Saturday, May 25, 2013

குழந்தை!

Posted by பால கணேஷ் Saturday, May 25, 2013
ரம் சரமாய் திரும்பிய பக்கமெல்லாம் கலர் பல்புகள் ஜொலித்தன. தோட்டத்தின் ஒரு பக்கத்தில் வரிசையாய் மேஜைகள் அமைத்து, ஏராஆஆளமான ஐட்டங்களை அடுக்கி வைத்திருக்கிற பஃபே டைப் விருந்து. இந்தப் பக்கம் ஒரு மேடை அமைத்து இசைக் கச்சேரி. ‘ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து’ பாடலை டி.எம்.எஸ். கேட்டால் தற்கொலை செய்து கொள்கிற ரேஞ்சில் ஒருவர் பாடி(?)க் கொண்டிருந்தார். மணமக்களை வாழ்த்திப் பரிசு தந்துவிட்டு இதையெல்லாம் கவனித்தபடி நடந்து கொண்டிருந்த நான், ‘‘ஜெய்ய்யாஆஆ’’ என்ற உற்சாகமான உரத்த குரலைக் கேட்டதுமே, ‘‘விமலா...’’ என்றபடி திரும்பினேன். ஜெயந்தி என்கிற பேரை ஜெய், ஜெய்யூ என்றெல்லாம் அவரவர் மனசுப்படி சுருக்கிக் கூப்பிட்டாலும், நாலு மாத்திரைகூட இழுத்து கூப்பிடக் கூடியவள் விமலா மட்டுமே!

சென்ற வருடம் பார்த்ததைவிடச் சற்றே குண்டாகியிருந்ததாகத் தோன்றியது. நெகுநெகுவென்ற அவள் உயரம் காரணமாக அதிகம் பருமன் தெரியாது. பார்வையிலேயே எல்லாத்தையும் கொட்டிவிடும் அந்த கோலிக்குண்டு கண்கள், ‌கொழு‌கொழுவென்று பார்த்ததுமே கிள்ளத் தூண்டுகிற கன்னங்கள், நிமிஷத்துக்கு 120 வார்த்தைகள் ஸ்பீடில் பேசுகிற அவள் பேச்சு... ரசித்துப் பார்த்தபடியே வந்தவள், சற்றே மேடிட்டிருந்த வயிற்றைக் கண்டதும் வியந்து போனேன். ‘‘ஏய்...! எத்தனை மாசம்?’’ என் கேள்விக்குப் பதில் தராமல் கோபமாக, ‘‘அமெரிக்காவுலருந்து எப்ப வந்த? ஒரு தகவல் இல்ல... போன் கால் இல்ல... இப்பிடி வழில பாத்துத்தான் நான் பேசணுமா? போடி...’’ என்று பொரிந்துவிட்டு நகர்ந்தாள்.

பி்ன்னாலேயே சென்று சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் எத்தனை இடைஞ்சல்கள்! ‘‘ஹாய் விமலா! சிவா வரலையா?’’ என்றும், ‘‘ஹேய் விமல்! ரம்யாவைக் கூட்டிட்டு வரலையா?’’ என்றும் குறுக்கிட்டு பலர் அவளிடம் பேசிவிட்டுச் சென்றனர். ‘‘நானும் கேக்கணும்னு நெனச்சேன்... ஏன் ரம்யாவைக் கூட்டிட்டு வரலை நீ?’’ என்றேன். ‘‘இல்லடி.. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதான் சிவாவைக் கூட இருந்து பாத்துக்கச் சொல்லிட்டு நான் மட்டுமாவது அட்டெண்ட் பண்ணலாமேன்னு வந்துட்டேன்’’ என்றாள். அப்போதுதான் லக்ஷ்மி அம்மா தோட்டத்தினுள் நுழைவதைக் கவனித்தேன். ‘‘ஏய்... உன் மாமியார் வர்றாங்கடி. வா, வெல்கம் பண்ணலாம்...’’ என்றதுமே முகம் மாறினாள் விமலா. ‘‘நீ போய்ப் பேசு... நான் வரலை...’’ என்றவள் சட்டென்று வேறு பக்கம் சென்று விட்டாள். நான் லக்ஷ்மியம்மாவை நோக்கி விரைந்தேன்.

க்ஷ்மியம்மாவைப் போல ஒரு மாமியார் எனக்குக் கிடைக்கவில்லையே என்று பலமுறை நான் நினைத்து ஏங்கியதுண்டு. சிவாவை விமலா காதலித்த போது வசதி குறைந்த ஏழைப் பெண் என்பதுபோல காரணங்களை அடுக்காமல் கல்யாணத்துக்கு மனமுவந்து சம்மதித்தவர், மருமகளைப் போல இல்லாமல் ஒரு மகளைப் போலவே அவளைக் கொண்டாடியவர் எனகிற பல விஷயங்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன் நான். அவர்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷங்கள் கழிந்தும் குழந்தை பிறக்காமலிருந்ததால், ‘‘போய் டாக்டர்கிட்ட டெஸ்ட் பண்ணிட்டு வந்துருங்களேன்... யார்கிட்ட பிரச்னை இருந்தாலும் ட்ரீட்மெண்ட் குடுத்து சரி பண்ணிக்கலாம்’’ என்று மட்டும்தான் சொன்னார் லக்ஷ்மியம்மா. விமலாவுக்கு வேண்டாதவளாகிப் போனார்.




ஏனோ தெரியாது... சின்ன வயசிலிருந்தே ஹாஸ்பிடல், டாக்டர் என்றால் விமலாவுக்கு அலர்ஜிதான்! 99 சதவீதம் தவிர்த்து விடுவாள். ‘‘இல்ல ஜெய்ய்யா.. டாக்டரைப் பாத்துட்டு அவர் சைடு குறைன்னு சொன்னா, அவருக்கு வருத்தமாயிடும் காம்ப்ளக்ஸ் வரும். என் சைடுலன்னாலோ நான் மாமியாருக்கு வேண்டாதவளாயிடுவேன், ரெண்டாங் கல்யாணம் பத்திப் பேச்சு வரும்... என்னதான் நல்ல மாமியாரா இருந்தாலும் சில விஷயங்கள்ல புலி புல்லைத் திங்காதுடி. அதான் எனக்கு இந்த வார்த்தையே பிடிக்கல...’’ என்றாள் என்னிடம். அன்று துவங்கி சின்னச் சின்ன உரசல்கள் வளர, ‘‘உறவு நீடிக்கணும்னா விலகியிருக்கணும் சிவா. நான் நம்ம பூர்வீக வீட்டுக்கே போ‌றேன். அங்க வந்து என்னப் பாத்துக்கோ’’ என்றுவிட்டு விலகி்ப் போனார் லக்ஷ்மியம்மா.

மேடையில் பாடுபவர்களை உன்னிப்பாக கவனிப்பவள் போல பாவனை செய்து கொண்டிருந்த விமலாவின் அருகில் காலியாயிருந்த இருக்கையைப் பிடித்தேன். ‘‘ஏய... அவங்க உன்னைப் பாத்துட்டாங்க... நீ அவங்களை கவனிக்கலை, அதனாலதான் வந்து பேசலைன்னு சமாளிச்சு வெச்சிருக்கேன். போய்ப் பேசுடி ப்ளீஸ்... இந்த மாதிரி பப்ளிக் ஃபங்ஷன்ல பாத்தும் பாக்காம போறது வம்பு பேசறவங்களுக்கு நீயா ஸ்னாக்ஸ் குடுக்கற மாதிரி ஆய்டும். சும்மா ஃபார்மாலிட்டியாவாவது ரெண்டு வார்த்தை பேசிட்டு வா’’ என்றேன். கொஞ்ச நேரம் இப்படிப் பலவிதமாய் எடுத்துச் சொன்னதும் வேண்டாவெறுப்பாய் கிளம்பிச் சென்றாள் விமலா. அவள் லக்ஷ்மி அம்மாவின் அருகி்ல சென்று அமர்வதையும், அவர்களுடன் பேசுவதையும் இங்கிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன்.

‘‘ஏய்... ஜெயந்தி! ப்ரஸன்ட் குடுக்கப் போறேன்... கூட வாடி’’ என்று தோழி ஒருத்தி இழுத்துச் சென்றதால் மேடையேறி விட்டு சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது... சர்ப்ரைஸ்! லக்ஷ்மியம்மாவுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் விமலா. பேசியபடியே அவர்கள் கையைப் பிடித்து எழுப்பி, அழைத்து வந்தாள். ‘‘ஏய் ஜெய்ய்யா... அம்மாவுக்கு பஃபேன்னா அலர்ஜி. அதனால டைனிங் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வெச்சுட்டு வர்றேன். கிளம்பிடாதடி... நாம சேர்ந்து சாப்பிடலாம்’’ என்றுவிட்டு கடந்து சென்றாள். என்னவாயிற்ற இவளுக்கு? மனதுக்குள் வியந்த‌வாறே பின்‌தொடர்ந்தேன். ஒவ்வொரு ஐட்டமாக பரிமாறுபவர்களுடன் கூடவே இருந்து பார்த்து பார்த்து அப்படி கவனித்தாள! லக்ஷ்மியம்மா கை கழுவ எழுந்து செல்ல...அதற்குமேல் என்னால் பொறுக்க முடியவில்லை. ‘‘ஏய்... என்னாச்சுடி... ரெண்டு வார்த்தை ஃபார்மாலிட்டியா பேசறேன்னு ‌போன... இப்பப் பாத்தா, அம்மா, அம்மான்னு உருகற? என்னாச்சு?’’ என்றேன்.

‘‘ஜெய்ய்யா...’’ என்று என் பக்கம் திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தன. ‘‘இந்த ஃபங்ஷனுக்கு வந்திருந்தவங்க எல்லாரும் என்கிட்ட ‘ரம்யாவைக் கூட்டிட்டு வரலையா?’ன்னு கேட்டாங்க. ஒரு சிலர் ‘எங்க உன் வளர்ப்புப் பொண்ணு? விட்டுட்டு வந்திட்டியா’ன்னு கூடக் கேட்டாங்க. இப்படி  யாரும் பேசறது ரம்யாவோட காதுல பட்டு, அவ மனசுல ஏதும் விரிசல் விட்றக் கூடாதுன்னுதான் இந்த மாதிரி ஃபங்ஷனுக்கு அவளை அவாய்ட் பண்ணிடறேன். அவளுக்கு விஷங்களை அலசற அளவுக்கு வயசும், மனசும் வளர்ந்தபிறகுதான் இந்த விஷயம் தெரியணும்னு நினைக்கிறேன் நான். ஆனா... அம்மாகிட்ட நான் பேசப் போனதுமே, ‘எங்கம்மா என் பேத்தி? கூட்டிட்டு வரலையா? என்ன முழிக்கற...? என் பேத்தி ரம்யாவைக் கூட்டிட்டு வரலையான்னு கேட்டேம்மா?’ன்னு தான் பேசவே ஆரம்பிச்சாங்க. அம்மா வீட்டை விட்டுப் போன பிறகு, என் மன ஆறுதலுக்காக அவங்ககிட்டகூட கன்சல்ட் பண்ணாம நான் ரம்யாவை எடுத்து வளர்கக ஆரம்பிச்சேன்ங்கறத நல்லாப் புரிஞ்சுக்கிட்டும் கூட, ‘என் பேத்தி’ன்னு ஒரே வார்த்தையில அங்கீகரிச்சுட்டாங்க... எவ்ளவ் பெரிய மனசுடி!  நான் உண்டாயிருக்கேன்றதை கவனிச்சதும் அவங்க முகத்துல அவ்வளவு சந்தோஷம். நான்தான் அம்மாவை சரியாப் புரிஞ்சுக்கலேன்னு அந்த நிமிஷம் புரிஞ்சுக்கிட்டேன்.  வீட்டுக்குப் போனதும் சிவாட்ட சொல்லி, முதல்ல அம்மாவை கால்ல, கைல விழுந்தாவது வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொல்லப் போறேன்’’ என்றாள் கோலிக்குண்டு கண்கள் ஜொலிக்க.

அந்த கொழுகொழு கன்னத்தில் ஒரு முத்தமிட்டு, அவளைக் கட்டிக கொண்டு முத்தமிட்ட அந்தக் கணத்தில் என் மனம் முழுக்க சந்தோஷம் ததும்பி வழிந்தது.
 
பி.கு.1.: கதைக்கான கரு மறைந்த திரு.ரா.கி.ர. அவர்களுடையது. இருந்தாலும் கதை சுமாராக வந்திருக்கேன்னு யாராவது நினைச்சா அது எழுதின என்னோட குறைதான். பாராட்டினீங்கன்னா அது அவரையே போய் அடையட்டும்!

 பி.கு.2 : கடந்த வாரத்திலிருந்து நாளை (ஞாயிறு) வரை தொடர்ந்த பணிச்சுமை மற்றும் மின்சாரத் துறை (28 மணி நேரம் கரண்ட் கட் எங்க ஏரியாவுல ஒரு நாள், ராமர் க‌ோவில் தேர் வருதுன்னு ஒரு நாள்) காரணமாக நான் அனைவரின் தளத்திலும் படிக்கவும் கருத்திடவும் இயலவில்லை. பொறுத்தருள்க. திங்கள் முதல் மீண்டும் சந்திக்கலாம்.

49 comments:

  1. நல்ல மாமியார்.. நல்ல மருமகள்... இது நீங்க எழுதிய கதை என்பது தங்களது எழுத்து நடையிலேயே தெரிகிறது... உதாரணம் நான்கு மாத்திரை..

    ReplyDelete
    Replies
    1. எழுத்து நடையை ரசித்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி!

      Delete
  2. அருமை... நல்ல மனம் வாழ்க... ராமர் க‌ோவில் தேர் பற்றிய பகிர்வு வருமா...?

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  3. கன கச்சிதமாக் கதையை முடித்திருக்கீங்க. கரு யாரோடதாக இருந்தாலும் வளர்ப்பது பெறுபவள் தானே. அந்த விஷயத்தில் நீங்கள் வெற்றி அடைந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. எல்லா மாமியாரும் இதேபோல் இருந்தால் இடைஞ்சல் இங்கே ஏதுமில்லை..அருமையான கதை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  5. திரு.ரா.கி.ர. அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து வாழ்த்திய .உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  6. கதைகளில் தான் இப்படி மாமியார் இருப்பாங்க போல... அது என்ன உங்களுக்கு மட்டும் 28 மணி நேரம் ?

    ReplyDelete
    Replies
    1. ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்குத் தெரிந்த குடும்பத்தில் நேரில் கண்ட விஷயத்தைத் தான் சொல்லியிருந்தார் கதையாக்கியிருக்கேன். நல்ல மாமியார்களும், நல்ல மனைவிகளும் சிலர் எங்காவது இருக்கத்தான் செய்றாங்க தென்றல்! அவங்க மெஜாரிட்டியா ஆகணம்கறதுதான் என் விருப்பம். 24 மணி நேரத்தையும் தாண்டி கரண்ட் வரலைன்ற அர்த்தத்துல 28 மணி நேரத்தை எடுத்துக்கம்மா. மிக்க நன்றி!

      Delete
  7. Did not feel boring while reading. So, the story is quite good and it has got all the qualities to be called as a story. Keep it up.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  8. அருமையான குழந்தையாக ரசிக்கும்படி வளர்த்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இந்த கதைக் குழந்தையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  9. ஒரு சொல்லானும் எத்தனை
    அர்த்தம் உள்ளடக்கியது...
    கதையின் கருவும் சொல்லிச்
    சென்றவிதமும் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸார்.. ஒற்றைச் சொல்கூட மனதில் கசப்பையும் வெறுப்பையும் விதைக்க வல்லது. இதை அனுபவத்திலும் உணர்ந்ததுண்டு நான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. கருத்தாழம் மிக்க கதையை எளிமையாகக் கொண்டு சென்று முடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  11. //பி.கு.1.: கதைக்கான கரு மறைந்த திரு.ரா.கி.ர. அவர்களுடையது. இருந்தாலும் கதை சுமாராக வந்திருக்கேன்னு யாராவது நினைச்சா அது எழுதின என்னோட குறைதான். பாராட்டினீங்கன்னா அது அவரையே போய் அடையட்டும்!//

    என்ன ஒரு பெருந்தன்மை...

    நிச்சயமாய் இந்தப் பாராட்டு உங்களுக்கே.. அருமையாகா இருந்தது வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. கதையை ரசித்து என்னைப் பாராட்டிய சீனுக்கு என் அன்பும் நன்றியும்!

      Delete
  12. மாமியார்-மருமகள் இரண்டு பேருமே புரிஞ்சிகிட்டவங்களா இருந்தாதான் குடும்பம் சந்தோஷமா இருக்கும். ஆனாலும் இது போல் மாமியாரை எல்லாம் பார்க்க முடியலைங்க... நல்ல அம்மாவாக இருக்கும் ஒரு பெண் மாமியார் பதவிக்கு வந்ததும் எப்படித்தான் குணங்கள் மாறி விடுகிறதோ...? மருமகள் போடும் டீ யில் குறை சொல்வதில் ஆரம்பிக்கிறது குடும்ப பிரச்சினைகள்... என்னை பொறுத்தவரை 75% மாமியார்கள் மருமகளை ஆட்டிப்படைப்பதில்தான் இருக்கிறார்கள். என் மாமியாரும் அப்படித்தான் அமைந்தார்கள் இருந்தாலும் அவங்களோட இயல்பு அப்படிதான் தெரியாம செய்றாங்க என்று நான் விட்டு கொடுத்து போனதால் அவர் இப்போது நல்லவங்களா மாறிவிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். என் அனுபவத்தில் நிறைய முரட்டு மாமியார்களைத் தான் கண்டிருக்கிறேன் என்றாலும் விதிவிலக்குகள் உண்டு உஷா. உங்கள் விஷயத்தில் கூட விட்டுக் கொடுத்துப்‌ போனதால் அவங்க அன்பானவங்களா ஆன மாதிரி இங்க மாமியார் விட்டுக் கொடுத்ததால மருமகள் மாறிடறா! அவ்ளவ்தானே வித்தியாசம். மிக்க நன்றி!

      Delete
  13. மிக அருமையான ஒரு கதைக் கரு! அதை சுவையான கதையாக பிரசவித்து பாராட்ட வைத்து விட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. எடுத்துக் கொண்ட கருவை அழகாக வளர்த்துச் சென்று நிறைவாக முடித்திருக்கிறீர்கள்! நன்று.

    ReplyDelete
    Replies
    1. சிறந்த எழுத்தாளரான உங்களின் பாராட்டு தெம்பூட்டுகிறது எனக்கு. மிக்க நன்றி!

      Delete
  15. கதையை எழுதிய விதம் ,அதை சுவாரஸ்யமாக கொண்டு சென்ற விதம்,கதையின் முடிவு அனைத்துமே சூப்பர்.

    // (28 மணி நேரம் கரண்ட் கட் எங்க ஏரியாவுல ஒரு நாள், ராமர் க‌ோவில் தேர் வருதுன்னு ஒரு நாள்)// சென்னை பரவ இல்லை பரவாஇல்லைன்னு எல்லோரும் கண்ணு போடுட்டாங்க...:(

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே மாதிரி தாம்மா எல்லாரும் கண் போட்டுட்டாங்கன்னு தோணிச்சு... கதையை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  16. எனக்கும் முத்தமிடத் தோன்றுகிறது.... திருந்திட்டாங்களேன்னுதான்..... ஹிஹி...

    கரு பற்றிய கதைக் கரு ரா கி ரவா... பலே.... நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. அண்ணே...பாராட்டுகள்....கதை சூப்பரா வந்துருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. நிறைவான கதை.இந்த வகையிலும் தொடரலாம்

    ReplyDelete
    Replies
    1. தொடர்கிறேன் முரளி... மிக்க நன்றி!

      Delete
  19. நல்ல மாமியார் . விமலா கொடுத்து வைத்தவர் தான்.
    இவ்வளவு நல்ல மாமியார், நல்ல மருமகளை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி பாலகணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  20. கருவும் கதையும் கையாண்ட விதமும் அருமை.

    நல்ல மனிதர்களை இனிமேல் இப்படிப்பட்ட கதைகளில்தான் பார்க்க முடியும்போல் தோன்றுகிறது. அந்தளவுக்கு அந்த மாமியாரும் விமலாவும் கவர்ந்து விட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கதைகளில் மட்டுமல்ல.. அபூர்வமாக வாழ்விலும் தென்படத்தான் செய்கிறார்கள். பாஸிட்டிவாகவே கதைகளில் பார்க்கும் ஆசையில்தான் இப்படி எழுதியது. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  21. இன்னைக்குத்தான் குழந்தையைப் பார்த்தேன்!

    அடடா.....எப்படி ஒரு மாமியார்!!!!!

    'கதை' அருமை கேட்டோ!!!!

    ReplyDelete
    Replies
    1. ‘குழந்தை’யை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. உண்மையில் க்ஷ்மி அம்மா குணத்தில் லக்ஷ்மி தான்.கதை நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  23. அழகான கதை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  24. பல நேரங்களில் சரியான புரிதல் இல்லாமையே இடைவெளிகளுக்கான காரணம்.. சரியாக சொன்னிர்கள்.. அருமையான கதை

    ReplyDelete
  25. மாமியார் நாத்தனார் என்றாலே கொடுமைக்காரர்களாக நினைக்கும் மனப்பாங்கு திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வரும் பெண்களிடம் மாறவேண்டும். அதேபோல் மருமகள் என்றாலே குடும்பத்திலிருந்து மகனைப் பிரிக்கவந்தவள் என்ற எண்ணம் புகுந்தவீட்டினரிடமிருந்து ஒழியவேண்டும். இந்நிலை மாறினாலே எல்லா குடும்பமும் சச்சரவுகள் இன்றி சந்தோஷமாய் வாழ இயலும். விமலா தன் மாமியாரை சரிவரப் புரிந்துகொள்ளாத நிலையிலும் மருமகளிடம் துவேஷம் கொள்ளாமல் நயமாய் சிநேகம் பாராட்டிய லக்ஷ்மியம்மாவைப் பாராட்டவேண்டும். இப்போதாவது தன் தவறை உணர்ந்து விமலா உறவின் வலிமையை உணர்ந்துகொண்டாளே... அது கதைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் நல்ல கருத்து. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  26. நல்ல மாமியாரை அறிமுகப்படுத்தியதற்கு உங்களை பாராட்ட வேண்டும். அதேபோல அவரைப் புரிந்து கொண்ட நல்ல மருமகளுக்காகவும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
    ராகிரா வின் கருவை நல்ல விதமாக கையாண்டதற்கு பிடியுங்கள் இன்னொரு பாராட்டு!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube