Wednesday, November 7, 2012

நான் உயிரோடு இருக்கிறேனா?

Posted by பால கணேஷ் Wednesday, November 07, 2012

ன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்த கடிதம் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியது நான் உயிரோடிருப்பதை இத்தனாம் தேதிக்குள் ஒரு டாக்டரின் அத்தாட்சியடன் அவர்களுக்குத் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மாதாமாதம் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்து கொண்டிருந்த ரூபாய் இருநூறு கொஞ்ச நாளாக வரவில்லை. சரி, ஏனோ நிறுத்தி விட்டார்கள் போலிருக்கிறது, 200 ரூபாயை விசாரித்து அலைந்து திரிவானேன் என்று சும்மா இருந்து விட்டேன். அந்தச் சமயத்தில்தான் ‘நான் உயிரோடு இருக்கிறேனா?’ என்று கேட்டு கடிதம் வந்தது.

எல்.ஐ.சி. விவகாரம் தெரிந்த என் உறவினரிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘‘நீங்கள் உயிரோடு இருக்கும் வரை மாதம் 200 ரூபாய் கிடைக்க எல்.ஐ.சி.யுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தபோது உங்கள் கிராஜுவிடி தொகையிலிருந்து மாதம் கொஞ்சமாக இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம் செலுத்தியிருக்கிறார்கள். நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் ஆயுள் பரியந்தம் மாதாமாதம் 200 ரூபாய் தர ஒப்பந்தமாகியிருக்கிறது. ஆகவேதான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு டாக்டரிடமிருந்தோ, அரசு அதிகாரியிடமிருந்தோ நீங்கள் உயிரோடு இருப்பபதற்குச் சான்றுப் பத்திரம் (எக்ஸிஸ்டன்ஸி சர்டிபிகேட்) வாங்கி அனுப்ப வேண்டும். அதைத்தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.’’

அவர் சொன்னவாறே செய்தேன். ஃபாரத்தைப் பூர்த்தி செய்துகொண்டு எல்.ஐ.சி. போனேன். ஆனால் நான் உயிரோடிருப்பதை அவர்கள் நம்பத் தயாராய் இல்லை. நானே ‌நானா என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிற அளவு சந்தேகப்பட்டார்கள். எல்.ஐ.சி.க்கு எந்த ஜென்மத்திலோ நான் தந்த பாஸ்போர்ட் போட்டோவில் என் முகமண்டலத்தில் தாடி, மீசை இல்லை. அந்தக் காலத்தில் பிளேடுகள் கூர்மையாகவும் மலிவாகவுமிருந்தன. எனக்குத் தினமும் ஷேவ் செய்து கொள்வது பிடிக்கும். ஆகவே பழைய பாஸ்போர்ட் படத்தில் கன்னங்கள் மழமழவென்றிருந்தன.

ஆனால் இப்பொழுதுதான் ரிடையர்ட் கேஸாச்சே... ‘நம்ம முகரக்கட்டையை யார் வந்து பார்க்கப் போகிறாங்க அல்லது யார்கிட்டே கொண்டு போய் காட்டப் போகிறோம்’ என்று அஸால்ட்டாக இருந்ததால் தேன்கூடு கணக்காக மொசமொசவென்று என் முகத்தில் தாடி தொங்கிக் கொண்டிருந்தது. எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவு தாடி பெருகியிருந்தது. தலையில் எவ்வளவு இடம் காலியாக இருக்கு? மேல்தளம் பூரா மொஸைக் போட்டாற் போல் ஜம்மென்று இருக்கிறது. அங்கே போய் நூறு ஐம்பது உட்காராதுகளோ? எல்லா முடியும் மோவாயைச் சுற்றியே ஸெட்டிலாகி விட்டன. வெயில் கருதியும், வழுக்கை கருதியும் எப்போதும் தலையில் ஒரு தொப்பி போட்டிருப்பேன்.

நாளடைவில் அது தலையிலிருந்து கழற்றவே முடியாத அளவு தலையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. (எனக்குத் தலைக்கனம் கூடி அதனால் தொப்பி இறுகியிருக்கலாம் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை.) எனது ஆதி அடையாள அட்டையிலுள்ளது போல் நான் மறுபடி புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினால் எனது புனித தாடி, மீசையை நீக்கிக் கொள்ள வேண்டும். எனது சொந்தப் பிரச்னையில் அந்நியத் தலையீடாக அது எனக்குத் தோன்றியது. ‘‘மூணு நாலு வருஷத்து அரியர்ஸ் பணம் கணிசமாக வருமேடா’’ என்றார் உறவினர்.

சபலமாயிற்று. சலூனுக்குப் போய்த் தாடியை கஞ்சாச் செடிகளை ஈவிரக்கமில்லாமல் போலீஸ் அழிப்பது போல் அழித்தே விட்டேன். ஆறு வயசில் எனக்கொரு பயல் இருக்கிறான். அவன் என்னைச் சில சமயம் டாடி என்றும், சில சமயம் தாடி என்றும் கூப்பிட்டு வந்தான். என் முகத்தில் தாடி இல்லாமல் அவன் என்னைப் பார்த்ததே கிடையாது.

ஆகவே அவன் மதியம் பள்ளியிலிருந்து வந்தபோது அவனது தாயாருடன் (அதாவது தாலிகட்டிய என் பெண்சாதியுடன்) நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘‘அப்பா! அப்பா! அம்மா எந்த மாமா‌வுடைய கன்னத்தையோ தொடறாள்!’’ என்று கத்தியவாறு புழக்கடையில் நான் கீரைப் பாத்தியிடம் இருப்பேன் என நினைத்து ஓடினான். ‘நானே நான்’ என்று அவனுக்கு என்னை நிரூபிக்க ரொம்பக் கஷ்டமாகப் போய் விட்டது. எனது பழைய பாஸ்போர்ட் ஸ்கூல் சர்ட்டிபிகேட், பழைய அடையாள அட்டை, வாக்குச் சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் காட்டி ‘நான் தாண்டா இது’ என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.

நண்பன் நாராயணன் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் படித்து பி.ஏ. பரீட்சை எழுத ஷெனாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குப் போயிருந்தான். பரீட்சை எழுத பல வயதுகளில் பலதரப்பட்ட மாணவர்கள் கூடியிருந்தார்கள். பெயிண்டர், தையல்காரர், மெக்கானிக் என்பதாகப் பல ரகம். ஒரொரு ஹாலிலும் ஐம்பது பேர் பரீட்சை எழுதினார்கள். நாராயணனுடைய ஹாலை நிர்வ்கித்த அதிகாரி ரொம்பக் கறார், கண்டிப்பானவர். மாணவர்களில் பலர் மாணவர்களாக இல்லாமல் வயசாளிகளாக இருந்தனர்.

ஒரு ஆசாமி முரடராகத் தோற்றம் தந்தார். பரீட்சை அதிகாரியை, ‘‘யோவ்! மணி அடிச்சாச்சு, பேப்பர் குடுய்யா’’ என்று உரக்க அதட்டினார்- டெஸ்க்கையும் பெரிசாகத் தட்டியவாறு. ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வேறு- தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி- அவர் வாயில் வந்து விழுந்தது. கிழவரான பரீட்சை அதிகாரி அந்த ஆசாமியை முறைத்துப் பார்த்துவிட்டு, அவனருகில் வந்தார். அவனைக் கோபமாகப் பார்த்தார். பிறகு அவனுக்கு மட்டும் கேள்விப் பேப்பர் தராமல் மற்றவர்களுக்குக் கொடு்த்து விட்டு நாற்காலியில் போய் அமர்ந்து விட்டார்.

அந்த முரட்டு ஆசாமி மேலும் முரட்டுத்தனமாக, ‘‘யோவ்! இன்னாயா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே. எனக்கு கேள்விப் பேப்பர் தரலியே!’’ என்று கத்தினான். அவர், ‘‘நீ மாணவனே அல்ல. வேறு யாரோ. ராங் அய்டென்டிடி! நீயாக ஹாலை விட்டு வெளியேறுகிறாயா, வாட்ச்மேனை விட்டு வெளியேற்றவா?’’ என்றார். அவன் மிரண்டு போய், ‘‘நான்தான் சார். நானே நான் சார்!’’ என்றான் சுருதி இறங்கி. அவனுடைய அய்டென்டிடி சர்டிபிகேட்டில் ஒட்டியிருந்த போட்டோவில் அவன் தாடி வைத்திருந்தான். இப்போது மழமழவென்று மழித்து விட்டிருந்தான். ஆனாலும் அவன்தான் என்று அடையாளம் தெரிந்தது.

ஆனால் அவன் ‘யோவ்’ போட்டு அவமரியாதையாக ‌எக்ஸாமினரை அழைத்ததால் அவர் கோபம் கொண்டு அவனது அடையாளத்தை சந்தேகப்பட்டு பேப்பர்தர மறுத்து விட்டார். ‘‘போய் பிரின்ஸிபாலிடம் சொல்லு. அவர் ஓ.கே. சொன்னால் உனக்கு பேப்பர் தருவேன்’’ என்று வம்பு பண்ணினார். அவன் பரீட்சையே எழுதாமல் திறந்த பேனாவை டெஸ்க் மீது ஓங்கிக் குத்திவிட்டு வெளியேறி விட்டான்.

நீதி : வாக்குச் சீட்டிலோ, அடையாள அட்டையிலோ உங்கள் தோற்றம் எப்படி உள்ளதோ அதைப் போலவே நீங்கள் இருப்பது உத்தமம். (நல்ல குணம் கூட மாறாமல் பழையபடியே இருந்தால் இன்னும் உத்தமம்!)

-‘சிரிக்காத மனமும் சிரிக்கும்’ (நகைச்சுவைக் கட்டுரைகள்) நூலிலிருந்து. எழுதியவர் : திரு.பாக்கியம் ராமசாமி. வெளியீடு : வானதி பதிப்பகம். விலை : ரூ.60

=======================================
என் நண்பர் கவிஞர் மதுமதி தன் தளத்திற்கு என்னை விருந்தினராக அழைத்து சிறப்பு செய்திருக்கிறார். அங்கே என் மொக்கையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.
=======================================

51 comments:

  1. விருந்தினருக்கு மதுமதி என்ன்னென்ன செய்தார்ன்னு லிஸ்ட் போட்டு சொல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. அவர் உன்னையும் சிறப்பு விருந்தினரா அழைக்கறப்ப புரியும் தங்கையே. மிக்க நன்றி.

      Delete
  2. வாத்தியாரே அருமையான பகிர்வு ... பாக்கியம் ராமசாமியின் புத்தகங்களை இனி அதிகம் படிக்க வேண்டும்... விகடன் கல்கியுடன் படைப்புகளை வாசிப்பது நின்று விட்டது

    ReplyDelete
    Replies
    1. தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர் பாக்கியம் ராமசாமி அவர்கள். அவசியம் படிச்சு சிரிக்கணும் சீனு. இதை ரசித்து அருமை என்ற உளக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  3. ஹாஹாஹாஹா:-)))))))))))

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  4. நல்ல நகைச்சுவை கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே.

      Delete
  5. பாக்கியம் ராமசாமியின் கதையைப் படிக்கிற பாக்கியத்தைத் தந்த பாலகணேஷுக்கு மிக்க நன்றி! இதையெல்லாம் வாசிக்கும்போது நகைச்சுவைக்கு இயல்புத்தன்மை எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தாண்ணா. அவர் இந்த புத்தகம் முழுசுமே இயல்பு வாழ்க்கையில நடக்கற விஷயஙகளைத்தான் காமெடி ஆக்கியிருக்கார். படிச்சு ரசிச்சு சிரிச்சேன். பிரமிச்சேன். இதை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.

      Delete
  7. (நல்ல குணம் கூட மாறாமல் பழையபடியே இருந்தால் இன்னும் உத்தமம்!) பதிவின் முக்கிய வரிகள் சிறப்பு. அது என்ன சிறப்பு விருந்தினர் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நம்மை மதித்து ஒருவர் விருந்தினராக அழைப்பதே சிறப்பு தானே தென்றல்? அதைத்தான் குறிப்பிட்டு மகிழ்ந்தேன். அங்கும் படித்துக் கருத்திட இருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  8. அட்டகாசமான பதிவு சார்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட அரசனுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  9. நல்லதோர் பகிர்வு. பாக்கியம் ராமசாமியின் ஒரு சில கதைகளை வாசித்திருக்கிறேன். நகைச்சுவை மிளிரும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒரு பிதாமகர் அவர். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. பாக்கியம் ராமசாமி நகைச்சுவை திலகம்தான்.அப்புசாமி சீதாப் பாட்டியை படைத்தவராயிற்றே.சமீபத்தில் தினமலர் வாரமலரில்கூட ஒரு நகைச்சுவை தொடர் எழுதி இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. அப்புசாமியும் சீதாப்பாட்டியும் இறவா வரம் பெற்ற பாத்திரங்கள். வாரமலர் படிக்கும வாய்ப்பு எனக்கில்லை என்பதால் நீங்கள் சொன்ன தொடரைத் தவற விட்டிருக்கிறேன். தேடிப் பார்க்கிறேன். மிக்க நன்றி முரளிதரன்.

      Delete
  11. Replies
    1. நல்ல பகிர்வு என்று சிரித்து ரசித்த சீனிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்- இது பழ(ய) மொழி..
    பாலகணேஷ் ஸார் பதிவு படிச்சா போதும் போகாது உங்க ஆரோக்கியம்..! - புது மொழி..! எந்திர உலகில் சிரிக்க மறந்து ஓடி கொண்டிருக்கிறவர்களுக்கு நகைச்சுவையை பகிர்ந்து இறுகி கிடக்கும் முகங்களில் புன்னகை தவழ விடுகிறீர்கள்..நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என் தளத்துக்கு முதல் முறை வர்றீங்கன்னு நினைக்கறேன். இந்தாங்க. ஸ்வீட் எடுத்துக்கங்க. இந்த நகைச்சுவைப் பகிர்வை ரசித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  13. நகைச்சுவை தூள் கிளப்புகின்றது.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
    2. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  14. சிரிக்காத மனமும் வாயும் சிரிக்கும்’!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. 27 கட்டுரையும் சிரிக்க வைக்கத் தவறலை. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  15. சுவாரஸ்யம். கேட்கவா வேண்டும்? அப்புசாமி சீதாப்பாட்டி எந்த அளவு பிரபலமென்றால் அவர்களை உருவாக்கிய ஓவியர் ஜெ... (யராஜ்) தன்னுடைய விசிட்டிங் கார்டில் அவர்கள் படத்தைத்தான் போட்டிருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம், ஜெ,யின் விஸிட்டிங்க கார்டை நான் பார்த்திருக்கிறேன். அவர் தூரிகையில் அப்புசாமி சீதாப் பாட்டி. கணேஷ் வஸந்த் மறக்க முடியாதவை. இந்தப் பகிர்வை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  16. யதார்த்தத்தை. சிரிக்கும்படிச் சொல்வதில் ஜராசு வல்லவர் ஆச்சே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே. அத்தனை கட்டுரைகளும் யதார்த்த வாழ்வில் நகைச்சுவை தான். இதை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. வணக்கம் நண்பரே
    நலமா
    நீண்ட இடைவெளி ஆகிவிட்டது...

    சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி
    அவர்களின் எழுத்தில் ஒரு சிறு துளியை
    எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உஙகளின் இணையப் பிரச்னை சரியாகிடுச்சா மகேன்? மீண்டும் பாக்கறதுல மகிழ்ச்சி. இந்த நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  18. ஹா... ஹா...ஹா... ஹா...

    மிக நீண்ட நாளின் பின் வந்துள்ளேன்.. வந்ததற்கு களிப்பூட்டும் கட்டுரை.....தந்தீர்கள்...

    மதுமதி அண்ணா என்ன விருந்து தந்தார்’???அங்கிள்???

    ReplyDelete
    Replies
    1. வலையில் திரும்பவும் பாக்கறதுல மகிழ்ச்சி எஸ்தர். சிரித்து மகிழ்ந்ததற்கு என் மனம் நிறை நன்றி. மதுமதி அண்ணா தன் தளத்தில் எனக்கு இடம் தந்ததே விருந்துதானேம்மா...

      Delete


  19. நகைச் சுவைப்பதிவு மிகவும் நன்று

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. Instead of keeping the title as minnal varigal change this to PINNAL VARIGAL - Pinreenga sir. Very nice Post. Sometimes it so happes even in dreams we forget to realise whether it is a dream or real for which we do get up and see the surroundings, check up with the family members whether they are sleeping with us etc. Like that, when we are asked to provide our own life certificate, we feel perflexed. very nice post.

    ReplyDelete
    Replies
    1. ப்ளாக் பேரை மாற்ற நல்ல யோசனை தந்தீங்க நண்பா. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  21. ரசித்து சிரித்தேன்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என நன்றி நண்பரே.

      Delete
  22. சிறப்பான பகிர்வு. பாக்கியம் ராமசாமி அவர்களின் நகைச்சுவைக் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்தவை....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  23. பாக்கியம் ராமசாமியின் கதையை விழுந்து விழுச்து படித்தவள்.
    மிக்க நன்றி நினைவு படுத்தலிற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. விழுந்து விழுந்து படிச்சீங்களா? அடி எதுவும் படலையே? ஹி... ஹி... நானும் ரசித்துப் படித்தவன் என்பதால் பகிர்ந்தேன். ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  24. ஆஹா.. சூப்பரா இருக்கே இந்த கதை!! நான் கூட உங்கள பத்தி தான் எழுதறீங்கனு நினைச்சேன்.. கடைசில இது கதை யா/// அந்த படம் எப்படி சார் தேடி எடுத்து கரெக்ட் -ஆ போட்டு இருக்கீங்க....

    ReplyDelete
  25. பாக்கியம் ராமசாமி ஓரிரு கதைகள் படித்திருக்கிறேன் நகைச்சுவை நிறைந்தவை.நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது உங்களின் மூலம் நகைச்சுவை கதையை படித்தேன்.நன்றி...

    ReplyDelete
  26. Arumai!! Yeno thoppi kannaadi paarthavudan ezhuthaalar rajendra kumar nyaapagam vandhadhu!!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube