Friday, May 3, 2013

‘அசத்திய’ வாக்கான சத்தியவாக்கு!

Posted by பால கணேஷ் Friday, May 03, 2013
சென்னை நாரதகானசபாவில் கோடை நாடக விழா கடந்த பத்து தினங்களாக நடந்து வருகிறது. தினமும் மாலை 7 மணிக்கு நாடங்கள்- அனைத்திற்கும் அனுமதி இலவசம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். சென்ற ஞாயிறன்று ‘ராஜமாதங்கி க்ரியேஷன்ஸ்’ அரங்கேற்றிய, மதுரை ஜடாவல்லபன் எழுதி இயக்கிய ‘சத்தியவாக்கு’ நாடகத்தைக் காண நாங்கள் சென்றிருந்தோம். ‘நாங்கள்’ என்பது நான், மெட்ராஸ்பவன் சிவகுமார், தி.கொ.போராடு சீனு, கனவு மெய்ப்பட ரூபக் ராம் மற்றும் இரு நண்பர்கள் என அறுவர் குழு. நாடகம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நாங்களனைவரும் அங்கு ஆஜராகி விட்டதால் நிறையப் பேசவும் வாய்ப்புக் கிடைத்தது. அரங்கத்தில் முன்வரிசைகளிலும் இடம் ‌கிடைத்தது. அன்று அரங்கம் நிறைந்திருந்ததைப் பார்க்ககையில் மகிழ்ச்சியாக இருந்தது.

அசத்திய ‘ஆலய’ செட்!

நாடகம் துவங்கிய இரண்டாவது காட்சியிலேயே நடராஜர் ஆலயத்தில் காட்சி என்று ‌வருவதால் தத்ரூபமாக ஒரு கோயில் சன்னதியையே மேடையில் உருவாக்கி, தீபாராதனை உட்பட நடத்தி ஏறத்தாழ கோயிலில் நாம் இருப்பது போன்ற பிரமையை உண்டு பண்ணி அசத்தினார்கள். ஆர்.எஸ்.மனோகர் நாடகங்களில் பார்த்தது போன்ற மிக நேர்த்தியான காட்சியமைப்பு அமைந்து ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ‘சத்தியவாக்கு’ நாடகம் தீனி போட்டதா என்று கேட்டால் ‘ஏறக்குறைய’ என்றுதான் சொல்ல வேண்டும்.

கதை மிக எளிமையானது. உமாசங்கர தீக்ஷிதர் பத்திரிகை நிருபருக்கு பேட்டியளிக்கிறார். அவர் சொல்லும் கதை: அவர் மகன் விஸ்வநாத தீக்ஷிதரின் மனைவி கற்பகம் கலெக்டராகி விட்டதால் அவருக்குக் கிடைககும் மரியாதையும், தீக்ஷிதர்தானே என்கிற அலட்சியமான அவமரியாதைகளும் விஸ்வநாதரின் மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிட, கணவன் மனைவி உறவில் சிக்கல்! விஸ்வநாத தீக்ஷிதரின் பள்ளி நண்பரான அரசியல்வாதி தர்மராஜன் கோயிலிலுள்ள நடராஜர் சிலையைத் திருடி தன்னிடம் தருமாறு விஸ்வநாத தீக்ஷிதரை அன்பாகவும், பின்பு மிரட்டலாகவும் வற்புறுத்த அங்கும் சிக்கல்! இந்த இரண்டு சிக்கல்களும் தீர்ந்ததா, எவ்விதம் என்பதை விரிவாக இரண்டு மணி நேரத்தில் விவரிக்கிறது நாடகம்.

நாடகம் கண்ட அறுவர் குழு!
நாடகத்தில் பங்குபெற்ற அனைத்து நடிகர்களுமே சிறப்பாக நடித்திருந்தனர். கலெக்டர் கற்பகமாக வந்த திருமதி லக்ஷ்மியும், உமாசங்கர தீக்ஷிதராக வந்த திரு.வாசுதேவனும், அமைச்சர் தர்மராஜனாக நடித்த மதுரை ராஜாமணியும் (இவர்தான் நாடகத்தை எழுதி இயக்கிய ஜடாவல்லபன்-ங்கற ரகசியத்தை உங்களுக்கு மட்டும் தெரிவிச்சுக்கறேன்), அத்தை காமாட்சியாக நடித்த திருமதி. காவேரியும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருந்தனர். கதை நாயகன் விஸ்வநாத தீக்ஷிதராக நடித்த திரு.ரவிக்குமார் மட்டும் மிக அழுத்த்தமான நடிப்பை வழங்கியிருந்தார். அழுத்தமாக வழங்கியதால் சற்றே மிகை நடிப்பாக ஆகிவிட்டதை அவர் தவிர்த்திருந்தால் நாடகம் இன்னும் சிறப்புற்றிருக்கும். மற்றொரு குறிப்பிட வேண்டிய விஷயம்... நாடகத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல குரல் வளம். வசனங்கள் தெளிவாக அழுத்தமாக உச்சரித்து (உரத்தும்) பேசியதில் அரங்கத்தில் இருககும் அனைவராலும் நன்கு கேட்க முடிந்திருக்கும்.

அமைச்சரும், தீக்ஷிதரும்!
மருந்துக்கும் நகைச்சுவை இல்லாத சீரியஸ் நாடகம் என்பதால் பக்கம் பக்கமாக வசனங்கள். யதார்த்தத்தை உணர்த்தியும், சமூகப் பிரச்னைகளைப் பேசியும், அங்கங்கே ஆன்மீகம், தத்துவத்தைத் தொட்டும் பளிச் பளிச்சென்று மனதை ஈர்த்தன; பல கட்டங்களில் கைதட்டலையும் பெற்றன அழுத்தமான வசனங்கள். ப்ளஸ் பாயிண்ட்டான இதுவேதான் நாடகத்தின் மைனஸும்! ஒரு கட்டத்தில் போரடிககச் செய்து, ‘‘நீளநீளமாப் பேசுறாய்ங்கய்யா. என்னதான்யா சொல்ல வர்றீங்க?’’ என்று சலித்துக் கொள்ளவும் வைத்து விட்டது. ‘‘கபிலாரண்யம்னு நம்ம நாட்ல முனிவர்கள் தபஸ் செஞ்ச இடம்தான் கலிபாரண்யம்னுல்லாம் திரிஞ்சு கலிபோர்னியான்னு இப்ப அழைக்கப்படுது. இதை நான் சொல்லலை... காஞ்சி மாமுனிவர் ‘தெய்வத்தின் குரல்’ புஸ்தகத்துல சொல்லியிருக்கார்.’’ என்று ஒரு வசனம் கவனத்தைக் கவர்ந்து, ‘அட!’ என்று புருவம் உயர்த்த வைத்தது! (வெள்ளைக்காரன் மஞ்சள், பூண்டுக்குல்லாம் காப்பிரைட் வாங்கற மாதிரி, அவன் ஸ்டேட்டுக்கே நாம காப்பிரைட் வாங்கிடலாம் போலருக்கே!)

நாடகத்தின் இயக்குனர் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்: பெரும்பாலான காட்சியில் நடித்தவர்கள் அனைவரும் ஆடியன்ஸைப் பார்த்தே வசனங்களைப் பேசுகிறார்கள்- தன் சீரிய நடிப்பனுபவத்தால் இதைத் தவிர்த்திருக்கும் மதுரை ராஜாமணியைத் தவிர. நடிப்பவரின் முகம், உணர்வுகள் புரிய வேண்டிய காட்சிகளைத் தவிர இருவர் பேசிக் கொள்ளும் போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசாமல், ஒருவர் வடக்கும், ஒருவர் தெற்கும் பார்க்கிற மாதிரி திரும்பியா பேசுவார்கள்? (அதிலும் பத்திரிகை நிருபராக நடித்தவர் ‘எங்கே வசனங்களை மறந்து விடுவோமோ?’ என்று ஒப்பித்தது ஆடியன்ஸைப் பார்த்துப் பேசியதால் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது)

அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள்!
ஒரு மாநிலத்தின் அமைச்சர் பதவியில் இருப்பவர் கோயில் சிலைகளைத் திருடத் திட்டம் போட்டால் அர்ச்சகரை விட்டா சிலையைத் தூக்கிவரச் சொல்வார்? அப்படியே அர்ச்சகரை மிரட்டினாலும் அவரிடம் கோயில் சாவியை மட்டும் பறித்து விட்டால் போதுமாதுதானே, திருடி வருவதற்கு அமைச்சரிடம் இல்லாத தொ(கு)ண்டர் படைகளா? என்று மனஸ் லாஜிக் கேள்வி கேட்டது. அதேபோல கடைசிக் காட்சியில் தீவிரவாதிகளால் அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவலாக வசனம் பேசி அந்த கேரக்டருக்கு மங்களம் பாடி விட்டது சப்பென்றிருந்தது. விஸ்வநாத தீக்ஷிதர் தன் மனைவியிடம் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து விடும்படி பலமுறை வற்பறுத்துகிறார். அப்போதெல்லாம் மறுத்துவிட்டு, எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்ததற்குப் பின்னால், கலெக்டர் காமாட்சி ‘‘நான் வேலையை விட்டுவிட்டேன். இனி உங்க மனைவி மட்டும்தான்’’ என்று சொல்லுவது ஏனென்றுதான் புரியவி்ல்லை. அந்த கேரக்டரின் மீது வளர்ந்து வந்திருந்த நம்பிக்கையும் கொலாப்ஸ்ட்! (அதுசரிதான்... இதை அவ முதல்லயே செஞ்சிருந்தா நாடகம் ஏதய்யா?ன்னு சிரிக்குது மனஸ்!)

பத்திரிகை நிருபரிடம் உமாசங்கர தீக்ஷிதர் ப்ளாஷ்பேக்காக விவரிக்கும் இந்தக் கதையில் பிரச்சனைகள் தீர்ந்து, ‌கலெக்டர் வேலையையும் நான் விட்டுவிட்டேன் என்று கற்பகம் சொல்லும் காட்சியிலேயே ஆடியன்ஸ் எழுந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதற்கப்புறம் ஆன்ட்டி க்ளைமாக்ஸாக அதே நிருபர் மீண்டும் திரும்ப வர, உமாசங்கர தீக்ஷிதர் இறந்த ஐந்து வருடமாகி விட்டது என்று அவரின் பேரனைக் காட்டுவதும், தன்னுடன் பேசியது அவரின் அரூபமா என்று நிருபர் பிரமித்து நிற்பதுமான காட்சி தேவையற்றது என்றே தோன்றியது.

இப்படியான சின்னச் சின்ன நெருடல்கள் இருந்தாலும் அழுத்தமான சென்ட்டிமென்ட்டும், ஆழமான சமூக அக்கறையும் கொண்ட கதையமைப்பும், வசனங்களும் கொண்ட இந்த (சற்றே நீண்ட) நாடகம் மனதில் பாதிப்பையும், நல்ல ரசனையையும் தோற்றுவித்தது என்பதே நிஜம்!

40 comments:

  1. "அறுவர்" குழு சேர்ந்து பார்க்கப் போனது அறுவை நாடகமா??

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னும் சொல்லிட முடியாது.சூப்பர்னும் சொல்லிட முடியாது. நல்லாருக்கற மாதிரியும், நல்லால்லாத மாதிரியும், கொஞ்சம் ரசனையா, கொஞ்சம் அறுவையா... கொஞ்சம்... ஆள விடுங்கப்பா! மிக்க நன்றி!

      Delete
  2. தமிழ்நாட்டு பதிவர்கள் இப்படி ஒன்று கூடி பல இடங்களுக்கு சென்று வர நல்ல வாய்ப்புக்கள். பதிவுகள் போட்டமா? இப்படி மீட் பண்ணினோமா என்று எஞ்சாய் பண்ணுகிறார்கள். அதிர்ஷ்டசாலிகள் மனைவி தூங்கிய பிறகு வீட்டிர்கு செல்லாம் ஹும்ம்ம்ம்ம்ம்ம்
    இதற்க்காவே சென்னைக்கு வந்துடலாம் போலிருக்குதே

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் மதுரைத் தமிழா! சென்னைக்கே வராட்டியும் கூட ஒரு முறையாவது சென்னை விசிட்டாவது அடிங்கப்பா! உங்களுக்குன்னே ஒரு பதிவர் சந்திப்பு போட்ரலாம்! மிக்க நன்றி!

      Delete
  3. இதுபோன்ற நாடகங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிட்டியதில்லை. நாடகமேடை என்பதை மறந்து கோயிலில் இருப்பது போன்ற பிரமையை உருவாக்கும் விதத்தில் நாடக காட்சியமைப்பு அமைத்தது சிறப்பு. நாடகத்தின் நிறை குறைகளை அலசிய விதம் நன்று. இதுபோன்ற விமர்சனங்கள் அடுத்த முறை குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள நாடகக்குழுவுக்கு உதவியாக இருக்கும்.திரைப்படத்துக்கு மட்டுமல்லாமல் மேடை நாடகங்களுக்கும் அழகாக விமர்சனம் செய்து அசத்துறீங்க. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. இந்த விமர்சனம் அந்த நாடகக் குழுவிடம் செல்லப் போகிறது கீதா. ஆகவே, நிறை குறைகளை சரியாக அலசியுள்ளேன் என்று நீங்கள் சொல்வது மகிழ்வு தருகிறது. மிக்க நன்றி!

      Delete
  4. நல்ல விமர்சனம் கணேஷ் அண்ணே....

    மதுரைத் தமிழன் சொல்வது போல, உங்கள் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகள்.... தொடரட்டும்..... :))))

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  5. அனைத்து அம்சங்களையும் அருமையாக கவர்ந்து உள்ள விமர்சனம்.

    என்னை சற்று வியப்படைய வைத்தது பைக் பார்க்கிங் கட்டணம், வெறும் மூன்று ரூபாய் மட்டும். சென்னையில் இதுவரை நான் எங்கும் பார்த்தோ அல்லது கேள்வியோ படாத ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிங் கட்டணமா? நான் அங்கே வண்டியை பார்க் செய்துவிட்டு கிளம்பி வரும் வரையில் யாரும் கட்டணம் எதும் கேக்கலியே ரூபக்? ஃப்ரீன்னுல்ல நினைச்சேன்! விமர்சனத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  6. ஒரு 'அதிஅற்புதமான!' நாடகத்திற்கு அற்புதமான விமர்சனம் வாத்தியாரே. செட் மற்றும் வசன உச்சரிப்பு டாப் கிளாஸ். நாமெல்லாம் மிஸ்டர் டமிலையெ அசராமல் பார்த்தவர்கள் எவ்வளவு துன்பம் வரினும் அசறோம் ....

    அடுத்து எதாவது நகைச்சுவை நாடகத்துக்கு கூட்டிட்டுப் போங்க... செண்டிமெண்ட்லா வேணாம்

    ReplyDelete
    Replies
    1. சரீ.... சரீ... ரிலாக்ஸ் சீனு! அடுத்ததா ஏதாவது க்ரேஸி மோகன் நாடகத்துக்குப் போயிரலாம்!

      Delete
  7. பாக்கத்தில் நீங்கள் இருக்கும் போது (மருந்துக்கும்) நகைச்சுவை இல்லாத சீரியஸ் நாடகம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்...

    அறுவரில் தலைவர் - திருமதி தமிழ் புகழ்...?

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... உங்க நம்பிக்கைக்கு மிக்க நன்றி! அவர்தான் எங்களுக்குத் தலைமை தாங்கிய / தாங்குகிற தளபதி நண்பா!

      Delete

  8. அறுவர் குழுக்கு வாழத்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வாழ்த்துக்களை நல்கிய தங்களுக்கு என் மனம் நிறைய நன்றி ஐயா!

      Delete
  9. //அழுத்தமாக வழங்கியதால் சற்றே மிகை நடிப்பாக ஆகிவிட்டதை அவர் தவிர்த்திருந்தால் நாடகம் இன்னும் சிறப்புற்றிருக்கும்//

    சற்றே மிகை நடிப்பா? யோவ் சீனு. சாரை தனியா கூட்டிட்டு போயி கும்பாபிஷேகம் பண்ணிடலாம். நம்ம பசங்கள கூப்புடு.

    ReplyDelete
    Replies
    1. ஹி.. ஹி... ஹி... ரொம்பக் கடுமையா எழுத மனசு வரலை சிவா! பசங்க வர்றதுக்கு்ள்ள உனக்கு தாங்க்‌ஸ் சொல்லிட்டு மீ எஸ்கேப்!

      Delete
  10. 10 நாளாக நடப்பதை இப்போது சொல்லி என்ன பிரயாசனம்!

    ஓசின்னா அரங்கம் ஃபுல் ஆகாம என்ன செய்யும்? நீங்களே 6 பேர்!

    //நம்ம நாட்ல முனிவர்கள் தபஸ் செஞ்ச இடம்தான் கலிபாரண்யம்னுல்லாம் திரிஞ்சு கலிபோர்னியான்னு இப்ப அழைக்கப்படுது..// அட, நம்ம நாட்டுல கலிபோர்னியா எங்கேங்க இருக்கு - கபாலீஸ்வரர் கோயில் பக்கத்திலயா!

    -ஜெ.

    ReplyDelete
    Replies
    1. அதும் சரிதான். முன்னாலயே எழுதிருக்கணும். அடுத்த தபா கரீக்கட்டா சொல்லிடறேன், சரியா? நம் நாட்ல முனிவர்கள் தபம் செஞ்ச வனம் காலப் போக்கில நகர்ந்து ஜியாக்ரபி மாறி வெளிநாட்டான் கிட்ட போயிருச்சுன்னு மீன் பண்ணி காஞ்சிப் பெரியவா சொன்னாங்களோ என்னவோ.. எனக்கும் தெரியலியே ஜெ! மிக்க நன்றி!

      Delete
  11. I also felt when you used the word ARUVAR reflecting the interest of the drama. But it is not so. Anyway it is a good effort that you have watched a drama and you are posting a review also. Very good analysis and it seems though you have gone with your friends, each and every scene has been meticulously enjoyed by you. Nice effort. Something different. Keep it up.

    ReplyDelete
    Replies
    1. நாடகம் பார்ப்பதும் எழுதுவதும் நல்ல அனுபவமாத்தான் எனக்கும் இருக்கு. முடிந்தவரை எழுதலாம் என்றுதான் விருப்பம். மிக்க நன்றி நண்பரே!

      Delete
  12. பொறாமையா( நல்ல பொறாமைதான்..) இருக்கு இப்படி நீங்க குரூப்பா கிளம்பிடறது..
    ம்..ம்.. இருக்கட்டும் இருக்கட்டும் நானும் ஒரு மாநாட்டையே கூட்டிடறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆணையிடுங்கள் தலைவி! எல்லாரும் வந்து சேர்ந்து மாநாட்டை களைகட்ட வெச்சிடறோம். இதுக்காக பொறாமைல்லாம் படக் கூடாது. சரியா? மிக்க நன்றி!

      Delete
  13. என்னங்க ஆளாளுக்கு நாடக விமர்சனத்துல எறங்கிட்டீங்க ....! ரெண்டு மணி நேரம் சீரியசான நாடகம் - சூப்பரு ...! எனிவே என்ஜாய் ...!

    ReplyDelete
    Replies
    1. நாடகங்கள் நடத்தறதே குறைஞ்சுட்டு வர்றதால நம்மால முடிஞ்ச அளவுக்குப் பாத்து, எழுதி என்கரேஜ் பண்ணலாமேன்னுதான் தம்பி! மிக்க நன்றி!

      Delete
  14. நாடக விமர்சனம் நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. நாடக விமர்சனத்தை ரசித்த நட்புக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  15. நல்ல விமர்சனம். சமூக அக்கறையுடனான கருவை எடுத்து நடித்தக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

    ஊக்கம் தரப்பட வேண்டியது நாடகக் கலை. கூடியிருக்கும் ரசிகர் கூட்டம் மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நாடக விமர்சனத்தை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  16. பத்து தினங்களாக நாடகங்கள் என்று குறிப்பிட்டுவிட்டு ஒரே ஒரு நாடகத்திற்கு மட்டும் விமரிசனமா? மீதி நாடகங்களுக்கு உங்கள் அறுவர் குழுவில் உள்ள மற்றவர்கள் எழுதுவார்களோ?
    எப்படியிருந்தாலும் ஒரு சுமாரான நாடகத்திற்கு நல்ல விமரிசனம் எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் போக அவகாசம் கிடைக்கலை ரஞ்சனிம்மா. இது ஒண்ணுதான் பாக்க முடிஞ்சது. நாடக விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு மனம் நிறை நன்றி!

      Delete
  17. இனிய வணக்கம் நண்பரே...
    இதுபோல மேடை நாடகங்கள் நான் கண்டதில்லை இதுவரை..
    சிறு வயதில் தெருக்கூத்து மற்றும் தெரு நாடகங்கள் தான் கண்டிருக்கிறேன்.
    அதற்கான உயிர்ப்பு இன்று எந்த ஒரு கலைக்கும் இல்லை என்றே நினைக்கிறேன்.
    எந்த ஒரு செய்தியையும் சுவாரஸ்யமாக எழுதும்
    உங்கள் திறமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. நானும் சமீபத்தில்தான் மேடை நாடகங்கள் பார்க்கத் துவங்கியிருக்கிறேன் மகேன். மிக சுவாரஸ்‌யமாக இருக்கிறது. கிராமியக் கலைகள் என்றுமே உயிர்ப்பானவைதானே! இதை ரசித்து என்னைப் பாராட்டிய உங்களின் அன்பிற்கு தலைவணங்கிய என் நன்றி!

      Delete
  18. தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube