Wednesday, January 9, 2013

சரித்திரக் கதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Wednesday, January 09, 2013

ரித்திரக் கதையில ரெண்டு டைப் இருக்குங்க. ஒண்ணு கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மாதிரி எழுத்தாளர்கள் எழுதிய அக்கால பாணிக் கதைகள். இன்னொண்ணு சுஜாதா, சுபா மாதிரி எழுத்தாளர்கள் எழுதின நவீனபாணி சரித்திரக் கதைகள். ரெண்டையும் பார்க்கலாம் இப்ப. முதல்ல பழைய பாணி...

முதல்ல கதாபாத்திரங்களை உருவாக்கிக்குங்க. சரித்திரக் கதைகள்ல நிறையக் கற்பனையக் கலந்து சரடு விடலாம் நீங்க. ஆனா, அதுல வர்ற மன்னர்கள் பேரு மட்டும் சரியானதா இருக்கணும். அதுக்கு பழைய சரித்திர புத்தகங்கள் ஏதாவது படிச்சு ரெஃபரன்ஸ் எடுத்துக்கணும். எடுத்தாச்சா... ரைட்டு, இப்ப ஹீரோ கேரக்டர். ஹீரோங்கறதால அவன் பெரிய வீரனாகவும் புத்திசாலியாகவும் இருத்தல் அவசியம். மன்னனோட படைத் தளபதியாவோ, இல்ல மன்னர் மரபில வந்து இப்ப செல்லாக்காசா இருக்கறவனாவோ உருவாக்கிக்கங்க. அடுத்தது கதாநாயகி. கதாநாயகிங்கறதால அவ ஒரு இளவரசியாகவும், அதியற்புத அழகியாகவும் இருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

அப்புறம்... சரித்திரக் கதைகள்ல ஒரு துறவி கேரக்டர் இருக்க வேண்டியது அவசியம். அவர் துறவிக்குரிய பணியைத் தவிர மத்த எல்லா அரசியல் பணியையும் செய்யறவரா அமைச்சுக்கறது மிக முக்கியமான விஷயமுங்க. இன்னொண்ணு... அந்தக் காலத்து மன்னர்கள் மாறு வேஷத்துல நகர் வலம் வர்றதும், மக்களை சந்திக்கறதும் வழக்கம்கறதால ஒரு மர்ம கதாபாத்திரத்தை அமைச்சுக்கணும். கடைசி சீன்லதான் அது மன்னர்தான்கற சஸ்பென்ஸை உடைக்கணும். -அது சஸ்பென்ஸா இல்லாம பாதியிலயே வாசகர்களுக்குத் தெரிஞ்சிட்டாலும் கூட. இவங்களுக்குத் துணையா இன்னும் எத்தனை கேரக்டர்களை வேணுமுன்னாலும் நீங்க சேத்துக்கலாம்.

ரைட். இப்ப இந்த எல்லா கதாபாத்திரங்களையும் உங்க மனக்குடுவைல போட்டு, அதை நல்லாக் குலுக்குங்க. -ரெண்டு மூணு குட்டிக்கரணம் அடிச்சாலு்ம் சரிதான்... ஆச்சா? சம்பவங்கள்ங்கற கோந்தை வெச்சு இவங்களை ஒட்டினீங்கன்னா, சரித்திரக் கதை தயார். என்னது...? எப்படி ஒட்டறதுன்னா கேக்கறீங்க? அதையும் சொல்றேன். ஓப்பனிங் ஹீரோ இன்ட்ரடக்ஷன். குதிரைல ஹீரோ இயற்கைய ரசிச்சுட்டு வர்றப்ப, அவனை சில பெண்கள் ரசிக்கறாங்கன்னு சொல்லிட்டு, அவன் வீரம் வெளிப்படற மாதிரி ஒரு சண்டை சம்பவத்தை அமைச்சுக்கணும். அடுத்து அவன் கதாநாயகியைப் பார்த்து காதல் வசப்படணும். மன்னரோட எதிரி போருக்கு வர்ற மாதிரியோ, இல்ல மன்னர் ஏதோ ஒரு போர்ல தோத்துட்டு நாட்டை மீட்கப் போராடற மாதிரியே வெச்சுக்கிட்டு, ஹீரோ போய் அவருக்கு ஐடியாஸ் தர்ற மாதிரி வெச்சுக்கணும்.

அதுக்காக எதிரி நாட்டுக்கு துப்பறியப் போறான். அங்க இன்னொரு பொண்ணை காதலிக்கறான். - சரித்திரக் கதைன்னா எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் காதலிக்கலாம். நமக்கு வேண்டியது காதலை வெச்சு ரெண்டு சாப்டர் தள்ளணும்கறதுதான். -  அங்க அவனுக்கு ஒரு துறவி உதவறார். சில பல சாகசங்களுக்குப் பின் வெற்றிகரமா தன் நாட்டுக்கு வர்றான். இப்படி்ல்லாம் சம்பவ கோந்துகளை உங்க கற்பனைக் குதிரையக் கண்டபடி தறிகெட்டு ஓடவிட்டு உருவாக்கி ஒட்டிக்கணும். கடைசியா க்ளைமாக்ஸ்னு வர்றப்ப ஒரு போர்க்களம் நிச்சயம் இருந்தாகணும். அந்தப் பெரும் போர்ல நம்ம ஹீரோவோட ஐடியாக்களாலயும், வீரத்தாலயும் மன்னர் ஜெயிக்கறதா காட்டிரணும். அவர் அரசவைக்கு வந்ததும் அவர்தான் துறவியா வந்து ஹீரோவுக்கு உதவி செஞ்சார்ங்கற மஹா சஸ்பென்ஸை உடைச்சு, ஹீரோவுக்கு பரிசுகள் தரணும். அவன் தன் காதலிகளோட கொஞ்சறதோட கதைய முடிச்சிரணும். - இல்லன்னா, கல்லெறிஞ்சு முடிக்க வெச்சிருவாங்க. ஹி... ஹி...!

இதையெல்லாம் எழுதும் போது இலக்கிய நயமா இல்லாட்டியும் கூட ஒரளவுக்காவது பழங்கால தூய தமிழ்ல சொற்களை அமைச்சுக்க வேண்டியது அவசியம். அது தெரிஞ்சாதான் சரித்திரக் கதைகள்னு எழுதி ஜல்லியடிக்கலாம். இல்லாட்டி ரசிக்க மாட்டாங்க யாரும். இத்தனை விஷயங்களை வெச்சு சீரியஸ் டைப் சரித்திரக் கதைகளை ஈஸியா எழுதி அசத்திடுவீங்கதானே... என்னது... அந்த இன்னொரு நவீன பாணி சரித்திரக் கதைன்னா என்னன்னு கேக்கறீங்களா... சொல்றேன்.

நவீன பாணி சரித்திரக் கதைகள் எழுதறது மிகமிகச் சுலபமான விஷயம். முதல்ல நீங்க ஒரு சாதாரண நாவல் எழுதிக்கங்க. அது க்ரைம் கதையாக கூட இருக்கலாம். எழுதி முடிச்சாச்சா...? இப்பத்தான் முக்கியமான விஷயம். அந்த க்ரைம் கதையில வர்ற பெயர்களை முதல்ல சரித்திர காலப் பெயர்களா மாத்தணும். உதாரணமா ஹீரோ பேர் தினேஷ்னு வெச்சிருந்தா ‌தினேசவர்மன்னும், ஹீரோயின் பேரு சுலபான்னு வெச்சிருந்தா சுலபதேவின்னும் மாத்திக்கலாம். அப்புறம்... கார்ல வந்து இறங்கினான்னு எழுதியிருந்தீங்கன்னா, குதிரையில அல்லது தேர்ல வந்து இறங்கினான்னும், துப்பாக்கியால சுட்டான்னு எழுதியிருந்த அதை வாளால் வெட்டினான்னும் மாத்தி எழுதிக்கணும்.

இப்படி எல்லாத்தையும் கவனமா மாத்திட்டீங்கன்னா நவீன பாணி சரித்திரக் கதை ரெடி. கணேச பட்டர், வசந்தகுமாரன்னு சுஜாதா ஸாரும், நரேந்திரவர்மன், வைஜயந்தி தேவின்னு சுபாவும் அவங்கவங்க எழுதின க்ரைம் கதைகளை சரித்திரமா மாத்தி இப்படித்தான் கும்மியடிச்சாங்க. உங்க பங்குக்கு நீங்களும் கும்மியடிச்சு தமிழை வாழ வையுங்க... ஹி... ஹி...

=============================

நிஜமாவே சரித்திரக் கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு நான் எழுதினதுல கோபம் வந்திருக்கும். எத்தனை கல் விழுதுன்னு பாக்க ஆவலோட வெயிட்டிங். அப்புறம்... நாளை மறுதினம் துவங்க இருக்கும் புத்தகக் கண்காட்‌சியில ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டால் எண் 43, 44 ஆகிய எண்கள்ல அமைஞ்சிருக்கு. அங்கே என்னோட ‘சரிதாயணம்’ கிடைக்கும். இன்னும் சில பதிவர்களோட புத்தகங்களும் அங்க கிடைக்க இருக்கறதாகத் தெரிய வருகிறது. இரண்டு புத்தகஙகளை இங்க சொல்றேன். இன்ன பிறவற்றை தகவல்கள் திரட்டி நாளை சொல்றேன்.

1. கவியாழி கண்ணதாசன் - ‘அம்மா நீ வருவாயா, அன்பை மீண்டும் தருவாயா?’ என்கிற தலைப்பில் இவரின் கவிதைகள் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக புததக வடிவம் பெற்றுள்ளன. மணிமேகலையின் அரங்கு எண் 244ல் இந்தப் புத்தகத்தை நீங்கள் பெறலாம். 13-1-2013 ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு புத்தகக் கண்காட்சி அரங்கிலேயே நடக்கற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குப் போனீங்கன்னா ஆசிரிரின் ஆட்டோகிராபோட புத்தகத்தை வாங்கிக்கலாம்.

2. கோவை மு.சரளா - இவங்களோட கவிதைகளுக்கு அறிமுகம் தேவைப்படாது. ரசிக்க, மயங்க, உருக, உற்சாகப்பட, துடிக்க... இப்படி பல உணர்வுகள்ல நம்மை தோய்த்தெடுக்கற அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரரான இவரின் கவிதைகளும் ‘மெளனத்தின் இரைச்சல்’ என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இதையும் டிஸ்கவரியின் ஸ்டாலில் நீங்கள் சந்திக்கலாம்.

Friday, January 4, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 7

Posted by பால கணேஷ் Friday, January 04, 2013

                வீரத்தேவன் கோட்டை
                                                     - லக்ஷ்மி -

ழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துகிறீர்கள் தானே... இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரி்த்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக!

ந்த திரைப்படக் குழு காவிரிக் கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறது. உணவு இடைவேளை விடப்பட, அனைவரும் உணவருந்தியபடியே அரட்டையடிக்கின்றனர். தனக்கு முன் தென்பட்ட இடிந்த கோட்டையைக் கண்ட கதாநாயகி காமினி, அதைப் பறறிக் கேட்க, அதற்கு ‘வீரத்தேவன் கோட்டை’ என்றும், அந்நாட்களில் வீரத்தேவன் பெயர் கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும் என்றும் கூறுகிறார். ‘இந்தக் கோட்டை போரில் அழிந்திருக்குமோ’ என இயக்குனர் கேட்க, ‘ஒருவகையில் பெரும் போர்தான். அன்பை வெல்ல இருவர் போராடினார்கள். நூறு வருஷங்களுக்கு முன்பு...’ என்று கதையை சொல்லத் தொடங்குகிறார் கதாசிரியர்.

காவிரி பெருக்கெடுத்தோடும் கொள்ளிடக்கரையில் திருவிழா நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் வீரத்தேவனும் இருளப்பனும் அதைப் பார்த்து மகிழ்ந்தபடி நடககின்றனர். அங்கே கறுப்பாக, நீள் வட்ட முகமும், சிவந்த அதரங்களும், முத்துப் பற்களையும் கொண்ட அழகியொருத்தியைக் கண்டு வீரத்தேவன் மயங்குகிறான். பவளவல்லி என்கிற பெயர் கொண்ட அவள் இதயமும் வீரத்தேவனை நாடுகிறது. திருவிழா முடிந்தபின் அவளைக காண விருமபி பதினைந்து தினங்களுக்கும் மேலாக இருளப்பனுடன் அவளைத் தேடியலைகிறான் வீரத்தேவன். ‘பொன்னம்பலத் தேவர்’ என்கிற எதிரியின் எல்லையில் அந்தப் பெண்ணை மீண்டும் கண்டு அவளுடன் பேச்சுக் கொடுக்கின்றனர். இருளப்பனின் பேச்சில் கோபமடைந்து பவளவல்லி சென்று விடுகிறாள்.

அதேநேரம் அரண்மனையில் சைவப் பழமாய் காட்சியளிக்கும் வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகையைக் காண ஒரு கிழவி வந்திருப்பதாக தோழியர் சொல்ல, அவள் முகம் வெளிறிப் போகிறது. ‘ஏன் இங்கேயெல்லாம் வந்தாய்’ என்று கிழவியை அவள் கடிந்து கொள்ள, கிழவி பணம் கேட்கிறாள். ‘அந்த ஒலையைத் தந்தால் நிறையப் பணம் தருவேன்’ என மங்களாம்பிகை சொல்ல, ‘அது பிறகு, இப்போது கொஞ்சம் பணம் தா’ என்று அவளை மிரட்டி பணம் பறித்துச் செல்கிறாள் கிழவி.

ன்றைய படப்பிடிப்பு முடிந்து விட்டதால் கதையை நிறுத்திய கதாசிரியர் மறுநாள் லன்ச் பிரேக்கில் மீண்டும் தொடர்ந்து சொல்கிறார்.

டுத்த சில தினங்களில் பவளவல்லி-வீரத்தேவன் காதல் நன்கு வளர்ந்து விட்டிருக்கிறது. தன் இயற்பெயரான சுந்தரத்தேவன் என்று அவளுடன் அறிமுகமாகிப் பழகி வருகிறான். அவள் வீட்டுக்கு தாமதமாகத் திரும்புவதைக் கண்ட பொன்னம்பலத் தேவர், அவளைக் கண்டித்து வீரத்தேவன் என்பவன் தன் பரமவைரி என்று கூறி, பரம்பரைக் கதையைச் சொல்கிறார். ‘‘கொள்ளிடத்தின் மறுகரையை ஆண்டு வந்த சிவஞானத் தேவனின் மகன் இந்த வீரத்தேவன். பத்தாண்டுகளுக்கு முன் சிவஞானத்தேவர் சிலரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அதை நான் செய்ததாக பலர் சொல்கிறார்கள். நான் செய்யவில்லையே என்பதுதான் என் வருத்தமும். ஆனாலும் வீரத்தேவனின் உதிரத்தில் என் பழி தீர்த்துக் கொள்வேன். வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகை பெண்ணாகப் பிறந்த ஒரு பேய். என் மகனையும் மருமகளையும் கொன்று தீர்த்த அந்தக் குடும்பத்தை பழி தீர்ப்பேன்’’ என்று குமுறுகிறார். ‘‘உன் மாமன் பாண்டித்துரையும், சிவஞானமும் நெருங்கிய நண்பர்கள். ஒரு பெண் விவகாரமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு எதிரிகளானார்கள். உன் மாமி பூரண கர்ப்பிணியாயிருக்கையில் அவளுடன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பிய உன் மா‌மனையும் மாமியையும் இருளில் சில ஆட்கள் தாக்கிக் கொன்று விட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளை சில காலம் சென்றபின் மங்களாம்பிகை குறைந்த விலைக்கு விற்றாள் என்பதால் அதைச் செய்தது இன்னாரென விளங்கிற்று. நம் குடும்ப நகைகளில் மச்ச சின்னம் பொறித்திருக்கும்’’ என்கிறார் பொன்னம்பலத் தேவர். பவளவல்லி அவசரமாக ஓடிச் சென்று வீரத்தேவன் பரிசளித்த பச்சைக்கல் மோதிரத்தை எடுத்துப் பார்க்கிறாள். மச்சச் சின்னம் கண் சிமி்ட்டுகிறது அங்கே.

டப்பிடிப்பு மும்முரமாக நடைபெறவே கதையை இத்துடன் விட்டுவிட்டு மறுதினம் மீண்டும் தொடர்கிறார் கதாசிரியர்.

தன்பின் வீரத்தேவன் தன் காதலியைச் சந்திக்க வர, பவளவல்லி, தான் பொன்னம்பலத் தேவரின் பேத்தி என்பதால் இந்தக் காதல் நிலைக்காது என்று கண்ணீருடன் சொல்லவிட்டு ஓடி விடுகிறாள். அதற்குப் பதினைந்து தினங்கள் கழித்து இரவில் சில முரட்டு மனிதர்கள் எதிர்பாராதவிதமாக பொன்னம்பலத் தேவரைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பவளவல்லியைத் தூக்கிச் செல்கின்றனர். கண் விழிக்கும் பவளவல்லியை சந்திக்கும் மங்களாம்பிகை, அவள் கறுத்த நிறத்தை கேலி செய்துபேசி, அழவைத்து, தனக்குப் பணிப்பெண்ணாக இருக்கும்படி கூறுகிறாள். வீரத்தேவன் அவளிடம் ‘சிலகாலம் அம்மாவுக்கு பணிப்பெண்ணாக இருந்து அவள் மனம் மகிழச் செய்தால் உன்னை மன்னித்து நம் கல்யாணத்துக்கு சம்மதிப்பாக சொல்லியிருக்கிறாள், ஆகவே வேறு வழியில்லை’ என்று கடுமையாக சொல்லிச் செல்கிறான்.

மங்களாம்பிகைக்குப் பணிய மறுத்து கைதியாக பவளவல்லி படும் துன்பம் கண்டு பொறாமல், அவளுக்கு ரகசியமாக உதவ முன்வருகிறான் இருளப்பன். தன் நம்பிக்கைக்குரிய சேடிப் பெண் மூலம் இரவு அவளைத் தப்ப வைப்பதாக செய்தியனுப்புகிறான்.  இரவில் அந்தப் பணிப்பெண் வழிகாட்டி அழைத்துச் செல்ல, இருவரும் பதுங்கி தோட்டத்துக்கு வரகின்றனர். பின்கதவை நெருங்குவதற்குள் யாரோ நடந்து வரும் காலடி ஓசை‌ கேட்கவே இருளில் பதுங்குகின்றனர். முக்காடிட்டுக் கொண்டு ஒரு இருள் உருவம் வருவதைக் கண்டு மிரள்கின்றனர். அது முக்காட்டை நீக்க... அந்தக் கிழவி! அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் இடுப்பிலிருந்த துணிப்பையை எடுத்து அருகிலிருந்த திரைச்சீலை மடிப்பில் ஒளித்து வைத்துவிட்டு நிற்கிறாள். தோழிப் பெண் வந்து ராணி காத்திருக்கிறார்கள் என்று கூறி அவளை அழைத்துச் செல்ல, பவளவல்லி மெல்ல அந்த துணிப்பையை கைப்பற்றுகிறாள். அதற்குள் மங்களாம்பிகை, கிழவியுடன் உரத்த குரலில் பேசுவது கேட்கிறது. அவர்களிருவரும் பயந்து ஓடி ஓரிடத்தில் வெளியேற வழியின்றி கதவு பூட்டியிருப்பதைக் கண்டு மறைந்து கொள்கின்றனர்.

சத்தம் கேட்டு அங்கே வரும் மங்களாம்பிகை அவர்களைக கண்டுபிடிக்கவில்லை. பின்னாலேயே கிழவி வருகிறாள். இம்முறை அவளுக்கு பெரும்பணம் தந்து விட்டதால் ஓலையைத் தரும்படி மங்களாம்பிகை மிரட்ட, மலடியானவள் ஒரு மகனுக்குத் தாயாக வேண்டுமானால் கஷ்டங்களை அனுபவிக்கத்தான்வேண்டும் என்று சிரிக்கிறாள் கிழவி. ‘‘உனக்கு குழந்தை பிறக்காததால் வேறு கல்யாணம் செய்ய உன் கணவர் திட்டமிட்டிருந்தார். அப்படி நடந்திருந்தால் இரண்டாவது மனைவிக்கு பணிப்பெண்ணாய் இருந்திருப்பாய். மருத்துவச்சி நான் சூழ்ச்சி செய்து நீ கர்ப்பமாய் இருப்பதாக பொய் சொன்னேன்.திருட்டுத்தனமாக ஒரு குழந்தையைப் பெற்று உன் அறையில் ஒளித்துவைத்து அது உனக்குப் பிறந்தது என்று உறுதிப்படுத்தினேன். உண்மையில் குழந்தையைப் பெற்றவள் ஒரு ஓலையில் அதன் பூர்வோத்திரங்களை எழுதி அவன் வயது வந்ததும் கொடுக்கச் சொல்லிவிட்டு இறந்தாள். அந்த ஓலைக்கு நீ என்ன கொடுத்தாலும் தகும்’’ என்கிறாள். கிழவிக்கு இன்னும் பணம் தந்து ஓலையைத் தரச் சொல்ல, அவள் வைத்த இடத்தில் துழாவி ஓலை காணவில்லையன்று மிரள, கோபமிகுதியில் மங்களாம்பிகை கிழவியின் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறாள். பிணத்தை திரைச்சீ‌லையின் பின் மறைத்துவிட்டு அவள் செல்ல, பவளவல்லி அங்கிருந்து வெளியேறி, இருளப்பன் உதவியுடன் தப்புகிறாள்.

கொள்ளிடக்கரையில் அவளைச் சேர்த்த இருளப்பன், பரிசல் ஏற்பாடு செய்யச் செல்ல, ஆவல் தாங்காமல் அந்த ஓலையைப் பிரித்துப் படிக்கிறாள். அது புதிய கதை சொல்கிறது. ‘‘நான் கொள்ளிடக் கரையில் சில தினங்கள் முன்பு படுகொலை செய்யப்பட்ட பாண்டித்துரையின் பத்தினி பர்வதவர்த்தினி. நான் இனி பிழைப்பேன் என்று தோன்றவில்லை. எங்களுக்கு இந்த நிலை வரும்படி செய்த அந்தப் பாவிகளை என் மாமன் பழிவாங்குவார். ஆகவே, இதைப் படிக்கும் அன்பு சகோதரரே, என் மைந்தனையையும் இந்த ஓலையையும் என் மாமா பொன்னம்பலத் தேவரிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். அதற்கு பிரதியாக என் கைகளில் அணிந்திருக்கும் பச்சைக்கல் பதித்த கங்கணங்கள் இரண்டையும் பரிசளிக்கும்படி என்னைக் காத்த அம்மையாரிடம் சொல்லியிருக்கிறேன்.’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் உள்ள மற்றொரு ஓலையில் பொன்னம்பலத் தேவருக்கு அவள் எழுதிய கடிதம் இருக்கிறது. அதில் இந்த விஷஜுரத்தில் தான் பிழைக்க மாட்டேன் என்றும், தன் கணவரைக் கொன்றது சிவஞானத்‌ தேவரின் ஆட்கள் என்பதை அவர்கள் பேசியதைக் கேட்டதாகவும், அவரைப் பழிவாங்குமாறும், அவள் மகனின் மார்பில் பொற்காசு அளவில் மச்சமும், கால்களில் ஆறு விரலும் காணப்படுகின்றன என்று அடையாளங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

ஓலைகளைப் படித்து முடித்ததும் ஸ்தம்பித்துப் போகிறாள் பவளவல்லி. அதற்குள் சில ஆட்களுடன் வந்த வீரத்தேவன் அவளை எதுவும் பேச விடாமல் மீண்டும் கவர்ந்து செல்கிறான். அங்கே சென்றதும் பவளவல்லி தான் தப்புவதற்காக எதிரில் வந்த கிழவியைக் கொன்று விட்டு ஓடிவிட்டாள் என்று மங்களாம்பிகை குற்றம் சாட்ட, கோபத்தில் கொந்தளிக்கும் பவளவல்லி, வீரத்தேவனிடம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறாள். அதன் வீரியம் தாங்காமல் மயக்கமாகிறாள் மங்களாம்பிகை.

ங்கே கதையை நிறுத்திவிட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதால் இரண்டு தினங்கள் கழித்து நடிகை காமினியிடம் கதையைத் தொடந்து சொல்கிறார் கதாசிரியர்.

மூர்ச்சை தெளிந்ததும் ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு ‘தன் பரமவைரியின் மகனைத் தத்தெடுத்து வளர்த்து விட்டோமே’ என்ற அதிர்ச்சியைத் தாளாது, வைரமோதிரத்தைப் பொடி செய்து விழுங்கி உயிரை விடுகிறாள். இந்த உண்மைகளை ஜீரணிக்க இயலாமல் பல தினங்கள் அதிர்ச்சியுடன் திரியும் வீரத்தேவன், பின் மனம் தேறி, பவளவல்லியைத் திருமணம் செய்து கொண்டு தன் பாட்டனார் பொன்னம்மபலத் தேவரைச் சந்திக்கிறான். ‘‘என் குலக்கொழுந்தே! உன்னை யாரென்று தெரியாமல் வெறுத்தேனே!’’ என்று அவனைக் கட்டியணைக்கிறார் அவர்.

‘‘இதுதான் இந்த வீரத்தேவன் கோட்டையின் கதை’’ என்று முழுவதுமாகச் சொல்லி முடிக்கிறார் கதாசிரியர். அன்றுடன் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிவதனால் அனைவரும் புறப்படுகின்றனர்.

....என்னங்க... பேக்கேஜ் டூர் மாதிரி சுருக்கமா கதையைப் படிச்சுட்டீங்க. பிடிச்சிருந்ததா? முழுசாப் படிக்கணும்னு தோணிச்சுன்னா... உடனே லைப்ரரிக்கு ஓடுங்க. எந்த மாதிரி சுவாரஸ்யமான இடங்கள்ல லக்ஷ்மியம்மா கதாசிரியர் மூலமா ப்ரேக் விட்டுட்டு, நம்ம படபடப்பை கூட்டிட்டு அப்புறம் தொடர்ந்திருக்காங்கன்றதை கவனிச்சீங்களா? நல்ல யுத்தியா இருக்கில்ல..!  லக்ஷ்மியம்மாவின் வித்தியாசமான இந்தக் கதையைத் தந்ததுபோல அவர் எழுதிய அருமையான குடும்பக் கதைகளில் ஒன்று இன்னொரு கேப்ஸ்யூலாக பின்னர் தருகிறேன்.

Wednesday, January 2, 2013

இனி இல்லை இடைவேளை!

Posted by பால கணேஷ் Wednesday, January 02, 2013
ஹாய்... ஹாய்... ஹாய்...!

அனைவரும நலம்தானே...! பிறந்திருக்கற இந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய வெற்றிகளையும் முழுக்க முழுக்க சந்தோஷங்களையும் நிரப்பினதா அமையட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன். நேற்றைய தினம் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. பதிப்பக நிறுவனத்துல ‌பணிக்குச் சேர்ந்ததால புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நிறையப் புத்தகங்களைத் தயாரிக்கும் பொருட்டு இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியதாய் அமைந்தது சென்ற மாதம். எல்லாத்தையும் முடிச்சிட்டு இதோ மீண்டும் வந்துட்டேன். இனி முன்போல் ஒரு தினம் விட்டு ஒரு தினம் தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம். அவனியிற் சிறக்க தேவி பராசக்தி அருள் புரிவாளாகுக! (பாரதியார் கவிதைகள் படிச்சு, வொர்க் பண்ணினதோட பாதிப்பு. ஹி... ஹி...)

ஜனவரி மாதம் பிறந்தது என்றாலே திருவிழா மயம்தான். பொங்கல் திருவிழா ஒன்றாலேயே இந்த மாதம் களைகட்டி விடும் அனைவருக்கும். சென்னைவாசிகளுக்கோ அத்துடன் புத்தகத் திருவிழாவும் சேர்ந்து கொள்வதால் டபுள் தமாக்காதான். இம்மாதம் 11 ம் தேதி முதல் 23ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ கிரவுண்டில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த வருஷ புத்தகக் கண்காட்சி எனக்கு மிகமிக விசேஷமானது.

காரணம் 1 : சிங்கப்பூரில் வசிக்கும் தம்பி சத்ரியன் எழுதிய ‘கண் கொத்திப் பறவை’ மற்றும் நண்பர் சி.கருணாகரசு எழுதிய ‘நீ வைத்த மருதாணி’ ஆகிய கவிதைப் புத்தகங்களை நான் வடிவமைத்து இருக்கிறேன். ‘கண்கொத்திப் பறவை’ - கவிதைகளைப் படித்தால் உங்கள் மனங்களைக் கொத்திச் சென்று விடுவார் கவிஞர் சத்ரியன். ‘நீ வைத்த மருதாணி’ - அவள் வைத்த மருதாணி சில தினங்களில் கலைந்து விடும். கருணாகரசுவி்ன் கவிதைகள் மருதாணியாக உங்கள் மனங்களில் ஒட்டிக் கொண்டு கலையவே கலையாது. அத்தனை அழுத்தமான கவிதைகள் இவர்கள் இருவருடையதும். உள்ளடக்கத்திலும் சொல்லாடலிலும் அழகான இவர்களின் கவிதைகளை வடிவமைப்பால் மேலும் அழகாக்க நான் முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதை நீங்கள் அவசியம் படித்துவிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்கள் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும்.

காரணம் 2 : நான் எழுதிய ‘சரிதா’ கதைகள் மற்றும் சிரித்திரபுரம் ஆகியவை சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தப் புத்தகமும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் சில ஸ்டால்களிலும் கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். ஸ்டால் நம்பர்கள் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விளக்கமாய் தெரிவிக்க(விளம்பரப்படுத்த?)ப்படும். தமிழில் வெளியான மிகச் சிறந்த நகைச்சுவை(!)ப் புத்தகங்களில் ஒன்றான(?) இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கிப் படித்து சிரிக்க (முயற்சிக்க) வேண்டும் என்பது என் வேண்டுகோள் மற்றும் ஆலோசனை. ஹி... ஹி...

அப்புறம்... தமிழனாய்ப் பிறந்தவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தகங்கள் என்று நான் மதிக்கும் ‘பாரதியார் கவிதைகள்’ மற்றும் மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ ஆகிய இரண்டும் விகடன் வெளியீடாக வருகின்றன. ‘கோச்சடையான்’ என்ற மன்னின் வாழ்க்கையை கெளதம நீலாம்பரன் அழகாக எழுதியது குமுதம் வெளியீடாக வருகிறது. இவற்றை வாங்கிப் படிக்கலாம் என்று ‘டிக்’ அடித்து வைத்திருக்கிறேன். மற்ற நல்ல புத்தகங்களின் வருகையைப் பற்றி முதல்தினம் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வந்து எழுதுவதாக ஒரு உத்தேசம் இருக்கிறது.

‌வேறென்ன... இந்தியத் தலைநகரில் 6 மிருகங்களால் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியனாய்ப் பிறந்தமைக்காய் நம்மைத் தலைகுனிய வைத்தன என்றே சொல்ல வேண்டும். இதனால் நிகழ்ந்த போராட்டங்களும், அபத்தமாய் அரசியல் புள்ளிகள் உதிர்த்த கருத்துக்களும், ‘எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவது பெண்கள் சுதந்திரம்’ என்று பெண்கள் அமைப்புகள் உயர்த்திய புரட்சி(?)க் கொடியும் அந்தப் பெண்ணின் இறப்பும் நீஙகள் அறிந்ததே. இந்த விஷயத்தில் தவறு இரவில் தனியாக வந்த அந்தப் பெண்ணின் மீதோ, அந்த இளைஞர்களின் குடியின் மீதோ,அல்ல... பெண்மையை மதிக்கக் கற்றுத் தராமல் அவர்களை மிருகங்களாக வளர்த்த‌ பெற்றோர் மற்றும் ஆசிரியர்களைச் சார்ந்தது என்று நான் நினைக்கிறேன்.

நேற்றைய தினம் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து வந்தது. மிகச் சரியாக ஒன்றாம் தேதி கைக்குக் கிடைக்கும் வண்ணம் நம் தபால் துறையின் வேகத்தை(!)க் கணக்கிட்டு அனுப்பிய அவரின் திட்டமிடலை வியந்து கொண்டே பிரித்துப் பார்த்தேன். என் மன ஓட்டத்துக்கு ஏற்ப அவர் அழகாய் வடிவமைத்து வெளிப்படுத்தியிருந்தார். அதை இங்கே மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ரைட்டு... ஒரு புதிய, வித்தியாசமான கேப்ஸ்யூல் நாவலோட உங்களை வெள்ளிக்கிழமை சந்திக்கறேன். ஸீ யு.

Sunday, December 2, 2012

நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்

Posted by பால கணேஷ் Sunday, December 02, 2012

அன்பார்ந்த நண்பர்களே...

தீபஒளித் திருநாள் முடிந்ததும் 3 தினங்கள் கோவை சுற்றுப்பயணம் சென்று வந்தேன். வந்ததும் புதிய வேலை கிடைத்து அலுவலகம் மாறினேன். புதிய அலுகலகத்தில் இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி எனக்கு மிகமிகக் கடினமாக இருக்கிறது. இதுநாள் வரை அலுகலகத்திலிருந்து கொண்டுதான் இணையத்தில் உலாவி வந்ததால் கடந்த 15 தினங்களாக இணையத்திற்கு அன்னியன் ஆக்கப்பட்டேன். வீட்டில் இணைய இணைப்பு பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் அம்பியாகவோ ரெமோவாகவோ வந்து விடுவேன் என்ற (எனக்கு) மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவை வெளியிட்ட தங்கைக்கு என் நன்றி.

                                       
                                                           

தமிழ் சினிமா தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ காமெடியன்களைப் பார்த்திருப்பீர்கள். ரசித்துச் சிரித்திருப்பீர்கள். நானும் அப்படியே. ஆனால் காமெடியன்களை விட சில கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகள் காமெடியன்களை மிஞ்சி விடுவதுண்டு. என்னை மிகவும் ரசித்துச் சிரிக்க வைத்ததுண்டு. அப்படி இரண்டு கதாநாயகர்கள் நடித்த காமெடிக் காட்சிகளைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.


செங்கோட்டை என்று ஒரு படம். ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் கதாநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் குரூப் அடியாட்கள் அவர் மனைவி மீனாவையும் அப்பா விஜயகுமாரையும் தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு ஒரு அடியாளுடன் அவரை ப்ளைட்டில் போகச் சொல்வார்கள். விமானம் கிளம்பிய பின் அவர் அடியாளின் கழுத்தில் அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு விமானத்தின் டாய்லெட்டைத் தாண்டி பின்னால் வந்து டயர் வழியாக வங்கக் கடலில் குதிப்பார். பொதுவாக விமானம் ஆகாயத்தில் ஏறியதுமே மூடிக் கொள்ளும் டயர் அர்ஜுனுக்கு வசதியாக மீனம்பாக்கத்திலிருந்து வங்கக் கடலை அடையும் வரை அரை மணி நேரமாகியும் மேலே ஏறாமலேயே பறந்து கொண்டிருக்கும். ஹா... ஹா... சூப்பர் காமெடி என்கிறீர்களா... இல்லை, இனிதான் காமெடியே...


கடலில் குதித்த அவர் நீந்திக் கரையேறி, தன் வீட்டிற்கு வந்து வில்லன் அடியாட்களை வீழ்த்திவிட்டு பிரதமரைக் கொல்ல நடக்கும் சதியைத் தடுக்க செங்கோட்டைக்கு வருவார். சுதந்திர தின விழா நடந்து கொண்டிருக்க, பிரதமரைக் கொல்ல வரும் கொலையாளியை அவர் தேடுவார். கொலையாளி நாம் யாருமே எதிர்பாராத வண்ணம் மேலே பறந்து கொண்டிருக்கும் பெரிய ஹீலியம் பலூனுக்குள் இருப்பான். அவனுக்கு பலூனுக்குள் சுவாசிக்க ஏதய்யா ஆக்சிஜன், ஹீலியம் வாயுவை சுவாசிக்க முடியாதே என்று யாராவது கேட்டீங்களோ... கொன்டேபுட்டேன்!


அது மட்டுமா... பலூனுக்குள்ளிருந்து ஏதோ பால்கனிக் கதவைத் திறந்து நாம் வேடிக்கை பார்ப்பது மாதிரி ஒரு கதவைத் திறந்து பிரதமரைக் குறி பார்ப்பான். பலூனிலிருக்கும் காற்றெல்லாம் வெளியேறி விட்டால் அது எப்படிப் பறக்கும் என்று பகுத்தறிவுக் கேள்வி யாராவது கேட்டீங்களோ... சரி, அவன்தான் அப்படியென்றால் நம்ம ஆக்ஷன் கிங் சும்மா இருப்பாரா... நிழலில் இருந்தே கொலையாளி பலூனில் இருப்பதைக் கண்டுபிடித்து அப்படியே மல்லாக்கப் படுத்து சுடுவார். பலூன் வெடித்து கொலையாளியும் பரலோகத்துக்கு பார்சல்.


அவ்வளவுதான்... அங்கே இருக்கும், கொலையாளியை ஏவிய மெயின் வில்லன் பிரதமரைச் சுடுவார். துப்பாக்கிக் குண்டு ஸ்லோமோஷனில் வந்து கொண்டிருக்க, அதை குறுக்கிட்டு நம்ம ஆக்ஷன் கிங் தோளில் வாங்கிக் கொள்வார். வில்லனின் அடுத்த குண்டு தேசியக் கொடிக் கம்பத்தை சாய்க்க, அர்ஜுன் இன்னொரு குண்‌டை ஏற்றுக் கொண்டு கொடியைத் தாங்கிப் பிடிப்பார். (தேசபக்தி சார்!) பாதுகாப்புப் படை வீரர்கள் பிரதமரை பாதுகாப்பாக இதற்குள் கூட்டிப் போக மற்ற வீரர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் வில்லனை அழித்து விட்டால் ஆக்ஷன் கிங்குக்கு என்ன மதிப்பு? அத்தனைக்கும் பின்னால் அவரே வில்லனுடன் மோதி சம்ஹாரம் பண்ணுவார்.


அடாடா... அந்தப் படத்தின் கடைசி அரை மணி‌ நேரத்தில் சிரித்துச் சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது.  இதை மிஞ்சுகிற மாதிரி காமெடி வேறு எந்தப் படத்திலும் வராது என்றுதான் எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டார் ஆர்.சுந்தரராஜன்.


நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தூக்கு மேடைக்கே கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரம் கட் ஷாட்டில் இன்னொரு ரஜினிகாந்த் இவரைக் காப்பாற்ற ஒரு அம்பாஸடர் காரில் வந்து கொண்டிருப்பதைக் காட்டுவார்கள். இங்கே இவர் கழுத்தில் கறுப்புத் துணி கூட மாட்டி விடுவார்கள். அவர் பரபரப்பாக அதிவேகத்தில் காரில் வந்து கொண்டிருப்பார். லீவரை இழுக்க சைகை காட்டும் நேரம்... ஜெயிலின் கருங்கல் சுவரை அம்பாஸிடர் காரினால(?) இடித்து தூளாக்கிக் கொண்டு அதகளமாக வருவார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா...


அது மட்டும் காமெடியில்லை... வந்தவர் நேராக அங்கிருக்கும் அதிகாரிகளிடம் வந்து, ‘‘இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்.


அட, ஞானசூனியங்களா... தூக்கு மேடைக்குப் போய்விட்ட ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜனாதிபதியிடமிருந்து போனோ கடிதமோ வந்தால்தானே முடியும், ஆடியோ கேஸட்டை ஒரு ஆதாரமாக எந்த நீதிபதியும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே... என்றெல்லாம் யாரும் கேட்டுவிடக் கூடாது.


 ரஜினி மற்றொரு ரஜினியின் கழுத்தில் இருக்கும் கறுப்புத் துணியை எடுக்க, அவர் கூலாக, ‘‘நீ எப்படியும் வருவேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, நான் தப்பே பண்ணலையே’’ என்க இருவரும் சிரிப்பதைப் பார்த்துக் கை தட்டி ரசிக்க வேண்டும். அப்படி ரசித்துத் தான் ‘ராஜாதி ராஜா’ படத்தை 200 நாட்கள் ஓட வைத்தனர் நம் ரசிகர்கள். இந்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்க்கும் போதெல்லாம் என்னை ரசித்துச் சிரிக்க வைக்கிறது.


‘போய்யாங்க... இதென்ன ஜுஜுபி! இதைப் போய் பெரிசா காமெடின்னு சொல்ல வந்துட்டே... இதைவிடப் பெரிய காமெடில்லாம் நாங்க பார்த்திருக்கோம்’ என்கிறீர்களா? சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன். பார்த்து ரசிக்கிறேன்.



Monday, November 12, 2012

சரிதாவின் ‘இலவச’ தீபாவளி!

Posted by பால கணேஷ் Monday, November 12, 2012

விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள்; இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்- கணவர்களை வேலை வாங்குவதில்!

‘காலைல பத்து மணி வரைக்கும் குளிக்காம அப்படி என்னதான் டி.வி. பார்த்தாகறதோ?’ ‘இப்படி ஒரு எழுத்து விடாம பேப்பர் படிக்கற நேரத்துல உருப்படியா வீட்டுக்கு ஒட்டடை அடிச்சாத்தான் என்னவாம்?’ -இப்படியெல்லாம் கேள்விப் பந்துகள் பவுன்ஸாகி கணவர்கள் முகத்தில் வந்து மோதும். இவையெல்லாம் சராசரி மனைவிகளுக்கான லட்சணங்கள் என்றால் சரிதா அதற்கும் ஒருபடி மேலாச்சே.. அவள் பற்றாதென்று தீபாவளி சமயத்தில் மகளைப் பார்க்க வந்த அவள் அம்மாவும் சேர்ந்து கொண்டதில்... நான் ‘‌‌ஙே’ ஆனேன்.

‘‘என்னங்க.. இந்த முறை தீபாவளிக்கு ஸ்வீட்டும் காரமும் எங்கம்மாவே பண்ணிடறேங்கறாங்க. உடனே போய் அவங்க எழுதற லிஸ்ட் படி மளிகை சாமான்லாம் வாங்கிட்டு வந்துடுங்க...’’ என்று அருகில் வந்து ஐஸ் குரலில் சொன்னாள் சரிதா. கணினியில் கதை ஒன்றை டைப் செய்து ‌கொண்டிருந்த நான் ‘திடுக்’ வாங்கி நிமிர்ந்தேன்.

‘‘ஹய்யய்யோ... சமைக்கற விஷயத்துல நீயே நல்லாப் பண்ணுவ. உங்கம்மா பண்ணினா டேஞ்சராச்சே! தலைதீபாவளி சமயத்துலயே உங்க வீட்டுக்குப் போனப்ப உங்கம்மா பண்ணின ஹல்வாவை வாயில போட்டதுல நாக்கே மேலண்ணத்துல ஒட்டிக்கிட்டு ‘ழே ழே’ன்னுல்ல உளற வேண்டியதாய்டுச்சு. நல்லவேளையா... காராபூந்தில ஆந்திரா ஸ்டைலயும் தாண்டி ஆங்காரமா காரம் போட்டிருந்ததால‘ ‘ஹா ஹா’ன்னு அலறி எட்டு டம்ளர் தண்ணி குடிச்சதுல நாக்கு சரியாச்சு. அதனால பிழைச்சேன். இப்ப இந்த ரிஸ்க் தேவைதானா சரி?’’ என்று மெல்லிய குரலில் கேட்டேன்.

‘‘பேசாதீங்க! அம்மா எவ்வளவு ஆசையா மாப்ளைக்கும் உனக்கும் நான் பண்ணித் தர்றேன்னு சொல்றாங்க. உங்களுக்கு எப்பவுமே எங்கம்மான்னா தொக்குதான். உங்க தங்கை வீட்லருந்து வந்த ஸ்வீட், காரத்தோட லட்சணத்தை நான் தனியாச் சொல்லணுமா என்ன...? அந்த மைசூர் பாக்குல...’’

‘‘சரி சரி... நான் கடைக்கு உடனே போறேன் சரி, லிஸ்ட்டைக் ‌குடு...’’ என்று நான் எழுந்த நேரம் பார்த்துத்தானா கரண்ட் கட்டாக வேண்டும்? கும்மிருட்டு. தடுமாறியபடி என் செல்போனைத் தேடி நான் நடந்த நேரம், சரிதாவும் மெழுகுவர்த்தியைத் தேடி கைகளை நீட்டியபடி நடந்திருக்கிறாள் போலிருக்கிறது...அவளின் விரல் என் கண்ணில் பட்டு விட்டது. (நல்லவேளை... நகம் வளர்க்கும் பழக்கம் அவளுக்கில்லை).

‘‘ஆ...! என் கண்ணு! என் கண்ணு!’’ என்று புலம்பியபடி நான் கண்ணைப் பிடித்துக் கொள்ள... ‘‘போங்க மாப்ளை! நான் இருக்கும் போதே இப்படி என் மகளைக் கொஞ்சறீங்களே, எனக்கு வெக்கமா இருக்கு...’’ என்று குரல் கொடுத்தார் என் மாமியார் சமையல்கட்டிலிருந்து.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டு குத்துமதிப்பாக ஹால் அலமாரியை அடைந்து துழாவினேன். செல் அகப்பட்டது. டார்ச்சைப் போட்டேன்.

ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து அலமாரிக் கதவு என்று நினைத்து உள்ளே துழாவிக் கொண்டிருந்த சரிதா ‘‌ஙே’ என்று விழித்தாள் அவசரமாக அதன் கதவை மூடிவிட்டு வந்து அலமாரியிலிருந்து மெழுகுவர்த்திகளை எடுத்து ஏற்றினாள்.

காய்கறிகள் வாங்குவதைப் போலவே வீட்டுக்கு மளிகை சாமான்கள் சரியாக வாங்கி வருவதும் ஒரு கலைதான். எனக்கு அதில் சாமர்த்தியம் போறாது என்பது சரிதாவின் கணிப்பு. (எதில்தான் இருக்கிறதென்று ஒப்புக் கொண்டிருக்கிறாள்?) அவள் சொன்னபடி நான் வாங்கி வந்த மளிகை சாமான்களின் பேக்கிங்குகளைப் பிரித்தபடி கமெண்ட் அம்புகளை வீசிக் கொண்டிருந்தாள்.

‘‘நான் என்ன வாங்கறேன், என்ன பண்றேன்னு ஒரு தடவையாவது சமையல்கட்டுப் பக்கம் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்... மிளகாய்ன்னு எழுதினா நீள மிளகாய் வாங்காம இப்படி குண்டு மிளகா வாங்கிட்டு வந்துட்டீங்களே.... இதை வெச்சு எப்படிச் சமைக்கிறதாம்? ’’

‘‘சரி, அடுத்த தடவை மிளகாய் வாங்கணும்னா உன்னைப் போல இருக்கக் கூடாதுன்றதை மனசுல வெச்சுக்கறேன்....’’ என்று சொல்லிவிட்டு உடனே குனிந்தேன். என் தலைக்கு மேல் பறந்த டம்ளர் சுவரில் மோதி விழுந்தது. ஹ! எந்த வார்த்தைக்கு என்ன ரியாக்ஷன் வரும்னு நமக்குல்லாம் அத்துப்படில்ல!

“என்னங்க இது...?” என்று கையில் எடுத்துக் காட்டினாள். “அதுவா...? குளியல் சோப்பு. அதுக்கென்ன..?” என்றேன்.

”நான் தேய்ச்சுக் குளிக்கற சோப் பிராண்ட் ------ தானே? இதை ஏன வாங்கினீங்க?” என்றாள் கோபமாக,

“அதுவா..? அதுல லெமன் ப்ளேவர் இல்லன்னான். அதான் சாதா வாங்கிட்டேன். ஒரே கம்பெனி தானே. விடு...” என்றேன்.

“என்னங்க இது.... இவ்வளவு அஸால்ட்டா சொல்றீங்க? நான் அந்த சோப்பைத்தான் ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்சுட்டிருக்கேன, தெரியுமா?” என்றாள் கோபமாக,

“எனக்குல்லாம் ஒரு சோப்பு ஒரு மாசம்தான்டி வருது. நீ எப்படி அதே சோப்பை ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்ச?” என்று அப்பாவியாக (முகத்தை வைத்துக் கொண்டு) கேட்டேன்.

உக்ரமானாள் சரிதா. “மாத்தி வாங்கறதையும் வாங்கிட்டு நக்கலா உங்களுக்கு? முதல்ல போய் இந்த ரெண்டு ஐட்டத்தையும் மாத்திட்டு வாங்க....” என்று அவள் கத்த. (வேறு வழியின்றி) மீண்டும் கடைக்குக் கிளம்பினேன் நான்.

மீண்டும் நான் வீடு திரும்பியபோது சரிதா வாசலிலேயே நின்று ஆர்வமாக என்னை எதிர்கொண்டாள். ‘‘என்னங்க... என் தம்பி போன் பண்ணினான். தீபாவளி முடிஞ்ச கையோட அவன் வைஃப் வீட்ல காசி டூர் போகப் போறாங்களாம். அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்னு உடனே அனுப்பி வெக்கச் சொன்னான்’’ என்றாள்.

‘ஹையா... மாமியாரின் பலகாரத் தொல்லையிலருந்து தப்பிச்சுட்டோம்’ என்று நிம்மதி முகத்தில் படர, ‘‘இன்னிக்கு கெளம்பறதுக்கு பஸ், டிரெய்ன் எல்லாம் ஃபுல்லாயிருக்குமே சரிதா. ட்ரை பண்ணிப் பாக்கறேன்...’’ என்றேன். ‘‘வேண்டாங்க. நீங்க அம்மாவுக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க...’’ என்றாள். பகீரென்றது எனக்கு. ‘‘அடியேய்... சென்னைலருந்து மதுரைக்கு ப்ளைட் டிக்கெட் என்ன செலவாகும் தெரியுமா? தீபாவளி போனஸ்ல கிரைண்டர் வாங்கணும்னு சொல்லிட்டிருந்தியே... அது பணால்தான்!’’ என்றேன்.

‘‘அதான் இல்ல... கிரைண்டர் கம்பெனில அதோட விலை அளவுக்கு ஏர் டிக்கெட்ல தள்ளுபடி தர்றாங்க. நமக்கு அந்தப் பொருள் இலவசமா கிடைச்ச மாதிரி ஆச்சு, ப்ளைட் டிக்கெட்டுக்கும் பாதி செலவுதானே ஆகும்னு எங்கம்மாதான் ஐடியா கொடுத்தாங்க...’’ என்றாள். ‘‘நாசமாப் போச்சு. பிஸினஸ் ட்ரிக் புரியாம பேசறியே... நான் இப்ப கிரைண்டருக்கும் செலவு பண்ணி, ப்ளைட் டிக்கெட்டுக்கும் செலவு பண்ணியாகணும்...’’ என்றேன் கோபமாக.

என் மாமியார், ‘‘சரி விடுடி சரிதா. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான். ஒவ்வொருத்தர் மனைவியைச் சேர்ந்தவங்கன்னா எப்படித் தாங்கறாங்க தெரியுமா? நம்ம மூணாவது வீட்டு முரளி இருக்கானே....’’ என்று எடுத்துக் கொடுக்க, ‘‘ஆமாம்மா. இவருக்கு இவங்கம்மாவுக்குச் செய்யறதுன்னா மலை ‌போனாலும் தெரியாது. நமக்குன்னா இலை போறதும் தெரிஞ்சிடும்...’’ என்று ஆலாபனை செய்து பெண்களின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை (கண்ணீர்) என்மீது பிரயோகித்தாள்.

‘இந்த ஆஃபர் குடுக்கற கம்பெனிக்காரன் மட்டும் கைல கிடைச்சான்...’ என்று மனதினுள் சபித்தபடி, வழக்கம் போல் பின்வாங்கி, ‘‘சரி... சரி... உடனே அரேன்ஜ் பண்ணிடறேன் சரி...’’ என்றேன். மாமியார் சமையலறையினுள் போய்விட, சரிதா அருகில் வந்து, ‘‘டோண்ட் வொர்ரி. இந்த முறை டபிள் ஸ்வீட் பண்ணி அசத்திடறேன்...’’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தாள்.

‘அதெப்படித்தான் ஒரே நிமிடத்தில் சிரிக்கவும் அடுத்த நிமிடத்தில் அழவும் இவர்களால் முடிகிறதோ?’ என்று எப்போதும் தோன்றும் வியப்போடு அவளிடம் சொன்னேன். ‘‘சரி... என் பக்கத்துல வந்து நின்னுட்டு, நான் சொல்றதைத் திருப்பிச் சொல்லு...’’ என்றேன்.

‘‘என்னங்க?’’ என்று அருகில் வந்து நின்றாள். ‘‘‌வாசிக்கும் அனைவருக்கும்...’’ என்று நான் சொல்ல... ‘‘புரிஞ்சு போச். நான் திருப்பிச் சொல்ல வேணாம். உங்களோட சேர்ந்து ஒரே குரல் சொல்லிடறேன்...’’ என்று விட்டு உற்சாகமாக ‘‘ஒன் டூ த்ரீ’’ என்று எடுத்துக் கொடுத்தாள்.

                         ‘‘வாசிக்கும் அனைவருக்கும் நேசமுடன் எங்களின்
                          இதயம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!’’




  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube