Monday, January 27, 2014

நாலுவரி நோட்டு

Posted by பால கணேஷ் Monday, January 27, 2014
 ‘‘பேசாம எல்லாத் திருக்குறளுக்கும், அகநானூறு. புறநானூறுக்கும் இளையராஜாவை இசையமைக்கச் சொல்லி பாட்டா கேக்க வெச்சா பசங்க ஈஸியா மார்க் எடுத்துடுவாங்கன்னு தோணுதுப்பா" என்று எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் ஒருமுறை விளையாட்டாகச் அலுத்துக் கொண்டார். ஆனால் அது நிஜம்தான்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே


-அப்படின்னு -திருநாவுக்கரசர் பெருமான் எழுதின பாடல் ஒண்ணு இருக்குது. இதை ‘வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?'ன்னு கட்டபொம்மன் சிவாஜி பேசுவாரே அதுமாதிரி வசனமாப் படிச்சுப் பாத்தா மனசுல பதியாது. தளபதி படத்துல ‘ராக்கம்மா கையத் தட்டு'ங்கற அதிரடிப் பாட்டுக்கு நடுவுல தென்றல் மாதிரி மெலடியா இந்த நாலு வரிகளை இளையராஜா இழைச்சிருப்பார். அதைக் கேட்டா அப்படியே மனசுல ஒட்டிக்கும். சினிமாப் பாடல்களோட மகத்துவம் அத்தகையது.


நாமல்லாம் கேட்டு ரசிச்சிருக்கற/ரசிச்சுட்டிருக்கற சினிமாப் பாட்டுக்களின் ஊடாக, நிறைய இலககியம், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் கலாச்சாரம், கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் நகைச்சுவைன்னு பல விஷயங்களை சின்னச் சின்னக் கட்டுரைகளா நமக்குத் தருகிறது ‘நாலுவரி நோட்டு' என்கிற புத்தகத் தொகுப்பு. ஆமாம... என.சொக்கன், ஜிரா, மோகனகிருஷ்ணன் என்கிற மூவரும் இணைந்து http://4varinote.wordpress.com/ என்கிற தளத்தில் எழுதியவற்றைத் தொகுத்து மூணு புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறாங்கள் முன்னேர் பதிப்பகம்.

முதல் புத்தகம் திரு.என்.சொக்கன் எழுதியவை. நாம் திரைப் பாடல்களில் இசையை மட்டும் ரசித்து, பெரும்பாலான சமயங்களில் வரிகளைக் கவனிக்காமல் போகிற போக்கில் விட்டுவிடுகிறோம். என்.சொக்கன் பல பாடல்களின் வரிகளைக் கூர்ந்து கவனித்து அவற்றுக்குப் பொருள் விளககம் தேட முனைகையில் எல்லாம் நமக்கு அடிக்கிறது ஜாக்பாட். எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள். வம்பு தும்பு என்ற சொலவடையில் தும்புக்குப் பொருள் என்ன என்கிற ஆராய்ச்சியி துவங்கி, குப்பை என்பதற்கு அர்த்தம் தேடுவது ஊடாக, ஜெயங்கொண்டாரின் இலக்கியப் பாடலை கண்ணதாசன் எளிமையான திரைப்பாடலாக்கியிருக்கும் சாதுயர்த்தை வியத்தல் வரை... ஒவ்வொன்றைப் படித்து முடிக்கையிலும், ‘அட! ஆமாம்ல... இதை நாம கவனிக்கத் தவறிட்டமே' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார் என்.சொக்கன். மெல்லிய நகைச்சுவை கோட்டிங்குடன் அமைந்திருக்கும் எழுத்து நடை என்.சொக்கனின் +. அதுவே கையிலெடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் புரட்டவும் வைக்கிறது. என்.சொக்கன் என்கிற பானையிலிருந்து எடுத்த ஒரு சோறு இதோ நீங்கள் பதம் பார்க்க....

சேலை வாசம் படம்: கொடி பறக்குது பாடல்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு எழுதியவர்: வைரமுத்து இசை: ஹம்சலேகா பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?
கிராமத்து மக்கள் 'சேலை'யைச் ‘சீலை' என்று அழைப்பார்கள். அவர்கள் சரியான சொல் தெரியாமல் கொச்சையாகப் பேசுவதாக நாம் நினைத்துக்கொள்வோம். ஆனால் நாம் Window Curtainsஐத் ‘திரைச்சீலை' என்று சொல்கிறோம், ‘திரைச்சேலை' என்று சொல்வதில்லை. அப்படியானால் எது சரி? எது கொச்சை?
இவை அனைத்துக்கும் வேர்ச்சொல்லாக நம்பப்படுவது, ‘சீரை'.
உதாரணமாக, தேவாரத்தில் சிவபெருமானைக் குறிப்பிடும் திருநாவுக்கரசர் இப்படி எழுதுகிறார்: ‘உடையும் சீரை, உறைவது காட்டிடை.' அதாவது, சிவன் அணிவது சீரை என்ற ஆடை, அதன் அர்த்தம், மரப்பட்டையை எடுத்துப் பதப்படுத்தி உருவாக்கப்பட்ட துணி. ‘மரவுரி' என்று சொல்வார்கள்.
ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டதோடு கைகேயி நிற்கவில்லை, அவன் காடு செல்லக் கிளம்புகிறான் என்று தெரிந்ததும், அவனுக்கு இந்தச் சீரையைதான் கொடுத்தனுப்புகிறாள். இதைப் பரதன் பின்னர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறான். சீரையை உடுத்தியது ராமன்மட்டுமல்ல, லட்சுமணனும், சீதையும்தான். இதைக் குறிப்பிடும் கம்பர் வாசகம், ‘சீரை சுற்றித் திருமகள் பின் செல…' ஆக, சீரை என்பது மரவுரி, அதை ஆண்களும் பெண்களும் உடலைச் சுற்றி அணிந்திருக்கிறார்கள். பின்னர் இதுதான் ‘சீலை’யாகத் திரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. நாம் இப்போது அதைச் ‘சேலை’ என்கிறோம். கன்னடர்கள் இன்னும் ‘சீரெ' என்றுதான் சொல்கிறார்கள்.
'சேலை கட்டிய பெண்ணை நம்பாதே' என்று ஒரு பழமொழி உண்டு, அதைக் கொஞ்சம் சமத்காரமாக, ‘சேல கட்டிய பெண்ணை நம்பாதே’ என்று மாற்றி, இப்படி ஒரு விளக்கம் சொல்வார்கள்: சேல கட்டிய பெண் : சேல் + அகட்டிய பெண் : சேல் (ஒருவகை மீன்) போன்ற வழிகளை அளவுக்கதிகமாக விரித்துப் பேசும் பெண் பொய் சொல்கிறாள், நம்பாதே!
அது சரி ,'புடவை'க்கு விளக்கம் என்ன?
முதலில், ‘புடவை' என்று எழுதுவது தவறு, அது ‘புடைவை' என்று இருக்கவேண்டும். ‘புடை' என்றால் பக்கம், ‘மந்திரிகள் புடை சூழ முதலமைச்சர் வருகை தந்தார்' என்று செய்திகளில் வருகிறதே, அதுதான். ஆக, ஒரு பெண்ணின் உடலை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி அணியப்படுகிற ஆடை என்பதால், அதற்குப் ‘புடைவை' என்று பெயர் வந்தது. பின்னர் அது எப்படியோ ‘புடவை' என்று திரிந்துவிட்டது.
அதேபோல், ‘துணி'ப்பதால் (துண்டித்து / கத்தரித்து) விற்பனை செய்வதால், அது ‘துணி'. இதே காரணத்தால் ஆடைக்கு ‘அறுவை' என்றும் பெயர் உண்டு (அறுத்துப் பயன்படுத்துவதால்).
அறுவை போதும் என்கிறீர்களா? சரி, இதோடு நிறுத்திக்கொள்கிறேன்,

இரண்டாவது புத்தகத்தை திரு.கோ.ராகவன் என்கிற ஜிரா எழுதியிருக்கிறார். இவர் தகவல் தொழில்நுட்ப மேலாளராக்ப் பணிபுரிவதாக ஆசிரியர் குறிப்பு கூறுகிறது. இந்தப் புத்தகத்தில் நக்கீரன், ஔவையார் துவங்கி, வைரமுத்து ஈறாக ஒவ்வொரு பாடல்களின் இலக்கிய நயத்தை இவர் பிரித்து அலசியிருக்கும் விதம் பிரமிப்பைத் தருகிறது. முதல் புத்தகம் ஒரு பாடலை எடுத்துக கொண்டு அதன் நயத்தை விளக்குகிறது என்றால் ஜிரா தன் புத்தகத்தில் ஒரே கட்டுரையில் பல பாடல்களைக் குறிப்பிட்டு அலசுகிறார். அந்தப் பாடல்களில் ஒற்றுமை, ரசனை, அவற்றில் மறைந்திருக்கும் இலக்கியம் என்று அலசுகிற கட்டுரைகளின் சுவாரஸ்யம் இந்த இரண்டாவது புத்தகத்தின் +. ஜிரா அவர்களின் எழுத்திலிருந்து ஒரு சாம்பிள் பீஸ் இங்கே நீங்கள் சுவைத்துப் பார்க்க...


உதடுகளில் உன் பெயர்
தூது செல்வதாரடி உடன் வரத் தூது செல்வதாரடி வான் மதி மதி மதி மதி அவரென் பதி என் தேன் மதி மதி மதி கேள் என் சகி உடன் வரத் தூது செல்வதாரடி
படம் – சிங்காரவேலன் பாடல் – பொன்னடியான் பாடியவர் – எஸ்.ஜானகி இசை – இசைஞானி இளையராஜா
காதற் குளத்தில் விழுந்து முழுகி காப்பாற்ற யாருமின்றித் தவிக்கும் ஒரு காதலி அவளுடைய காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்று புரியாமல் தத்தளிக்கிறாள். அதுதான் மேலே சொல்லியிருக்கும் பாடல்.
காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்பதே ஒரு பெரிய பிரச்சனை. 'தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாளோ தலைவி' என்று கண்ணதாசன் கூட முன்பு எழுதினார். அதற்கு முன்பு அன்னத்தை தூது விட்டாள் தமயந்தி என்று புகழேந்திப் புலவன் நளவெண்பாவில் எழுதினான். மேகத்தைத் தூது விட்டதைப் பற்றி காளிதாசன் வடமொழியில் எழுதினான். கண்ணையும் கண்ணையும் தூது விட்டு அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி காதலில் விழுந்ததை கம்பனும் எழுதினான். சுந்தரமூர்த்தி நாயனாரோ காதலுக்கு ஈசனாரையே தூது விட்டார்.
இப்படி தூதாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அனுப்பியிருக்க காளமேகம் அத்தனையும் ஒன்றுக்கும் உதவாதது என்று ஒதுக்கி விடுகிறான். சும்மா ஒதுக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணத்தோடுதான் ஒதுக்குகிறான். அந்தக் காரணங்களைப் பட்டியலிட்டு நமக்காக ஒரு பாட்டையும் ஒதுக்குகிறான்.
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி
என்ன? ஒன்றும் புரியவில்லையா? கொஞ்சம் பிரித்துப் பிரித்துச் சொல்கிறேன். புரிகின்றதா என்று பாருங்கள்.
தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும் தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே
என்னடா கொடுமை இது? தாதியையும் தூது அனுப்பக் கூடாது. கிளியை அனுப்பினால் சொன்னதையே சொல்லி உளறிவிடும். தோழியை அனுப்பினால் எதுவும் காலத்தில் ஆகாது. தெய்வத்தையே துதித்துக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இராது. அப்படியானால் என்னதான் செய்வது? எதுதான் நல்லது? அதுதான் பாடலின் கடைசி வரி.
தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!
இதைத்தான் பின்னாளில் “உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது. அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது" என்று நா.காமராசன் தங்கரங்கன் படத்துக்காக எழுதினார்.

நாலுவரி நோட்டின் மூன்றாவது புத்தகம் திரு.மோகனகிருஷ்ணன் அவர்களின் எழுத்து வண்ணத்தில்! தோளில் கை போட்டு ஒரு நண்பனுடன் பேசுகிறதைப் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் இவரது எளிமையான எழுத்து நடை புத்தகத்திற்கு ஒரு +. இவரும் தன் கட்டுரைகளில் ஒரு பாடலுடன் பல பாடல்களை மேற்கோள் காட்டி பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருககும் அர்த்தங்களைத் தேடி அவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் ‘அட1’ என்கிற வியப்பை ஏற்படுத்துகிறார். திரு.ரா.கி.ரங்கராஜன் ‘வினோத்’ என்ற பெயரில் ‘லைட்ஸ்ஆன்’ குமுதத்தில் எழுதியபோது தமிழுடன் ஆங்கிலம் கலந்த ரசனையான தமிழாங்கில நடையைக் கைக்கொண்டிருந்ததை ரசிக்காதவர்கள் இல்லை. திரு.மோகனகிருஷ்ணனின் எழுத்திலும் ஆங்காங்கே டெய்ல் பீஸாகவும், இடையிடையேயும் வரும் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களும் பாயாசத்தில் முந்திரியாய் ரசிக்கத்தான் வைக்கின்றன. இவரின் படைப்பு அருவியிலிருந்து சிதறிய ஒரு துளியை இங்கே பார்க்கலாம்...


முரண்களைக் கோத்து மாலை
எண்பதுகளின் துவக்கத்தில் வந்த படங்களில் ஒரு தலை ராகம் முக்கியமானது. நிறைய புதியவர்கள், கல்லூரி ரயில்வே ஸ்டேஷன் வித்தியாசமான களம் என்று சில அடையாளங்களுடன் வந்து மிகப்பெரிய Blockbuster வெற்றி பெற்றது. படத்தின் பாடல்கள் இசைக்காகவும் வரிகளுக்காகவும் பரபரப்பாக பேசப்பட்டன. இதில் எல்லா பாடல்களும் ஆண் குரலில் ஒலிக்கும். இது ஒரு தலை காதல் என்பதை குறிக்கவே என்று அந்த நாளில் கல்லூரியில் விவாதித்ததுண்டு.
எழுதி இசையமைத்தவர் என்று T ராஜேந்தருக்கு படம் வந்தபோது முழு Credit கொடுக்கப்படாவிட்டாலும் பின்னர் வந்த வெற்றிகள் அவர் உழைப்புக்கும் வேர்வைக்கும் பேர் வைத்தது. இதில் முரண்களைக் கோர்த்து மாலை செய்த இனிமையான பாடல் ஒன்று உண்டு. காதல் கைகூடாது என்று வலியுடன் நாயகன் பாடும் பாடல். நடக்க முடியாத அல்லது முரண்பட்ட அல்லது தொடர்ச்சியாக அமையாத அல்லது பொருத்தமில்லாத நிகழ்வாக சில உதாரணங்களை சொல்லி அதுபோலவே தன் காதலும் என்று சொல்லும் பாடல்.
இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
பூபாளம் அதிகாலை ராகம் அது இரவில் பொருந்தாது. மேற்கில் உதயம் நடக்கவே நடக்காது. நதியில்லாத ஓடம் உபயோகமற்றது – என்று தன் காதலின் நிலை சொல்லும் வார்த்தைகள். (சமீபத்தில் ராம் படத்தில் வந்த ஆராரிராரோ பாடல் குழந்தை பாடும் தாலாட்டாக. சரணத்திலும் தொடரும் இந்த அமைப்பு – சில வரிகளைப்பாருங்கள்
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்.. வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
ஆனால் கூர்ந்து கவனித்தால் நாயகன் தன் நிலையை நன்கு உணர்ந்திருக்கிறான் என்றே தோன்றுகிறது. சரணங்களின் முடிவில் வரிகளை கவனியுங்கள் .
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன் விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன் ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
வாழ்வின் அர்த்தமின்மை, உலகை வெறுக்கும் நிலை, வாழ விருப்பமின்மை என்று கதை சொல்லும் பாடல்.
இது என்ன வகைப்பாடல்? இது போல் அது என்று சொல்லும் உவமை மாதிரி தோன்றவில்லை .இது Compound Similie என்று எங்கோ படித்த நினைவு ஆனால் இப்போது கூகிளினால் அது பொருந்தவில்லை. Incongruity , முரண்கள், Inverted Parallels , நெகடிவ் metaphor, என்று கலந்து கட்டி – ஆனால் கேட்டவுடன் ரசிக்கக்கூடிய வரிகள்.
இது போல் வேறு பாடல் உண்டா? கொஞ்சம் யோசித்தால் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடல் இந்த வகையோ என்று தோன்றுகிறது. அதில் களமும் காட்சியும் வேறு. நாயகியை சிரிக்கவைக்க மனதில் தோன்றியதை வாயில் வந்ததை குஷியாக பாடும் பாடல்
இது என்ன வகை ? தெரிந்தால் சொல்லுங்கள்.

இந்த மூன்று புத்தகங்களும் தலா ஒவ்வொன்றும் 160 பக்கங்கள் கொண்டவை. முன்னேர் பதிப்பகத்தினர் (நூலில் முகவரி இல்லை) நல்ல தாளில் அழகான அச்சமைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். நூலை எங்கு பெறலாம், இணையத்தில் கிடைக்குமா போன்ற விவரங்களை விசாரித்து, அடுத்ததாக நான் பதிவிட இருக்கும் ‘மொறு மொறு மிக்ஸர்’ ஊடாக சொல்லி விடுகிறேன். ரைட்டா...?

53 comments:

  1. முரண்களைக் கோத்து மாலை பாடல்கள் உட்பட அனைத்து பாடல்களும் ரசிக்கத் தக்கவை... இந்த ஆராய்ச்சி மிகவும் பிடிக்கும் என்பதால், மொறு மொறு மிக்ஸர் மூலம் விரைவில் தகவல் அறிய ஆவல்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  2. ///சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா? ///

    ஆமாங்க துவைக்காத சேலையை கட்டி பஸ்ஸில் வரும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு ஆனால் அதை அணிந்து வரும் பெண்களிடம் சொன்னது இல்லை , வம்புதும்புக்கு போகாத அப்பாவிங்க நான்

    ReplyDelete
    Replies
    1. நல்லா மூக்கை இழுத்து வாசம் மட்டும் புடிப்பீங்க... அவங்க கிட்ட சொன்னா வம்புன்னு பேச மாட்டீங்க. நீங்க அப்பாவி...? அவ்வ்வ்வ்வ்!

      Delete
  3. பதிவில் Scroll Box Text அருமை... பாராட்டுக்கள்... அதை பதிவில் ஒவ்வொரு Scroll Box-யின் மேலும் குறிப்பிட்டால் வாசகர்கள் அறிவார்கள்... ஏனென்றால் Box-யின் வண்ணம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாலே புரிஞ்சுடுமேன்னு நினைச்சுத்தான் குறிப்பிடாம விட்டுட்டேன் நணபா! சில விஷயங்களை தானா கண்டுபிடிக்கறதுதான் அழகு! மிக்க நன்றி!

      Delete
  4. பதிவில் scroll முறையை அறிமுகப்படுத்தியது புதுமை & அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  5. மிக அருமையான தகவல்கள்...!

    த்தூ... த்தூன்னு... கவுஜயத் துப்பி... சொம்மா பூந்து வேளையாடிக்கீறார்பா நம்ப காளமேகம்...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... காளமேகத்தின் இந்தப் பாட்டை ‘வானம்பாடி’ படத்துல ‘ஆண்கவியை வெல்லவந்த’ பாடல்ல கண்ணதாசன் அருமையா பயன்படுத்தியிருப்பாரு. கேட்டுப் பாருங்க... ரசிச்சுப் படிச்சு ‘போட்டு’ மகிழ்வித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  6. பதிவுகள் எல்லாம் புத்தகமாகும் காலம் ....மகிழ்ச்சி அடைகிறேன் !
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை பதிவர்கள் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கை கூடியிருப்பது கண்டு நானும் மகிழ்கிறேன் பகவான்ஜீ! மிக்க நன்றி!

      Delete
  7. வித்தியாசமான ஸ்க்ரோல் முறை அருமை அண்ணே...

    எழுத்தாளர்கள் கலக்கி இருக்கிறார்கள்....

    இம்புட்டு திரை ஜாம்பவானாக வலம் வந்த ராஜேந்தர் இப்படி காமெடி பீசைவிட தரம் தாழ்ந்து போனதுதான் ஆச்சர்யம்...!

    ReplyDelete
    Replies
    1. ‘ஒரு தாயின் சபதம்’ வரை டி.ஆருக்கு இறங்குமுகமே இல்லை. அப்புறம்தான் ஏற்ற இறக்கம் மாறி மாறி... ஓ...! நீங்க அரசியல்லயும் புகுந்துட்டதை வெச்சு பேசறீங்களா? ஹி... ஹி...! எழுத்தாளர்களின் படைப்பை ரசித்து, என் புது முயற்சியான ஸ்க்ரோல் பாரையும் பாராட்டிய பிரதருக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  8. பயனுள்ள புத்தகத்தை
    அறிமுகம் செய்தமைக்கு நன்றி
    அடுத்த பதிவை ஆவலுடன்
    எதிர்பார்க்கவைத்துவிட்டீர்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  9. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துவிட வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வாசித்து மகிழுங்கள் வெற்றி! உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. தங்களின் அழகான வடிவமைப்புடன் கூடிய விமர்சனம் புத்தகம் படிக்கும் ஆவலை உண்டாக்கியது.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் படிச்சுடலாம் சசி. அழகான வடிவமைப்புன்னு சொல்லி உற்சாகம் தந்த உனக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  11. சிறப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வினை ரசித்த உங்களுக்கு பரவசமுடன் என் நன்றி!

      Delete
  12. நல்ல பகிர்வு.நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நலல பகிர்வென்று கூறி உற்சாகம் தந்த உங்களுக்கு உளங்கனிந்த நன்றி!

      Delete
  13. அதென்னங்க ஸ்க்ரோல் பாக்ஸ் டெக்ஸ்ட். ? ஒண்ணும் பிரியலியே. சினிமாப் பாடல்களில் திரு திண்டுக்கல் தனபாலனை யாரும் முந்துகிறார்களா.?

    ReplyDelete
    Replies
    1. பதவின் இடையில் புத்தகங்களிலிருந்து தரப்பட்டிருக்கும் மேற்கோள்களை வலப்பக்கமிருக்கும் பாரை நகர்த்துவதன் மூலம் முழுமையாகப் படிக்கும் வசதிதான் ஸக்ரோல் பார் என்பது ஐயா! தி.த.வை முந்துறது கஷ்டம்தான்! மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  14. அண்ணே! புது ஸ்கோரல் பாக்ஸ்!? கலக்குறீங்க!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க உங்க அண்ணனும் இப்ப 'கலக்க' ஆரம்பிச்சிட்டாரு

      Delete
    2. இன்னும் நிறைய ‘கலக்க’ணும்னுதான் ஆசை! ஹி... ஹி....!

      Delete
  15. சினிமா பாடல்கள் சம்பந்தப்பட்ட நூல் என்பதால் படிக்கணும்னு ஆர்வம் இருக்கு..

    எழுத்தில் இனிமை, ப்ளாக்கில் புதுமை, கலக்கறீங்க சார்..

    ReplyDelete
    Replies
    1. இனிமை + புதுமை என்று ரசித்த ஆவிக்கு அகமகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  16. சுவாரஸ்யமான புத்தகம பற்றி புதுமையான விமர்சனம்..1

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  17. நூல் அறிமுகம் சிறப்பு! என் சொக்கனின் சேலை ஆராய்ச்சி அசர வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படித்த ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  18. நல்ல பயனுள்ள தகவல்! புத்தக றுமுகத்திற்கும் நன்றி! மொறு மொறு மிக்ஸர்’ எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!

    நல்ல பதிவு! பகிரர்வுக்கு நன்றி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து என் பகிர்வுகளைப் படித்துக் கருத்திட்டு உற்சாகம் தரும் உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி!

      Delete
  19. அருமையான அறிமுகத்துக்கு மிக்க நன்றி திரு. பால கணேஷ்.

    நூல்கள் இங்கே கிடைக்கும்: https://www.nhm.in/shop/home.php?cat=2551

    இணையத்துக்கு வெளியே வாங்க விரும்புவோர் (0)9900160925ஐ அழைக்கலாம். மூன்று நூல்களையும் வாங்கும் சென்னை வாசகர்களுக்கு 10% தள்ளுபடி + கூரியர் இலவசம். சென்னைக்கு வெளியே உள்ளோருக்குக் கூரியர் செலவைமட்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலும்.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தகவல்களை உங்களிடம் கேட்டு வாங்கிட்டு அப்புறம் நான் வெளியிட்டிருக்கணும். ஸாரி ஸார்! இப்ப நீங்க சொல்லியிருக்கறதை அடுத்த பகிர்விலும் வெளியிட்டுடறேன். அருமையான நூல்களைப் படிக்கும் அனுபவம் எனக்குக் கிடைக்கக் காரணமான உங்கள் மூவருக்கும் நான்தான் நன்றி சொல்ல வேண்டும். மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  20. வணக்கம்
    ஐயா.

    புத்தகம் பற்றிய அறிமுகம் பார்த்த போது.. வாங்கி படிக்க வேண்டி சொல்லுது...ஐயா...
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  21. நன்கு தெரிந்த பாடல்களில் கூட அதன் நயத்தை பலரும் கவனிப்பதில்லை. பிறர சொல்லும்போது இதை கவனிக்கவில்லையே என்று எனக்கும் பல முறை தோன்றியதுண்டு. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இது போன்ற பாடல்கள் பாடப்படுவதில்லை. பழைய பாடல் என்றல் எம்.எஸ்.வி. இடைப்பட்ட பாடல் என்றால் ராஜா, புதியது என்றால் ரகுமான் இன்வர்கள் இசை அமைத்த பாடல்களையே பாடுகிறார்கள்.கொஞ்சமாக இசை அமைத்தாலும் நல்ல பாடல்களை தந்த இசை அமைப்பாளர்களின் பாடல்களை பாடுவதில்லையே என்று நினைப்பதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்...! அதிகம் பிரபலம் அடையாத அருமையான இசையமைப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் முரளி! இப்படி பாடல் வரிகளை ஆராய்ந்து நயத்துடன் ரசிக்கும் போது கிடைப்பது கூடுதல் மகிழ்வு! நற்கருத்திட்ட உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  22. என்ன எழுதினாலும் சொக்கனை புத்தகமாக்கி விடுகிறார்கள் ஆச்சரியக்குறி...! நேரமிருந்தால் உங்களிடம் இருந்து லவட்டி படிக்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. எதை எழுதினாலும் புத்தகமாக்கற அளவுக்கு நாமளும் என்றாவது ஆகணும்னு எனக்குள்ளயும் ஒரு ஆசை (பேராசை?) உண்டு. என்.சொக்கன் அவர்களைப் பார்த்து வியப்பதும் அதுவே! ‘லவட்ட’ எப்ப வேணும்னாலும் வெல்கம்யா! டாங்ஸு!

      Delete
  23. பயனுள்ள நூல் அறிமுகம்
    ஸ்க்ரோல் பாக்ஸ்
    அருமை ஐயா அருமை
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  24. சிறப்பான பகிர்வு கணேஷ்... மூன்று புத்தகங்கள் பற்றிய விமர்சனம் ஒரே பதிவில். வாழ்த்துகள். கிடைக்குமிடம் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  25. ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி!

    ReplyDelete
  26. புத்தகங்களைப் பற்றிய தகவல்களும், ஸ்க்ரோல் பார் அமைப்பும், பாடல்களும் என எல்லாமே அருமை... பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  27. உங்கள் விமர்சனம் புத்தகம் வாங்கி படிக்க தூண்டுகிறது... அந்த வலைப்பூவுக்கு செல்லவும் விழைகிறது!!! சூப்பர் சார்...

    ReplyDelete
  28. While going through the lines of Attukutti muttaiyittu.... one seyyul of avvai patti struck my mind which I read in my school days. That seyyul goes like this: Surai Azha Ammi Midakka....

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube