்து விடுங்க!!

    ReplyDelete
  17. வாத்தியார் என்றவுடன் முதலில் நாங்கள் தங்களை நினைத்து விட்டோம்! பின்னர்தான் தெரிந்தது அது நம்ம எம்ஜிஆர்!!!!!...வாத்தியார் வாத்தியாரைப் பற்றி....அருமையான அந்த நாள் ஞாபகங்கள்!!!! இது எல்லோருக்குமே இருந்திருக்கும் என்று நினைக்கிறோம்!

    அதுவும்.....‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" இது கண்டிப்பாக எல்லொருக்குமே தோன்றும் ஒன்ருதான் இல்லையா....ஏன் என்றால் இன்னும் பல அவர் சகவில்லை...உய்ரோடு இருக்கிறார் என்று தான் கிராமத்தில் உள்ளவர்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்!

    ReplyDelete
  18. வாத்தியார் வாத்தியார்தாங்க! அவர மாதிரி.....நாங்கள் ரசிகர்.....

    ஓட்டு போட்டாச்சு.....அவருக்கு போட முடியாதே ஸோ உங்களுக்கு.....

    ReplyDelete
  19. மனம் ( எழுத்துப் பிழை இல்லை) வீசியது மலரும் நினைவுகள் .உங்களுக்கே உரிய பாணியில் ரசனை மிக்க பதிவு.

    ReplyDelete
  20. ஏழு வயதில் தந்தையை இழந்து.....என்ற வரியைப் படித்த பின் மனம் நடுங்கிப் போயிற்று. எவ்வளவு சோதனைகளைச் சந்தித்து இருக்க வேண்டும் இவன் ! (2) எம் ஜி ஆர் இளமையிலிருந்தே தங்கபச்பம் உண்டு
    வந்ததால் தான் அவருக்கு தங்க நிறம் ஏற்பட்டது என்று படித்திருக்கிறேன் . அதே காரணத்தால்
    தான் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது என்று
    கருதலாம் .(3) ஆபாசமாக இருக்கும் என்பதால்
    அவர் நடித்த படங்களைப் பார்க்க மாணவர்களுக்கு அனுமதி இல்லாத காலம் அது .ஒரே ஒரு முறை 'பணம் படைத்தவன்' பார்க்க நேர்ந்தது . அந்த கிளுகிளுப்பு தீர்வதற்குச் சில ஆண்டுகள் ஆயின .

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே சிந்தனை தான் செல்லப்பா சார்

      Delete
  21. இனியநினைவுகளை எங்களுடன் பகிர்ந்தீர்கள்.

    ReplyDelete
  22. //ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். // ஆமா சார் என்னுடைய பால்ய காலம் வரையிலும் இது போன்று இருந்ததுண்டு...

    //ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.// அட அட அட

    ReplyDelete
  23. பல விஷயங்களை ரசித்தேன்..... உங்கள் நடையில் படிக்க சுவாரஸ்யம்.

    தொடரட்டும் பால்யகால நினைவுகள்.

    ReplyDelete
  24. மக்கள் திலகம் தொடர்பான மனம் தொட்ட நினைவுகளை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் கணேஷ்.

    ReplyDelete
  25. அங்கிள் கலக்கு கலக்குனு கலகீடிங்க போங்க ...சான்ஸ் எ இல்லை ...

    ReplyDelete
  26. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : இன்றோடு நீங்கள் விடுதலை!!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube