Friday, February 27, 2015

சுவாரஸ்ய சுஜாதா

Posted by பால கணேஷ் Friday, February 27, 2015
• என் நண்பன் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி அப்புறம் ரேடியோ, ரெப்ரிஜிரேடர்,டெரிலின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்ணாயம் பண்ணிக் கொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்!

• டெல்லியில் வடக்கத்திக் கல்யாணம் வினோதமானது. காலை எட்டு மணி வரைக்கும் இந்த வீட்டிலா கல்யாணம் நடக்கப் போகிறது என்றிருக்கும். திடீரென்று புயல்போல் சர்தார்ஜி வருவார், ஒரு லாரியில் நாற்காலிகளுடன். இன்னொரு சர்தார் சமைத்த கோழிகளுடன் வந்து இறங்குவார். பின்னால் ஒருவர் பந்தல் துணியுடன் வருவார். அவர் பின்னால் ஸ்வாகத் போர்டு, சக்கர கலர் விளக்கு கம்பிகள் இவற்றோடு எலெக்ட்ரீஷியன் சர்தார்ஜி. ‘பீப் பீப்’ என்று சத்தம் கேட்டு எல்லாரும் ஒதுங்குவார்கள். பாண்டு கோஷ்டி வந்து நிற்கும்.

அப்புறம் ஒரு வெள்ளைப் பெண் குதிரை நொந்துபோய் வரும். அதன் மேல் பூக்களால் ஆன ஒரு குழப்பம். அதுதான் பையன். பையன் பெண்ணின் முகத்தைப் பார்க்கவே மாட்டான். எல்லாவற்றையும் மூடி வைத்திருப்பார்கள். சிறு பையன்களுடன் தடி ஆண்பிள்ளைகள் டுவிஸ்ட் ஆடுகிறேன் என்று சுளுக்கெடுத்து உள்ளே ஒரு எலும்பு மளுக்கென்று ஒடிகிற வரைக்கும் ஆடுவார்கள். பிறகு எல்லோரும் கொக்கோகோலா சாப்பிடுவார்கள். நிறைய ஸ்வீட் வினியோகம் செய்வார்கள். இந்த ஊர் மாப்பிள்ளைகள் பெண்ணுக்குத் தாலி கட்டுவது இல்லை. அப்படி ஒரு வழக்கம் இல்லாதது நல்லதுதான். மற்ற சில்லறை அமர்க்களத்தில் அது மறந்துபோய் விடுமல்லவா?

• மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர் ஸ்ரீ திடீரென்று தேசபக்தி மிஞ்சிப் போய் ஜவான்களுக்கு ரத்தம் கொடுக்க வெலிங்டன் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அவருக்கு ரத்தம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

• டில்லி கரோல்பாக்கில் உள்ள ஏராளமான மதறாசி ‘மெஸ்’களில் ஒன்றில் நுழைகிறோம். எல்லா மெஸ்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் : பஜனை சமாஜ நோட்டீஸ், ப்ரொப்ரைட்டரின் போட்டோ, ரீகல் தியேட்டரில் ஞாயிறு காலை தமிழ் சினிமா விளம்பரம், ஊதுபத்தி, காதில் பூ வைத்த ராயர், பேரேடு கணக்கு நோட்டு, ‘தோஸ்ஸை’ (இன்றைய ஸ்பெஷல்) அப்புறம்... ஸ்டெனோகிராபர்கள்.

• நம் தமிழ் வார, மாதப் பத்திரிகைகளின் தரத்தைப் பற்றி வருத்தப்பட வேண்டியது படித்தவர்களின் பொறுப்பு. ஒரு முக்கியமான தமிழ்ப் பத்திரிகையில் வெளியான சிறுகதையின் ஆரம்பம் இப்படி!

‘சாப்பிட்ட களைப்பால் சோபாவில் சாய்ந்திருந்த சேகரை மெல்லத் தொட்டாள் உஷா. தொடர்ந்து “இந்தாருங்கள்” என்று அழைத்தாள்.‘

உஷா மேலே என்ன செய்தாள் என்று நமக்கு ஆர்வம். இத்துடன் ஒரு ஆங்கிலக் கதையின் ஆரம்பத்தை ஒப்பிடலாம்.

‘தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு ஒரு தலை இல்லை...’

இந்த ஆரம்பம் திடீரென்று நம்மைக் கவர்கிறது. மேலே அவசரப்பட்டு படிக்கிறோம். இம்மாதிரி துவங்கி எப்படி ஆசிரியர் தப்பிக்கப் போகிறார்  என்று. இப்படித் தப்பிக்கிறார்: “தலை இல்லை என்றா சொன்னேன்? மன்னிக்கவும், எனக்கு ஞாபக மறதிஅதிகம். ஒரு கை இல்லை அவனுக்கு.”
எப்படியோ, உங்களை கதைக்குள் இழுத்து விட்டார். தமிழில் நல்ல சிறுகதைகளே இல்லை என்று சொல்ல வரவில்லை. என் வருத்தம் ஏன் இப்போது கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, கு.ப.ராஜகோபாலனின் ‘விடியுமா’ போன்ற கதைகள் வருவதே இல்லை என்பதுதான்.

• காற்று வாங்கப் போனேன் - ஒரு
கழுதை வாங்கி வந்தேன் - அதைக்
கேட்டு வாங்கிப் போனான் - அந்த
வண்ணான் என்ன ஆனான்?... ஆ.... (காற்று)

தமிழ் சினிமாப் பாட்டுகளை இம்மாதிரி கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பாடுவதில் உற்சாகமிருக்கிறது. மற்றொரு உதாரணம் :

பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது. பஞ்சணையில் தூக்கம் வரும், காற்று வராது.

நீங்கள் வேறு உதாரணங்கள் யோசிக்கலாம்.

• அச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. ‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரஸ்யமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டுகொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது. நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்றதற்கே.  அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள எடினத்தை நான் அறிவேன்.

• இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் சுஜாதாவின் 6961 என்கிற கதை ஆரம்பிக்கிறதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்? வருகிறது, வருகிறது என்று இரண்டு மாதமாக பயங்காட்டி, புதுமை, புரட்சி, அது இது என்று புரளி பண்ணி - எனக்கு என்னவோ இந்த எழுத்தாளரைச் சற்று அதிகமாகவே தூக்கி வைக்கிறார்கள் என்று படுகிறது. இதில் ஒரு ஆபத்து - அதிகமாக உயர, உரய இறுதியில் கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கும்.

-ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து.

25 comments:

  1. சுவாரஸ்யமான ஞாபக மறதி...!

    வாத்தியாரின் முகநூலில் வந்த பாடலைக் காணாம் வாத்தியாரே...?

    ReplyDelete
  2. சுஜாதாவின் 6961 நாவல் இப்போது தான் கேள்வி படுகிறேன் நன்றி.

    படித்துவிட்டு பதில் எழ்துகிறேன்

    ReplyDelete
  3. sorry I referred this link http://simulationpadaippugal.blogspot.in/2011/09/6961.html

    ReplyDelete
  4. ப்ச்.....ஏழு வருசமாச்சுல்லே:(

    ReplyDelete
  5. சுவாரசியம், சுவாரசியம்.

    ReplyDelete
  6. மறக்கவில்லை...யா?

    ReplyDelete
  7. //அச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது/
    உண்மைதான் முதல் பாராவே உணர்த்தி விட்டது
    //கல்ணாயம் பண்ணிக் கொண்டானாம்.//
    வேண்டுமென்றே செய்தததுதானே!
    எப்போதும் பச்சை சுஜாதா
    அட EVER GREEN இன் மொழிபெயர்ப்பாக்கும்

    ReplyDelete
  8. சுவாரஸ்யம் என்றால் சுஜாதாதான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. சுஜாதா என்றும் சுவாரஸ்யம் தான். இப்போவரை நானும் என் தங்கையும் பரவாயில்லையா?? எனக்கேட்டால் பரவாஉண்டு என பதில் சொல்லி சிரித்துக்கொள்வோம். என் இனிய எந்திராவில் ஜீனோ சொல்லும் டைலாக் அது:))))

    ReplyDelete
  10. சுஜாதாவின் கதைகளைத் தேடி ஓடிய நாட்கள் நினைவிற்கு வருகின்றன
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  11. அத்தனை மேற்கோள்களும் அருமை அண்ணா.... அக்மார்க் ரகம்

    ReplyDelete
  12. பகிர்வு சுவாரசியமாய் இருந்தது

    ReplyDelete
  13. பகிர்வு சுவாரசியமாய் இருந்தது

    ReplyDelete
  14. சிரித்து மாளல,போங்க!

    ReplyDelete
  15. Article super.... - chudachuda.com

    ReplyDelete
  16. 6 9 61 எப்போதோ படித்த ஞாபகம்.. ஹ்ம்ம் சுஜாதா கூட மறந்து வருகிறார் சமீபங்களில் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  17. தொகுப்பு அருமை அண்ணா ..
    தம +

    ReplyDelete
  18. வணக்கம் கணேஷ் அண்ணா. சுஜாதா அவர் களின் ரசனையான எழுத்துக்களை யாராலயுமே மறக்க முடியாது.

    ReplyDelete
  19. நன்றி. சுஜாதாவின் சுவாரஸ்யத்திற்கு எப்பொழுதும் குறைவில்லை. நலமா கணேஷ்?

    ReplyDelete
  20. சுவை மிகுந்த சுஜாதாவின் எழுத்துகளின்
    சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
  21. அன்புள்ள சகோதரர் ’மின்னல் வரிகள்’ பாலகணேஷ் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன் என்பதனை சொல்ல வேண்டியதில்லை.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (19.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/19.html

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube