Monday, June 22, 2015

ந்நாளில் வாழ்ந்த மன்னர்கள், வருங்காலச் சந்ததியினர் தங்களின் சாதனைகளையும் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தொலைநோக்குடன் ஆலயங்களின் சுவர்களிலும் கல்வெட்டுகளிலும் தங்கள் ஆட்சியின் சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பொறித்து வைத்தார்கள். அத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் மன்னர்கள் வாழ்ந்த காலம், நிகழ்வுகள் முதலியவை சரித்திர ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகத் திகழ்ந்து வருகின்றன.

பின்னாளில் சரித்திரக் கதைகள் என்கிற ஒரு பிரிவு தமிழ்ப் படைப்புகளில் ஏற்பட்டபோது இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் கதாசிரியர்கள் தங்கள் கற்பனைக் குதிரையை ஓட்டி, சுவையான பல கதைகளைப் படைத்தார்கள். கரிகாலன் தன்னைவிடப் பெரிய படை வலிமையைக் கொண்டிருந்த சேர, பாண்டிய, வேளிர் மன்னர்களை வென்றான் என்பது சரித்திரத்தில் கூறப்பட்ட உண்மை. அதை அவன் எப்படிச் சாதித்திருப்பான் என்று எழுதியது நாவலாசிரியரின் கற்பனை. சரித்திர ஆதாரங்கள் என அந்த நாவலாசிரியர்கள் குறிப்பிடுவது தங்கள் கதைக்கு வலு சேர்க்கத்தானே தவிர, எந்த நாவலாசிரியரும் கரிகாலனுடனோ, பாண்டியன் நெடுஞ்செழியனுடனோ வாழ்ந்தவர்கள் அல்லர். எனவே சரித்திரக் கதைகள் அனைத்தையும் உண்மையின் பேஸ்மெண்டில் எழுந்த கற்பனைக் கதைகள் என்று கொள்வதே சாலச் சிறந்தது. பக்கத்துக்குப் பக்கம் ஆதாரங்கள் தராவிட்டால் சரித்திரக் கதையல்ல என்பது சரியல்ல.

ப்போது இதைச் சொல்லக் காரணம்.. சமீபத்தில் வெளியான ‘காலச்சக்கரம் நரசிம்மா’ எழுதிய ‘பஞ்சநாராயண(க்) கோட்டம்’ என்கிற நாவலைப் படிக்க நேர்ந்ததுதான். ஹொய்சள சரித்திர ஏடுகள், இராமானுஜரின் வாழ்க்கைச் சரிதம், சமண மத நூல்கள், சோழர்களின் சரித்திரம், பஞ்சநாராயண தல புராணங்கள், பெங்களூரு அருங்காட்சியக செப்பேடுகள் என்று பலவற்றைத் தேடி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாரே தவிர, பக்கத்துக்கு பக்கம் அடிக்குறிப்பாக கல்வெட்டுத் தகவல்கள் கொடுத்து, படுத்தவில்லை.

யதிராஜர் இராமானுஜர் திருஅவதாரம் செய்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்ற இவ்வேளையில் அவர் இக்கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவது சிறப்பு. பேளூர் மற்றும் ஹளபேடு ஆலயங்களில் செதுக்கப்பட்டுள்ள  சிற்ப அதிசயங்களை எழுத்தாளர் நரசிம்மா ரசித்துப் பார்த்தபோது அங்கே இருந்த நான்கு சிற்பங்கள் மற்றவற்றில் இருந்து வேறுபட்டு இருப்பது அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தச் சிற்பங்கள் ஆலயத்தில் எதற்கு வைக்கப்பட்டன? இவை எதுவும் செய்தியைத் தெரிவிக்கின்றனவா, எனில் யாருக்காயிருக்கும்..? கோட்டத்தை எழுப்பிய பிட்டிதேவனுக்காக இருக்குமோ? எனில் சிலைகளைச் செய்து வைத்தது யார்? இப்படியான… இன்னும் பல கேள்விகள் அவருக்குள் எழும்பியிருக்க வேண்டும். தன் கற்பனைத் திறத்தால் ஹொய்சாளர் காலத்து நாவலாக இதைப் படைத்து அந்தச் சிற்பங்களுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்துள்ளார்.

ஹொய்சள மன்னன் பிட்டிதேவன் ஒரு வைணவப் பெண்ணை விரும்புகிறான். அவன் அன்னை அவனுக்காக ஒரு சமணப் பெண்ணைப் பார்க்கிறாள். இருவரையும் மணக்கிறான் பிட்டிதேவன். அவன் பிரியத்துக்குரிய வைணவ அரசி முதலில் கருவுற்றுவிட, வைணவம் ஓங்குவதா என்று சமணம் பொறும, சதிகள் நடக்கின்றன. அவற்றின் விளைவுகள் என்ன, அந்த வைணவ அரசி பெற்ற பிள்ளை என்னவானது, மன்னன் பிட்டிதேவன் எத்தகைய தருணத்தில் சமண சமயத்தில் இருந்து இராமானுஜரால் ஆட்கொள்ளப்பட்டு வைணவனாக (விஷ்ணுவர்த்தனன்) மாறினான் ஆகியவற்றையும், இராமானுஜரின் விருப்பப்படி ஐந்து நாராயணர் ஆலயங்களை எழுப்ப விஷ்ணுவர்த்தனன் ஆணையிடுவதும், (நம்பி நாராயணம் –தொண்டனூர், கீர்த்தி நாராயணம் – தலக்காடு, செல்வ நாராயணம் – மேல்கோட்டை, விஜயநாராயணம் – வேளாபுரி(எ) பேலூர், வீரநாராயணம் – கதக்(வடகர்நாடகா) அந்த ஆலயப் பணி நிறைவேறக் கூடாது என்பதற்கான சதிகள், இடைஞ்சல்கள் ஆகியவற்றையும் அவற்றைத் தாண்டி எப்படி ஆலயம் எழும்பியது என்பதையும் விவரிக்கிறது ‘பஞ்சநாராயணக் கோட்டம்’ நாவல். ஆலயங்களின் காலம் கி.பி.1102 – 1140.

சரித்திர நாவலை எளிமையான நடையில் ஒரு துப்பறியும் நாவலுக்கு ஈடான விறுவிறுப்புடன் தர முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் நரசிம்மா. •வைணவ அரசி லட்சுமிப்பிரபாவிற்குப் பிறந்த குழந்தை என்னவானது? •பிட்டிதேவனின் மகளைப் பிடித்த பிரம்ம ராட்சஸி யார்? •அந்த பிரம்ம ராட்சஸியின் நோக்கம்தான் என்ன? •பிட்டிதேவன் ஏன் விஷ்ணுவர்த்தனனாக மாறினான்? •இளவரசி வகுளாதேவி சிற்பங்களின் மூலம் தன் தந்தைக்குத் தெரிவித்த செய்தி என்ன? இப்படி அடுத்தடுத்து பல முடிச்சுகளை இடுவதும், ஒரு முடிச்சு அவிழும் தருணத்தில் அடுத்த முடிச்சுக்கான இறுக்கத்தைப் போடுவதுமான அவர் எழுத்து 720 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் கீழே வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

நிகழ்காலச் சம்பவங்களில் துவங்கி, சரித்திரத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு கோட்டம் பற்றிய கதை முடிந்ததும் நிகழ்காலத்துக்கு மீண்டும் வந்து, பின் மீண்டும் சரித்திரத்தினுள் செல்வது என்று நூலாசிரியர் கையாண்டுள்ள உத்தி வெகு அழகு. நாவலின் விறுவிறுப்புக்குத் துணை நிற்கிறது. சிரவணபெலகோலா கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி கதாசிரியர் அமைத்திருக்கும் பிட்டிதேவனின் (சமண) பட்டத்தரசி ஷாந்தலாவின் பாத்திரப் படைப்பு பிரமாதம். அதேபோல் நபும்சகி(அரவாணி)யான இந்திரசேனாவின் கதாபாத்திரமும் மனதில் நிற்கும். இந்தக் கோட்டங்களை எழுப்பிய சிற்பி ஜெக்கன்னாவின் கதையும் ரசிக்க வைக்கிறது. ‘முருக்கல் அல்லது முருங்கல்’ என்றொரு வார்த்தையை சங்கத்தாராவில் பிடித்து அசத்தியது போல ‘கப்பைக்கு கராவெந்தரே நாரிகே சிரவல்லவே?’ என்றொரு வார்த்தையில் இந்த நாவலையும் பொதித்திருப்பது ரசனைக்கு உத்தரவாதம்.

நாவலைப் படிக்கையில் எனக்குள் இரண்டு நெருடல்கள் எழுந்தன. ஒன்று இத்தனை சதிகளை அறிந்தும் ஏன் ஷாந்தலாவையே தன் பட்டத்தரசியாக பிட்டிதேவன் வைத்திருந்தான் என்பது. அதற்கு நாவலின் இறுதியில் விடை கிடைத்து விட்டது. மற்றொரு நெருடல் கதையின் முன்னுரையில் சரித்திரக் கதைக்கான நடை என்று நல்ல தமிழில் நீளநீள வாக்கியங்கள் எழுதுவதைக் குறிப்பிட்டு எழுதி, தான் அப்படி எழுதுபவனல்ல என நரசிம்மா சொல்லியிருப்பது.

நீளநீள வாக்கியங்களை சாண்டில்யன் அமைத்த காலத்தில்தான் எளிமையான சிறு வாக்கியங்களை அமைத்த கல்கியும் இருந்தார். எளிமை தமிழில் அகிலன், விக்கிரமன் போன்றோர் எழுதிய சமயத்தில்தான் அழகு இலக்கணத் தமிழில் கோவி.மணிசேகரன் எழுதினார். இரண்டு சுவைகளும் எப்போதும் இருப்பவைதாமே…? எது உயர்த்தி, தாழ்த்தி என்றெல்லாம் நூலாசிரியர் ஏன் இப்படி வாலன்டியராக விளக்கம் தரவேண்டும் என்று தோன்றியது. இதற்கு ஒரு விளக்கத்தை கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய பதிவில் நரசிம்மா தந்திருக்கிறார். (முதல்ல படிச்சு முடிச்சவன் நான். ஆனா விமர்சனம் எழுதறதுல என்னை முந்திட்டாங்க அவங்க. கர்ர்ர்ர்.) 

நரசிம்மாவுக்கு ஒரு வேண்டுகோள்… நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.

மொத்தத்தில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் ஐந்தாவது முறையும் செஞ்சுரி அடித்திருக்கிறார் நரசிம்மா. (அடுத்த நாவல் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சா ஸார்?) 720 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை 300 ரூபாய் விலையில் நல்ல ஹார்ட்பவுண்ட் அட்டையில் சிறப்பான அச்சுத்தரத்தோட 23, தீனதயாளு தெரு, தி.நகரில் இருக்கும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க.


45 comments:

  1. அடடா உங்கள் பதிவில் முதல் கமென்ட் இட்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது :-)


    ReplyDelete
    Replies
    1. இனி அடிக்கடி இடலாம் சீனு. தொடர்ந்து மின்னும்.

      Delete
  2. என்ன! கதையில் சிரவணபெலகோலா வருகிறதா.. இது ஆவிக்குத் தெரியுமா ;-)

    ReplyDelete
    Replies
    1. கதையில் வரவில்லை. சிரவணபெலகோலாவில் நாவலின் நாயகி ஷாந்தலாவைப் பற்றிய குறிப்பு கல்வெட்டில் இருப்பதாக நரசிம்மா குறிப்பிட்டிருப்பதைச் சொல்லியிருக்கிறேன்.

      Delete
  3. அப்போ இன்னொரு பெங்களூரு ட்ரிப் போடலாமா? ;)

    ReplyDelete
    Replies
    1. என்னையும் சேத்துக்கறதா இருந்தா போடலாம். ரைட்டா..?

      Delete
  4. வணக்கம்
    ஐயா
    புத்தகம்பற்றி வெகு சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் .. பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  5. சுவாரஸ்யமான நாவலுடன் தொடர்ந்துள்ளீர்கள் வாத்தியாரே... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியம் என்று தெம்பூட்டிய டிடிக்கு மனம் நிறை நன்றி.

      Delete
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்னலை ரசித்து மகிழ்ந்தேன். தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தொடரும் முரளி. ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலை வானில் மின்னல் வெட்டக் கண்டேன் ஐயா
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களனைவரின் துணையிருக்க.. நிச்சயம் தொடர்கிறேன் ஐயா. தங்களுக்கு மகிழ்வான என் நன்றி.

      Delete
  8. மீண்டும் வந்ததற்கு நன்றி.... தொடர்ந்து மின்னல் மின்னட்டும்....

    ReplyDelete
    Replies
    1. வரவைத்தவனே நீ தானேயப்பா... நிச்சயம் இனி தொடர்ந்து மின்னும் ப்ரதர்.

      Delete
  9. மீண்டு(ம்) வந்தபோதேகூடவேஒரு ஹெவியான புத்தக விமரிசனத்தோடு ஆஜர் ஆனது மகிழ்ச்சி.
    இதை அடுத்த பயணத்தில் வாங்கிடணும். இவருடைய அஞ்சாவது புத்தகம் இது என்றால் மற்ற நான்கும்........... பெயர் தெரிவித்தால் வாங்கும் பட்டியலில் சேர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. 1. காலச்சக்கரம், 2. ரங்கராட்டினம், 3. சங்கத்தாரா, 4. குபேரவனக் காவல் ஆகியவை இவரது முந்தைய படைப்புகள் டீச்சர். எப்போ வர்றீங்கன்னு அடியேனுக்கு ஒரு குறிப்பும், வாங்க வேண்டிய புக் லிஸ்டையும் சொல்லிட்டா... நானே சேர்ப்பிக்கிறேன் உங்களிடம். அலைகிற நேரத்தை மிச்சப்படுத்தி என் இல்லம் வருக. நன்றி.

      Delete
  10. மீண்டும் பதிவுலகில் எழுத வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.பதிவுலகில் நரசிம்மாவின் காட்டில் மழையை பார்க்கும் போது மனசு சற்று ஏங்குகிறது. சிலர் ஏன் செய்த ப்ராமிஸ்களை மறக்கிறார்கள் என்றும் நம் காட்டில் ஏன் தூறல்கூட இல்லையென்றும் எண்ணுகிறது. வாழ்த்துக்கள் கணேஷ்,

    ReplyDelete
    Replies
    1. மறப்பதில்லை ஐயா. நெருடலாகத் தோன்றும் சில விடயங்களைச் சொல்லும்போது மனம் புண்படுமே என்கிற காரணத்தாலும் சில விடயங்களைத் தவிர்த்து விடுவோம் என்பது தாங்கள் அறியாததா? என் வருகைக்கு மகிழ்ந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  11. சங்கதாரா படிச்சு நரசிம்மா ஃபேன் ஆகிட்டேன்! இதையும் படிக்க வேண்டும்! சுவையான விமர்சனம்! வாழ்த்துக்கள் சாரே! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை ரசித்த சுரேஷுக்கு மகிழ்வான நன்றி.

      Delete
  12. வயசான காலத்துலே கண் சரியா தெரியல்லையா..
    அதுனாலே...
    அசப்பிலே
    சங்க தாரா அப்படிங்கறதை
    நயன தாரா ன்னு படிச்சுட்டு, இன்னாடா
    இந்த அம்மா கதை, கட்டுரை, நாவல் ன்னு கூட
    எழுத ஆரம்பிசுட்டாகளா அப்படின்னு தோனிச்சு..

    அப்பறம் தான் கவனிச்சேன்..சங்கத்தாரா அப்படின்னு..

    சங்கத்தாரா அப்படி ஒரு ஸ்ரீ லங்கா பேட்ஸ் மேன் இருந்தாரு.

    இது வேறவா இருக்கும்.

    புத்தகம் கீதா அம்மா கிட்ட கேட்டா கொடுப்பாங்க...வாங்கி படிக்கணும்.

    ஆனா, உங்க விமர்சனம் படிச்சதே நாவல் படிச்ச திருப்தி வந்துடுச்சு.
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை தின்று பார்த்தால் போதுமில்லையா.

    ஒரு நல்ல விமர்சனம் கிடைக்க அந்த நரசிம்ம கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

    நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.//
    நரசிம்ம மட்டும் இல்லை. பதிவுலகில் பல பேர் இந்த குறிப்பைக் கவனித்தால் நல்லது.
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நீங்களாவது பரவால்ல சுப்புத்தாத்தா. நான் பிரியாணிங்கறதக் கூட பிரியாமணின்னு படிக்கிறவனாக்கும். ஹி... ஹி.. ஹி... சங்கத்தாரா இல்ல இலங்கை பேட்ஸ்மேன், அவர் சங்ககாரா. என் விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
    2. யாரு நயன்தாரா?
      புத்தகம் நீங்க கேட்டு வாங்கிப் படிச்சதும் எங்கிட்டே கொடுங்க.. கணேஷ்: வாங்கிப் படிச்சதும்ன்றதை வாங்கிபாத் என்று படிக்காதிருக்க..

      Delete
  13. நூலாசியரியர் ஆங்கிலத்தில் எனக்கு எழுதி பிரசுரிக்கக் கோரியிருக்கும் கடிதம் இங்கே....

    பாலகணேஷ், உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. உங்கள் கருத்துரை இல்லாமல் என் நாவல் முழுமை பெற்றிருக்காது. நான் வியப்புற்றேன். நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர், நான் ஏன் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதும் அறிந்தவர். என் முன்னவர்களைப் போல் வர்ணனைகளுடன் எழுத என்னாலும் இயலும் எனினும் தமிங்கிலீஷ் பேசும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள் என்பதால்தான் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதைத்தான் என் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இன்றைய தலைமுறை சரித்திரம் படிக்க வேண்டுமென்பதற்காக நான் கைக்கொண்டுள்ள எழுத்து நடை இது. என் முன்னுரையில் நான் எனக்கு முந்தைய எழுத்தாளர்கள் எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என்னைத் தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டு சாண்டில்யனை நான் குறிப்பிட்டதாக எழுதி மற்றவர்கள் என்னை விமர்சிக்கும்படி ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் என்னையும் என் எண்ணங்களையும் அறிவீர்கள். என் சீனியர்களைப் பற்றி எழுதுவதன் மூலம் நான் புகழ்தேடிக் கொள்ள முயல்கிறேன் என்று என் புத்தகத்தையும் முன்னுரையையும் படிக்காதவர்கள்கூடக் கூறும்போது அயற்சியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. உங்களுக்கு என் திரையுலகப் பின்னணி தெரியும். நான் புகழை விரும்பியிருந்தால் என் அப்பாவுக்கு உதவியாகத் திரையுலகில் நுழைந்து அதை எளிதாகப் பெற்றிருக்க முடியும். நமது முன்னோர்களின் பெருமையை அறியாதிருக்கும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள விரும்பியே சரித்திரத்தில் நான் கவனம் குவித்து எழுதி வருகிறேன். புகழ் வெளிச்சம் படாத மனிதனாக இருக்கவே விருப்பம்.
    என் வேலைப்பளுவின் காரணமாகவும், என் புத்தகத்தைக் கூடப் படிக்காமல் விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என் எழுத்தைச் சோர்வுறச் செய்வதாலும் நான் வருடத்திற்கு ஒரு புத்தகம்தான் எழுதி வருகிறேன். உங்கள் தளத்தில் என் எண்ணங்களையும் என் மூத்த எழுத்தாளர்களை நான் எத்தனை மதிக்கிறேன் என்பதையும் வெளியிடவும். வானதி பதிப்பகத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது திரு.கல்கி ராஜேந்திரன், திருமதி.சிவசங்கரி மற்றும் நான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டோம். நான் மூத்தவர்களை அவமதிப்பவனாக அறியப்பட்டிருந்தால் என் பக்கத்து இருக்கையில் கல்கி ராஜேந்திரன் அவர்கள் அமர்வாரா?
    எதுவாயினும் உங்களின் விமர்சனம் சிறப்பானது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சென்ற நாவலை நான் குறைத்தன் காரணமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒற்றுப் பிழைகள் நேர்ந்திருக்கலாம். தங்கள் அறிவுரைக்கு நன்றி. உங்களின் ஆதரவு வரும் நாட்களிலும் எனக்குத் தொடர்ந்து கிட்டுமென நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நரசிம்மா சார்... உங்களை நான் நன்கு அறிவேன். இலக்கண சுத்தமான, வர்ணனைகள் நிறைந்த தமிழில் என்னாலும் எழுத முடியும் என்று குறிப்பிடாமல் உதாரணமாக ஒரு பாரா நீங்கள் எழுதிக் காட்டியதால் எழுந்த நெருடல் அது. அதைப் படிக்கும் மற்றவர்களுக்கு நெருடல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே உங்கள் விளக்கம் வேண்டி அதை இங்கே குறிப்பிட்டேன். அனைவருக்கும் தெளிவாக உங்கள் மனதை இப்போது புரிந்திருக்கும் என்பது என்னைப் பொறுததவரை நல்ல விஷயம். உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

      Delete
    2. நரசிம்மாவின் நேர்மை நெஞ்சைத் தொடுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள். (இப்ப இந்தப் புத்தகத்தைப் படிக்கணும் போலத் தோணுதே)

      Delete
  14. தங்கள் விமர்சனம் உடனடியாக படிக்கும் ஆசையை தூண்டுகிறது.
    நன்றி

    ReplyDelete

  15. நல்ல விமர்சனம். மன்னன் விஷ்ணுவர்த்தனன் பற்றிய உங்களது குறிப்புகளுக்காகவே இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும். ( ”வெளிச்சத்தின் நிறம் கருப்பு” என்ற நூலுக்கு முன்பு நீங்கள் எழுதிய விமர்சனம் பார்த்து அந்த நூலை வாங்கிப் படித்தேன்.)

    த.ம.7

    ReplyDelete
  16. //புத்தகம் கீதா அம்மா கிட்ட கேட்டா கொடுப்பாங்க...வாங்கி படிக்கணும்.//
    என் கிட்டே புத்தகம் கிடையாது. இந்த பஞ்சநாராயணக் கோட்டம் சென்னை மாம்பலத்தில் என் தம்பி லென்டிங் நூலகம் மூலம் வாங்கிப் படிக்கக் கொடுத்தார். மற்றவை ஓ.சி. புத்தகங்கள். திருப்பணும். :)

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதையெல்லாம் வாணாம் ...

      Delete
    2. அட? புத்தகம் ஓ.சி. கொடுத்தவங்க கிட்டே திருப்பிக் கொடுத்துடறேன். நீங்க அவங்க கிட்டேயே வாங்கிகுங்க! :)

      Delete
  17. நான் எழுதிய விமரிசனம் திரு நரசிம்மா அவர்களை மனம் நோகச் செய்திருக்கிறது போலும்! முன்னுரை படிக்கையில் சட்டுனு நினைவில் வந்ததை அப்படியே எழுதிட்டேன். மற்றபடி அவர் நாவல்களின் ரசிகை தான் நானும். இதை அவரிடம் சொல்லவும். :)

    ReplyDelete
  18. மின்னல்வரிகள் மீண்டும் ஒளி வீசத்துவங்கியதில் மகிழ்ச்சி அண்ணா. நாவல் விமர்சனம் படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  19. Nice to see your blog after a few months of waiting. The review of the book inspires others to buy and read the book. You have given the gist of the contents and the style of writing. Hope to get my hands on the book some time soon. (Honestly, I have not come across the author's name earlier but nice to know his previous 4 novels too were of interest.) Keep posting! - R. J.

    ReplyDelete
  20. நூலினைப்படிக்கத்தூண்டும் விமர்சனத்துடன் மீண்டும் மின்னல்வரிகள் மின்னியது சந்தோஸம்.இதுவரை ஆசிரியரின் நூல்கள் படித்ததில்லை இனி இந்தியா வரும்போது வாங்கிவிட வேண்டும்!

    ReplyDelete
  21. நரசிம்மா அவர்களின்
    கருத்துரையே ஒரு
    அறுசுவை உண்டி போல
    அழகுறத் திகழ்கிறது.

    சற்று காரமும் இருக்கிறது.
    சுவையான கனி தரும்
    இனிப்பும் இருக்கிறது.
    சிந்தனைக்கு ஓர்
    விருந்தாக இருக்கிறது.


    அடுத்த சில நிமிடங்களில்,
    டிஸ்கவரி பாலஸ் போகவேண்டும்.
    நரசிம்மா எழுதிய நாவலில், அதுதான்,
    பஞ்ச நாராயணக் கோட்டத்தில் ஒரு
    பாஞ்ச் வரியாவது
    இன்றே படிக்கத்துவங்கவேண்டும்.

    ஒவ்வொரு எழுத்தாருக்கும்
    ஒரு பாணி ஒரு தனித்துவம் உண்டு.
    இருப்பினும்,
    ஓரிரு இடத்தில் இன்னொருவரை
    நினைவு படுத்துதல் என்பதும் இயற்கை தான்.

    ஒரு சினிமாவோ அல்லது பாடலோ பார்க்கும்போது அல்லது
    கேட்கும்போது,
    இன்னொரு சினிமாவில் கண்ட காட்சியோ அல்லது
    கேட்ட டியூனோ நினைவு வருவது இல்லையா ??

    அது போலத்தான்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  22. படிக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா !

    நாவலின் விமர்சனம் அதை முழுவதுமாய் படித்த திருப்தி தருகிறது நல்ல நாவல்களைப் பெற வழிமுறைகளைத் தேடுகிறேன்
    விலாசம் அனுப்பினால் கிடைக்குமா அதற்குரிய செலவுகள் அனைத்தும் தரப்படும் தாங்கள் விமர்சித்த இந்நாவல் உட்பட !

    அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தமிழ்மணம் +1

    ReplyDelete
  24. சரித்திர அடிப்படையில் நாவல்கள் எழுதுவது கடினம். படிப்பது அதைவிட. என்னை விட்டுருங்க..
    அடுத்த பதிவு எப்ப?

    ReplyDelete
  25. மின்னல்வரிகள் மின்னி வெட்டத் தொடங்கிவிட்டது போல!!!! வாருங்கள் வாருங்கள்!

    தங்கள் விமர்சனம் நேர்மை எனறால் ஆசிரியரின் பதில் விளக்கம் போட்டி போடுகின்றது...

    மின்னுங்கள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. நரசிம்மா அவர்கள் நாவல்கள் நான்கையும் வாசித்துவிட்டேன். அவரது மற்ற புதிய படைப்பு என்னவாக இருக்கும் என்றும் யோசித்து ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். புதிய படைப்புக்கு நல்ல அறிமுகம் இங்கே.. மிக்க மகிழ்ச்சி..நன்றி ஐயா...கூடிய விரைவில் வாசிக்க வேண்டும்...

    ReplyDelete
  27. உங்கள் புத்தக விமர்சனத்தை வாசித்தவுடன் இப்புத்தகத்தை வாங்கி உடனே வாசிக்க வேண்டும் என்ற நினைப்பை ஏற்படுத்தி விட்டீர்கள்... அதனால் புத்தகத்தை வாங்கியாச்சு வாசிச்சாச்சு. நீங்கள் விமர்சனத்தில் மிகையாக பாரட்டுகிறீர்களோ என்று யோசித்தேன் ஆனால் வாசித்து முடிந'தவுடன் தான் தெரிகிறது நீங்கள் குறைவாக பாராட்டியிருக்கிறீர்கள் என்று.

    பால கணேஷ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் இன்னும் அதிகமாக புத்தகங்கள் வாசித்து எங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் உங்களால் தான் எனக்கு நரசிம்மா அவர்களின் சங்கதாரா அறிமுகமாகி அவரின் வாசகனாகவிட்டேன் அதே போல இன்னும் பலரையும் அறிய வேண்டியே இதை சொல்கிறேன்.

    காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கின்றேன்....

    நன்றி

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube