Saturday, January 14, 2012

கேப்ஸ்யூல் நாவல்-4

Posted by பால கணேஷ் Saturday, January 14, 2012
ல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தில் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக:

கொலையுதிர் காலம்

ணேஷும் வஸந்த்தும் தீபக் என்பவனி்ன் வேண்டுகோளின்படி லீனா என்கிற பெண்ணின் சொத்து விஷயத்தைக் கவனிப்பதற்காக அவள் சித்தப்பா குமார வியாசன் என்பவரை செங்கல்பட்டுக்கு அப்பாலுள்ள ஒரு கிராமத்திலுள்ள எஸ்டேட்டில் சந்திக்கிறார்கள். குமாரவியாசன், லீனாவின் மேல் ஆவி வருவதாகவும், அவள் சென்ற ஆண்டு ஒரு கொலை செய்து விட்டாள் என்றும், தான் அதை மறைத்து விட்டதாகவும் சொல்கிறார். அங்கே தங்கும் கணேஷும் வஸந்த்தும் மாடியறையில் பல வினோதக் குரல்களைக் கேட்கிறார்கள். மேலே சென்று பார்த்தால் பழைய சாமான்கள் போட்டிருக்கும் அறை அது. யாரும் அங்கு இல்லை. இரவில் சுனை அருகில் உள்ள மண்டபத்தில் சாம்பல் நிறத்தில் லீனாவை ஒத்த உருவமுடைய ஆவி உருவத்தையும் பார்க்கிறார்கள்.

வஸந்த் காலையில் வினோதக் குரல்கள் கேட்ட அறையிலிருந்து ‘சில வினோதங்கள்’ என்ற பழைய புத்தகத்தை எடுத்து வருகிறான். அதில் பிசாசு வரு‌வதைப் பற்றியும், அது வியாசர்கள் பரம்பரையை சாபத்தின் காரணமாக அழித்து வருவதாக இருப்பதையும் காட்டுகிறான். அவன் சென்றதும் கணேஷ் அந்தப் புத்தகத்தை எடுக்க முற்பட, அது தானாக நகர்ந்து புத்தக அலமாரிக்குச் செல்ல, திடுக்கிடுகிறான் கணேஷ்.

ன்றிரவு குமாரவியாசனும் லீனாவும் உடன்வர, கணேஷும், வஸந்த்தும் மீண்டும்  சுனை மண்ட பத்தில் பிசாசைப் பார்க்கிறார்கள். கணேஷ் துணிவாக அதன் மிக அருகில் சென்றுவிட, எதனாலோ தாக்கப்பட்டு வீழ்கிறான். சிகிச்சைக்குப் பின் கண் விழித்து, தன்னை ஆவி அடித்தது என்பதை நம்ப முடியவில்லை என்கிறான் கணேஷ். மறுதினம் மண்டபத்தருகில் ஒரு பிணம் கிடப்பதாக தோட்டக் காரன் வந்து அலறுகிறான். போலீஸ் வர, இன்ஸ்பெகட்ர் பிணத்தின் அருகில் லீனாவின் ஒரு காது ஸ்டட்டையும், உடைந்த வளையல்களையும் கண்டெடுக்கிறார். குமாரவியாசன் அது லீனா செய்த இரண்டாவது கொலை என கணேஷிடம் சொல்கிறார்.

வஸந்த் சில விவரங்கள் சேகரிக்க சென்னை செல்ல, தனியே இருக்கும் கணேஷ் இரவில் லீனாவின் குரல் கேட்டு எழ, ஒரு இருள் உருவத்தால் தாக்கப்படுகிறான். உடன் போன் செய்து வஸந்த்தை வரச் சொல்கிறான். காலை இன்ஸ்பெக்டர் வந்து மண்டபத்தில் கிடந்த பிணம் மார்ச்சுவரி போகும் வழியில் காணவில்லை யென்றும் அதை ஒரு பேய் உருவம் தூக்கிச் சென்றதை ஒருவன் பார்த்ததாகவும் கூறுகிறார்.

கணேஷ், குமாரவியாசனை சந்தேகித்து, லீனா+குமாரவியாசனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செலவதாகவும், அவர் அறையில் ஆராயும் படியும் வஸந்த்திடம் சொல்கிறான். வஸந்த் அவர் அறையில் எலக்ட்ரீஷியன் வேலைக்கான விளம்பரத்தையும், குமாரவியாசன் அவனுக்கு வேலை கொடுத்த ஆர்டரையும் கண்டுபிடிக்கிறான். இறந்தது அந்த மெக்கானிக்காகத் தான் இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். போலீஸ் சூப்பிரண்டன்ட் விசாரணைக்கு வர, அவருடன் அனைவரும் மண்டபத்தருகில் ஆவியைப் பார்க்கப் போகிறார்கள். கணேஷ் சைகை செய்ய, வஸந்த் நழுவி கு.வியாசனின் அறையில் மேலும் ஆராயச் செல்கிறான். ஆவியைக் கண்டு சூப்பிரண்டன்ட் உட்பட அனைவரும் மிரண்டு திரும்பிவர, ஆவி பேசிய வார்த்தைகளை தான் எப்போதோ பேசி, அதேபோல அழுதிருப்பதாக லீனா கணேஷிடம் சொல்கிறாள். அப்போது வஸந்த்தின் அலறல் குரல் கேட்டு சென்று பார்க்க, மிகமிக மோசமாகத் தாக்கப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடக்கிறான் வஸந்த்.

வஸந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட, லீனாவின் உதவியுடன் குமாரவியாசனின் அறையை ஆராயும் கணேஷ், பாத்ரூமில் ஒரு புத்தக அலமாரியைக் கண்டுபிடிக்கிறான். ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வர, வஸந்த் பிசாசின் வசனங்கள் எழுதிய ஒரு பேப்பரை தான் வியாசன் பாத்ரூம் வாசலில் கண்டெடுத்தபோது தாக்கப்பட்டதாக கூறுகிறான். அப்போது அங்கு வரும் கு.வியாசன், கணேஷ்+லீனாவை ஒரு முக்கிய விஷயமாகப் பேச மாலை எஸ்டேட் வரும்படி கூறிச் செல்கிறார். மாலையில் செல்லும் கணேஷும் லீனாவும் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாசனின் பிணத்தைத்தான் பார்க்கிறார்கள்.

போலீஸார் அங்கு முற்றுகையிட, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிக் ஆக்ஸ் லீனாவின் பெட்டியில் அவள் புடவைக் கிடையிலிருந்து கிடக்கிறது. கணேஷிடம், ‘வெங்கடேஸ்வரனை 6’ என்று ஏதோ கடிதம் எழுதத் துவங்கும்போதுதான் வியாசன் அடிபட்டிருக்கிறார் என்று சொல்லி அந்தக் காகிதத்தைக் காட்டுகிறார் இன்ஸ். கணேஷும் வஸ்ந்த்தும் சென்னை திரும்ப, வஸந்த் துப்பறிந்து வெங்கடேஸ்வரனைக் கண்டு பிடிக்கிறான். லீனாவின் பண்ணை வீட்டை மும்பை பார்ட்டிக்கு லீசுக்குவிட தன்னிடம் குமாரவியாசன் ஒரு லட்சம் அட்வான்ஸ் பெற்றிருப்பதாக சொல்கிறார். லீனா போன் செய்ய, தீபக் வந்து அவளை அழைத்துச் செல்கிறான்.

ஸந்த் நடப்பவையெல்லாம் அமானுடத்தின் செயல் என்ற கட்சியில் ஆதாரம் தேட, கணேஷ் அந்தச் சம்பவங்களின் விஞ்ஞான சாத்தியங்களை ஆராய முற்படுகிறான். ஹோலோகிராம் என்ற லேஸர் பிம்பத்தின் மூலம் இப்படி காட்சிகளை அமைப்பது சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அதில் கில்லயாடியான புரொபசர் ராமபத்ரன் என்பவரை சந்தித்துப் பேச அவர் அசையும் உருவங்கள் சாத்தியமில்லை என்று கூறிவிடுகிறார். கணேஷ் தங்கள் அறைக்கு வர, வஸந்த் வந்திருக்கவில்லை. ஃபேனைப் போட, மேலிருந்து ‌ஒரு வெட்டுண்ட கை விழுகிறது. அதை போலீஸ் உதவியுடன் லாபுக்கு அனுப்புகிறான். தீபக்கும் லீனாவும் வந்து தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிச் செல்கின்றனர்.

நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஆவி ரீதியாக வஸந்த் விளக்கங்கள் தர, அகண்ட சொத்தினை மோட்டிவ்வாக வைத்து நடப்பவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாக சாத்தியமே என்று விளக்குகிறான் கணேஷ். வஸந்த் வியந்து போக, லீனாவின் அகண்ட சொத்துக்கு அவளையும், வியாசனையும் அழித்தால் பயனடையக் கூடிய மூன்றாவது வாரிசு யாராவது இருக்க வேண்டுமென்கிறான் கணேஷ்.

வேறொரு விஞ்ஞானக் கட்டுரையில் நகரும் ஹோலோகிராம் பிம்பங்கள் சாத்தியம் என்று படிக்கும் கணேஷ், அது சம்பந்தமாக ஒரு புத்தகம் வாங்கி வர வஸந்தை அனுப்புகிறான். கமிஷனர் ராஜேந்திரன் போன் செய்து, அந்த வெட்டுண்ட கை ஒரு மெடிக்கல் காலேஜ் அனாடமி லாபிலிருந்து கண்ணியமாக உடையணிந்த ஒருவனால் வாங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த விட்டதைச் சொல்கிறார். அப்போது வஸந்த் பதட்டமாக ஓடிவந்து, கணேஷ் வாங்கிவரச் சொன்ன புத்தகத்தில் கட்டுரை எழுதியவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இருப்பதாகவும்,  புரொஃபசர் ராமபத்ரனின் முழுப்பெயர் ராமபத்ர வியாசன் என்றும் சொல்கிறான்.

அவர்தான் மூன்றாவது வாரிசு என்பது புரிந்துவிட, அவர் முகவரியைக் கண்டுபிடித்த கணேஷும் வஸ்ந்த்தும் அவர் வீட்டில் ஆராய, தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்றிருக்கும் தீபக்-லீனாவைத் தொடர்ந்து அவர் சென்றிருப்பதை அறிகிறார்கள். உடன் தங்கள் காரில் ஊட்டிக்கு விரைந்து சுற்றித் தேட, ஏரியில் தீபக் மட்டும் நிற்கிறான். புரொஃபசர், லீனாவுடன் போட்டிங் சென்றிருப்பதாக சொல்கிறான். மற்றொரு படகில் சென்று அந்தப் படகு மட்டும் அனாதையாகக் கிடப்பதையும் கரையோரம் ஒரு தனி வீட்டில் லீனா இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். நடு ஏரியில் ரமபத்ரன் தன்னைப் பிடித்துக் கொண்டதில் படகு கவிழ்ந்துவிட, நீரில் இருவரும் விழுந்ததாகவும், நீச்சல் தெரியாத அவர் இறுகப் பற்றிக் கொள்ள, உதறிவிட்டு தான் நீந்தி தப்பி விட்டதாகவும் லீனா கூறுகிறாள். போலீஸில் ரிப்போர்ட் செய்துவிட்டு அவர்கள் திரும்புகின்றனர்.

நடந்தவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகவே நடந்தன என கணேஷ் சொல்ல, பைசாசம் செய்தது என்று வஸந்த் வாதிட, அந்தக் கேள்விக்கான விடையை வாசகர்களிடமே விட்டுவிட்டு நாவல் நிறைகிறது.

53 comments:

  1. fastfood மாதிரி , ஒரு கிராஷ் கோர்ஸ் மாதிரி இருந்தது
    உங்கள் கேப்ச்யுல் நாவல் !
    அரிய முயற்சி ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  2. @ ஸ்ரவாணி said...

    உடனே படித்ததோடு தட்டியும் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழி!

    ReplyDelete
  3. Naan intha Novel padiththathu illai. Ungal pathivai padiththathum athai padikka aaval varugirathu. Arumai Sir!

    ReplyDelete
  4. அருமை.
    குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. மிகவும் விறுவிறுப்பான கதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  6. @ துரைடேனியல் said...

    முழுமையாகப் படித்துப் பாருங்கள் துரை. மனதை மயக்கும் ஒரு விறுவிறுப்பான படைப்பு இது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  7. @ Rathnavel said...

    ஆம்! பள்ளிப் பருவத்தில் ஜெ. வரைந்த ஓவியங்களுடன் ஒவ்வொரு வாரமும் குமுதத்தின் வருகைக்காக என்னைக் காத்திருக்க வைத்த தொடர்கதை இது. நீங்களும் அப்ப படிச்சிருக்கீங்களா? மகிழ்ச்சி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  8. முன்பே தொடராக வந்தபோதே படித்தது
    எனக்கு மிகவும் பிடித்தது!
    இங்கே மீண்டும் நினைவு படித்தினீர்
    சுருக்கமாகச் சுவை குன்றாமல்!
    நன்றி!
    சா இராமாநுசம்

    ReplyDelete
  9. மனதை மயக்கும் ஒரு விறுவிறுப்பான படைப்பு...ஆண்டுக்கு ஒரு முறை படித்தாலும் திகட்டாது...பொங்கலைப்போல...

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  10. தை திருநாள் வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  11. நாவல் முழுதும் படித்திருக்கிறேன் நண்பரே.
    அற்புதமான ஒரு நாவல்.
    எனக்கு பிடித்த நாவல்களுள் இதுவும் ஒன்று.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
    அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நான் இக்கதையை இதற்கு முன் படித்ததில்லை. கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுன்ற பழமொழிக்கேற்ப விறுவிறுப்பு குறையாமல் கொடுத்திருக்கீங்க. நன்றி அண்ணா

    ReplyDelete
  13. இப்பொங்கல் திருநாளில் எனது அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா

    ReplyDelete
  14. தலைவரே... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... எழுத்துக்களை போலவே பேச்சும் மின்னல் வரிகள்தான்...

    ReplyDelete
  15. ம்ம்...சொன்னபடி பொலிஸ்கதை எழுதிட்டீங்க.சரி சரி வாசிச்சேன்.பதில் தெரியும் சொல்லமாட்டேன் !

    ReplyDelete
  16. @ புலவர் சா இராமாநுசம் said...

    தாங்கள் ரசித்த கதையை இன்று மீண்டும் படித்து ரசித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் நன்றி!

    ReplyDelete
  17. @ ரெவெரி said...

    ஆமாம் ரெவெரி ஸார்! நான் பலமுறை இந்தப் படைப்பைப் படித்திருக்கிறேன். இப்பவும் போரடிக்காமல்தான் இருக்கிறது. உங்களுக்கு என் ந்ன்றி + இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. @ ரசிகன் said...

    வாருங்கள் ரசிகன்! வரு‌கைக்கு மிக்க நன்றி + தங்களுக்கு என் உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. @ மகேந்திரன் said...

    படித்து மகிழ்ந்ததை இப்போது மீண்டும் படித்து ரசித்த உங்களுக்கு என் ந்ன்றியையும், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  20. @ ராஜி said...

    படிச்சதில்லையா? முழுமையா ஒருமுறை படிச்சுப் பாரும்மா... ரொம்பவே பிடிக்கும். உனது பொங்கல் வாழ்த்தினால் மிக மகிழ்ந்தேன். என் உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உனக்கும், வீட்டில் அனைவருக்கும்! நன்றி்ம்மா!

    ReplyDelete
  21. @ Philosophy Prabhakaran said...

    பிரபா! இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி எனக்கு நிறைய நண்பர்களை பெற்றுத் தந்து்ள்ளது. அந்த நட்புகளை எப்போதும் நெருக்கமாக வைத்திருக்க வேண்டும் என்பது என் புத்தாண்டு விருப்பம். உங்களையும் நண்பர்களையும் சந்தித்து உரையாடியவை ‌என் மனதில் நிற்கும். உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  22. @ ஹேமா said...

    போலீஸ் கதைய நான் எங்கங்க எழுதினேன்? லெஜண்ட் சுஜாதா எழுதினதைத்தானே தந்திருக்கேன். அந்த மில்லியன் டாலர் கொஸ்டினுக்கு உங்களுக்கு விடை தெரியுமா? அசத்திட்டீங்க. உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  23. முதற்கண் எனது சந்தேகம், கேப்ஸ்யூல் நாவல் பகுதியில் அடுத்து கொ.கா தான் என்று ஏற்கெனவே முடிவெடுத்திருந்தீர்களா....அல்லது கொலையுதிர் பதிவு என்று சொன்ன காரணத்தினால் அடுத்து இது என்று தெரிவு செய்தீர்களா...!!

    கதையைச் சாறாய்ப் பிழிந்து ஒரு டம்ளர் ஜூஸ் தருவது எளிதான ஒன்றல்ல. எதையும் விடாமல் மிக அழகாக தந்திருக்கிறீர்கள். (என்ன, வசந்த்தின் "ஆ..கிள்ளுது, கிள்ளுது.." போன்ற நகைச்சுவைகளைத்தான் சுருக்க முடியாது!!) வாசகர்கள் முடிவுக்கே விட்டு விட்டு விட்டாலும் ஆவி பறந்தபடி பிணத்தின் கை கால்களைப் பிய்த்துச் சாப்பிடுவது விஞ்ஞானத்தால் விளக்க முடியாது! (கருகிய கடிதம் என்ற தமிழ்வாணனின் கதையில் முப்பரிமான ஹோலோக்ராம் வடிவம் பற்றி அப்போதே அவர் எழுதியிருப்பார். அதுவும் நாவலில் வரும் என்று நினைக்கிறேன்!

    ஆனாலும் மறக்க முடியாத அழகான கதை. மாறாமல் அழகாகச் சுருக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  24. @ ஸ்ரீராம். said...

    1) எந்தெந்த நாவல்களை அழகாய் சுருக்கித் தருவது என்று ஒரு லிஸ்டே என்னிடம் உண்டு. அடுத்து ஸ்ரீவேணுகோபாலனின் ‘மோகவல்லி தூது’ தருவதாக இப்போதே தயாரித்து விட்டேன்.
    2) வஸந்த்தின் குறும்பை முழுவீச்சில் ரசிக்க இந்நாவலில் இயலும். நீங்கள் சொல்வது போல் அதை இச்சுருக்கம் தர இயலாதுதான்!
    3) ஆவி பறந்தபடி பிணத்தின் கை கால்களைப் பிய்த்துச் சாப்பிடுவதைப் பார்த்ததாக ஒரு நபர் சொல்கிறான. அவன் கு.வியாசனின் ஆள், அவன் சொன்னது பொய் என்பதை நமது யூகத்திற்கே விட்டுவிடுகிறார் கதாசிரியர். போலீஸ் அப்போதே அவனை ரெண்டு தட்டு தட்டியிருந்தால் எல்லாமே மாறியிருக்கும். ஆகவே அதற்கு விளக்கம் கதையில் தேவைப்படவில்லை.
    4)if my memory is correct, ஹோலோகிராம் பற்றி முதலிலேயே தமிழ்வாணன் எழுதினாரே தவிர, அது ‘கருகிய கடிதம்’ அல்ல! வேறு ஏதோ கதை என்பதாக நினைவு. விசாரித்துச் சொல்கிறேன். கருகிய கடிதம் தமிழ்வாணனின் ‘மாஸ்டர் பீஸ்’களில் ஒன்று! விறுவிறுப்பான த்ரில்லர்! (சுருக்கிடலாமா?)
    எனக்குள் புது உற்சாகத்தைப் பாய்ச்சிய உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  25. நானும் ஏற்கனவே படிச்சிருக்கேன் மீண்டும் படிக்க ஆவலைத்தூண்டும் பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  26. @ Lakshmi said...

    உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  27. இதில் அரைவாசிக் கதை படித்தேன் இங்கு. மிக்க நன்றி. முன்பு வாசித்தது மறந்து விட்டுது போலவும், நினைவு போலவும் உள்ளது. எக்கச் சக்கமாக 16 வயதிலிருந்து வாசித்தது. தீவிரமாக. லிஸ்ட் போட்டே வைத்திருந்தேன். நன்றி. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் நன்றியுடன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  28. சுஜாதாவின் கதைகள் நான் படித்தது மிக சொற்பமே.இந்த நாவல் படித்ததில்லை.சுருக்கமாக சில நிமிடங்களில் படித்து முடித்தது சுவாரஸ்யமாக இருந்தது.முயற்சிக்கு மிக்க நன்றிண்ணா.

    ReplyDelete
  29. முடிந்தால் கோவி மணி சேகரனின் மனோரஞ்சிதம்,அமுதா கணேஷன் ,லட்சுமி போன்றோரின் கதைகளை கேப்ஸ்யூல்ஸ் நாவலாக போட முயற்சியுங்களேன்.

    ReplyDelete
  30. ஏற்கனவே படித்திருந்தது என்றாலும், திரும்பவும் கதையின் சுருக்கத்தை உங்கள் எழுத்தின் மூலம் படித்தபோது ,கதையின் சுவையை குறைக்காமல் சுஜாதா அவர்கள் கதைச்சுருக்கம் தந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. வாழ்த்துக்கள்! சுஜாதா அவர்களின் மற்ற கதைகளையும் சுவைபட சுருக்கித்தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  31. @ kovaikkavi said...

    நீங்கள் ரசித்துப் படித்ததற்கும், பொங்கல் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வேதா‌ சிஸ்டர்!

    ReplyDelete
  32. @ ஸாதிகா said...

    சுஜாதாவின் இந்த நாவலை இப்போது படித்து ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி. தங்கச்சி கேட்டு மறுக்க முடியுமா? கோவி.மணிசேகரன், லக்ஷ்மி ஆகியோரின் கதைகளை விரைவில் தருகிறேன். நன்றி!

    ReplyDelete
  33. @ வே.நடனசபாபதி said...

    சுஜாதாவே சுருக்கித் தந்தாற் போல இருந்தது என்று நீங்கள் சொன்னது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. மிக்க நன்றி! குறிப்பிட வேண்டிய சில எழுத்தாளர்களைத் தொட்டுவிட்டு மீண்டும் சுஜாதாவிடம் கண்டிப்பாய் வரலாம் நாம். நன்றிங்க!

    ReplyDelete
  34. நாவலை சுருக்கி இப்படிதருவது எளிதல்ல ஆனா திறமையாய் செய்திருக்கீங்க கணேஷ்.

    ReplyDelete
  35. ஆமா என்னாச்சு கணேஷ் போட்டோ மாறி இருக்கே>?:) ஏமி ஆயிந்தி?:)

    ReplyDelete
  36. @ ஷைலஜா said...

    நீங்கள் ரசித்துப் பாராட்டியது எனக்கு வைட்டமின் டானிக். மிக மகிழ்ந்தேன். நன்றி! (இந்த ஃபோட்டோவுல லுக்கிங் பெட்டர்தானே... அதான்!)

    ReplyDelete
  37. @ சென்னை பித்தன் said...

    பார்த்தேன், ம(நெ)கிழ்ந்தேன். எனக்கும் ஒரு இடம் கொடுத்த தங்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற தொடர்ந்து முயல்வேன். நன்றி ஐயா!

    ReplyDelete
  38. மறுபடியும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள் இந்த நாவலை. நல்ல முயற்சி இந்த காப்ஸூல் வடிவம். என் வலையில்;
    அஞ்சலி அல்லது பவர்கட் - சுஜாதா

    ReplyDelete
  39. @ Chilled beers said...

    முதல் வருகைக்கு என் முத்தான நல்வரவு. சுஜாதாவின் விசிறியான நான் தங்கள் தளத்துக்கு வராமல் இருப்பேனா... என்னைப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  40. அருமை.சுஜாதா அவர்களின் படைப்புகள் எல்லாமே மாஸ்டர்பீஸ்தான்.உங்க பதிவை படித்ததும் உடனடியாக நாவலை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  41. @ RAMVI said...

    ஆஹா... நான் எழுதியதன் நோக்கமே நாவலைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான். நீங்கள் சொன்னதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  42. தமிழ்மண முன்னணி வலைப்பூக்களில் இன்று ஒன்றாகி இருக்கிறீர்கள் என்றும் முன்னின்று நிற்க சிறப்பு வாழ்த்துகள்!

    ReplyDelete
  43. @ ஷைலஜா said...

    அக்கா... நீங்க சொன்னப்புறம்தான் போய்ப் பார்த்தேன். உங்க எல்லாரோட ஆதரவும்தான் காரணம். இது தொடரணும்னு வேண்டிக்கிட்டு மகிழ்வோட நன்றி தெரிவிச்சுக்கறேன்.

    ReplyDelete
  44. இப்போதுதான் முழுமையாக வாசித்தேன்.எவ்வளவு சுருக்கமாகத் தந்திருக்கிறீர்கள்.இது சுலமபல்ல.சரி பொலீஸ் கதையில்ல.பேய்க்கதைன்னு வச்சுக்குவோம்.அடுத்ததரம் ஒரு காதல் கதை ப்ளீஸ் !

    ReplyDelete
  45. @ ஹேமா said...

    மை ஸ்பெஷல் ஃப்ரண்ட்! பாராட்டினதுக்கு நன்றி! உங்கள் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுகிறேன். அடுத்து காதல் பொங்கி வழியும் கதை ஒன்றைத் தருகிறேன்!

    ReplyDelete
  46. இன்னொரு முறை படித்தாலும் திகட்டாதது! உங்கள் பாணியில் சுருக்கி அழகாக தந்துள்ளீர்கள்... மிக்க நன்றி சார்!
    (என்ன சார்! போட்டோவை மாற்றி விட்டீர்கள்! நல்லா இருக்கு!)

    ReplyDelete
  47. திண்டுக்கல் தனபாலன் said...

    இன்னொரு முறை என்ன... நான் பலமுறை படித்திருக்கிறேன். சலிக்காதது சுஜாதாவின் நடை. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  48. அண்ணா இந்த போட்டோவில ரொம்ப அழகா இருக்கீங்க.

    ReplyDelete
  49. @ ரசிகன் said...

    எனக்கும் இதில் ‘பெட்டர் லுக்’ தெரிந்ததால் வைத்தேன். ரசிகனல்லவா தம்பி... ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  50. அற்புதமான ஒரு நாவல் எனக்கு பிடித்த நாவல்

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  51. ராத்திரி நேரத்தில் படித்தது ஒரே பயம் ப்ளஸ் டென்ஷன்.

    ReplyDelete
  52. @ r.v.saravanan said...

    சுஜாதாவின் நாவல்களில் இது சூப்பர்ஸ்டார் அல்லவா! நீங்களும் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி சரவணன்! என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  53. @ Shakthiprabha said...

    முழுமையான கதையைப் படித்துப் பார்த்தீங்கன்னா, த்ரில் மற்றும் நகைச்சுவை ரெண்டையும் மிக்ஸ் பண்ணி சுஜாதா அசத்தியிருப்பார். கேப்ஸ்யூல் நாவலை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube